Index |Subscribe mailing list | Help | E-mail us

கல்லூரியில் கற்கும் காலம் பொற்காலம்

M.ஜமீலா B.A (Arabic), அஸ்மா அரபி கல்லூரி, ஏர்வாடி

 

கல்லூரி என்பது ஒரு சுதந்திரமான வேடந்தாங்கல் போன்றதாகும் அங்கு கற்கும் மாணவ மாணவிகள் பறவைகள் போலாவார்கள். பல்வேறு இடங்களில் இருந்து ஒன்று கூடும் அந்த பறவைகள் எந்த ஒரு கவலையின்றி சந்தோஷமாக வாழ்கின்றனர். அது போல தான் மாணவ மாணவிகள்.

எங்கும் காணமுடியாத ஓர் உறவு ஒற்றுமையை இங்கே காணமுடியும். மாணவ, மாணவிகளின் ஒற்றுமையில் தான் பலவித அற்புதங்களை காண முடியும். ஒரு மாணவனுக்கு அநீதி இழைக்கப்பட்டால் கன்னியாகுமரி முதல் காஷ்மீர் வரை உள்ள ஒற்றுமையை இவர்கள் மூலம் பார்க்கலாம். மாணவர்களின் சக்திக்கு முன்னால் இவ்வுலக சக்திகள் யாவும் எடுபடாது.

'இன்றைய மாணவர்கள் நாளைய தலைவர்கள் 'இவ்வாறு சிறந்த தகுதியுள்ள மாணவ மாணவியர்கள் தன்னுடைய இளமை பருவ காலத்தை வீணாக்கக் கூடியவர்களாக இருக்கின்றனர்.


இறைவன் தன் திருமறையில்,

'காலத்தின் மீது சத்தியமான மனிதன் நஷ்டத்தில் இருக்கிறான்' (103:1,2)

காலத்தைப் பற்றி இவ்வுலகில் பல வர்ணிப்புகள் உள்ளன. உதாரணத்திற்கு 'காலம் பொன் போன்றது' என்று வர்ணிக்கிறான். ஆனால் பொன்னை விட மிக மதிப்புள்ளது காலம், ஏனெனில் இவ்வுலகில் உள்ள உயர்ந்த பொருட்களை மனிதன் வசப்படுத்தி க் கொள்கிறான். ஆனால் தன் வாழ்நாளில் கடந்து சென்ற ஒரு நிமிட காலத்தை அவன் திரும்ப பெறவே முடியாது. இவ்வாறு சிறப்பு மிக்க காலத்தில் மனிதனுக்கு  குழந்தைப் பருவம், இளமைப் பருவம், முதுமைப் பருவம் என்று மூன்று நிலைகளை ஏற்படுத்தியுள்ளான். இதில் இளமைக்காலத்தை இறைவன் பொற்காலமாக ஆக்கித் தந்துள்ளான், ஏனெனில் இக்கால கட்டத்தில் தான் மனிதர்கள் ஆரோக்கியமாகவும், எந்த ஒரு காரியத்திலும் சுறுசுறுப்பாகவும், புதிய விஷயங்களை கற்றுக் கொள்ளும் வேகத்தையும், அறிவையும் பெற்று இருக்கிறார்கள்.

மாணவ, மாணவியர்களில் சிலர் நாகரீகம் என்ற பெயரில் கலாச்சாரச் சீரழிவில் சிக்கி நாசமடைந்து கொண்டிருக்கின்றனர். மற்றொரு சாரார் ஏதோ படிக்க வந்தோம் படித்தோம் என்று எவ்வித குறிக்கோள்களும் இல்லாமல் சோம்பேறித்தனமாய் இருக்கின்றார்கள். இவ்வாறு நாம் எந்த நோக்கத்திற்காக வாழ்கின்றோம். எதை நோக்கிச் செல்கின்றோம் என்று புரியாமல் இளமையான தன் பொற்காலங்களை வீணாக்கி கொண்டிருக்கிறார்கள்.

