"தீவிரவாதத்துக்கு இஸ்லாமில் அனுமதி
கிடையாது" தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் தலைவர்
சிறப்புப் பேட்டி என்ற தலைப்பிட்டு தினமணி பத்திரிகையில் வெளியான
செய்தி நம் பார்வைக்குப் பட்டது. அதில் த.த.ஜ தலைவருடைய பேட்டி
இஸ்லாத்தைக் கொச்சைப் படுத்தும் விதத்தில் அமைந்துள்ளது.
இஸ்லாத்தினைப்பற்றிய இவரின் விளக்கங்கள் இறைமறுப்பாளர்களின்
திருப்திக்கே அன்றி இறைவனின் திருப்திக்காக அல்ல என்ற உலமாக்களின்
கருத்தை மேலும் உறுதிப்படுத்தும் விதத்தில் இவரது பேட்டி அமைந்துள்ளது.
இவரது பேட்டியின் மூலம் ஏற்பட்ட தேவையற்ற கருத்துக் குழப்பத்தை
அகற்றும் நோக்குடன் இக்கட்டுரை வெளியிடப்படுகிறது.
கேள்வி: முஸ்லிம்கள் பலதார
மணத்தை ஆதரிப்பதால் மக்கள்தொகை பெருகி, அவர்கள் பெரும்பான்மைச்
சமுதாயமாக மாறிவிடும் ஆபத்து இருக்கிறது - இந்த வாதத்திற்கு
உங்கள் பதில் என்ன?
பதில்: முஸ்லிம்கள் பலதாரமணம் செய்து கொள்ளலாம் என்று
இருக்கிறதே தவிர, பலதார மணம் செய்து கொள்ளும் இஸ்லாமியர்களின்
எண்ணிக்கை மிகமிகக் குறைவு. அகில இந்திய புள்ளிவிவரப்படி
ஹிந்துக்களில்தான் ஒன்றுக்கு மேற்பட்ட தாரமுடையவர்கள் அதிகம்
இருக்கிறார்கள். எங்கள் சமுதாய மக்கள் மத்தியிலும்
விழிப்புணர்வு ஏற்பட்டு வருகிறது. படிக்கவேண்டும், தரமான
வாழ்க்கை வாழவேண்டும் என்கிற எண்ணம் அதிகரித்து வருகிறது.
அதிகக் குழந்தைகள் பெறுவது, பலதார மணம் இவையெல்லாம் பெரிய
அளவில் குறைந்துவிட்டது என்பது தான் நிஜம்.
இவர் அளித்த பதிலில் மேலே அடிக்கோடிடப்பட்ட வாசங்களை நன்கு
கவனிக்கவும். எங்கள் சமுதாய மக்கள் மத்தியிலும் விழிப்புணர்வு
ஏற்பட்டு வருகிறது. படிக்கவேண்டும், தரமான வாழ்க்கை வாழவேண்டும் என்கிற
எண்ணம் அதிகரித்து வருகிறது. அதிகக் குழந்தைகள் பெறுவது, பலதார மணம்
இவையெல்லாம் பெரிய அளவில் குறைந்துவிட்டது என்பது தான் நிஜம்
என்கிறார்.
அதாவது பலதார மணம், அதிகமாகக் குழந்தை பெறுவது இதற்கு எதிராக
விழிப்புணர்வு ஏற்பட்டு வருகின்றதாம்! அதற்குக் காரணம் படிக்கவேண்டும்
தரமான வாழ்க்கை வாழவேண்டும் என்ற எண்ணம் அதிகரித்து வருவது. இவரது
கருத்தை இவ்வாறு விளக்கலாம். அதாவது பலதார மணமும் அதிகமாகக் குழந்தை
பெறுவதும் தரமற்ற வாழ்க்கையையும் படிப்பறிவில்லாத சமூகத்தையும்
உருவாக்குகின்றது. என்ன ஒரு சிந்தனை? அப்படியாயின் இதைத்தான்
அல்லாஹ்வும் அல்லாஹ்வுடைய தூதரும் நமக்குக் கற்றுத் தந்தார்களா?
