முன்னுரை:
-கே.கே.
புகாரீ
ஸவூதி அரேபியா, ஜித்தா, முஷ்ரிஃபா பகுதியில் அமைந்துள்ள இஸ்லாமிய
அழைப்பு மையத்தில் 11-08-2006 வெள்ளிக் கிழமை அன்று சகோ. பீ.
ஜைனுல் ஆபிதீன் அவர்களின் அல்குர்ஆன் தர்ஜமா மற்றும் விளக்கம்
குறித்த பரிசீலனை வகுப்பு நடைபெற்றது. மாலை 4:30 முதல் 8:30 வரை
நடைபெற்ற இவ்வகுப்பில் நூற்றுக்கும் அதிகமானோர் -ஆண்களும்
பெண்களும்- கலந்து கொண்டனர்.
சகோ. பீ. ஜைனுல் ஆபிதீன் அவர்களின் தர்ஜமாவில் காணப்படும் தவறுகள்
குறித்து கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்பே இந்த அழைப்பகத்தில் பல
வகுப்புகள் நடந்துள்ளன!
முதலாம் பதிப்பு வெளிவந்த உடனேயே அந்தத் தவறுகள் பற்றி சகோ. பீ.
ஜைனுல் ஆபிதீன் அவர்களுக்கு தொலைபேசி மூலமாகவும் நேரடியாகவும்
எடுத்துரைக்கப்பட்டன! ஆனால் அந்தத் தவறுகள் நீக்கப்படாமலேயே
நான்காம் பதிப்பும் அச்சிடப்பட்டு விற்பனையாகிக் கொண்டிருக்கிறது!
எனவே அந்த தவறுகள் பற்றிய எச்சரிக்கையை பொதுமக்கள் கவனத்திற்கு
கொண்டு வர வேண்டிய கட்டாயத்தை உணர்ந்தே இந்நிகழ்ச்சிக்கு ஏற்பாடு
செய்யப்பட்டுள்ளது! என்ற அவைத் தலைவர் சகோ. கே.கே. புகாரீ
அவர்களின் முன்னுரையுடன் ஆய்வு வகுப்பு துவங்கியது.
'அலக்' என்பது 'கருவுற்ற சினைமுட்டையா' ?
– யூஸுஃப் மதனீ
சகோ. பீ. ஜைனுல் ஆபிதீன் அவர்கள் 96-வது அத்தியாயத்தின் பெயர்
'அல்அலக்' என்பதை 'கருவுற்ற சினை முட்டை' என்று மொழி
பெயர்த்துள்ளார்கள். மேலும் அல்குர்ஆனில் 22:5, 23:14, 40:67,
75:38, 96:2 ஆகிய ஐந்து வசனங்களில் இடம்பெற்றுள்ள 'அலக் மற்றும்
அலகா' எனும் வார்த்தைக்கும் 'கருவுற்ற சினைமுட்டை' என்றே மொழி
பெயர்த்துள்ளார்கள். இவ்வாறு மொழியாக்கம் செய்ததற்கான
காரணங்களையும் தர்ஜமா விளக்கம் எண்: 365-ல் குறிப்பிட்டுள்ளார்கள்.
சகோ. பீ. ஜைனுல் ஆபிதீன் அவர்களின் இந்த மொழியாக்கமும் அதற்கு
அவர்கள் கூறியுள்ள காரணங்களும் அரபி மொழி அகராதியின்
அடிப்படையிலும் கருவளர்ச்சியின் அறிவியல் உண்மைகளின்
அடிப்படையிலும் மிகவும் தவறான மொழியாக்கமாகும் என்பதை சகோ. யூஸுஃப்
மதனீ அவர்கள் மிகத் தெளிவாக விளக்கினார்கள். 'அலகா' எனும் நிலையை
துல்லியமாக புரிந்து கொள்ள புரொஜக்டர் மூலம் மக்களுக்குக்
காண்பிக்கப்பட்ட கருவளர்ச்சிப் படங்கள் மிகவும் உதவின.