இன்னும் எவ்வளவு தான் மேதைகளாக இருந்தாலும் இஸ்லாத்தினுடைய கோட்பாடுகளை அவர்கள் அறியவில்லையென்றால் அவர்களின் வாழ்க்கை கேள்விக்குறியாகவே இருக்கும்.

உலகின் சிறந்த மனிதரான நபி (ஸல்) அவர்கள் கூறுகிறார்கள். 'ஆதமுடைய மகன் இரண்டு விஷயத்தில் அலட்சியமாக இருக்கிறான். 1)ஆரோக்கியம் 2) அவனுடைய வாழ்நாள் என்றார்கள்.' (ஆதாரம்-புஹாரி)

'நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம்' என்ற பழமொழி தான் பெரும்பாலும் இன்று இஸ்லாமிய சமுதாய மாணவ, மாணவிகளிடம் பிரபலமாக உள்ளது. ஆனால் அதை விட நம் தூதர் முகம்மது (ஸல்) அவர்களும், இறைவனும் மனிதர்கள் தன் நிலைகளை எண்ணி சிந்திக்கம் விதமாக அழகாக கூறி விழிப்படையச் செய்கிறார்கள் என்பதனை இன்று எத்தனை மாணவ,மாணவிகள் அறிவார்கள்?

கல்லூரி கற்கும் பொற்காலங்களில் சிலர் சிகரெட், கஞ்சா, மது போன்ற போதை பொருட்களுக்கு அடிமையாகின்றனர். இதற்கு அவர்கள் சொல்லும் காரணமோ பொழுது போக்கிற்காகவும், தன் நண்பர்கள் முன் நான் மட்டும் உபயோகிக்காமலிருந்தால் தனக்கு கேவலம் என்றும், மனக்கவலைகளை மறக்க என்றும் பல்வேறு அற்பமான காரணங்களை முன் வைக்கின்றனர்.

புகையிலை ஒழிப்பு நாள் என்று அக்டோபர் 11-வது நாளில் மட்டும் எதிர்ப்பை இளைய சமுதாயம் தெரிவித்துவிட்டு நம் கடமை முடிந்தது என்று உள்ளனர். போதைகளின் விளைவை பெரும்பாலானோர் அறியவில்லை.

இந்த புகைப்பழக்கத்தால் இந்தியாவில் மட்டும் ஆண்டுக்கு 8 லட்சம் பேர் உயிரிழக்கின்றனர். இதனை உபயோகிக்கும் மனிதனின் வாழ்க்கையை இப்பழக்கம் ஒவ்வொரு முறையும் 15 நிமிடம் குறைத்து விடுகிறது. இதனை தொடச்சியாக பிடிக்கும் மனிதன் தன் வாழ்நாளில் 7 ஆண்டுகளை இயற்க்கையாக இறப்பதற்கு முன் இழந்து விடுகிறான். 2020 – ம் ஆண்டில் மிகப்பெரிய ஆள்கொல்லி நோயாக மாறிவிடும் என விஞ்ஞானிகள் எச்சரித்து உள்ளார்கள். உலகம் முழுவதும் 35 லட்சம் பேர் இப்பழக்கத்திற்கு அடிமையாகி மரணிக்கின்றனர். இந்த நச்சுப்புகையை அருகிலிருந்து சுவாசிப்பவருக்கு ஒரு ஆண்டுக்கு 10 லட்சம் பேர் பிற நோயால் பாதிப்படைகின்றனர். வளர்ந்துவிட்ட நாடாகிய அமெரிக்காவில் ஒரு ஆண்டுக்கு 3 ஆயிரம் சிறுவர்கள் இப்பழக்கத்திற்கும் இந்தியாவில் 2 கோடி சிறுவர்கள் இப்பழக்கத்திற்கும் அடிமையாகின்றனர்.