இவருடைய இந்த சிந்தனையை சற்று குர்ஆன் ஹதீசுடன் ஒப்பிட்டுப்
பார்ப்போம்.
பலதார மணத்தைப் பற்றிக் கூறும் திருமறை வசனம்.
அநாதை(ப் பெண்களை திருமணம் செய்துகொண்டு அவர்)கள் விஷயத்தில்
நீதமாக நடக்கமாட்டோம் என நீங்கள் அஞ்சினால் மற்ற பெண்களில்
உங்களுக்கு விருப்பமானவர்களை இரண்டிரண்டாகவோ, மும்மூன்றாகவோ,
நான்கு நான்காகவோ நீங்கள் திருமணம் செய்து கொள்ளலாம். நீங்கள்
நீதமாக நடக்க முடியாதென பயந்தால் ஒரு பெண்ணை (திருமணம் செய்துகொள்ள
வேண்டும்) அல்லது நீங்கள் வாங்கிய அடிமைப் பெண்ணையே (போதுமாக்கிக்)
கொள்ளுங்கள். நீங்கள் தவறு செய்யாமலிருப்பதற்கு இதுவே சுலபமா(ன
வழியா)கும். (அல்குர்ஆன் 4:3 )
ஒரு முஸ்லிமைப் பொறுத்தவரை அவனுக்கு சக்தியிருந்தால் நான்கு
திருமணங்க்ள் வரை செய்து கொள்ளலாம் என்று இறைவன் கூறுகின்றான். இது
ஒரு கட்டாயக் கடமை அல்ல. மாறாக ஒரு அனுமதியே. ஆணையும் பெண்ணையும்
படைத்த இறைவன் அவர்களது இயற்கைத் தன்மையை நன்கறிந்தவன். எல்லாம்
அறிந்த இறைவன் ஒரு ஆண் தேவைப்பட்டால் நான்குக்கு மேல் கூடாது என்ற
நிபந்தனையுடன் பலதார மணத்தை அனுமதித்துள்ளான். ஆனால் அல்லாஹ்வின்
வழிகாட்டலைப் பின்பற்றாத சமுதாயத்தில் மனைவி என்ற அந்தஸ்தை
வழங்காமல் திருமணம் முடித்த மனைவிக்கும் துரோகம் இழைத்து எண்ணிக்கை
வரைமுறையின்றி வைப்பாட்டிகளை வைத்துக் கொண்டிருப்பதைக்
குறைகாணாதவர்கள் இஸ்லாம் கூறும் அழகிய வழிமுறையாகிய பலதாரமணத்தைக்
குறை கூறுகின்றனர். இறைவன் அனுமதித்ததை விலக்க அல்லது
விழிப்புணர்வு என்ற பெயரில் அதற்கு எதிரான நடவடிக்கைகளில்
ஈடுபடுவது இஸ்லாமிய விரோதிகளின் செயலாகும். அல்லது அது காலத்துக்கு
ஒவ்வாதது அல்லது அதனால் மக்கள் தொகை பெருக்கம் ஏற்பட்டு
வாழ்க்கைத்தரம் குறைந்து கல்வி அறிவில்லாத சமுதாயம் உருவாகிவிடும்
என்று கூறுவது அறியாமையில் உழல்பவர்களின் கருத்தாகும்.