கருவறையில் நடைபெறும் அறிவியல் விந்தைகள்
இந்திரியத் துளியை அரபியில் நுத்ஃபா என்று குறிப்பிடுவர்.
இந்திரியத் துளியினுள் பல்லாயிரக் கணக்கான உயிரணுக்கள் உள்ளன.
அதில் ஓர் உயிர் அணு, பெண்ணின் முட்டையுடன் -உயிரணுவுடன்- இணைந்து
விட்டால் கரு உருவாகி விடுகிறது! இவ்வாறு இணைவதை அல்குர்ஆன்
'கலப்பு இந்திரியம்' (நுத்ஃபத்தின் அம்ஷாஜ்) என்றழைக்கிறது!
(பார்க்க, அல்குர்ஆன் 76:2)
இடது: ஆணின் உயிரணு பெண்ணின் முட்டையினுள் நுழையும் காட்சி! வலது: ஆணின் உயிரணு பெண்ணின் சினை முட்டையுடன் இணைந்த பிறகுள்ள
காட்சி!
'கலப்பு இந்திரியம்' சுமார் ஏழு நாட்களில் வட்ட வடிவில் திரவப்
பந்தாகப் பரிணாமம் அடைந்து, கருவறையில் தனக்கென ஒர் தளத்தை
அமைத்துக் கொள்கிறது.
பிறகு அந்த வட்ட வடிவம், தண்ணீரில் வாழும் அட்டைப் பூச்சையைப்
போன்ற நீண்ட வடிவமாக மாறுகிறது. அட்டைப் பூச்சிக்கு அரபியில்
'அலகா' என்பர். எனவே மனித பரிணாமத்தில் இந்த வடிவம் அட்டைப்
பூச்சியைப் போன்று இருப்பதால் நுட்பமுள்ள மகத்தான அல்லாஹ்,
மனிதனின் இந்த நிலைக்கும் 'அலகா' என்றே அல்குர்ஆனில்
குறிப்பிடுகிறான்.
நடுவில் அட்டைப் பூச்சி
மேலே:
அட்டைப் பூச்சி - கீழே: அலகா
'அலகா' எனும் அட்டைப் பூச்சி வடிவம் மூளை, நரம்புகள், தோல்
ஆகியவைகளை உள்ளடக்கிய வெளிப்புற அடுக்காகவும், ஜீரண உறுப்புகளைக்
கொண்ட உட்புற அடுக்காகவும் ஆக இரு அடுக்குகளைக் கொண்டதாக
ஆகிவிடுகிறது.
சிவப்பு நிறமாக, நீண்ட வடிவில், இரு அடுக்குகளாக பரிணாமம் அடைந்த
'அலகா' பிறகு, அரை வட்ட வடிவமாக வளைந்து விடுகிறது. நன்கு
மெல்லப்பட்ட தசை போன்ற வடிவைப் பெறுகிறது. இந்த வடிவத்தை
அல்குர்ஆன் 'முளுகா' என்று அழைக்கிறது.
இரண்டு அடுக்குகளாக 'அலகா'
இவை கரு வளர்ச்சியின் ஆரம்ப மூன்று நிலைகளைப் பற்றிய சுருக்கமான
தகவல்!
சகோ. பீ. ஜைனுல் ஆபிதீன் அவர்கள் செய்துள்ள தவறுகள்!
இனி 'அலகா' தொடர்பாக சகோ. பீ. ஜைனுல் ஆபிதீன் அவர்கள்
செய்திருக்கும் தவறைக் காண்போம். ஆணின் உயிரணு பெண்ணின்
முட்டையுடன் கலப்பது என்பது கருத் தரிப்பதின் ஆரம்ப நிலை என்பதைக்
கண்டோம்.
சகோ. பீ. ஜைனுல் ஆபிதீன் அவர்கள் 76:2-ம் வசனத்தின் விளக்கவுரை
எண்: 207-ல் கலப்பு விந்துத் துளியிலிருந்து என்ற தலைப்பிட்டு
இதனைப் பற்றி விளக்கியுள்ளார்கள்.
