Index | Subscribe mailing list | Help | E-mail us

அல்லாஹ்வை நம்புதல்

 

நபி(ஸல்)அவர்களிடம் குறைஷியர்கள் அல்லாஹ்வின் பரம்பரையைப் பற்றிக் கேட்டதற்கு பதிலாக இறங்கிய அத்தியாயம் (112) சூரத்துல் இக்லாஸை அல்லாஹ் இறக்கி வைத்தான்.

(நபியே?!) நீர் கூறுவீராக! அல்லாஹ் அவன் ஒருவனே. அல்லாஹ் (எவரிடத்தும்) தேவையற்றவன். அவன் (எவரையும்) பெறவுமில்லை (எவராலும்) பெறப்படவுமில்லை. அன்றியும், அவனுக்கு நிகராக எவரும் இல்லை. (112:1-4)

இறைவன் அகில உலகுக்கும் ஒருவன் தான், இறைவன் பெற்று, பெறப்பட்டு பலவீனமுடையவனாக, சந்ததி உடையவனாக இருக்க முடியாது. இறைவனுக்குத் தேவை என்பதே இல்லாமல் தன்னிறைவு உடையோனாகவும், இறைவனுக்கு நிகராக யாருமே, எதுவுமே இருக்க முடியாது போன்ற கருத்துக்களை உள்ளடக்கி ஏகத்துவத்தை முழுமையாக பறைசாற்றும் விதமாக இஹ்லாஸ் என்ற அத்தியாயம் அமைந்துள்ளது.

அல்லாஹ் எங்கு இருக்கிறான்?

நிச்சயமாக உங்கள் இறைவன் அல்லாஹ்வே அவன் வானங்களையும் பூமியையும் ஆறு நாட்களில் படைத்தான் - பின்னர் தன் ஆட்சியை அர்ஷின் மீது அமைத்தான் (10:3)

அர்ரஹ்மான் அர்ஷின் மீது அமைந்தான். (20:5)

நிச்சயமாக உங்கள் இறைவனாகிய அல்லாஹ் தான் ஆறு நாட்களில் வானங்களையும், பூமியையும் படைத்துப் பின் அர்ஷின் மீது தன் ஆட்சியை அமைத்தான் (7:54)

மேலும் நபி(ஸல்) அவர்கள் மிஃராஜ் பயணத்தில் மக்காவிலிருந்து மஸ்ஜிதுல் அக்ஸா சென்று அங்கிருந்து ஜிப்ரயீல் (அலை) அவர்களுடன் 'புராக்' என்னும் வாகனத்தின் மூலம் ஒவ்வொன்றாக ஏழு வானத்தையும் கடந்து சென்று 'சித்ரத்துல் முன்தஹா' என்ற இலந்தை மரத்தை (அது தான் எல்லை) அடைந்து அல்லாஹ்விடம் உரையாடி ஐம்பது நேரத் தொழுகையை ஐந்து நேரத் தொழுகையாகக் குறைத்து அல்லாஹ் இந்த சமுதாயத்தின் மீது கடமையாக்கியதையும், மேலும் பகரா அத்தியாயத்தின் கடைசி இரு வசனங்களையும் (2:285,286) பெற்றுத் திரும்பினார்கள். (ஆயிஷா(ரலி) அவர்கள் அறிவிக்கும் ஹதீஸின் கருத்து - நூல்: முஸ்லிம்).

பூமியில் உள்ளவர்கள் மீது இரக்கம் காட்டுங்கள் வானத்தில் உள்ள அல்லாஹ் உங்கள் மீது இரக்கம் காட்டடுவான். இப்னு உமர்(ரலி) திர்மிதி, அஹ்மத்

ஒரு முறை நபி(ஸல்)அவர்களிடம் ஒரு அடிமைப் பெண்ணைக் கொண்டு வரப்பட்டது. அவளிடம் அல்லாஹ் எங்கே?(இருக்கிறான்) என நபி(ஸல்) அவர்கள் கேட்டார்கள். அவள் வானத்தில் என்றாள், நான் யார்? எனக் கேட்டபோது நீங்கள் அல்லாஹ்வின் தூதர் என விடையளித்தாள். உடனே நபி(ஸல்) அவர்கள் தம் தோழர்களைப் பார்த்து அவளை விடுதலைச் செய்து விடுங்கள் ஏனெனில் அவள் ஈமான் கொண்டவளாக இருக்கிறாள் என்றனர். (முஸ்லிம்)

திருமறை வசனங்கள் மற்றும் ஹதீஸின் அடிப்படையில் சிந்தித்தோமானால் அல்லாஹ் ஏழு வானத்திற்கும் மேல் அர்ஷில் உள்ளான் என்பதை அறிந்து கொள்ள முடியும். திருமறை மற்றும் ஹதீஸில் கூறப்பட்டுள்ளபடி அப்படியே அர்ஷில் அமைந்தான் என்பதை நம்ப வேண்டும். நாம் ஏதும் கற்பனை செய்தல் கூடாது. அப்படி கற்பனை செய்தால் அது பித்அத் ஆகும். இமாம் மாலிக்(ரஹ்) தாரமி.

பெரும்பான்மையான மக்கள் இறைவன் எங்கும் நிறைந்து இருக்கிறான், காணும் இடத்திலெல்லாம் உள்ளான், தூணிலும் இருக்கிறான், துரும்பிலும் இருக்கிறான் என்றெல்லாம் கூறுவர். இக்கருத்துகள் அனைத்தும் இஸ்லாமியக் கொள்கையில் கோளாறு செய்வதற்காக திட்டமிட்டு பரப்பப்பட்ட கொள்கையாகும். இதை ஒரு உதாரணம் மூலம் மிகச் சுலபமாக விளங்கலாம்.

ஒரு சாப்பாட்டுப் பொருள் இருக்கிறது, தூணிலும், துரும்பிலும் இருந்தால் அந்த சாப்பாட்டிலும் இருக்க வேண்டும். அதை நாம் சாப்பிட்டு விடுகிறோம் மேலும் அதைக் கழித்தும் விடுகிறோம் தூணிலும், துரும்பிலும் இறைவன் இருந்தால் அப் பொருளிலும் இறைவன் இருக்க வேண்டும் இது எவ்வளவு விபரீதமான பொருளைக் கொடுக்கிறது என்பதைச் சிந்தித்து அக்கருத்திலிருந்து விடுபடுவதோடு திருமறையும், நபி மொழியும் போதித்தபடி நாம் நம்பிக்கைக் கொள்ள வேண்டும். தவறான கருத்திலிருந்து அல்லாஹ் நம்மைப் பாதுகாப்பானாக!

