Featured Posts

82] அன்றைக்கு யாசர் விதைத்ததுதான்..

நிலமெல்லாம் ரத்தம் – பா. ராகவன் 82

இஸ்ரேலுடன் அமைதிப் பேச்சு. மற்ற எந்த அரபு தேசமும் செய்ய முன்வராதவகையில் இஸ்ரேலை அங்கீகரிப்பது. அமெரிக்காவில் போய் உட்கார்ந்துகொண்டு இஸ்ரேலிய அதிகாரிகளுடன் ஒப்பந்தத்துக்கான பூர்வாங்க ஏற்பாடுகள் செய்தது. நார்வேயில் அமைதி ஒப்பந்தம். மீண்டும் அமெரிக்காவில் அதை உறுதிப்படுத்துவது. இதெல்லாம் நடந்து முடிந்தவுடனேயே அமைதிக்கான நோபல் பரிசு. அதையும் இஸ்ரேலியர்கள் இரண்டு பேருடன் பகிர்ந்துகொண்டது.

என்ன இதெல்லாம்? செய்வது யார்? யாசர் அராஃபத்தா? பாலஸ்தீனிய அரேபியர்களின் ஒரே நம்பிக்கை நட்சத்திரம் என்று வருணிக்கப்பட்டவரா? எப்படி அவரால் இப்படியொரு அரசியல் முகம் கொள்ள முடிந்தது? எதனால் அவர் இப்படி மாறிப்போனார்? இஸ்ரேல் கிடக்கட்டும், அமெரிக்காவுடன் எப்படி அவரால் தோழமை கொள்ள முடிந்தது? ஏன் இதனைச் செய்தார்? ஒரு ஜிகாத் போராளி செய்யக்கூடியவையா இதெல்லாம்?

இதுதான் பாலஸ்தீனியர்களுக்குப் புரியவில்லை. இதன் காரணமாகத்தான் அராஃபத்தை அவர்கள் கடுமையாக எதிர்க்கவும், கண்டபடி பேசவும் ஆரம்பித்தார்கள். அரஃபாத்தின் இந்த நடவடிக்கைகளை சறுக்கல் என்று வருணித்தார்கள். ‘ஒரு பரிசுத்தமான போராளி, விலைபோய்விட்டார்’ என்று பேசவும் ஏசவும் தொடங்கினார்கள்.

ஆனால், சற்றே கண்ணைத் திறந்து, நடந்த அனைத்தையும் நடுநிலைமையுடன் பார்க்க முடியுமானால் அராஃபத் சறுக்கவில்லை என்பது புரியும். செய்த ஒரு தவறுக்குப் பிராயச்சித்தமாகத்தான் அவர் இவற்றையெல்லாம் செய்ய ஒப்புக்கொண்டார் என்பது புரியவரும். இதைக்கூடத் தனக்காக அல்லாமல் பாலஸ்தீனிய அரேபியர்களுக்காகத்தான் அவர் செய்தார் என்பதும் கவனத்தில் ஏறும்.

1991-ம் ஆண்டு மத்தியக் கிழக்கில் ஒரு புயல் வீசியது. புயலின் பெயர் சதாம் உசேன். ஈராக்கின் அதிபர். சதாம் உசேனுக்கு ஏறக்குறைய ஹிட்லரின் மனோபாவம் அப்படியே இருந்தது அப்போது. குறிப்பாக, நாடு பிடிக்கிற விஷயத்தில். ஈராக்குக்கு அண்டை நாடான குவைத்தின் எண்ணெய்ச் செழுமை, அதனால் உண்டான பணச்செழுமை ஆகியவற்றால் கவரப்பட்ட சதாம், எப்படியாவது குவைத்தைக் கைப்பற்றிவிட வேண்டுமென்று தாம் பதவிக்கு வந்த நாளாக நினைத்துக்கொண்டிருந்தார். 1991-ம் ஆண்டு அது நடந்தது. சர்வதேசச் சந்தையில் கச்சா எண்ணெயின் விலை உயர்வதற்கு குவைத்தின் சில கொள்கை முடிவுகள்தான் காரணம் என்று சதாம் குற்றம் சாட்டினார்.

