நபி(ஸல்) அவர்கள் காலத்திலும் அபூபக்ர் (ரலி) அவர்களின்
ஆட்சிக் காலத்திலும் உமர் (ரலி) அவர்களின் முதல் இரண்டு ஆண்டு
காலத்திலும் முத்தலாக் என்பது ஒரு தலாக்காகவே கருதப்பட்டு
வந்தது. உமர் (ரலி) அவர்கள், "நிதானத்தைக் கடைப்பிடிக்க
வேண்டிய ஒரு விஷயத்தில் மக்கள் அவசரப்படுகின்றனர். அவர்கள்
மீது நாம் சட்டமாக்கி விட்டால் (என்ன செய்வார்கள்?)" என்று
கூறி சட்டமாக்கி விட்டார்கள். அறிவிப்பவர் : இப்னு அப்பாஸ்
(ரலி) நூல் : முஸ்லிம் 2689
முத்தலாக் என்று கூறினால் அதை நபி (ஸல்) அவர்கள் ஒரு
தலாக்காகவே எடுத்திருக்கின்றார்கள் என்று தெளிவாகக் கூறப்பட்ட
பின்னரும் தெரிந்தே உமர் (ரலி) அவர்கள் அதற்கு மாற்றமாக சட்டம்
இயற்றியுள்ளனர்.
-
ஏகத்துவம்
மாத இதழ் - செப்டம்பர்
2005 வெளியீடு
மேலே காணப்பட்ட ஹதீஸும் அதற்கு விளக்கம்
என்ற பெயரில் அதனை அடுத்து காணப்படும்
வரிகளும் ஸஹாபாக்கள் மீது வீசப்பட்ட விமர்சனங்களுள் ஒன்று.
வீசியவர்கள் ஸஹாபாக்களைவிட மார்க்கத்தைத் தாங்கள்
விளங்கிக்கொண்டதாகத் தற்பெருமை கொள்ளும் அதிமேதாவிகள். விமர்சனம்
வந்தது தவ்ஹீதின் பெயரைத் தாங்கிக்கொண்டு வெளிவரும் அவர்களின்
அதிகாரப்பூர்வ மாதப் பத்திரிகையில். இவர்களின் விமர்சனங்களில்
உண்மை இருக்கின்றதா என்பது குறித்து உலமாக்கள் அளிக்கும்
விளக்கத்தை ஒரு கட்டுரையாகத் தொகுத்து இங்கே சமர்ப்பிக்கின்றோம்.
"ஸலஃப் ஸாலிஹீன்கள் யார்?"
என்ற தலைப்பில் இலங்கையைச் சேர்ந்த மார்க்க அறிஞர் டாக்டர் நுஃபார்
பாரூக் மிக உருக்கமுடன் ஆற்றிய உரையிலிருந்து இது
தொகுக்கப்பட்டதாகும்.
அப்துல்லாஹ் இப்னு உமர் (ரழி) அவர்களிடம் ஒரு மனிதர் வந்து
கேட்கின்றார். உஸ்மான் சிறந்தவரா? அலி சிறந்தவரா? என்று. அப்போது
அவரிடம் இப்னு உமர் (ரழி) அவர்கள் கேட்டனர். ஏனப்பா நீ எங்கிருந்து
வருகின்றாய்? அதற்கு அவர் கூறினார். நான் கூஃபாவிலிருந்து
வருகின்றேன் என்று. (எல்லா ஃபித்னாக்களுக்கும் பிறப்பிடமாக அன்று
கூஃபா அமைந்திருந்தது.) அப்போது இப்னு உமர் (ரழி) அவர்கள் மீண்டும்
கேட்டனர். நீ முஹாஜிர்களிலோ அன்சார்களிலோ எவரையேனும் சார்ந்தவனா?
அதற்கும் அவர் இல்லையென்று கூறினார். அப்போது இப்னு உமர் அவர்கள்
அந்த மனிதரிடம் கூறியவை மிகவும் கவனிக்கத்தக்கது ஆகும். இதோ பார்.
