ரமலான் மாத வணக்கங்களில் ஜகாத்துல் ஃபித்ர் எனும் பெருநாள் தர்மமும்
ஒன்றாகும். பிற காலங்களை விட ரமலான் மாதத்தில் அதிகமாக தர்மம் செய்ய
நபி(ஸல்) அவர்கள் ஆர்வமூட்டியுள்ளார்கள். அதிலும் குறிப்பாக, பெருநாள்
தினத்தன்று புத்தாடை அணிந்து, அறுசுவை உணவருந்தி, மகிழ்வை பகிர்ந்து
கொள்வதில் ஏழை, பணக்காரர்களுக்கு மத்தியில் வித்தியாசம் காணாமல்,
இஸ்லாமிய சகோதரத்துவம் நிலைநாட்டப்படவேண்டும்! என்ற உயர்ந்த
நோக்கத்தில் ஜகாத்துல் ஃபித்ர் எனும் பெருநாள் தர்மத்தை நபி(ஸல்)
அவர்கள் கடமையான தர்மமாக்கியுள்ளார்கள். மேலும் நோன்பின் போது
நிகழ்ந்த பாவங்களுக்கு பரிகாரமாகவும் இத்தர்மத்தை
அறிமுகப்படுத்தினார்கள்.
1) ஆண், பெண், சிறியவர், பெரியவர்
ஆகிய அனைவரின் மீதும் ஃபித்ரா கடமையாகும்.
2) ஒரு நபர் வழங்க வேண்டிய ஃபித்ராவின் அளவு ஒரு ஸாஃ. அதாவது சுமார்
(2.4 kg) இரண்டு கிலோ நானூறு கிராம் உணவுப்பொருள்.
3) பெருநாள் தொழுகைக்கு முன்னரே ஃபித்ராவை வழங்கிவிட வேண்டும்.
பெருநாள் தொழுகைக்குப் பிறகு வழங்கினால் அது சாதாரண தர்மமாகவே
கருதப்படும். பெருநாளைக்கு ஓரிரு நாட்களுக்கு முன்னால் ஃபித்ராவை
பங்கீடு செய்வதில் தவறில்லை. எனினும் பெருநாள் தினத்தன்று வழங்குவதே
சிறப்பு!
4) பெருநாள் அன்று தன் குடும்பச் செலவிற்கு பணம் மற்றும் தானியம்
இல்லாதவர்கள் இத்தர்மத்தைப் பெற்றுக் கொள்ள தகுதி பெறுவர். ஜகாத்தைப்
பெற தகுதியுடையவர்களும் இத்தர்மத்தை பெற்றுக் கொள்ளலாம்.
ஜகாத்துல்
ஃபித்ரை வெளிநாடுகளுக்கு அனுப்பலாமா?
வெளிநாட்டில் வாழ்பவர்கள் ஏழைகளான தம் உறவினர்களுக்கோ, தன்
பகுதிவாழ் ஏழை முஸ்லிம்களுக்கோ ஜகாத்துல் ஃபித்ரை அனுப்புவதில்
தவறில்லை. ஆனால் தனக்கு பகராக ஃபித்ராவை வினியோகிக்க
நியமிக்கப்படுபவர்கள் ஃபித்ரா தொடர்பான சட்டங்களை முறையாக பேணி
நடப்பவர்களாக இருக்கவேண்டும். மேலும் ஃபித்ராவை அதற்குரிய நேரத்தில்
வினியோகிப்பதில் அதிக கவனம் செலுத்துவது மிக முக்கியமாகும்.
ஸவூதி அரேபியாவில் பெருநாள் என
அறிவிக்கப்பட்ட அடுத்த நாட்களில்தான் இந்தியா, இலங்கை போன்ற நாடுகளில்
பெருநாளாக அறிவிக்கப்பட்டுவருவதை நாம் அறிவோம். இந்நிலையில் ஸவூதியில்
இருப்பவர்களின் ஃபித்ரா இந்தியாவிலோ, இலங்கையிலோ
வினியோகிக்கப்படுமேயானால் அது ஸவூதியின் பெருநாள் தொழுகைக்கு முன்னரே
வினியோகிக்கப்பட்டுவிட வேண்டும். அதனைவிட தாமதமாகவோ, அல்லது
உள்ளுரின் பெருநாள் தினத்தன்றோ வினியோகிக்கப்பட்டால் அது சாதாரண
தர்மமாகத்தான் கருதப்படும். ஜகாத்துல் ஃபித்ராக கருதப்படமாட்டாது. எனவே
வெளிநாடுகளில் ஃபித்ராவை வினியோகிக்க பணம் வழங்குபவர்கள்
வினியோகிக்கும் நேரத்தில் அதிக கவனம் செலுத்தவேண்டும்.
நபிமொழிகள்
1) ஏழைகளுக்கு உணவாகவும் நோன்பாளி செய்த தவறுகள் மற்றும்
பாவங்களுக்கு பரிகாரமாகவும் நபி(ஸல்) அவர்கள் நோன்பு தர்மம்(ஜகாத்துல்
ஃபித்ரை)கடமையாக்கினார்கள். பெருநாள் தொழுகைக்கு முன்னர் அதனை
வழங்கிவிட்டால் அதுவே அங்கீகரிக்கப்பட்ட ஃபித்ராவாகும். அதனை பெருநாள்
தொழுகைக்குப் பிறகு வழங்கினால் அது (பிறகாலங்களில் வழங்கப்படும்)
தர்மங்களில் ஒரு தர்மமேயாகும். (அறிவிப்பவர்: இப்னு அப்பாஸ்(ரலி)
நூற்கள்: அபூதாவூத் 1371, இப்னுமாஜா 1817)
2) சுதந்திரமானவர், அடிமை, ஆண்,
பெண், சிறியவர், பெரியவர் ஆகிய அனைத்து
முஸ்லிம்களும் பேரீத்தம் பழம் அல்லது கோதுமையில் ஒரு ஸாஃ அளவு
ஜகாத்துல் ஃபித்ராக வழங்குவதை நபி(ஸல்) அவர்கள் கடமையாக்கினார்கள்.
மேலும் அதனை பெருநாள் தொழுகைக்காக மக்கள் வெளியேறும் முன்னரே
வினியோகித்துவிட வேண்டும் என்றும் கட்டளையிட்டார்கள். (அறிவிப்பவர்:
இப்னு உமர்(ரலி) நூல்: புகாரீ 1503)
3) உணவுப் பொருளில் ஒரு ஸாஃ அளவு
ஜகாத்துல் ஃபித்ரை நாங்கள் வழங்கிவந்தோம் என அபூ ஸயீத் அல்குத்ரீ(ரலி)
அவர்கள் கூறினார்கள். (நூல்: புகாரீ)
புனித ரமலானில் நம்முடைய அனைத்து
வணக்க வழிபாடுகளையும் அல்லாஹ் ஏற்றருள்வானாக!
|