பூமியிலுள்ள அனைத்து ஜீவராசிகளும் ஒன்றை ஒன்றுச் சார்ந்து ஏதாவது
ஒன்றின் பக்கம் தேவையுடையதாகவே வாழ்கின்றன.
அவ்வாறு தேவை பூர்த்தியாகும் போது மகிழ்ச்சியையும்,
மனம் நிறைவு பெறாத போது ஏமாற்றம் என்ற தத்துவத்தையும்
தன்னுள் நிலை நிறுத்துகிறது.
ஆம்! ஒவ்வொரு மனிதனும் தன் வாழ்க்கையில் ஏதாவது ஒன்றை எதிர்பார்த்துக்
கொண்டிருக்கிறான் அவற்றில் சிலவற்றை அவன் பெற்றுக்கொள்கிறான், சிலவற்றைத்
தவறவிடுகிறான். இவ்வாறு நிகழ்வதெல்லாம் இறைவனின் செயல் என எண்ணும்போது,
இன்பம் வரும் போதும், துன்பம் வரும் போதும்
அவன் அதனை உற்சாகமாக எதிர் நோக்குவான். மனித
வாழ்வில் வெற்றியும் தோல்வியும் மாறி மாறி
நிகழ்கிறது.
தன்னை வணங்குவதற்காகவே மனிதனை படைத்த இறைவன் அவனை அறிவற்றவனாக வாழச்
செய்யவில்லை மாறாக சிந்தித்துணரும் சிற்பியாக அவனை தோற்றுவித்துள்ளான்.
மேலும் இறைவன் மனித வாழ்வின் ஒவ்வொரு நிகழ்வுகளைப்
பற்றியும் தெள்ளத் தெளிவாக எடுத்துரைத்து விட்டான்
வாழ்வில் நிகழும் ஒவ்வொரு வினாடியும் அழகானதாகவும் அலங்கோலமானதாகவும்
நாம் மாற்றிக் கொள்வது நம் மனநிலையால்
தான்.
சில நேரம் இவ்வுலகத்திலுள்ள அனைத்தும் கண் முன் அழகாகத் தோன்றும்.
மறுநேரம் உலகமே இருண்டு ஏமாற்றமாகத் தோன்றும் இவ்வாறு நிகழும் போது
மனிதன் நிலை குலைந்து தடுமாறுகிறான்.
அந்நிலையில்தான் இறைநம்பிக்கை என்னும் ஊன்றுகோல் அவனைத் தாங்கி நிலை
நிறுத்துகின்றது.
உங்களை விட்டுத்தவறிப் போன ஒன்றின் மீது நீங்கள் துக்கப்படாமல்
இருக்கவும் அவன் உங்களுக்கு அளித்தவற்றின் மீது நீங்கள் அதிகம்
மகிழாதிருக்கவும். (இதனை உங்களுக்கு அல்லாஹ்
அறிவிக்கிறான்) (அல்குர்ஆன்-57:23)
ஒரு
மனிதன் எப்போது முழுமையடைகிறான் என்றால்
அவன் தன்னைப் பக்குவப் படுத்திக்கொள்ளும் ஆற்றலை வளர்த்துக்
கொள்ளும்போதுதான். எந்த விதமான
ஏமாற்றமும் இல்லாமல் மனிதனுக்கு அவன் விரும்பியதெல்லாம்
கிடைத்துவிட்டால், அவன் வாழ்வு சீராக
அமையாது. தன் மனம் போன போக்கில் அவன் வாழ
ஆரம்பித்துவிடுவான். அதனால்தான் இறைவன்
மனிதன் விரும்பியவற்றில் சிலதை நிறைவேற்றியும் சிலவற்றை தடுத்தும்
வைத்துக் கொள்கிறான்.
"நிச்சயமாக செயல்கள் அனைத்தும் எண்ணங்களைப்
பொறுத்தே அமைகிறது" என்பதை, இறைவன் தன் தூதர் முஹம்மது (ஸல்) அவர்கள்
மூலம் நமக்கு
கற்றுக்கொடுத்துள்ளான்.
அதாவது மனிதன் செய்யும் ஒவ்வொரு செயலும் அவன் மனநிலையைப்
பொறுத்தே அமைகின்றது. ஆகையால் வெற்றிக்
கிடைக்கும் போது மகிழும் மனம், தோல்வியை
சந்திக்கும் போது அதனை தாங்கிக் கொள்ள தன்னை தயார்
படுத்திக்கொள்ள வேண்டும். உலகத்தின்
அலங்காரங்களை மனிதன் ரசித்துணரும் போது
தன்னையே மறந்து மகிழ்ச்சி வெள்ளத்தில் ஆழ்ந்திருக்கிறான்.
அப்போது அவன் தன்னைப் படைத்த இறைவனை மறந்து அவனுக்கு நிறைவேற்ற
வேண்டிய கடமைகளைத் தவறவிடுகிறான். வாழ்நாள்
முழுவதையும் இவ்வாறே அவன் கழித்தால், மறுமை
என்ற நிரந்தர வாழ்க்கைக்கு தன்னை தயார்படுத்த மாட்டான் என்பதை
கருத்தில் கொண்டுதான் இறைவன் இவ்வுலக மயக்கத்திலிருந்து அவனைத் தட்டி
எழுப்ப சிறிது ஏமாற்றத்தைக் கொடுக்கிறானே
தவிர, நிரந்தரமாக அவனை ஏமாற்றத்திலேயே
விடுவதில்லை. அதனை இறைவனே
தன் சத்திய வேதமாம் குர்ஆனில் கூறிவிட்டான்.
யார் இறைவன் மீது நம்பிக்கை வைக்கிறாரோ அவர் எண்ணி
இராத புறத்திலிருந்து
அவருக்கு எல்லாவற்றையும் இறைவன் அளிக்கிறான்.
மனிதனின் வாழ்க்கை ஒரே சீராக சென்றால், அது
அவனுக்கு சுவாரசியமான வாழ்க்கையாக இருக்காது என்பதற்காகத்தான்
எதிர்ப்பார்ப்பையும் ஏமாற்றத்தையும் இறைவன் ஏற்படுத்தியுள்ளான்.
ஏமாற்றமாய் நிகழும் ஒவ்வொரு நிகழ்வுகளும் நம் வாழ்வின் வெற்றிக்கு
வழிவகுக்கும் உறுதியான அஸ்திவாரங்கள். ஆனால்
இதனை அறிந்து கொள்ளாத மனிதனோ தன் எதிர்ப்பார்ப்புக்கு மாற்றமாக
நடக்கும் போது தன்னையே மாய்த்துக் கொள்கிறான்.
சிறிது நேரத்தில் எடுத்த கோழைத்தனமான
முடிவால் இவ்வுலகிலும் மறுமை வாழ்க்கையிலும் அவதியுறுவதை எண்ணி உயிர்
ஊசலாடும் போது வருந்துகிறான்.
இதனையெல்லாம் அறிந்து நாம் தெளிவு பெறுவோமானால்! ஏமாற்றங்களைக் கூட
சிகரங்களாக மாற்றி வெற்றி நடை போடலாம்.
இன்ஷா அல்லாஹ்
|