இப்புகையில் உள்ள நிகோடின் போன்ற நச்சுபொருள் மனிதனின் இரத்தத்தில் கலந்து உடலுறுப்புகள் பாதிக்கப்படைகின்றன. விரைவிலேயே மலட்டுத் தன்மையை அடைகிறார்கள். இந்த சிகரெட் விற்பனையில் 3-வது இடத்தில் இந்தியா உள்ளது. 5 ஆயிரத்து 500 கோடி இதன் மூலம் சம்பாதிக்கிறது. ஆனால் புகைப்பதால் வரும் நோய்க்கு செலவிடும் தொகை 13 ஆயிரத்து 500 கோடியை மக்களிடமிருந்து வசூலிக்கிறது.
 
இவ்வாறு மனிதனின் உயிரை அவன் அறியாத விதத்தில் பறிக்கும் நஞ்சை, பலர் அமிர்தமாக எண்ணி தன் ஆரோக்கியத்தைக் கெடுத்து, தன் முதுமைப்பருவத்தை நோயினால் கழிக்கின்றனர். தில் இஸ்லாமிய இளைஞர்களும் இருப்பதை எண்ணினால் வேதனை தான் விஞ்சுகிறது.

 

அதிகம் அருந்தினால் போதை தரும் பானத்தைக் குறைவாக அருந்துவதும் ஹராம்- தடுக்கப்பட்டதாகும் என நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர்: ஜாபிர்(ரலி) - ஆதாரம்: திர்மிதீ, அபூதாவூத்
 

அடுத்து மதுவை பார்ப்போம்.


மனிதர்கள் மதுவின் பக்கம் செல்வதை கூட இஸ்லாம் அனுமதிக்கவில்லை. நபி (ஸல்) அவர்கள் அல்லாஹ்வையும், மறுமை நாளையும் ஆழமாக நம்பியவர்கள் மதுபானம் பரிமாறப்படுகின்ற இடத்தில் அமர வேண்டாம் என்று கூறியுள்ளார்கள்.

இன்று மேலை நாடுகளிலும், நம் நாடுகளில் கூட 5 நட்சத்திர ஹோட்டல்களிலும் சில அலுவலக விழாக்களிலும் Party என்ற பெயரில் இசைகளுடன் பரிமாறக் கூடிய குளிர்பானங்களில் மதுவை கலந்து தருகின்றனர். இதனை அறியாத சிலர் அதை பருகிவிடுகிறார்கள். சிலர் அறிந்தே பருகி அதில் பல வரம்புகளை மீறிவிடுகின்றனர். இதனை நபி (ஸல்) அவர்கள்,

எனது சமூகத்தில் வேறு பெயர்களை வைத்து மது அருந்துவார்கள், அவர்களது முன்னிலையில் இசைகருவிகள் இசைக்கப்படும், பாடல்கள் பாடப்படும். இவர்களை அல்லாஹ் பூமிக்குள் செருகி விடுவான் என்றார்கள். (ஆதாரம் : இப்னு மாஜா)

 

நிச்சயமாக அல்லாஹ் மதுவைப் பிழிபவன், பிழியச் சொல்பவன், அருந்துபவன், ஊற்றிக் கொடுப்பவன், சுமப்பவன், சுமக்கச் சொல்பவன், விற்பவன், வாங்குபவன், அன்பளிப்புச் செய்பவன், அதன் வருமானத்தில் உண்பவன் என, மதுவுடன் தொடர்புடைய பத்து நபர்களை நபி(ஸல்) அவர்கள் சபித்தார்கள்.
அறிவிப்பவர்: அனஸ்(ரலி) ஆதாரம்: திர்மிதீ, இப்னுமாஜா, அபூதாவூத்

சில இஸ்லாமிய இளைஞர்கள் கூட இதுபோன்ற Functionனில் கலந்து தன் நிலையை மறக்கின்றனர்.


