இந்திய
துணைக்கண்டத்தில் மட்டும் 34.7% பேர் வறுமைக் கோட்டிற்கு கீழ்
இருக்கின்றனர். இதை நான் சொல்லவில்லை உலகவங்கியின் அறிக்கை கூறுகிறது.
இது ஒருபுறம் இருக்க நாட்டில் தலைவிரித்தாடும் ஆடம்பர வாழ்க்கையும்
தனிநபர் வரம்புமீறிய செலவினங்களும் நம்மை வேதனையடையச் செய்கிறது.
உபயோகிக்கும் பொருட்களின் விலையிலும் தரத்திலும்தான் ஏழையும்
பணக்காரனும் வேறுபடுகின்றார்கள். தன்னுடைய செல்வத்தை பிறர்
அறியவேண்டும் என்று செல்வந்தர்கள் செலவு செய்தால் தன்னையும் மேல்மட்ட
குடியினராக அடையாளம் காட்டவேண்டும் என்று ஏழை நினைக்கின்றான்
இதனால்தான் இன்று பட்டிதொட்டிகளிலெல்லாம் தொலைக்காட்சிகளை
காணமுடிகின்றது.
இதேபோன்று ஒரு காலத்தில் ஆடம்பரப் பொருட்களாக இருந்த எத்தனையோ
பொருட்கள் இன்று அத்தியாவசிய சாதனங்களாய் மாறிக்கொண்டு வருகின்றன.
பணக்காரர்கள் உபயோகிக்கும் அத்தனை சாதனங்களையும் தானும் உபயோகிக்க
வேண்டும் என்று ஏழை நடுத்தர வர்க்கம் ஆர்வம் காட்டுகிறது என்றாலும்
ஏழைகள் எங்களை எட்டிபிடித்து விடக் கூடாது என்பதில் பணக்கார வர்க்கம்
விழிப்புணர்வுடனேயே இருக்கின்றது. அழகு சாதனப்பொருட்களிலிருந்து
குடும்ப நிகழ்ச்சிகள் வரை இந்த போட்டியை காண முடிகின்றது.
ஏழை Face Cream தடவிக் கொண்டால் பணக்காரன் Facial செய்து கொள்கிறான்.
ஏழை தன் திருமணத்தை கொஞ்சம் பெரிதாக நடத்தினால் பணக்காரன் பெயர்சூட்டு
விழாவிற்கே அழைப்பிதழ் அடித்து விடுகின்றான். இந்த ஆடம்பரப்
போட்டிகளின் விளைவாகத்தான் சாதாரண கத்னா அறுவை சிகிச்சையைக்கூட
"சுன்னத் கல்யாணம்"
எனப் புதுப்பெயரிடப்பட்டு பெருநிகழ்ச்சியானது.
பலர் பூப்பெய்துவதற்கும் விழா எடுத்து தன் செல்வ செறுக்கை பிறர் காண
செய்கின்றார்கள். தன்னுடைய பிறப்பில் எந்தப் பங்கும் வகிக்காமலேயே
பிறந்தநாளை விழாவாக கொண்டாடுகின்றார்கள். லால்ஜி டன்டன்-ஐ
நினைவிருக்கிறதா? முன்னாள் பிரதமர் வாஜ்பேய்
போட்டியிட்ட லக்னோ பாராளுமன்ற தொகுதியின் தனது 74-வது பிறந்தநாளை
கொண்டாட சேலை வழங்கியவர். 40 ரூபாய் மதிப்புள்ள சேலையை பெற்றுக்கொள்ளும்
போராட்டத்தில் 25 உயிர்கள் பலியானதை யாரும் மறந்திருக்க முடியாது.
இருமனங்கள் இணையும் திருமண நிகழ்ச்சிதான் ஆடம்பர பிரியர்களின்
கேந்திரம்போலும் எதிலும் ஒரு புதுமையையை நாடுகின்றார்கள் எல்லோரும்
திருமண மண்டபங்களில் திருமணம் நடத்தினால் சிலர் நடுக்கடலில் கப்பலில்
திருமணம் நடத்துகின்றனர் இத்தகைய நவீன திருமணங்கள் கடந்துவந்த பாதைகளை
சற்று உற்று நோக்கினால் எளிமையான திருமணம் எப்படி கடினமாக ஆனது என்பது
புரியும்.