உதாரணமாக தெருவீதிகளில் அசராங்கத்தின் பால் குடிநீர் தொட்டிகள்
வைக்கப்பட்டு குடிநீர் என்ற போர்டும் வைத்துள்ளார்கள் என்று
வைத்துக்கொள்வோம். அதன் பொருள் நீர் அருந்துவதன்பால்
தேவையிருப்பின் அதிலிருந்து அருந்தலாம் என்பதாகும். ஆனால் சிலரோ
அதிலிருந்து நீர் அருந்துவதைக் குறைகண்டு தாகத்தைத் தணித்துக்
கொள்ள திருட்டுத்தனமாக சாக்கடை நீரை அருந்தி தங்களை அழிவில்
ஆழ்த்திவிடுவதைப் போன்று விபச்சாரம் என்னும் சாக்கடையில் வீழ்வதைப்
பற்றி இந்த நவீன விழிப்புணர்வு வாதிகளுக்குக் கவலையில்லை. இவர்கள்
பலதாரமணத்துக்கு எதிராக விழிப்புணர்வைக் கொண்டுவரப்
போகின்றார்களாம். ஆம் அல்லாஹ்வுக்கே புத்தி சொல்லும் அதிமேதாவிகள்
இவர்கள்! ரோட்டோரம் இருக்கும் நல்ல நீர் தொட்டிகளையெல்லாம் உடைத்து
விட்டு சாக்கடையின் பால் மக்களைத் தள்ளிவிடக் கூடியவனுடைய செயலன்றோ
இவர்கள் கூறும் விழிப்புணர்வு!!!
பல நபிமார்களும் ஒன்றுக்கு மேற்பட்ட மனையவிரைத் திருமணம் முடித்து
அதிகமான பிள்ளைச் செல்வங்களுடன் வாழ்ந்துள்ளனர். இதிலிருந்து
பலதாரமணம் நபிமார்களுடைய வழிமுறை என்பது விளங்குகின்றது. நபி (ஸல்)
அவர்கள் வாழ்ந்த காலகட்டத்தில் பலதார மணம் என்பது ஒரு சாதாரண
நிகழ்ச்சியாக இருந்தபோதிலும் இத்தனை பேரை மணம் முடிக்கவேண்டும்
என்ற வரைமுறை இல்லாமலிருந்தது. ஆனால் இஸ்லாம் அதன் வரைமுறையை
நான்கு என்று ஒழுங்கு படுத்தியது. நான்குக்கு மேற்பட்ட மனைவியரைக்
கொண்டிருந்த நபித்தோழர்கள் நான்கு மனைவியரை மட்டும் தக்க வைத்துக்
கொண்டு பிறரை விவாகரத்து செய்துவிட்டனர். அன்றைய காலகட்டத்தில்
விதவைகளாக இருந்த எத்தனையோ நபித்தோழியருக்கு ஸஹாபாக்களின் பலதார
மணம் என்ற வழிமுறையால் மறுவாழ்வு கிடைத்தது. ஒன்றுக்கு மேற்பட்ட
மனைவியரைக் கொண்டிராத நபித்தோழர்கள் மிகக் குறைவு எனலாம். ஆக பலதார
மணம் என்பது நபித் தோழர்களின் வழிமுறையும் கூட.
ஆனாலும் இஸ்லாத்தை வேண்டுமென்றே விமர்சிப்பவர்கள் தாங்கள்
சார்ந்துள்ள மதங்களின் புராணக் கதைகளில் அவதார புருஷர்களாக
வருபவர்கள் வரைமுறையற்ற எண்ணிக்கையில் மனைவியரையும் அதற்கும் மேலாக
வைப்பாட்டியரையும் கொண்டிருந்தனர் என்று கூறப்படுவதைக் குறையாகக்
காணாமல். ஆனால் இஸ்லாம் நான்கு என்று ஒழுங்குபடுத்திய பலதாரமணத்தை
மட்டும் குறை காண்பது நியாயமல்ல.
இந்தியா, இலங்கை போன்ற நாடுகளில் வாழும் முஸ்லிம்கள், மற்ற
சமூகத்தினரைப் பார்த்து இவர்களும் வரதட்சணை வாங்குகின்றனர்.