சமீபத்தில் வார இதழ் ஒன்றில் உண்மை சம்பவமாக இடம்பெற்ற பகுதியில், ஒரு ஆண் மது அருந்திவிட்டு இரவில் வீட்டுக்கு சென்று தன் மனைவி என்று போதையில் தன் மகளிடம் சென்று தகாத முறையில் நடந்து கொண்டான். இவ்வாறு போதையானது மனிதனை மிருகத்தை விட கேவலமாக ஆக்குகின்றது.

நபி (ஸல்) அவர்கள் இதனையும் தெளிவுபடுத்தியுள்ளார்கள்.


மதுபானம் பெரும்வாவங்களில் ஒன்றானது. மானக்கேடான காரியங்களின் முதன்மையானது. மதுபானம் அருந்தியவன் தொழுகையை விட்டு விடுவான். தனது தாய், தாயின் சகோதரி, தந்தையின் சகோதரி போன்ற உறவுகளுடன் பாலியல் ரீதியான தொடர்பில் ஈடுபட்டு விடுவான் என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (ஆதாரம்-தப்ராணி)


இறைவன் மதுவைப் பற்றி தன் திருமறையில்


'ஈமான் கொண்டவரே! மதுபானமும், சூதாட்டமும் கற்சிலைகளை வழிபடுதலும், அம்புகள் எறிந்து குறி கேட்பதும் ஷைத்தானின் அருவருக்கத் தக்க செயல்களில் உள்ளவையாகும். ஆகவே நீங்கள் இவற்றை தவிர்த்துக் கொள்ளுங்கள். அதனால் நீங்கள் வெற்றி அடைவீர்கள்'.

நிச்சயமாக ஷைத்தான் விரும்புதெல்லாம் மதுபாணத்தைக் கொண்டும், சூதாட்டத்தைக் கொண்டும் உங்களிடம் பகைமையையும் வெறுப்பையும் உண்டு பண்ணி அல்லாஹ்வின் நினைவிலிருந்தும் தொழுகையிலிருந்தும் உங்களை தடுத்துவிடத்தான் எனவே அவற்றை விட்டும் நிங்கள் விலகிக் கொள்ள மாட்டீர்களா?
(அல்குர் ஆன் 5:90,91)


இப்பழக்கத்திற்கு அடிமையாவதன் முலம் தன் படிப்பில் கவனம் இல்லாமல் தன் மனம் போன போக்கில் சென்று தன் எதிர்காலத்தை இருளாக ஆக்கிகொள்கிறான். மற்ற மனிதர்களிடமும் இழிவான அந்தஸ்தை பெற்றுக் கொள்கிறான்.

நபி(ஸல்) அவர்களின் காலத்தில் மது அருந்தியவனைப்பார்த்து, "அவனை அடியுங்கள்" என நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். அப்பொழுது எங்களில் சிலர் செருப்பாலும், ஆடைகளினாலும் கரத்தாலும் அவனை அடித்தர்." (ஆதாரம் : புகாரி)

சமீபத்தில் மதுரையைச் சார்ந்த ஒரு கல்லூரி மாணவி கூட கஞ்சா விற்று காவல் துறையினரிடம் குற்றவாளியாகப் பிடிபட்டுள்ளாள். (தினமணி : 21-02-06)

போதைக்கு ஆண்கள் தான் அடிமையாக்கி உள்ளார்கள் என்ற நிலை மாறி பெண்களும் இதில் ஈடுபட்டுள்ளது தான் மிகப் பெரிய வேதனையளிக்கும் விஷயமாகும்.

மறுமையில் இதற்கான தண்டனைகளையும் இஸ்லாம் தெளிவாக கூறுகிறது.