ஆணிடமிருந்து வெளிப்படும் உயிரணு, பெண்ணிடமிருந்து வெளிப்படுகின்ற
சினை முட்டையுடன் இரண்டறக் கலந்து, பிறகு தான் அது பெண்ணின்
கருவறைக்குச் சென்று மனிதனாக உருவாகிறது.
(அல்குர்ஆன் - பீ.ஜே தர்ஜமா விளக்கம்: 207)
ஆனால் கருவின் இரண்டாவது கட்டமாக அல்லாஹ் குறிப்பிடும் 'அலகா'
எனும் நிலையைப் பற்றிக் விளக்க எண்: 365-ல் கூறும் போதும் கலப்பு
இந்திரியத்தைப் பற்றிய விளக்க எண்: 207-ல் கூறிய அதே செய்திகளையே
சற்று விரிவாகக் கூறி, அதன் முடிவாக, 'அலகா' என்பதற்கு 'கருவுற்ற
சினை முட்டை' என்ற புதுப் பெயரைச் சூட்டியுள்ளார். இதன் மூலம்
கலப்பு இந்திரியம் மற்றும் அலகா ஆகிய கருவின் இரு வேறுபட்ட நிலைகளை
ஒரே நிலையாக ஆக்கிவிட்டார். ஆனால் அந்த இரண்டு நிலைகளும்
அல்குர்ஆன் வசனங்களின் அடிப்படையிலும் அரபி மொழி அகராதியின்
அடிப்படையிலும் அறிவியல் உண்மையின் அடிப்படையிலும் முற்றிலும்
வேறுபட்ட, அடுத்தடுத்த இரண்டு நிலைகளாகும்.
ஆணின் உயிரணுவும் பெண்ணின் சினை முட்டையும் ஒன்று சேர்ந்த பிறகு,
அது பல செல்களாக மாறி, வட்ட வடிவமாகி, பிறகு அட்டைப் பூச்சி போன்ற
நீண்ட வடிவமாகி, பிறகு இரண்டு அடுக்குகளைக் கொண்டதாக மாறி
முதுகந்தண்டைப் பெறும் நிலையை அடைகிறது. இந்நிலையில் கருவின் ஆரம்ப
நிலையைக் குறிக்கும் வார்த்தையான 'கருவுற்ற சினைமுட்டை' என்பதையே
மேற்கூறிப்பிட்ட 'அலகாவின்' அனைத்து நிலைகளுக்கும்
பயன்படுத்தியுள்ளார்கள்.
சகோ. பீ. ஜைனுல் ஆபிதீன் அவர்கள் செய்துள்ள இந்தத் தவறு அச்சுப்
பிழையாகவோ, கவனக் குறைவாகவோ நடந்த தவறு என கருத முடியாது. காரணம்,
அரபி மொழிக்கும், அல்குர்ஆனின் விரிவுரைகளுக்கும் மாற்றமாக,
வேண்டுமென்றே இவ்வாறு மொழியாக்கம் செய்திருப்பதை அவர்களின் தர்ஜமா
விளக்க எண்:365-லிருந்து அறியலாம்.
365. கருவுற்ற சினை முட்டை
இவ்வசனங்களின் மூலத்தில் 'அலக்' எனும் சொல் இடம் பெற்றுள்ளது.
இச்சொல்லுக்குப் பல அர்த்தங்கள் உள்ளன. இரத்தக் கட்டி, தொங்கிக்
கொண்டிருக்கும் நிலை, ஒன்றுடன் ஒன்று கோர்த்துக் கொண்டது
என்றெல்லாம் பொருள் உண்டு.
இந்த இடத்தில் இரத்தக் கட்டி என்று பொருள் கொள்ள முடியாது. கருவில்
இரத்தக்கட்டி என்று ஒரு நிலை இல்லை. தொங்கிக் கொண்டிருக்கும் நிலை
எனவும் பொருள் கொள்ள முடியாது. ஏனெனில் மனிதனின் மூலத்தைக் கூறும்
போது அது ஒரு பொருளாகத் தான் இருக்க முடியும். தொங்கும் நிலை
என்பது ஒரு பொருள் அல்ல.
