Index |Subscribe mailing list | Help | E-mail us

பிரார்த்தனையின் முக்கியத்துவமும் ஒழுக்கங்களும்

மவ்லவி கே.எல்.எம்.இப்ராஹீம் மதனீ M.A

 

 

சந்தேகமின்றி ஒரு விசுவாசி, எல்லா நிலைகளிலும் எங்கிருந்த போதிலும் அவனுடைய இறைவனிடமே பிரார்த்திக்க வேண்டும். அந்த தூய்மையான இறைவன் தன் அடியார்களுக்கு மிக சமீபத்தில் இருக்கின்றான். உயர்வானவனாகிய அல்லாஹ் தன் திருமறையில் இவ்வாறு கூறுகின்றான்.


(நபியே!) என் அடியார்கள் என்னைப்பற்றி உம்மிடம் கேட்டால்; "நிச்சயமாக நான் சமீபமாகவே இருக்கிறேன், பிரார்த்தனை செய்பவரின் பிரார்த்தனைக்கு அவர் பிரார்த்தித்தால் விடையளிக்கிறேன். அவர்கள் என்னிடமே (பிரார்த்தித்துக்) கேட்கட்டும், என்னையே நம்பட்டும். அப்பொழுது அவர்கள் நேர்வழியை அடைவார்கள்" என்று கூறுவீராக.
(அல்குர்ஆன் 2: 186)


இன்னும் உங்களுடைய இரட்சகன் கூறுகிறான், நீங்கள் என்னையே அழை(த்துப் பிரார்த்தி)யுங்கள், நான் உங்களு(டைய பிரார்த்தனை)க்கு பதிலளிப்பேன். நிச்சயமாக, என்னை வணங்குவதை விட்டும் பெருமை அடிக்கிறார்களே, அத்தகையோர் அவர்கள் இழிவடைந்தவர்களாய் நரகம் புகுவார்கள்.
(அல்-குர்ஆன் 40: 60)


உயர்ந்தவனாகிய உங்களின் இரட்சகன் வெட்கமுள்ளவன், சங்கையானவன் அவனிடன் இருகைகளையும் உயர்த்தினால் (பிரார்த்தித்தால்) அவ்விரண்டையும் வெறுமையாக திருப்பிவிட அவன் வெட்கப்படுகின்றான் என நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள்.


பாவம் சம்பந்தப்படாத இரத்த பந்தத்தை துண்டிக்காத விஷயத்தில் எந்த ஒரு முஸ்லிமாவது பிரார்த்தனை செய்தால் அல்லாஹ் அவனுக்கு மூன்றில் ஒன்றை கொடுக்காமலில்லை,


1. அவனின் பிரார்த்தனையை உடன் ஏற்றுக் கொள்கின்றான்.
2. அல்லது (அப்பிரார்த்தனையை ஏற்றுக் கொள்ளாமல்) அதனுடைய நன்மையை மறுமைக்காக சேகரித்து வைக்கின்றான்.
3. அல்லது அப்பிரார்த்தனையைப் போன்று (அவனுக்கு நேரவிருந்த) ஒரு ஆபத்தை தடுத்து விடுகின்றான் என நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். அப்போது நபித்தோழர்கள், அப்படியானால் நாம் அதிகம் பிரார்த்தனை செய்வோமே என்றனர். அதற்கு நபி(ஸல்) அவர்கள், அல்லாஹ்விடம் மிகவும் அதிகம் இருக்கின்றது எனக்கூறினார்கள்.


ஆகவே வல்ல இறைவன் அல்லாஹுவிடம் அதிகமதிகம் பிரார்த்தனை செய்ய வேண்டும். குறிப்பாக பாவமன்னிப்புத் தேட வேண்டும். அவன் நமது பிரார்த்தனைகளை ஏற்று எங்களின் பாவங்களையும் மன்னிப்பான்.

 

ஆனாலும், குறிப்பாக இங்கு கூறப்படும் நேரங்கள், நிலைகள், இடங்களில் பிரார்த்தனைகளை அதிகமாக செய்ய வேண்டும். அதேபோன்று பிரார்த்தனை செய்யும் முறைகளைப் பேணி நாமும் பிரார்த்தித்தால் அல்லாஹ் நம் பிரார்த்தனைகளை ஏற்றுக்கொள்வான்.