ஓரு காலத்தில் திருமணம் முடிந்தவுடன் ஒரு மேஜையில் வெற்றிலை பாக்கு
வைப்பார்கள் பின்னர் அது தாம்பூல பையாக உருமாறியது இதிலென்ன புதுமை
என்று தாம்பூல பையுடன் ஒரு வாழைப்பழம் கொடுத்தனர் பின் அது ஆப்பிள்,
ஆரஞ்சு, தேங்காய், காட்பரிஸ் என்று பரிணாம வளர்ச்சி பெற்றுக் கொண்டே
சென்று கொண்டிருக்கிறது.
உணவு வகைகளில் கூட எத்தனை புதுமைகள். முன்பெல்லாம் இறந்த வீட்டிற்கு
வெள்ளை சோறு, பாத்திஹாவுக்கு தேங்காய் சோறு, கல்யாணத்திற்கு நெய் சோறு
என்றிருந்த காலம் போய் இன்று எல்லாம் பிரியாணி மயமாகிவிட்டது (இவ்வாறு
செய்வது மார்க்கத்தில் அனுமதிக்கபடவில்லை என்பதை விளங்கி கொள்வதுடன்
நடப்பு செய்தியை அறிவிக்க குறிப்பிடப்பட்டுள்ளது). பின்னர் திருமண
விருந்துகளில் பிரியாணியுடன் சைவ சாப்பாடும் தொற்றிக் கொண்டது சில
நாட்களில் மக்கள் அப்துர்ரஹ்மான் சாயிப் பிரியாணியையெல்லாம் மறந்து
ஆரியபவனுக்கும், அகர்வால்பவனுக்கும் தாவி விட்டார்கள். இப்பொழுதெல்லாம்
பிரியாணிக்கு சாம்பார் வேண்டும் என்று சச்சரவு செய்யும் மாப்பிள்ளை
வீட்டார் மனம் குளிர ஃபப்பே சிஸ்டம் வந்துவிட்டது. சிலர் கல்யாண அழைப்பிதழுடன் சேர்த்து
சாப்பாட்டு டோக்கனையும் எண்ணிக் கொடுத்து விடுகின்றனர்.
திருமண அழைப்பிதழில்கூட புதுமையை காணமுடிகிறது. நீ சாதாரண தாளில்
அழைப்பிதழ் அடித்தால் நான் வாட்டர்புருப் பேப்பர் என்று அழைப்பிதழுக்கே
100 ரூபாய் வரை செலவு செய்பவர்களும் உண்டு. இன்னும் சிலபேர்
வித்தியாசமாக அழைப்பிதழ் அடிக்கிறேன் என்று சொல்லி (கிறுக்குதனமாக)
மார்க்கத்திற்கு அவப்பெயர் வாங்கித்தர முயல்கின்றனர். இந்த இடத்தில்
அல்ஜன்னத் (2000) மாத இதழில் நாட்டு நடப்பு பகுதியில் கோம்மையை சேர்ந்த
ஒரு வாசகி சுட்டிக் காட்டியிருந்த ஒரு மாதிரி அழைப்பிதழை தருகிறோம்.
இணையும்
இரு இதயங்கள்
கதாநாயகன்
(எ) மணமகன்
S.அஹமது
கதாநாயகி
(எ) மணமகள்
A.ஹலீமா
பேகம்
வசனம்
ஹஜ்ரத்
ஸ்டுடியோ
மணமகன்
இல்லம்
இசை
காற்றினிலே
வரும் கீதம்
ஒலி அமைப்பு
பெண்கள்
ஒப்பனை
மைத்துனர்
& மைத்துனி
கேமரா
கண்கள்
டைரக்ஷன்
பெற்றோர்கள்
'இணையும் இரு இதயங்கள்' என்னும் இனிய காதல் கருத்தோவியம் இன்று
29.11.02 ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை காலை 10.30 மணிக்கு
திரையிடப்படவுள்ளது. அவர்களது அடுத்த வெளியீடு இவர்கள் இருவரும்
இணைந்து வழங்கும் நகைச்சுவை நிறைந்த பொழுதுபோக்குச் சித்திரம் 'ஆணா?!
