வாசகர்களுக்கு,
"ஜகாத்
ஓரு மறு ஆய்வு" என்ற கட்டுரையில் ஜகாத் ஒவ்வொரு
ஆண்டும் கொடுக்கப்படவேண்டும் என்பதை விரிவாக
விளக்கியிருந்தோம். அதற்கு வந்த வாசகர் வரவேற்பை அடுத்து "அணியும் நகைகளுக்கு ஜகாத் உண்டா?" என்ற அடுத்த
ஆய்வு கட்டுரையை வழங்குகிறோம். வாசகர் கருத்துகள்
வரவேற்கப்படுகின்றன.
Part 1
அணியும் நகைகளுக்கு ஜகாத்
உண்டா?
தங்கம், வெள்ளி ஆகியவை நாணயங்களாகவோ, கட்டிகளாகவோ வியாபாரத்திற்காக
உள்ள ஆபரணங்களாகவோ, உபயோகிக்கத் தடைசெய்யப்பட்ட ஆபரணங்களாகவோ,
(ஆண்கள் அணியும் ஆபரணங்கள் உருவப்படம் பதிக்கப்பட்ட ஆபரணங்கள்)
அல்லது பாத்திரங்களாகவோ இருந்தால் அவற்றுக்கு ஜகாத் வழங்கியே ஆக
வேண்டும் என்பதில் யாருக்கும் கருத்து வேறுபாடு அறவே இல்லை. ஆனால்,
பெண்கள் அணியும் நகைகளுக்கு ஜகாத் வழங்க வேண்டுமா? என்பதில் அன்றைய
நபித்தோழர்கள் முதல் இன்றைய மார்க்க அறிஞர்கள் வரை அனைவரிடையேயும்
பலத்த கருத்து வேறுபாடு நிலவி வருகிறது. இதில் பாமர மக்கள்தான்
அதிகம் குழப்பம் அடைந்துள்ளனர். இக்கருத்து வேறுபாடு ஏற்படக்
காரணம் ஆபரணங்களுக்கு ஜகாத் உண்டு அல்லது இல்லை எனக் கூற
குர்ஆனிலும் நபி மொழியிலும் நேரடியான சரியான தெளிவான சான்றுகள்
இல்லை என்று கருதப்பட்டதுதான்.
எனவே, குர்ஆன் மற்றும் நபி மொழியின் அடிப்படையில் எந்த கருத்து
சரியானதாக இருக்க முடியும்? என்பதைத் தெளிவு படுத்திக் கொள்ளவே
இச்சிறிய ஆய்வினை வாசகர்களாகிய உங்கள் முன் சமர்ப்பிக்கின்றேன்.
அல்லாஹ் உண்மையை அனைவருக்கும் தெளிவுபடுத்தி அதனை செயல்படுத்தக்
கூடியவர்களாக நம் அனைவரையும் ஆக்கி வைப்பானாக!
நகைக்கு ஜகாத் இல்லை என்போர் முன் வைக்கும் சான்றுகள்.
பெண்கள் அணியும் நகைகளுக்கு ஜகாத் இல்லை எனக் கூறும் சாரார் பின்
வரும் சான்றுகளை முன் வைக்கின்றனர்.
(1)
عن
عافية بن أيوب عن الليث بن سعد عن أبي الزبير عن جابر عن النبي
- قال ليس في الحلي زكاة. (رواه البيهقي
في المعرفة, وإبن القيم الجوزي في التحقيق)
"நகையில் ஜகாத் இல்லை" என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பாளர் ஜாபிர் (ரலி) அவர்கள். நூல்: மஃரிஃபத்துஸ் ஸுனன் லில்
பைஹகி, தஹ்கீக்.
(2)
عَنْ
أَبِى هُرَيْرَةَ رضى الله عنه عَنِ النَّبِىِّ . قَالَ «
لَيْسَ عَلَى الْمُسْلِمِ صَدَقَةٌ فِى عَبْدِهِ وَلاَ فَرَسِهِ »
رواه البخاري
"தனது அடிமை, குதிரை ஆகியவற்றுக்கு தர்மம் (ஜகாத்) வழங்குவது ஒரு
முஸ்லிமின் மீது கடமை இல்லை" என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பாளர்: அபூ ஹுரைரா (ரலி) அவர்கள். நூல்: புகாரி 1464.
தன் உபயோகத்திற்கு அவசியமான குதிரை, பணிவிடைக்குத் தேவையான அடிமை
ஆகியவற்றுக்கு ஜகாத் இல்லை என்பதை மேற்கண்ட நபிமொழியிலிருந்து
அறிய முடிகிறது. இதன் அடிப்படையில் குடியிருக்கும் வீடு, உடுத்தும்
ஆடைகள் ஆகியவை ஜகாத் இல்லை என்ற இனத்தில் சேர்க்கப்பட்டுள்ளன. அது
போன்றுதான் பெண்கள் அணிந்து கொள்ளும் நகைகள் சொந்த உபயோகப்
பொருளாகக் கருதப்பட்டு அதற்கும் ஜகாத் இல்லை என்று கூறப்படுகிறது.
(3) வளர்ச்சி அடையக் கூடிய அல்லது வளர்ச்சிக்கு காரணமாக உள்ள
பொருட்களில்தான் ஜகாத் கடமையாகும். தங்கம் மற்றும் வெள்ளி ஆகியவை
ஆபரணங்களாக மாறியதால் வளர்ச்சிக்குரியது அல்லது வளர்ச்சிக்கு
காரணமானது என்ற நிலையிலிருந்து மாறிவிட்டது. எனவே, அவற்றில் ஜகாத்
கடமை இல்லை.
(4) "ஆயிஷா, அஸ்மா பின்தா அபீ பக்கர் (ரலி), ஜாபிர் பின்
அப்துல்லாஹ், அப்துல்லாஹ் பின் உமர், அனஸ் (ரலி) ஆகிய ஐந்து நபித்
தோழர்கள் நகைகளுக்கு ஜகாத் இல்லை" என்று கூறுவதாக இமாம் அஹ்மத்
பின் ஹன்பல் அறிவிக்கிறார்கள். (பைஹகி)
حدثني يحيى عن مالك عن عبد الرحمن بن القاسم عن
أبيه أن عائشة
زوج النبي صلى الله عليه وسلم كانت تلي بنات أخيها
يتامى في حجرها لهن الحلي فلا تخرج من حليهن الزكاة مؤطأ مالك. كذا
رواه البيهقي وإبن أبي شيبة.
"அன்னை ஆயிஷா (ரலி) அவர்கள் தன்னிடம் அனாதைகளாக வளர்ந்து வந்த தனது
சகோதரரின் பெண் மக்களுக்குச் சொந்தமான நகைகளுக்கு ஜகாத் வழங்க
வில்லை." அறிவிப்பாளர்: காசிம் பின் முஹம்மது. நூல்: முஅத்தா,
பைஹகி, இப்னு அபீ ஷைபா.
وحدثني عن مالك عن نافع أن عبد الله بن عمر كان يحلى بناته
وجواريه الذهب ثم لا يخرج من حليهن الزكاة
"அப்துல்லாஹ் பின் உமர் (ரலி)
தன் பெண்மக்களுக்கும், அடிமைப்பெண்களுக்கும் நகை அணிவித்திருந்தார்கள். அவற்றிற்கு அவர்கள் ஜகாத் வழங்கவில்லை." அறிவிப்பாளர்:
நாஃபிஉ. நூல்: முஅத்தா.
பலவீனமான நபி மொழி:
நகைக்கு ஜகாத் இல்லை என்போர் மேற்கண்டவற்றை தங்களின் கூற்றுக்கு
சான்றுகளாக கூறுகின்றனர். இவர்கள் எடுத்து வைக்கும் இச்சான்றுகளை
சற்று ஆய்வுக்கு எடுத்துக் கொள்வோம்.
முதல் சான்றான ஜாபிர் (ரலி) அவர்கள் அறிவிக்கும் நபி மொழியில்
நகைகளுக்கு ஜகாத் இல்லை என்று தெளிவாகவே கூறப்பட்டுள்ளது. இதன்
அடிப்படையில் நகைகளுக்கு ஜகாத் இல்லை என்று முடிவுக்கு எளிதாக
வரலாம். ஆனால், இந்த செய்தியைத் தனது நூலில் பதிவு செய்துள்ள இமாம்
பைஹகி அவர்கள்,
(قال
البيهقي: وما يروى عن عافية بن أيوب عن الليث عن أبي الزبير عن
جابر مرفوعاً: ليس في الحلي زكاة فباطل لا أصل له, وإنما يروى عن
جابر من قوله. وعافية بن أيوب مجهول, فمن إحتج به مرفوعاً كان
مغرّراً بدينه.... معرفة السنن والأثار للإمام البيهقي)
"இந்த ஹதீஸ் அடிப்படையற்ற தவறான செய்தியாகும். ஜாபிர்
கூறியதாகத்தான் அறிவிக்கப்பட்டுள்ளது. (இறைத்தூதர் கூறியதாக
அறிவிப்பது அடிப்படையற்றது.) மேலும் இதன் அறிவிப்பாளர்களில்
ஒருவரான ஆஃபியத் பின் அய்யூப் நிலை அறியப்படாதவர். இவரின்
அறிவிப்பை ஆதாரமாகக் கருதுவோர் இவரின் வணக்க வழிபாடு கண்டு
ஏமாற்றம் அடைந்து விட்டனர்...." என்று குறிப்பு எழுதியுள்ளார்கள்.
"ஆஃபியத் பின் அய்யூப் என்பவர் பரவாயில்லாதவர் என்ற நிலையில்
உள்ளவர்" என்று அபூ ஜுர்ஆ அவர்கள் கூறியதாக அல் ஜர்ஹ் வத் தஃதீல்
என்று நூலில் (7/59) பதிவு செய்யப்பட்டுள்ளது. இப்னுல் ஜவ்ஜி,
"ஆஃபியத் பின் அய்யூப் என்பவரை யாரும் குறை கூறியதாக நாம் அறியவில்லை" என்றும் "ஆஃபியத் பின் அய்யூப் பலவீனமானவர் எனக் கருத அவர்
பற்றிய எந்தக் குறையும் நமக்கு கிடைக்க வில்லை" என இமாம் முன்திரி
ஆகியோர் ஆஃபியத் பின் அய்யூப் குறித்து நற்சான்று அளித்துள்ளனர்.
ஆனால், ஒர் அறிவிப்பாளரை ஆதாரமாக ஏற்க வேண்டுமெனில் வணக்க
வழிபாடுகளில் சிறந்து விளங்கினால் மட்டும் போதாது. மாறாக நல்ல
நினைவாற்றல் உள்ளவர், மறதி இல்லாதவர், பொய் உரைக்காதவர்,
நேர்மையானவர் போன்ற நம்பகமான அறிவிப்பாளர்களுக்கு உரிய அவசியமான
பண்புகள் அவரிடம் இருக்க வேண்டும். இந்த அடிப்படை விதியின்படி,
ஆஃபியத் பின் அய்யூப் என்பவர் அறிவிக்கும் செய்திகளை ஆதாரமாகக்
கருதுவோர், நம்பகமான அறிவிப்பாளருக்கு இருக்க வேண்டிய இந்த
அடிப்படைத் தகுதி இவரிடம் இருந்தது என்ற நற்சான்றினை முதலில்
ஆதாரப்பூர்வமாகச் சமர்ப்பிக்க வேண்டும். அவ்வாறு சமர்ப்பிக்காத வரை
இப்பண்புகள் உள்ளதாக அறியப்படாத ஒருவரின் அறிவிப்பை ஆதாரமாக ஏற்க
இயலாது. குறிப்பாக வேறு ஆதாரப்பூர்வமான ஹதீஸிற்கு எதிராக இவர்
அறிவிப்பதை ஆதாரமாக ஏற்க முடியாது.
"அவரிடம் ஒரு குறையும் அறியப்படவில்லை" என்ற இப்னுல் ஜவ்ஜியின்
கூற்றும், "ஆஃபியத் என்பவரை பலவீனப்படுத்தும் ஒரு குறையும் எனக்கு
கிடைக்கவில்லை" என்ற முன்திரி அவர்களின் கூற்றும் ஆஃபியத்திற்கான
நற்சான்றாக அமையாது. ஏனெனில், அவரது நிலை என்னவென்று யாராலும்
அறிந்து கொள்ளப்படவில்லை என்பதனால்தான் அவர் குறித்து நல்லவர்
அல்லது கெட்டவர் என்ற ஒரு செய்தியும் பதிவு செய்யப்படவில்லை.
"பராவாயில்லாதவர் என்ற நிலையில் உள்ளவர்" என அபூ ஜுர்ஆ அவர்கள்
கூறியதுகூட, ஆஃபியத் என்பாரின் வணக்க வழிபாடுகளை மட்டும் பார்த்து
விட்டுதான் என்பது பைஹகியின் கூற்றிலிருந்து தெளிவாகிறது.
ஹதீஸ் கலையின் தலை சிறந்த அறிஞரும், அறிவிப்பாளர்கள் நிலை குறித்து
ஆய்வு செய்தவருமான இமாம் பைஹகி அவர்கள் "ஆஃபித் என்பார் நிலை
அறியப்படாதவர்" என்று கூறியுள்ள நிலையில், இவரின் அறிவிப்பை
ஆதாரமாகக் கருதுவோர், அவரின் நமபகத்தன்மையை - நேர்மையை நிரூபிக்க
வேண்டும்.
எனவே, நிலை அறியப்படாத ஒர் அறிவிப்பாளர் இந்நபி மொழியில் இடம்
பெற்றுள்ளதால் இது பலவீனமடைகிறது. எனவே நகைகளுக்கு ஜகாத் இல்லை
என்ற வாதத்திற்கு இதனைச் சான்றாக கருத முடியாது.
ஒரு வாதத்திற்காக இந்நபி மொழி ஸஹீஹானதுதான் என ஏற்றுக்
கொண்டாலும்கூட இந்நபி மொழியின் முழுக் கருத்தையுமே இதனை சான்றாக
கூறுபவர்களே ஏற்கவில்லை என்பதை இவர்களின் கூற்றிலிருந்தே
அறியலாம். ஏனெனில், "நகை" என்ற வார்த்தை தங்கத்திலான வெள்ளியிலான
பெண்கள் அணியும் நகை, ஆண்கள் அணியும் நகை என அனைத்தையும்
குறிக்கும் பொதுவான சொல். இந்த ஹதீஸின் அடிப்படையில் நகைக்கு ஜகாத்
இல்லை என்றால் ஆண்கள் அணியும் நகையிலும் ஜகாத் இல்லை என்றுதான் கூற
வேண்டும். ஆனால், அவ்வாறு இவர்கள் கூறவில்லை. மாறாக ஆண்கள் அணியும்
நகைகளுக்கு (ஆண்கள் தங்க நகை அணிவது தடை செய்யப்பட்டுள்ளது. வெள்ளி
மோதிரம் அணியத் தடையில்லை) மட்டும் ஜகாத் உண்டு என்று இந்த
ஹதீஸிற்கு மாற்றமாகவே கூறிவருகிறார்கள். எனவே இந்த ஹதீஸ்
இவர்களாலேயே புறக்கணிக்கப் பட்டுவிட்டது என்றால் இதை எப்படி
ஆதாரமாக ஏற்க முடியும் என்பதே நமது கேள்வி.
தவறான ஒப்பீடு:
இரண்டாவது சான்றான "அடிமை, குதிரை ஆகியவற்றுக்கு ஜகாத் இல்லை" என்ற
நபி மொழி ஆதாரப்பூர்வமானதுதான். எனினும், இந்த ஹதீஸின்
அடிப்படையில் நகைகளுக்கு ஜகாத் இல்லை என்று கூற முடியாது. ஏனெனில்
குதிரை, அடிமை ஆகியவை அடிப்படையில் ஜகாத் வழங்க வேண்டிய இனத்தைச்
சார்ந்ததல்ல. மாறாக வியாபாரத்திற்கு என்று ஆகும்போதுதான் அவை
வியாபாரப் பொருளாகக் கருதப்பட்டு அவற்றின் மீது ஜகாத் கடமையாகிறது.
வியாபார நோக்கமில்லாமல் ஒருவன் எவ்வளவு குதிரை வைத்திருந்தாலும்
அடிமை வைத்திருந்தாலும் அதற்கு அவன் ஜகாத் வழங்க வேண்டும் என்று
யாரும் கூறுவதில்லை. அது போன்றுதான் குடியிருக்கும் வீடும்
உபயோகித்து வரும் ஆடைகளும் அடிப்படையில் ஜகாத் வழங்க வேண்டும்
என்று கூறப்பட்ட இனத்தைச் சார்ந்தவை அல்ல.
மாறாக நகை என்பது அடிப்படையில் ஜகாத் வழங்க வேண்டும் என்று
கூறப்பட்ட தங்கம் மற்றும் வெள்ளி இனத்தைச் சார்ந்ததாகும்.
இந்நிலையில் ஜகாத் வழங்க வேண்டும் என்று கூறப்பட்ட இனத்தைச்
சார்ந்த ஒரு குறிப்பிட்ட பொருளுக்கு மட்டும் (நகைக்கு) விதி
விலக்கு அளிக்க வேண்டும் எனில் அதற்கு சரியான சான்றுகள் கூற
வேண்டும். அவ்வாறு விலக்கு அளிக்க ஆதாரப்பூர்வமான எந்த ஒரு
சான்றும் இருப்பதாக தெரியவில்லை. எனவே, இரண்டாவது நபி மொழியையும்
ஆதாரமாகக் கொண்டு நகைகளுக்கு ஜகாத் இல்லை என்று கூற முடியாது.
முரண்பாடுகள்:
"வளர்ச்சி அடையக்கூடிய அல்லது வளர்ச்சிக்குக் காரணமான பொருளில்தான்
ஜகாத் கடமை. நகை இந்நிலையிலிருந்து மாறிவிட்டதால் ஜகாத் வழங்க
வேண்டும் என்ற சட்டமும் மாறிவிட்டது" என்ற அவர்கள் கூறும்
மூன்றாவது சான்றும் முரண்பாடுகள் நிறைந்த தவறான சான்றாகும்.
ஏனெனில் நகை வளர்ச்சிக்கு காரணமாக இல்லை என்று கூறுவது பொருத்தமற்ற
வாதமாகும். தங்க நாணயங்கள் வழக்கில் இருந்த காலத்தில் எவ்வாறு அதனை
வளர்ச்சிக்குரியதாக பயன்படுத்த முடிந்ததோ அதே போன்று இன்று
நகைகளும் வளர்ச்சிக்குரியதாக பயன்படுத்தப்பட்டு வருகின்றன. சில
நாடுகளில் நகைகளை வாடகைக்கு கொடுத்து அதன் மூலம் வருமானமும்
பெறப்படுகிறது. (நபித் தோழர்கள் காலத்தில் திருமணம் போன்ற நிகழ்ச்சிகளுக்கு நகைகள் இரவலாகக் கொடுக்கப்பட்டு வந்தன.
பிற்காலத்தில் அவை வாடகைக்கு கொடுக்கபடுவது நடை முறைக்கு வந்தது.
இந்நடைமுறை இப்போதும் சில நாடுகளில் வழக்கில் உள்ளது.) இதன்
அடிப்படையில் நகை வளர்ச்சிக்குரியதாக உள்ளதால் அதில் ஜகாத் வழங்க
வேண்டும் என்றுதான் கூற வேண்டும். நகை வளர்ச்சிக்கு காரணமானதல்ல
எனக் கருதி அவற்றிற்கு ஜகாத் இல்லை என்று கூறுவது அடிப்படையற்ற
எந்த ஆதாரமும் இல்லாத கூற்றாகும்.
மேலும் நகைகள் வளர்ச்சிக்குக் காரணமானதல்ல என ஒரு வாதத்திற்காக
ஏற்றுக் கொண்டாலும் கூட, வேறு பல சந்தேகங்களுக்கும் அது வழி
வகுக்கிறது. அதாவது, உபயோகப்படுத்தாமல் கட்டியாக சேமித்து
வைக்கப்பட்டிருக்கும் தங்கத்திலும், வெள்ளியிலும் வளர்ச்சி
ஏற்படுவதில்லைதான். மேற்கண்ட காரணத்தின் அடிப்படையில் இவற்றிற்கும்
ஜகாத் இல்லை என்றுதான் கூற வேண்டும். ஆனால் அவ்வாறு யாரும்
கூறுவதில்லையே ஏன்? அதே போன்று ஆண்கள் அணியும் நகைகள், தங்க
வெள்ளிப் பாத்திரங்கள் (தங்கம் வெள்ளிப் பாத்திரங்கள்
உபயோகிக்கத்தான் தடை தவிர, வைத்திருப்பதற்கு அல்ல.) இன்றைய நவீன
காலத்தில் விளையாட்டு வீரர்கள் பெறும் விருதுகளான தங்கம் மற்றும்
வெள்ளிக் கோப்பைகள், பதக்கங்கள் ஆகியவையும் வளர்ச்சிக்கு
காரணமானதில்லைதான். இவற்றிலும் ஜகாத் இல்லை என்றே கூற வேண்டும்.
ஆனால், இவற்றிற்கு மட்டும் ஜகாத் உண்டு என இவர்கள்
கூறிவருகிறார்கள். ஏன் இந்த முரண்பாடு?
மாற்றுக் கருத்துடைய நபித் தோழர்கள்:
அன்னை ஆயிஷா, அஸ்மா பின்தா அபி பக்கர், ஜாபிர் பின் அப்துல்லாஹ்,
அப்துல்லாஹ் பின் உமர், அனஸ் (ரலியல்லாஹு அன்ஹும்) ஆகிய ஐந்து
நபித் தோழர்களும் நகைக்கு ஜகாத் இல்லை எனக் கூறியுள்ளனர்
என்பதையும் ஆதாரமாக ஏற்க இயலாது. ஏனெனில் அப்துல்லாஹ் பின் மஸ்வூத்
போன்ற வேறுசில நபித் தோழர்கள் ஜகாத் வழங்க வேண்டும் என்று
கூறியுள்ளனர். இவ்வாறு நபித் தோழர்களிடையே கருத்து வேறுபாடு
ஏற்படும் போது ஒரு சாராரின் கூற்றை ஏற்றுக் கொண்டு மற்றொரு
சாராரின் கூற்றை புறக்கணித்தால் அதற்கான சரியான காரணம் கூற
வேண்டும். ஏற்கத்தக்க எந்தக் காரணமும் நிச்சயமாக அவர்களால் கூற
இயலாது.
மேலும் நகைளுக்கு ஜகாத் இல்லை என இப்னு அப்பாஸ், அனஸ் (ரலி)
ஆகியோர் கூறியதாக அறிவிக்கப்பட்ட செய்தியும் உறுதியானதல்ல. காரணம்
அப்துல்லாஹ் பின் அப்பாஸ் (ரலி) அவர்கள் நகைக்கு ஜகாத் உண்டு என்று
கூறுவதாக இமாம் முன்திரி அவர்கள் தர்கீப் வதர்ஹீப் என்ற தனது
நூலில் பதிவு செய்துள்ளார்.
அனஸ் (ரலி) அவர்கள் ஒரு முறை ஜகாத் வழங்க வேண்டும் என்று கூறியதாக
"அல் முஹல்லா", பைஹகி போன்ற பல்வேறு நூற்களில் பதிவு
செய்யப்பட்டுள்ளது. இவ்வாறு முரண்பட்ட இரு கருத்துகள் இவ்விரு
நபித்தோழர்கள் குறித்துக் கூறப்படுவதால்தான் இமாம் ஷாஃபி
அவர்களும் அச்செய்தியில் சந்தேகம் அடைந்து, பின் வருமாறு
கூறியுள்ளார்கள்.
قال
الشافعي: ويروى عن ابن عباس وأنس بن مالك ولا أدري أثبت عنهما معنى
قول هؤلاء ليس في الحلي زكاة (الأم)
"அப்துல்லாஹ் பின் அப்பாஸ் (ரலி), அனஸ் (ரலி) ஆகியோர் ஜகாத் இல்லை
என்று கூறுவதாக அறிவிக்கப்படுகிறது. ஆனால், அது உறுதியானதுதானா?"
என்று நான் அறியேன் என கூறி உள்ளார்கள். (அல் உம்.)
நகைக்கு ஜகாத் இல்லை என்ற கூற வலுவான சான்றுகள் கிடைக்கவில்லை என்ற
காரணத்தினால்தான், இராக்கில் இருந்த ஆரம்ப காலகட்டத்தில் நகைக்கு
ஜகாத் இல்லை என்று கூறி வந்த இமாம் ஷாஃபி அவர்கள் எகிப்து வந்த
பின் அவ்வாறு கூறுவதை நிறுத்திக் கொண்டு,
قال الشافعي وقد قيل في الحلى صدقة
وهذا ما أستخير الله عز وجل فيه (الأم)
"நகையில் ஜகாத் உண்டு என்று கூறப்படுகிறது. நான் இது விஷயத்தில்
நல்ல தீர்வை தரவேண்டி அல்லாஹ்விடம் பிரார்த்திக்கிறேன்." என்று
கூறினார்கள். (அல் உம், தர்கீப் வ தர்ஹீப்)
ஆரம்ப காலத்தில் ஜகாத் இல்லை என்று கூறிக் கொண்டிருந்த இமாம்
ஷாஃபி அவர்கள் இறுதியில் அக்கருத்தை மாற்றிக் கொண்டார்கள் என்பதை "அல்
உம்" என்ற அவரது நூலில் பல இடங்களில் வெளிப்படுத்தி உள்ளார்கள்.
நகைக்கு ஜகாத் இல்லை என்று கூற வலுவான சான்று இல்லை என்பதையே இது
காட்டுகிறது. எனவே ஷாஃபி மத்ஹபை பின்பற்றுவதாக கருதுபவர்கள் இதனை
கவனத்தில் கொண்டு நகைக்கு ஜகாத் வழங்க முன்வரவேண்டும். ஷாஃபி
மத்ஹபின்படி நகைக்கு ஜகாத் இல்லை என்று கருதி ஜகாத் வழங்காமல்
இமாம் ஷாஃபி அவர்களின் மீது பழியைப் போட்டுவிட்டு
(மறுமையில்)
தப்பித்து விடலாம் என்று கருத வேண்டாம். மறுமை
நாளில் யாரும்
யாரின் மீதும் பழி சுமத்தி விட்டு இறைவனிடமிருந்து தப்பி விட
முடியாது என்பதை நினைவில் கொள்ள வேண்டும்.
"இறைவனிடம் இஸ்திகார செய்து பிரார்த்தித்தப் பின் நகைக்கு ஜகாத்
இல்லை என இமாம் ஷாஃபி அவர்கள் கூறியதாக அவரது மாணவர் ரபீஃ பின்
சுலைமான் அவர்கள் "உம்" என்ற நூலில் பதிவு செய்துள்ளார். இந்த
செய்தி சரி என ஏற்றுக் கொண்டாலும், இமாம் ஷாஃபி அவர்களின் இந்தத்
தீர்வு ஆதாரத்தை அடிப்படையாகக் கொண்டதல்ல. ஏதேனும் ஆதாரம்
கிடைத்திருக்குமேயானால், அதனைக் கூறியிருப்பார்கள். மேலும்,
இறைவனிடம் இஸ்திகார செய்து விட்டு கூறப்படும் செய்திகளை சான்றாக
ஏற்க முனைந்தால், "ஒவ்வொருவரும் நான் இஸ்திகார செய்தேன். இதுவே
தீர்வு" என்று கூறிக் கொண்டு பல்வேறு புதிய சட்டங்களைக் கூற
முனைவார்கள். அப்போதும் அதனை மறுக்க இயலாது.
அன்னை ஆயிஷா (ரலி) அவர்களின் சொல்லும், செயலும்:
தன்னிடம் வளர்ந்த அனாதைகளின் நகைகளுக்கு ஜகாத் வழங்க வில்லை என்று
அன்னை ஆயிஷா அவர்கள் குறித்து கூறப்பட்டுள்ளது போன்றே, அவர்கள்
நகைகளுக்கு ஜகாத் வழங்க வேண்டும் எனக் கூறியுள்ளதாகவும்
அறிவிக்கப்பட்டுள்ளது.
حدثنا محمد بن إسماعيل (بن إسحاق) الفارسي ثنا يحيى بن (جعفر بن
الزبرقان) أبي طالب ثنا عبد الوهاب (بن عطاء الخفاف) أنا الحسين
(بن ذكوان) المعلم عن عمرو بن شعيب عن عروة عن عائشة قالت لا بأس
بلبس الحلي إذا أعطي زكاته رواه الدارقطني والبيهقي.
"நகைகளுக்கு ஜகாத் வழங்கி விட்டால் அதனை அணிந்து கொள்வதில்
குற்றமில்லை" என அன்னை ஆயிஷா (ரலி) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பாளர்: உர்வத் பின் ஜுபைர், நூல்: தாரகுத்ணி, பைஹகி.
இதன் அறிவிப்பாளர்களில் சிலர் குறித்து குறை கூறப்பட்டிருந்தாலும்,
அக்குறை, இந்த செய்தியை புறக்கணிக்கின்ற அளவுக்கு இல்லை. ஏனெனில்
குறை கூறப்பட்டவர்கள் புஹாரி, முஸ்லிம் உட்பட ஸிஹாஹு ஸித்தா
எனப்படும் ஆறு நூற்களில் இடம் பெற்றவர்கள். எனவே இச்செய்தி
ஏற்கத்தக்கதே.
அன்னை ஆயிஷா (ரலி) அவர்கள் குறித்து இவ்வாறு முரணான இரு வேறு
கருத்துக்கள் கூறப்படுகிறது. இவ்விரு செய்தியும்
ஆதாரப்பூர்வமானதுதான் என்பதிலும் சந்தேகமில்லை. இவ்வாறு ஆயிஷா
(ரலி) அவர்கள் குறித்து இருவிதமாக அறிவிக்கப்படுவதால் ஜகாத் வழங்கவில்லை என்ற செய்தியை மட்டும் ஆதாரமாக எடுத்துக் கொள்வது என்ன
நியாயம்?
மேலும் ஒருவரின் கூற்று அவரது செயலுக்கு முரண்பாடாக
இருக்குமேயானால் செயலைவிட அவர் கூற்றுக்குத்தான் முன்னுரிமை
வழங்கப்பட வேண்டும் என்ற ஹதீஸ் கலையின் அடிப்படை விதியின் படியும்,
ஜகாத் உண்டு என்ற அன்னை ஆயிஷாவின் கூற்று குர்ஆன், மற்றும் வேறு
நபி மொழிகளுக்கு ஒத்து இருப்பதாலும் அவர்களின் செயலைவிட அவர்களின்
கூற்றையே முற்படுத்த வேண்டும். எனவே, ஜகாத் வழங்க வில்லை என்ற
அவர்களது செயலை ஆதாரமாகக் கருதுவது கூடாது.
நகையின் அளவினைத் தீர்மானிப்பதிலும் குழப்பம்:
நகைக்கு ஜகாத் இல்லை என்போர் வேறொரு குழப்பத்திலும் உள்ளனர்.
அதாவது, நகைக்கு ஜகாத் இல்லை என்றால் எவ்வளவு இருந்தாலும் ஜகாத்
இல்லை என்றுதான் கூற வேண்டும். ஆனால், அதிகமாக நகை வைத்திருப்போர்
மட்டும் ஜகாத் வழங்க வேண்டும் என்று கூறுகின்றனர். அந்த "அதிக
அளவு" எவ்வளவு என்பதை அவர்களால் அறுதியிட்டுக் கூற முடியவில்லை.
அதே சமயத்தில் எவ்வளவு இருந்தாலும் ஜகாத் இல்லை என்றும் அவர்களால்
கூற இயலவில்லை. அவ்வாறு கூறினால் ஏமாற்ற நினைப்போருக்கு அது
சாதமாக அமைந்து விடும்.
எனவே நகைகளுக்கு ஜகாத் இல்லை என்றால், அதிகமான நகை வைத்திருப்போர்
மட்டும் ஜகாத் கொடுக்க வேண்டும் என்று பொதுவாகக் கூறுவது எந்த
விதத்தில் நியாயமாகும்? அவ்வாறு கூறுவதற்கு என்ன சான்று? மேலும்,
"இது அதிகமானது", "இது குறைவானது" என்று எதனை அளவுகோலாகக் கொண்டு
தீர்மானிப்பது? அனைவருக்கும் பொருந்தி வரக்கூடிய பொதுவான அளவினை
கூறமுடியாது போய் இறுதியில் வேறொரு சட்டச்சிக்கலுக்குத்தான் இது
வழி வகுக்கும்.
அணியும் நகைகள் எனும் போது, அணிந்திருக்க வேண்டிய கால
அளவு எவ்வளவு
என்பதை ஜகாத் இல்லை என்போரால் தெளிவு படுத்தப்படாமல் அவற்றிலும்
கருத்து வேறுபாடு நிலவுகிறது. அதாவது, ஜகாத் இல்லை என்பது
எப்போதும் அணிந்து கொண்டிருக்கும் நகைகளுக்கு மட்டுமா? அல்லது
எப்போதாவது ஒரு முறை அணிந்திருந்தாலும் போதும் என்ற நிலையில் உள்ள
எல்லா நகைகளுக்குமா?. இதற்கும் தெளிவான விளக்கம் இல்லை.
அதிகம் நகை வைத்திருப்போர் எவ்வாறு அதற்கு ஜகாத் வழங்க வேண்டும்?
அதிக நகை வைத்திருப்போர் ஜகாத் வழங்க வேண்டும் என்று கூறுவோர் அதை
எந்த முறையில் வழங்க வேண்டும் என்பதிலும் கருத்து வேறுபாடு
கொண்டுள்ளனர். அதாவது அதிகம் நகை வைத்திருப்போர் அதனை இரவல்
கொடுக்க வேண்டும் என்றும் அதுவே அதற்கான ஜகாத் என ஜாபிர் (ரலி)
அவர்கள் கூறுகின்றனர். அப்துல்லாஹ் பின் உமர் (ரலி) அவர்களும்
இவ்வாறு கூறுவதாக பைஹகியில் பதிவு செய்யப்பட்டுள்ளது.
عن عبد الملك عن أبي الزبير عن جابر رضي الله عنه قال: ((لا زكاة
في الحلي)) قلت: إنه يكون فيه ألف دينارزقال: يعار, ويلبس. رواه
الشافعي والبيهقي.
அபூ ஜுபைர் அறிவிக்கிறார்கள்: "நகைக்கு ஜகாத் இல்லை என்று ஜாபிர்
(ரலி) அவர்கள் கூறிய போது ஆயிரம் தீனார் அளவு இருந்தாலுமா? என்று
நான் கேட்டேன். அதற்கவர்கள் இரவல் கொடுத்து விட்டு அணிந்துக் கொள்ள
வேண்டும்" என்றார்கள். நூல்: முஸ்னத் ஷாஃபி, பைஹகி.
عن
سفيان عن عمرو بن دينار قال سمعت رجلا يسأل جابر بن عبد الله عن
الحلي أفيه زكاة؟ فقال جابر: لا. فقال: وإن كان يبلغ ألف دينار؟
فقال جابر: كثير. رواه البيهقي والشافعي.
ஜாபிர் (ரலி) அவர்களிடம் ஒரு மனிதர் வந்து "நகைக்கு ஜகாத் உண்டா?"
என்று வினவிய போது "இல்லை" என்று பதிலுரைத்தார்கள். "ஆயிரம் தீனார்
அளவு இருந்தாலுமா?" என்று அவர் மீண்டும் வினவிய போது "அது அதிகமான
அளவு" என்றார்கள். அறிவிப்பாளர்: அம்ர் பின் தீனார். நூல்: முஸ்னத்
ஷாஃபி, பைஹகி.
(ஜகாத் என்பதற்கு "இரவல் கொடுப்பது" என்ற புதிய விளக்கம் குர்ஆன்
மற்றும் நபி மொழியிலிருந்து பெறப்பட்ட விளக்கமல்ல என்பது இங்கே
குறிப்பிடத்தக்கதாகும்.)
"மற்ற பொருட்களுக்கு இரண்டரை சதவீதம் ஜகாத் வழங்கி வருவது போன்றே
இந்த அதிக நகைகளுக்கும் இரண்டரை சதவீதம் வழங்க வேண்டும்" என்று
வேறு சிலர் கூறுகின்றனர். இரவல் கொடுப்பதற்காகவும், அணிவதற்காகவும்
வைத்துள்ள நகைகளுக்கு ஆயுளில் ஒரு முறை ஜகாத் கொடுக்க வேண்டும்
என்று அனஸ் (ரலி) அவர்கள் கூறியதாக பைஹகியிலும் "அல் முஹல்லா" என்ற
நூலிலும் பதிவாகியுள்ளது.
இவ்வாறு நகைகளுக்கு ஜகாத் இல்லை என்போர் பல்வேறு குழப்பத்தில்
உள்ளதாலும், நகைகளுக்கு ஜகாத் இல்லை என்று குர்ஆனிலும், நபி
மொழியிலும் தெளிவாகவோ அல்லது மறை முகமாகவோ கூறப்படாத நிலையிலும்
ஜகாத் இல்லை என்ற வாதம் அடிப்படையிலேயே தவறானதாகும் என்பது இதன்
மூலமும் உறுதியாகின்றது.
இதன் காரணமாகவே, நகைகளுக்கு ஜகாத் இல்லை என்போரில்
பெரும்பான்மையோர், பேணுதலின் அடிப்படையில் ஜகாத் வழங்கி விடுவதே
சிறந்தது என்று கூறுகின்றனர். இதனை கதாபி என்பவர் மஆலிமுஸ் ஸுனன்
என்ற நூலில் உறுதி செய்கிறார். இன்றைய இஸ்லாமியப் பொருளாதார
மற்றும் மார்க்க அறிஞர்களும் இதனைத்தான் உறுதி செய்கின்றனர்.
நகைக்கு ஜகாத் இல்லை என்ற வாதத்திற்கு குர்ஆனிலும், நபி மொழியிலும்
சான்றுகள் இருக்குமேயானால், அந்த சான்றுகளின் அடிப்படையில் ஜகாத்
கொடுக்காமல் இருப்பதுதான் சரியானதும், பேணுதலானதுமாகும்.
குர்ஆனுக்கும், ஹதீஸிற்கும் மாற்றமாக செயல்படுவது பேணுதலானது என
ஒருபோதும் கூற முடியாது. மாறாக, அது அதிகப் பிரசிங்கித்தனமானது
என்றுதான் கூறப்படும். எனவே, பேணுதலின் அடிப்படையில் ஜகாத்
வழங்குவது சிறந்தது என்ற இவர்களின் கூற்றிலிருந்தே இவர்கள் எடுத்து
வைக்கும் ஆதாரங்களில் உள்ள பலவீனங்கள் தெளிவாகவே தெரிகிறது. எனவே,
ஜகாத் இல்லை எனக் கூறுவதற்கு சான்றுகள் இல்லை என்ற நம் கருத்து
மேலும் வலுவடைகிறது.
பெண்களின் அடிப்படையான அவசியப் பொருளே ஆபரணங்கள்:
(أَوَمَنْ يُنَشَّأُ فِي الْحِلْيَةِ وَهُوَ فِي الْخِصَامِ غَيْرُ
مُبِينٍ) (الزخرف:18)
"அலங்காரத்தில் வளர்க்கப்படும், தன் வழக்கைத் தெளிவாக எடுத்துரைக்க
முடியாதவற்றையா?" (பெண்களையா அவர்கள் இறைவனுக்கு இணையாகத்
கருதுகிறார்கள்.) அல் குர்ஆன்: 43:18.
நகைக்கு ஜகாத் இல்லை என்போர் இவ்வசனத்தை துணைச் சான்றாக
கருதுகிறார்கள். முதலில் இந்த வசனத்தின் கருத்தை புரிந்து
கொள்வோம். அதன் பிறகு, இந்த வசனத்தை எவ்வாறு சான்றாக
கருதுகிறார்கள் என்பதை அறிவோம்.
வானவர்களை இறைவனின் பெண் மக்களாகக் கருதி அவர்களை இறை
மறுப்பாளர்கள் வழிபட்டு வந்தார்கள். அதனை இடித்துரைக்கும் முகமாக
இவ்வசனத்தை இறைவன் இறக்கினான். அதாவது அலங்காரத்தில் வளர்ந்து
வரும், தன் தேவைகளை சுயமாக நிறைவேற்றிக் கொள்ள இயலாத, தன்
வழக்குகளை தெளிவாக எடுத்துரைக்க முடியாத பலவீனமுள்ள பெண்களையா
இறைவனுக்கு இணையாகக் கருதுகிறார்கள்? என்பதே இந்த வசனத்தின்
கருத்தாகும்.
அலங்காரம் இல்லாப் பெண்கள் குறையுள்ளவர்கள் என்பதை இறைவன் இந்த
வசனத்தில் தெளிவு படுத்துகிறான். இதன் மூலம் அலங்காரம் என்பது
பெண்களின் அடிப்படைத் தேவைகளில் ஒன்று என்பதை புரிந்து கொள்ளலாம்.
அந்த அலங்காரத்தின் ஒரு அம்சம்தான் நகை. எனவே, மனிதனின் அடிப்படைத்
தேவையான வாகனம், பணியாளன், வீடு, விலை உயர்ந்த ஆடைகளுக்கு ஜகாத்
இல்லாதது போலவே பெண்களின் நகைகளுக்கும் ஜகாத் இல்லை.
இவ்வாறு இந்த வசனத்திற்கு விளக்கம் அளித்து, அதனைச் சான்றாகக்
கருதுகிறார்கள்.
இந்த விளக்கமும் அதன் அடிப்படையில் எடுத்து வைக்கின்ற கருத்தும்
ஒரு போதும் சான்றாக அமையாது. ஏனெனில், பெண்களின் அலங்காரத்திற்கு
அவசியப் பொருள்தான் நகை என்பதில் மாற்றுக் கருத்துக்கு
இடமில்லைதான். அதனால்தான், ஆண்களுக்குத் தடை செய்யப்பட்ட ஆபரணங்கள்
பெண்களுக்கு அனுமதிக்கப் பட்டுள்ளது. அவசியப் பொருள் என்பதால், அது
எவ்வளவு இருந்தாலும் அதற்கு ஜகாத்தே இல்லை என்ற முடிவுக்கு வர
முடியுமா? என்றால் அதற்கு எந்த ஒரு முன் மாதிரியும் இல்லை.
ஒரு பெண்ணின் அலங்காரத்திற்கு நகை அவசியமாக இருப்பதை விட, மனிதன்
உயிர் வாழ்வதற்குத் தேவையான உணவுப் பொருள் பன்மடங்கு
அவசியமானதாகும். உணவின்றி மனிதன் உயிர் வாழவே முடியாது. அதனால்,
விளைபொருளில் ஜகாத் இல்லை என்ற முடிவுக்குதான் வர முடியுமா? தங்கம்
மற்றும் வெள்ளி நாணயங்களும் மனிதனின் அவசியப் பொருட்கள்தான்.
அவற்றிலும் ஜகாத் இல்லை என்று முடிவு செய்ய முடியுமா?
மனிதனுக்குத் தேவைப்படும் அவசியப் பொருட்கள் ஒரு குறிப்பிட்ட
அளவுக்கு மேல் இருக்கும் போதுதான் அவற்றில் ஜகாத் வழங்க வேண்டும்.
நகையைப் பொருத்தவரை அக்குறிப்பிட்ட அளவு என்பது 11 பவுனாகும்.
இது ஒரு பெண்ணை அலங்கரிக்க போதுமான அளவும்கூட. அதற்கு மேல் நகை
வைத்திருப்பவர்கள்தான் அவற்றிற்கு ஜகாத் வழங்க வேண்டும் என்று
இஸ்லாம் கூறியுள்ளது. எனவே, "நகை பெண்களின் அவசியப் பொருள்.
அவற்றிற்கு ஜகாத்தே இல்லை" என வாதிப்பது பொருத்தமற்றதாகும்.
இவற்றுக்கெல்லாம் மேலாக, "நகைகளுக்கு ஜகாத் இல்லை" என்பது குர்ஆன்
மற்றும் ஹதீஸ் அடிப்படையில் எடுக்கப்பட்ட முடிவல்ல என்பதை நாம்
ஆரம்பத்திலேயே தெளிவாகவே உறுதிப்படுத்தியுள்ளோம்.
இனி "நகைகளுக்கு ஜகாத் உண்டு" என்று கூறுவதற்கு சான்றுகள் உண்டா?
அச்சான்றுகளின் தரம் என்ன என்பதை அடுத்து காண்போம்.
Part 2:
நகைகளுக்கு ஜகாத்
உண்டு என்போர் எடுத்து வைக்கும் சான்றுகள்:
பெண்கள் அணியும் நகைகளுக்கும் ஜகாத் உண்டு என்போர் பின் வரும்
சான்றுகளை முன் வைக்கிறார்கள்.
1)
(
وَالَّذِينَ يَكْنِزُونَ الذَّهَبَ وَالْفِضَّةَ وَلا
يُنْفِقُونَهَا فِي سَبِيلِ اللَّهِ فَبَشِّرْهُمْ بِعَذَابٍ
أَلِيمٍ)(التوبة: من الآية34)
(يَوْمَ يُحْمَى عَلَيْهَا فِي نَارِ
جَهَنَّمَ فَتُكْوَى بِهَا جِبَاهُهُمْ وَجُنُوبُهُمْ
وَظُهُورُهُمْ هَذَا مَا كَنَزْتُمْ لانْفُسِكُمْ فَذُوقُوا مَا
كُنْتُمْ تَكْنِزُونَ) (التوبة:35)
".....பொன்னையும் வெள்ளியையும் அல்லாஹ்வின் பாதையில் செலவிடாமல்
சேமித்து வைப்போருக்கு நோவினை தரும் வேதனை உண்டு" என்று
எச்சரிப்பீராக!
"(மறுமை)நாளில் அவை நரக நெருப்பில் பழுக்கக் காய்ச்சப் பட்டு,
அவர்களது நெற்றிகள், விலாப்புறங்களில் சூடு போடப்படும். இதுதான்
உங்களுக்காக நீங்கள் சேமித்து வைத்திருந்தது. நீங்கள் சேமித்தவற்றை
அனுபவியுங்கள்" என்றும் கூறப்படும். (9:34,35)
2)
عن أبي هريرة يقول قال رسول الله - ما
من صاحب ذهب ولا فضة لا يؤدي منها حقها إلا إذا كان يوم القيامة
صفحت له صفائح من نار فأحمي عليها في نار جهنم فيكوى بها جنبه
وجبينه وظهره كلما بردت أعيدت له في يوم كان مقداره خمسين ألف رواه
مسلم.
அபூ ஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்:
"தங்கம், மற்றும் வெள்ளியின் உரிமைகளை (ஜகாத்தை)
நிறைவேற்றாதவனுக்கு மறுமை நாளில், அவை நரக நெருப்பில் பழுக்கக்
காய்ச்சப்பட்ட பாளங்களாக மாற்றப்பட்டு அதன் மூலம் அவனது
முகத்திலும், விலாப்புறங்களிலும், முதுகிலும் சூடு போடப்படும்.
அந்நெருப்புப் பாளங்கள் குளிர்ந்து விடும் போதெல்லாம் மீண்டும்
சூடேற்றப்படும். (மறுமையின்) அந்நாள்(இம்மையின்)
ஐம்பது ஆயிரம் வருடங்களுக்கு நிகரானதாகும்" என நபி (ஸல்)
அவர்கள் கூறினார்கள். நூல்: முஸ்லிம், நஸாயி.
தங்கம், வெள்ளியின் மீது கடமையான ஜகாத்தை நிறைவேற்றாதவன் கடுமையாக
தண்டிக்கப்படுவான் என்று எச்சரிக்கின்ற மேற்கண்ட இறைவசனம் மற்றும்
நபி மொழியில் தங்கம், வெள்ளி என பொதுவான வார்த்தையே
உபயோகப்படுத்தப்பட்டுள்ளது. இவ்வார்த்தைப் பிரயோகம், நாணயங்கள்,
கட்டிகள், மற்றும் நகைகளாக உள்ள அனைத்தையும் குறிக்கும் பொதுவான
சொல்லாக்கமாகும்.
3)
1459- عَنْ أَبِى سَعِيدٍ الْخُدْرِىِّ - رضى الله عنه - أَنَّ
رَسُولَ اللَّهِ - قَالَ « لَيْسَ
فِيمَا دُونَ خَمْسَةِ أَوْسُقٍ مِنَ التَّمْرِ صَدَقَةٌ ،
وَلَيْسَ فِيمَا دُونَ خَمْسِ أَوَاقٍ مِنَ الْوَرِقِ صَدَقَةٌ ،
وَلَيْسَ فِيمَا دُونَ خَمْسِ ذَوْدٍ مِنَ الإِبِلِ صَدَقَةٌ »
رواه ابخاري.
"ஐந்து வஸக்குகளை விட குறைவாக உள்ள பேரீச்சம் பழத்திலும், ஐந்து
ஊக்கியாக்களை விட குறைவாக உள்ள வெள்ளியிலும், ஐந்து ஒட்டகங்களை விட
குறைவானவற்றிலும் ஜகாத் இல்லை" என நபி (ஸல்) அவர்கள் கூறியதாக அபூ
சயீத் அல் குத்ரி (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள். நூல்:
புஹாரி-1459.
1454- حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ عَبْدِ اللَّهِ بْنِ الْمُثَنَّى
الأَنْصَارِىُّ قَالَ حَدَّثَنِى أَبِى قَالَ حَدَّثَنِى ثُمَامَةُ
بْنُ عَبْدِ اللَّهِ بْنِ أَنَسٍ أَنَّ أَنَساً حَدَّثَهُ أَنَّ
أَبَا بَكْرٍ - رضى الله عنه - كَتَبَ لَهُ هَذَا الْكِتَابَ
لَمَّا وَجَّهَهُ إِلَى الْبَحْرَيْنِ بِسْمِ اللَّهِ الرَّحْمَنِ
الرَّحِيمِ « هَذِهِ فَرِيضَةُ الصَّدَقَةِ الَّتِى فَرَضَ رَسُولُ
اللَّهِ صلى الله عليه وسلم عَلَى الْمُسْلِمِينَ ، وَالَّتِى
أَمَرَ اللَّهُ بِهَا رَسُولَهُ ، فَمَنْ سُئِلَهَا مِنَ
الْمُسْلِمِينَ عَلَى وَجْهِهَا فَلْيُعْطِهَا ، وَمَنْ سُئِلَ
فَوْقَهَا فَلاَ يُعْطِ .......... وَفِى الرِّقَةِ رُبْعُ
الْعُشْرِ ، فَإِنْ لَمْ تَكُنْ إِلاَّ تِسْعِينَ وَمِائَةً
فَلَيْسَ فِيهَا شَىْءٌ ، إِلاَّ أَنْ يَشَاءَ رَبُّهَا » . رواه
البخاري ومسلم.
அனஸ் (ரலி) அவர்கள்
அறிவிக்கிறார்கள்:
பஹ்ரைனுக்கு (அவரை) அனுப்பிய போது அபூ பக்கர் (ரலி) அவர்கள் எழுதிய
கடிதம் இது. அதில், "பிஸ்மில்லாஹிர் ரஹ்மானிர் ரஹீம். அல்லாஹ் தனது
தூதருக்கு ஏவி, அவர்கள் முஸ்லிம்கள் மீது கடமையாக்கிய ஜகாத் பற்றிய
விபரமாகும். இம்முறையில் முஸ்லிம்கள் கோரப்பட்டால் அதனை அவர்கள்
வழங்கி விட வேண்டும். அதற்கு மேலாகக் கோரப்பட்டால் கொடுக்க
வேண்டாம்......... வெள்ளியில் நாற்பதில் ஒரு பங்கு ஜகாத் கொடுக்க
வேண்டும்" நூல்: புகாரி 1454.
வெள்ளிக்கு ஜகாத் கடமையென மேற்கண்ட இரு நபி மொழிகளிலும் பொதுவாகவே
கூறப்பட்டுள்ளது. எனவே, அவ்வெள்ளி நகையாக இருப்பினும் அதற்கும்
ஜகாத் உண்டு என்றே புரிந்து கொள்ள வேண்டும்.
ஐயமும் தெளிவும்
நாம் மேலே எடுத்துக் காட்டிய சான்றுகளில் சிலர் சந்தேகத்தை
எழுப்புகின்றனர். அதாவது முதலாவது சான்றான இறை வசனத்தில்,
தங்கத்தையும், வெள்ளியையும் இறைவழியில் செலவிடாமல் சேமித்து
வைப்பவன் என்று கூறப்பட்டுள்ளது. 'செலவழித்தல்' என்ற வார்த்தைப்
பிரயோகம் நாணயங்களைத்தான் குறிக்கும். நகைகளைக் குறிக்காது.
ஏனெனில் 'நகைகளை செலவழிப்பது' என்று கூறுவது வழக்கில்லை. அதே
போன்றுதான், மேற்காணும் நபி மொழிகளில் வெள்ளியைக் குறிக்க
'ரிக்கத்து', 'அல் வரிக்' ஆகிய வார்த்தைகள் கையாளப்பட்டுள்ளன.
இவ்வார்த்தைகள் அனைத்தும் நாணயங்களைத்தான் குறிக்குமே தவிர
நகைகளைக் குறிக்காது. எனவே, இதன் அடிப்படையில் ஜகாத் வழங்க
வேண்டியது நாணயங்களுக்கு மட்டும்தானே தவிர நகைகளுக்கு அல்ல என்று
சிலர் கூறுகின்றனர்.
இவர்களின் வாதத்தின்படி தங்கம், மற்றும் வெள்ளி ஆகியவை நாணயங்களாக
இருந்தால் மட்டும்தான் ஜகாத் உண்டு என்பதையே மேற்கண்ட சான்றுகள்
வலியுறுத்துகின்றன என வைத்துக் கொண்டால், அவை கட்டிகளாகவோ,
பாத்திரங்களாகவோ, ஆண்கள் அணியும் ஆபரணங்களாகவோ உருவப் படம்
பதிக்கப்பட்ட பெண்கள் அணியும் ஆபரணங்களாகவோ இருப்பின் அவற்றிற்கும்
ஜகாத் இல்லை என்றுதானே கூற வேண்டும். ஆனால், அவற்றிற்கும் ஜகாத்
உண்டு என இச்சான்றுகளை மேற்கோள் காட்டித்தான் எல்லோரும் கூறிவருகின்றார்கள் எனும்போது மேற்காணும் இச்சான்றுகள் நாணயங்களை மட்டும்
குறிக்க வில்லை என்பது உள்ளங்கை நெல்லிக்கனியாகத் தெளிவாகத்
தெரியவில்லையா?
மேலும், முஸ்லிம் கிரந்தத்தில் இடம் பெற்ற நபி மொழியில் தங்கம்
மற்றும் வெள்ளி எனப் பொதுவாகவே கூறப்பட்டுள்ளன. இந்நபி மொழியின்
அடிப்படையில் தங்கம் வெள்ளி ஆகியவை எந்த வடிவில் இருந்தாலும்
அவற்றிற்கு ஜகாத் உண்டு என்பதையே தெளிவாக்குகிறது.
மேலும், 'அர் வரிக்' என்ற வார்த்தை பொதுவான வெள்ளி என்ற
அர்த்தத்தில் கையாளப்படுகிறது என்பதற்கு புஹாரியில் இடம் பெற்ற
1459, 1484, 2180, 2181, 2249, 5865, 5868 ஆகிய நபி மொழிகள்
தெளிவான சான்றாக விளங்குகின்றன. முஸ்லிம் போன்ற வேறுபல நூற்களில்
இடம்பெற்ற நபி மொழிகளிலும் இவ்வாறே பயன்படுத்தப்பட்டுள்ளது.
4)
حدثنا أبو كامل وحميد بن مسعدة المعنى أن خالد بن الحارث حدثهم ثنا
حسين عن عمرو بن شعيب عن أبيه عن جده أن امرأة أتت رسول الله
- ومعها ابنة لها وفي يد ابنتها مسكتان
غليظتان من ذهب فقال لها أتعطين زكاة هذا قالت لا قال أيسرك أن
يسورك الله بهما يوم القيامة سوارين من نار قال فخلعتهما فألقتهما
إلى النبي صلى الله عليه وسلم وقالت هما لله عز وجل ولرسوله رواه
أبو داود واللفط له والنسائي- والترمذي
عن طريق إبن لهيعة ومثني بن الصباح عن عمرو بن شعيب عن أبيه عن جده
والدار قطني من طريق الحجاج بن الأرطاة عن عمرو بن شعيب عن أبيه عن
جده.
கெட்டியான இரு வளையல்கள் அணிந்திருந்த தனது மகளை அழைத்துக் கொண்டு
இறைத்தூதரிடம் வந்த ஒரு பெண்மணியை நோக்கி "இவ்வளையல்களுக்கு ஜகாத்
வழங்கி விட்டாயா?" என்று நபி (ஸல்) அவர்கள் கேட்ட போது "இல்லை"
என்று அப்பெண்மணி பதிலளித்தார். "மறுமை நாளில் நெருப்பிலான இரு
வளையல்கள் இவற்றிற்கு பகரமாக அல்லாஹ் உமக்கு அணிவிப்பதை
விரும்புகின்றாயா?" என நபி(ஸல்) அவர்கள் கூறியதும், அவற்றை கழற்றி
இறைத்தூதரிடம் கொடுத்துவிட்ட அப்பெண்மணி, "இவ்விரண்டும்
அல்லாஹ்விற்கும் அல்லாஹ்வின் தூதருக்கும் உரியது" என்று கூறினார்.
அறிவிப்பாளர்: அப்துல்லாஹ் பின் அம்ர் பின் ஆஸ் (ரலி). நூல்: அபூ
தாவூத், நஸாயி, திர்மிதி, தாரகுத்னி.
யமன் நாட்டிலிருந்து வந்த இப்பெண்மணியிடம் வளையல்களுக்கு ஜகாத்
வழங்க வேண்டும் என்பதை நபி (ஸல்) அவர்கள் கூறியுள்ள இந்த
செய்தியின் மூலம், நகைகளுக்கும் ஜகாத் வழங்க வேண்டும் என்பதைத்
குறிப்பாகவும், தெளிவாகவும் புரிந்து கொள்ள முடிகிறது. அணியும்
நகைகளுக்கு ஜகாத் இல்லை என்றிருக்குமேயானால், அப்பெண்மணியை நோக்கி
கடும் எச்சரிக்கை செய்யும் விதத்தில் மேற்கண்டவாறு கேள்வி
கேட்டிருக்க மாட்டார்கள்.
'கெட்டியான இரு வளையல்கள்' என்று இந்நபி மொழியில்
கூறப்பட்டுவிட்டதால் இரு வளையல்களும் ஜகாத் வழங்க வேண்டிய அளவான 85
கிராமை அடைந்திருக்குமா? என்ற சந்தேகத்திற்கே இடமில்லை. ஏனெனில்,
குறைந்த எடையில் (Light weight) பெரிய
அளவிலான ஆபரணங்கள் செய்து கொள்ளும் தொழில் நுட்பம் வளர்ச்சி அடையாத
அக்காலத்தில், இரு வளையல்கள் 85 கிராம் அளவு இருந்திருக்க அதிகமான
சாத்தியம் உள்ளது. பெண்கள் அணியும் ஆபணரங்களுக்கு ஜகாத் வழங்க
வேண்டும் என்பதற்கு இந்த நபி மொழி குறிப்பான மற்றும் தெளிவான
சான்றாக உள்ளது.
குற்றச்சாட்டுகள்:
ஆபரணங்களுக்கு ஜகாத் இல்லை என்போர் மேற்கண்ட நபி மொழியின் மீது சில
குற்றச்சாட்டுகளைக் கூறுகிறார்கள்.
1)
قال أبو عيسى وهذا حديث رواه المثنى بن الصباح عن عمرو بن شعيب نحو
هذا والمثنى بن الصباح وابن لهيعة يضعفان في الحديث ولا يصح في هذا
الباب عن النبي صلى الله عليه وسلم شيء سنن الترمذي ج3/ص29
இந்நபி மொழியை இப்னு லுஹைஆவின் மூலம் தனது நூலில் பதிவு செய்த
இமாம் திர்மிதி அவர்கள் "அல் முஃதன்னப்னுஸ் ஸபாஹ் என்பவரும் இந்நபி
மொழியை அறிவிக்கிறார். ஹதீஸ் கலை வல்லுனர்களால் இவ்விருவரும்
பலவீனமானவர்களாகக் கருதப்படுகின்றனர். ஆபரணங்களுக்கு ஜகாத் இல்லை
என நபி(ஸல்) அவர்கள் கூறியதாக சரியான அறிவிப்பு ஒன்றும் இல்லை" என
இந்த ஹதீஸின் கீழ் குறிப்பு எழுதியுள்ளார்கள்.
2) இந்நபி மொழியை வேறொரு தொடரில் ஹஜ்ஜாஜ் பின் அர்தாத் மூலமாகவும்
அறிவிக்கப்பட்டுள்ளது. இதை தன் நூலில் பதிவு செய்த இமாம் தாரகுத்ணி
அவர்கள், ஹஜ்ஜாஜ் என்பவரின் அறிவிப்பை ஆதாரமாக ஏற்க முடியாது என்று
கூறியுள்ளார்கள்.
(قال الدار قطني: حجاج هو بن أرطأة لا يحتج به)
3) நபித்தோழியர்களில் பலரும் நகை அணிந்திருக்க வாய்ப்புள்ள
நிலையில், அவற்றிற்கு ஜகாத் வழங்க வேண்டும் என்று யாரை நோக்கியும்
இறைத்தூதர் கூறியதாக சரியான அறிவிப்பு இல்லை. இதுவே ஜகாத் வழங்க
வேண்டும் என்ற செய்தி ஸஹீஹானதாக இருக்க வாய்ப்பில்லை என்ற நம்
நிலைபாட்டை மேலும் உறுதிப்படுத்துகிறது.
4) நகைகளுக்கு ஜகாத் வழங்க வேண்டுமா? இல்லையா? என்ற கருத்து
வேறுபாடுகள் நபித் தோழர்களிடையே ஏற்பட்டுள்ள நிலையில், ஜகாத் இல்லை
என்றொரு சரியான நபி மொழி இருந்திருக்குமேயானால் அது அவர்களிடையே
பிரபலமடைந்து இப்பிரச்சனைக்குத் தீர்வாக அமைந்திருக்கும். ஏனெனில்,
இதன் அறிவிப்பாளரான அப்துல்லாஹ் பின் அம்ர் பின் ஆஸ் (ரலி)
அவர்கள், கருத்து வேறுபாடு கொண்ட நபித் தோழர்களின் சம
காலத்தில்
வாழ்ந்து வந்தவர். தான் இறைத்தூதரிடம் கேட்டிருந்த இச்செய்தியை
அவர்களிடம் தெரிவித்து, நகைகளுக்கு ஜகாத் வழங்க வேண்டும் என்று
உறுதி செய்திருப்பார். இது போன்ற ஒரு குறிப்பும் எந்த நூலிலும்
பதிவு செய்யப்படவில்லை என்பதிலிருந்தே இந்நபி மொழி பலவீனமானது
என்பது தெளிவாகிறது.
பதிலுரைகள்:
முதல் குற்றச்சாட்டின் பதில்:
அம்ர் பின் ஷுஐப் என்பவரின் மூலம் அறிவிக்கப்படும் இந்நபி மொழியை
இப்னு லுஹைஆ மற்றும் அல் முஃதன்னப்னுஸ் ஸபாஹ் ஆகிய இருவரின் மூலம்
தனது நூலில் பதிவு செய்த இமாம் திர்மிதி அவர்கள், நம்பகமான மற்றொரு
அறிவிப்பாளர் ஹுசைன் பின் ஃதக்வான் என்பவரின் மூலம் காலித் பின்
அல் ஹாரிஃத் என்பவர் அறிவித்துள்ளதை (அபூ தாவூதிலும், நஸாயிலும்
இந்த அறிவிப்பு இடம் பெற்றுள்ளது.) கவனிக்கத் தவறிவிட்டதால்,
நகைக்கு ஜகாத் வழங்க வேண்டும் என்று கூற சரியான ஹதீஸ் ஏதும் இல்லை
என்று கூறிவிட்டார். திர்மிதி அவர்கள் கவனிக்கத் தவறிவிட்டார்
என்பதை இமாம் இப்னு ஹஜர், இப்னுல் முலக்கின் ஆகியோர்
உறுதிப்படுத்தியுள்ளதுடன், அபூ தாவூதில் இடம் பெற்ற இந்நபி மொழி
சரியான அறிவிப்பாளர் தொடரைக் கொண்டுள்ளது என்பதையும்
தெளிவுபடுத்தியுள்ளார்கள். (இது குறித்த விரிவான விளக்கம் கீழே
தரப்பட்டுள்ளது.) எனவே, இமாம் திர்மிதி
அவர்களது விமர்சனத்தின் அடிப்படையில் நகைக்கு ஜகாத் வழங்க வேண்டும்
என்ற மேற்கண்ட நபி மொழியை பலவீனம் என்று கூறி புறக்கணிக்க
முடியாது.
இரண்டாவது குற்றச்சாட்டின் பதில்:
ஹஜ்ஜாஜ் பின் அர்தாத் என்பவர் அறிவிப்பதை ஆதாரமாக கருத இயலாது என்ற
இமாம் தாரகுத்னி அவர்களின் விமர்சனம் சரியானதுதான். நகைக்கு ஜகாத்
உண்டு என்று கூறுவோர் இதனை ஆதாரமாகக் கூறவில்லை. மாறாக ஹுசைன்
என்பவர் மூலம் காலித் அறிவித்ததாக அபூ தாவூத் மற்றும் நஸாயி ஆகிய
நூற்களில் பதிவாகி உள்ளதைத்தான் சான்றாக முன் வைக்கிறார்கள். இது
சரியான அறிவிப்பாளர் தொடரைக் கொண்டுள்ளது.
மேலும் தற்பெருமை, நினைவாற்றல் குறைவு, கேட்டதை எல்லாம்
அறிவிக்கும் குணம் போன்ற நேர்மையான அறிவிப்பாளரிடம் இருக்கக் கூடாத
பண்புகள் ஹஜ்ஜாஜிடம் இருந்ததாலும், தனக்கு அறிவித்த பலவீனமான
அறிவிப்பாளரைக் கூறாமல், அதற்கு மேல் உள்ள நம்பகமான அறிவிப்பாளரின்
பெயரைப் பயன்படுத்தி அறிவிக்கும் அவரது நடவடிக்கையினாலும்தான் அவர்
அறிவிப்பதை புறக்கணிக்க வேண்டும் என்று இக்கலை அறிஞர்கள்
அதிகமானோர் கூறுகின்றனர். பொய்யுரைக்கக் கூடியவர், நினைவாற்றல்
குன்றியவர், குழப்பமடைந்தவர் போன்ற குறைகள் இவரைப் பற்றிக் கூறப்பட
வில்லை.
எனவே, எனக்கு இவர் அறிவித்தார், நான்
இவரிடம் கேட்டேன் என்று குறிப்பாக ஒரு செய்தியை அவர் அறிவித்தால்
அதனை சான்றாக ஏற்கலாம். அவரது நினைவாற்றலிலும், அவரது உண்மைத்
தன்மையிலும் சந்தேகிக்க முடியாது என அபூ ஹாதிம் அவர்கள்
கூறியுள்ளார். அஹ்மத் பின் ஹன்பல், அல் இஜ்லி போன்றோரும் அவரது
நினைவாற்றலை சிலாகித்துக் கூறியுள்ளனர். மாபெரும் அறிஞர்களில்
ஒருவர் என்று இமாம் தஹபி புகழாரம் சூடியுள்ளார். இதன்
அடிப்படையில், ஹஜ்ஜாஜ் அறிவிப்பதை தனியான ஆதாரமாக எடுக்க முடியாது
என்றாலும், ஹுசைன் அறிவிப்பதை வலுவூட்டக்கூடியதாக கருதுவதில்
குற்றமில்லை என்றே விளங்குகிறது. இமாம் புஹாரி அவர்கள் அல் அதபுல்
முஃப்ரத் என்ற தனது நூலில் இவர் அறிவித்த ஹதீஸ்களை பதிவு
செய்திருப்பதும் இதன் அடிப்படையில்தான் என்று இக்கலை அறிஞர்கள்
கூறுகின்றனர். எனவே, ஹஜ்ஜாஜ் அறிவிப்பதை தனியான சான்றாக
ஏற்கமுடியாதுதான். எனினும், அவர் அறிவிப்பதை முற்றிலுமாகப்
புறக்கணிக்க முடியாது என்பதே இக்கலை அறிஞர்கள் பெரும்பான்மையோரின்
கருத்தாகும்.
மூன்றாவது குற்றச்சாட்டின் பதில்:
நபித்தோழியர்களில் பலரும் நகைகள் அணிந்திருக்க வாய்ப்புள்ள
நிலையில் அவற்றிற்கு ஜகாத் வழங்க வேண்டும் என்று யாரையும் நோக்கி
கூறியதாக சரியான அறிவிப்பு ஏதும் இல்லை என்ற இக்குற்றச்சாட்டை
நபித்தோழர்களின் வாழ்க்கை நிலையை அறிந்து கொண்ட யாரும் கற்பனை
செய்து கூட பார்க்க முடியாது. ஏனெனில், எராளமான நகைகள் அணிந்து
கொள்கின்ற அளவு பெரும்பான்மையோரின் வாழ்க்கைத் தரம் தாராளமானதாக
இருந்திருக்கவில்லை. (இதற்கு விதிவிலக்காக சிலர் இருந்துள்ளனர்.
அவர்களை நோக்கி ஜகாத் வழங்க வேண்டும் என்று கூறிய செய்தி தக்க
ஆதாரங்களுடன் பதிவு செய்யப்பட்டுள்ளது.) உண்ண உணவில்லாத, உடுத்த
உடையில்லாத, பொருட்கள் வாங்க பணமில்லாத அவர்களின் வாழ்வின்
பரிதாபமான பக்கங்களில் சில!
ஒரு கவள உணவைத் தேடி வீட்டை விட்டு வெளியேறிய உலகத் தலைவர்கள்...
عن أبي هريرة يقول بينا أبو بكر قاعد وعمر معه إذ أتاهما رسول الله
- فقال ما أقعدكما ههنا قالا أخرجنا الجوع من بيوتنا والذي بعثك
بالحق ......رواه مسلم
"நபித் தோழர்களான அபூ பக்கர் மற்றும் உமர் (ரலியல்லாஹுஅன்ஹுமா)
ஆகிய இருவரும் ஓர் இடத்தில் அமர்ந்திருப்பதை பார்த்த இறைத்தூதர்,
"ஏன் இங்கே அமர்ந்துள்ளீர்கள்" என்று வினவிய போது, "பசி எங்களை
வீட்டிலிருந்து வெளியேற்றி விட்டது" என்று பதிலளித்தார்கள். "என்
ஆத்மாவின் அதிபதியான அல்லாஹ்வின் மீது ஆணையாக உங்களை வெளியேற்றிய
பசிதான் என்னையும் வெளியேற்றியது...." என நபி (ஸல்) அவர்கள்
கூறினார்கள்....
அறிவிப்பாளர்: அபூ ஹுரைரா (ரலி), நூல்: முஸ்லிம், இப்னு ஹிப்பான்,
திர்மிதி.
பசியால் வயிற்றில் கல்லைக் கட்டிய இறைத்தூதர்.....
عن أنس بن مالك يقول جئت رسول الله -
يوما فوجدته جالسا مع أصحابه يحدثهم وقد عصب بطنه بعصابة قال أسامة
وأنا أشك على حجر فقلت لبعض أصحابه لم عصب رسول الله
- بطنه فقالوا من الجوع فذهبت إلى أبي
طلحة وهو زوج أم سليم بنت ملحان فقلت يا أبتاه قد رأيت رسول الله
- عصب بطنه بعصابة فسألت بعض أصحابه
فقالوا من الجوع فدخل أبو طلحة على أمي فقال هل من شيء فقالت نعم
عندي كسر من خبر وتمرات فإن جاءنا رسول الله -
وحده أشبعناه وإن جاء آخر معه قل عنهم ثم ذكر سائر الحديث بقصته
رواه مسلم واللفظ له والبخاري.
அனஸ் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்:
"இறைத்தூதர் தம் தோழர்களுடன் அமர்ந்து அவர்களுக்கு (மார்க்கத்தைக்)
கற்றுக் கொடுத்துக் கொண்டிருந்த சமயத்தில் அவர்களது வயிற்றை (கல்
கொண்டு) கட்டியிருப்பதை பார்த்த நான், "ஏன் அவ்வாறு வயிற்றைக்
கட்டி உள்ளார்கள்' என்று அருகிலிருந்த சிலரிடம் வினவிய போது,
"பசியினால்" என்று கூறினர். (என் தாய்) உம் சுலைமின்
கணவர் அபூ தல்ஹா(ரலி) அவர்களிடம் இது விவரம் கூறினேன்.
என் தாயிடம் வந்த அபூ தல்ஹா, "(சாப்பிட) ஏதேனும் உண்டா?" என்று
வினவிய போது, "ரொட்டித் துண்டும், குறைந்தளவு பேரித்தம் பழங்களும்
உண்டு. இறைத்தூதர் மட்டும் வந்தால் அவர்களது பசி தீரப் போதுமானது.
அவர்களுடன் வேறொருவரும் வந்தால் போதுமாகாது" என்று (என் தாய்)
கூறினார்......
பசியினால் மயக்கமுற்று வீழ்ந்த நபித் தோழர்......
5375- عَنْ أَبِى هُرَيْرَةَ أَصَابَنِى جَهْدٌ شَدِيدٌ فَلَقِيتُ
عُمَرَ بْنَ الْخَطَّابِ ، فَاسْتَقْرَأْتُهُ آيَةً مِنْ كِتَابِ
اللَّهِ ، فَدَخَلَ دَارَهُ وَفَتَحَهَا عَلَىَّ ، فَمَشَيْتُ
غَيْرَ بَعِيدٍ ، فَخَرَرْتُ لِوَجْهِى مِنَ الْجَهْدِ وَالْجُوعِ
فَإِذَا رَسُولُ اللَّهِ - قَائِمٌ
عَلَى رَأْسِى فَقَال« يَا أَبَا هُرَيْرَةَ » . فَقُلْتُ
لَبَّيْكَ رَسُولَ اللَّهِ وَسَعْدَيْكَ . فَأَخَذَ بِيَدِى
فَأَقَامَنِى ، وَعَرَفَ الَّذِى بِى ، فَانْطَلَقَ بِى إِلَى
رَحْلِهِ ، فَأَمَرَ لِى بِعُسٍّ مِنْ لَبَنٍ فَشَرِبْتُ مِنْهُ ،
ثُمَّ قَالَ «عُدْ يَا أَبَا هِرٍّ». فَعُدْتُ فَشَرِبْتُ ، ثُمَّ
قَالَ «عُدْ». فَعُدْتُ فَشَرِبْتُ حَتَّى اسْتَوَى بَطْنِى
فَصَارَ كَالْقِدْحِ رواه البخاري.
எனக்கு(பசியினால்) கடும் சோர்வு ஏற்பட்ட போது உமர் (ரலி) அவர்களை
சந்தித்து, அல்லாஹ்வின் வேதத்திலிருந்து ஏதேனும் ஒரு வசனத்தை ஓதிக்
காட்டும் படி வேண்டினேன். உடனே, அவர் தமது வீட்டிற்கு சென்று ஒரு
வசனத்தை ஓதிக் காட்டினார். (அங்கிருந்து வெளியேறி) சற்று தூரம்தான்
சென்றிருப்பேன். அதற்குள் சோர்வினாலும், பசியினாலும் முகம் குப்புற
விழுந்து விட்டேன். (மூர்ச்சை தெளிந்த போது)என் தலைக்கருகில்
நின்றிருந்த இறைத்தூதர், அபூ ஹுரைரா! என்று அழைத்த போது, நான் இதோ!
கீழ்படியக் காத்திருக்கிறேன் அல்லாஹ்வின் தூதரே! கட்டளையிடுங்கள்!
என்று கூறினேன். என் கரத்தைப் பிடித்துத் தூக்கி நிறுத்தி, என்
நிலையைப் புரிந்து கொண்ட இறைத்தூதர், என்னைத் தன் இல்லத்திற்கு
அழைத்துச் சென்று.... நூல்: புஹாரி- 5375
சிறிய பேரித்தம் பழத்தை இரண்டாகப் பங்கிட்ட நபித் தோழி...
தன் இரு பெண்மக்களை அழைத்துக் கொண்டு யாசித்து வந்த ஒரு
பெண்மணியிடம், என்னிடமிருந்த ஒரே ஒரு பேரித்தம் பழத்தை கொடுத்தேன்.
அதனை இரண்டாகப் பிரித்து தன்னிரு மகள்களுக்கும் கொடுத்து விட்டு,
அதில் தான் ஒன்றும் அப்பெண்மணி சாப்பிடவில்லை. இதை இறைத்தூதரிடம்
எடுத்துக் கூறிய போது .... அறிவிப்பாளர்: அன்னை ஆயிஷா (ரலி), நூல்:
புஹாரி-1418.
ஆடையில்லாத அவர்களது அவலநிலையைப் பறைசாற்றும் நிகழ்வுகளில் சில.
ஒட்டுப் போட்ட ஆடையில் உயிர் நீத்த இறைத் தூதர்....
3108 عَنْ أَبِى بُرْدَةَ قَالَ أَخْرَجَتْ إِلَيْنَا عَائِشَةُ -
رضى الله عنها - كِسَاءً مُلَبَّداً وَقَالَتْ فِى هَذَا نُزِعَ
رُوحُ النَّبِىِّ - رواه البخاري واللفظ
له ومسلم وأبو داود والترمذي.
அபூ புர்தா அவர்கள் கூறுகிறார்:
ஒட்டுப் போட்ட (கம்பளி) ஆடையை எங்களிடம் எடுத்துக் காட்டி, "இதை
உடுத்தியிருந்த போதுதான் இறைத்தூதர் மரணமடைந்தார்கள்" என அன்னை
ஆயிஷா (ரலி) அவர்கள் கூறினார்கள்.
நூல்: புஹாரி-3108, முஸ்லிம், அபு தாவூத், திர்மிதி.
ஆடையில்லாத அரை மேனியில் திண்ணைத் தோழர்கள்....
442- عَنْ أَبِى هُرَيْرَةَ قَالَ رَأَيْتُ سَبْعِينَ مِنْ
أَصْحَابِ الصُّفَّةِ ، مَا مِنْهُمْ رَجُلٌ عَلَيْهِ رِدَاءٌ ،
إِمَّا إِزَارٌ وَإِمَّا كِسَاءٌ ، قَدْ رَبَطُوا فِى
أَعْنَاقِهِمْ ، فَمِنْهَا مَا يَبْلُغُ نِصْفَ السَّاقَيْنِ ،
وَمِنْهَا مَا يَبْلُغُ الْكَعْبَيْنِ ، فَيَجْمَعُهُ بِيَدِهِ ،
كَرَاهِيَةَ أَنْ تُرَى عَوْرَتُهُ . رواه البخاري
அபூ ஹுரைரா (ரலி) அவர்கள் கூறுகிறார்கள்:
"திண்ணைத் தோழர்களில் எழுபது நபர்களைப் பார்த்திருக்கிறேன்.
அவர்களில் ஒருவருக்குக் கூட மேலாடை இருந்ததில்லை. சிலருக்கு
கீழங்கி மட்டும் இருக்கும். (வேறு சிலரிடம்) தங்களது
கழுத்திலிருந்து கட்டிக் கொள்ளத் தக்க ஒரு போர்வை இருந்தது.
(அவ்வாறு கட்டிக் கொள்ளும் போது) சிலரது போர்வை கரண்டைக்கால்
வரைக்கும் இருக்கும். வேறு சிலரது போர்வை கால்களில் பாதியளவு வரை
இருக்கும். தமது மறைவிடங்களை பிறர் பார்த்து விடலாகாது என்பதற்காக
தமது கரத்தால் துணியைச் சேர்த்துப் பிடித்துக் கொண்டிருப்பார்கள்.
நூல்: புஹாரி-442
புல்லால் கஃபனிடப்பட்ட நபித் தோழர்:
3914-عن خَبَّابٌ قَالَ هَاجَرْنَا مَعَ رَسُولِ اللَّهِ صلى الله
عليه وسلم نَبْتَغِى وَجْهَ اللَّهِ ، وَوَجَبَ أَجْرُنَا عَلَى
اللَّهِ ، فَمِنَّا مَنْ مَضَى لَمْ يَأْكُلْ مِنْ أَجْرِهِ
شَيْئاً ، مِنْهُمْ مُصْعَبُ بْنُ عُمَيْرٍ ، قُتِلَ يَوْمَ أُحُدٍ
فَلَمْ نَجِدْ شَيْئاً نُكَفِّنُهُ فِيهِ ، إِلاَّ نَمِرَةً كُنَّا
إِذَا غَطَّيْنَا بِهَا رَأْسَهُ خَرَجَتْ رِجْلاَهُ ، فَإِذَا
غَطَّيْنَا رِجْلَيْهِ خَرَجَ رَأْسُهُ ، فَأَمَرَنَا رَسُولُ
اللَّهِ - أَنْ نُغْطِىَ رَأْسَهُ بِهَا
، وَنَجْعَلَ عَلَى رِجْلَيْهِ مِنْ إِذْخِرٍ ، وَمِنَّا مَنْ
أَيْنَعَتْ لَهْ ثَمَرَتُهُ فَهْوَ يَهْدِبُهَا. رواه البخاري
கப்பாப் பின் அரத் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்:
அல்லாஹ்வின் திருப்தியை விரும்பி அவனது தூதருடன் ஹிஜ்ரத் செய்தோம்.
எங்களுக்கு அதற்கான பிரதிபலனை வழங்குவது அல்லாஹ்வின் பொறுப்பாகும்.
அதன் பயன்களில் எதையுமே அனுபவிக்காமல் மரணித்து விட்டவர்களும்
எங்களில் உண்டு. அவர்களில் ஒருவர்தான் முஸ்அப் பின் உமைர் (ரலி)
அவர்கள். உஹத் போர்களத்தில் கொல்லப்பட்ட அவரைக் கஃபனிடுவதற்கு
கோடிட்ட வண்ணத் துணியைத் தவிர வேறெதுவும் எங்களிடம் இல்லை.
அத்துணியினால் அவரின் தலையை மூடிய போது கால்கள் இரண்டும்
தெரிகின்றன. கால்களை மூடினால் தலை தெரிகிறது. எனவே, அல்லாஹ்வின்
தூதர் (ஸல்) அவர்கள் அத்துணியால் அவரது தலையை மூடி விட்டு
கால்களின் மீது இத்கிர் என்ற புல்லைப் போட்டு (மறைத்து)
விடும்படியும் எங்களுக்கு உத்தரவிட்டார்கள்.... நூல்: புஹாரி-3914
பணமில்லாத பஞ்ச நிலையில் நபித் தோழர்கள்....
1416-عَنْ أَبِى مَسْعُودٍ الأَنْصَارِىِّ - رضى الله عنه - قَالَ
كَانَ رَسُولُ اللَّهِ - إِذَا
أَمَرَنَا بِالصَّدَقَةِ انْطَلَقَ أَحَدُنَا إِلَى السُّوقِ
فَتَحَامَلَ فَيُصِيبُ الْمُدَّ ، وَإِنَّ لِبَعْضِهِمُ الْيَوْمَ
لَمِائَةَ أَلْفٍ رواه البخاري
அபூ மஸ்ஊத் (ரலி) அவர்கள் கூறுகிறார்கள்:
"எங்களைத் தர்மம் செய்யும்படி நபி (ஸல்) அவர்கள் ஏவினால் எங்களில்
ஒருவர் கடைத் தெருவுக்குச் சென்று கூலி வேலை செய்து, இரு கையளவு
தானியம் சம்பாதித்து (அதைத் தர்மம் செய்து) விடுவார். ஆனால், இன்றோ
எங்களில் சிலரிடம் ஓர் இலட்சம் (தீனார்ஃ திர்ஹம்) வரை உள்ளன."
நூல்: புஹாரி-1416.
2327-عن رَافِعَ بْنَ خَدِيجٍ قَالَ كُنَّا أَكْثَرَ أَهْلِ
الْمَدِينَةِ مُزْدَرَعاً ، كُنَّا نُكْرِى الأَرْضَ
بِالنَّاحِيَةِ مِنْهَا مُسَمًّى لِسَيِّدِ الأَرْضِ ، قَالَ
فَمِمَّا يُصَابُ ذَلِكَ وَتَسْلَمُ الأَرْضُ ، وَمِمَّا يُصَابُ
الأَرْضُ وَيَسْلَمُ ذَلِكَ ، فَنُهِينَا ، وَأَمَّا الذَّهَبُ
وَالْوَرِقُ فَلَمْ يَكُنْ يَوْمَئِذٍ . رواه البخاري
"மதீனாவாசிகளில் அதிகமாக விவசாய வேலை பார்ப்பவர்களாக இருந்தோம்.
(மொத்த விளைச்சலில் இவ்வளவு பங்கு என்றில்லாமல்) 'நிலத்தின் ஒரு
பகுதி விளைச்சல் மட்டும் அதன் உரிமையாளருக்குரியது' என்ற
நிபந்தனையுடன் அதைக் குத்தகைக்கு எடுத்து வந்தோம். சில வேளைகளில்,
அந்தப் பகுதி விளைச்சல் மட்டும் (நோய்களாலும், பூச்சிகளாலும்)
பாதிக்கப்பட்டு விடும். மீதமுள்ள நிலப் பகுதி தப்பித்துக்
கொள்ளும். சில வேளைகளில் மீத முள்ள நிலப் பகுதி பாதிக்கப்பட்டு,
அந்தக் குறிப்பிட்ட பகுதி தப்பித்துக் கொள்ளும். எனவே, இவ்விதமாக
குத்தகைக்கு எடுக்க வேண்டாம் என நபி (ஸல்) அவர்களால் தடுக்கப்பட்டோம். அந்நாளில் தங்கமும், வெள்ளியும் (குத்தகைக்கு எடுக்கின்ற
அளவிற்கு எங்களிடம்) இருக்க வில்லை" என ராஃபிஉ பின் கதீஜ் (ரலி)
அவர்கள் அறிவிக்கிறார்கள். நூல்:
புகாரி 2327.
விளக்கு எரிக்குமளவுக்கு எண்ணை இருந்தால் அதை உணவுண்ண பயன்படுத்தி
இருப்போம் என்று கூறிய அவர்களின் வறுமையை பறை சாற்ற இது வரை நாம்
எடுத்துக் காட்டிய சான்றுகள் மிகவும் குறைவானதே! இன்னும் எழுத்தில்
வடிக்கமுடியாதது ஏராளம். உண்ண உணவில்லாத, உடுத்த உடையில்லாத அந்தச்
சமுதாயமக்கள் அளவிலாத நகை வாங்கி தங்களை அலங்கரித்துக்
கொண்டிருப்பார்கள் என்று எண்ணுவது அர்த்தமற்றதாகத் தோன்றவில்லையா?.
மேலும், திருமண நாளன்று மணப்பெண்ணை அலங்கரிக்க ஆபரணங்களை இரவல்
வாங்கிக் கொள்ளும் நடைமுறை அவர்களிடையே இருந்தது வந்துள்ள என்ற
வரலாற்றுச் செய்தி, மணப்பெண்ணை அலங்கரிக்கத் தேவையான நகைகள்கூட
அதிமானோரிடம் இருக்க வில்லை என்பதைத்தானே காட்டுகிறது.
எனவே, அதிகளவு நகைகள் இல்லாமல் வாழ்ந்து வந்த அச்சமுதாய மக்களை
நோக்கி நகைகளுக்கு ஜகாத் வழங்க வேண்டும் என்று சட்டம் கூற வேண்டிய
அவசியம் அப்போது ஏற்படவில்லை. ஒரு வேளை நகைகள் அவர்களிடம் குவிந்து
கிடந்தன என்று ஒரு வாதத்திற்காக ஏற்றுக் கொண்டால்கூட, தங்கம்
மற்றும் வெள்ளிக்கு ஜகாத் வழங்க வேண்டும் என்ற பொதுவான சட்டம்
கூறப்பட்டு விட்டதால், நகைகளுக்கு ஜகாத் உண்டு என்ற தனிச் சட்டம்
கூற வேண்டிய அவசியம் ஏற்படவில்லை.
எனவே, மூன்றாவது குற்றச்சாட்டும் அடிப்படையற்றதாகும் என்பது
தெளிவாகி விட்டதால், நகைக்கு ஜகாத் உண்டு என்ற கருத்து மேலும்
வலுவடைகிறது.
நான்காவது குற்றச்சாட்டின் பதில்:
நகைகளுக்கு ஜகாத் உண்டா? இல்லையா? என்ற கருத்து வேறுபாடு நபித்
தோழர்களிடையே இருந்து வந்த நிலையில், அவர்களின் சமகாலத்தில்
வாழ்ந்த அப்துல்லாஹ் பின் அம்ர் பின் ஆஸ் (ரலி) அவர்கள் அறிவித்த
ஹதீஸ் பரவலாக அறியப்படவில்லை என்பதிலிருந்தே இது பலவீனமானதாகும்
என்ற நான்காவது குற்றச்சாட்டும் தவறானதாகும். ஏனெனில், அபூபக்கர்,
உமர், உஸ்மான், அலி போன்ற இன்னும் பல முக்கிய நபித் தோழர்களும்
நகைகள் குறித்து எந்த ஒரு செய்தியும் கூறியதாக பதிவு செய்யப்படவில்லை. இந்நிலையில் ஷாம் பகுதியில் வாழ்ந்து வந்த அப்துல்லாஹ்
பின் அம்ர் பின் ஆஸ் அவர்களின் கவனத்திற்கு இந்தக் கருத்து
வேறுபாடுகள் வராமல்கூட இருந்திருக்கலாம். ஆகவே, நபித் தோழர்களிடையே
பரவலாக அறியப்படவில்லை என்ற ஒரே காரணத்தினால் அப்துல்லாஹ் பின்
அம்ர் பின் ஆஸ் அவர்கள் அறிவித்த நபி மொழி பலவீனமானது என்று
முடிவெடுப்பது தவறாகும்.
ஹதீஸ் கலை அறிஞர்களின் விமர்சனங்கள்:
இந்நபி மொழி குறித்து மேலும் தெளிவடைய ஹதீஸ்கலை அறிஞர்கள் கூறிய
விமர்சனங்களையும் சற்று அறிந்து கொள்வது நல்லது. அதற்கு முன் இந்த
ஹதீஸின் அறிவிப்பாளர் தொடரை மீண்டும் ஒரு முறை நினைவுக்கு கொண்டு
வருவோம்.
மேற்கண்டவாறு இதன் அறிவிப்பாளர்
தொடர் அமைந்துள்ளது. இத்தொடர் குறித்து, இக்கலையின் மாமேதை இமாம்
இப்னுல் ஹஜர் அவர்கள், 'வலுவான அறிவிப்பாளர் தொடரைக் கொண்டதாகும்'
என புலூகுல் மராம் என்ற தனது நூலில் குறிப்பிட்டுள்ளார். (பார்க்க:
புலூகுல் மராம் ஹதீஸ் எண்: 641)
'இதன் அறிவிப்பாளர் வரிசையில் ஒரு குறையும் இல்லை. ஏனெனில், அபூ
தாவூத் அவர்கள் அபூ காமில், ஹுமைத் பின் மஸ்அதா ஆகிய
இருவரிடமிருந்து பதிவு செய்துள்ளார். இவ்விருவரும் நம்பகமானவர்கள்.
மேலும், இமாம் முஸ்லிம் அவர்கள் இவ்விருவரின் மற்ற
அறிவிப்புகளையும்கூட தனது நூலில் பதிவு செய்துள்ளார். (மற்றும் பல
ஹதீஸ் நூற்களிலும் இடம் பெற்றுள்ளனர்). இவ்விருவரும் காலித் பின்
ஹாரிஃத் என்பவரிடம் இதைக் கேட்டுள்ளார்கள். காலித் மாபெரும்
மார்க்க அறிஞராவார். இவரின் அறிவிப்பை புஹாரி, முஸ்லிம் (மற்ற
அறிஞர்கள்) ஆகியோர் தமது நூற்களில் பதிவு செய்துள்ளனர். காலித்
பின் ஹாரிஃதின் ஆசிரியர் ஹுசைன் பின் தக்வான் என்பவரும் புஹாரி
முஸ்லிம் நூற்களில் இடம் பெற்றுள்ளர். மேலும், 'இவர் நம்பகமானவர்'
என அபூ ஹாதிம், அலி பின் அல் மதீனிய்யீ, இப்னு மயீன் ஆகியோர்
சான்றளித்துள்ளனர். அம்ர் பின் ஷுஐப் (நம்பகமானவர் என ஏற்கனவே)
அறியப்பட்டவர் ஆவார். எனவே, இத்தொடரில் அறிவிக்கப்பட்ட இந்நபி மொழி
இன்ஷா அல்லாஹ் ஆதாரமாக நிலை பெறும்' என்று இமாம் முன்திரி அவர்கள்
முக்தஸருஸ் ஸுனன் என்ற தன் நூலில் பதிவு செய்துள்ளார்.
இக்கலையில் சிறந்து விளங்கிய மற்றொரு பேரறிஞர் இப்னுல் கத்தான்
இந்நபி மொழியை தன் நூலில் பதிவு செய்து விட்டு, 'இது சரியான
அறிவிப்பாகும்' என்று குறிப்பு வரைந்துள்ளார்.
இது போன்ற பல அறிஞர்களால் ஆராய்ந்து சரியெனக் கூறப்பட்ட இந்நபி
மொழியை எவ்விதத்திலும் புறக்கணிக்க முடியாது என்பது ஊர்ஜிதமாகிறது.
இதன் அறிவிப்பாளர் தொடரில் மேலிருந்து கீழாக ஐந்தாவது இடத்திலுள்ள
'ஹுசைன் பின் தக்வான் பலவீனமானவர். மறுக்கப்படும் செய்தியை
அறிவிப்பவர்' என்று உகைலி குறை கூறியுள்ளார். ஆனால்,
"இக்குற்றச்சாட்டு ஆதாரமற்றதாகும்" என்று இமாம் தஹபி அவர்கள்
மிஜானுல் இஃதிதால் என்ற நூலில் (1/527) மறுத்துள்ளார். தஹபி
அவர்களின் இக்கருத்தை இமாம் இப்னு ஹஜர் அவர்களும் தஹ்தீபுத்
தஹ்தீப் என்ற நூலில் உறுதிப்படுத்தி உள்ளார்.
அம்ர் பின் ஷுஐப் பற்றிய இக்கலையின் சில அறிஞர்களின் தவறான
விமர்சனம்:
இதன் அறிவிப்பாளர்களில் ஒருவரான அம்ர் பின் ஷுஐப் அவர்கள் குறித்து
இப்னு ஹிப்பான், அபூ தாவூத் போன்ற இக்கலை அறிஞர்களில் சிலர் குறை
கூறியுள்ளனர். இது புரிதலின் அடிப்படையில் இவர்களுக்கு நேர்ந்து
விட்ட தவறாகும். ஏனெனில், அம்ர் என்பவர் தன் தந்தையான ஷுஐப்
என்பவரிடமிருந்து ஹதீஸ்களைக் கேட்டுள்ளார். ஷுஐபின் தந்தை முஹம்மது
என்பவர் வாலிபப் பருவத்திலேயே மரணித்து விட்டதால், ஷுஐப் தன் தந்தை
வழிப் பாட்டனாரான நபித்தோழர் அப்துல்லாஹ் பின் அம்ர் பின் ஆஸ்
அவர்களிடம் வளர்ந்து வந்தார். அப்போது தன் பாட்டனாரிடம் பல
ஹதீஸ்களைக் கேட்டுள்ளார். மேலும் அப்துல்லாஹ் பின் அம்ர் அவர்கள்
இறைத்தூதரிடம் நேரிடையாகக் கேட்டு எழுதி வைத்திருந்த நூலும் ஷுஐப்
வசம் இருந்தது.
அதன் பின் இந்த நூல் ஷுஐபின் மகன் அம்ர் அவர்களின் கைக்கு வந்தது.
சில ஹதீஸ்களை மட்டும் தன் தந்தையிடம் கேட்டுள்ள இந்த அம்ர்
என்பவர், தன்னிடமிருந்த அப்துல்லாஹ் பின் அம்ர் பின் ஆஸ் அவர்களின்
நூலிருந்து அதிகமான ஹதீஸ்களை அறிவித்தார். மேலும், அம்ர் அவர்களின்
பெயரால் இப்னு லுஹைஆ, முஃதன்னப்னுஸ் ஸபாஹ் போன்ற பலவீனமான
அறிவிப்பாளர்கள் மறுக்கத் தக்க சில ஹதீஸ்களையும் அறிவித்துள்ளனர்
என்பதாலும், அம்ர் அறிவிக்கும் ஹதீஸ்களை சிலர் ஏற்க மறுத்துள்ளனர்.
ஆனால், உண்மையில் அம்ர் பின் ஷுஐப் நம்பகமானவர் ஆவார். "அவர்
அறிவிக்கும் ஹதீஸ்களை இக்கலை அறிஞர்களான அஹ்மத் பின் ஹன்பல், அலி
பின் அல் மதீனிய்யி, இஸ்ஹாக் பின் ராஹவைஹி, அபூ உபைத் போன்றவர்கள்
ஆதாரமாக கருதுகிறார்கள். அவர்களுக்கு பின் வந்த முஸ்லிம்களில்
யாரும் அவர் அறிவிக்கும் ஹதீஸை விட்டு விடவில்லை" என தாரிக் அல்
கபீர் என்ற தனது நூலில்(6/157)இமாம்
புஹாரி கூறியுள்ளார்.
"அம்ர் பின் ஷுஐபிடமிருந்து நம்பகமானவர் அறிவித்தால் அதனை ஆதாரமாக
ஏற்கலாம். இப்னு லுஹைஆ, முஃதன்னா போன்ற பலவீனமானவர்கள் அறிவித்தால்
அதை ஆதாரமாக எற்கக் கூடாது" என அபூ ஜுர்ஆ, யஹ்யா பின் மயீன்,
இஸ்ஹாக் பின் ராஹவைஹீ ஆகியோர் கூறியுள்ளனர்.
அம்ர் பின் "ஷுஐப் அறிவிக்கும் சில ஹதீஸ்களில் உள்ள குறை அவரின்
மூலம் ஏற்பட்டதல்ல. மாறாக அவரிடம் கேட்டு அறிவிக்கும் பலவீனமான
அறிவிப்பாளர்கள் மூலம்தான் ஏற்பட்டது" என அபூ ஜுர்ஆ தெளிவு
படுத்தியுள்ளார்.
"குறைஷி குல அறிவிப்பாளர்களில் அம்ர் பின் ஷுஐபை விட நிறைவான
ஒருவரை நான் பார்த்ததில்லை" என அவ்ஜாயீ குறிப்பிடுகிறார்கள்.
(பார்க்க: மிஜானுல் இஃதிதால் 3/257,
தஹ்தீபுத் தஹ்தீப் 5/43).
இந்த விமர்சனங்களின் அடிப்படையில் நகைக்கு ஜகாத் உண்டு என்ற ஹதீஸை
அம்ர் பின் ஷுஐபிடமிருந்து நம்பகமானவரான ஹுசைன் பின் ஃதக்கவான்
என்பவர் அறிவித்துள்ளதால், அதனை ஆதாரமாக ஏற்க எவ்விவிதமான தடையும்
இல்லை என்பது தெளிவாகியுள்ளது.
அம்ர் பின் ஷுஐப் பற்றிய விமர்சனங்களில் உள்ள இந்நுணுக்கத்தையும்,
ஹுசைன் பின் தக்வான் மூலம் அறிவிக்கப்பட்டிருப்பதையும் புரிந்து
கொள்ளாத மாற்றுக் கருத்துடையோர் பலவீனமானவர்களான இப்னு லஹைஆ,
முஃதன்னா, ஹஜ்ஜாஜ் ஆகியோர் அறிவிப்பதை மட்டும் பார்த்து விட்டு இது
பலவீனமான ஹதீஸ் என்று தவறான முடிவுக்கு வந்துவிட்டனர்.
வலுவூட்டும் நபி மொழிகள்:
நகைகளுக்கு ஜகாத் உண்டு என்ற மேற்கண்ட நபி மொழியை வலுப்படுத்தும்
வகையில் வேறு சில நபி மொழிகளும் உண்டு. இந்நபி மொழிகளைத் தனியான
ஆதாரமாகக் கருத இயலாது என்றாலும், இக்கருத்தில் அமைந்த மேற்கண்ட
நபி மொழிக்கு வலுவூட்டக்கூடியதாக எடுத்துக் கொள்ளலாம் என்பதை இமாம்
பைஹகி போன்ற அறிஞர்கள் கூறியுள்ளார்கள். எனவே, அந்நபி மொழிகளையும்
அறிந்து கொள்வோம்.
1)
حدثنا محمد بن عيسى ثنا عتاب يعني بن بشير عن ثابت بن عجلان عن
عطاء عن أم سلمة قالت كنت ألبس أوضاحا من ذهب فقلت يا رسول الله
أكنز هو فقال ما بلغ أن تؤدى زكاته فزكي فليس بكنز رواه أبو داود,
الحاكم, والدار قطني والبيهقي من طريق محمد بن المهاجرعن ثابت بن
عجلان.
உம்மு சலமா (ரலி) அவர்கள்
கூறுகிறார்கள்: "நான் தங்கக் கொலுசு அணிந்திருந்தேன். அல்லாஹ்வின்
தூதரே! இது (தடை செய்யப்பட்ட) கருவூலமாக ஆகுமா?" என்று கேட்டேன்.
அதற்கு நபி (ஸல்), "ஜகாத் வழங்க வேண்டிய அளவினை அடைந்து, ஜகாத்
வழங்கப்பட்டு விட்டால், அது (தடை செய்யப்பட்ட) கருவூலமாக ஆகாது"
என்று கூறினார்கள். நூல்: அபூ தாவூத், ஹாகிம், தாரகுத்ணி, பைஹகி.
இந்நபி மொழியின் அறிவிப்பாளர் வரிசை ஃதாபித் பின் இஜ்லான்
என்பவரிடமிருந்து இதாப் பின் பஷீர் அறிவிப்பதாக அபூ தாவூதில் இடம்
பெற்றுள்ளது. இவர்கள் இருவரும் குறை கூறப்பட்டுள்ளார்கள்.
ஹாகிம், தாரகுத்ணி, பைஹகி ஆகிய நூற்களில், ஃதாபித்
என்பவரிடமிருந்து முஹம்மது பின் முஹாஜிர் அறிவிப்பதாக பதிவு
செய்யப்பட்டுள்ளது. இவரின் மீதும் குற்றம் கூறப்பட்டுள்ளது. எனவே,
இவர்கள் பற்றிய ஹதீஸ்கலை வல்லுனர்களின் விமர்சனங்களை விரிவாக
அறிந்து கொள்வது அவசியமாகும்.
இதாப் பின் பஷீர் பற்றிய விமர்சனம்:
"இதாப் பின் பஷீர் என்பவர் அறிவித்ததை இமாம் புஹாரி அவர்கள் 5718,
7347 வது ஹதீஸாகப் பதிவு செய்துள்ளார்;. எனினும், இவர் குறித்து
பலரும் குறை கூறியுள்ளனர்" என இமாம் முன்திரி கூறியுள்ளார். அஹ்மத்
பின் ஹன்பல், இப்னு அதிய் ஆகியோர் 'பரவாயில்லாதவர்' என்ற நிலையில்
உள்ளவர் எனவும், இப்னு மயீன் 'நம்பகமானவர்' என்று ஒரு முறையும்,
'அவரது அறிவிப்பில் குழப்பம் உள்ளது' என்று மற்றொரு முறையும்
கூறியுள்ளார். "ஹதீஸ் கலை அறிஞர்கள் இவரை பலவீனப்படுத்தியுள்ளனர்"
என அலி பின் அல் மதீனிய்யீ கூறியுள்ளார். இவ்வாறு இரு வேறு
கருத்துக்கள் கூறப்பட்ட இதாப் பின் பஷீர் அறிவிப்பதை தனியான
சான்றாக கருத இயலாது. எனினும், தாரகுத்ணி, பைஹகி, ஹாகிம் ஆகிய
நூற்களின் அறிவிப்பாளர் வரிசையில் ஃதாபித் என்பவரிடமிருந்து
முஹம்மது பின் அல் முஹாஜிர் அறிவிப்பதாக பதிவாகியுள்ளது. இதாப்
பின் பஷீர் அறிவித்ததின் குறையை இது நிவர்த்தி செய்யும் விதத்தில்
உள்ளது.
"முஹம்மது பின் முஹாஜிர் இட்டுக்கட்டுபவர்" என்று இப்னு ஹிப்பான்
கூறியுள்ளார். இப்னு ஹிப்பான் கூறிய 'முஹம்மது பின் முஹாஜிர்'
என்பவர் ஹனீஃபின் சகோதரர் என்று அறியப்பட்ட ஒருவர் ஆவர். அதை
தவறாகப் புரிந்து கொண்டு, ஃதாபித் பின் அஜ்லான் என்பவரின் மாணவரான
முஹம்மது பின் முஹாஜிர்தான் அவர் என இப்னுல் ஜவ்ஜி கூறிவிட்டார்.
இது போன்று பலரையும் இவ்வாறு இவர் குறை கூறியுள்ளதால் அதனைப்
பெரிதாக எடுத்துக் கொள்ளக் கூடாது. இப்னுல் ஜவ்ஜி கூறுவதை ஏற்க
முடியாது என தன்கீஹ் என்ற நூலிலும் பதிவு செய்யப்பட்டுள்ளது என்பதை
நஸபுர் ராயா என்ற நூல் ஆசிரியரும் உறுதி செய்துள்ளார்.
ஃதாபித் பின் அஜ்லான் பற்றிய விமர்சனம்:
இவரை இப்னு அதிய், உகைலி போன்ற சிலர் குறை கூறியுள்ளனர். 'இவர்
குறித்து ஒரு முடிவுக்கு வர இயலவில்லை' என அஹ்மத் பின் ஹன்பல்
விமர்சித்துள்ளார். எனவே, இவ்வாறு குறை கூறப்பட்ட இவர் மட்டும்
இந்த ஹதீஸை அறிவிப்பதால் இது ஏற்கத்தக்கதல்ல என்று சிலர்
கருதுகின்றனர்.
ஆனால், இமாம் புஹாரி அவர்கள் இவர் அறிவித்ததை 5532வது ஹதீஸாகப்
பதிவு செய்துள்ளார். 'நம்பகமானவர்' என இப்னு மயீன்
சான்றளித்துள்ளார். 'பரவாயில்லாதவர்' என நஸாயி மற்றும் துஹைம்
ஆகியோரும், 'பரவாயில்லாதவர், ஹதீஸ் அறிவிக்கத் தகுதியானவர்' என அபூ
ஹாதிம் என்பவரும் கூறியுள்ளனர். 'இவர் அறிவிக்கும் ஹதீஸ் வேறு
நம்பகமானவரின் ஹதீஸிற்கு முரண்படாமலிருந்தால் அதை சான்றாக
ஏற்கலாம்' என இமாம் இப்னு ஹஜர் தஹ்தீபுத் தஹ்தீப் (1/493) என்ற
நூலில் குறிப்பிட்டுள்ளார். எனவே, உம்மு சலமாவின் மூலம் இவர்
அறிவிக்கும் இந்நபி மொழி, வேறு எந்த ஹதீஸிற்கும் முரண்பட வில்லை
என்பது மட்டுமல்ல, அம்ர் பின் ஷுஐப் அறிவிக்கும் ஹதீஸை வலுவூட்டக்
கூடியதாகவும் இருக்கிறது என்ற அடிப்படையில் இதனை சான்றாக ஏற்கலாம்
என்பதே இக்கலை அறிஞர்கள் பெரும்பாலோர் கூறுகின்றனர்.
வலுவூட்டும் மற்றொரு நபி மொழி:
حدثنا محمد بن إدريس الرازي ثنا عمرو بن الربيع بن طارق ثنا يحيى
بن أيوب عن عبيد الله بن أبي جعفر أن محمد بن عمرو بن عطاء أخبره
عن عبد الله بن شداد بن الهاد أنه قال دخلنا على عائشة زوج النبي
- فقالت دخل علي رسول الله
- فرأى في يدي فتخات من ورق فقال ما هذا
يا عائشة فقلت صنعتهن أتزين لك يا رسول الله قال أتؤدين زكاتهن قلت
لا أو ما شاء الله قال هو حسبك من النار سنن أبي داود, والحاكم,
والبيهقي, الدارقطني
அப்துல்லாஹ் பின் ஷத்தாத் கூறுகிறார்:
இறைத்தூதரின் மனைவி அன்னை ஆயிஷா (ரலி) அவர்களிடம் சென்றிருந்தோம்.
அப்போது, "என்னிடத்தில் வந்த இறைத்தூதர் என் கரத்தில் நான்
அணிந்திருந்த பெரிய வெள்ளி நகையை நோக்கி "இது என்ன?" என்று
கேட்டார்கள். "உங்களுக்காக என்னை அலங்கரித்துக் கொள்ள நான் செய்து
கொண்ட நகை" என்று நான் கூறியதும், "அதற்கு ஜகாத் வழங்கிவிட்டாயா?"
எனத் திருப்பிக் கேட்டார்கள். "இல்லை" என்று கூறினேன். "உன்னை
நரகத்தில் வீழ்த்த இதுவே போதுமானதாகும்" என்று கூறினார்கள்.
நூல்: அபூ தாவூத், தாரகுத்ணி,
ஹாகிம்.
இந்நபி மொழியின் அறிவிப்பாளர் வரிசையில் யஹ்யா பின் அய்யூப்,
முஹம்மது பின் அம்ர் பின் அதா ஆகியோர் இடம் பெற்றுள்ளனர். இவர்கள்
இருவரும் இக்கலை அறிஞர்களால் குறை
காணப்பட்டவர்கள்.
யஹ்யா பின் அய்யூப் பற்றிய ஹதீஸ் கலை அறிஞர்களின் விமர்சனம்:
யஹ்யா பின் அய்யூப் அறிவிக்கும் செய்தியில் குழப்பம் உள்ளது.
(தாரகுத்ணி)
மனனசக்தி குன்றியவர். (அறிவிப்பதில்) அதிகம் தவறிழைத்துள்ளார்.
(அஹ்மத் பின் ஹன்பல்)
மறுக்கப்படும் ஹதீஸை அறிவித்தவர். (இப்னு சஃத்)
இவர் அறிவிக்கும் ஹதீஸ் எழுதப்படும். ஆனால், ஆதாரமாக ஏற்கக்
கூடாது. (அபூ ஹாதிம்.)
முஹம்மது பின் அம்ர் பின்
அதா குறித்த விமர்சனம்:
இவர் நிலை அறியப்படாதவர். (தாரகுத்ணி, அப்துல் ஹக்.)
இவ்வாறு குறைகூறப்பட்ட இரு அறிவிப்பாளர்கள் இந்நபி மொழியில் இடம்
பெற்றுள்ளதால் இது பலவீனமான ஹதீஸாகும். மேலும், ஒரு ஹதீஸை அறிவித்த
நபித்தோழர், அதற்கு மாற்றமான கருத்தைக் கூறினால், மாற்றிக்
கூறியதற்கே முன்னுரிமை கொடுக்க வேண்டும். ஏனெனில், நபித் தோழர்கள்
குறிப்பாக அன்னை ஆயிஷா (ரலி) போன்றோர்கள் இறைத்தூதர் கூறியது
மாற்றப்பட்டு விட்டது என்று உறுதியாகத் தெரிந்தாலே தவிர, அதற்கு
மாற்றமாக ஒரு போதும் நடக்கமாட்டார்கள். இவ்விதியின் அடிப்படையில்
இந்நபி மொழியை அறிவித்த அன்னை ஆயிஷா(ரலி) அவர்கள் தன்னிடம்
வளர்ந்து வந்த அனாதைகளின் நகைகளுக்கு ஜகாத் வழங்க வில்லை என்ற
ஆதாரப்பூர்வமான செய்தி, அவர்கள் அறிவித்த ஹதீஸின் சட்டம்
மாற்றப்பட்டுள்ளது என்பதையே உறுதி படுத்துகிறது.
மேற்கண்ட விமர்சனத்திற்கான தெளிவுரை:
யஹ்யா பின் அய்யூப் நம்பகமானவர். (இப்னு மயீன்)
ஹதீஸ் அறிவிக்கத் தகுதியானவர். (இப்னு மயீன், அபூ தாவூத்)
நம்பகமானவர், நினைவாற்றல் உள்ளவர். (யஃகூப் பின் சுப்யான்)
நம்பகமானவர். (இப்ராஹீம் அல் ஹர்பி, புஹாரி கூறியதாக திர்மிதி)
யஹ்யா பின் அய்யூப் குறித்து சிலர் கூறிய குறை அவரது நினைவாற்றலை
அடிப்படையாகக் கொண்டதாகும். ஆனால், புஹாரி, திர்மிதி போன்ற
பிரபலமான அறிஞர்கள் 'நம்பகமானவர்' என்று சான்றளித்துள்ளனர்.
யஹ்யாவின் மூலம் அறிவித்த சுமார் 11 ஹதீஸ்களை இமாம் புஹாரி
அவர்களும், சுமார் 9 ஹதீஸ்களை இமாம் முஸ்லிம்; அவர்களும் தங்களது
நூற்களில் பதிவு செய்துள்ளனர். எனவே, பல அறிஞர்களும் நம்பகமானவர்
என ஏற்றுக் கொண்ட யஹ்யா பின் அய்யூபை முற்றிலும் புறக்கணிக்க
முடியாது.
"முஹம்மது பின் அம்ர் பின் அதா என்பவரை அவரது தந்தையோடு இணைத்துக்
கூறாமல், பாட்டனாருடன் சேர்த்து சிலர் அறிவித்து விட்டதால் இவரைப்
பற்றி தாரகுத்ணி அவர்களால் அறிந்து கொள்ள முடியாமல் போய்விட்டது.
ஆனால், இந்த முஹம்மது பின் அம்ர் பின் அதா நிலை அறியப்பட்டவர், மிக
நம்பகமானவர்" என இமாம் பைஹகி அவர்கள் மஃரிஃபத்துஸ் ஸுனன் என்ற
நூலில் தெளிவு படுத்தியுள்ளார்.
"புஹாரி, முஸ்லிம், நஸாயி, அபூ தாவூத், திர்மிதி ஆகியோர் உட்பட
பலரும் முஹம்மது பின் அம்ர் பின் அதா அறிவிக்கும் செய்திகளை
ஆதாரமாகக் கருதி தங்களது நூற்களில் பதிவு செய்துள்ளனர். எனவே,
தாரகுத்ணி கூறியதை பொருட்படுத்தக் கூடாது" என்று முன்திரி அவர்கள்
கூறியுள்ளார்.(தர்ஃகீப் தர்ஹீப் 1/296)எனவே, தாரகுத்ணி கூறியதின்
அடிப்படையில் முஹம்மது பின் அம்ர் பின் அதா அவர்களைப் புறக்கணிக்க
முடியாது.
இந்நபி மொழியை அறிவித்த அன்னை ஆயிஷா அவர்கள் இதற்கு மாற்றமாக
செயல்பட்டு வந்துள்ளதால் இந்நபி மொழி மாற்றப்பட்டு விட்டது என்று
கூறுவதை ஏற்க முடியாது. ஏனெனில், நகைக்கு ஜகாத் இல்லை என்று அன்னை
ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாக நேரிடையான ஒரு சான்றும் இல்லை.
மாறாக, ஜகாத் வழங்க வேண்டும் என்று கூறியதாகத்தான் சரியான
அறிவிப்பு உள்ளது. தன் பொறுப்பில் வளர்ந்த அனாதைகளின் நகைகளுக்கு
ஜகாத் வழங்க வில்லை என்ற அறிவிப்பு ஆதாரப்பூர்வமானது என்றாலும்கூட,
அன்னை ஆயிஷா (ரலி) அவர்களின் செயல், ஏற்கனவே அறிவித்ததற்கு
மாற்றமாக இருப்பதால் ஏற்கனவே நாம் கூறியபடி அவரது சொல்லுக்குத்தான்
முன்னுரிமை கொடுக்க வேண்டும். மேலும், அவர் அறிவித்த நபி மொழி,
மற்றவர்கள் அறிவித்த நபி மொழியோடு ஒத்திருப்பதால் இதனைத்தான்
ஆதாரமாகக் கருத வேண்டுமே தவிர, ஜகாத் கொடுக்காமலிருந்த அவர்களது
செயலை ஆதாரமாகக் கருத இயலாது.
மேலும், அன்னை ஆயிஷா(ரலி) அவர்கள் அறிவித்து இந்நபி மொழி, முஸ்லிம்
அவர்களின் நிபந்தனைப் படி உள்ளது என இமாம் இப்னு தகீகுல் ஈத்
கூறியதை அத்திராயா என்ற தனது நூலில் இப்னு ஹஜர்
உறுதிபடுத்தியுள்ளார். புஹாரி மற்றும் முஸ்லிம் ஆகியோரின்
நிபந்தனைப்படி உள்ளது என இமாம் ஹாகிம் அவர்களும் கூறியுள்ளார்.
எனவே, நகைக்கு ஜகாத் கொடுக்க வேண்டும் என்பதற்கு இதனைத் தனியான
சான்றாகக் கருத முடியாது என்று வைத்துக் கொண்டாலும், அப்துல்லாஹ்
பின் அம்ர் பின் ஆஸ் அவர்களின் மூலம் அம்ர் பின் ஷுஐப் அவர்கள்
அறிவித்த நபிமொழியை வலுவூட்டக் கூடியதாக ஏற்றுக் கொள்ளலாம்.
இக்கருத்தை இமாம் பைஹகி அவர்களும் மஃரிஃபத்துஸ் ஸுனன் என்ற நூலில்
குறிப்பிட்டுள்ளார்.
இதுவரை எடுத்துக் காட்டிய நபிமொழிச் சான்றுகளின் மூலமும் நகைக்கு
ஜகாத் உண்டு என்பது உறுதியாகி விட்;டது.இந்நிலையில் நகைகளுக்கு
மட்டும் ஜகாத் இல்லை என்று கூறினால் அதற்கு குர்ஆன் மற்றும் நபி
மொழிகளிலிருந்து சரியான சான்றுகள் தர வேண்டும். அவ்வாறு சான்றுகள்
தராத வரை வலுவான ஆதாரத்தின் அடிப்படையில் உறுதி செய்யப்பட்ட
நகைகளுக்கு ஜகாத் வழங்க வேண்டும் என்ற நம் கருத்தே நிலை
பெற்றிருக்கும் என்பதில் எவ்விதமான சந்தேகமும் இல்லை.
சில குழப்பங்களும் அதற்கான தெளிவும்:
நகைகளுக்கு ஜகாத் வழங்க வேண்டும் என்று சட்டம் கூறினால், கணவனின்
பராமரிப்பில் வேறு எந்தப் பொருளாதாரமும் இல்லாத நிலையில் உள்ள
சுமார் 100 பவுன் நகைகள் மட்டும் வைத்திருக்கும் ஒரு பெண் தன்
நகைகளுக்கான ஜகாத்தை எவ்வாறு நிறைவேற்றுவாள்? இந்நிலையில் வருடா
வருடம் ஜகாத்தை கொடுத்துக் கொண்டே வந்தால் விரைவிலேயே அவள்
பிச்சைக்காரியாக மாறிவிடுவாள். ஒருவனின் சக்திக்கு மீறிய சட்டங்களை
இஸ்லாம் அறவே கூறாது என்பது இங்கே குறிப்பிடத் தக்கதாகும்
என்றெல்லாம் கூறி, அவசியமற்ற சந்தேகத்தை எழுப்பி நகைகளுக்கு ஜகாத்
இல்லை என்று கூற சிலர் முயற்சிக்கின்றனர்.
அல்லாஹ்வும், அவனது தூதரும் ஒரு சட்டத்தைக் கூறிவிட்டால் அதனை
எவ்வாறு செயல்படுத்த முடியும்? அது சாத்தியப்படுமா? என்று
கருத்துக் கூறவோ, விமர்சனம் செய்யவோ, அச்சட்டதை மாற்றி அமைக்கவோ
உலகில் உள்ள எந்த ஒரு முஸ்லிமான ஆணுக்கும் முஸ்லிமான பெண்ணுக்கும்
எவ்விதமான உரிமையும், அதிகாரமும் இல்லை. தவிர மனிதனால் செயல்படுத்த
முடியாத எந்த ஒரு சட்டமும் குர்ஆன் மற்றும் நபி மொழிகளில்
கூறப்படவில்லை என்பதை நாம் புரிந்து கொண்டாலே, மேற்கண்ட கேள்வி
அர்த்தமற்றதாகும் என்பதை எளிதாக அறிந்து கொள்ளலாம்.
நகைகளுக்கு ஜகாத் உண்டு என்பதை குர்ஆனும், நபி மொழிகளும்
உறுதிப்படுத்தியுள்ள நிலையில் அதனை ஒரு பெண் எவ்வாறு கொடுப்பாள்
என்று விதண்டாவாதம் பேசுவது அர்த்தமற்ற அல்லாஹ்விற்கு ஆத்திரத்தை
வரவழைக்கும் செயலாகும். அதனை நாம் முதலில் தவிர்ந்து கொள்ள
வேண்டும்.
நம்மை சுற்றியிருக்கும் மாற்றுக் கலாச்சாரத்தின் தாக்கம்தான்
இச்சந்தேகம் ஏற்பட அடிப்படைக் காரணம். அதாவது, பெண்களுக்கு
செல்வத்தை ஈட்டிக்கொள்ள இஸ்லாத்தில் அனுமதியில்லை என்பது போன்ற ஒரு
மாயத் தோற்றம் நம்மிடையே உருவாக்;கப்பட்டு விட்டது. ஆனால், ஆண்கள்
எவ்வாறெல்லாம் செல்வத்தை ஈட்டிக் கொள்ளவும், சேமித்துக் கொள்ளவும்,
தர்மம் செய்யவும் அதிகாரம் பெற்றுள்ளனரோ அதற்கு ஈடான உரிமை
பெண்களுக்கும் உண்டு. இந்த உண்மையை நாம் மறந்து விட்டதால், பெண்கள்
பரம ஏழைகளாகவே நம் சமுதாயத்தில் வாழ்ந்து வருகின்றனர். வழக்கமான
தர்மங்கள் செய்துகூட நன்மைகள் அடைந்து கொள்ள முடியாத நிலையில்
அடுக்களையில் முடங்கிய முடங்களாகவே வாழ்ந்து வருகின்றனர். நபித்
தோழியர்களின் வாழ்க்கையை இவர்கள் மறந்து போனது ஏனோ? நபித்
தோழியர்களில் சிலர் தன் குடும்பத்தினருக்கும் மற்ற ஏழைகளுக்கும்
செலவு செய்கின்ற அளவிற்கும் செல்வம் உடையவர்களாக இருந்துள்ளனர்
என்பதை புஹாரியின் 1466 வது ஹதீஸில் பதிவு செய்யப்பட்டுள்ளது.
எனவே, இஸ்லாம் அனுமதிக்கும் வழிகளில் செல்வம் ஈட்டிக் கொள்ளும்
அதிகாரம் பெற்ற ஒரு பெண் தான் அணிந்துள்ள நகைகளுக்கு ஜகாத்
வழங்குவதற்குரிய திறன் பெற்றவள்தான் என்பதில் எந்தச் சந்தேகமும்
இல்லை. பெண் எவ்வாறு வழங்குவாள் என்றெல்லாம் கேள்வி கேட்டு, ஒரு
சட்டத்தை புறக்கணிப்பதை ஏற்க முடியாது.
இறுதியில் சில வரிகள்:
ஆதாரத்தின் அடிப்படையிலும், பேணுதலின் அடிப்படையிலும் நகைகளுக்கு
ஜகாத் வழங்குவதே சிறந்ததாகும் என கதாபி, முஹம்மது அப்துர் ரஹ்மான்
முபாரக் பூரி போன்ற பேரறிஞர்கள் கூறியுள்ளனர். நகைகளுக்கு ஜகாத்
இல்லை என்று வாதிப்போரும் கூட பேணுதலின் அடிப்படையில் ஜகாத்
வழங்குவதே சிறந்தது என்று கூறியுள்ளனர். ஈராக்கில் இருந்த போது
ஜகாத் இல்லை என்று கூறி வந்த இமாம் ஷாஃபி அவர்கள், எகிப்து வந்த
போது அவ்வாறு கூறுவதை நிறுத்திக் கொண்டதுகூட இதன்
அடிப்படையில்தான்.
எனவே, இஸ்லாமியக் கொள்கைச் சகோதரிகளே! நீங்கள் அணிந்து வரும்
ஆபரணங்களுக்கு உரிய ஜகாத்தை வழங்கி விடுங்கள்! நகையைத் தவிர வேறு
எந்தச் செல்வமும் என்னிடம் இல்லை என்றோ, என் நகைகளுக்கு ஜகாத்
வழங்குவது என் கணவரின் பொறுப்பு என எண்ணிவிட்டேன் என்பது போன்ற
எந்த விதமான காரணமும் இறைவனிடத்தில் எடுபடாது. ஜகாத் வழங்காத
நகைகளை நெருப்பில் பழுக்கக் காய்ச்சப்பட்ட நெருப்புப் பாளங்களாக
மாற்றப்பட்டு சூடுபோடப்படும் என்று இறைத்தூதர்
எச்சரித்துள்ளார்கள். ஜகாத் வழங்காத செல்வங்கள் பாம்புகளாக மாறி,
நான்தான் நீ சேமித்து வைத்திருந்த செல்வம் என்று கூறியபடியே நம்மை
நோவினை செய்து கொண்டிருக்கும். அந்நாளில் நமக்கு உதவி செய்ய யாரும்
முன் வரமாட்டார்கள். இவற்றையெல்லாம் மனதிற் கொண்டு, உங்களின்
நகைகளுக்கான ஜகாத்தை மனமுவந்து கொடுத்து வாருங்கள்! இறைவனின்
தண்டனையிலிருந்து தவிர்ந்து கொள்ளுங்கள்! அல்லாஹ் நம் அனைவரையும்
நரக வேதனையிலிருந்து காப்பாற்றி, உயர் சுவனத்தில் பிரவேசிக்கச்
செய்வானாக!
- மௌலவி, ஹாஃபிழ், நூர் முஹம்மது
ஃபாஜில் பாகவி
தபால் பெட்டி எண்: 204, தாயிஃப், சவுதி அரேபியா
செல்ஃபோன்:
050-9746919
மின்னஞ்சல்:
fazilbaqavi@gmail.com
நன்றி:
http://fazilbaqavi.blogspot.com
|