Index | Subscribe mailing list | Help | E-mail us

நஜீஸின் வகைகள்

 

நஜீஸ் என்றால் அசுத்தம் என்று பொருள். அசுத்தம் பல வழிகளில் ஏற்படும். மனிதனின் உடல், ஆடை மற்றும் இடங்களில் ஏற்படக்கூடிய அசுத்தங்களை நீக்குவது அவசியமாகும். தொழுகை போன்ற வணக்கங்களில் ஈடுபடும் போது சுத்தமாக இருப்பது மிக அவசியாகும். நஜீஸ்களின் வகைகள் பின்வருமாறு.


1. செத்த பிராணி
செத்த பிராணி என்பது இஸ்லாமிய முறையில் அறுக்கப்படாமல் உயிர் பிரிந்தவைகள். இவைகள் அனைத்தும் அசுத்தமானவையாகும். ஆனால் வெட்டுக்கிளி மற்றும் மீன் இவை இரண்டும் செத்துவிட்ட பின்பும் சுத்தமானவையாகும். இவைகளை செத்த பின்பும் உண்ணலாம்.

எங்களுக்கு மீன், வெட்டுக்கிளி இவ்விரண்டும் மரணித்ததற்குப் பின்பும் உண்பதற்கு ஹலாலாக்கப்பட்டிருக்கின்றது என அப்துல்லா இப்னு உமர்(ரலி) அவர்கள் கூறினார்கள். (அஹ்மத்)
செத்த பிராணியின் எலும்பு, கொம்பு, நகம், இறகு, பதனிடப்பட்ட தோல் இவைகள் அனைத்தும் சுத்தமானவைகளாகும்.


2. இரத்தம்

செத்தவையாக அல்லது ஓடும் இரத்தமாக, அல்லது பன்றியின் மாமிசமாக இருந்தாலல்லாது, உண்ணுபவருக்கு அதை உண்ணத் தடை செய்யப்பட்டதாக எனக்கு வஹீ மூலம் அறிவிக்கபட்டவற்றில் நான் காணவில்லை, காரணம் நிச்சயமாக அவை அசுத்தமானவையாகும்.(அல்குர்ஆன் 6:145)
அதாவது ஒரு பிராணியை அறுத்த பின் அதில் இருந்து ஓடக்கூடிய இரத்தம். இது அசுத்தமானது. இதை உண்பதும் ஹராமாகும்.


ஆனால் இறைச்சியில் உளுங்காக கழுகாமல் விடப்பட்டிருக்கும் அல்லது ஒட்டிக்கொண்டிருக்கும் இரத்தம் இருப்பதினால் அவ்வுணவு அசுத்தமானதாக ஆகிவிடாது.


சமைக்கும் பாத்திரத்தின் மீது இரத்தக்கோடுகள் இருக்கும் நிலையில் நாங்கள் இறைச்சியை உண்போம் என ஆயிஷா (ரலி) அவர்கள் கூறுகின்றார்கள்.


3. பன்றி இறைச்சி
செத்தவையாக அல்லது ஓடும் இரத்தமாக, அல்லது பன்றியின் மாமிசமாக இருந்தாலே அல்லாது, உண்ணுபவருக்கு அதை உண்ணத் தடை செய்யப்பட்டதாக எனக்கு வஹீ முலம் அறிவிக்கபட்டவற்றில் நான் காணவில்லை, காரணம் நிச்சயமாக அவை அசுத்தமானவையாகும். (6:145)


4. சிறுநீர், மலம், வாந்தி
இம்மூன்றும் அசுத்தம் என்பதில் எவ்வித சந்தேகமும் இல்லை, ஆனால் பால்குடி மறக்காத ஆண் குழந்தையின் சிறுநீர் பட்டால் தண்ணீரை தெளித்து விட்டால் போதும். பெண் குழந்தையாக இருந்தால் கழுவ வேண்டும்.


