Index |Subscribe mailing list | Help | E-mail us

 

 

கல்வி நம் தலையாய கடமை

ஷேக் அப்துல் காதிர்

 

அல்லாஹ் தான் நாடியோருக்கு கல்வி ஞானத்தை வழங்குகின்றான். ஞானம் வழங்கப்பட்டோர் ஏராளமான நன்மைகளை வழங்கப்பட்டுவிட்டனர். அறிவுடையோரைத் தவிர வேறு யாரும் சிந்திப்பதில்லை. (அல்குர்ஆன் 2:269).

இது இறைமறை வாசகம். கல்விறிவை ஒருவர் பெற்றுவிட்டால் அவர் ஏராளமான நன்மைகளை கொடுக்கப்பட்டுவிட்டார் என படைத்த இறைவன் கூறுகின்றான். ஆன்மீகம் என்ற பெயரில் எந்த மதமும் கூறாத உன்னத சித்தாந்தத்தை கூறுவதோடு மேற்கூறிய வசனத்தின் மூலம் கல்வி கற்க ஆர்வமூட்டுகிறது இஸ்லாம். இத்தகைய உயர்ந்த வழிகாட்டுதல்களை பெற்றுள்ள நம் சமுதாயம் கல்வியில் போதிய முன்னேற்றம் அடையவில்லை. நம் சமுதாய கல்வி முன்னேற்றத்தின் முட்டுக்கட்டைகள் யாவை? என்பதை இனங்காட்டுவதோடு கல்வியின்மையின் காரணமாக நம் சமுதாயத்தில் நிலவும் அவலநிலைகளை எடுத்துரைத்து விழிப்புணர்வூட்டுவதே இக்கட்டுரையின் நோக்கம்.


நாடு சுதந்திரம் பெற்ற பத்து ஆண்டுகளுக்குள் பருவ வயதை அடைந்த அனைவருக்கும் கல்வி அளிக்கப்படும் என்று வாக்குறுதி அளிக்கப்பட்டது. ஆனால் இந்தியாவைப் பொறுத்த அளவில் 100% கல்வி என்பது எட்டாக்கனியாகவே இருந்து வருகிறது.
1991-ம் ஆண்டின் கணக்கெடுப்பின்படி 52.2% ஆக இருந்த எழுத்தறிவு விகிதம் 2001ஆம் ஆண்டில் 65.38% ஆக உயர்ந்துள்ளது நமக்கு சற்றே ஆறுதல் அளிக்கும் செய்தி என்றாலும் முஸ்லிம்களின் நிலை இன்னும் பரிதாபகரமாகவே இருந்துவருகிறது. 2001-ம் ஆண்டின் கணக்கெடுப்பு அறிக்கையின்படி முஸ்லிம்களின் எழுத்தறிவு விகிதம் 59.1% ஆகும். அதே நேரம் 2.3% வாழும் கிறிஸ்தவர்களின் விகிதமோ 80.3-சதவீதத்தை தொட்டுவிட்டது என்பது வியப்பிற்குரிய செய்தி.

 

நம் சமுதாயம், கல்வியில் முன்னேறாததிற்கு காரணம் என்ன? முன்னேற்றத்தின் தடைகற்கள் எவை? என்பதை அலசி ஆராய்வது மிக அவசியம்.


