Index |Subscribe mailing list | Help | E-mail us

பொருளீட்டுவதற்கு இஸ்லாம் கூறும் வரைமுறைகள்

(ஹிஜ்ரி 1426 -ரமலான் மாதத்தில் ஜித்தா துறைமுகம் அழைப்பு மையம் நடத்திய போட்டியில் வெற்றிபெற்ற கட்டுரை)

 

பொருளீட்டுதலின் அத்தியாவசியம்


'தொழுகை முடிக்கப்பட்டதும் அல்லாஹ்வின் அருளை பூமியில் அலைந்து தேடுங்கள்! அல்லாஹ்வை அதிகம் நினையுங்கள்! நீங்கள் வெற்றி பெறுவீர்கள்! அல்-குர்ஆன் : 62:10


இந்த வசனத்தில் அல்லாஹ்வால் 'அருள்' எனக் குறிப்பிடப்படுவது மனிதன் தன்னுடைய அத்தியாவசியத் தேவைகளை பூர்த்தி செய்துகொள்ளத் தேவைப்படக்கூடிய பொருளாதாரம் ஆகும். எனவே தொழுகை எனும் வணக்கம் முடிவடைந்துவிட்டால் அவன் தன்னுடைய வாழ்க்கைக்குத் தேவைப்படக்கூடிய பொருட்களை பரந்து விரிந்த பூமியில் தேடி அடைந்து கொள்ளுங்கள், என திருக்குர்ஆன் நமக்கு அறிவுறுத்துகின்றது.

தன்னுடைய, தன் குடும்பத்திற்குண்டான பொருட்களை தகுதியுடைய ஒவ்வொரு மனிதனும் நேர்மையான முறையில் பெறவே முயற்சிக்க வேண்டும். திருக்குர்ஆன் வசனம் 2:273ன் மூலம் மார்க்கப் பணியில் ஈடுபடுபவர் தம்மால் இயலாது என்றால் மட்டுமே பொருளைத் தர்மமாகப் பிறரிடமிருந்து பெற்றுக்கொள்ளலாம். ஆனால் பொருளீட்ட இயலும் என்றாலோ அல்லது வேறு எந்தக் காரணங்களைக் கொண்டோ பொருளினைப் பெறுவதற்காக யாசிப்பதோ, தன் சுயமரியாதையை இழப்பதையோ அல்லாஹ் வன்மையாகக் கண்டிக்கின்றான்.

எனவே இஸ்லாமியர்களான நாம் மார்க்கம் அனுமதித்த வழியில் பொருளீட்டுவதை கட்டாயமாகப் பின்பற்றவேண்டும். இது குறித்து திருக்குர்ஆனின் பல இடங்களில் பொருளீட்டுவதற்கான ஒரு சில வரையரைகளையும், நெறிமுறைகளையும் அல்லாஹ் நமக்கு அறிவிக்கின்றான்.

குர்ஆன் கூறும் பொருளீட்டுதலின் நேரிய வழிமுறைகள்

ஒரு மனிதன் தனக்குத் தேவைப்படக் கூடிய பொருளாதாரத்தை எவ்வாறு பெறலாம் என்பதற்கு அல்லாஹ் சிறப்பான வழிமுறைகளை நமக்கு அறிவித்துள்ளான். அவையாவன.,

1)வியாபாரம்


நம்பிக்கைக் கொண்டோரே! உங்களுக்கிடையே, உங்கள் பொருள்களை தவறான முறையில் உண்ணாதீர்கள்! திருப்தியுடன் நடக்கும் வியாபாரத்தைத் தவிர.
(அல்-குர்ஆன் 4:29)

மேற்கூறப்பட்ட இந்த வசனத்தின் மூலம் அல்லாஹ் நமக்கு வியாபாரத்தை பொருளீட்டும் ஒரு அம்சமாக வழங்கியுள்ளான் என்பது புரியும். இரு நபர்களுக்கிடையே பரஸ்பர அடிப்படையில் கொடுக்கல், வாங்கல் நடைபெறுவதே வியாபாரம் எனக் கூறப்படுகிறது. இவ்வாறு செய்யப்படும் வியாபாரத்தில் கிடைக்கும் இலாபம் ஆகுமானதாகும், என அல்லாஹ் நமக்கு அறிவுறுத்துகின்றான். ஒரு வியாபாரம் நடைபெறும் போது கடைபிடிக்க வேண்டியவை.