அல்லாஹ் அர்ஷில் இருந்தாலும் அவனுடைய கண்காணிப்பால், ஞானத்தால் அகில உலகையும் சூழ்ந்துள்ளான் என்பதையும் திருமறை மற்றும் நபிமொழிகள் உணர்த்துகின்றன.

அவனிடமே மறைவானவற்றின் திறவுகோல்கள் இருக்கின்றன


அவற்றை அவனன்றி எவரும் அறியார். மேலும் கரையிலும் கடலிலும் உள்ளவற்றையெல்லாம் அவன் அறிவான்; அவன் அறியாமல் ஓர் இலையும் உதிர்வதில்லை. பூமியின் (ஆழத்தில் அடர்ந்த) இருள்களில் கிடக்கும் சிறு வித்தும், பசுமையானதும், உலர்ந்ததும் (எந்தப் பொருளும்) தெளிவான (அவனுடைய) பதிவேட்டில் இல்லாமலில்லை. (6:59)

கண்கள் செய்யும் மோசத்தையும், உள்ளங்கள் மறைத்து வைப்பதையும் அவன் நன்கு அறிகிறான். (40:19)

மேலும் நிச்சயமாக நாம் மனிதனைப் படைத்தோம், அவன் மனம் அவனிடம் என்ன பேசுகிறது என்பதையும் நாம் அறிவோம்; அன்றியும், (அவன்) பிடரி(யிலுள்ள உயிர்) நரம்பை விட நாம் அவனுக்கு சமீபமாகவே இருக்கின்றோம். (50:16)

நிச்சயமாக அல்லாஹ் வானங்களிலுள்ளவற்றையும் பூமியிலுள்ளவற்றையும் அறிகிறான் என்பதை நீர் பார்க்கவில்லையா? மூன்று பேர்களின் இரகசியத்தில் அவன் அவர்களில் நான்காவதாக இல்லாமலில்லை, இன்னும் ஐந்து பேர்களி(ன் இரகசியத்தி)ல் அவன் ஆறாவதாக இல்லாமலில்லை, இன்னும் அதைவிட மிகக் குறைந்தோ, அதைவிட மிக அதிகமாகவோ, அவர்கள் எங்கிருந்தாலும் அவன் அவர்களுடன் இல்லாமலில்லை. அப்பால் கியாம நாளில் அவர்கள் செய்தவற்றைப் பற்றி அவர்களுக்கு அவன் அறிவிப்பான், நிச்சயமாக அல்லாஹ் எல்லாப் பொருட்களைப் பற்றியும் நன்கறிந்தவன். (58:7)

அவன் தான் வானங்களையும், பூமியையும் ஆறு நாட்களில் படைத்தான்; பின்னர் அர்ஷின் மீது அமைந்தான். பூமிக்குள் நுழைவதையும், அதிலிருந்து வெளியாவதையும்; வானத்திலிருந்து இறங்குவதையும், அதில் ஏறுவதையும் அவன் நன்கறிகிறான்; நீங்கள் எங்கிருந்து போதிலும் அவன் உங்களுடனே இருக்கிறான் - அன்றியும் அல்லாஹ் நீங்கள் செய்வதை உற்று நோக்கியவனாக இருக்கிறான்.(57:4)

ஒரு முறை நாங்கள் நபி(ஸல்)அவர்களுடன் பிரயாணத்தில் இருந்தோம் நாங்கள் உயரமான இடத்தில் ஏறினால் லாயிலாஹ இல்லல்லாஹ் என்னும் திருக்கலிமாவைக் கூறுவோம். பிறகு அல்லாஹூ அக்பர் எனத் தக்பீர் கூறுவோம். அப்பொழுது எங்கள் சப்தங்கள் உயர்ந்தன. உடனே நபி(ஸல்)அவர்கள் மென்மையை கடைபிடியுங்கள் நீங்கள் செவிடனையோ, மறைவானவனையோ அழைக்கவில்லை. நிச்சயமாக அல்லாஹ் கேட்பவனாகவும், உங்களுக்கு நெருக்கமானவனாகவும், உங்களுடனேயே இருக்கிறான் என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். புகாரி, முஸ்லிம்: அபூமூஸா அல் அஸ்அரீ(ரலி).

அல்லாஹ்வுக்கு உருவம் உண்டா?

"அல்லாஹ்வின் கை கட்டப்பட்டிருக்கிறது" என்று யூதர்கள் கூறுகிறார்கள்;. அவர்களுடைய கைகள்தாம் கட்டப்பட்டுள்ளன. இவ்வாறு கூறியதன் காரணமாக அவர்கள் சபிக்கப்பட்டார்கள்;. அல்லாஹ்வின் இரு கைகளோ விரிக்கப்பட்டே இருக்கின்றன... 5:64

மிக்க வல்லமையும், கண்ணியமும் உடைய உம் இறைவனின் முகமே நிலைத்திருக்கும். 55:27

உம்முடைய இறைவனும், வானவரும் அணியணியாக வரும்போது, 89:22

கெண்டைக் காலை விட்டு (திரை) அகற்றப்படும் நாளில் ஸுஜூது செய்யுமாறு (மக்கள்) அழைக்கப்படும் நாளில், (இவ்வுலகில் மாறு செய்த) அவர்கள் அதற்கும் இயலாதிருப்பார்கள். 68:42

மேற்காணும் 68:42 வசனத்திற்கு விளக்கமாக நபி(ஸல்)அவர்களின் ஹதீஸ் அமைந்துள்ளது

...மறுமையில் அல்லாஹ் முஃமின்களுக்குக் காட்சி தர நாடி தன் கணுக்காலின் திரையை விலக்குவான். அப்போது இம்மையில் அவனுக்கு மட்டுமே சிரம் பணிந்தவர் அனைவரும் சிரம் பணிவர், மற்றவர்கள் அனைவரும் சிரம் பணிய முடியாத அளவுக்கு அவர்கள் முதுகெலும்பு வளையாது நின்றுவிடும். அபூ ஸயீத் அல் குத்ரீ (ரலி): புகாரி.

திருமறை மற்றும் நபிமொழி மூலம் இறைவனுக்கு உருவம் உண்டு என்பதை அறிகிறோம். எனினும் திருமறை, நபிமொழியில் உள்ளதை அப்படியே நம்ப வேண்டும். மேல்மிச்சமான கற்பனைக்கோ, நம் சொந்த யூகத்திற்கோ சிறிதும் இடமளிக்கக் கூடாது. அல்லாஹ் தனது திருமறையில் (42:11, 112:4 ஆகிய வசனங்களில்) அவனைப் போன்று எப்பொருளும் இல்லை, அவனுக்கு நிகராக யாருமில்லை என்று கூறுகிறான் ஆகவே நம் அறிவைப் பயன் படுத்தாமல் அப்படியே ஏற்க வேண்டும்.

அல்லாஹ்வைக் காண முடியுமா?