ஒரே நாள். ஒரே இரவு. ஈராக் படைகள் குவைத்துக்குள் புகுந்தன. வீசிய புயலில் குவைத் கடலுக்குள் மூழ்காதது வியப்பு. குவைத்தின் அமீராக இருந்தவர் உயிர் பிழைக்க சவுதி அரேபியாவுக்கு ஓடிப்போனார். ஆதரவற்று இருந்த குவைத்தை அப்படியே எடுத்து விழுங்கி, ‘இனி இந்தத் தேசம் ஈராக்கின் பத்தொன்பதாவது மாநிலமாக இருக்கும்’ என்று அறிவித்தார் சதாம் உசேன்.

நவீன காலத்தில் இப்படியொரு ஆக்கிரமிப்பை யாருமே எதிர்பார்த்திருக்கவில்லை. ஒட்டுமொத்த மத்தியக்கிழக்கும் அச்சத்தில் ஆழ்ந்தது. சதாம் அச்சம். எங்கே தம்மீதும் பாயப்போகிறாரோ என்கிற கவலை. மத்தியக் கிழக்கை ஒரு ஐரோப்பாவாகவும், தன்னையொரு ஹிட்லராகவும் கருதிக்கொண்டு இன்னொரு உலக யுத்தத்துக்கு வழி செய்துவிடுவாரோ என்கிற பயம்.

இந்தச் சம்பவத்தை மற்ற அரபு தேசங்களைக் காட்டிலும் அமெரிக்கா மிகத் துல்லியமாக கவனித்து ஆராய்ந்தது. எப்படியாவது மத்தியக்கிழக்கில் தனது கால்களை பலமாக ஊன்றிக்கொண்டு, எண்ணெய்ப் பணத்தில் தானும் கொழிக்க முடியுமா என்று சந்தர்ப்பம் பார்த்துக்கொண்டிருந்தது அது. மேலும் பரம்பரையாக எண்ணெய் எடுக்கும் தொழிலில் இருந்த குடும்பத்தைச் சேர்ந்த ஜார்ஜ் வாக்கர் புஷ்தான் அப்போது அமெரிக்காவின் அதிபராக ஆகியிருந்தார்.

ஆகவே, அத்துமீறி குவைத்தை ஆக்கிரமித்த ஈராக் மீது உடனடியாக போர் அறிவித்தது அமெரிக்கா. குவைத் அப்போது, இப்போது, எப்போதும் அமெரிக்காவின் நட்பு நாடு என்பதையும் இங்கே கவனத்தில் கொள்ள வேண்டும்.

ஒரு பக்கம் அமெரிக்கா போர் அறிவிக்க, இன்னொரு பக்கம் ஐக்கிய நாடுகள் சபையும் ஈராக்கின் இந்த அத்துமீறலைக் கடுமையாக எதிர்த்ததுடன் அல்லாமல் ஈராக்குக்கான சர்வதேச உதவிகளுக்கும் தடை போட ஏற்பாடுகள் செய்ய ஆரம்பித்தது. அநேகமாக உலகம் முழுவதுமே சதாமுக்கு எதிராகத் திரண்டு நின்ற நேரம் அது.

அப்படியென்றால் உலகம் முழுவதுமே அமெரிக்க ஆதரவு நிலை எடுத்ததா என்றால் இல்லை. அந்தச் சந்தர்ப்பத்தில் குவைத்தை விழுங்கிய ஈராக் மீது ஒரு சர்வதேச வெறுப்பு ஏற்பட்டிருந்தது என்பது உண்மை. அந்த வெறுப்பை தனக்குச் சாதகமாகப் பயன்படுத்திக்கொள்ளவும், குவைத்துக்கு மறுவாழ்வு அளிப்பதன்மூலம் மத்தியக்கிழக்கில் தன்னுடைய வேர்களைப் படரவிடவும் அமெரிக்கா திட்டம் தீட்டியது.

இப்படியொரு நெருக்கடியான சந்தர்ப்பத்தில், சம்பந்தமே இல்லாத பாலஸ்தீனிய விடுதலை இயக்கமும் அதன் தலைவரான யாசர் அராஃபத்தும் சதாம் உசேனுக்குத் தங்கள் ஆதரவைத் தெரிவித்தார்கள். யாசர் அராஃபத், சதாம் உசேனைச் சந்தித்த புகைப்படம் வெளியாகி சர்வதேச மீடியாவைக் கலக்கியது. இது, பி.எல்.ஓ.மீது உலக நாடுகளுக்கு இருந்த கொஞ்சநஞ்ச அனுதாபத்தையும் சுத்தமாக வழித்துத் துடைத்துக் கழுவிக் கவிழ்த்துவிட்டது.