நம் சமுதாயம் கல்வியில் பின்தங்கியிருப்பதற்கு பல்வேறு காரணங்கள் கூறப்பட்டாலும் அதன் பின்னணி நீண்ட சரித்திரத்தை உள்ளடக்கியதாக உள்ளது. ஆங்கிலேய ஏகாதிபத்தியத்தை எதிர்த்து வீர தீரத்துடன் போராடிய நம் சமுதாயம் ஆங்கிலேயரால் உருவாக்கப்பட்ட அந்த கல்வியை புறக்கணிக்கவேண்டும் என்ற நோக்கில் ஆங்கிலம் கற்பது "ஹராம்" என்று மார்க்கத் தீர்ப்பளித்தது. ஆங்கிலக் கல்வியை எதிர்க்கிறோம் என்ற பெயரில் நவீன கல்வியை புறக்கணித்தது நம் முன்னோர்கள் செய்த மிகப்பெரிய தவறு. விளைவு நம் பெற்றோர்களின் கல்வியின்மையால் நாமும் கல்வியிழந்து நம் சந்ததிகளையும் கல்வியூட்டும் ஞானமின்றி மற்ற சமுதாயத்தை விட 50 ஆண்டுகள் பின் தங்கிய நிலையில் இருக்கிறோம்.


அடுத்து வியாபார நோக்குடன் நடத்தப்படும் பள்ளிகளில் சேர்ந்து படிக்க போதிய பணவசதி இல்லாமையும் ஓர் காரணம். நவீன பாடதிட்டங்கள் கொண்ட மெட்ரிகுலேஷன் பள்ளிகளில் சேர பெரும்பணம் தேவைப்படுகிறது. சாதாரண அரசுடைமை ஆக்கப்பட்ட பள்ளிகளில் கூட ஆரம்பத்தொகை மிக அதிகம். மேலும் குழந்தைகள் தினம், பெற்றோர் தினம், சுற்றுலா என்று மாணவ மாணவிகளிடம் பணங்களை கரக்கும் போக்கும் காணப்படுகிறது. குடும்பச் சூழல், போட்டிகள் நிறைந்த பதவிகள், நிச்சயமற்ற கல்விச் சூழல் போன்றவற்றின் காரணமாக படிப்பை பாதியில் நிறுத்தி கடைகளில் வேலைக்கு சேரும் போக்கும் நம் சமுதாயத்தில் நிறைந்து காணப்படுகிறது. நல்ல அறிவு படைத்த கல்லூரி மாணவர்கள் கூட கல்வியை தொடர முடியாத நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.

 

இராமநாதபுரம், முதுகுளத்தூரைச் சேர்ந்த ஏ. வாசன் என்ற மாணவன் +2 வில் 1200 க்கு 1054 மதிப்பெண் பெற்று திருநெல்வேலி PET பொறியியல் கல்லூரியில் இடம் கிடைத்தும் கல்லூரி பணம் கட்ட முடியாத நிலையில் உள்ளார். (நன்றி: சமரசம்). ஆக நிதிநிலைமையும் ஒரு காரணமாக அமைகின்றது. 1987-88 ல் மத்திய திட்டகமிஷன் நடத்திய ஓர் ஆய்வின் அறிக்கை இதை உறுதி செய்கின்றது. அப்போதைய இந்தியாவின் எழுத்தறிவு 52.11% ஆக இருக்கையில் முஸ்லிம்கள் 42% தான் கல்வி பெற்றிருக்கின்றனர். காரணம் ஆரம்ப கல்வி நிலையிலேயே பெருவாரியான முஸ்லிம்கள் தங்கள் படிப்பை இடையில் நிறுத்திவிடுகின்றனர் என்றும் இதற்கு மூலகாரணம் நிதி நிலைமைதான் என்றும் அந்த அறிக்கை கூறுகின்றது.


மேலும் தேசிய மாநில சர்வே அமைப்பு
(N.S.S.A) 1993-94 மற்றும் 1999-2000 ல் நடத்திய ஆய்வில் இஸ்லாமிய இளைஞர்கள் பலர் தம் படிப்பை பாதியிலேயே நிறுத்தி அன்றாட கூலி பெறும் தொழிலாளியாக மாறிவிடுகின்றனர் என்ற உண்மையும் தெரியவருகிறது. மேலும் படித்த இளைஞர்கள் மத்தியிலும் வேலையின்மை அதிகரித்திருப்பதாகவும் அவ்வறிக்கை கூறுகின்றது.