நீ முஹாஜிர்களிலோ அல்லது அன்ஸாரிகளிலோ நின்றுமுள்ளவன் இல்லையெனில்
உனக்கு ஒரே ஒரு கடமைதான் உள்ளது. அதாவது அல்லாஹ் கூறிய மூன்றாவது
பிரிவினர்களுக்கு உள்ள கடமையின் அடிப்படையில் நீ செய்ய வேண்டியது
அவர்களுக்காக துஆ செய்வது மட்டுமே. அதை விட்டு விட்டு அவர்களைப்
பற்றி நீ குறை கூறித் திரிகின்றாயே! எனவே நீ அந்த மூன்றாவது
பிரிவினரில் இடம் பெறும் தகுதியையும் இழந்து விட்டாய். எனவே
இங்கிருக்காதே! போய்விடு! என்று கூறி அந்த மனிதரை
வெளியேற்றுகின்றார்கள் இப்னு உம்ர் (ரழி) அவர்கள். மகத்துவமும்
கண்ணியமும் மிக்க அல்லாஹ் கூறுகின்றான்.
وَالَّذِينَ
جَاؤُوا مِن بَعْدِهِمْ يَقُولُونَ رَبَّنَا اغْفِرْ لَنَا
وَلِإِخْوَانِنَا الَّذِينَ سَبَقُونَا بِالْإِيمَانِ وَلَا
تَجْعَلْ فِي قُلُوبِنَا غِلًّا لِّلَّذِينَ آمَنُوا رَبَّنَا
إِنَّكَ رَؤُوفٌ رَّحِيمٌ
அவர்களுக்குப்பின் குடியேறியவர்களுக்கும் (இதில் பங்குண்டு).
அவர்கள் "எங்கள் இறைவனே! எங்களுக்கும், ஈமான் கொள்வதில் எங்களுக்கு
முந்தியவர்களான எங்கள் சகோதரர்களுக்கும் மன்னிப்பு அருள்வாயாக,
அன்றியும் ஈமான் கொண்டவர்களைப் பற்றி எங்களுடைய இதயங்களில் பகையை
ஆக்காதிருப்பாயாக! எங்கள் இறைவனே! நிச்சயமாக நீ மிக்க
இரக்கமுடையவன், கிருபை மிக்கவ¡ என்றும் (பிரார்த்தித்துக்)
கூறுவர். (59:10)
கண்ணியம் மிக்க நபித்தோழர்கள் மார்க்கத்தில் மிகத்தெளிவான ஞானத்தை
உடையவர்களாகத் திகழ்ந்தனர் என்பதற்கு எல்லாம் அறிந்தவனாகிய
அல்லாஹ்வே சான்றளிக்கின்றான். மகத்தும் மிக்க அல்லாஹ் கூறுவதைப்
பாருங்கள்
قُلْ هَـذِهِ
سَبِيلِي أَدْعُو إِلَى اللّهِ عَلَى بَصِيرَةٍ أَنَاْ وَمَنِ
اتَّبَعَنِي وَسُبْحَانَ اللّهِ وَمَا أَنَاْ مِنَ الْمُشْرِكِينَ
(நபியே!) நீர் சொல்வீராக! "இதுவே என்னுடைய (நேரிய) வழியாகும்; நான்
அல்லாஹ்வின் பால் (உங்களை) அழைக்கின்றேன்; நானும் என்னைப்
பின்பற்றியவர்களும் தௌ¤வான ஞானத்தின் மீதே இருக்கின்றோம்; அல்லாஹ்
மிகத் தூய்மையானவன்; ஆகவே, அவனுக்கு இணைவைப்போரில் நானும்
ஒருவனல்லன்." (12:108)
நானும் என்னைப் பின்பற்றியவர்களும் தெளிவான ஞானத்தின் மீதே
இருக்கின்றோம் என்ற வாசகத்தில் தெளிவான ஞானம் என்பதற்கு அரபியில்
இடம்பெற்ற வார்த்தை "பஸீரத்"
என்பதாகும். பின்பற்றியவர்கள் என்பதில் மறுமை நாள் வரை நபி (ஸல்)
அவர்களைப் பின்பற்றுபவர்களும் அடங்குவர் என்றிருந்தாலும் இதில்
முதல் பட்டியலில் இடம்பெறுபவர்கள் கண்ணியம் மிக்க ஸஹாபாக்கள்
என்பதில் ஐயம் இல்லை. இவ்வாறிருக்க அவர்களுக்குக் கொள்கைக்
குழப்பம் ஏற்பட்டது, அவர்கள் வழிதவறி விட்டனர் என்ற பிரச்சாரம்
மிகவும் ஆபத்தானதாகும். சமுதயாயத்தில் குழப்பத்தை விளைவிப்பதாகும்.