அ)வியாபாரத்தில் நேர்மை
அவன் வானத்தை உயர்த்தினான், நிறுப்பதில் வரம்பு மீறாதீர்கள்! என்று தராசையும் நிறுவினான்! நியாயமாக எடையை நிலை நாட்டுங்கள்! எடையில் குறைத்துவிடாதீர்கள்!
அல்-குர்ஆன் 55: 7, 8 மற்றும் 9

வியாபாரத்தில் நேர்மையைக் கடைபிடிக்கவேண்டும் என இஸ்லாம் வலியுறுத்துகிறது. உதாரணமாக நபி(ஸல்) அவர்களுடைய வாழ்க்கை வரலாற்றைப் பார்த்தோமேயானால் அவர்களுக்கு அல்லாஹ் நபித்துவம் வழங்குவதற்கு முன்னரும், அவர்கள் மக்களிடையே பிரபலமானவராகத் திகழ்ந்தார்கள். இதற்கு முக்கியக் காரணம் அவர்கள் தான் ஈடுபட்ட வியாபாரத்தில் காட்டிய நேர்மையும், மேற்கொண்ட ஒப்பந்தத்தை மீறாமல் செயல்பட்ட காரணத்தினாலும்தான். எனவே அவர்களுடைய வழிகாட்டுதலைப் பின்பற்றும் நாமும் வியாபாரத்தில் நேர்மையாக நடந்துகொள்ளவேண்டும்.

ஆ)அளவு, நிறுவை சரியாயிருத்தல்
அளக்கும் போது நிறைவாக அளவுங்கள்! நேரான தராசு கொண்டு எடை போடுங்கள்! இதுவே சிறந்தது
(திருக்குர்ஆன் : 17 : 35)
அல்லாஹுதாஆலா ஒரு சமுதாயம் தன்னுடைய வியாபாரத்தில் செய்து வந்த அளவு, நிறுவை தவறுகளை திருத்துவதற்கென நபி ஷுஐப்(அலை) அவர்களை நபியாக அனுப்பிவைத்தான் எனில் இதில் நடைபெறும் தவறுகளை அல்லாஹ் கண்டிக்கின்றான் என்பதை புரிந்து நாம் செயல்பட வேண்டும்.

இ)மோசடியை தவிர்த்தல்
மோசடி செய்வது எந்த நபிக்கும் தகாது. மோசடி செய்தவர் மோசடி செய்த பொருளை கியாமத் நாளில் கொண்டு வருவார். பின்னர் ஒவ்வொருவருக்கும் அவர் செய்தது முழுமையாக வழங்கப்படும்.

ஒருவர் தாம் செய்த பாவத்திற்கான தண்டனையை அவரே அனுபவிக்க வேண்டும் இவ்வாறுதான் மோசடி செய்யும் ஒருவர் தான் மோசடி செய்த பொருளைக்கொண்டே தண்டிக்கப்படுவார் என அல்லாஹ் மோசடி குறித்து எச்சரிக்கை செய்கின்றான். எனவே வியாபாரப் பொருட்களில் கலப்படம், போலி, பித்தலாட்டம் போன்றவற்றை முற்றிலுமாக தவிர்க்க வேண்டும்.

2)உழைப்பின் மூலம் பொருளீட்டுதல்

உழைப்பின் மூலம் பெறக்கூடிய பொருட்கள் அனைத்தும் ஏற்றுக் கொள்ளப்படக் கூடியதாகும். இஸ்லாம் உழைத்துப் பெறக்கூடிய வகையில் ஒரு சில பணிகளைக் குறிப்பிடுகிறது. அவையாவன.,

அ)கூலி வேலை
மூஸா(அலை) அவர்கள் தாம் மணமுடித்துக் கொள்ளப்போகும் பெண்ணிற்கு மஹர் தொகை வழங்குவதற்கு அப்பெண்ணின் தந்தையிடம் எட்டு ஆண்டுகள் கூலி வேலை செய்தார்கள் என்று திருமறை (28:27) கூறுகின்றது. எனவே மஹரை பொருளாக இல்லாமல் கூலி வேலை செய்தால் சரியாகிவிட்டது எனில், கூலி வேலை செய்வதால் பெறப்படக் கூடிய பொருள் இஸ்லாத்தில் ஏற்றுக்கொள்ளப்படக் கூடியதே.