 

மது அருந்துபவனின் நாற்பது நாட்கள் தொழுகை ஏற்றுக் கொள்ளப்படமாட்டாது. அதற்காக அவன் மன்னிப்புத் தேடினால் அல்லாஹ் அவனை மன்னித்து விடுகிறான். அதை மீண்டும் அருந்தினால் மேலும் நாற்பது நாட்கள் தொழுகையை அல்லாஹ் ஏற்றுக்கொள்ள மாட்டான். அதற்காக அவன் மன்னிப்புத் தேடினால் அல்லாஹ் அவனை மீண்டும் மன்னித்து விடுகிறான். நான்காம் தடவையும் மது அருந்தினால் அவனது நாற்பது நாட்கள் தொழுகையை அல்லாஹ் ஏற்றுக் கொள்ளாதது மட்டுமின்றி அவன் அதற்காக மன்னிப்புத்தேடினாலும் அவனை அல்லாஹ் மன்னிக்க மாட்டான். மேலும் அவனுக்கு ஹபால் எனும் நதியிலிருந்து புகட்டுவான் என நபி(ஸல்) கூறியதாக இப்னு உமர்(ரலி) அறிவித்தார்கள். அப்போது அபூஅப்துர்ரஹ்மானே! ஹபால் என்றால் என்ன? என்று கேட்கப்பட்டபோது அது நரக வாசிகளின் சீழ், சல நதி என்றார்கள்.
அறிவிப்பவர்: இப்னு உமர்(ரலி) - ஆதாரம்: திர்மிதீ, ஹாகிம்

 

இறைவன் தடுத்ததைப் பயன்படுத்துவதால் மறுமையில் அவனிடம் குற்றவாளியாக நிற்கின்றான்.

இறைவன் விலகி கொள்ளுங்கள் வெற்றி பெறுவீர்கள் (5:90) என்று கூறுவதை மீறினால் இரு உலகிலும் இழிவடைந்தவனாக இருப்பான் என்பதனை மேற்கண்ட நபிமொழியிலும் திருமறைவசனங்களிலும் புரியலாம்.

இன்னும் நாகரீகத்தின் பெயரால் மாணவிகளிடம் மோகம் கொண்டிருப்பதில் ஆடைகளை எடுத்துக் கொள்ளாலாம் சில பேர் முழுமையாக தன் உடல் மறைந்துள்ளதோ எனப்தில் கவனம் செலுத்தவார்களோ இல்லையோ அறை குறையாக இருந்தாலும் அதனை அணிந்து தன்னை அழகுப்படுத்திக் கொள்கின்றனர். மேல் வகுப்பைச் சார்ந்த சில பெண்கள் தன் Boy friend உடன் வரம்புமீற பாதி இரவு வரை ஊர் சுற்றிவட்டு வீட்டுக்கு வருகின்றனர். இதனை தட்டிக் கேட்டாலோ இந்த நூற்றாண்டு காலத்தில் பெண்களுக்கு சுதந்திரமே இல்லை என்று ஆங்காங்கே குரல் எழுப்புகின்றனர்.

டெல்லி காவல் துறை நடத்திய ஆய்வில் 1999 முதல் 2005 ஜூன் வரை 2359 கற்பழிப்பு குற்றங்கள் பதிவாகி உள்ளது. இதில் 121 வழக்கில் ஈடுபட்ட குற்றவாளிகள் பெண்ணின் இருப்பிடத்திற்கருகே வசித்து வந்தவர்களாவார்கள்.

இந்நிலைகளுக்கு பெண்கள் தள்ளப்பட்டதற்கு பெண்களே தான் காரணம். வரம்பு மிறிய செயல்களை உரிமைகள் என்று கூறிக் கொண்டு தன் இளமை காலங்களை தவறான வழிக்கு பயன்படுத்தி தன் எதிர் காலத்தைத் தொலைத்து நிற்கின்றனர்.

ஆனால் ஓர் இஸ்லாமிய பெண் தன் அழகை பிற ஆடவர்கள் பார்க்காத வண்ணம் ஆடை அணிந்து வருகிறாள்.

