<< பாகம் -1
(குழந்தை நலம்:
தொடர்-2)
சிறு குழந்தைகளை சற்று கவனித்துப் பாருங்கள், அதிலும் அவர்களின்
நடவடிக்கைகளை உற்றுக் கவனியுங்கள், அவர்களின் புன்னகையின் பின்னணியில்
ஊடுருவி நோக்குங்கள் மிகப் பெரிய ஆச்சரியம் மேலிடும். தன் தாயும்,
தந்தையும் பேசும் உரையாடல்கள், கைகளை ஆட்டிப் பேசும் விதம், ஆகியவற்றை
உண்ணிப்பாய் பார்த்து தனியாக இருக்கும் போது, அதை அப்படியே செய்து
மகிழ்வதைக் காண முடியும்.
குழந்தையின் முதல் பள்ளிக்கூடம் தாயின் மடி என்பார்கள். ஒரு குழந்தை
தட்டுத் தடுமாறி பேச முனைவது, கைகளை அசைத்து தன் எண்ணங்களை
வெளிப்படுத்துவது எல்லாம் தமக்கு அருகாமையில் நடக்கும் சம்பவங்களை
பார்த்துத்தான் என்பதும், குழந்தை பேசுவதற்கு முன்பாக செய்யும் வேலை
மற்றவர்களை உற்றுக் கவனிப்பது என்பதும்தான். எனவே அப்பருவத்தில்
அவர்களுக்கு நல்ல செயல்களைக் கற்றுக் கொடுக்க வேண்டும். உதாரணமாக
அல்லாஹ் எங்கே இருக்கின்றான் எனக் கேட்டால் மேலே கையை உயர்த்திக்
காட்டலாம். அம்மா, அப்பா போன்ற எளிதான வார்த்தைகளோடு அல்லாஹ் என்ற
வார்த்தையையும் கற்றுக் கொடுக்கலாம்.
சிறு சேட்டைகள் செய்யும் போதுகூட மற்றவர்களின் பெயரை கூறி, சொல்லிக்
கொடுப்பேன் என்று கூறுதைவிட அல்லாஹ்வைக் கொண்டு பயமுறுத்தலாம்.
குழந்தைகள் பேச ஆரம்பித்து, நடக்க ஆரம்பித்ததும் அவர்களுக்கு மெல்ல
மெல்ல இஸ்லாத்தை அறிமுகப்படுத்த வேண்டும். ஒவ்வொரு செயலுக்குப்
பின்னாலும் அல்லாஹ் இருக்கின்றான் என்பதை அடிக்கடி அவர்களுக்கு
ஞாபகப்படுத்துங்கள். சிறு காயங்கள் ஏற்பட்டுவிட்டால் அல்லாஹ் இந்தக்
காயத்தைப் போக்க மருந்துகள் மூலம் நிவாரணமளிப்பான்
என்று ஆறுதல் வார்த்தைகளைக் கூறுங்கள்.
அடுத்து நீங்கள் செய்ய வேண்டியது தொழுகையை அறிமுகப்படுத்த வேண்டும்.
நாம் பள்ளிக்குச் செல்லும்போது அவர்களையும் உடன் அழைத்துச் சென்று
தொழும் காட்சியை காணச் செய்யவேண்டும். தக்க முதிர்ச்சி அடைந்ததும்
தொழச் சொல்ல வேண்டும்.
நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள் :
ஏழு வயதில் குழந்தைகளுக்கு தொழ ஏவுங்கள். பத்து வயதில் (தொழுகையை
விட்டால்) அவர்களை அடியுங்கள்.
அறிவிப்பாளர் : அபூஸுரையா ஸபரா பின் மஃபதில் ஜுஹனீ(ரலி)
ஆதாரம் : திர்மிதி
ஒருவர் இந்த ஹதீஸை செவியேற்ற பின்னரும் குழந்தைகளை தொழ ஏவவில்லை
என்றால் குழந்தை வளர்ப்பில் பெரும் குறையுடையதாக அந்த இல்லம்
மாறுவதோடு, பெற்றோர்கள் இருவரும் இறைவனின் முன்னிலையில் குற்றவாளிகளாக
நிறுத்தப்படுவர்.
அடுத்ததாக அவர்கள் வளரக்கூடிய சூழலை நல்ல சூழலாக அமைக்க வேண்டும்.
கெட்ட வார்த்தைகளை அவர்கள் முன் பேசுவது, நமது கோப தாபங்களை அவர்கள்
முன்னிலையில் வெளிக்காட்டுவது போன்றவை கூடவே கூடாது.
குழந்தைகள் எதைப் பேசினாலும் அலட்சியப்படுத்தாமல் அவர்களது கோரிக்கைகளை
செவிசாய்த்துக் கேட்பதோடு முக்கியமாக அவர்களது உணர்வுகளுக்கு மதிப்பும்
கொடுக்க வேண்டும். சிரித்தால் காரணம் கேளுங்கள், அழுதால் ஆறுதல்
சொல்லுங்கள். கணவன் மனைவியிடையே நிகழும் சில கருத்து வேறுபாடுகள்,
சச்சரவுகளை பிள்ளைகள் முன்னிலையில் கண்டிப்பாகத் தவிர்க்க வேண்டும்.