திருமறை மற்றும் நபி மொழிகளின் ஒளியில் சிந்தித்தோமானால் இவ்வுலக(இம்மை) வாழ்வில் இது நாள் வரை (நபிமார்கள் உட்பட) யாருமே பார்த்ததில்லை என்பதை அறிந்து கொள்ளலாம்.

பார்வைகள் அவனை அடைய முடியா, ஆனால் அவனோ எல்லோருடைய (எல்லாப்) பார்வைகளையும் (சூழ்ந்து) அடைகிறான். அவன் நுட்பமானவன்; தெளிவான ஞானமுடையவன். (6:103)

நாம் குறித்த காலத்தில் (குறிப்பிட்ட இடத்தில்) மூஸா வந்த போது, அவருடைய இறைவன் அவருடன் பேசினான்; அப்போது மூஸா "என் இறைவனே! நான் உன்னைப் பார்க்க வேண்டும்; எனக்கு உன்னைக் காண்பிப்பாயாக! என்று வேண்டினார். அதற்கு அவன், "மூஸாவே! நீர் என்னை ஒருக்காலும் பார்க்க முடியாது, எனினும் நீர் இந்த மலையைப் பார்த்துக் கொண்டிரும். அது தன் இடத்தில் நிலைத்திருந்தால், அப்போது நீர் என்னைப் பார்ப்பீர்!" என்று கூறினான். ஆகவே அவருடைய இறைவன் அம்மலை மீது தன்னுடைய பேரொளியைத் தோற்றுவித்த போது, அவன் அம்மலையை நொறுக்கித் தூளாக்கி விட்டான்; அப்போது மூஸா மூர்ச்சையாகிக் கீழே விழுந்து விட்டார். அவர் தெளிவடைந்ததும், "(இறைவா!) நீ மிகவும் பரிசுத்தமானவன்; நான் உன்னிடம் மன்னிப்பு கோருகிறேன். ஈமான் கொண்டவர்களில் நான் முதன்மையானவனாக இருக்கிறேன்" என்று கூறினார். (7:143)

அல்லாஹ் எந்த மனிதரிடத்திலும் வஹீயாகவோ அல்லது திரைக்கப்பால் இருந்தோ அல்லது தான் விரும்பியதைத் தன் அனுமதியின் மீது வஹீயை அறிவிக்கக் கூடிய ஒரு தூதரை அனுப்பியோ அன்றி (நேரிடையாகப்) பேசுவதில்லை நிச்சயமாக அவன் உயர்ந்தவன்; ஞானமுடையவன். (42:51)

மூன்று விஷயங்களைக் கூறுபவர் நபி(ஸல்)அவர்கள் மீது இட்டுக்கட்டிக் கூறிவிட்டார் என்று கூறிவிட்டு அதில் ஒன்றாக நபி(ஸல்)அவர்கள் மிஃராஜில் அல்லாஹ்வைப் பார்த்தார்கள் என்று கூறுவது என்றார்கள். (ஆயிஷா(ரலி) அவர்கள் அறிவிக்கும் ஹதீஸின் சுருக்கம் - நூல்: முஸ்லிம்).

நபி (ஸல்) அவர்கள் கூட அல்லாஹ்வைப் பார்க்கவில்லை என்பதை இந்த ஹதீஸின் மூலம் மிகத் தெளிவாக அறிகிறோம்.

அல்லாஹ்வை மறுமையில் காண முடியும்

அந்நாளில் சில முகங்கள் (மகிழ்ச்சியால்) செழுமையாக இருக்கும். தம்முடைய இறைவனளவில் நோக்கியவையாக இருக்கும். (75:22,23)

அவர்கள் விரும்பியதெல்லாம், அதில் அவர்களுக்கு இருக்கிறது இன்னும் (அதற்கு) அதிகமும் நம்மிடம் இருக்கிறது. (50:35)

50:35 வசனத்திற்கு விளக்கமளித்த இப்னு அப்பாஸ்(ரலி) அவர்கள் அதிகம் என்பது அல்லாஹ்வை காண்பதையே குறிக்கும் என்று கூறினார்கள்.

நாங்கள் நபி(ஸல்) அவர்களுடன் இருந்தோம் அப்பொழுது நபியவர்கள் முழு நிலவைப் பார்த்தார்கள். பிறகு கூறினார்கள் நிச்சயமாக நீங்கள் இச்சந்திரனைப் பார்ப்பதுபோல உங்கள் இரட்சகனை மறுமையில் பார்ப்பீர்கள். அவனைப் பார்ப்பதில் எந்தத்தடையும் இருக்காது. நீங்கள் சூரியன் உதயமாவதற்கு முன்புள்ள (ஃபஜ்ர்) தொழுகையையும் சூரியன் மறைவதற்கு முன்புள்ள (அஸர்) தொழுகையையும் பேணி வாருங்கள். ஜரீர் பின் அப்துல்லாஹ்(ரலி) நூல்: புகாரி, முஸ்லிம்.

அல்லாஹ்வை நம்ப வேண்டிய முறைகள்

அல்லாஹ்வை மூன்று வகையில் ஏகத்துவப் படுத்த வேண்டும்

1.படைப்பில் ஏகத்துவம் (ருபூபிய்யா)

மூலமின்றி படைப்பவன்

(அல்லாஹ்) வானங்களையும், பூமியையும் முன் மாதிரியின்றி (இல்லாமையிலிருந்து), தானே உண்டாக்கினான்; அதனிடம் 'குன்' - ஆகுக - என்று கூறினால், உடனே அது ஆகிவிடுகிறது. (2:117)

அவன் வானங்களையும், பூமியையும் முன் மாதிரியின்றிப் படைத்தவன்...6:101

மனிதர்களே! நீங்கள் உங்களையும் உங்களுக்கு முன்னிருந்தோரையும் படைத்த உங்கள் இறைவனையே வணங்குங்கள். (அதனால்) நீங்கள் தக்வா (இறையச்சமும்; தூய்மையும்) உடையோராகளாம். (2:21)

நிச்சயமாக உங்கள் இறைவனாகிய அல்லாஹ் தான் ஆறு நாட்களில் வானங்களையும், பூமியையும் படைத்துப் பின் அர்ஷின் மீது தன் ஆட்சியை அமைத்தான் - அவனே இரவைக் கொண்டு பகலை மூடுகிறான்; அவ்விரவு பகலை வெகு விரைவாக பின் தொடர்கிறது இன்னும் சூரியனையும்; சந்திரனையும், நட்சத்திரங்களையும் தன் கட்டளைக்கு - ஆட்சிக்குக் - கீழ்படிந்தவையாக(ப் படைத்தான்) படைப்பும், ஆட்சியும் அவனுக்கே சொந்தமல்லவா? அகிலங்களுக்கெல்லாம் இறைவனாகிய (அவற்றைப் படைத்து, பரிபாலித்துப் பரிபக்குவப்படுத்தும்) அல்லாஹ்வே மிகவும் பாக்கியமுடையவன்.(7:54)

மேலும் ஆதாரங்களுக்கு அல்குர்ஆன் 3:59, 6:73, 16:40, 37:96, 28:68, 40:68, 36:82 பார்வையிடுக.