இதைப் பற்றி அல்லாஹ் திருமறையில் கூறும் போது, நபியே! நீர் உம் மனைவிகளுக்கும் உம் பெண்மக்களுக்கும் ஈமான் கொண்டவர்களின் பெண்களுக்கும் அவர்கள் தங்கள் தலை முன்றானைகளைத் தாழ்த்தி கொள்ளுமாறு கூறுவீராக. அவர்கள் (கண்ணியமாவர்கள் என) அறியப்பட்டு நோவினை செய்யப்படாமலிருக்க இது சுலபமான வழியாகும் மேலும் அல்லாஹ் மிக மன்னிப்பவன் மிக்க அன்புடையவன்.
(அல்குர் ஆன் : 33:59)

அவள் வெளியில் செல்லும் போது கூட ஒழுக்கத்தைக் கடைப்பிடிப்பவளாகவும். பிற அந்நிய ஆடவர்களை விட்டு தன் பார்வைகளை தாழ்த்திக் கொள்பவளாகவும் இருப்பாள். இதைப் பற்றி இறைவன் கூறும் போது,

 

அவர்கள் தங்கள் பார்வைகளைத் தாழ்த்திக் கொள்ள வேண்டும் தங்கள் வெட்கத் தலங்களைப் பேணிக்காத்துக் கொள்ள வேண்டும் தங்கள் அழகலங்காரத்தை அதனின்று (சாதாரணமாக வெளியில் தெரியக் கூடியதைத் தவிர (வேறு எதையும்) வெளிக்காட்டவாகாது.
(அல்குர் ஆன் 24:31)

இன்று ஷைத்தானின் சூழ்ச்சிவலைகள் முஸ்லிம் பெண்களை நோக்கியும் வீசப்படுகின்றன. பர்தா பெண்களை அடிமைப்படுத்துகின்றது என்ற கருத்தினை சில இஸ்லாமிய ப் பெண்களும் ஆமோதித்து ஆடை ஒழுக்கத்தில் வரம்புகளை மீறி நாணம் இல்லாமல் நடக்கின்றனர். நபி(ஸல்) அவர்கள் ஈமானின் ஒரு அம்சம் நாணம் என்றார்கள் (ஆதாரம் : புஹாரி)

ஒரு முஸ்லிம் பெண்ணிடம் கூட இல்லாத தெளிவை புதிதாக இஸ்லாத்தை ஏற்றவர் இதனை தெளிவுப்படுத்துகின்றனர்.


அமெரிக்காவில் அரிகான் என்ற இடத்தைச் சார்ந்த ஈமான் என்ற பெண்மணி கூறுகிறார், "உடலை மறைக்குமாறு திருக்குர்ஆன் கட்டளையிட்டுள்ளது சிலர் நம்புவது போல் இது ஒன்றும் பெரும் தடைகளை ஏற்படுத்துவதில்லை. ("ஹஜப" என்றால் 'தடுத்துக் கொண்டான்' என்று பொருள். حجب عن என்றால் To prevent எனக் கொள்ளலாம்). அதாவது ஹிஜாப் என்பதற்கான பொருள் கேடயமாகும். இது அனைத்து தீமைகளிலிருந்தும் பாதுகாக்கின்றது. பெண்கள் நடமாடுவதற்கும் தங்கள் இயல்பான கடமைகளை நிறைவேற்றுவதற்கும் அது எந்த தடைகளையும் விதிப்பதில்லை".


பண்டைய காலத்தில் ரோமானியர்கள் பெண்களை உயர்ந்த பொருளாகவே கருதிவந்தனர். யூதர்கள் பெண்களை சாபத்திற்குரியவர்களாக கருதினர். கிறிஸ்தவர்கள் பெண்களை ஷைத்தான்களாகக் கருதினர். 1805-ஆம் ஆண்டு வரை ஆங்கிலேயரின் சட்டத்தில் ஒரு கணவன் தனது மனைவியை ப் பிறருக்கு விற்பது தகுமென்றே இருந்துள்ளது.

பிரெஞ்சுக்காரர்கள் 586-ஆம் ஆண்டில் பெண்கள் மனித இனத்தை சார்ந்தவர்களா? இல்லையா? என்று ஆய்வு செய்தனர். இவ்வாறு மற்ற மதத்தில் பெண்களை இழிவாகவே கருதிவந்தனர் இஸ்லாம் அன்றைய காலத்திலேயே பெண்ணுக்கு முழு மதிப்பளித்துள்ளது.