செல்வந்தர்கள் இலட்சக்கணக்கில் வரதட்சணை கொடுத்து தங்கள்
பெண்பிள்ளைகளை மணம் முடித்துக் கொடுக்கின்றனர். ஆனால் ஏழைகளோ
திண்டாடுகின்றனர். பல ஏழைப் பெண்கள் முதிர்கன்னிகளாகத்
தேங்கிவிடுகின்றனர். அதோடு மட்டுமன்றி ஆண்களின் இறப்பு வீதம்
பெண்களைவிட அதிகம் என்று புள்ளி விவரங்கள் கூறுகின்றன. விபத்து,
யுத்தம் போன்றவை காரணமாகும். நாம் அன்றாடம் கேள்விப்படும்
விபத்துக்களிலும் ஆண்களின் மரணவீதமே அதிகமாக இருக்கின்றது. இதனால்
சமூகத்தில் ஆண்களை விட பெண்களின் வளர்ச்சி வீதம் அதிகமாகக்
காணப்படுகின்றது. இந்த பிரச்சினைக்கு சிறந்த ஒரு தீர்வாக பலதார
மணம் அமைகின்றது. ஒன்றுக்கு அதிகமாக ஒரு ஆண் திருமணம் முடிப்பதன்
மூலம் திருமணம் ஆகாத ஏழைப் பெண்களின் திருமணக் கனவு
நிறைவேறுகின்றது. வரதட்சணை கொடுமையும் ஒழிந்து விடும்.
விதவைகளுக்கு மறுவாழ்வு கிடைக்கும். காரணம் இது எல்லாவற்றையும்
நுட்பமாக அறிந்த மகத்தான இறைவனால் ஏழுவானங்களுக்கு அப்பாலிருந்து
அருளப்பட்ட மகத்தான சட்டதிட்டங்களாகும். இதற்கு எதிராகத் தான்
ஜைனுல் ஆபிதீன் விழிப்புணர்வு ஏற்படுத்தப் போகின்றாராம்!
(நம்பிக்கையாளர்களே! உங்களுக்குப் பல மனைவிகளிருந்து) நீங்கள்
(உங்கள்) மனைவிகளுக்கிடையில் (முற்றிலும்) நீதமாக நடக்க
வேண்டுமென்று (எவ்வளவு) விரும்பியபோதிலும் (அது) உங்களால்
சாத்தியப்படாது. என்றாலும், (ஒரே மனைவியின் பக்கம்) நீங்கள்
முற்றிலும் சாய்ந்து மற்றவளை (அந்தரத்தில்) தொங்கினவளாக
விட்டுவிடாதீர்கள்! நீங்கள் அல்லாஹ்வுக்குப் பயந்து
(உங்களுக்கிடையில்) சமாதானமாக நடந்துகொண்டால் நிச்சயமாக அல்லாஹ்
(உங்கள்) குற்றங்களை மன்னித்துக் கிருபை புரிபவனாக இருக்கின்றான்.
(அல்குர்ஆன் 4:129)
முடிந்த வரை பல மனைவியருக்கிடையே நீதமாக நடந்து கொள்ள வேண்டும்.
ஆனால் எவ்வளவு தான் நீதமாக நடக்க இயன்றாலும் அதிலும் சில
குறைபாடுகள் வரவே செய்யும். இருந்த போதிலும் நீங்கள் வரம்பு மீறி
ஒருவளை விட்டுவிட்டு மற்றவள் பால் சாய்ந்து விடாதீர்கள்.
இவ்வாறுதான் இது விஷயமாக அல்லாஹ் உபதேசிக்கின்றானே தவிர இந்த நவீன
விழிப்புணர்வு வாதிகள் விரும்புவது போல பலதார மணம் புரிவதை
தடைசெய்யவில்லை.