உம்மு கைஸ் என்னும் நபித்தோழி ஒருவர் நபி(ஸல்) அவர்களிடத்தில் தனது சிறுகுழந்தையை கொண்டு வந்தார்கள். அக்குழந்தை நபியவர்களின் மடியில் சிறுநீர் கழித்துவிட்டது. நபி(ஸல்) அவர்கள் தண்ணீரை கொண்டுவரச் சொல்லி கழுகாமல் அதன்மீது தெளித்து விட்டார்கள். (புகாரி, முஸ்லிம்)

சிறு ஆண் குழந்தையின் சிறுநீர் பட்டால் அதன்மீது தண்ணீரை தெளித்து விட வேண்டும். சிறுமியின் சிறுநீர் பட்டால் அதனை கழுவ வேண்டும் என நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். (அஹ்மத்)


சிறு குழந்தையென்பது பாலை மாத்திரம் உணவாகக்கொள்ளக்கூடிய குழந்தைகள், உணவை உண்ண ஆரம்பித்து விட்டால் அக்குழந்தைகளின் சிறுநீரை கழுவியே ஆக வேண்டும்.


தரையில் சிறுநீர் பட்டுவிட்டால் அதன்மீது தண்ணீரை ஊற்றிவிட்டால் போதும்.


ஒரு நாள் ஒரு கிராமவாசி நபியவர்களின் பள்ளிக்குள் வந்து சிறுநீர் கழித்து விட்டார். நபி(ஸல்) அவர்கள் ஒரு வாளித்தண்ணீரை எடுத்து அதன்மீது ஊற்றிவிட்டார்கள்.


5. வதி
அதாவது சிறுநீர் கழித்த பின் வெளியாகும் கனமான வெள்ளை நிறமுள்ள நீர், இது அசுத்தமான நீர், இந்நீர் படும் இடத்தை கழுவ வேண்டும்.


வதி வெளியாவதினால் ஆண் உறுப்பையும் அதன் பகுதியையும் கழுவிக்கொண்டு தொழுகைக்கு உளூ செய்வதைப்போல் உளூ செய்ய வேண்டும் என இப்னு அப்பாஸ்(ரலி) அவர்கள் கூறினார்கள். (பைஹகி)


6. மதி
அதாவது காம உணர்வுகள் ஏற்படும் போதும், கணவன் மனைவி உறவின் போதும் வெளியாகும் வழுவழுப்பான நீர், இந்த நீர் வெளியாகும் போது சில நேரம் மனிதன் அதை உணராமல் இருக்கலாம், இதுவும் அசுத்தமான நீர்தான், இந்நீர் படும் இடத்தையும் கழுவ வேண்டும்.
நான் அதிகம் மதி வெளியாகும் மனிதனாக இருந்தேன், நபி(ஸல்) அவர்களின் மகளை நான் திருமணம் முடித்திருந்த காரணத்தினால் நபி(ஸல்) அவர்களிடம் இதைப்பற்றி கேட்க வெட்கப்பட்டேன், இதனால் இன்னும் ஒருவரிடம் அதைப்பற்றி நபி(ஸல்) அவர்களிடம் கேட்கும் படி கூறினேன், அவர் நபி(ஸல்) அவர்களிடம் (அதைப்பற்றி) கேட்டார், உளூ செய்து உமது ஆண் உறுப்பை கழுவிக் கொள்ளுங்கள் என நபி(ஸல்) அவர்கள் விடையளித்தார்கள் என அலி(ரலி) அவர்கள் கூறினார்கள். (புகாரி)


7. நாய்
உங்கள் ஒருவரின் பாத்திரத்தில் நாய் நக்கினால் அதை ஏழு முறை களுவுங்கள் அதில் ஒரு முறை மண்ணைக் கொண்டு கழுவ வேண்டும் என நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். (ஆதாரம் - முஸ்லிம்)

 

கழிப்பறை உளுக்கங்கள்