ஆகவே பள்ளிப்படிப்பை இடையில் நிறுத்தும் போக்கு மாறவேண்டும். கல்வியின்மையால் நாம் அன்றாடம் பல கஷ்டங்களை சந்திக்கின்றோம். இந்த வளைகுடா வாழ்க்கையில் கூட 20 ஆண்டுகளுக்கு மேல் பணிபுரியும் எத்தனையோ சகோதரர்களுக்கு எவ்வித பதவி உயர்வும், ஊதிய உயர்வும் இல்லை. காரணம் கல்வியின்மைதான். எத்தனையோ நல்ல அறிவுபடைத்த புத்திசாலிகள் படிப்பை இடையில் நிறுத்திவிட்டு பாஸ்போர்ட் எடுத்து வளைகுடாவிற்கு வந்து அதன் விளைவை அனுபவித்து கொண்டிருக்கின்றனர். தன்னைப்போல் தன் சந்ததியும் கஷ்டப்படக்கூடாது. எத்தகைய கஷ்டங்கள் வந்தாலும் அவர்களை படிக்க வைப்பேன் என்று நம் சமுதாய இன்றைய தலைமுறையினர் உறுதிபூண வேண்டும். நம் பிள்ளைகளுக்கு கல்வி அளிப்பதில் ஆர்வம் காட்ட வேண்டும். வாய்ப்பு வசதிகள் இல்லை என்ற ஆதங்கம் நம்மிடம் ஓரளவு இருந்தாலும் பெருவாரியான முஸ்லிம்கள் கிடைக்கும் வாய்ப்புக்களை பயன்படுத்துவதுமில்லை.


பணம் படைத்த எத்தனையோ வர்த்தகர்களின் வாரிசுகள் ஓரளவுக்கு எழுத படிக்க தெரிந்த உடனேயே தம் குடும்ப வர்த்தகத்தை கவனிக்கச் சென்றுவிடுகின்றனர். அரசாங்கம் கல்வியளிக்க முன்வந்தும் நம் மக்கள் ஆர்வக் குறைவாகயிருப்பதும் கவலையளிக்கக் கூடிய செய்தியாக இருக்கிறது. அனைவருக்கும் கல்வி என்ற திட்டத்தின் கீழ் தொடக்கப்பள்ளி இல்லாத கிராமங்களில் கல்வியளிக்கும் பணியை தமிழக அரசு ஆரம்பம் செய்தது. சிவகங்கை மாவட்டம் இளையான்குடியை அடுத்த கல்லாணி எனும் கிராமத்தில் இரண்டு மாணவர்கள் முன்வரவே கல்வி ஆரம்பமானது. மாணவர்களின் எண்ணிக்கை இரண்டை தாண்டாததால் மாவட்ட தொடக்கக் கல்வி அதிகாரி பள்ளியை மூடவுத்தரவிட்டார் புரிகிறதா? இதுதான் நம் நிலைமை.