இதனை புரியாத சில பெண்கள் தான் பெண்களை அவமதிக்கிற மேலை நாட்டு கலாச்சாரத்தில் தான் தங்களுக்கு உரிமையுள்ளது என்று கருதி அதன்படி நடக்கின்றனர். இஸ்லாமிய சில பெண்களும் தன் மார்க்கத்தில் தங்களுக்குள்ள மதிப்புகளை உணராமல் தங்கள் மதிப்புகளைக் கெடுத்துக் கொண்டிருக்கிறார்கள்.

இன்னும் தன் பெற்றோரின் சம்பாத்தியத்திற்கு உட்பட்டு வாழாமல் தன் படிப்பிற்கென்று காரணம் கூறி அவர்களிடமிருந்து பணம்வாங்கி தவறான முறையில் செலவழித்து அவர்களது கனவையும் தகர்த்தெறிந்து தன் உடலையும், மனதையும் கெடுத்து தன் வாழ்நாட்களை வீணடித்துக் கொண்டிருக்கிறார்கள். மிக இன்பமான சுதந்திரமான பருவம் இளமை பருவம் தான் இதில் நாம் அனுபவித்த அருட்கொடைகளைப் பற்றி நிச்சயம் மறுமைநாளில் விசாரணை செய்யப்படும்.

நபி (ஸல்) அவர்கள், தன் வாழ்நாளை எப்படி கழித்தான் என்றும் வாலிபத்தை எதில் ஈடுபடுத்தினான் என்றும் செல்வத்தை எப்படி சம்பாதித்து எவ்வழியில் செலவு செய்தான் என்றும் கற்றவைகளில் எதை செயல்படுத்தினான் என்றும் 5 விஷயங்கள் பற்றி விசாரிக்கபடாதவரை மறுமைநாளில்
எந்த மனிதனின் பாதமும் தன் இறைவனிடமிருந்து நகர முடியாது என்று கூறினார்கள். (ஆதாரம்: திர்மிதி)

நம்மை கடந்து இளமை சென்று விட்டால் அது திரும்ப வராது. இக்காலக் கட்டத்தில் கல்வியை முறையாகக் கற்க வேண்டும் கற்றதை எவரும் ஏடுகளில் மட்டும் எழுதாமல் தன் குணத்திலும் அதை ஒளிர வைக்க வேண்டும். அப்போது தான் முழு மனிதர்களாக பிரகாசிப்பார்கள். ஆயிரம் விண்மீன்கள் ஒன்று திரண்டாலும் நிலவைப் போல் ஒளி தராது என்பதற்கேற்ப 1000 பேர் ஒன்றாக இருந்தாலும் அறிவுள்ள ஒருவருக்கு சமமாக மாட்டார்கள்.

இதனைப் பற்றி இறைவன் திருமறையில் கூறுகிறான்,

அறிந்தோரும் அறியா தோரும் சமமாவார்களா நல்லுபதேசம் பெறுவோரெல்லாம் அறிவுடையோரே
(அல்குர்ஆன் 39:9)

இன்றைய இளைஞர்கள் நாளைய தலைவர்கள் என்ற பழமொழியின் சிறப்பும் இளைய தலைமுறையினருக்கு உண்டு. இன்னும் ஒற்றுமையின் பிறப்பிடமாகவே இவர்கள் உள்ளார்கள். இவ்வாறு பல சிறப்புக்களைப் பெற்ற இவர்கள் தீயவழியில் சென்று தன் இளமைக் காலத்தை வீணடித்து நஷ்டம் அடைந்தவர்களாக கைசேதத்திற்குள்ளாகுதல் தகுமா?

மலையோடு மோதும் சக்திபெற்ற இளைய சமுதாயமே காலத்துடன் நடைபோடுவதில் ஏன் முடியாதவர்களாய் மண்டியிட்டிருக்கிறாய்?