உலகத்தின் பார்வையில் அன்றைய தேதியில் பி.எல்.ஓ.ஒரு போராளி இயக்கம்தான். அரசியல் முகமும் கொண்டதொரு போராளி இயக்கம். ஆனால் சதாம் உசேன் என்பவர் ஒரு சாத்தானாக மட்டுமே அடையாளம் காணப்பட்டுக்கொண்டிருந்த நேரம் அது. இன்றைக்கு அத்துமீறி குவைத்தில் நுழைந்தவர், நாளை எந்த தேசத்தை வேண்டுமானாலும் அப்படி ஆக்கிரமிக்கக்கூடும் என்கிற சந்தேகத்தில் எப்படியாவது சதாமின் கொட்டத்தை அடக்கியாக வேண்டும் என்று அத்தனை பேருமே நினைத்தார்கள். தம்மால் முடியாத ஒரு காரியத்தை அமெரிக்கா செய்ய முன்வருகிறதென்றால், அதற்கு உதவி செய்யமுடியாவிட்டாலும் ஒதுங்கி நின்று வழிவிடுவதே சிறந்தது என்று அனைத்துத் தலைவர்களும் நினைத்தார்கள்.

இதன்மூலம் அமெரிக்கா எப்படியும் சிலபல லாபங்களைப் பார்க்காமல் விடாது; இன்றைக்கு ஈராக்கிடமிருந்து காப்பாற்றி அளிக்கும் குவைத்தை நாளை அமெரிக்காவே கபளீகரம் செய்தாலும் ஆச்சர்யப்படுவதற்கில்லை என்பதுவரை கூட மத்தியக்கிழக்கின் தலைவர்கள் யோசித்துவிட்டார்கள்.

ஆனால், சதாம் உசேன் என்கிற பொது எதிரி முதலில் ஒழிக்கப்படவேண்டும் என்று அவர்கள் அத்தனை பேருமே கருதியதால்தான் பேசாமல் இருந்தார்கள்.

அதுவும் அப்போது அமெரிக்க அதிபர் புஷ் நடந்துகொண்ட விதத்தைக் கவனியுங்கள். நேரடியாக அமெரிக்கப் படைகளை ஈராக்கில் கொண்டுவந்து நிறுத்தாமல், ‘உங்கள் படைகளை ஈராக் எல்லையில் அணிவகுத்து நிறுத்துங்கள்’ என்று சவுதி அரேபிய அரசுக்குக் கட்டளை இட்டது அமெரிக்கா.

‘இது உங்கள் பிரச்னை; நான் உதவி செய்யமட்டுமே வருகிறேன்’ என்று சொல்லாமல் சொல்லும் விதம் அது.

அதன்படி சவுதி அரசுதான் தன்னுடைய ராணுவத்தை முதல் முதலில் ஈராக்குக்கு எதிராக அணிவகுத்து நிறுத்தியது. அப்புறம்தான் அமெரிக்கப் போர் விமானங்கள் வந்து சேர்ந்து வானில் வாணவேடிக்கை காட்ட ஆரம்பித்தன.

இப்படியொரு இக்கட்டான தருணத்தில் பி.எல்.ஓ. தனது தார்மீக ஆதரவை சதாம் உசேனுக்கு அளித்ததற்கு என்ன காரணம் என்று யாருக்குமே புரியவில்லை. யாசர் அராஃபத்தின் நோக்கம் விளங்கவில்லை. ஒருவேளை அவர் இப்படி நினைத்திருக்கலாம்: ஈராக்கின் அதிபர் சதாம் உசேன், மத்தியக் கிழக்கின் ஒரு பெரிய சக்தியாக வளர்ந்துகொண்டிருக்கிறார். அமெரிக்காவையே எதிர்க்கும் அளவுக்கு அவரிடம் வல்லமை இருக்கிறது என்னும்போது அவரது நட்பைப் பெறுவது பாலஸ்தீன் விடுதலையைத் துரிதப்படுத்த உதவக்கூடும்.

இது ஒரு காரணம். இன்னொரு காரணம், சகோதர முஸ்லிம் தேசங்கள், அனைத்தும் ஒரு யுத்தம் என்று வரும்போது சதாமை ஆதரிக்கத்தான் விரும்பும் என்று யாசர் அராஃபத் தப்புக்கணக்குப் போட்டது. போயும் போயும் அமெரிக்காவுக்கு ஆதரவாக எந்த அரபு தேசமும் இருக்காது, இயங்காது என்று அவர் மனப்பூர்வமாக நம்பினார்.

