Index |Subscribe mailing list | Help | E-mail us

அகிலங்களின் இறைவன் அல்லாஹ் (பகுதி 1)

மூலம்: M.M.அக்பர் - தமிழில் தேங்கை முனீப், பஹ்ரைன்

 

பிரபஞ்சத்தில் உள்ள எல்லா வஸ்துக்களும் அதற்கப்பாலுள்ள ஒரு காரணத்தைத் தேடுகின்றது. ஒவ்வொரு பொருளுக்கும் அதன் தன்மைக்கும் மனிதன் காரண்தைத் தேடுகின்றான். அணுமுதல் நட்சத்திர மண்டலங்கள் வரை உள்ள எல்லா சிறிய பெரிய வஸ்துக்களும் இதற்கு விதிவிலக்கல்ல. ஒவ்வொன்றினதும் காரணத்தைத் தேடிக்கண்டு பிடிக்கும்போது அந்தக் காரணத்தின் காரணத்தைத் தேடி சிந்தனை நீளுகின்றது. இது சங்கிலித் தொடர் போன்று நீண்டு செல்வதில்லை. அது காரணங்கள் தேவைப்படாத ஒருவனில் சென்றடைகின்றது. அவன் எல்லாத் தேடுதல்களினதும் இறுதியாக இருக்கின்றான். எல்லா வகையான தேட்டங்களும் விசாரணைகளும் இந்த பரமமான எல்லையில் முடிவடைகின்றன. பிரபஞ்சத்தில் எந்தவொரு பொருளும் காரணங்களற்றது என்று நம்மால் கூற இயலாது. சிறிதாகட்டும் பெரிதாகட்டும் எல்லா வஸ்துக்களுமே காரணங்களைத் தேடுகின்றன. ஆக காரணங்கள் அவசியமற்ற பராசக்தி பிரபஞ்சத்திற்கு அப்பாற்பட்டிருக்க வேண்டும். பதார்த்தத்திற்கு அப்பாற்பட்டிருக்க வேண்டும். இந்த அடிப்படைக் காரணத்தையே இஸ்லாம் அல்லாஹ் என்றழைக்கின்றது.

பிரபஞ்சத்தில் உள்ள சிறிது முதல் பெரிது வரை எல்லாப் பொருட்களினதும் உருவாக்கத்திற்கும் நிலைநிற்பதற்கும் அழிவுக்கும் காரணமாகத் திகழக்கூடிய அந்த ஏக சக்தியைக் குறிக்கும் அரபிப் பதமே அல்லாஹ் என்பதாகும். தன்னையும் தன்னைச் சுற்றியுள்ள பொருட்களையும் பற்றி மிகவும் கவனமாக ஆராயும் எவருக்கும் அதற்குப் பின்னால் மறைந்திருக்கும் அந்த அதியற்புத சக்தியை நிராகரிக்க இயலாது என்பதே உண்மை. அணுவினுள் இயங்கிக் கொண்டிருக்கும் சக்தி முதல் நட்சத்திர மண்டலங்கள் நிலை கொண்டிருப்பதன் மூல காரணமும் அல்லாஹ்வே! ஆனால் அல்லாஹ் என்பது வெறும் ஒரு சக்தியோ ஒரு மாயையோ அல்லது கற்பனையோ அல்ல. இறைவனது உள்ளமை எவ்வாறு என்று மனிதனால் விளக்கம் கூற இயலாது. அல்லாஹ்வே அறிவித்துத் தந்த தெய்வீக வெளிப்பாடுகளைக் கொண்டே அவனது உள்ளமையின் தன்மையைப் புரிந்து கொள்ள இயலும். எனினும் அவனது சக்தியின் மூலம் நிலை கொண்டுள்ள பிரபஞ்சப் படைப்புகள் அவனது உள்ளமையையும் குணநலன்களையும் ஓரளவுக்கு வெளிப்படுத்துகின்றன.

