Index |Subscribe mailing list | Help | E-mail us

பறவைக் காய்ச்சல் - (Bird Flu)

மணவை முனீரா

 

கடந்த சில மாதங்களாகவே மக்கள் மத்தியில் பறவைக் காய்ச்சல் பீதி அதிகரித்து வருவதும், கோழி மற்றும் பறவைகள் இறைச்சியை உண்பதற்குத் தயங்குவதும். தொடர்ந்து காய்ச்சல் இருந்தால் பறவைக் காய்ச்சலாக இருக்குமோ என்றெல்லாம் எண்ணுபவர்களும் இருக்கின்றனர்.


உலக சுகாதார மையம் (WHO) ஆய்வக கணக்கெடுப்பின்படி கம்போடியா, வியட்நாம், இந்தோனேஷியா, தாய்லாந்து மற்றும் துருக்கி போன்ற நாடுகளில் 2003 முதல் 2006 வரையில் மொத்தம் 151 பேருக்கு இந்த பறவைக் காய்ச்சல் தாக்கப்பட்டு அதில் 82 பேர் மரணம் அடைந்துள்ளனர். இச்சூழலில் பறவைக் காய்ச்சல் பற்றி நீங்கள் என்ன தெரிந்து வைத்திருக்கிறீர்கள்?


பறவைக் காய்ச்சல் வைரஸ் முதன்முதலில் வியட்நாம் நாட்டில் 2003 டிசம்பரில் கண்டறியப்பட்டது. இருப்பினும் ஜனவரி 11, 2004 வரைக்கும் இதற்கு H5N1 என்று பெயரிடப்படவில்லை.

பறவைக் காய்ச்சல் பற்றிய சில குறிப்புகள்


- பறவைக் காய்ச்சல் என்பது பலதரப்பட்ட வைரஸ் வகைகளின் தாக்குதல்களால் ஏற்படுகின்றது. இந்த வைரஸ்கள் முதன் முதலில் பறவைகளைத்தான் தாக்குகின்றன. அதன் பின் அவற்றிலிருந்து மனிதர்களுக்கும் மற்ற பாலூட்டி வகை விலங்குகளுக்கும் தாக்குகின்றது.

- HPAI பறவைக் காய்ச்சல் என்பது ஒரு மிகப்பெரிய ஒட்டி பரவக்கூடிய ஒருவித வைரஸ் நோய். இது பறவைகளையும், பண்ணைகளில் உள்ள கோழிகளையும் தாக்குகின்றது.

- பறவைக் காய்ச்சல் தாக்குதலால் ஆசிய ஐரோப்பியாவில் உள்ள சிலர் மரணத்திற்கு உள்ளாகியிருக்கின்றனர்.

- A, B, C என்று மூன்று வகையான வைரஸ் காய்ச்சல்கள் உள்ளன. இதில் A மற்றும் B வைரஸ்கள் மனிதர்களுக்கு நோய்களை கணிசமான அளவில் ஏற்படுத்துகின்றன.

- கோழிப் பண்ணைகளின் மூலம் வரும் பறவைக் காய்ச்சல் மனிதர்களைத் தாக்குகின்றது. இதை H5N1 - A வகை பறவைக் காய்ச்சல் என்று வகைப்படுத்துகின்றனர்.

பறவைக் காய்ச்சலின் அறிகுறிகள்

- காய்ச்சல், இருமல், தசை வலி, சளி, தொண்டை வரட்சி.


- சிலருக்குக் கண் நோயும், சுவாசக் கோளாரும் உண்டாகும்.


- இது போன்ற காரணிகள் தென்பட்டால் மருத்துவ வல்லுனரை சந்திப்பது நல்லது.

ஆவியோன் புளு (Avian Flu) என்ற பறவைக் காய்ச்சல் மனிதர்களுக்கு எப்படிப் பரவுகின்றது.


பறவைக் காய்ச்சலால் பாதிக்கப்பட்ட பறவைகளின் வைரஸ்கள், எச்சில்கள், அதன் மூக்கிலிருந்து வடியும் நீர், வைரஸ் பாதிக்கப்பட்ட பறவைகளின் கழிவுகளின் துகள்கள் காற்றில் பரவுவது போன்ற காரணிகளால் மனித இனத்திற்கு இந்நோய் பரவுகின்றது.


இந்த நோய் எவ்வளவு காலம் தொற்றிப் பரவக்கூடியதாக உள்ளது?