மனிதன் உருவாவதற்கு ஆணின் உயிரணு, பெண்ணின் சினை முட்டையுடன்
சேர்ந்து கருவுற்ற சினை முட்டையாக ஆக வேண்டும். இது தான் மனிதப்
படைப்பின் முதல் நிலை. ஆணின் உயிரணு மட்டுமோ, பெண்ணின் சினை முட்டை
மட்டுமோ மனிதனின் முதல் நிலை அல்ல. இரண்டும் ஒன்றுடன் ஒன்று
கோர்த்துக் கொள்வதால் உருவாகும் பொருளிலிருந்து தான் மனிதன்
படைக்கப்பட்டான். இதனால் தான் சுருக்கமாக கருவுற்ற சினை முட்டை
என்று தமிழ்ப்படுத்தியுள்ளோம். இரண்டு பொருள்கள் ஒன்றுடன் ஒன்று
கலப்பது என்பது இதன் நேரடிப் பொருள். இதன் கருத்து தான் கருவுற்ற
சினை முட்டை.
(பீ.ஜே தர்ஜமா விளக்கம்)
'அலகா' என்பதன் அர்த்தங்களைப் பட்டியலிட்ட சகோ. பீ.ஜைனுல் ஆபிதீன்
அவர்கள் அதன் நேரடிப் பொருளாக லிஸானுல் அரப் போன்ற அரபுமொழி
அங்கீகாரம் பெற்ற அகராதியில் மிகத் தெளிவாக கூறப்பட்டுள்ள 'அட்டைப்
பூச்சி' என்ற பொருளை கூறாமல் இருப்பதின் மர்மத்தை அல்லாஹ்வே
நன்கறிவான்.
العلقة : دودة تعيش في الماء تمتص الدم ( لسان العرب)
தண்ணீரில் வாழக் கூடிய, இரத்தத்தை உரிஞ்சக் கூடிய பூச்சிக்கு
'அலகா' எனப்படும்.
(நூல்: லிஸானுல் அரப் - அரபி மொழி அகராதி)
'அலகா' என்பதற்கு தொங்கிக் கொண்டிருக்கும் நிலை என்று மொழி
பெயர்த்துவிட்டு, பிறகு அதனை நிராகரிப்பதற்கு அர்த்தமற்ற ஒரு
காரணத்தையும் கூறியுள்ளார்கள். மனிதனின் மூலப் பொருள் ஒரு
பொருளாகத்தான் இருக்க முடியும்! தொங்கும் நிலை என்பது ஒரு பொருள்
அல்ல! என்பதுதான் அந்தக் காரணம்.
தொங்கிக் கொண்டிருக்கும் நிலை என்பதற்கு பதிலாக, தொங்கிக்
கொண்டிருக்கும் பொருள் என்று கூறியிருந்தால் உண்மையான கருத்து
மிகத் தெளிவாகியிருக்கும். ஆனால் தொங்கிக் கொண்டிருக்கும் பொருள்
என்பதை ஏற்றுக் கொண்டுவிட்டால் அதில் 'அட்டைப் பூச்சியின்' கருத்து
வந்துவிடும், எனவே தொங்குதல் என்பதை எப்படியாவது மறுத்தாகவேண்டும்
என்பதற்காக நிலையா? பொருளா? என்ற அர்த்தமற்ற காரணத்தைக் கூறி
நிராகரிக்கிறார்கள். ஒரு நிலை வருவதற்கு ஒரு பொருளின் துணை
அவசியம்! என்பதைக் கூட சிந்திக்கத் தவறிவிட்டார்கள்.