தமிழில் "கடவுள்" என்றும் ஆங்கிலத்தில் "God" என்றும் உர்துவில் "குதா" என்றும் கூறும்போது கொள்ளப்படும் பொருளுக்கு சமமானதல்ல அல்லாஹ் என்ற பதம். கடவுள், குதா, காட் என்ற பதங்கள் வணங்கப்படுபவை என்ற பொருளில் அவ்வாறு கூறப்படுகின்றன. அதற்குச் சமமான பொருளை உடையதே அரபியில் உள்ள இலாஹ் என்ற பதம். வணங்கப்படுகின்ற எதனையும் இலாஹ் என்று கூறலாம். இலாஹ் என்ற பொதுப் பெயருடன் அல் என்ற குறிப்புப் பெயரும் சேர்ந்ததே அல்லாஹ் என்பதாகும் என்பது மொழியியல் வல்லுனர்களின் கூற்று. ஆக அல்லாஹ் என்ற பதத்தின் பொருள் அல்-இலாஹ் என்பதாகும். அதாவது வணக்கத்திற்குத் தகுதியான ஒரே இறைவன் என்பது பொருள். அல்லாஹ் என்ற பதத்தின் உருவாக்கத்தைப் பற்றி வேறு அபிப்பபிராயங்களும் உண்டு. எதுவாக இருந்தாலும் உண்மையான இறைவனின் அறியப்பட்ட பெயரே அல்லாஹ் என்பதாகும். உண்மையான இறைவன் என்ற நிலையிலேயே திருக்குர்ஆனும் அல்லாஹ் என்ற வார்த்தையை அறிமுகப்படுத்துகின்றது.

நுட்பமும் நுண்ணறிவும் நிறைந்த சகல வஸ்துக்களின் படைப்பாளனும் கண்காணிப்பவனும் சர்வவல்லமை படைத்தவனுமே அல்லாஹ். இது ஒரு குல தெய்வத்துடைய பெயரல்ல. எல்லா தேசத்தினருடையவும், மொழியினருடையவும், வர்க்கத்தினருடையவும் எதார்த்தமான இறைவனே அல்லாஹ். படைப்பாளனும் பிரபஞ்ச கர்த்தாவுமான இறைவனுக்கு பல மொழிகளிலும் பல பெயர்களில் அழைக்கப்படுவதைக் காணலாம். சமஸ்கிருதத்தில் பிரம்மம் என்றும் பரமாத்மா என்றும் சர்வ வல்லமை மிக்க இறைவன் அழைக்கப்படுவதை உபநிஷத்துக்களின் வாக்குகளிலிருந்து அறிந்து கொள்ள இயலும். பைபிளின் பழய ஏற்பாட்டில் ஏல், எலோஹிம், ஏல்ஷத்தாயி, ஏல்எல்யோன், அடோண்ணாயி, யாஹ், யெஹோவா முதலான பெயர்கள் இறைவனுக்கு வழங்கப்பட்டுள்ளது. இயேசுவின் உபதேசங்கள் ஒன்றும் அவரது மொழியாகிய அரமாயிக் மொழியில் இன்று கிடைக்காததால் இறைவனைக் குறித்து அவர் என்ன பதத்தை உபயோகித்தார் என்பதை அறிய இயலவில்லை. என்றாலும் எலோஹி என்ற பதம் அவரால் பயன்படுத்தப்பட்டிருந்தது என்பது பைபிள் அறிஞர்களின் கருத்தாகும்.


அகில உலகங்களின் படைப்பாளனும் சர்வ வல்லமை படைத்தவனுமாகிய இறைவனைக்குறித்து திருக்குர்ஆன் உபயோகித்த பதமே அல்லாஹ் என்றும் வணக்கத்திற்குத் தகுதியான உண்மை இறைவன் என்பதே அதன் பொருள் என்றும் கண்டோம். அல்லாஹ் என்ற பதத்திற்குச் சமமான பொருள் கொண்ட எந்த வார்த்தையும் மற்ற மொழிகளில் இல்லை என்பதும் பல அறிஞர்களின் கருத்தாகும். எவ்வாறாயினும் ஏதேனும் ஒரு குலத்திற்கு மட்டுமே உள்ள ஒரு தெய்வம் என்ற நிலையிலன்றி யதார்த்தத்திலுள்ள இறைவன் என்ற நிலையிலேயே திருக்குர்ஆன் அல்லாஹ் என்ற பதத்ததை உபயோகித்துள்ளது. முஸ்லிம்கள், இந்துக்கள், கிறித்தவர்கள், யூதர்கள், பார்ஸிகள், பிற இனத்தினர், கறுப்பர், வெள்ளைர், கிழக்கத்தியர், மேற்கத்தியர் என பாகுபாடின்றி அகில மக்களின் படைப்பாளனும், பரிபாலிப்பவனும், பாதுகாப்பவனும் ஆகிய இறைவனே திருக்குர்ஆன் அறிமுகப்படுத்தும் அல்லாஹ் ஆவான்.