மேற்காணும் வசனங்களில் அல்லாஹ் தன் படைப்பாற்றலை, படைக்கும் விதத்தைச் சொல்லிக் காட்டுகிறான். இதன் மூலம் நாம் அறிவது படைப்புக்குச் சொந்தக்காரன், படைக்கும் ஆற்றல் உள்ளவன் அல்லாஹ் மட்டுமே என்பதுதான். மாறாக மனிதர்களும் இவ்வுலகில் புதிது புதிதாக படைக்கிறார்களே (கண்டுபிடித்தல்) அதுவும் படைப்புதானே! என்று வினவத் தோன்றும். அல்லாஹ்வோ தான் நாடியதை, நாடிய நேரத்தில், நாடிய விதத்தில் படைக்கிறான். அல்லாஹ்வுக்கு எதையும் படைக்க மூலப் பொருள் என்று எதுவும் தேவைப்படுவதில்லை. ஆனால் மனிதர்கள் ஒரு பொருளை படைக்க மூலப் பொருள் தேவை என்பதோடு படைக்க நீண்ட காலம் தேவை. ஒரே முறையில் தான் நாடியதை, நாடிய விதத்தில் படைக்க முடியாது. வல்ல அல்லாஹ்வுக்கும், மனிதனுக்கும் பெரும் வேறுபாடு உள்ளது என்பதை உணரவேண்டும். ஆகவே படைத்தல் என்பது அல்லாஹ்வுக்கு மட்டுமே உரியது என்பதை நாம் உறுதியாக நம்ப வேண்டும்.

2. வணக்கவழிபாடுகளில் ஏகத்துவம் (உளூஹிய்யா)

சகல அதிகாரங்களையும் தன்னுள் அடக்கியவன், வானங்கள் பூமியைப் படைத்தவன், ஒவ்வொரு பொருளின் ஆட்சியையும் தன் வசம் வைத்திருப்பவன் அல்லாஹ் தான் என்பதை மக்கத்து காஃபிர்களும் ஏற்றுக் கொண்டிருந்தனர் என்பதை அல்லாஹ்வே தனது திருமறையில் கூறுகிறான்.

நீங்கள் அறிந்திருந்தால், இப் பூமியும் இதிலுள்ளவர்களும் யாருக்கு(ச் சொந்தம்? என்று (நபியே!) நீர் கேட்பீராக! (23:84)

"அல்லாஹ்வுக்கே" என்று அவர்கள் கூறுவார்கள்; "(அவ்வாறாயின் இதை நினைவிற்கொண்டு) நீங்கள் நல்லுணர்வு பெறமாட்டீர்களா?" என்று கூறுவீராக! (23:85)

"ஏழு வானங்களுக்கு இறைவனும் மகத்தான அர்ஷுக்கு இறைவனும் யார்?" என்றும் கேட்பீராக. (23:86)

"அல்லாஹ்வுக்கே" என்று அவர்கள் சொல்வார்கள்; "(அவ்வாறாயின்) நீங்கள் அவனுக்கு அஞ்சி இருக்கமாட்டீர்களா?" என்று கூறுவீராக! (23:87)

"எல்லாப் பொருட்களின் ஆட்சியும் யார் கையில் இருக்கிறது? - யார் எல்லாவற்றையும் பாதுகாப்பவனாக - ஆனால் அவனுக்கு எதிராக எவரும் பாதுகாக்கப்பட முடியாதே அவன் யார்? நீங்கள் அறிவீர்களாயின் (சொல்லுங்கள்)" என்று கேட்பீராக. (23:88)

அதற்கவர்கள் "(இது) அல்லாஹ்வுக்கே (உரியது)" என்று கூறுவார்கள். ("உண்மை தெரிந்தும்) நீங்கள் ஏன் மதி மயங்குகிறீர்கள்?" என்று கேட்பீராக. (23:89)

வானங்களையும், பூமியையும் படைத்தவன் யார்? என்று நீர் அவர்களைக் கேட்பீர்களாயின்; "அல்லாஹ் தான்!" என்று அவர்கள் நிச்சயமாகக் கூறுவார்கள்... (39:38)

அல்லாஹ்வை அவன் வல்லமையை மக்கா காஃபிர்களும் ஏற்றுக் கொண்டிருந்தார்கள் என்பதை மேற்காணும் வசனங்கள் சந்தேகமின்றி நிரூபிக்கின்றன. அப்படியானால் அவர்களுக்கும், நம(முஸ்லிம்களு)க்கும் என்ன வித்தியாசம்.

வணக்க வழிபாட்டில் தான் அவர்களுக்கும், ந(முஸ்லிம்களு)க்கும் வித்தியாசம் அவர்கள் தங்கள் வணக்கங்களை அல்லாஹ் அல்லாதவர்களுக்குச் செலுத்தியதோடு அதற்குக் காரணமும் சொன்னார்கள்.

அதைத் தன் திருமறையில் அல்லாஹ் குறிப்பிடுகிறான்:

அறிந்து கொள்வீராக! களங்கமற்ற மார்க்க (வழிபாடு யாவு)ம் அல்லாஹ்வுக்கே உரியது இன்னும், அவனையன்றிப் பாதுகாப்பாளர்களை எடுத்துக் கொண்டிருப்பவர்கள், "அவர்கள் எங்களை அல்லாஹ்வின் அருகே சமீபமாகக் கொண்டு செல்வார்கள் என்பதற்காகவேயன்றி நாங்கள் அவர்களை வணங்கவில்லை" (என்கின்றனர்). அவர்கள் எதில் வேறுபட்டுக் கொண்டிருக்கிறார்களோ அதைப்பற்றி நிச்சயமாக அல்லாஹ் அவர்களுக்கிடையே தீர்ப்பளிப்பான்; பொய்யனாக நிராகரித்துக் கொண்டிருப்பவனை நிச்சயமாக அல்லாஹ் நேர்வழியில் செலுத்த மாட்டான். (39:3)

வணக்கங்கள் யாவும் அல்லாஹ்வுக்கு மட்டுமே உரியது, அல்லாஹ்வுக்காக செய்யப்படும் எதுவும் பிறருக்காக, பிறவற்றிற்க்காகச் செய்யக் கூடாது என்பதைக் கீழ் காணும் வசனங்கள் பறைசாற்றுகின்றன.

