Index |Subscribe mailing list | Help | E-mail us

நயவஞ்சகம் தவிர்ப்போம்!

நெல்லை. இப்னு கலாம் ரசூல்

 


மனிதர்களிடம் காணப்படும் பண்புகள் பல. கோபம் தாபம் பாசம் பரிவு ஆசை பொறாமை பெருமை பொறுமை காமம் கஞ்சம் குரோதம் குறும்பு என பல பண்புகளை தன்னகத்தே கொண்ட மனிதனுக்குள் நரகத்துக்கு இழுத்துச் செல்லும் மற்றொரு பண்பும் சேர்ந்தே இருக்கிறது. உள்ளத்தில் உள்ளதை உலகுக்குத் தெரியாமல் மறைத்து, தம்மைச் சார்ந்திருப்போர் மனம் மகிழும்படி நடித்து, அவர்களை வழிகெடுத்து, தம் வழிக்கு கொண்டு வரும் இந்த நாசகார பண்புக்கு நயவஞ்சகம் என்று சொல்வார்கள்.

இந்நயவஞ்சகர்கள் அன்றிலிருந்து இன்று வரை இருந்து கொண்டுதான் இருக்கிறார்கள். இவர்களின் தோற்றங்களை வைத்து இவர்களை அடையாளம் காண நம்மால் இயலாது. இருப்பினும் இந்நயவஞ்சகத்தின் அடிப்படைகளாகத் திகழும் ஒருசில நடவடிக்கைகளை நபி (ஸல்) அவர்கள் நமக்கு எச்சரிக்கை செய்திருக்கிறார்கள்.

'நயவஞ்சகனின் அறிகுறிகள் மூன்று. பேசினால் பொய்யேபேசுவான்; வாக்களித் தால் மீறுவான்; நம்பினால் துரோகம் செய்வான்' என்று இறைத் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்'.(அறிவிப்பவர்: அபூஹுரைரா-ரலி, நூல்:புகாரி)

'நான்கு பண்புகள் எவனிடம் உள்ளனவோ அவன் வடிகட்டிய முனாஃபிக் ஆவான். அவற்றில் ஏதேனும் ஒன்று யாரிடமேனும் இருந்தால் அதை விட்டொழிக்கும் வரை நயவஞ்சகத்தின் ஒரு பண்பு அவனிடம் இருந்து கொண்டே இருக்கும். நம்பினால் துரோகம் செய்வான்;. பேசினால் பொய் பேசுவான்;. ஒப்பந்தம் செய்தால் அதை மீறுவான்;. விவாதம் புரிந்தால் நேர்மை தவறிப் பேசுவான்' என்று இறைத் தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள். (அறிவிப்பவர்: அப்துல்லாஹ் இப்னு அம்ர் -ரலி, நூல்: புகாரி)

இத்தகைய நயவஞ்சகர்கள் எவ்வாறு ஈமான் கொள்கின்றார்கள் என்பதை வல்ல அல்லாஹ் அருள்மறையில் தெளிவாக அடையாளம் காட்டுகிறான்:-

(மற்ற) மனிதர்கள் ஈமான் கொண்டது போன்று நீங்களும் ஈமான் கொள்ளுங்கள்! என்று அவர்களிடம் சொல்லப்பட்டால், 'மூடர்கள் ஈமான் கொண்டது போல், நாங்களும் ஈமான் கொள்ளவேண்டுமா?' என்று அவர்கள் கூறுகிறார்கள்;. (உண்மை அப்படியல்ல!) நிச்சயமாக இ(ப்படிக் கூறுப)வர்களே மூடர்கள். ஆயினும் (தம் மடமையை) இவர்கள் அறிவதில்லை.(அல்குர்ஆன் 2:13)

அல்லாஹ்வை ஈமான் கொண்ட முஸ்லிம்கள் இத்தகைய நயவஞ்சகத்தில் நிலைத்திருக்காமல், திருந்தி, தவ்பாச் செய்து, உண்மை மூமின்களாகத் திகழ பல அறிவுரைகளை அல்லாஹ் அருள்மறையில் வழங்குகிறான். 'தெரிந்து கொண்டே தாங்கள் செய்கிற தீமையானவற்றில் நிலைத்திருக்க மாட்டார்கள்.' (அல்குர்ஆன் 3:135)

நயவஞ்சகத்தில் நிலைத்து தம்மை மாற்றிக்கொள்ளாது மரணித்தவர்களுக்கு ஜனாஸா தொழ மார்க்கத்தில் தடையுள்ளது என்பதை கீழ்காணும் நபிமொழி உணர்த்துகிறது.