பலதாரமணம் என்பது சமூகத்தில் மிகவும் இன்றியமையாத தேவை என்பதை பல
எடுத்துக்காட்டுகளுடன் விளக்கினோம். இஸ்லாமியப் பாடம் பயின்ற
சிறுபிள்ளை கூட பலதார மணத்தைப் பற்றிய விமர்சனங்களுக்கு எளிதில்
பதில் சொல்லிவிடும் வகையில் இது பற்றிய தெளிவை இஸ்லாம்
வழங்குகின்றது. ஆனால் இறைநம்பிக்கையில் சந்தேகம் அல்லது பலஹீனம்
கொண்டவர்கள் அல்லது இஸ்லாமின் பெயர் தாங்கிய நவீன நாத்திகர்கள்
இத்தகைய விமர்சனங்கள் வரும்போது தயங்கி கோழைத்தனமான பதில்களைத்
தந்து குழப்பத்தை ஏற்படுத்திவிடுகின்றனர். இத்தகைய கேள்வி வந்தாலே
நடுங்கி பயந்து கேட்டவர்களை திருப்திப் படுத்துவதற்காக எதையாவது
உளறிக் கொட்டி விடுகின்றனர். இதனால் இஸ்லாத்திற்கு களங்கத்தைக்
கற்பித்து விடுகின்றனர். பலதார மணம் விஷயத்தில் இவர்கள் அளித்த
பதிலைப் பாருங்கள். அல்லாஹ் பலதார மணத்தை அனுமதிக்காதிருந்தால்
நன்றாக இருக்குமே என்ற ரீதியில் இவர்கள் அளித்த பதில்
அமைந்துள்ளது. இவர் கூறுவதைப் பாருங்கள்
முஸ்லிம்கள் பலதாரமணம்
செய்து கொள்ளலாம் என்று இருக்கிறதே தவிர, பலதார மணம் செய்து
கொள்ளும் இஸ்லாமியர்களின் எண்ணிக்கை மிகமிகக் குறைவு.
இதிலிருந்து என்ன சொல்ல வருகின்றார்? நீங்கள் கூறுவது போன்று அது
ஒரு தவறான செயல்தான். எனினும் குர்ஆனில் அது வெறும் வார்த்தையாகத்
தான் உள்ளது. அதனை செயல்படுத்தும் முஸ்லிம்கள் மிகமிகக் குறைவு.
நாங்கள் அல்ல ஹிந்துக்கள்தான் அதனை செயல்படுத்துகின்றனர்.
குர்ஆனில் ஒன்று அனுமதிக்கப்பட்டது எனில் அதனைச் செயல்படுத்துவதில்
என்ன தவறு இருக்க முடியும்? இவர் கூறுவது போன்று அனுமதிக்கப்பட்ட
ஒவ்வொரு விஷயங்களையும் இறைமறுப்பாளர்களைத் திருப்திப்படுத்த
மாற்றிக் கூறலாமே! இனி சைவத்தை விரும்பும் பார்ப்பனர்கள் அசைவ உணவை
உண்பதால் மிருகங்கள் வதைக்கப்படுகின்றன என்று விமர்சித்தால் இவர்
இவ்வாறு கூறுவார் போலும்! அசைவ உணவை உண்ணலாம் என்று உள்ளதே தவிர
அசைவம் சாப்பிடும் முஸ்லிம்கள் மிகமிகக் குறைவு. ஹிந்துக்கள் தான்
அதிகமாக அசைவம் சாப்பிடுகின்றனர். இவ்வாறே ஒவ்வொரு விஷயங்களையும்
கூறலாம்.
இவர் அளித்த பதிலின் இரண்டாம் பாகம்.
எங்கள் சமுதாய மக்கள்
மத்தியிலும் விழிப்புணர்வு ஏற்பட்டு வருகிறது. படிக்கவேண்டும்,
தரமான வாழ்க்கை வாழவேண்டும் என்கிற எண்ணம் அதிகரித்து
வருகிறது. அதிகக் குழந்தைகள் பெறுவது, பலதார மணம் இவையெல்லாம்
பெரிய அளவில் குறைந்துவிட்டது என்பது தான் நிஜம்.
அதிகமாகக் குழந்தை பெற்றுக் கொள்ளுவது தீமையா?
அதிகமாகக் குழந்தைகள் பெற்றுக் கொள்வதால் மக்கள்தொகை பெருகி,
அவர்கள் பெரும்பான்மைச் சமுதாயமாக மாறிவிடும் ஆபத்து இருக்கிறதாம்.
பி.ஜைனுல் ஆபிதீன் போன்ற இஸ்லாமிய நாத்திகர்கள் வேண்டுமானால்
இந்தக் கேள்வியைக் கண்டு நடு நடுங்கி கேட்டவர்களைச் சமாளிக்க
இஸ்லாம் எக்கேடு கெட்டால் என்ன என்று ப(தி)ல் இளித்திருக்கலாம்.