கரு வளர்ச்சியின் இரண்டாம் கட்டமான 'அலகா'வுக்கு பொருள் கூறப்
புறப்பட்ட சகோ. பீ. ஜைனுல் ஆபிதீன் அவர்கள், ஆணின் உயிரணுவும்
பெண்ணின் சினைமுட்டையும் ஒன்றுடன் ஒன்று கோர்த்துக் கொள்ளும்
'கலப்பு இந்திரியம்' என்ற கரு வளர்ச்சியின் முதற் கட்டத்திற்கே
மீண்டும் திரும்பி விடுகிறார்கள். 'அலகா' என்பதற்கு 'கருவுற்ற
சினைமுட்டை' என்ற புதிய பெயர் சூட்டியதைத் தவிர கருவின்
முதற்கட்டத்திற்கும் அதன் இரண்டாவது கட்டத்திற்கும் அவர்கள் கூறும்
விளக்கம் 'ஒன்றுடன் ஒன்று இணைதல்' என்ற ஒரே விளக்கம்தான்!
'அலகா' என்ற சொல்லுக்கு 'கருவுற்ற சினைமுட்டை' என்று மொழியாக்கம்
செய்திருப்பதும் அதற்கு அவர்கள் கூறியுள்ள விளக்கமும் முற்றிலும்
தவறானதாகும்.
மனிதனை நுத்ஃபா, அலகா, முளுகா என்று பல நிலைகளிலிருந்து
படைத்திருப்பதாக அல்குர்ஆன் கூறியிருக்கும் போது, அதில் உள்ள இரு
நிலைகளை ஒரே நிலையாக மாற்றுவது அல்குர்ஆனுக்கு முரணான கருத்தாகும்.
அல்குர்ஆன் அல்லாஹ்வின் வேதம் என்பதற்கு சான்றாக அறிவியல்
உண்மைகளைத்தான் சகோ. பீ. ஜைனுல் ஆபிதீன் அவர்கள் முன்வைத்து
வருகிறார்கள். எனவே அல்குர்ஆனை அறிவியலுக்கு உகந்ததாக சமர்ப்பிக்க
விரும்புகிறார்கள். ஆனால் இங்கே அறிவியலுக்கும் அரபி மொழிக்கும்
மாற்றமாக 'அலகா'வுக்கு 'கருவுற்ற சினைமுட்டை' என்று கூறுகிறார்கள்.
நிச்சயமாக இது அவர்களின் சொந்தக் கற்பனையைத் தவிர வேறில்லை.
மருத்துவக் கருவிகள் கண்டுபிடிக்கப்படாத, 653 ஆண்டுகளுக்கு முன்பு
வாழ்ந்த பிரபல அல்குர்ஆன் விரிவுரையாளர் இமாம் இப்னு கஸீர் (ரஹ்)
அவர்கள் 'அலகா' என்பதற்கு 'அட்டைப் பூச்சி வடிவம்' என்று அரபி
மொழியின் அடிப்படையில் அற்புதமாக விளக்கம் தந்திருப்பது
குறிப்பிடத்தக்கது.
எனவே மேற்கூறப்பட்ட வசனங்களின் மொழிபெயர்ப்புகளையும் 96-ம்
அத்தியாயத்தின் பெயரின் பொருளையும் 365-ம் விளக்கத்தையும்
சரிசெய்யுமாறு பீ.ஜே தர்ஜமா வெளியீட்டாளருக்கு உபதேசம்
செய்கின்றோம்.
இத்தவறுகள் மற்றும் இவைபோன்ற தவறுகள் விஷயத்தில் கவனமாக இருந்து
கொள்ளுமாறு பொதுமக்களையும் கேட்டுக் கொள்கிறோம்.
'அல்இர்ஷாத்' பற்றி தங்களின் கருத்துக்களையும் ஆலோசனைகளையும் பதிவு
செய்ய:
alershad@gmail.com
தமிழகத்தில் உருவாக்கப்படும் புதிய ஹதீஸ்கலை!...
சில அழைப்பாளர்களால் விமர்சிக்கப்படும் ஒரு நபித்தோழரின்
குடும்பம்!... என மீள்பார்வை நிகழ்ச்சி தொகுப்பு தொடரும் . . .
(இன்ஷா அல்லாஹ்!)
நன்றி: "அல்இர்ஷாத்" வெளியீடூ-1,
இஸ்லாமிய அழைப்பகம், ஷாரஃ ஸப்யீன், ஜித்தா
|