﴿ اللَّهُ خَالِقُ كُلِّ شَيْءٍ وَهُوَ عَلَى كُلِّ شَيْءٍ وَكِيلٌ


அல்லாஹ்தான் அனைத்துப் பொருட்களையும் படைப்பவன் இன்னும், அவனே எல்லாப் பொருட்களின் பாதுகாவலனுமாவான். (39:62)

 


﴿ ذَلِكُمُ اللَّهُ رَبُّكُمْ خَالِقُ كُلِّ شَيْءٍ لا إِلَهَ إِلا هُوَ فَأَنَّى تُؤْفَكُونَ ﴾


அவன் தான் உங்கள் அல்லாஹ் - உங்கள் இறைவன் - எல்லாப் பொருட்களையும் படைப்பவன் - அவனைத் தவிர வேறு நாயனில்லை எனவே நீங்கள் (சத்தியத்தை விட்டும்) எங்கு திருப்பப்படுகிறீர்கள்? (40:62)

 


﴿ إِنَّ اللَّهَ هُوَ رَبِّي وَرَبُّكُمْ فَاعْبُدُوهُ هَذَا صِرَاطٌ مُسْتَقِيمٌ ﴾


நிச்சயமாக, அல்லாஹ்தான் எனக்கும் இறைவன், உங்களுக்கும் இறைவன். ஆகவே அவனையே வணங்குங்கள், இதுவே ஸிராத்துல் முஸ்தகீம் (நேரான வழி) (43:64)

 


﴿ بَدِيعُ السَّمَاوَاتِ وَالأرْضِ أَنَّى يَكُونُ لَهُ وَلَدٌ وَلَمْ تَكُنْ لَهُ صَاحِبَةٌ وَخَلَقَ كُلَّ شَيْءٍ وَهُوَ بِكُلِّ شَيْءٍ عَلِيمٌ ذَلِكُمُ اللَّهُ رَبُّكُمْ لا إِلَهَ إِلا هُوَ خَالِقُ كُلِّ شَيْءٍ فَاعْبُدُوهُ وَهُوَ عَلَى كُلِّ شَيْءٍ وَكِيلٌ ﴾


அவன் வானங்களையும், பூமியையும் முன் மாதிரியின்றிப் படைத்தவன். அவனுக்கு மனைவி, எவரும் இல்லாதிருக்க, அவனுக்கு எவ்வாறு பிள்ளை இருக்க முடியும்? அவனே எல்லாப் பொருட்களையும் படைத்தான். இன்னும் அவன் எல்லாப் பொருட்களையும் நன்கறிந்தவனாக இருக்கின்றான். அவன்தான் அல்லாஹ் - உங்கள் இறைவன், அவனைத் தவிர வேறு இறைவன் இல்லை எல்லாப் பொருட்களின் படைப்பாளன் அவனே ஆவான் ஆகவே, அவனையே வழிபடுங்கள் - இன்னும் அவனே எல்லாக் காரியங்களையும் கண்காணிப்பவன். (6: 102, 102)


சர்வலோக படைப்பாளனைக் குறித்து திருக்குர்ஆன் அறிமுகப்படுத்திய பதம் அல்லாஹ் எனக் கண்டோம். இந்த வார்த்தை புதிய பதம் அல்ல. முஹம்மது நபிக்கு முன்பே அரபிகளுக்கிடையில் இறைவனைக் குறித்து அல்லாஹ் என்ற பதமே வழங்கி வரப்பட்டது. அரபிகள் பல தெய்வ வழிபாட்டைக் கொண்டவர்களாக இருந்தனர். லாத், மனாத், உஸ்ஸா, ஹுபல் போன்ற ஏராளமான தெய்வங்களை அவர்கள் வணங்கி வந்தனர். ஆனால் அவைகளைக் குறித்தெல்லாம் அவர்கள் அல்லாஹ் என்று நம்பியிருக்க வில்லை. அவைகளெல்லாம் யதார்த்த இறைவனை நோக்கியுள்ள இடையாட்களாக அல்லது இறைவனிடத்தில் தங்களுக்காகப் பரிந்து பேசும் பரிந்துரையாளர்கள் என்பதே அவர்களது நம்பிக்கையாக இருந்தது. சர்வ சக்தனும் சர்வலோக படைப்பாளனுமாகிய இறைவனை அவர்கள் அழைத்தது அல்லாஹ் என்றே என்பதைத் திருக்குர்ஆனும் தெளிவு படுத்துகின்றது.