ஆ)மீன் பிடித்தல்
கடலிலிருந்து பசுமையான இறைச்சியை நீங்கள் உண்பதற்காகவும், அணிந்து கொள்ளும் நகையை நீங்கள் அதிலிருந்து வெளிப்படுத்திடவும், அவனது அருளைத்தேடவும், நீங்கள் நன்றி செலுத்திடவும் கடலை உங்களுக்கு அவனே பயன்படச்செய்தான்.
(திருக்குர்ஆன் : 16:4)

மேற்காணும் இந்த வசனத்தின் மூலம் கடலிலிருந்து மீன் பிடித்துப் பெறக்கூடிய வருமானம் அனுமதிக்கப்பட்டதாகும் என அறியலாம்.

இ)ஆபரணங்கள் செய்தல்
மேற்கூறப்பட்ட அல்குர்ஆன் 16:14 வசனத்தின் அடிப்படையில் முத்துக்குளித்தல், அவ்வாறு பெறப்பட்ட முத்துக்களை ஆபரணங்களாக மாற்றி அதனை விற்பதன் மூலம் பொருளீட்டுவதும் இஸ்லாத்தில் அனுமதிக்கப்பட்ட ஒன்று என்பதை அறியலாம்.

ஈ)கால்நடைகளை மேய்த்தல்
உண்ணுங்கள்! உங்கள் கால்நடைகளை மேயவிடுங்கள் அறிவுடையோருக்கு இதில் பல சான்றுகள் உள்ளன!
(அல்-குர்ஆன் : 20:54)

நபி(ஸல்) அவர்கள் இளமைப் பருவத்தில் ஆடு மற்றும் ஒட்டகங்களை மேய்க்கும் தொழிலை செய்து வந்தார்கள் என்பதின் மூலம் கால்நடைகளை மேய்த்து பராமரித்து வருவதில் பெறக்கூடிய வருமானமும் சரியானதே என அறியலாம்.

2)விவசாயம் செய்தல்


நீங்கள் பயிரிடுவதை சிந்தித்தீர்களா? நீங்கள் அதை முளைக்கச் செய்கிறீர்களா? அல்லது நாம் அதை முளைக்கச் செய்கின்றோமா?
(அல்-குர்ஆன் 56:63, 64)

விவசாயம் ஒவ்வொரு நாட்டின் முதுகெலும்பாகத் திகழ்கின்றது. உதாரணமாக இந்தியாவை எடுத்துக்கொண்டோமேயானால் 70 சதவிகிதம் மக்கள் விவசாயமே செய்து வருகின்றனர். ஒரு நாட்டில் விவசாயம் நடைபெறவில்லையெனில் அது எவ்வளவு பெரிய வல்லரசாக இருந்தாலும் விவசாய உற்பத்தியை மேற்கொண்ட நாட்டிடம் கையேந்தும் நிலை உள்ளது. இதையே அல்லாஹ் தன்னுடைய திருமறையில் விவசாயத்தைப் பற்றிச் சிந்தியுங்கள்! அதை நானே முளைக்கச்செய்து வளமாக்குகின்றேன் எனக் கூறுகின்றான்.

நபி(ஸல்) அவர்கள் கூறுகிறார்கள்;
எவர் ஒருவர் ஒரு செடியையோ, விதையையோ நாட்டி (அது வளர்ந்து பலனளித்து) அதிலிருந்து பறவைகளோ, மனிதர்களோ, மிருகங்களோ உணவு பெற்றால் அவரது செயல் தருமமாக கருதப்படுகிறது.


எனவே திருக்குர்ஆனும், நபி வழியும் அறிவுறுத்தும் பொருளீட்டும் இம்முறை மிகச் சிறந்ததாகும்.


மேலும் திருக்குர்ஆனும், நபிவழியும் அனுமதித்திருக்கும் பொருளீட்டும் முறைகளை வரும் இதழில் காண்போம்.

 

4. மனப்பூர்வமாக ஒருவர் தருவதை ஏற்றுக்கொள்ளுதல்


பெண்களுக்கு அவர்களின் மணக்கொடைகளை கட்டாயமாக கொடுத்துவிடுங்கள்! அவர்கள் மனமுவந்து அதில் எதையேனும் விட்டுக்கொடுத்தால் மனநிறைவுடனும் மகிழ்வுடனும் அதை உண்ணுங்கள். அல்குர்ஆன் 4:4


மனைவி விட்டுத்தரக்கூடிய மணக்கொடையைப் போல் பரிசாக வழங்குவது, உறவினர்கள் விட்டுக்கொடுப்பது போன்றவற்றையும் பொருளீட்டலில் இஸ்லாத்தில் ஆகுமானதாகும்.