இதனை கவனத்தில் கொண்டு இனி முத்தலாக் சம்மந்தமாக கண்ணியம் மிக்க
உமர் (ரழி) அவர்களின் மீது வைக்கப்பட்ட விமர்சனத்தை அணுகுவோம்.
முத்தலாக் சம்மந்தமான இச்செய்தி ஸஹீஹ் முஸ்லிமில் இடம்பெற்றுள்ளது.
இதனை விவரிக்கும் முன் உமர் (ரழி) அவர்களைப் பற்றி சில
குறிப்புக்களை அறிந்து கொள்வது நலம்.
ஒரு முறை நபி (ஸல்) அவர்கள் இவ்வாறு கூறினார்கள். நான் பால்
அருந்தியதாக ஒரு கனவு கண்டேன். அதனால் எனது உடல் முழுவதும் பாலால்
நிரம்பி வழிந்து நகம் வரை வெண்மையில் நிறைந்திருந்தது.
பாத்திரத்தில் பால் மிகுதியிருந்தது. எனது வலப்புறத்தில்
பார்த்தபோது அங்கே உமர் இருந்தார், அவருக்குக் குடிக்கக்
கொடுத்தேன். இதைக் கேட்ட நபித் தோழர்கள் நபி (ஸல்) அவர்களிடம்
கேட்டனர். அல்லாஹ்வின் தூதரே இதன் விளக்கம் என்ன? என்று. அதற்கு
அவர்கள் கூறினர், "இல்ம்"
(கல்வி).
இப்போது சிந்திப்போம் நபி (ஸல்)
அவர்களிடமிருந்துள்ள குறையற்ற கல்வியை உமர் (ரழி) அவர்கள்
நேரடியாகப் பெற்றுள்ளனர் என்பதை இது விளக்குவதாக இல்லையா?
இன்னொரு முறை நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். நான் ஒரு கனவு
கண்டேன். ஒரு கிணறு இருந்தது. அதிலிருந்து மக்கள் நீர்
பாய்ச்சினார்கள். அபூபக்கர் வந்தார், ஓரிரு வாளிகள் நீர்
பாய்ச்சினார், பின்னர் அவர் சோர்ந்து விட்டார். பின்னர் உமர்
வந்தார், அவர் வந்து கொட்டோ கொட்டென நீர் பாய்ச்சினார்.
அதிலிருந்து உயிர்ப்பிராணிகளும் பிரயாணக் கூட்டங்களும் நீர்
அருந்தித் தங்கள் களைப்பைத் தீர்த்துக்கொண்டன. இதன் விளக்கம் என்ன?
என்று கேட்டபோது "தீன்"
(மார்க்கம்) என்று நபி (ஸல்) அவர்கள் நபி (ஸல்) அவர் விளக்கம்
அளித்தனர். நபி (ஸல்) அவர்களின் இந்த விளக்கம் நபித்தோழர்கள்
மார்க்கத்தை முழுமையாக விளங்கவில்லை என்றும் மார்க்கத்தைக் காலம்
தான் புரிய வைக்கும் என்றும் கூறப்படும் புதிய தத்துவங்களை
ஆதரிக்கவில்லை என்றும் தெளிவுபடுத்துகின்றது.
முத்தலாக் சம்மந்தமான உமர் (ரழி) அவர்களின்
முடிவு பற்றி, அவர்களிடத்திலேயே
கேட்கப்பட்டது. மக்கள் தலாக்கை வைத்து விளையாடிக்
கொண்டிருக்கின்றனர். அதற்கு ஒரு முடிவு கட்டும் விதமாக ஒரு
தண்டனையாகவே இதனை அமுல்படுத்தியதாக அவர்கள் விளக்கமளித்தனர். அன்று
அவர்களிடம் செல்வம் அதிகமாக இருந்தது. வசதி வாய்ப்புகளை அதிகமாகப்
பெற்றிருந்தனர். விவாகம் ஒரு சர்வசாதாரணமான காரியமாக மாறி
விவாகரத்துகள் அதிகமாயின. இதனால் உமர் (ரழி) அவர்கள் இவ்வாறு
எடுத்த எடுப்பிலேயே மூன்று தலாக்குகள் விடுபவர்களுக்கு ஒரு
தண்டனையாக இதனை அமுல் படுத்தினார்கள். இதில் கவனிக்கவேண்டிய விஷயம்
என்னவென்றால் அக்கால கட்டத்தில் உமர் (ரழி) அவர்களைச் சுற்றிலும்
மார்க்க அறிஞர்களாகவும் சட்ட ஆலோசகர்களாகவும் மார்க்கத் தீர்ப்பு
வழங்கக் கூடியவர்களாகவும் கண்ணியம் மிக்க ஸஹாபாக்கள் இருந்தனர்.