﴿ وَلَئِنْ سَأَلْتَهُمْ مَنْ خَلَقَهُمْ لَيَقُولُنَّ اللَّهُ فَأَنَّى يُؤْفَكُونَ ﴾


மேலும், அவர்களிடம் யார் அவர்களைப் படைத்தது என்று நீர் கேட்டால் "அல்லாஹ்" என்றே அவர்கள் நிச்சயமாக கூறுவார்கள் அவ்வாறிக்கும் போது (அவனைவிட்டு) அவர்கள் எங்கு திருப்பப்படுகிறார்கள்? (43:87)

 


﴿ وَلَئِنْ سَأَلْتَهُمْ مَنْ خَلَقَ السَّمَاوَاتِ وَالأرْضَ وَسَخَّرَ الشَّمْسَ وَالْقَمَرَ لَيَقُولُنَّ اللَّهُ فَأَنَّى يُؤْفَكُونَ ﴾


மேலும், (நபியே!) "நீர் இவர்களிடத்தில் வானங்களையும், பூமியையும் படைத்துச் சூரியனையும் சந்திரனையும் (தன் அதிகாரத்தில்) வசப்படுத்திருப்பவன் யார்?" என்று கேட்டால், "அல்லாஹ்" என்றே இவர்கள் திட்டமாக கூறுவார்கள் அவ்வாறாயின் அவர்கள் (உண்மையை விட்டு) எங்கே திருப்பப்படுகிறார்கள்? (29: 61)

 


﴿ وَلَئِنْ سَأَلْتَهُمْ مَنْ نَزَّلَ مِنَ السَّمَاءِ مَاءً فَأَحْيَا بِهِ الأرْضَ مِنْ بَعْدِ مَوْتِهَا لَيَقُولُنَّ اللَّهُ قُلِ الْحَمْدُ لِلَّهِ بَلْ أَكْثَرُهُمْ لا يَعْقِلُونَ ﴾


இன்னும், அவர்களிடம் "வானத்திலிருந்து நீரை இறக்கி, பிறகு அதனைக் கொண்டு இப்பூமியை - அது (காய்ந்து) மரித்தபின் உயிர்ப்பிப்பவன் யார்?" என்று நீர் கேட்பீராகில் "அல்லாஹ்" என்றே இவர்கள் திட்டமாகக் கூறுவார்கள் (அதற்கு நீர்) "அல்ஹம்து லில்லாஹ் - புகழனைத்தும் அல்லாஹ்வுக்கே உரியது" என்று கூறுவீராக எனினும் இவர்களில் பெரும்பாலோர் அறிந்துணர மாட்டார்கள். (29:63)


﴿ قُلْ مَنْ رَبُّ السَّمَاوَاتِ السَّبْعِ وَرَبُّ الْعَرْشِ الْعَظِيمِ سَيَقُولُونَ لِلَّهِ قُلْ أَفَلا تَتَّقُونَ ﴾


"ஏழு வானங்களுக்கு இறைவனும் மகத்தான அர்ஷுக்கு இறைவனும் யார்?" என்றும் கேட்பீராக. "அல்லாஹ்வுக்கே" என்று அவர்கள் சொல்வார்கள் "(அவ்வாறாயின்) நீங்கள் அவனுக்கு அஞ்சி இருக்கமாட்டீர்களா?" என்று கூறுவீராக! (23:86,87)

 


﴿ قُلْ مَنْ بِيَدِهِ مَلَكُوتُ كُلِّ شَيْءٍ وَهُوَ يُجِيرُ وَلا يُجَارُ عَلَيْهِ إِنْ كُنْتُمْ تَعْلَمُونَ سَيَقُولُونَ لِلَّهِ قُلْ فَأَنَّى تُسْحَرُونَ ﴾


"எல்லாப் பொருட்களின் ஆட்சியும் யார் கையில் இருக்கிறது? - யார் எல்லாவற்றையும் பாதுகாப்பவனாக - ஆனால் அவனுக்கு எதிராக எவரும் பாதுகாக்கப்பட முடியாதே அவன் யார்? நீங்கள் அறிவீர்களாயின் (சொல்லுங்கள்)" என்று கேட்பீராக. அதற்கவர்கள் "(இது) அல்லாஹ்வுக்கே (உரியது)" என்று கூறுவார்கள். ("உண்மை தெரிந்தும்) நீங்கள் ஏன் மதி மயங்குகிறீர்கள்?" என்று கேட்பீராக. (23: 88,89)