5. கடன் மூலம் பொருளீட்டுதல்


அழகிய கடனை அல்லாஹ்வுக்காக கடன் கொடுப்பவர் யார்? அதை அவன் அவருக்கு அனேக மடங்கு அதிகரிக்கும் படிச் செய்வான். அல்குர்ஆன் 2:245

நபி அவர்கள் கூறினார்கள்;
உங்கள் அண்டை அயலார்கள் நோயிலிருந்தால் அவரிடம் சென்று விசாரியுங்கள். அவர்கள் நெருக்கடியில் இருந்தால் கடன் கொடுத்து உதவுங்கள்.

எனவே மேற்காணும் திருக்குர்ஆன் வசனமும், நபிமொழியும் எவர் ஒருவருர் வறுமை, பற்றாக்குறை, நோயினால் சிரமப்படுகிறாரோ அவருக்கு கடனை வழங்க வேண்டும் என அறிவுறுத்துகின்றனர். எனவே தன்னிடம் வசதியில்லாத ஒருவர் வசதியுடையவரிடம் கடனாக பொருளை பெற்றுக்கொள்வதும் கூடுமானதாகும்.


பொருளீட்டும் போது கடைபிடிக்க வேண்டிய நெறிமுறைகள்


பொருளீட்டும் நடவடிக்கைகளில் சில நெறிமுறைகளை கடைபிடிக்க வேண்டும் என இஸ்லாம் மக்களுக்கு அறிவுறுத்துகின்றது.

1. லஞ்சம் வாங்குவதற்கு தடை
உங்களுக்கிடையே உங்கள் பொருட்களைத் தவறான முறையில் உண்ணாதீர்கள்! தெரிந்து கொண்டே மக்களின் பொருட்களில் ஒரு பகுதியைப் பாவமான முறையில் சாப்பிடுவதற்காக அதிகாரிகளிடம் உங்கள் பொருட்களைக் கொண்டு செல்லாதீர்கள! திருக்குர்ஆன் 2:188
இவ்வசனம் மூலம் பிறரின் பொருட்களை அடைய லஞ்சம் கொடுப்பதோ, வாங்குவதோ தவறு என சுட்டிக்காட்டப்படுகிறது. எனவே பொருளீட்டலில் இலஞ்சத்தைத் தவிர்க்கவேண்டும்.

2. வட்டி வாங்கத் தடை
வட்டியை உண்போர் (மறுமை நாளில்) ஷைத்தான் தீண்டியவனைப் போல் பைத்தியமாக எழுவார்கள். 'வியாபாரம் வட்டியைப் போன்றதே' என்ற அவர்கள் கூறியதே இதற்குக் காரணம். அல்லாஹ் வியாபாரத்தை அனுமதித்து வட்டியை தடைசெய்து விட்டான். அல்குர்ஆன் 2:275


வட்டி மூலம் பொருள் சேர்ப்போர்க்கு நிரந்தர நரகம் என்றும் அவர்கள் என்னுடன் போர் செய்பவர்கள் என்றும் அல்லாஹ் நம்மை எச்சரிக்கை செய்கின்றான். எனவே கொடிய வட்டியைக் கொண்டு நாம் பொருளீட்டுவதை தவிர்க்க வேண்டும்.

3. பிறர் பொருளை அபகரித்தல்
நம்பிக்கை கொண்டோரே! மத குருமார்களிலும், பாதிரிகளிலும் அதிகமானோர் மக்களின் செல்வங்களை தவறான முறையில் உண்ணுகின்றனர். அல்லாஹ்வின் பாதையை விட்டும் மக்களை தடுக்கின்றனர். அல்-குர்ஆன் 9:34


தங்களை நாடிவரக் கூடிய மக்களிடம் தவறான முறையில் அவர்களிமிருந்து பொருளை அபகரிப்பது திருடுவதற்கு சமமாகும். இவ்வாறு மதத் தலைவர்களும், பாதிரியார்களும் உண்ணுவதை அல்லாஹ் குறிப்பிடுகின்றான்.

4. மோசடி
நம்பிக்கை கொண்டோரே! அறிந்து கொண்டே அல்லாஹ்வுக்கும் இத்தூதருக்கும் மோசடி செய்யாதீர்கள்! உங்களிடம் நம்பி ஒப்படைக்கப்பட்டவற்றிலும் மோசடி செய்யாதீர்க்ள். (திருக்குர்ஆன் 8:27)


ஒருவர் நம்பி உங்களிடம் ஒப்படைத்த பொருளை அவர் கேட்கும் போது அவரிடம் திருப்பித் தர வேண்டும். அதனை திருப்பித் தரமால் ஏமாற்றுவதை அல்லாஹ் இவ்வாறு திருமறையில் குறிப்பிடுகின்றான்.