ஆனால் ஒரு முஸ்லிமைப் பொறுத்த வரையில் இந்தக் கேள்வியே
அடிப்படையற்றதாகும்.
எந்த ஒரு சமுதாயமும் பெரும்பான்மையாவதும் சிறுபான்மையாவதும்
அல்லாஹ்வின் நாட்டத்தின் பாற்பட்டது. இதில் மனிதனின் எந்த
முயற்சியும் பலன் தராது. எட்டு நூற்றாண்டுகள் முஸ்லிம்கள்
இந்தியாவை ஆண்டனர். இப்போதும் இந்துக்களே இங்கு பெரும்பான்மையினர்.
இந்தோனேசியா போன்ற நாடுகளில் முஸ்லிம்களே பெரும்பான்மையினர்.
மக்கள் தொகைப் பெருக்கம் ஆபத்து என்று கூப்பாடு போடுபவர்களின் தாய்
தந்தையர் அவர்கள் பிறப்பதற்கு முன் குடும்பக்கட்டுப்பாடு
செய்திருந்தால் இவ்வாறு கூப்பாடு போடுபவர்கள் எங்கே
இருந்திருப்பர்? மின் விளக்கு, தொலைபேசி, கணினி இவற்றைக்
கண்டுபிடித்தவர்களின் பெற்றோர்கள் பிள்ளைபெற்றுக் கொள்வதில்லை
என்று முடிவெடுத்திருந்தால் அவர்கள் பிறந்திருப்பார்களா? ஆக
இரண்டுக்கு மேல் பிறக்கும் குழந்தைகள் எல்லாம் முட்டாள்கள்
வீட்டுக்கும் நாட்டுக்கும் உதவாக்கறைகள் என்ற மறைவான ஞானம்
இவர்களுக்கு இருந்தால் இவர்கள் கட்டுப்படுத்தட்டும் தவறில்லை.
ஆனால் அவ்வாறு பிறக்கும் எத்தனை குழந்தைகள் மிகச் சிறந்த அறிவு
ஜீவிகளாக சீர்திருத்தவாதிகளாக இருப்பார்கள்? எலிக்குப் பயந்து
வீட்டையே கொளுத்தினானாம் முட்டாள் ஒருவன். இனி இந்த மனித
சமூகத்தின் வளர்ச்சி என்பது இறைவன் வகுத்த ஒரு ஏற்பாடு என்பதை
ஜைனுல் ஆபிதீன் வகையறாக்களின் கவனத்துக்குக் கொண்டு வர
விரும்புகின்றேன்.
மனிதர்களே! நீங்கள் உங்கள் இறைவனுக்குப் பயந்து (நடந்து)
கொள்ளுங்கள். அவன் உங்கள் அனைவரையும் ஒரே ஆன்மாவில் இருந்து
உற்பத்தி செய்தான். (ஆரம்பத்தில் அந்த ஒருவரைப் படைத்து)
அவரிலிருந்து அவருடைய மனைவியைப் படைத்தான். பின்பு
அவ்விருவரிலிருந்து ஆண்கள், பெண்கள் என பலரை (இப்பூமியில்)
பரப்பினான். (அல்குர்ஆன் 4:1)
மேலும் அவன் உங்களை மண்ணிலிருந்து படைத்திருப்பதும், பின்பு
நீங்கள் மனிதர்களாக (பூமியின் பல பாகங்களில்) பரவியதும் அவனுடைய
அத்தாட்சிகளில் உள்ளதாகும். (அல்குர்ஆன் 30:20)
திருமணம் முடிந்து வருடக்கணக்காக குழந்தை பாக்கியத்துக்காக ஏங்கிக்
கொண்டிருக்கும் எத்தனையோ தம்பதிகள். குழந்தையே வேண்டாம்
என்றிருப்பவர்களுக்கும் குழந்தை பெற்றெடுக்கும் அதிசயம்! சுனாமி
போன்ற பேரழிவினால் சந்ததிகள் அனைத்தையும இழந்து மீண்டும் குழந்தைப்
பேற்றிற்காக ஏங்கும் எத்தனையோ தம்பதிகள். இவை அத்தனையும் இறைவனின்
மகத்தான வல்லமையையும் மனிதனின் பலஹீனத்தையுமன்றோ பறைசாற்றுகின்றது!