அராஃபத்தின் அரசியல் வாழ்வில் ஏற்பட்ட மாபெரும் சறுக்கல் இது. மதச் சார்பற்ற இயக்கமாகத் தன்னுடைய பி.எல்.ஓ.வை வழிநடத்தியவர், ஈராக் விஷயத்தில் முஸ்லிம் தேசங்கள், அமெரிக்காவை ஆதரிக்காது என்று மதத்தை முன்வைத்து யோசித்தது வியப்பே. அந்தச் சறுக்கலுக்குக் கொடுத்த விலைதான் பாலஸ்தீன் விடுதலை என்கிற அவரது முயற்சிக்கு ஏற்பட்ட பலமான பின்னடைவு.

ஐ.நா.வே கைவிட்டுவிடும் சூழ்நிலை ஏற்பட்டது. எந்த ஒரு தேசமும் அப்போது அராஃபத்தின் நியாயங்களை யோசிக்கத் தயாராக இல்லை. உலக நாடுகள் அனைத்தும் கேவலம், சதாமைப் போயா இந்த மனிதர் ஆதரித்தார்! என்று அருவருப்புடன் பார்க்கத் தொடங்கின. மதம் கடந்து, அரசியல் கடந்து, ஒழிக்கப்படவேண்டியதொரு சர்வாதிகாரியாக மட்டுமே சதாம் உசேனை உலகம் பார்க்கிறது என்பதை அராஃபத் அவதானிக்கத் தவறிவிட்டார். அதற்கான விலைதான் அது!

இன்னும் எளிமையாகப் புரிய ஓர் உதாரணம் பார்க்கலாம். ராஜிவ் காந்தி படுகொலைக்கு முன்னர் விடுதலைப் புலிகளுக்கு இந்தியாவில், குறிப்பாகத் தமிழகத்தில் இருந்த ஆதரவையும் அனுதாபத்தையும் எண்ணிப்பாருங்கள். புலிகளுக்குத் தமிழகம் ஓர் இரண்டாம் தாயகமாகவே இருந்துவந்ததை நினைவுபடுத்திப் பாருங்கள். ஆனால், அந்தப் படுகொலைக்குப் பிறகு நிலைமை அப்படியே தலைகீழாகிப் போனதல்லவா?

அதுவரை விடுதலை இயக்கமாகவே அறியப்பட்டுவந்த விடுதலைப் புலிகளை, ஒட்டுமொத்த இந்தியாவும் தீவிரவாத இயக்கமாக மட்டுமே பார்க்கத் தொடங்கியதன் காரணம் வேறென்னவாக இருக்க முடியும்?

செயல். ஒரு செயல். ஒரே ஒரு செயல். அதன் விளைவுகளுக்கான விலைதான் அது. இதே போன்றதுதான் அன்றைக்கு பி.எல்.ஓ.வுக்கு ஏற்பட்ட நிலைமையும். சதாம் உசேனை குவைத் யுத்தத்தின் போது அராஃபத் ஆதரித்துவிட்டதன் பலனாக பாலஸ்தீன் விடுதலைக்காக அதுவரை அவர் வகுத்துவைத்த அத்தனை திட்டங்களையும் உலகம் நிராகரித்துவிட்டது. எந்த ஒரு தேசமும் எந்த ஓர் அமைப்பும் பி.எல்.ஓ.வுக்கு ஆதரவோ, அனுதாபமோ தெரிவிக்கத் தயங்கியது.

தனது ஆயுதப் போராட்டத்தைத் தாற்காலிகமாகவாவது ஒதுக்கிவைத்துவிட்டு, அமைதிப் பேச்சுகளில் கவனம் செலுத்தி, ஏற்பட்டுவிட்ட அவப்பெயரைத் துடைத்துக்கொண்டால்தான் விடுதலைப் போராட்டத்தில் ஓர் அங்குலமாவது முன்னேற முடியும் என்று அராஃபத் முடிவு செய்தார். அதனால்தான் இஸ்ரேலிய அதிகாரிகளுடன் அவர் ரகசியப் பேச்சுவார்த்தைகள் நடத்த முன்வந்தார். நார்வேயின் அமைதி ஏற்பாட்டுக்குச் சம்மதம் சொன்னார். பெரிய லாபமில்லாவிட்டாலும் ஓஸ்லோ உடன்படிக்கைக்கும் ஒத்துழைக்க முடிவு செய்தார். அமெரிக்க அதிபருடன் கை குலுக்கினார். அத்தனை காரியங்களையும் ஆத்மசுத்தியுடன் செய்தார்.