பிரார்த்தனை செய்யும் ஒழுக்கங்கள்


1. தூய மனதோடு பிரார்த்தனை செய்ய வேண்டும்.


2.  பிரர்த்தனையைத் துவங்கும் போதும், முடிக்கும் போதும் அல்லாஹ்வைப் போற்றிப் புகழ்ந்து நபி(ஸல்) அவர்கள் மீது ஸலவாத்துக் கூறி பிரார்த்தனை செய்ய வேண்டும்.


3.  பதில் கிடைக்கும் என்ற நம்பிக்கையோடும், உறுதியோடும் பிரார்த்தனை செய்ய வேண்டும்.


4. அவசியத்தைக்கூறி பிரார்த்திக்க வேண்டும். பிரார்த்தனையில் அவசரப்படக்கூடாது. (அதாவது அல்லாஹ்விடம் ஒன்றிரண்டு முறைகள் பிரார்த்தனை செய்து, கேட்டது கிடைக்கவில்லையானால், அல்லாஹ்வின் மீது அவநம்பிக்கை கொண்டு, பிரார்த்தனையை விட்டுவிடுவது கூடாது)


5. உள்ளச்சத்தோடு பிரார்த்திக்க வேண்டும்.


6. சந்தோஷ நேரத்திலும், கஷ்ட நேரத்திலும் பிரார்த்திக்க வேண்டும்.


7. அல்லாஹ்வைத் தவிர வேறு யாரிடமும் பிரார்த்திக்கக் கூடாது.


8.  தன் குடும்பம், பொருள், பிள்ளை மற்றும் தனக்கும் கேடாக பிரார்த்தனை செய்யக் கூடாது.


9. சத்தத்தை மிகவும் உயர்த்தாமலும் மிகவும் குறைக்காமலும் அவ்விரண்டிற்கும் மத்தியில், நடு நிலையோடு பிரார்த்தனை செய்ய வேண்டும்.


10. செய்த பாவத்தை மனப்பூர்வமாய் ஏற்று, அதற்காக பிழை பொறுப்புத் தேடி, அல்லாஹ் அவருக்கு அளித்த அருட்கொடைகளை உளமாற ஒப்புக்கொண்டு, அவற்றிற்காக அல்லாஹ்விற்கு நன்றி செலுத்த வேண்டும்.


11. துஆச் செய்யும் போது அளவுக்கு மேல் சிரமத்தை மேற்கொள்ளாமல் இருக்க வேண்டும்.


12.  தெளிவான உள்ளத்தோடும் பயபக்தியோடும் அல்லாஹ்வின் அருள் மீது நம்பிக்கை வைத்து, அவனது தண்டனையிலிருந்து பயந்து பிரார்த்தனை செய்ய வேண்டும்.


13. மற்றவர்களின் பொருளை எடுத்து அல்லது அவர்களுக்கு அநியாயம் செய்திருந்தால் அந்தப் பொருட்களை உரியவர்களிடம் திருப்பிக் கொடுத்து அவர்களிடம் மன்னிப்புக் கேட்டபின் அப்பாவத்திற்காக தவ்பாச் செய்ய வேண்டும்.


14. (பிரார்த்திற்கும் ஒவ்வொன்றையும்) மும்மூன்று தடவை பிரார்த்திக்க வேண்டும்.


15. கிப்லாவை முன்னோக்க வேண்டும்.


16. பிரார்த்தனை செய்யும்போது கைகளை உயர்த்த வேண்டும்.


17. முடியுமாக இருந்தால் துஆச் செய்வதற்கு முன் ஒழுச் செய்து கொள்ள வேண்டும்.


18. ஒழுக்கத்துடன் அல்லாஹ்விடம் பிரார்த்தனை செய்யவேண்டும். "துஆ" ஒரு வணக்கம் என்பதாக நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள்.