நீர் கூறும்; "மெய்யாக என்னுடைய தொழுகையும், என்னுடைய குர்பானியும், என்னுடைய வாழ்வும், என்னுடைய மரணமும் எல்லாமே அகிலங்களின் இறைவனாகிய அல்லாஹ்வுக்கே சொந்தமாகும். (6:162)

மேலும் நபி(ஸல்)அவர்கள் கூறினார்கள்

பிரார்த்தனை அது தான் வணக்கம். நுஃமான் இப்னு பஷீர்(ரலி): திர்மிதி.

பிரார்த்தனையும் வணக்கம் தான், பிரார்த்தித்து நம் தேவைகளைக் கேட்பது, நம் குறைகளை போக்கவும், நோயை நீக்கவும் கோருவது அனைத்தையும் அல்லாஹ்விடம் மட்டும்தான் கேட்க வேண்டும்.

என்னை அழைப்பவருக்கு நான் பதிலளிக்கிறேன் நேர் வழி பெற என்னையே அழைக்க வேண்டும் என்றும் அல்லாஹ் தன் திருமறையில் மிகத் தெளிவாகக் கூறுகிறான்.

(நபியே!) என் அடியார்கள் என்னைப்பற்றி உம்மிடம் கேட்டால்; "நிச்சயமாக நான் சமீபமாகவே இருக்கிறேன், பிரார்த்தனை செய்பவரின் பிரார்த்தனைக்கு அவர் பிரார்த்தித்தால் விடையளிக்கிறேன்; அவர்கள் என்னிடமே (பிரார்த்தித்துக்) கேட்கட்டும்; என்னை நம்பட்டும். அப்பொழுது அவர்கள் நேர்வழியை அடைவார்கள்" என்று கூறுவீராக. (2:186)

அல்லாஹ்வைத் தவிர பிறரை அழைப்பவர்களை வழிகேடர்கள் என்றும், அப்படி அழைக்கப்படுபவர்களும் நம்மைப் போன்றவர்கள் தான் அவர்களை மறுமை நாள் வரை அழைத்தாலும் அவர்கள் பதிலளிக்க மாட்டார்கள் என்றும் அல்லாஹ் கூறுகிறான்.

நிச்சயமாக அல்லாஹ்வையன்றி எவர்களை நீங்கள் அழைக்கின்றீர்களோ, அவர்களும் உங்களைப் போன்ற அடிமைகளே நீங்கள் உண்மையாளர்களாக இருந்தால் நீங்கள் அவர்களை அழைத்துப் பாருங்கள் - அவர்கள் உங்களுக்கு பதில் அளிக்கட்டும்! 7:194

அவர்களுக்கு நடக்கக்கூடிய கால்கள் உண்டா? அல்லது அவர்களுக்கு பிடிப்பதற்குரிய கைகள் உண்டா? அல்லது அவர்களுக்குப் பார்க்கக் கூடிய கண்கள் உண்டா? அல்லது அவர்களுக்குக் கேட்கக் கூடிய காதுகள் உண்டா? (நபியே!) நீர் கூறும்; "நீங்கள் இணை வைத்து வணங்கும் (உங்கள்) தெய்வங்களை (எல்லாம்) அழைத்து, எனக்கு(த் தீங்கு செய்திட) சூழ்ச்சி செய்து பாருங்கள் - (இதில்) எனக்குச் சிறிதும் அவகாசம் கொடுக்காதீர்கள்" என்று. 7:195

"நிச்சயமாக என் பாதுகாவலன் அல்லாஹ்வே. அவனே வேதத்தை இறக்கி வைத்தான். அவனே நல்லடியார்களைப் பாதுகாப்பவன் ஆவான். 7:196

அவனையன்றி நீங்கள் யாரை பிரார்த்திக்கிறீர்களோ அவர்கள் உங்களுக்கு உதவி செய்யவும் தங்களுக்குத் தாங்களே உதவி செய்து கொள்ளவும் சக்தி பெற மாட்டார்கள். 7:197

கியாம நாள்வரை (அழைத்தாலும்) தனக்கு பதில் கொடுக்க மாட்டாத - அல்லாஹ் அல்லாதவர்களை அழை;ப்பவர்களை விட வழி கெட்டவர்கள் யார்? தங்களை அழைப்பதையே அவர்கள் அறியமுடியாது. 46:5

அன்றியும் மனிதர் ஒன்று கூட்டப்படும் (அந்நாளில்) இவர்கள் அவர்களுடைய பகைவர்களாக இருப்பர்; அவர்கள் தங்களை வழிபட்டுக் கொண்டு இருந்ததையும் நிராகரித்து (மறுத்து) விடுவர். 46:6 மேலும் காண்க (22:73,35:13,14,39:38) மேற்காணும் வசனங்கள் அல்லாஹ் அல்லாதாருக்கு துளியும் அதிகாரம் இல்லை. அவர்கள் நல்லடியார்களாக இருந்தாலும் சரியே! வணக்கங்களுக்கு முழுச்சொந்தக்காரன் அல்லாஹ் மட்டும் தான் என்பதை தெளிவு படுத்துகின்றன.

3. பெயர் மற்றும் தன்மைகளில் ஏகத்துவம் (அஸ்மாவு வஸிஃபாத்)

பெயரில் ஏகத்துவம்:

அல்லாஹ் தன் திருமறையில் கூறுகின்றான் :

அல்லாஹ்வுக்கு அழகிய திருநாமங்கள் இருக்கின்றன அவற்றைக் கொண்டே நீங்கள் அவனைப் பிரார்த்தியுங்கள், அவனுடைய திருநாமங்களை தவறாக பயன்படுத்துவோர்களை (புறக்கணித்து) விட்டு விடுங்கள் - அவர்களுடைய செயல்களுக்காக அவர்கள் (தக்க) கூலி கொடுக்கப்படுவார்கள்.(7:180)

அல்லாஹ்வுக்கு தொண்ணூற்று ஒன்பது -நூற்றுக்கு ஒன்று குறைவான- பெயர்கள் உள்ளன .அவற்றை
(நம்பிக்கைக் கொண்டு) மனனமிட்ட யாரும் சுவர்க்கம் நுழையாமல் இருப்பதில்லை. மேலும் அல்லாஹ் ஒற்றையானவன் , ஒற்றைப்படையையே அவன் விரும்புகிறான். அபூஹூரைரா(ரலி) புகாரி .

மேற்காணும் திருமறை வசனமும், நபிமொழியும் அல்லாஹ்வுக்கு அழகிய பெயர்கள் உள்ளன என்று கூறுகின்றன. அவற்றைக் கொண்டே அவனை அழையுங்கள் என்றும் கூறுகின்றன. அல்லாஹ்வுடைய பெயரைக் கொண்டு மனிதர்களை அழைக்கக் கூடாது.