சர்வலோக இரட்சகனை அழைக்க அரபிகள் உபயோகித்த பெயர் அல்லாஹ் என்பது அவர்களது சரித்திரத்தை ஆராய்ந்தாலே விளங்கிக் கொள்ள இயலும். முஹம்மது நபி (ஸல்) அவர்களது தந்தையின் பெயர் அப்துல்லாஹ் - அல்லாஹ்வின் அடிமை என்பதாகும். முஹம்மது நபி (ஸல்) அவர்களது பிறப்புக்கு இரண்டு மாதங்களுக்கு முன்னரே அவரது தந்தையார் மரணமடைந்து விட்டார்கள். அல்லாஹ்வின் மீது நம்பிக்கை இருந்த காரணத்தினாலேயே அப்துல் முத்தலிப் தனது மகனுக்கு அப்துல்லாஹ் - அல்லாஹ்வின் அடிமை என்று பெயரிட்டார். இஸ்லாத்தை ஏற்றுக் கொள்வதற்கு முன்னரே அப்பாஸ் (ரலி) தனது மகனுக்கு இட்ட பெயரும் அப்துல்லாஹ் என்பதாகும். பிரபலமான ஒரு நபித்தோழராக இருந்தார் அப்துல்லாஹ் இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள். அஞ்ஞான காலத்தின் இறுதியிலும் நபித்துவத்தின் ஆரம்பத்திலும் அப்துல்லாஹ் என்ற பெயருடைய அநேகம் பெயர்களை சரித்திரத்தில் காண இயலும். தல்ஹா இப்னு உபைதில்லாஹ், அப்துல்லாஹிப்னு ஸலாம், அப்துல்லாஹ் இப்னு ஜத்ஆன், முதலிய பெயர்கள் இஸ்லாமிய வரலாறு படிக்கும் மானவர்களுக்கு அறிமுகமானதாகும். இப்பெயர்களெல்லாம் அஞ்ஞான காலத்தில் வழங்கப்பட்டு வந்தது என்பதிலிருந்து அல்லாஹ் என்ற பதம் முஹம்மது (ஸல்) அவர்களுடைய கண்டு பிடிப்பல்ல என்பதும் திருக்குர்ஆனில் முதன் முதலாக பயன்படுத்தப்படும் பெயருமல்ல என்பதை புரிய முடியும்.


பல தெய்வக் கொள்கையுடைய அரேபிய முஷ்ரிக்குகள் மட்டுமல்ல அங்கு வாழ்ந்திருந்த யூத கிறித்தவர்கள் கூட உண்மையான இறைவனை அல்லாஹ் என்றே அழைத்து வந்தனர் என்பதைப் புரிந்து கொள்ள முடிகின்றது.

 

உஸைரை (எஸ்றா) அல்லாஹ்வின் புத்திரன் என்றும் மர்யமுடைய மகன் மஸீஹை (இயேசு) அல்லாஹ்வின் புத்திரன் என்றும் கூறி வந்த யூதர்களையும் கிறித்தவர்களையும் விமர்சித்த திருக்குர்ஆன் அவர்கள் பிரயோகித்த பதத்தைப் பற்றிக் குறிப்பிடுகையில் இப்னுல்லாஹ் என்று குறிப்பிடுகின்றது. அதன் பொருள் அல்லாஹ்வின் மகன் என்பதாகும். அது பற்றிக் குறிப்பிடும் வசனம்.