19. முதலில் தனக்காக பிரார்த்தித்து பின்பு மற்றவர்களுக்காக பிரார்த்திக்க வேண்டும். (இறைவா! எனது பாவங்களையும், இன்னாருடைய பாவங்களையும் மன்னிப்பாயாக என்று கேட்பது போல்).


20. அல்லாஹ்வின் அழகிய திருநாமங்கள் மற்றும் அவனுடைய உயர்ந்த பண்புகளைக் கொண்டு அல்லது தான் செய்த நல் அமல்களைக் கொண்டு அல்லது உயிரோடு வாழக்கூடிய நல்லவர்களிடம் (தனக்காக) பிரார்த்தனை செய்யும்படி கேட்டு (இஸ்லாத்தில் வஸீலா தேடுவதற்கு அனுமதிக்கப்பட்ட இம்மூன்று வகைகளில் ஒன்றைக் கொண்டு) அல்லாஹுவிடம் உதவி (வஸீலா) தேடவேண்டும்.


21. உணவு, குடிபானங்கள் அணியும் ஆடை இவைகள் ஹலாலானவைகளாக இருக்க வேண்டும்.


22. பாவமான காரியங்களுக்காக அல்லது இரத்த உறவுகளை முறிப்பதற்காக பிரார்த்தனை செய்யக் கூடாது.


23. பிரார்த்தனை செய்பவர் நன்மையை ஏவி தீமையைத் தடுத்து பாவங்களிலிருந்து தன்னைப் பாதுகாத்துக் கொண்டவராக இருக்க வேண்டும்.

 

பிரார்த்தனை ஏற்றுக் கொள்ளப்படும் நேரங்கள்


1. இரவின் நடுப்பகுதி
2. இரவில் கடைசி மூன்றாவது பகுதி
3. ஒவ்வொரு தொழுகையின் கடைசி நேரத்தில் (அதாவது அத்தஹியாத்தில் ஸலாம் கொடுப்பதற்கு முன்பு)
4. அதானுக்கும் இகாமத்திற்கும் மத்தியில்
5. பர்ளான தொழுகைக்கு அதான் சொல்லப்படும் போது
6. மழை பொழியும் போது
7. உண்மையான (நம்பிக்கையான) எண்ணத்துடன் ஸம்ஸம் தண்ணீரைக் குடிக்கும் போது
8. (தொழுகையில்) ஸுஜூது செய்யும் போது
9. ஒரு முஸ்லிம் தன்னுடைய இன்னொரு முஸ்லிம் சகோதரருக்கு செய்யும் பிரார்த்தனை
10. அரஃபாவுடைய நாளில் செய்யும் பிரார்த்தனை
11. தந்தை பிள்ளைகளுக்கும், பிள்ளைகள் தந்தைக்கும் செய்யும் பிரார்த்தனை
12. பிரயாணியின் பிரார்த்தனை
13. பெற்றோருக்குக் கட்டுப்பட்டு நடக்கும் பிள்ளையின் பிரார்த்தனை
14. சிறிய ஜம்ராவிற்குக் கல் எறிந்த பிறகு கேட்கும் பிரார்த்தனை
15. நடு ஜம்ராவிற்குக் கல் எறிந்த பிறகு கேட்கும் பிரார்த்தனை
16. கஃபாவிற்குள் கேட்கும் பிரார்த்தனை. ஹிஜ்ருக்குள் (கஃபத்துல்லாஹ்வை ஒட்டி இருக்கும் அரைவட்ட வடிவத்திற்குள்) யார் தொழுகின்றாரோ அவர் கஃபாவிற்குள் தொழுதவரைப் போல் கணக்கிடப்படுவார்.
17. ஸஃபா மற்றும் மர்வா மலைகள் மீது கேட்கும் பிரார்த்தனை.
18. (முஸ்தலிஃபாவிலுள்ள) மஷ்அருள் ஹராம் என்னுமிடத்தில் கேட்கும் பிரார்த்தனை
19. நோன்பாளியின் பிரார்த்தனை.
20. நோன்பு திறக்கும் நேரத்தில் கேட்கும் பிரார்த்தனை