ஆகவே நம் சமுதாயம் கல்வியில் ஆர்வம் காட்டுவதோடு வரும் வாய்ப்பினை பயன்படுத்திக்கொள்ள வேண்டும்;. அடுத்து நம் சமுதாயத்திற்கென்று தனிப்பள்ளிக்கூடங்கள் போதிய அளவு ஏற்படுத்தப்பட வேண்டும். காயிதே மில்லத் இஸ்மாயில் சாஹிப் போன்றோர் சிறுபான்மையினரின் கல்விக்காக போராடி பெற்ற உரிமைகளை நம் சமுதாயத்தினர் போதிய அளவில் பயன்படுத்தவில்லை என்றுதான் எண்ணத் தோன்றுகிறது. உயர் கல்விகளில் அக்கறை காட்டிய நம் முன்னோர்கள் ஆரம்ப, நடுநிலை, பள்ளிக்கூடங்களில் போதிய அக்கறை காட்டவில்லை. தமிழகத்தை எடுத்துக் கொண்டால் நமக்காக சுமார் 25 கலை மற்றும் பொறியியல் கல்லூரிகள், 19 பாலிடெக்னிக்குகளும் உள்ளன. ஆனால் ஆரம்ப கல்வியளிக்கும் பள்ளிகள் போதிய அளவில் இல்லை. விளைவு நம் சமுதாய சிறுவர்கள் பிற சமுதாய பள்ளிகளில் சேர வேண்டியுள்ளது. இதனால் பருவ வயதினரின் ஐவேளை தொழுகைகளுக்கு இடையூறாக அது அமைகிறது. எத்தனையோ பள்ளிகளில் வெள்ளிக்கிழமை ஜும்ஆவுக்கு கூட அனுமதி மறுக்கப்படும் அவல நிலையும் காணப்படுகின்றது. இது போதாதென்று எல்லா மத பண்டிகைகளுக்கும் பணம் வாங்கி கொண்டு கோலாகலமாக கொண்டாடும் நிலைமையும் கவலையளிக்கிறது. இன்றைய சூழலில் சரஸ்வதி பூஜையும், ஆயுத பூஜையும் கொண்டாடாத பள்ளிகளே இல்லை. நம் சமுதாயத்தினரும் பள்ளி விதிமுறைக்குட்பட்டு பல்வேறு பண்டிகைகளை வேண்டா வெறுப்பாகக் கொண்டாடுகின்றனர். இந்நிலை மாறவேண்டுமென்றால் நமக்கென்று தனிப் பள்ளிக்கூடங்கள் உருவாக வேண்டும்.

 

கன்னிப்பெண்கள் கரையேறுவதற்கும், பள்ளிவாசல் கட்டுவதற்கும் அள்ளி வழங்கும் நம் சமுதாயச் செல்வந்தர்கள் தொடக்கப்பள்ளிகள் நிறுவுவதில் ஆர்வம் காட்ட வேண்டும். தொடக்க கல்வியற்ற நிலையில் பட்டபடிப்பு என்பது எட்டாக்கனியாக போய்விடும். நமது இஸ்லாமிய அறக்கட்டளையின் கீழ் இயங்கும் எத்ததனையோ கல்வி நிலையங்களில் மூன்றிலொரு பங்கு கூட நம் மாணவர்கள் படிக்கவில்லை என்பதே இதற்கு சான்று.


மேலும் மிக குறைந்த அளவில் காணப்படும் புத்திசாலி மாணவர்கள் கூட போதிய வழிகாட்டுதலின்றி ஏனோ தானோ என்று குறிக்கோள் அற்ற நிலையில் மேற்படிப்பை தொடர்கின்றனர். தொழில் சார்ந்த கல்விகளில் சேர பத்தாம் வகுப்பு முடித்தவுடனேயே அதற்கான பாடபிரிவுகளை தேர்ந்தெடுத்து படிக்கவேண்டும்.
S.S.L.C-யில் நல்ல மதிப்பெண் பெற்று வரலாறு, பொருளாதாரம் என்று எதையாவது எடுத்துவிட்டு பின் அது தொடர்பான மேற்படிப்புகளை பெயர் அளவில் தொடரும் நிலையை தவிர்க்கவேண்டும். +2 படிக்கும் எத்தனையோ மாணவர்கள் எத்தனையோ படிப்புகள் இருந்தும் இயந்திரத்தனமாக B.A., B.B.A., B.Com. என்று ஏதாவது ஒன்றில் சேர்ந்துவிடுகின்றனர். புதிதாக வந்து கொண்டிருக்கும் புதிய படிப்புகளில் ஆர்வம் காட்டுவதில்லை. Micro Biology, Bio Chemistry, Chemical Engineering, Textile Tecnology, Leather Tecnology, மீன் வள அறிவியல் போன்ற புதிய படிப்புகளில் சேர ஆர்வம் காட்ட வேண்டும்.