(நபி (ஸல்) அவர்கள் காலத்தில் நயவஞ்சகர்களின் தலைவனாகத் திகழ்ந்த) அப்துல்லாஹ் இப்னு உபை இறந்து விட்டான். அப்போது அவனுடைய (முஸ்லிமான) மகன், நபி(ஸல்) அவர்களிடம் வந்து, 'இறைத்தூதர் அவர்களே! அவரை கஃபனிடுவதற்காக உங்கள் சட்டையைத் தாருங்கள்! மேலும் நீங்கள் அவருக்கு ஜனாஸாத் தொழுது. அவருக்காகப் பாவமன்னிப்பும் கேட்கவேண்டும்' என்று கோரினார்கள். உடனே நபி(ஸல்) அவர்கள் தமது சட்டையை அவருக்குக் கொடுத்துவிட்டு, '(கஃபனிட்டு ஆயத்தமானதும்) எனக்குத் தெரிவியுங்கள்;! நான் ஜனாஸாத் தொழுகை நடத்துவேன்' என்றார்கள். பிறகு அறிவிக்கப்பட்டதும் நபி (ஸல்) அவர்கள் அவனுக்கு ஜனாஸாத் தொழ நாடியபோது, உமர்(ரலி) நபி(ஸல்) அவர்களை இழுத்து, 'நயவஞ்சகர்களுக்கு ஜனாஸாத் தொழக் கூடாது! என அல்லாஹ் உங்களைத் தடுக்கவில்லையா?' எனக் கேட்டார்கள். அதற்கு நபி(ஸல்) அவர்கள் '(ஜனாஸாத் தொழுவது, தொழமலிருப்பது என) இரண்டில் எதையும் தேர்ந்தெடுத்துக் கொள்ளும் உரிமை எனக்கு உள்ளது' எனக் கூறிவிட்டு, 'நீர் நயவஞ்சகர்களுக்குப் பாவமன்னிப்புத் தேடினாலும் அல்லது தேடாமலிருந்தாலும் சமமே! நீர் அவர்களுக்காக எழுபது முறை பாவமன்னிப்புத் தேடினாலும் அல்லாஹ் அவர்களை மன்னிக்கப் போவதே இல்லை' என்ற (அல்குர்ஆன் 09:80) வசனத்தை ஓதிக்காட்டி விட்டு ஜனாஸாத் தொழுதார்கள். உடனே 'அ(ந்நய)வ(ஞ்சக)ர்களில் யாரேனும் இறந்தால் அவர்களுக்காக ஒருபோதும் (ஜனாஸாத்) தொழ வேண்டாம்' என்ற (அல்குர்ஆன் 09:84) வசனம் அருளப்பட்டது. (அறிவிப்பவர்: இப்னு உமர் -ரலி, நூல்: புகாரி 1269)

நயவஞ்சகர்களுக்காக ஜனாஸா தொழுவதை தடைசெய்த அல்லாஹ், மறுமையில் அவர்கள் நரகவேதனையில் இருப்பார்கள் என்பதை அருள்மறையில் சுட்டிக்காட்டுவதைப் பாருங்கள்:-

நிச்சயமாக இந்நயவஞ்சகர்கள் நரகத்தின் மிகவும் கீழான அடித் தளத்தில்தான் இருப்பார்கள்;. அவர்களுக்கு உதவியாளராக எவரையும் நீர் காண மாட்டீர்.(அல்குர்ஆன் 4:145)