5. அனாதைச் சொத்து
அனாதை சொத்துக்களை அவர்களிடம் அளித்துவிடுங்கள்! நல்லதை கெட்டதற்கு பகரமாய் மாற்றிவிடாதீர்கள்! அவர்கள் சொத்துக்களை உங்கள் சொத்துக்களுடன் சேர்த்து சாப்பிடாதீர்கள்! இது மிகப்பெரிய குற்றமாக உள்ளது. திருக்குர்ஆன் 4:2


உங்களிடம் ஒப்படைக்கப்பட்ட அனாதைகளையும், அவர்களின் சொத்துக்களையும் அவர்கள் உரியவயதை அடைந்தவுடன் அவரின் சொத்தை அவரிடம் வழங்கிவி;ட வேண்டும். அதில் எதையும் அடைந்து கொள்ள முயற்சிக்கக் கூடாது.

6. பொய் சொல்லி வியாபாரம்
வேதமுடையோரே! ஏன் உண்மையை பொய்யுடன் கலக்கிறீர்கள்! அறிந்து கொண்டே ஏன் உண்மையை மறைக்கிறீர்கள். (திருக்குர்ஆன் 3:71)


வியாபாரத்தில் ஒரு பொருளை அது உரிய தரத்துடன் இல்லையெனினும் அதைப்பற்றி உயர்வாகக் கூறி அதனை விற்பனை செய்வது கூடாது.


இவ்வாறு பொருளீட்டுவது இஸ்லாத்தில் மறுக்கப்படுவதோடு இது மிகப் பெரிய குற்றம் எனவும் குறிப்பிடப்படுகிறது.

7. அளவை, நிறுவை மோசடி
அளவையும், நிறுவையையும் நிறைவாக்குங்கள்! மக்களுக்கு அவர்களின் பொருட்களை குறைத்துவிடாதீர்கள்! (அல்குர்ஆன் 7:85)
ஒரு பொருளை வாங்கும் நுகர்வோருக்கு அதனுடைய சரியான அளவையும், எடை போடும் போது சரியாக நிறுத்தியும் தர வேண்டும். அவ்வாறில்லாமல் ஏமாற்றி பெறக்கூடிய பொருள் முறையாக சம்பாதித்ததாக ஆகாது,

8. விபச்சாரம்
கற்பொழுக்கம் நாடும் உங்கள் பெண்களை இவ்வுலக சாதனங்களைப் பெறுவதற்காக விபச்சாரத்திற்கு நிர்பந்திக்காதீர்கள்! திருக்குர்ஆன் 24:33


பொருளீட்ட வேண்டும் என்பதற்காக தங்களது குடும்பத்தைச் சார்ந்த பெண்களை விபச்சாரத்தின் பக்கம் அழைத்துச் செல்லக் கூடாது. அல்லாஹ் இந்தச் செயலை மன்னிக்கவேமாட்டான்.


மேற்கூறிய இவை மட்டுமல்லாமல்

(1) கலப்படம் செய்து பொருட்களை விற்பதையும் (அல்குர்ஆன் 2:42)

(2) மார்க்கத்தைக் காட்டி பொருள் திரட்டுவதையும் (அல்குர்ஆன் 10:72)

(3) சகோதரர்களுக்கு தரவேண்டிய சொத்தை தராமல் ஏமாற்றி அதன் மூலம் பொருளீட்டுவதையும் (அல்குர்ஆன் 38:23, 24)

(4) பொய்ச் சத்தியம், யாசகம் கேட்டு பொருள் பெறுவதையும் (அல்குர்ஆன் 16:95) மற்றும்

(5) ஈட்டிய பொருளை கஞ்சத்தனமாக வைத்திருப்பதையும் அல்லாஹ் தன்னுடைய திருக்குர்ஆனின் மூலம் நமக்கு தடை செய்துள்ளான்.

எனவே அல்லாஹ் நமக்கு வழங்கிய அருட்கொடையான பொருள்களை நியாயமான முறையில் மேற்கூறப்படும் அல்லாஹ்வின் வரையரைகளையும், நெறிமுறைகளையும் பேணி நபி(ஸல்) அவர்கள் காட்டிய நேரிய வழியில் சம்பாதிப்பதோடு அதே அல்லாஹ்வின் கட்டளைப்படி நடப்போமாக!
 

படியுங்கள் பரப்புங்கள் : "சுவனப்பாதை" மாதஇதழ், - வெளியீடு: ஜித்தா, ஸனாயிய்யா, சவுதி அரேபியா