Index |Subscribe mailing list | Help | E-mail us

தயக்கம் ஏன் தோழர்களே! எழுதப் பழகுங்கள்!
 

 

இஸ்லாத்திற்கு எதிராக பனிப்போர் நடந்துக்கொண்டிருக்கிறது. மேற்கத்தியர்களும் மற்றும் அறிவுஜீவியாக தன்னைக் காட்டிக் கொள்பவர்களும் இஸ்லாத்திற்கெதிராக நடத்தும் எழுத்து மற்றும் கருத்துப்போரை பார்க்கும்போது அந்த பனிப்போர் உச்சத்தை அடைந்துவிட்டதோ என்று எண்ண தோன்றுகிறது.

அதிகமாக தொலைக்காட்சி பார்ப்பவர்களையும் செய்தி படிப்பவர்களையும் இந்த மீடியா முஸ்லிம்கள் தீவிரவாதிகள்தான் என நம்ப வைத்திருக்கிறது. எறும்பு ஊற கல்லும் தேயும் என்பார்கள். அதைப்போல நாலொரு வண்ணமும் பொழுதொரு செய்தியுமாக முஸ்லிம்கள் தீவிரவாதிகளாக சித்தரிக்கப்பட்டுக் கொண்டிருக்கிருப்பதால் தொலைகாட்சி கேட்பவர்களையும் செய்திப்படிப்பவர்களையும் இவ்வலைக்குள் விழ வைத்திருக்கிறார்கள். இதற்கு முஸ்லிம் அல்லாதவர்களின் கேள்வி பதில் நிகழ்ச்சிகள் நமக்கு பல சான்றுகள் தருகின்றன.

ராவுத்தர்கள் எடுக்கும் படத்தில்கூட முஸ்லிம்கள் தீவிரவாதிகளாகத்தான் சித்தரிக்கப்படுகிறார்கள். அதே போல முஸ்லிம் அல்லாதவர்கள் நடத்தும் இணையதளத்தில் ஒரு முஸ்லிம் இந்துமதத்தைப் பற்றி எழுதினால் வரவேற்கிறார்கள், பதிவு செய்கிறார்கள். ஆனால் இஸ்லாத்தைப்பற்றி எந்த செய்தியும் பதிவு செய்வதில்லை. (அப்படியே பதிவு செய்தாலும் அது தர்கா புராணமாகத்தான் இருக்கும்).

காந்தியை கொன்ற கோட்சே 'அவர்' என்று மரியாதையாகவும் சந்தேக கேஸில் மாட்டிக்கொண்ட முஸ்லிம்களை 'அவன்' என்று மரியாதை குறைவாகவும் செய்திகள் வெளியிடுவை பார்க்கலாம்.

இதற்கு தூபம் போடத்தான் அன்றே, பாட நூல்களில் மொகலாயர்களின் படையெடுப்பு, ஆரியர்களின் வருகை என்று ஆக்கிவிட்டார்கள் போலும்.

ஒரு பக்கம் முஸ்லிம்களை தீவிரவாதிகளாக சித்தரிக்கின்ற மீடியா, இன்னொரு பக்கம் தீவிர வாதிகளை சமூக சேவகர்களாக அங்கீகாரம் கொடுத்துக் கொண்டிருக்கிறது. இன்று செய்திப்பத்திரிக்கைகளை புரட்டினால் பி.ஜே.பி அல்லது ஆர்.எஸ்.எஸ் செய்திதான் அதிக இடத்தை பிடித்திருக்கிறது. ஒரு குக்கிராமத்தில் இவர்களின் கூட்டம் நடந்தால் கூட அது வெளிச்சப் படுத்தப்படுகிறது.

அவர்களுக்கு முஸ்லிம்களை தன் வலையினுள் கொண்டுவருவது மிகச்சுலபம். ஆட்டோ ஓட்டுகிறாயா? வா! எங்களின் ஆட்டோ சங்கத்தில் இணைந்துக்கொள். கார் ஓட்டுகிறாயா? வா எங்கள் கார் சங்கத்தில் இணைந்துக்கொள். எங்கள் தலைவர் பி.ஜே.பி என பேத்தலாம். எங்கள் தலைவரின் தலைவர் ஆர்.எஸ்.எஸ். -ல் அங்கம் வகிக்கலாம். ஆனால் மனிதர்களுக்கு உதவும் நல்மனம் கொண்டவர். அவரின் கட்சி முஸ்லிம்களுக்கு எதிரானதாக இருக்கலாம். அவர் முஸ்லிம்களுக்கு எதிரி அல்ல என்று முஸ்லிம்களை மூலைச்சலவை செய்துக் கொண்டிருக்கிறார்கள். ஆனால், வகுப்பு சண்டைகள் நடந்த இடத்தின் வரலாற்றைப் புரட்டி பார்ப்போமேயானால் ஒன்றை மிகத்தெளிவாக புரிந்துக்கொள்ளலாம்.