இத்தகைய பலஹீனம் மிக்க மனித மூளையில் உதித்த குறுகிய சிந்தனை
இறைவன் அனுமதித்த பலதார மணத்தினால் அல்லது இறைவன் இந்த பூமியில்
உருவாக்கும் மனிதர்களின் வளர்ச்சியினால் வாழ்க்கைத் தரம்
குறைந்துவிடும் என்று கூறினால் அதனை எவ்வாறு ஏற்றுக் கொள்ள இயலும்?
வானம்
பூமி ஆகியவைகளின் ஆட்சி அல்லாஹ்வுக்குரியதே. தான் விரும்பியவற்றை
அவன் படைக்கின்றான். அவன் விரும்பியவர்களுக்கு பெண் சந்ததியை
மட்டும் கொடுக்கின்றான். அவன் விரும்பியவர்களுக்கு ஆண் சந்தததியை
மட்டும் கொடுக்கின்றான். அல்லது ஆணையும் பெண்ணையும் கலந்தே
கொடுக்கின்றான். அன்றி அவன் விரும்பியவர்களை (சந்ததியற்ற)
மலடாகவும் ஆக்கிவிடுகின்றான். நிச்சயமாக அவன் நன்கறிந்தவனும்
ஆற்றலுடையவனகவும் இருக்கின்றான். (அல்குர்ஆன் 42: 49,50)
ஒரு சம்பவம்:
தன் ஒரு குழந்தை இறந்து விட்ட சோகத்தை மிகவும் பொறுமையுடன்
எதிர்கொண்ட அன்னை உம்மு சுலைம் (ரழி) அவர்களுக்கு பரக்கத் வேண்டி
நபி (ஸல்) அவர்கள் பிரார்த்தனை புரிந்தார்கள். உம்மு சுலைம் (ரழி)
அவர்களுக்கு அப்துல்லாஹ் என்ற ஆண்குழந்தை பிறக்கின்றது. அந்த
ஆண்குழந்தை நபி (ஸல்) அவர்களிடம் கொண்டு
வரப்படுகின்றது. நபி (ஸல்) அவர்கள் பேரித்தம் பழத்தை வாயிலிட்டு
மென்று அதன் சாற்றை குழந்தைக்குக் கொடுத்து அதற்காக துஆவும்
செய்கின்றார்கள். இந்த அப்துல்லாஹ்வுக்கு ஒன்பது பிள்ளைகள்
பிறக்கின்றன. இந்த ஒன்பது பேரும் திருக்குர்ஆனை மனனம் செய்த சிறந்த
மார்க்க அறிஞர்களாக விளங்கினர் என்று வரலாறு கூறுகின்றது.
நபி (ஸல்) அவர்களின் பிரார்த்தனையின் விளைவாக உம்மு சுலைம்
அவர்களுக்கு அல்லாஹ் அளித்த வெகுமதி! ஜைனுல்ஆபிதீனின்
விழிப்புணர்வுப்படி அவர்கள் குடும்பக் கட்டுப்பாடு செய்திருந்தால்
மகத்தான ஒன்பது மார்க்க அறிஞர்களை இந்த சமூகம் இழந்திருக்கும்!
முஸ்லிம் என்றால் இறைவனுக்குக் கட்டுப்பட்டவன். இறைவனை மட்டும்
வணங்கி அவனுக்கு அடிபணிந்து வாழ்பவன். இறைவனுக்கு அடிபணிந்து
வாழும் அடியார்கள் இந்த பூமியில் பெருமளவில் வாழும்போது பூமியில்
அமைதி நிலவும். கெட்டவர்கள் மட்டுமே இந்த பூமியில் வாழக் கூடிய
நிலையில்தான் மறுமை நாள் ஏற்படும் என்ற நபிமொழி இங்கு கவனிக்கத்
தக்கது. இறைவா இந்த சமுதாயத்தை நீ அழித்துவிட்டால் பூமியில் நீ
வணங்கப்படமாட்டாய் என்று பத்ரில் முஹம்மத் (ஸல்) அவர்கள் மனமுருகி
வேண்டிய பிரார்த்தனையும் நமக்கு இதனையே உணர்த்துகின்றது.