இவ்வாறு அல்லாஹ்வாலும் அல்வாஹ்வின் திருத்தூதர் (ஸல்) அவர்களாலும் எச்சரிக்கப்பட்ட, இனங்காணப்பட்ட நயவஞ்சகர்களின் நடவடிக்கைகளை வரலாற்று ஒளியில் பார்த்தால் நாம் அதிர்ந்து போவோம்:-

அன்ஸார்களாகிய மதீனவாசிகளின் கிளைக் கோத்திரங்களாகிய அவுஸ், கஸ்ரஜ் கோத்திரங்களுக்கு மத்தியில் நடந்துவந்த போர்ச் சூழலை இஸ்லாம் மாற்றியது. மதீனாவில் சகோதரத்துவம் நிலவி துவங்கியது. உத்தமத் திருநபி (ஸல்) அவர்கள் மதீனாவில் இஸ்லாமிய பேரரசின் தலைவராக நிகழ்தார்கள். எனவே தனக்கு கிடைக்கும் என எதிர்பார்த்திருந்த தலைமைத்துவம் பறிபோய் விட்டதை ஜீரணிக்கவியலாத அப்துல்லாஹ் பின் உபை பின் ஸலூல் என்ற நயவஞ்சகன், தன் நயவஞ்சக கூட்டத்திற்கு தலைவனாக செயலாற்றத் துவங்கினான். இவனும் இக்கூட்டத்தாரும் போரில் புறமுதுகு காட்டி ஓடினர். முஸ்லீம்கள் என்ற போர்வையிலேயே ஊடுறுவிய நயவஞ்சகர்கள், ஒன்றுபட்டிருந்த முஸ்லிம் சமூகத்தை இரண்டாக உடைப்பதற்காக தனிப் பள்ளிவாயில் கட்டினர். நுபி (ஸல்) அவர்களையும் அவர்களின் குடும்பத்தினரின் கண்ணியத்தை கொச்சைப் படுத்தும் நோக்கத்தில் நபி (ஸல்) அவர்களின் மனைவி மீது அவதூறைப் பரப்பினர். நபி (ஸல்) அவர்களையும் முஸ்லிம்களையும் பூண்டோடு அழிக்கத் திட்டமிட்டு, இஸ்லாமிய எதிரிகளுடன் இரகசியமாகக் கைகோர்த்திருந்தனர். இவ்வாறு அவர்களின் ஈனச் செயல்களின் பட்டியல் நீள்கிறது.


இத்தகைய நயவஞ்சகர்களுக்கு பாவமன்னிப்புத் தேடுவது கூடாது! என்றும் நயவஞ்சகத்தனம் மன்னிக்கப்படாத குற்றங்களில் ஒன்று என்றும் அல்குர்ஆனின் எச்சரிக்கையைக் கண்டோம். இது நயவஞ்சகத்தின் ஒருபுறம்தான். மற்றொரு புறம் புகாரியில் இடம் பெறும் நபிமொழி கூறுவதைப் பாருங்கள்:-

இறை நம்பிக்கையாளரைத் தவிர வேறெவரும் அன்சாரிகளை நேசிக்க மாட்டார்கள்;. அவர்களை நயவஞ்சகர்களைத் தவிர வேறெவரும் வெறுக்கவும் மாட்டார்கள். யார் அவர்களை (அன்ஸாரிகளை) நேசிக்கிறார்களோ அவர்களை அல்லாஹ்வும் நேசிக்கிறான். யார் அவர்களை வெறுக்கின்றார்களோ அவர்களை அல்லாஹ்வும் வெறுக்கிறான் என நபி(ஸல்)அவர்கள் கூறினார்கள்.(அறிவிப்பவர்: பராஉ -ரலி ஹதீஸ் எண்: 3783)