அடுத்து நாம் எடுத்து படிக்கும் துறையில் ஆழ்ந்த மேற்படிப்பை மேற்கொள்ளவேண்டும். சமூகவியல் படித்து கொண்டிருக்கும் போதே
(B.L) சட்டம் படிக்க சென்றுவிடுவதால் ஒரே துறையில் ஆழ்ந்த அறிவு பெறமுடியவில்லை. இந்த நூற்றாண்டின் இணையற்ற படிப்பு என்று வர்ணிக்கப்படும் IT (Information & Technology), Elecronic & Communication போன்ற படிப்புகளில் நம் சமுதாயம் ஆர்வம் காட்டினால் இஸ்லாமிய சமுதாயத்திற்கு நாம் எண்ணற்ற சேவைகளை செய்யலாம். Online வகுப்புகளில் இஸ்லாமிய பாடம் மற்றும் பட்டபடிப்புக்கு வழி செய்யலாம். வருங்காலத்தில் வீட்டிலிருந்தே பெண்களும், இல்லத்தரசிகளும் Online-ல் கல்வியை பெரும் பங்களிப்பை நம் சமுதாயதிற்கு செவ்வனே செய்யலாம். இன்னும் பத்திரிக்கை சார்ந்த படிப்புகள் இன்றைய கால சூழலில் மிக இன்றியமையாதது. Journalism படித்தவர்கள் நம் சமுதாயத்தில் மிக குறைவாக இருப்பதால் நம் சமுதாய பத்திரிக்கைகள் பல தரம் குன்றியவைகளாகவே இருக்கின்றன. ஆக படிப்புகள் எத்தனையோ இருந்தும் கூட நம் சமுதாய மாணவர்களின் பின்னடைவுகளுக்கு காரணம் நமக்கென்று வழிகாட்டிகள் இல்லை. கல்வியறிவற்ற பெற்றோர்களினால் தம் சந்ததிகளுக்கு வழிகாட்ட இயலாது.

 
நம் சமுதாயத்தில் படித்தவர்கள், உயர்பதவி வகிப்பவர்கள் குழு அமைத்து ஆங்காங்கே விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை நடத்துவதோடு வருடந்தோறும் டிசம்பர், ஜனவரி மாதங்களில் மேல் படிப்புக்கு வழிகாட்ட ஆலோசனை மன்றங்களை அமைத்து மாணவ மாணவிகளின் ஐயங்களை தெளிவுப்படுத்த வேண்டும். இதனை நாம் செய்ய தவறியதின் காரணமாக நல்ல புத்திசாலி மாணவர்கள் கூட தம் திறமையை முழுமையாக வெளிப்படுத்த முடிவதில்லை. போதிய வழிகாட்டுதல் இல்லாத காரணத்தினால் அரசாங்க சர்வீஸ் கமிஷன் போன்ற தேர்வுகளில் கூட எழுதுவதற்கு தயக்கம் காட்டுகின்றனர்.
1983-ல் மத்திய உள்துறை அமைச்சகம் அளித்த புள்ளி விவரத்தின் Group-3 சர்வீஸ் கமிஷன் தேர்வுகளில் பங்கேற்ற 2352 மாணவர்களில் 76 (3.27%) பேர்தான் முஸ்லிம்கள் இதேப் போல் Group-3 தேர்வில் பங்கேற்ற 497 பேரில் 12 பேர் தான் (2.44%)-ம் உதவி சர்ஜன்கள் தேர்வில் 3503 பேரில் 162 பேர் தான் (4.62%) பங்களித்திருக்கின்றனர்.