﴿ وَقَالَتِ الْيَهُودُ عُزَيْرٌ ابْنُ اللَّهِ وَقَالَتِ النَّصَارَى الْمَسِيحُ ابْنُ اللَّهِ ذَلِكَ قَوْلُهُمْ بِأَفْوَاهِهِمْ يُضَاهِئُونَ قَوْلَ الَّذِينَ كَفَرُوا مِنْ قَبْلُ قَاتَلَهُمُ اللَّهُ أَنَّى يُؤْفَكُونَ ﴾


யூதர்கள் (நபி) உஜைரை அல்லாஹ்வுடைய மகன் எள்று கூறுகிறார்கள் கிறிஸ்தவர்கள் (ஈஸா) மஸீஹை அல்லாஹ்வுடைய மகன் என்று கூறுகிறார்கள் இது அவர்கள் வாய்களால் கூறும் கூற்றேயாகும் இவர்களுக்கு, முன்னிருந்த நிராகரிப்போரின் கூற்றுக்கு இவர்கள் ஒத்துப்போகிறார்கள் அல்லாஹ் அவர்களை அழிப்பானாக! எங்கே திருப்பப்படுகிறார்கள்? (9:30)


இது போன்றே கிறித்தவ நம்பிக்கையாகிய திரித்துவத்தை விமர்சனம் செய்யும் திருக்குர்ஆன் வசனமும் அல்லாஹ்வை மூன்றில் ஒருவராக்கியிருக்கின்றனர் என்று குறிப்பிடுகின்றது. தவ்றாத்திலும் இஞ்சீலிலும் உண்மை இறைனாகக் குறிப்பிடப்பட்டுள்ள அல்லாஹ்வை மூன்று தெய்வங்களில் ஒன்றாக கிறித்தவர்கள் ஆக்கியுள்ளனர். அது பற்றிக் குறிப்பிடும் வசனம் :


﴿ لَقَدْ كَفَرَ الَّذِينَ قَالُوا إِنَّ اللَّهَ ثَالِثُ ثَلاثَةٍ وَمَا مِنْ إِلَهٍ إِلا إِلَهٌ وَاحِدٌ وَإِنْ لَمْ يَنْتَهُوا عَمَّا يَقُولُونَ لَيَمَسَّنَّ الَّذِينَ كَفَرُوا مِنْهُمْ عَذَابٌ أَلِيمٌ ﴾


நிச்சயமாக அல்லாஹ் மூவரில் மூன்றாமவன் என்று கூறியவர்கள் காஃபிர்களாக (நிராகரிப்பவர்களாக) ஆகிவிட்டார்கள். ஏனென்றால் ஒரே இறைவனைத் தவிர வேறு நாயன் இல்லை. அவர்கள் சொல்வதை விட்டும் அவர்கள் விலகவில்லையானால் நிச்சயமாக அவர்களில் காஃபிரானவர்களை துன்புறுத்தும் வேதனை கட்டாயம் வந்தடையும். (5:73)


இன்று நடைமுறையில் இருக்கும் அரபி மொழியில் உள்ள பைபிளிலில் கூட இறைவனைக் குறிப்பிடும் இடங்களில் அல்லாஹ் என்ற பதம் உபளோகிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கதாகும். அரபி பைபிளிலிருந்துள்ள ஒரு வசனம் காண்போம்:

الأَصْحَاءُ الأَوَّلُ
1 فِي الْبَدْءِ كَانَ الْكَلِمَةُ، وَالْ كَلِمَةُ كَانَ عِنْدَ اللهِ، وَكَانَ الْكَلِمَةُ اللهَ. 2 هَذَا كَانَ فِي الْبَدْءِ عِنْدَ اللهِ. 3 كُلُّ شَيْءٍ بِهِ كَانَ، وَبِغَيْرِهِ لَمْ يَكُنْ شَيْءٌ مِمَّا كَانَ. 4 فِيهِ كَانَتِ الْحَيَاةُ، وَالْحَيَاتُ كَانَتْ نُورَ النَّاس. 5 وَالنُّورُ يُضِيءُ فِي الظُّلْمَةُ لَمْ تُدْرِكُهُ


பல்வேறு கடவுள்களை வணங்கிக் கொண்டிருந்த மக்களுக்கிடையே நியமிக்கப்பட்ட இறைத்தூதர் அவர்கள் வணங்கிக் கொண்டிருந்த தெய்வங்களைப் புறக்கணித்து தான் சுட்டிக்காட்டும் தெய்வத்தை வணங்கவேண்டும் என்று மக்களிடம் கூறவில்லை. மாறாக அவர்கள் அனைவரும் ஒப்புக் கொள்ளக்கூடிய அகில உலகங்களின் படைப்பாளனும் கண்காணிப்பாளனுமாகிய, எல்லாவித வணக்க வழிபாடுகளுக்கும் உண்மையில் தகுதி படைத்த அல்லாஹ்வை மட்டுமே வணங்க வேண்டும் என்பதே அவர்கள் மக்களிடம் எடுத்துக்கூறிய விஷயம்.