வழிகெட்ட கூட்டங்களின் வெளிப்படையான அடையாளங்களில் ஒன்று நபித் தோழர்களை விமர்சிப்பதுதான். அவர்களை விமர்சிப்பது, திட்டுவது, அவர்களின் நம்பிக்கையில் சந்தேகங்களை கிளப்புவது, நமக்கிருக்கும் சாதாரண அறிவு கூட நபித்தோழர்களுக்கு இல்லை என்று அர்ச்சிப்பது, தரம் தாழ்த்தி நாராச நடையில் மேடைகளில் பேசுவது, அன்ஸாரி நபித்தோழர்களை அவமதிக்கும் வாசகங்களை நாக்கூசாமல் கூறுவது, இன்றைய நவீன நயவஞ்சகத்தின் மறுபக்கம். இதனை அறியாமல் வார்த்தை தவறி வந்துவிட்டது அல்லது ஊர் பேச்சு வழக்கம் என்ற ஜால்சாப்புகள் ஒருபுறம்கூறி பசப்பி விட்டு மற்றொரு புறம் மார்க்கம் என்ற பெயரிலேயே நபித்தோழர்களை விமர்சித்துக் கொண்டிருப்பது இவர்களின் இரு முகங்களை மிகத் தெளிவாக அடையாளம் காட்டுகிறது.

மார்க்கத்தின் பல்வேறு விஷயங்களில் தெளிவுபெற, அருள்மறை வசனங்கள் சில இறங்குவதற்குப் பின்னணியாகத் திகழ்ந்த, அல்லாஹ்வால் பொருந்திக் கொள்ளப்பட்ட, அல்லாஹ்வும் அல்லாஹ்வுடைய தூதர் (ஸல்) அவர்களும் கண்ணிப்படுத்திய உத்தமத் தோழர்களைக் கண்ணியப்படுத்தாமல், கடும் விமர்சனம் செய்யும் இவர்கள்தான் இன்றைய நவீன நயவஞ்சகர்கள்.

நபித் தோழர்களை விமர்சிக்கும் இந்த நவீன முப்ததிஆக்கள் (மார்க்கத்தில் புதிய கருத்துக்களை திணிக்கும் நவீனவாதிகள்) நபிமார்கள் விஷயத்திலும், நபித்தோழர்கள் விஷயத்திலும் சம காலத்தில் வாழும் சாதாரண மனிதர்கள் விஷயத்தில் துணிந்து பொய் சொல்வதில் திறமை படைத்தவர்கள் என்பது பலமுறை மக்கள் மன்றத்தில் அடையாளம் காட்டப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

நபி (ஸல்) அவர்களுக்கு அல்லாஹ் நயவஞ்சகர்களை குறிப்பிட்டு இனங்காட்டினான். எனவே அவர்கள் நயவஞ்சகர்களை மிகத் தெளிவாக அடையாளம் கண்டு கொண்டார்கள். எனவே ஒரு குறிப்பிட்ட நபரை இவர் நயவஞ்சகர் என்று நம்மால் தீர்ப்புக் கூற முடியாது. ஆனால் நயவஞ்சகம் மற்றும் நயவஞ்சகர்களின் தன்மைகளும் நடவடிக்கைகளும் குணாதிசயங்களும் அல்குர்ஆனின் பல இடங்களிலும் நபி (ஸல்) அவர்களின் வாயிலாகவும் மிகத் தெளிவாக அடையாளங்காட்டப்பட்டுள்ளன. இதன்படி நடப்பவர்கள் நயவஞ்சக பண்புக்குரியவர்கள் என்பதை மிகத் தெளிவாக புரிந்து கொள்ளலாம்.

எனவே அல்லாஹ்விடத்தில் நயவஞ்சகத்தை விட்டும் பாதுகாப்புத் தேட வேண்டும். அவர்களின் தன்மைகளை விட்டும் நம்மையும் நம் குடும்பத்தையும் முஸ்லிம் உம்மத்தையும் காப்பாற்ற வேண்டும். அல்லாஹ் அதற்கு உதவி புரிவானாக!
 

நன்றி: "அல்இர்ஷாத்" வெளியீடூ-2, இஸ்லாமிய அழைப்பகம், ஷாரஃ ஸப்யீன், ஜித்தா

இவ்வெளியீடு பற்றி தங்களின் கருத்துகளை alershad@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு தெரிவிக்கவும்