உதாரணமாக அல்லாஹ்வுடைய பெயர்களில் ஒன்றான அர்ரஹ்மான் (அளவற்ற அருளாளன்) என்ற பெயரைச் சூட்டிக்கொள்ள நாடினால், அர்ரஹ்மானுடன், அப்துன் என்பதையும் இணைத்து அப்துர் ரஹ்மான் (அளவற்ற அருளாளனின் அடிமை)என்றே பெயர் சூட்டிக் கொள்ள வேண்டும்.

நபி(ஸல்)அவர்கள் கூறினார்கள் மறுமை நாளில் அல்லாஹ்வின் முன்னிலையில் மலிக்குல் அம்லாக் (அரசர்களின் அரசன்)என்று பெயர் சூட்டிக் கொண்டவனின் பெயர் தான் மிக மிகக் கெட்ட பெயராகும். அபூஹூரைரா(ரலி) புகாரி.

அகிலங்களின் இரட்சகனும், அதிபதியுமான வல்ல அல்லாஹ்வின் பெயருக்கு நிகராக யாரும் பெயர் சூட்டிக் கொள்ளவோ, தன்னைத் தானே அழைத்துக் கொள்ளவோ, பிறரை அழைக்கவோ கூடாது என்பதோடு அல்லாஹ் அல்லாத யாருடைய அல்லது எதனுடைய பெயருடனும் அப்துன்(அடிமை) என்பதை இணைத்து அழைக்கக் கூடாது என்பதையும் கவனத்தில் வைக்க வேண்டும்.

தன்மைகளில் ஏகத்துவம்:

அளவற்ற அருளாளன்:

(அவன்) அளவற்ற அருளாளன், நிகரற்ற அன்புடையோன்.1:2

அன்பு, கருணை எனும் பண்புகள் மனிதனிடத்திலும் இருக்கின்றன என்றாலும் அல்லாஹ்வின் அன்பு, கருணைப் போன்று விசாலமானதாக, அவன் தன்னுடைய, தன் மார்க்கத்தின் எதிரிகளுக்குக்கூட கருணை புரிந்து இவ்வுலகில் உணவளித்து வாழச் செய்வது போல் மனிதனின் கருணை இல்லை.

நித்திய ஜீவன் (என்றென்றும் நிலைத்திருப்பவன்):

அல்லாஹ் - அவனைத்தவிர (வணக்கத்திற்குரிய) நாயன் வேறு இல்லை. அவன் என்றென்றும் ஜீவித்திருப்பவன், என்றென்றும் நிலைத்திருப்பவன்;...2:255

இன்னும், நிலைத்தவனாகிய நித்திய ஜீவனான (அல்லாஹ்வுக்கு) யாவருடைய முகங்களும் பணிந்து தாழ்ந்துவிடும்; ஆகவே எவன் அக்கிரமத்தைச் சுமந்து கொண்டானோ, அவன் நற்பேறிழந்தவனாகி விடுவான். 20:111

(பூமியில்) உள்ள யாவரும் அழிந்து போகக்கூடியவரே -55:26

மிக்க வல்லமையும், கண்ணியமும் உடைய உம் இறைவனின் முகமே நிலைத்திருக்கும்.55:27

என்றென்றும் நிலைத்திருப்பவன் அல்லாஹ் மட்டும் தான், அவனுடைய படைப்புகள் அனைத்தும் மரணித்தே ஆக வேண்டும். மனிதர்களில் நல்லடியாராக இருந்தாலும் சரி, நபிமார்களாகவே இருந்தாலும் சரி அவர்கள் உயிருடன் இருப்பதாக கருதினால் அல்லாஹ்வின் நித்திய ஜிவன் என்ற தன்மையில் இணைவைத்தவர்களாக ஆவோம்.

சூழ்ந்து அறிபவன்:

வானங்களில் உள்ளவையும், பூமியில் உள்ளவையும் எல்லாம் அல்லாஹ்வுக்கே சொந்தம்;. மேலும் அல்லாஹ் எல்லாப் பொருட்களையும் சூழ்ந்தறிபவனாக இருக்கிறான். 4:126

மேலும் நிச்சயமாக நாம் மனிதனைப் படைத்தோம், அவன் மனம் அவனிடம் என்ன பேசுகிறது என்பதையும் நாம் அறிவோம்; அன்றியும், (அவன்) பிடரி(யிலுள்ள உயிர்) நரம்பை விட நாம் அவனுக்கு சமீபமாகவே இருக்கின்றோம். 50:16

நிச்சயமாக அல்லாஹ் வானங்களிலுள்ளவற்றையும் பூமியிலுள்ளவற்றையும் அறிகிறான் என்பதை நீர் பார்க்கவில்லையா? மூன்று பேர்களின் இரகசியத்தில் அவன் அவர்களில் நான்காவதாக இல்லாமலில்லை, இன்னும் ஐந்து பேர்களி(ன் இரகசியத்தி)ல் அவன் ஆறாவதாக இல்லாமலில்லை, இன்னும் அதைவிட மிகக் குறைந்தோ, அதைவிட மிக அதிகமாகவோ, அவர்கள் எங்கிருந்தாலும் அவன் அவர்களுடன் இல்லாமலில்லை - அப்பால் கியாம நாளில் அவர்கள் செய்தவற்றைப் பற்றி அவர்களுக்கு அவன் அறிவிப்பான், நிச்சயமாக அல்லாஹ் எல்லாப் பொருட்களைப் பற்றியும் நன்கறிந்தவன்.58:7

அல்லாஹ் மனிதன் தன் மனதிற்குள் எண்ணுவதையும், நாம் மட்டுமே அறிவோம் என்று நினைத்து இரகசியமாக பேசிக் கொள்வதையும், எங்கிருந்தாலும் அனைத்தையும், உள்ளும், புறமும் சூழ்ந்தறிபவனாக இருக்கிறான்.

செவியுறுபவன், பார்ப்பவன்:

எவரேனும் இவ்வுலகின் பலனை(மட்டும்) அடைய விரும்பினால், "அல்லாஹ்விடம் இவ்வுலகப்பலனும், மறுவுலகப்பலனும் உள்ளன. அல்லாஹ் கேட்பவனாகவும் பார்ப்பவனாகவும் இருக்கின்றான்." 4:134

அல்லாஹ்வும் பார்க்கிறான், செவியுறுகிறான், மனிதனும் செவியுறுகிறான், பார்க்கிறான் எனினும் இரண்டுக்குமிடையில் பெரும் வித்தியாசம் உள்ளது.