அவர்களில் எவருமே உமர் (ரழி) அவர்களின் இந்த முடிவை
எதிர்க்கவில்லை. மட்டுமல்லாமல் உமர் (ரழி) அவர்களின் இந்த முடிவால்
சிறந்த மாற்றமும் ஏற்பட்டது. பின்னர் சூழ்நிலைக்கேற்ப அது
மாற்றப்பட்டும் விட்டது. இவ்வாறிருக்க 14 -நூற்றாண்டுகளுக்குப்
பின் வந்து ஒருவர் இதனைக் குறை சொல்லுகின்றார் என்றால் அது எவ்வாறு
ஏற்புடையதாகும்? முத்தலாக் சம்மந்தமான உமர் (ரழி) அவர்கள் எடுத்த
முடிவு சுன்னாவுக்கு அவர்கள் அளித்த ஒரு விளக்கமாகும்
இன்னும் ஒரு ஹதீஸையும் அறிந்துகொள்ள வேண்டும்
இர்பால் இப்னு ஸாரியா (ரழி) அறிவிக்கின்ற ஒரு நபிமொழி: நபி(ஸல்)
அவர்கள் எங்களுக்கு ஒரு நீண்ட உரை நிகழ்த்தினார்கள். அதைக்கேட்டு
எங்கள் உள்ளங்கள் உருகின. கண்கள் கண்ணீர் வடித்தன. அல்லாஹ்வின்
தூதரே இது ஒரு பிரியாவிடைபெறக்கூடிய மனிதருடைய உரை போலல்லவா
இருக்கின்றது! எங்களுக்கு வஸிய்யத் (உபதேசம்) செய்யுங்கள் என்று
ஸஹாபாக்கள் கூறினர். அப்போது நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
எனக்குப் பிறகு நீங்கள் வாழும்போது அநேக கருத்து வேற்றுமைகளை
நீங்கள் காணலாம். அப்போது எனது சுன்னாவையும் நேர்வழிநின்ற
கலீஃபாக்களுடைய சுன்னாவையும் பற்றிப்பிடியுங்கள். அதனை உங்கள்
கடைவாய்ப் பற்களால் கடித்துப் பிடித்துக் கொள்ளுங்கள் என்று
கூறினார்கள்.
மேற்கண்ட செய்தியிலிருந்து நாம் விளங்குவது என்ன?
கடைவாய்ப்பற்களால் பற்றிப் பிடிக்கக்கூடிய அளவுக்கு உமர் (ரழி)
போன்ற நபித்தோழர்களின் வழிமுறையை நபி (ஸல்) அவர்கள் சிறப்பித்துக்
கூறியுள்ளார்கள். அதோடு மட்டுமின்றி சுன்னாவுக்கு மாற்றமானதை உமர்
(ரழி) அவர்கள் செய்தார்கள் என்று இதுவரை யாரும்
சுட்டிக்காட்டவில்லை. இவ்வாறிருக்க அவர்கள் மீது கூறப்படும்
இத்தகைய விமர்சனங்கள் ஸஹாபாக்களைப் புறம் தள்ளி மார்க்கத்திற்குப்
புது விளக்கம் அளிப்பதை நியாயப்படுத்தும் முயற்சி என்பதில் ஐயம்
இல்லை. எனவே இத்தகைய கருத்துக்களைச் சமூகத்தில் ஊடுருவ
விடுபவர்களைக் குறித்து முஸ்லிம் சமூகம் மிகவும் எச்சரிக்கையாக
இருக்கட்டும்.
(டாக்டர் நுஃபார் அவர்களின் "ஸலஃப் ஸாலிஹீன்கள் யார்?"
என்ற உரையிலிருந்து தொகுக்கப்பட்டது)
|