அவர்கள் மத்தியில் நடக்கும் தவறான பேச்சுக்கள், சண்டைகள் அவர்கள்
மனதில் பதிந்து பின்னாளில் பெரும் நடைமுறைப் பாதிப்பிற்குள்ளாகிவிடும்,
சில நேரம் இது பெரும் விபரீதமாய் உருவெடுத்து குடும்ப நிம்மதியை
குலைத்துவிடவும் கூடும்.
தனது நண்பரின் வாழ்க்கையில் நடந்த சம்பவத்தை சமூக ஆர்வலர் எஸ். ஜெயஸ்ரீ
இப்படி விவரிக்கின்றார்.
"எனது நண்பர் ஒருவர் தனது பெற்றோரை தன்னுடன்
வைத்துக் கொண்டார் என்றாலும், அவர்கள் மேல் அன்பு காட்டாது, அவர்கள்
செய்யும் செயல்களால் எரிச்சலடைவது, அவர்கள் மீது எப்பொழுதும் கோபத்தைப்
பாய்ச்சுவது என்று இருந்தார். இதை அவதானித்துக் கொண்டிருந்த குழந்தைகள்
மத்தியில் தனது தாத்தா, பாட்டி இருவர்தான் நம் குடும்ப
நிம்மதியின்மைக்குக் காரணம் என்ற எண்ணம் அவர்கள் மனதில் ஆழமாக
பதிந்துவிட்டது. அந்த குழந்தைகளும் தனது தாத்தா, பாட்டியை தூஷிக்கத்
துவங்கிவிட்டனர். அந்த முதியோர்களின் நிலை குறித்து வேறு நபர் மூலம்
எனக்குச் செய்தி கிடைக்கவே சம்பந்தப்பட்ட எனது நண்பரிடம் நானே சென்று
மென்மையாக விஷயம் கேட்டதில் மனதில் உள்ளவற்றை கொட்டித் தீர்த்து
விட்டார்.
அவர் தம் பெற்றோர் மீது கூறிய பிரதானக் குற்றச்சாட்டுகள், அவர் சிறு
பிள்ளையாக இருக்கும் போது அவரது சின்னச் சின்ன ஆசைகளைக் கூட
நிறைவேற்றவில்லை. இன்னும் அவரது உணர்வுகளுக்கு மதிப்பளிக்காமல் தாங்கள்
இஷ்டத்துக்கு என்னை அதட்டிப் பணிய வைத்தனர். தன்னை மகனாகவே அவர்கள்
மதித்ததில்லை. அதனால் ஏற்பட்ட வெறுப்பு மனதில் ஆழமாய் பதிந்து அவர்கள்
பேசும்போது எனக்கு பெரும் கோபத்தையும், எரிச்சலையும் உண்டுபண்ணுகிறது.
இதனால் ஏற்பட்ட கோபத்தை தன் பிள்ளைகள் மேலும் காட்ட என் குடும்பமே
நிம்மதியின்றி தவிக்கின்றது, என்று கண்ணீர் மல்கக் கூறினார்."
(நன்றி : தினமணி 11-01-06)
இந்த இடத்தில் நாம் சொல்லும் விஷயத்தை தவறாகப் புரிந்துகொள்ளக் கூடாது.
பெற்றோர்கள் மிக அதிகமாக மதிக்கப்படவேண்டியவர்கள். அவர்களைச்
சிலாகித்து இறைவன் பல இடங்களில் நமக்குக் கட்டளையிடுகின்றான்.
பெற்றோர்களுக்கு இஸ்லாம் மிக உயர்ந்த அந்தஸ்த்தைக் கொடுத்திருக்கின்றது
என்பதை யாரும் மறுக்க முடியாது. அதே சமயம் நாம் நமது குழந்தைகளின்
உணர்வுகளை புரிந்து கொள்ளாது அடக்கி ஆளும் மனோபாவத்தால் தம் பிள்ளைகள்
பெரியவர்களாகும் போது நம் மீது வெறுப்பு ஏற்பட நாமே
காரணமாகிவிடுகிறோம்.
நாம் நடந்து கொள்ளும் முறைகளை வீட்டில் வளரும் குழந்தைகள்
புரிந்துகொள்ள முடியாமல் விழிக்கின்றனர். விளக்கிச் சொல்ல முடியாத
சூழல் ஒரு புறம், குழந்தைகள் மனதில் சம்பவங்கள் ஆழப் பதிவது மறுபுறம்.
இவ்வாறு ஆழப் பதிந்துவிட்ட அந்த சம்பவங்கள் பின்னாளில் அவர்களது
வாழ்க்கையில் பிரதிபலிக்கத் தொடங்கிவிடுகின்றன. குழந்தை வளர்ப்பில்
நாம் செய்த ஒரே ஒரு தவறுக்கு நமது பிள்ளை, அவர்களது பிள்ளை என்று
சங்கிலித் தொடராய்.., பல சிக்கல்கள் ஏற்பட நாம் காரணமாக அமைவது முறையா?
எனவே அன்பு வாசகர்களே! என் குழந்தையை நான் நல்லவனாக வளர்ப்பேன் என
சூளுரைக்கும் நீங்கள் முதலில் மேற் சொன்ன குறைபாடுகள் நம்மிடம்
இருந்தால் களைந்து குழந்தைகளின் உணர்வுகளை புரிந்து, அவர்களின்
அபிலாசைகளை நிவர்த்தி செய்து, அவர்களுக்கு மதிப்பளியுங்கள்!
>> பாகம் -3
|