மனிதனுடைய பார்வை குறிப்பிட்ட தூரம், அதுவும் திரையின்றி இருந்தால் தான் பார்க்க முடியும். குறிப்பிட்ட காட்சியை, குறிப்பிட்ட நேரம் மட்டும்தான் பார்க்க முடியும், மனிதனுடைய செவிப்புலன் குறிப்பிட்ட தூரம், குறிப்பட்ட நபர் பேசினால், குறிப்பிட்ட சப்தத்தை, குறிப்பிட்ட நேரம் மட்டுமே செவியுற முடியும் அதுவும் மனிதன் உயிர் வாழும் வரையில் தான் என்ற அளவுகோலிலேயே உள்ளது.

அல்லாஹ்வோ உலகின் எந்த மூலையிலிருந்தாலும், எத்தனை திரைகளிடப்பட்டிருந்தாலும், எந்த நேரத்திலும், எவ்வளவு நேரம் வேண்டுமானாலும், இருளிலும், வெளிச்சத்திலும் பார்க்கிறான், பார்க்க முடியும். அதைப் போலவே உலகின் எந்த மூலையிலிருந்து, எத்தனை பேர், எவ்வளவு நேரம்; அழைத்தாலும் செவியுறுகிறான், என்றென்றும் செவியுறுவான்.

மறைவான ஞானம்:

அவனிடமே மறைவானவற்றின் திறவுகோல்கள் இருக்கின்றன. அவற்றை அவனன்றி எவரும் அறியார். மேலும் கரையிலும் கடலிலும் உள்ளவற்றையெல்லாம் அவன் அறிவான்; அவன் அறியாமல் ஓர் இலையும் உதிர்வதில்லை. பூமியின் (ஆழத்தில் அடர்ந்த) இருள்களில் கிடக்கும் சிறு வித்தும், பசுமையானதும், உலர்ந்ததும் (எந்தப் பொருளும்) தெளிவான (அவனுடைய) பதிவேட்டில் இல்லாமலில்லை. 6:59

நிச்சயமாக அந்த (கியாம) நேரம் பற்றிய ஞானம் அல்லாஹ்விடமே இருக்கிறது அவனே மழையையும் இறக்குகிறான்; இன்னும் அவன் கர்ப்பங்களில் உள்ளவற்றையும் அறிகிறான். நாளை தினம் தாம் (செய்வது) சம்பாதிப்பது எது என்பதை எவரும் அறிவதில்லை தான் எந்த பூமியில் இறப்போம் என்பதையும் எவரும் அறிவதில்லை. நிச்சயமாக அல்லாஹ்தான் நன்கறிபவன்; நுட்பம் மிக்கவன். 31:34

கடந்த காலங்களில் நடந்து முடிந்தவற்றையும், நிகழ் காலங்களில் நடந்து கொண்டிருப்பவற்றையும், எதிர் காலத்தில் நடக்கவிருப்பவற்றையும், வானங்கள், பூமியில் உள்ள அனைத்தையும், ஒவ்வொன்றின் விதியையும் அல்லாஹ் மட்டுமே அறிவான்.

அல்லாஹ்வுக்கு மட்டுமே சொந்தமான இத்தன்மைகளில் ஏதாவது ஒன்று யாருக்காவது இருப்பதாகக் கருதினால் (அவர்கள் உயிருடன் இருந்தாலும் சரி, மரணித்தவர்களாக இருந்தாலும் சரி )அல்லாஹ்வின் கூற்றுக்கு மாறு செய்கிறோம். அல்லாஹ்வின் தன்மையை வேறு ஒருவர் பெற்றிருப்பதாகக் கருதி அல்லாஹ்வுக்கு இணை கற்பித்தவர்களாகிறோம் .

(நபியே!) நீர் கூறுவீராக: அல்லாஹ் அவன் ஒருவனே.112:1

அல்லாஹ் (எவரிடத்தும்) தேவையற்றவன்.112:2

அவன் (எவரையும்) பெறவுமில்லை (எவராலும்) பெறப்படவுமில்லை.112:3

அன்றியும், அவனுக்கு நிகராக எவரும் இல்லை.112:4

வானங்களையும், பூமியையும் படைத்தவன் அவனே உங்களுக்காக உங்களில் இருந்தே ஜோடிகளையும் கால் நடைகளிலிருந்து ஜோடிகளையும் படைத்து, அதைக் கொண்டு உங்களை(ப் பல இடங்களிலும்) பல்கிப் பரவச் செய்கிறான், அவனைப் போன்று எப்பொருளும் இல்லை அவன் தான் (யாவற்றையும்) செவியேற்பவன், பார்ப்பவன். 42:11

இணைவைத்தல் பெரும் வழிகேடாகும். அதற்கு கூலி நரகம் தான் என்பதை நாம் அறிந்து அதிலிருந்து விலகுவோம்.

இணைவைத்தல்(ஷிர்க்)

ஏகத்துவத்திற்கு எதிர்மறையானது இணைவைத்தல் (ஷிர்க்) ஆகும். இது இருவகைப்படும்

1)பெரிய ஷிர்க் 2) சிறிய ஷிர்க்

1.பெரிய இணைவைத்தல் (ஷிர்க்) மன்னிக்கப்படாத குற்றம்

4:48. நிச்சயமாக அல்லாஹ் தனக்கு இணைவைப்பதை மன்னிக்கமாட்டான்;. இதைத்தவிர, (மற்ற) எதையும் தான் நாடியவர்களுக்கு மன்னிப்பான்;. யார் அல்லாஹ்வுக்கு இணைவைக்கிறார்களோ அவர்கள் நிச்சயமாக மிகவும் பெரிய பாவத்தையே கற்பனை செய்கின்றார்கள்.

4:116. நிச்சயமாக அல்லாஹ் தனக்கு இணை வைப்பதை மன்னிக்கவே மாட்டான்;. இது அல்லாத (பாவத்)தைத் தான் நாடியவருக்கு மன்னிப்பான்;. எவன் ஒருவன் அல்லாஹ்வுக்கு இணை வைக்கின்றானோ, அவன் நிச்சயமாக வெகு தூரமான வழிகேட்டில் ஆகிவிட்டான்.

5:72. "நிச்சயமாக மர்யமுடைய மகனாகிய மஸீஹ் (ஈஸா) தான் அல்லாஹ்" என்று கூறுகிறவர்கள் உண்மையிலேயே நிராகரிப்பவர்கள் ஆகிவிடடார்கள்;. ஆனால் மஸீஹ் கூறினார்; "இஸ்ராயீலின் சந்ததியினரே! என்னுடைய இறைவனும், உங்களுடைய இறைவனுமாகிய அல்லாஹ்வை வணங்குங்கள்" என்று. எனவே எவனொருவன் அல்லாஹ்வுக்கு இணை கற்பிப்பானோ அவனுக்கு அல்லாஹ் சுவனபதியை நிச்சயமாக ஹராமாக்கிவிட்டான், மேலும் அவன் ஒதுங்குமிடம் நரகமேயாகும், அக்கிரமக்காரர்களுக்கு உதவிபுரிபவர் எவருமில்லை.