அல்லாஹ்வை வணங்கி வாழக்கூடிய தனது உம்மத் இந்த பூமியில் அதிகமாக
இருக்கவேண்டும் என்று நபி (ஸல்) அவர்கள் பெரிதும் விரும்பினார்கள்.
உங்களை நேசிக்கக் கூடிய அதிகமாகப் பிள்ளை பெறக்கூடிய பெண்ணைத்
திருமணம் முடியுங்கள் என்ற நபிமொழிக்கு முன் மக்கள் தொகைக்
குறைப்புக் கூப்பாடு போடும் ஜைனுல் ஆபிதீன் வகையறாக்களின் கூற்று
எம்மாத்திரம்?
நபி (ஸல்) அவர்கள் தங்களது இறுதிப் பேருரையில் கூட இவ்வாறு
கூறினார்கள்: அறிந்து கொள்ளுங்கள்: மறுமைநாளில் இறைத்தூதர்கள்
தங்களது சமுதாயத்தினர் அதிகமாக இருப்பதைக் கொண்டு
மகிழ்ச்சியுறுவார்கள். அப்போது என்னை நீங்கள் கேவலப்படுத்தி
விடாதீர்கள். நான் உங்களுக்காக கவ்ஸர் நீர் தடாகத்திற்கு அருகில்
உட்கார்ந்திருப்பேன். (மஜ்மஉஸ் ஸவாயிது 271-3 ) (இறுதிப் பேருரை -
தாருல் ஹீதா வெளியீடு)
ஆனால் குர்ஆன் கூறுகின்றது நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள் என்ற
கூற்றெல்லாம் திருவாளர் ஜைனுல் ஆபிதீனிடம் எடுபடாது. அது அந்த
காலத்திற்குப் பொருந்தும் இந்த காலத்துக்குப் பொருந்தாது. இந்த
காலத்தில் இதனை நாம் இவ்வாறுதான் விளங்கிக் கொள்ளவேண்டும் என்று
கூறுவார். இதனை நாம் இட்டுக்கட்டிக் கூறவில்லை. இவரிடமே இதற்கு
முன் உதாரணங்கள் இருக்கின்றன. அல்லாஹ் ஒவ்வொரு இரவும்
முதல்வானத்துக்கு இறங்குகின்றான் என்ற நபிமொழியை தனது சுய அறிவைப்
பயன்படுத்தி விளக்கினார். நபித்தோழர்கள் புரிந்து கொண்டது தவறு
என்று வாதிட்டார். அப்படியாயின் அது குறித்து நபி (ஸல்) அவர்கள்
எவ்வாறு விளங்கியிருந்தனர்? என்ற கேள்விக்கு இவரிடம் பதில் இல்லை.
ஜைனுல் ஆபிதீனைக் கண்மூடிப் பின்பற்றிக் கொண்டிருக்கும்
சகோதரர்களே! விழித்தெழுங்கள். இவரது கூற்றுக்களை
திருக்குர்ஆனுடனும் நபிமொழியுடனும் ஒப்பிட்டுப் பாருங்கள்.
அல்லாஹ்வே! ஜிப்ரீலின் இறைவனே! மீக்காயீல் மற்றும் இஸ்றாஃபீல்
ஆகியோரதும் இறைவனே! வானங்களையும் பூமியையும் படைத்தவனே!
மறைவானதையும் வெளிப்படையானதையும் அறிந்தவனே! உன் அடியார்கள்
கருத்துவேறுபட்டிருக்கும் காரியத்தில் நீயே தீர்ப்பளிப்பாயாக!
அன்புடன்
தேங்கை முனீப்
muneebtpm at gmail
dot com |