அடுத்ததாக நம் கல்விக்கூடங்களிலுள்ள சில தவறுகளையும் இங்கு சுட்டிகாட்டுதல் அவசியம். இன்றைய நவீன கல்வி கோட்பாட்டின் பின்னணியில் மேற்கத்திய கலாச்சாரம் நம் சமுதாய மாணவர்களையும் பீடித்திருக்கிறது. இஸ்லாம் கூறும் நல்லொழுக்கங்கள், கற்புநெறி, இறையச்சம் போன்றவை போதிக்கபடாத காரணத்தினால் மேற்கத்திய காலச்சாரத்திற்கு பலியாகி இஸ்லாத்தைப்பற்றி தெரியாமலேயே அதனை விமர்சிக்கும் அறிவு(?) ஜீவிகளாக மாறிவிடுகின்றனர்.


இன்றைய அவசிய தேவை முஸ்லிம்களால் நடத்தப்படும் கல்வி நிறுவனங்களில் இஸ்லாமிய நல்லொழுக்க பாடத்தை கட்டாயம் கற்பிக்க வேண்டும். அதுமட்டுமல்லாது இஸ்லாமிய அறிஞர்களின் உதவியுடன் இஸ்லாமிய சட்டம், குர்ஆன் விளக்கவுரை போன்றவற்றைக் கற்பிப்பது மிகவும் அவசியம். நம் சமுதாய கல்லூரிகளின் நிலையே இதுவென்றால் அரபி மதரஸாக்கள் முழுக்க முழுக்க ஆன்மீக வட்டத்திற்குள்ளேயே நிற்கின்றன.

 

உத்திர பிரதேசத்தில் "தீனீ தஃலீம்" என்ற பெயரில் 6000 கிராமங்களில் நடத்தப்படும் மதரஸாக்களில் அறிவியல் சார்ந்த எந்த நூலும் பாடத்திட்டத்திலில்லை. இத்தகைய மதரஸாக்களில் பட்டம் பெற்று வெளிவரும் ஆலிம்கள், இன்றைய நவீன பிரச்சனைகளான இன்சூரன்சு, குளோனிங், ஷேர் மார்க்கெட் போன்ற சர்ச்சைக்குரிய பிரச்சனைகளுக்கு மார்க்கத்தீர்ப்பு கூற தயக்கம் காட்டுகின்றனர். குறைந்த பட்சம் ஆலிம்களுக்கு கம்பியூட்டர் அறிவு அவசியம். மேலும் இன்றைய இணைய (Internet) யுகத்தில் பல வித அனாச்சாரங்களில் பயன்படும் இணைய (Internet) போன்றவற்றில் இஸ்லாமிய கருத்தாக்கங்கள் மற்றும் இஸ்லாம் எதிர்கொள்ளும் சவால்களை உலகளாவிய அளவில் விளக்கம் அளிக்க அழைப்புப்பணியை வலைமனைகள் மூலம் முடுக்கி விட நம் சமுதாய ஆலிம்கள் திறமை படைத்தவர்களாக உருவாக வேண்டுமென்றால் நம்முடைய அரபி மதரஸாக்களின் பாடத்திட்டங்களில் புனர்நிர்மாணம் அவசியம்.


இன்று ஆலிம்கள் தொழுகை, நோன்பு போன்றவற்றோடு தம் பணியை சுருக்கிக் கொள்வதினால் படிப்பறிவு மிக்க சில முஸ்லிம் இளைஞர்கள் வலைமனைகளில் இஸ்லாமிய சேவையில் ஈடுபட்டாலும் மார்க்க சட்ட விளக்கங்களுக்கு ஆலிம்களையே சார்ந்திருக்கின்றனர். மதரஸாக்களில் மார்க்க கல்வியுடன் நவீன தொழில் நுட்ப கல்வியும் சேர்த்தால் இன்றைய நவீன உலகில் முஸ்லிம்கள் இழந்த பெருமையை மீண்டும் பெறலாம். இறைவன் துணை செய்வானாக!


(ஆக்கத்திற்கு உதவியவை:
Manorama Year Book 2005, தினமணி.காம், ஒற்றுமை, சமரசம்)