இன்னும் லுஃக்மான் தம் புதல்வருக்கு "என் அருமை மகனே! நீ அல்லாஹ்வுக்கு இணை வைக்காதே நிச்சயமாக இணை வைத்தல் மிகப் பெரும் அநியாயமாகும்," என்று நல்லுபதேசம் செய்து கூறியதை (நினைவுபடுத்துவீராக).31:13

பெரும் பாவங்களில் மிகப் பெரும் பாவங்களை உங்களுக்கு நான் அறிவிக்கட்டுமா? என்று நபி(ஸல்) அவர்கள் கேட்டார்கள். அதற்கு நாங்கள் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களே ! ஆம் அறிவியுங்கள் என்று கூறினோம்.அப்போது நபி (ஸல்) அவர்கள் அல்லாஹ்வுக்கு இணைவைத்தல்...என்று கூறினார்கள். அபூபக்ரா(ரலி) புகாரி, முஸ்லிம்.

2) செய்த நல்லறங்கள் அனைத்தும் அழிந்துவிடும்

இதுவே அல்லாஹ்வின் நேர் வழியாகும், தன் அடியார்களில் அவன் யாரை விரும்புகிறானோ, அவர்களுக்கு இதன்மூலம் நேர்வழி காட்டுகிறான்; (பின்னர்) அவர்கள் இணைவைப்பார்களானால், அவர்கள் செய்து வந்ததெல்லாம், அவர்களை விட்டு அழிந்துவிடும்.(6:88)

3) சுவனம் ஹராம்

எனவே எவனொருவன் அல்லாஹ்வுக்கு இணை கற்பிப்பானோ அவனுக்கு அல்லாஹ் சுவனபதியை நிச்சயமாக ஹராமாக்கிவிட்டான், மேலும் அவன் ஒதுங்குமிடம் நரகமேயாகும்.(5:72)

4) அல்லாஹ் தடுத்ததை செய்த குற்றம்

..."வாருங்கள்! உங்கள் இறைவன் உங்கள் மீது விலக்கியிருப்பவற்றையும் (ஏவியிருப்பவற்றையும்) நாம் ஓதிக் காண்பிக்கிறேன்; எப்பொருளையும் அவனுக்கு இணையாக வைக்காதீர்கள. (6:151)

நிச்சயமாக அல்லாஹ் ரோஷமடைகிறான். அவனின் ரோஷமாகிறது அவன் எதனை தடுத்துள்ளானோ அதை மனிதன் செய்யும் போது ஏற்படுகிறது.- புகாரி,முஸ்லிம்:அபுஹூரைரா(ரலி)

2. சிறிய இணைவைத்தல்( ஷிர்க் )

பிறர் பார்க்க வேண்டும், போற்ற வேண்டும் என்பதற்காக அமல் செய்வது (முகஸ்துதி) இதன் விளைவு

1)அமல்களுக்கு நன்மை கிடையாது.

2) மறுமையில் தண்டனை கிடைக்கும் (நிரந்தர நரகம் கிடையாது).

கியாமத் நாளில் முதல்முதலாக தீர்ப்பு வழங்கப்படுபவர் அல்லாஹ்வின் பாதையில் ஷஹீதான மனிதராவார். அவர் கொண்டுவரப்பட்டு அவருக்கு அருளப்பட்ட அருட்கொடைகளைப் பற்றி கேட்கப்படுவார். அதற்கவர் நான் உன் பாதையில் போர் செய்து ஷஹீதானேன். என்று கூறுவார். அதற்கு அல்லாஹ் நீ பொய் கூறுகிறாய். சிறந்த மாவீரன் என மக்களால் புகழப்பட நீ போர் புரிந்தாய் அதன் புகழை உலகிலேயே நீ பெற்றுவிட்டாய் என்று கூறி நரகிற்கு இழுத்துச் செல்ல உத்தரவிடுவான் பிறகு குர்ஆனை கற்றறிந்த மார்க்க அறிஞர் விஷயத்தில் தீர்ப்புக் கூறப்படும். அவர் அழைத்துவரப்பட்டு அல்லாஹ் அவருக்கு வழங்கிய அருட்கொடைகள் பற்றி விசாரிக்கப்படுவார். அதற்கு அவர் நான் கல்வியைக் கற்று மற்றவர்களுக்கு கற்றுக்கொடுத்தேன். உனக்காக குர்ஆன் ஓதினேன் என்று கூறுவார். அதற்கு அல்லாஹ் நீ பொய் கூறி விட்டாய் மக்கள் உன்னைக் காரீ (குர்ஆன் ஓதுபவர்) எனப் புகழப்படுவதற்காக குர்ஆனை ஓதினாய் என்று கூறுவான். அவரை நரகிற்கு இழுத்துச் செல்ல உத்தரவிடுவான். பின்னர் தீர்ப்பளிக்கப்படுபவர் அல்லாஹ்வால் சிறந்த செல்வங்கள் வழங்கப்பட்ட மனிதராவார். அவர் கொண்டுவரப்பட்டு அவருக்கு அருளப்பட்ட அருட்கொடைகளைப் பற்றி விசாரிக்கப்படுவார். அவர் என் செல்வத்தை உன்பாதையில் செலவிட்டேன் என்று கூற அல்லாஹ் நீ பொய்யுரைத்து விட்டாய். உன்னை கொடையாளி என்று மக்கள் புகழ்வதற்காக நீ செலவு செய்தாய். அவ்வாறே உலகில் புகழ்ந்து விட்டனர். என்று கூறிவிட்டு அவரையும் நரகிற்கு இழுத்துச் செல்ல உத்தரவிடுவான். - முஸ்லிம்:அபூஹூரைரா(ரலி)

பகலில் பாவம் செய்தவர் தவ்பாச் செய்து மீளுவதற்காக இரவில் நிச்சயமாக அல்லாஹ் தன் கரத்தை விரிக்கிறான். (தவ்பாவை ஏற்றுக்கொள்கிறான்)இரவில் சூரியன் மறைந்ததிலிருந்து உதயமாகும் வரை பாவம் செய்தவர் தவ்பாச் செய்து மீளுவதற்காக பகலில் நிச்சயமாக அல்லாஹ் தன் கரத்தை விரிக்கிறான்(தவ்பாவை ஏற்றுக்கொள்கிறான்) - முஸ்லிம்: அபுமூஸா அல் அஸ்அரி(ரலி)

நாம் அறியாமல் இணைவைத்திருந்தால், வேறு பாவங்கள் செய்திருப்பின் வல்ல அல்லாஹ்விடமே தவ்பா செய்து மீட்சி பெறுவோம்.