முஹர்ரம் - ஆஷுரா
கே.எல்.எம். இப்ராஹீம் மதனி |
முஹர்ரம் மாதத்தின் 10 ஆம் நாள் நோன்பு நோற்பது சுன்னத்தாகும்
(நபிவழியாகும்). நபி (ஸல்) அவர்கள் இந்த நாளில் நோன்பு நோற்றார்கள் -
யூதர்களும் அந்த நாளில் நோன்பு நோற்றதால் அவர்களுக்கு மாறு செய்வதற்காக
எதிர்வரும் வருடம் நான் உயிருடன் இருந்தால் 9 ஆம் நாளையும் சேர்த்து
நோன்பு நோற்பேன் என்றார்கள்.
இதனால் முஹர்ரம் மாதத்தின் 9-10 ஆம்
நாட்களில் நோன்பு நோற்பது சுன்னத்தாகும்.
ஆஷுரா நோன்பின் பின்னணி
நபி (ஸல்) அவர்கள் மதீனாவுக்கு சென்ற நேரம் யூதர்கள் நோன்பு
நோற்றிருப்பதைக் கண்டு இது என்ன நோன்பு என வினவினார்கள். அதற்கு
அவர்கள் இது நல்ல நாள், இந்த நாளில்தான் பனூ இஸ்ராயீல்களை அவர்களின்
பகைவ (ஃபிர்அவ்) னிடமிருந்து அல்லாஹ் பாதுகாத்தான், அந்த நாளில் மூஸா
(அலை) அவர்கள் நோன்பு நோற்றார்கள் என்று கூறினார்கள், அதற்கு நபி (ஸல்)
அவர்கள், உங்களைவிட மூஸா (அலை) அவர்களை (மதிப்பதற்கு) நான்
தகுதியுடையவன் என்று கூறி அந்த (முஹர்ரம் பத்தாம் நாள்) நோன்பை
நோற்றார்கள், அந்த நோன்பை நோற்பதற்கு (மக்களையும்) ஏவினார்கள். (ஆதாரம்
: புகாரி)
ஆஷூரா நோன்பைப் பற்றியுள்ள ஹதீஸ்கள்:
1. ஆஷூரா நோன்பைப் பற்றி நபி (ஸல்) அவர்களிடம் கேட்கப்பட்டது, சென்ற
வருடத்தின் பாவங்களுக்கு பரிகாரமாக அமையும் என்று கூறினார்கள்.
(அறிவிப்பவர் : அபூகதாதா (ரலி), ஆதாரம் : முஸ்லிம்)
2. நபி (ஸல்) அவர்கள் ஆஷூரா தினத்தன்று நோன்பு நோற்று (மற்ற
மக்களையும்) நோன்பு நோற்குமாறு ஏவினார்கள். (அறிவிப்பவர் : இப்னு
அப்பாஸ் (ரலி),
ஆதாரம் : புகாரி, முஸ்லிம்)
3. ரமலான் நோன்பிற்குப் பிறகு சிறந்த நோன்பு அல்லாஹ்வுடைய மாதமாகிய
முஹர்ரத்தின் நோன்பாகும் என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
(அறிவிப்பவர் : அபூ ஹூரைரா (ரலி), ஆதாரம் : முஸ்லிம்)
4. எதிர்வரும் வருடம் (உயிருடன்) இருந்தால் ஒன்பதாவது நாளும் நோன்பு
நோற்பேன் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (அறிவிப்பவர் : இப்னு
அப்பாஸ் (ரலி),
ஆதாரம் : முஸ்லிம்)
முஹர்ரம் மாதத்தின் 9-10 ஆம் நாட்களில் நபியவர்கள் எதற்காக நோன்பு
நோற்றார்கள் என்பதையும் நோன்பைத்தவிர வேறு எந்த விஷேச வணக்கங்களையும்
செய்யவில்லை என்பதை அறிவீர்கள். நபியவர்களை பின்பற்றும் நாமும்
அதைத்தான் செய்ய வேண்டும். அதை விட வேறு எதையாவது செய்து விட்டு
இதுவும் சுன்னத்து அல்லது வணக்கம் என்று சொன்னால் அல்லாஹ்வின் மீதும்
அவனின் தூதர் மீதும் இட்டுக்கட்டுவதாகும். இதற்கு பித்அத் என்று
சொல்லப்படும்.
எந்த ஒரு வணக்கமும் அல்லாஹ்விடத்தில் ஏற்றுக் கொள்ளப்படுவதற்கு 2
நிபந்தனைகள் அவசியமாகும்.
1. அல்லாஹ்வுக்காகவே மட்டும் என்ற எண்ணத்துடன்
(இக்லாஸாக) செய்யவேண்டும்.
2. நபி (ஸல்) அவர்கள் கற்றுத் தந்த முறைப் பிரகாரம் செய்யவேண்டும்.
இந்த இரண்டில் ஒன்று இல்லையென்றால் அந்த வணக்கம்
ஏற்றுக்கொள்ளப்படமாட்டாது.
நமது மார்க்கத்தில் இல்லாத ஒன்றை யார் புதிதாக (மார்க்கமாக)
ஆரம்பிக்கின்றாரோ அது ஏற்றுக்கொள்ளப்படமாட்டாது என நபி (ஸல்) அவர்கள்
கூறினார்கள். (அறிவிப்பவர்: ஆயிஷா (ரலி),
நூற்கள்: புகாரி, முஸ்லிம்)
இன்று முஸ்லிம்களில் பலர் இந்த நாட்களில் பல தவறுகளைச்
செய்கின்றார்கள். அதாவது குறிப்பிட்ட உணவுப் பண்டங்களை சமைப்பது,
உடம்பில் காயமேற்படுத்திக்கொள்வது, மக்களை ஒன்று கூட்டி குறிப்பிட்ட சில
வணக்கங்களை செய்வது, இன்னும் இது போன்ற எத்தனையோ செயல்களை
செய்கின்றார்கள். இவைகள் அனைத்தும் பித்அத் என்னும் பாவமான செயலாகும்.
மேலே கூறப்பட்ட நிபந்தனைகளுக்கு மாற்றமானதுமாகும். இப்படிப்பட்ட
வணக்கங்களை அல்லாஹ் ஏற்றுக்கொள்ளாதிருப்பது மட்டுமல்லாமல் நாளை
மறுமையில் தண்டனையும் வழங்குவான்.
இவைகளை நபி (ஸல்) அவர்கள் செய்யவில்லை என்று தெரிந்த பின்பும் நாம்
செய்தால் அல்லாஹ்விடத்தில் பெரும் குற்றவாளிகளாக கருதப்படுவோம்.
ஆகவே, முஹர்ரம் மாதத்தின் 9-10 ஆம் நாட்களில், நோன்பை மாத்திரம் விஷேச
வணக்கமாக செய்யுங்கள். இதுதான் நபி வழியாகும்.
அல்லாஹ் நம் அனைவரையும் நபி வழி நடந்த நன்மக்களாக வாழ்ந்து மரணிக்கச்
செய்வானாக.
|