இவர்களுக்கு பக்கத்து வீட்டுக்காரர்தானே, நண்பரின் சகோதரி தானே, குழுந்தைதானே என்றெல்லாம் எந்த எண்ணமும் வருவதில்லை. முஸ்லிம் என்றால் பரவாயில்லை கற்பழிக்கலாம், கொல்லலாம், கண்டந்துண்டுகளாக வெட்டலாம், உயிருடன் எரிக்கலாம் என்றுதான் இவர்கள் புரிந்து வைத்திருக்கிறார்கள், இல்லையில்லை புரிய வைக்கப்பட்டிருக்கிறார்கள். குஜராத்தின் சம்பவம்தான் இதற்கு வெட்ட வெளிச்சம். குஜராத் மோடியின் மனிதப் படுகொலைக்காக குரல் கொடுத்த கவிஞர்களின் சில வரிகளை இங்கே உங்கள் பார்வைக்கு வைக்கிறேன்.

கவிக்கோ அப்துல் ரகுமான்:
முன்பு இந்துத்துவா என்றால்
பாரதப் பண்பாடு
இப்போது
கர்ப்பிணியின் வயிற்றைக் கிழித்து
சிசுக் கருவை
எடுத்துத் தீயில் வீசுதல்

கவிஞர் இன்குலாப்
எரியும் கொழுந்துகளில்
ஆண்கள்
பெண்கள்
வகிர்ந்த வயிற்றிலிருந்து
குருதி சொட்டும்
கொப்புள் கொடியோடு
கண் விழிக்காத
கருவறைச் சிசுக்கள்

கவிஞர் பொன்னீலன்
குறிகளுடனும் குண்டாந்
தடிகளுடனும்
வாள்களுடனும்,
சூலாயுதங்களுடனும்
மறுபடியும்
குகை விட்டுக் கிளம்பின - அந்தக்
கற்கால மிருகங்கள்
....
நிறைச் சூலி வயிறுகீறி
கண் திறவா பசும் குருத்தை
கோரைப் பற்கள் துருத்தும்
கடைவாயில் சிவப்பொழுக
கிழித்துக் கிழித்து
விழுங்கி ஆனந்தித்தன.

கவிஞர் சுகுணா திவாகர்
சுன்னத் குறியினரை தேடியலையும்
வாளின் பசி முன்
கையறு நிலையன்றி யாதுமில்லை
மறைப்பதற்கோ, காட்டிக்கொடுப்பதற்கோ
வென்றாயின அடையாளங்கள்

இப்படிப்பட்டவர்களிடம் கட்டைப் பஞ்சாயத்து நீதிக்கென கதவைத் தட்டுகிறார்கள். வாடகை வீட்டை காலி செய்யனுமா? வா நம் அண்ணனிடம் போகலாம் என்று முஸ்லிம்களை அழித்தொழிப்பவர்களிடமே தஞ்சம் போகிறார்கள். வரப்பு யாருக்குச் சொந்தம் என்ற சண்டை வக்கீலிடம் போனால் வயல் வக்கீலுக்கு சொந்தமாகிவிட்டது என்பார்கள். அதுபோலத்தான். அண்ணன் தம்பி பிரச்சினைக்கு தாதாக்களிடம் கட்டைப்பஞ்சாயத்துக்கு போக, சொத்து அண்ணனுக்கும் அல்ல தம்பிக்கும் அல்ல அவர்களுக்கு ஆகிவிடுகிறது. குரங்கு அப்பத்தை பங்கு போட்ட கதைதான்.

சரி இதுபோன்ற நிகழ்வுகளை எல்லாம் எப்பொழுது சமூகத்திற்கு சுட்டிக்காட்ட போகிறீர்கள்?. இத்தகைய அநியாயங்களை தோலுரித்துக் காட்டுவது நம் அனைவரின் பணியல்லவா?

எழுதப்பழகுங்கள்! உங்களுக்கென்று பல மக்கள் மன்றங்கள், விவாத அரங்குகள், வலைப்பூக்கள் இணையத்தில் இருக்கின்றது.

படியுங்கள், கண்ணியமாக கருத்துச் சொல்ல பழகுங்கள் பல இணையதளங்கள் இருக்கின்றது. உங்கள் எழுத்தினால் சமுதாயத்திற்கு ஏதாவது பயன்கிடைக்குமா என்று பார்த்து எழுதுங்கள் (புகழுக்காக அல்ல.

அதிகமாக எழுதுபவர்களை, அவர்களுக்கு ஃப்ரீ நேரம் இருக்கிறது என்று விமர்ச்சிக்கிறார்கள். அதிகமான எழுத்தாளர்கள் அவர்களின் தூக்கத்தை தியாகம் செய்துவிட்டு, நண்பர்களிடம் பிரச்சினைகளை பகிர்வதை விட்டுவிட்டு, மனைவி குழந்தைகளிடம சந்தோசமாக பேசிமகிழும் நேரத்தை குறைத்துக்கொண்டு, வெளியில் ஜாலியாக போய் சுற்றுவதை நிறுத்திக் கொண்டு எழுதுகிறார்கள் என்பதுதான் உண்மை.


தயக்கம் ஏன் தோழர்களே! எழுதப் பழகுங்கள்! புதிய சரித்திரம் படைத்திடுங்கள்!

நன்றி:
http://nihalvu.blogspot.com