பாதிக்கப்பட்ட மனிதருடைய வயதைப் பொறுத்து, பெரியவர்களை உடல் நலக் குறைவு ஏற்படுவதற்கு முந்தைய நாள் மற்றும் 3 முதல் 7 நாட்கள் வரை தாம் முதலில் கண்ட அறிகுறியிலிருந்து இந்த நோய் தொற்றிப் பரவக் கூடியதாக உள்ளது. சில குழந்தைகளை வாரக் கணக்கிலும் இது தொற்றிப் பரவக் கூடியது.


நோய் பரவாமல் தடுக்க நாம் என்ன செய்ய வேண்டும்?


- கோழிப் பண்ணைகளுக்குச் சென்று பார்வையிடுவதை தவிர்த்தல்.


- பறவைக் காய்ச்சல் பரவியுள்ள நாடுகளுக்கு பயணம் செய்ய நேரிட்டால், கீழ்கண்ட சுகாதார முறைகளைப் பின்பற்றுதல் ஆகியவைகளால் பறவைக் காய்ச்சல் நோய் பரவும் அபாயத்தைக் குறைக்கலாம்.


- உயிருள்ள கோழிகள் மற்றும் பறவைகளைத் தொடுவது கூடாது.


- குழந்தைகளோடு கூட்ட நெரிசலில் செல்வதைத் தவிர்க்கவும்


- நல்ல காற்றோட்டமுள்ள இடங்களில் தங்குவது.


- கோழிகளையோ அல்லது வேறு பறவைகளையோ தொட்டுவிட்டால் கைகளை சோப்பு மற்றும் தண்ணீரால் நன்கு சுத்தம் செய்ய வேண்டும்.


-சுகாதாரமான சுற்றுப்புறச் சூழலை மேற்கொள்ளுதல் அவசியம்.

மற்ற நாடுகளுக்குப் பயணம் செய்தல்


உலக சுகாதாரக் கழகம் (WHO) மற்ற நாடுகளுக்குப் பயணம் செய்வதை தடைசெய்யவில்லை. ஆனால், நோய் பரவிய நாடுகளுக்கு பயணம் செய்ய நேரிட்டால் கோழி மற்றும் பறவைப் பண்ணைகளுக்குச் சென்று பார்வையிடுவதைத் தவிர்க்கவும்.

தடுப்பு முறைகள்


சுகாதார வல்லுனர்களின் சிபாரிசு

திடீரென்று பறவைக் காய்ச்சல் நோய் பரவியுள்ள நாடுகளுக்குச் செல்ல நேரிட்டால் 6 மாதக் கைக் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் தடுப்பூசியை போட்டுக்கொள்ள வேண்டும்.


நோயுள்ள கோழிகளுள்ள பண்ணைகள் மற்றும் விற்பனைக்கூடங்களில் உள்ளவர்களும் தடுப்பூசி போட்டுக்கொள்ள வேண்டும்.
ஒரே சமயத்தில் பறவைகள் மூலமாகவும், மனிதர்கள் மூலமாகவும் பரவக் கூடிய வைரஸ் நோய்க் கிருமிகள் மனிதர்களைத் தாக்கக் கூடிய அபாயத்தைத் தவிர்க்கவே தடுப்பூசி போடுதல் அவசியமாகின்றது.

உணவுப் பழக்க முறைகள்

- மார்க்கெட்டுகளில் கிடைக்கும் கோழிகளும், முட்டைகளும் சாப்பிடுவதற்கு உகந்தது எனினும் அதை நன்றாக வேகவைத்த பின்தான் சாப்பிட வேண்டும்.


- நன்றாக சமைக்கப்பட்ட கோழி, வாத்து இறைச்சி மற்றும் முட்டைகளை உண்பதினால் பறவைக் காய்ச்சல் வரும் என்பதற்கு ஆதாரம்

 இல்லை.


- டின்களில் பதப்படுத்தப்பட்டு வரக்கூடிய கோழிச்சாறும் உண்பதற்கு உகந்ததே ஏனெனில் அனைத்து டின்களில் வரும் பொருட்களும் கடுமையான சூடான செயல்முறைக்கு உட்படுத்தப்படுவதால் அதில் வைரஸ்கள் இருப்பினும் அழிந்து விடுகின்றன.


கோழிகளைச் சமைப்போர் கவனத்திற்கு


- சமைத்த கோழிகளையும், சமைக்கப் படாத கோழிகளையும் பிரித்து வைக்க வேண்டும்.


- உணவு தயாரிப்பதற்கு முன்பும், பின்பும்; கைகளை சுத்தமாகக் கழுவ வேண்டும்.


- கோழி இறைச்சியை நன்றாக வேக வைக்க வேண்டும்.

 

- பச்சை முட்டை மற்றும் அரைகுறையாக வேகவைக்கப்பட்ட முட்டை மற்றும் கோழி இறைச்சியை உண்பதைத் தவிர்க்கவேண்டும்.