பெண்ணா?!!' இன்னும் பத்தே மாதங்களில் வெளியிடப்படும், இதில் சிறிது
முன்பின் ஆகலாம்.
இந்த படத்தின் தயாரிப்பாளர்
S.அஹமது, உதவி A. ஹலீமா
பேகம். ஸ்டுடியோ: பெட்ரூம். குறிப்பு: இந்த படத்தின் சமையல் காட்சிகளை
காணத்தவறாதீர்கள்.
இப்படம் நூறாண்டு காலம் நடைபெற மனதார வாழ்த்தும் நெஞ்சங்கள் மைத்துனர்: அப்துல்லா (குறிப்பு: பெயர்கள் மாற்றப்பட்டுள்ளது)
இஸ்லாத்தை கேவலப்படுத்தும் இத்தகையவர்களை புதுமை விரும்பி
என்பதா ஷைத்தானின் தோழர்கள் என்பதா?!
இறைவன் தன் திருமறையில்...
இன்னும் அத்தகைய (பெருமையடிப்ப)வர்கள் (பெருமையை நாடி) மனிதர்களுக்கு
காண்பிப்பதற்காகத்தான் செலவு செய்வார்கள். அல்லாஹ்வையும் இறுதி
நாளையும் விசுவாசம் கொள்ளவும் மாட்டார்கள். எவனுக்கு ஷைத்தான் தோழனாக
இருக்கின்றானோ அவன் தோழனால் மிகக்கெட்டவன். (அல்குர்ஆன் 4:38)
ஏழை, நடுத்தரவர்க்கத்தின் நிலை இது என்றால் பணக்காரர்களின் நிலை இதைவிட
மோசமானது. ஒரு திருமண நிகழ்ச்சியில் 300 கோடி ரூபாய் செலவு
செய்யப்பட்டது என்றால் நம்புவீர்களா... ஆம்!
SAHARA GROUP
என்ற இந்திய நிறுவனத்தின் அதிபர் சுப்ராய் தனது இரு புதல்வர்களுக்கு
செய்த திருமணத்தில்தான் இவ்வளவு பணம் செலவிடப்பட்டது. 3000
VIP-க்கள் மற்றும் 10,000 விருந்தினர்கள் அழைக்கப்பட்டனர், விருந்தினரை அழைத்துவர
100 Benz Car மற்றும் உடனுக்குடன் ஊர் திரும்ப விமான வசதிகள். திருமண
ஊழியர்கள் மட்டும் 7,000 பேர், 1,800 சமையல்காரர்கள் பங்களித்து 110
வகை உணவுகளை தயாரித்தளித்தனர், ஒளிர்ந்துக் கொண்டிருந்த 56,000
மெழுகுவர்த்திகளின் விலை மட்டும் 10 இலட்ச ரூபாய். மெக்ஸிகோ மற்றும்
ஸ்பெயின் நாட்டினரின் இசைநிகழ்ச்சி, இது போதாதென்று விருந்தினர்களுக்கு
தங்க நாணயங்கள் பரிசளிக்கப்பட்டன. (நன்றி: இணையம்)
நாடு எப்படி சீரழிந்து கொண்டிருக்கிறது என்பதை பார்த்தீர்கள? இந்த 300
கோடி ரூபாயில் எவ்வளவு நல்ல காரியங்கள் செய்யலாம். நாட்டில் 3-ல் 1
பங்கு வறுமைக் கோட்டிற்கு கீழ் வாழ்கின்றனரே இவர்கள் அனைவருக்கும் ஒரு
வேளை உணவு அளித்திருக்கலாம். இந்தியாவில் வாழும் 4 கோடி சேரிவாழ்
(பழங்குடியினர்) மக்கள்களுக்கு முடியுமானவரை வீடு கட்டி
கொடுத்திருக்கலாம். திருமணம் என்ற போர்வையில் இத்தனை ஆடம்பரங்களும்,
வீண்விரயங்களும் அவசியம்தானா? இந்த பூவுலகிற்கு வரும்போது எதைக் கொண்டு
வந்தான் மனிதன் இவ்வுலகைவிட்டு செல்லும்போது எதைத்தான் கொண்டு செல்லப்
போகிறான்? ஏன் இந்த பகட்டுத்தனம்? சமுதாயம் சிந்தித்து இனியாவது
திருந்துமா?
|