﴿ قُلْ لِمَنِ الأرْضُ وَمَنْ فِيهَا إِنْ كُنْتُمْ تَعْلَمُونَ سَيَقُولُونَ لِلَّهِ قُلْ أَفَلا تَذَكَّرُونَ قُلْ مَنْ رَبُّ السَّمَاوَاتِ السَّبْعِ وَرَبُّ الْعَرْشِ الْعَظِيمِ سَيَقُولُونَ لِلَّهِ قُلْ أَفَلا تَتَّقُونَ قُلْ مَنْ بِيَدِهِ مَلَكُوتُ كُلِّ شَيْءٍ وَهُوَ يُجِيرُ وَلا يُجَارُ عَلَيْهِ إِنْ كُنْتُمْ تَعْلَمُونَ سَيَقُولُونَ لِلَّهِ قُلْ فَأَنَّى تُسْحَرُونَ بَلْ أَتَيْنَاهُمْ بِالْحَقِّ وَإِنَّهُمْ لَكَاذِبُونَ مَا اتَّخَذَ اللَّهُ مِنْ وَلَدٍ وَمَا كَانَ مَعَهُ مِنْ إِلَهٍ إِذًا لَذَهَبَ كُلُّ إِلَهٍ بِمَا خَلَقَ وَلَعَلا بَعْضُهُمْ عَلَى بَعْضٍ سُبْحَانَ اللَّهِ عَمَّا يَصِفُونَ عَالِمِ الْغَيْبِ وَالشَّهَادَةِ فَتَعَالَى عَمَّا يُشْرِكُونَ  


"நீங்கள் அறிந்திருந்தால், இப் பூமியும் இதிலுள்ளவர்களும் யாருக்கு(ச் சொந்தம்? என்று (நபியே!) நீர் கேட்பீராக! "அல்லாஹ்வுக்கே" என்று அவர்கள் கூறுவார்கள் "(அவ்வாறாயின் இதை நினைவிற்கொண்டு) நீங்கள் நல்லுணர்வு பெறமாட்டீர்களா?" என்று கூறுவீராக! "ஏழு வானங்களுக்கு இறைவனும் மகத்தான அர்ஷுக்கு இறைவனும் யார்?" என்றும் கேட்பீராக. "அல்லாஹ்வுக்கே" என்று அவர்கள் சொல்வார்கள் "(அவ்வாறாயின்) நீங்கள் அவனுக்கு அஞ்சி இருக்கமாட்டீர்களா?" என்று கூறுவீராக! "எல்லாப் பொருட்களின் ஆட்சியும் யார் கையில் இருக்கிறது? - யார் எல்லாவற்றையும் பாதுகாப்பவனாக - ஆனால் அவனுக்கு எதிராக எவரும் பாதுகாக்கப்பட முடியாதே அவன் யார்? நீங்கள் அறிவீர்களாயின் (சொல்லுங்கள்)" என்று கேட்பீராக. அதற்கவர்கள் "(இது) அல்லாஹ்வுக்கே (உரியது)" என்று கூறுவார்கள். ("உண்மை தெரிந்தும்) நீங்கள் ஏன் மதி மயங்குகிறீர்கள்?" என்று கேட்பீராக. எனினும், நாம் அவர்களிடம் உண்மையை கொண்டுவந்தோம் ஆனால் நிச்சயமாக அவர்களோ பொய்யர்களாகவே இருக்கிறார்கள். அல்லாஹ் தனக்கென ஒரு மகனை எடுத்துக் கொள்ளவில்லை. அவனுடன் (வேறு) நாயனுமில்லை அவ்வாறாயின் (அவர்கள் கற்பனை செய்யும்) ஒவ்வோர் நாயனும் தான் படைத்தவற்றை(த் தன்னுடன் சேர்த்து)க் கொண்டு போய் சிலர் சிலரைவிட மிகைப்பார்கள். (இவ்வாறெல்லாம்) இவர்கள் வர்ணிப்பதை விட்டும் அல்லாஹ் மிகவும் தூயவன். அவன் மறைவனதையும் பகிரங்கமானதையும் நன்கறிபவன் எனவே அவர்கள் (அவனுக்கு) இணை வைப்பவற்றை விட்டும் அவன் மிகவும் உயர்ந்தவன். (23: 84-92)