இந்த விவரங்களை பாலஸ்தீனிய அரேபியர்கள் சிந்தித்துப் பார்க்க மறந்ததன் விளைவுதான் அராஃபத்தை துரோகி என்றும், விலை போய்விட்டவர் என்றும், பதவி ஆசை பிடித்தவர் என்றும் வசைபாடவைத்தன.

ஆனால், இந்தக் குற்றச்சாட்டுகள் எதற்கும் அராஃபத் கடுமையான பதில்களை ஒருபோதும் தந்ததில்லை. புரிந்துகொள்ளுங்கள், புரிந்துகொள்ளுங்கள் என்று மௌனமாக மன்றாடியதைத் தவிர, அவர் வேறெதுவும் செய்யவில்லை.

குவைத் யுத்தத்தில் அவர் சதாமை ஆதரித்தது ஒரு விபத்து. சந்தேகமில்லாமல் விபத்து. அதுபற்றிய வருத்தம் அராஃபத்துக்கு இறுதி வரை இருந்திருக்கிறது. தனது சறுக்கலை அவர் மனப்பூர்வமாக ஒப்புக்கொண்டிருக்கிறார். ஆனால், அதன் விளைவுகள் தனது தேசத்தின் விடுதலையைப் பாதித்துவிடக்கூடாதே என்பதற்காகத்தான் அவர் ஓஸ்லோ உடன்படிக்கைக்கு ஒப்புக்கொண்டார் என்பதைத்தான் பாலஸ்தீனியர்கள் ஏற்க மறுத்துவிட்டார்கள்.

இஸ்ரேலுடன் நல்லுறவு வேண்டாம்; குறைந்தபட்சம் பேசிக்கொள்ளும் அளவுக்காவது சுமாரான உறவு இருந்தால்தான் அடுத்தக் கட்டத்தை நோக்கி நகர முடியும் என்பது அராஃபத்தின் நம்பிக்கை. ஏனெனில், இஸ்ரேலை ஒழித்துவிட்டுத்தான் மறுகாரியம் என்று இதர பாலஸ்தீனிய இயக்கங்கள் கோஷமிட்டுக்கொண்டிருந்ததைப் போல் அவர் செய்யவில்லை. இஸ்ரேலை ஒழிப்பதென்பது வெறும் மாய யதார்த்தம் மட்டுமே என்பதை அவர் மிக நன்றாக அறிந்திருந்தார்.

இங்கேதான் ஒரு போராளிக்கும் அரசியல் விற்பன்னருக்கும் உள்ள வித்தியாசம் வருகிறது. அராஃபத் ஒரு போராளியாக மட்டும் இருந்திருப்பாரேயானால் அவரும் அந்தக் கற்பனையான இலக்கை முன்வைத்துக் கண்ணில் பட்ட இடங்களையெல்லாம் சுட்டுக்கொண்டேதான் இருந்திருப்பார். அவர் ஒரு ராஜதந்திரியாகவும் இருந்ததால்தான் அமைதிக்கான வாசல்களை அவரால் திறந்துவைக்க முடிந்தது.

அன்றைக்கு அவர் விதைத்ததுதான் இன்றைக்கு காஸாவிலிருந்தும் மேற்குக் கரையிலிருந்தும் இஸ்ரேலியர்களை, இஸ்ரேலிய அரசே வெளியேற்றும் அளவுக்குப் பலனளிக்கத் தொடங்கியிருக்கிறது. அராஃபத் இறந்ததனால்தான் இந்த முன்னேற்றம் சாத்தியமாகியிருக்கிறது என்று இன்றைக்கு இஸ்ரேலிய அரசு விஷமப்பிரசாரம் செய்யலாம்; செய்கிறது. உண்மையில் அன்றைக்கு அமைதிப் பேச்சு என்கிற விஷயத்தை அவர் ஆரம்பித்து வைக்காதிருப்பாரேயானால், ஜோர்டன் நதி முழுச் சிவப்பாகவே இப்போது ஓடவேண்டியிருந்திருக்கும்.

நன்றி: குமுதம் ரிப்போர்ட்டர் 4 செப்டம்பர், 2005

One comment

  1. Isrelies Quiting Gaza – There must be a big plan beyond this. Israel will not do anything without personal benifit and also it may be dangerous.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *