Index |Subscribe mailing list | Help | E-mail us

சமுதாய உளவியல் பாதிப்புகள்

திருமதி அப்துல் காதர் - அல் மசீலா, தமாம்

 

(சுவனப்பாதை நடத்திய மாபெரும் எழுத்துலகப் புரட்சிப் போட்டியில் ஏழாவது ஆறுதல் பரிசு பெற்ற கட்டுரை)

 

உளவியல் பாதிப்புகளை இருவகைப்படுத்தலாம் ஆரோக்கியமான உளவியல் பாதிப்புகள், ஆரோக்கியமற்ற உளவியல் பாதிப்புகள் இவற்றில் இரண்டாம் வகை உளவியல் பாதிப்புகளான ஆரோக்கியமற்ற பாதிப்புகளை மேலும் இரு வகைப்படுத்த வேண்டும். இவற்றில் முதலாம் வகை பாதிப்புகள் மற்ற சமூக மக்களால் உருவாக்கப்படும் இஸ்லாமிய சமுதாய உளவியல் பாதிப்புகள், இரண்டாம் வகை நமக்குள்ளேயே உருவாகியிருக்கும் உளவியல் பாதிப்புகள்.

இந்த இரண்டாம் வகை பாதிப்புகள் குறித்துதான் இங்கு அதிகமாக அழுத்தம் கொடுத்துச் சொல்ல கடமைப்பட்டுள்ளேன். ஏனெனில், நமக்குள் இருக்கும் இந்த ஆரோக்கியமற்ற உளவியல் பாதிப்புக்களை களைந்தால்தான் மற்ற சமூக மக்களால் நமக்கேற்படும் உளவியல் பாதிப்புகளை எதிர்கொண்டு வென்றிட முடியும். வெற்றி கொள்ளும் அந்த ஆரோக்கியமான பாதிப்புகள் நமக்கு எப்படி ஏற்படும்? அவ்வகை பாதிப்புகளை நாம் எங்கிருந்துதான் பெற முடியும்?

நிச்சயமாக குர்ஆன், ஹதீஸிலிருந்துதான் பெறமுடியும். குர்ஆன், ஹதீஸ்படி நம் வாழ்க்கை முழுமையாக அமைந்தால் மட்டுமே நமது தரம் உயரும். ஆரோக்கியமான அந்த உளவியல் பாதிப்புகளால் உலகையே வென்றிட முடியும்.     நபி(ஸல்) அவர்களை முழுமையாகப் பின்பற்றிய அந்த ஸஹாபா பெருமக்கள் வென்று காட்டினார்கள்.  1400 வருடங்களுக்கு முன்னர் நபி(ஸல்) அவர்கள் முதன்முதலில் இஸ்லாத்தை எத்திவைத்து அந்த சமுதாயத்திலும் உளவியல் பாதிப்புகள் ஏற்பட்டன. அது சமயம் உண்மையை உணர்ந்து இயற்கை மார்க்கத்துடன் இணைந்தவர்களுக்கு அது இஸ்லாம் ஆரோக்கியமான உளவியல் பாதிப்பை ஏற்படுத்தியது.

உண்மையெனத் தெரிந்தும் இயற்கை மார்க்கமான இஸ்லாத்திற்கு முரணாக நிராகரிப்பாளர்கள் செயல்பட்டார்கள். ஆனால், அவர்களின் உளவியல் பாதிப்புகள் அவர்களின் செயல்பாடுகள் போன்று அவர்களுக்கே முரணாக மாறிப்போனது. தனக்கே கேடு ஏற்படுத்தக்கூடியதான கோபம் கொண்டு மனநோயாளிகள் போன்று செயல்பட்டனர். இதனால் ஆரோக்கியமான செயல்பாடுகளுடைய இஸ்லாமிய சமுதாயத்தை அழிக்க தீரா பகை கொண்டு போர் தொடுத்தனர். உளவியல் ரீதியாகப் பார்த்தால் இவர்களுக்குத்தான் வெற்றி கிட்டியிருக்க வேண்டும். காரணம் அழிக்க வேண்டும் என்ற ஆவேச சிந்தனை, அழித்தார்களா? அவர்களேதான் அழிந்துப் போனார்கள். ஏனெனில் (Psychological) உளவியல் பாதிப்புகளில் ஆரோக்கியமான பாதிப்புகளே என்றும் வெல்லும் என்பதை வல்லநாயன் செயல்படுத்திக் காட்டினான். வென்ற அந்த இஸ்லாமிய சமுதாயத்தின் ஆரோக்கியமான சிந்தனைத் தெளிவு, ஓர் இறையை ஏற்று அவனின் நபிக்கு முற்றிலும் கீழ்படிந்து இவற்றில் தன் சுய விருப்பு, வெறுப்புகள் துளியும் அற்று சகோதரத்துவத்தின் கீழ் அனைவரும் ஒன்றுகூடி வாழ்ந்த அவர்களின் செயல்பாடு. அவர்களின் அணுகுமுறை மற்ற சமுதாய மக்களின் உளவியலில் எப்படிப்பட்ட தாக்கத்தை ஏற்படுத்தியது என்றால் அது போன்ற ஆரோக்கியமான உளவியல் பாதிப்புகள் வேறு எந்தக் காலத்திலும், இந்த காலங்களில் வாழ்ந்த மக்களிடம் காணப்படவில்லை என்று உலக வரலாற்றின் ஏடுகளில் பதிவு செய்து வைத்துள்ளார்கள். அந்த அளவிற்கு இஸ்லாம் என்னும் இயற்கை மார்க்கம் இயற்கையான, இயல்பான தெளிவான சிந்தனைத் தாக்கம் மக்களைக் கவர்ந்து இஸ்லாத்தின் பக்கம் ஈர்த்தது.

ஆனால் இன்றைய நம் சமுதாயத்தின் உளவியல் பாதிப்புகள் முற்றிலும் ஆரோக்கியமற்றதாய் உள்ளது. பாதிப்புகள் என்ற பதத்திற்கு சரியான பதிப்பாகவும் அமைந்துள்ளது. காரணங்கள் பல்லாயிரக் கணக்கானவைகள், அவையாவற்றையும் சொல்ல இங்கு இடம் போதாது. குறிப்பாக சில பாதிப்புகளை பார்ப்போம்.

முதலில் வழிகாட்டிகளாக செயல்படக்கூடிய உலமாக்கள்

அவர்களின் ஒற்றுமையின்மை மற்றும் சிந்தனைத் தெளிவின்மை. ஏறக்குறைய ஏழு ஆண்டுகள் மார்க்கக்கல்வி பயின்று வெளிவரும் இவர்களிடம் குர்ஆன் மற்றும் ஹதீஸின் விளக்கம் பெற விழையும் நம் சமுதாயம் குழப்பத்தில் நிற்கும் நிலை ஏற்படுகிறது. காரணம் இன்றைய நவீனகால உலமாக்கள் சிலர் தன்னிலை விளக்கம்போல் தன் சிந்தனை விளக்கங்களை ஹதீஸ்களின், குர்ஆனின் விளக்கங்களாகத் தந்து அத்துடன் நில்லாமல் மாற்றாரின் விளக்கத்தினை விமர்சனம் செய்து சுய தம்பட்டம் அடித்துக் கொள்கின்றனர் இவர்களை அணுகிய மக்களின் மனங்கள் வெறுமையடைந்து போகின்றன.

சில நூறு வருடங்கள் முன்னர் வாழ்ந்த உலமாக்கள் எவ்வாறு செயல்பட்டனர் என்று பார்க்க வேண்டும். ஹதீஸ்களின் விளக்கங்கள், குர்ஆனின் விளக்கங்களை கூறும் சமயம் உரிய முறையில் விளக்கம் தந்து தன் சிந்தனையில் உதித்த கருத்துக்களையும் தெளிவாகச் சொல்லி சரி கண்டனர். இவை என் கருத்து அல்லாஹ்வே மிக அறிந்தவன் என்றும் சேர்த்துச் சொல்லி மக்களின் மனங்களிலும் திருப்தியை ஏற்படுத்தி கண்ணியமான முறையில் நடந்து கொண்டனர். ஆனால் இன்றைய உலமாக்களின் நிலை என்னவெனில் அல்லாஹ்வின் நபி(ஸல்) அவர்களின் வார்த்தைகளை நிலைநாட்டுவதில் போட்டா போட்டி போடுகினறார்கள் என்றால் பெருமை கொள்ளலாம், தன் வார்த்தைகளை நிலைநாட்டுவதில் அல்லவா இவர்கள் போட்டி போடுகின்றனர். இவர்களின் போட்டி மக்களின் மனங்களில் என்னவிதமான பாதிப்புகளை ஏற்படுத்தியது என்றால் ஒரே ஊரில் ஒரே நாளில் எல்லோரும் ஒன்றாய் கூடி கொண்டாட வேண்டிய நாளாகிய பெருநாளை, பெற்றோர் ஒரு நாளும் பிள்ளைகள் மறுநாளுமாக ஒரே வீட்டில் இரு பெருநாட்களாகிப் போனது.

இஸ்லாத்தைப் பொறுத்தவரை எல்லாவற்றிக்குமே தீர்வு உண்டு நாம் எழுதிக் கொண்டிருக்கும் தலைப்பிற்கும் இது பொருந்தும். எதையுமே விவாதக் கட்டுரையாக்குவதில் பயனில்லை. 

தீர்வு: அதிகமான ஆலிம்கள் ஆய்ந்து அறிந்து அறிவித்த, அறிவிக்கக்கூடிய வழிகாட்டுதலை மார்க்கத் தீர்ப்பை மக்கள் ஏற்று வழி நடக்க முன்வர வேண்டும். தன் சுய சிந்தனைத் தாக்கத்தை மக்கள் மனங்களில் திணிக்க முயலும் உலமாக்களை விட்டும் மக்கள் விலகியிருக்க வேண்டும். அப்படியெனில் இதுபோன்ற உளவியல் பாதிப்புகளை தவிர்ந்து நடக்கலாம். மக்களின் வழிகாட்டிகளான நல்லுள்ளம் கொண்ட உலமாக்களும் தனது (நஃப்ஸ்) மனோஇச்சைக்கு ஒரு சிறிதும் கட்டுப்படாமல் தூர நோக்கமான, தெளிவான சிந்தனையுடன் ஒருவருக்கொருவர் கருத்துப்பரிமாறி தெளிவான மார்க்கத் தீர்ப்புகளை மக்களுக்கு வழங்கிட முன்வர வேண்டும்.

நம் ஜமாஅத்கள்

குர்ஆனில் 3:103வது வசனத்தில் வல்ல நாயன் சொல்கிறான்.

இன்னும் நீங்கள் அனைவரும் அல்லாஹ்வின் கயிற்றை கெட்டியாகப் பிடித்துக் கொள்ளுங்கள். நீங்கள் பிரிந்து விடாதீர்கள்.

நாம் இந்த வசனத்தை முழுமையாக ஓதிக் கொண்டே அறியாமைக் (ஜாஹிலியா) காலத்து நடை முறையைத்தான் பின்பற்றிக் கொண்டிருக்கின்றோம். அவர்கள்தான் பல பிரிவினர்களாக, கோத்திரங்களாக இருந்தனர். பின்னர் இஸ்லாம் என்ற ஒளியின் கீழ் ஒரே ஜமாஅத்தின் கீழிலிருந்து ஸஹாபாக்கள் ஒன்றாய் செயல்பட்டனர். ஆனால் இன்றைய நிலை? இன்னும் எத்தனை ஜமாஅத்கள் உருவாகுமோ மக்களின் மனங்களில் எத்தகைய பாதிப்புகளை ஏற்படுத்ததுமோ அல்லாஹ்தான் காப்பாற்ற வேண்டும்.

மற்ற ஏனைய மதங்களைச் சார்ந்த சமுதாய மக்களின் மார்க்கம் வெவ்வேறானவையாகும் அவர்களின் வழிபாடு முறைகளும் வெவ்வேறானவையாகும். நாம் அப்படியல்ல, இயற்கை மார்க்கமான நமது இஸ்லாமிய மார்க்கம் ஒன்றே, அதன் தூய வழிபாட்டு முறைகளும் ஒன்றே. அப்படியிருந்தும் மக்கள் கூறுபோடப்படுகிறார்கள். சின்னச் சின்ன வித்தியாசங்கள், செயல்களுக்காக வெவ்வேறான ஜமாஅத்களாக இருந்துக் கொண்டு ஆதாரபூர்வமான பெரிய பெரிய நபிமொழிகளுக்கு மாற்றமாக செயல்படுகின்றனர். (முஃமினா) முஸ்லிமா? என்று பார்த்து நட்புக் கொள்வதை விடுத்து இவர் நம் ஜமாஅத்தைச் சார்ந்தவரா? என்று பார்த்து அவர் பெயரளவில் முஸ்லிமென்றாலும் பரவாயில்லை ஜமாஅத் முத்திரையிருந்தால் போதும் என்று மிக நெருங்கி நட்புப் பாராட்டுகின்றனர். இன்னும் ஒருபடி மேலேயே போய் அவர்களிடம் மார்க்கத்தையே விற்று நபி(ஸல்) அவர்களின் காலத்து (முனாஃபிக்கள்) நயவஞ்சகர்கள் போல் நடந்து கொள்கின்றனர். நம் சமுதாயத்தில் இவை உளவியல் பாதிப்புகளை ஏற்படுத்துமே என்ற கவலை எந்த ஜமாஅத்களிடமும் இருப்பதாய் தெரியவில்லை.

தீர்வு: ஒரே ஜமாஅத்தின் கீழ் யாவரும் ஒன்றாயிணைய சாத்தியமில்லாத பட்சத்தில் குறைந்த பட்சம் வருடம் ஒரு முறையேனும் அனைத்து ஜமாஅத்தினரும் ஒன்றிணைந்து நம் சமுதாயத்திற்கு எந்தவிதமான நன்மைகள் செய்துள்ளோம் இனிவரும் காலங்களில் என்னவெல்லாம் நன்மைகள் செய்யலாம் என்பது குறித்து விவாதித்து மக்களுக்கு நன்மைகள் செய்ய முன்வர வேண்டும்.

இயக்கங்கள்: கடல் கடந்து இவர்கள் எங்கு வந்தாலும் இயக்க சிந்தனையைத்தான் முன்னிறுத்துகிறார்கள். இஸ்லாமிய சிந்தனையை அல்ல. இயக்கத் தலைவர்களின் பாராட்டுதலைப் பெற இவர்கள் பாடுபடட்டும் மற்ற இனமக்களின் பாராட்டுதலைப் பெற இயக்கத் தலைவர்கள் பாடுபடட்டும். மக்களின் மனங்களில் போட்டியையும், பொறாமையையும் ஏன் விதைக்கிறார்கள்? புறம் பேசுவதை அல்லாஹ்வின் நபி(ஸல்) அவர்கள் எந்த அளவு தடுத்துள்ளார்கள்? அல்லாஹ் தன் திருமறையில் 49:12வது வசனத்தில் எந்த அளவு கண்டிக்கின்றான் இந்த இயக்கம் பேசுபவரிடத்தில் மட்டுமல்ல அவர்களைச் சுற்றியுள்ள மக்களிடத்திலும் புறம் பேசுதல் சர்வ சாதாரணமாகிவிட்டது. இதனால் நம் மனங்கள் பொறுமையடைந்து போகின்றன. உளவியல் பாதிப்புகளை ஏற்படுத்துவதில் இவர்களின் பங்கு அலாதியானது.

அவ்வாறல்லாமல் தீர்வாக மக்களின் மனங்களில் ஆரோக்கியமான பாதிப்புகளை ஏற்படுத்திட இவ்வியக்கங்கள் பாடுபட வேண்டும். எந்த எதிர்தரப்பினரிடமும் நபி(ஸல்) அவர்களின் அணுகுமுறை போல் நேர்மையான அணுகு முறை வேண்டும். நம்மிடையே சண்டையிடச் செய்யும் கோஷ்டிப் பூசல்கள், பொறாமைகளை புறம் பேசுதல்கள் போன்ற அனைத்து வழிகளையும் அடைத்துவிட வேண்டும் மேலும் மற்ற சமுதாய இயக்கங்களின் கைப்பாவையாக நாம் ஆகிவிடாமல் மாறாக நாம் நல்ல படிப்பினை பெறச் செய்யும் சிறந்தவர்களாக முற்றிலும் மாறிட வேண்டும்.

இவ்விதம் இந்த மூன்று பிரிவினரின் சுயநலப் போக்கற்ற தன்மையினாலும் அல்லாஹ்விற்க்கும் அவனுடைய நபிக்கும் முற்றிலும் கட்டுப்பட்டு அல்லாஹ்வைப் பற்றிய உள்ளச்சமுடைய (தக்வா) மனங்களினாலும் நபித்தோழர்களாகிய அந்த மக்களுக்கு ஏற்பட்டது போன்ற ஆரோக்கியமான உளவியல் பாதிப்புகளை இன்றைய நம் சமுதாய மக்களின் மனங்களிலும் ஏற்படுத்திட முடியும். அதன் மூலம் மற்ற சமுதாய மக்களினால் நமக்கு ஏற்படக்கூடிய பாதிப்புகளையும் நாம் சரி செய்ய முடியும்.

நாம் ஒற்றுமையை காண மிகப் பெரும் விலைகளைக் கொடுத்துக் கொண்டிருக்கின்றோம். ஒரு பாபரி மஸ்ஜித் இடிப்பு, அதனால் ஒற்றுமை கண்டோம். இது எத்தனை பெரிய விலை! தவிர, (Denmark) டென்மார்க் நாட்டின் விஷமத்தனமான, நபி(ஸல்) அவர்களின் கார்டூன் விவகாரம் இந்த அநீதத்திற்கு கூட ஒன்றாய் இணைந்து நபி(ஸல்)  அவர்களின் சமுதாயம் நாங்கள் என்று எதிர்ப்புத் தெரிவிக்க முன்வரவில்லை அவரவர் ஜமாஅத்தின், இயக்கத்தின் அடையாளங்களுடன்தான். ஏன் இப்படி? இது போன்று எவ்வளவோ சொல்லிக் கொண்டே போகலாம். அல்லாஹ்வின் கயிற்றை கெட்டியாகப் பற்றி பிடித்துக் கொள்ளுங்கள் நீங்கள் பிரிந்து விடாதீர்கள் என்று தன் திருமறையில் வல்ல அல்லாஹ் கட்டளையிடுகின்றான். இந்த இரண்டு கட்டளைகளையும் கட்டாயம் செயல்முறையில் கொண்டு வந்தால் இது போன்று இனியும் உலகில் எந்த மூளையிலும் நடந்துவிடாமல் செய்ய முடியும்.

நாமோ, நம்முடைய செயல்களோ, நபி(ஸல்) அவர்களை அவமதிக்க மற்றும் அல்லாஹ்வின் பள்ளியை இழிவுப்படுத்த காரணமாக அமைந்து விடக்கூடாது.

அல்லாஹ்வின் அடியார்களாகிய நம்மை இவ்வுலகில் உள்ளோரை விட அல்லாஹ் மேன்மைப்படுத்தி வைத்திருக்கின்றான் அறியாத அவர்களைக் காட்டிலும் அறிந்த நாம் தான் படைத்தவனிடம் அதிகமாக பதில் சொல்ல கடமைப்பட்டுள்ளோம். இது போன்ற அவமதிப்புகள் இனியும் நடக்காமலிருக்க ஒவ்வொரு வினாடியும் ஒவ்வொரு முஸ்லிமும் விழிப்புணர்வுடன் செயல்பட வேண்டும். நாம் தான் (நன்மைகளைச் செய்து) அவர்களை உளவியல் பாதிப்புக்குள்ளாக்க வேண்டும். நாம் அவர்களால் எந்த வகையிலும் உளவியல் பாதிப்புகளுக்குள்ளாகக் கூடாது. நம் பக்கம், நம்மைப் படைத்தவன் இருக்கும் போது, அவர்களால் நமக்கு எவ்வகையிலும் பாதிப்பை ஏற்படுத்த முடியவே முடியாது. எனவே ஆரோக்கியமான உளவியல் பாதிப்புகளை நாமும் பெற்று மற்ற மக்களையும் பெறச் செய்வோம். இன்ஷா அல்லாஹ்.

படியுங்கள் பரப்புங்கள் : "சுவனப்பாதை" மாதஇதழ், - வெளியீடு: ஜித்தா, ஸனாயிய்யா, சவுதி அரேபியா