எது..? எதற்கு..? இரை
பட்டினத்தான் |
இணையற்ற இறை 'இரை'யளிக்கும் விதம் ஓர் அற்புதம்
'அல்லாஹ் உணவளிக்கப் பொறுப்பேற்காத எந்த ஜீவராசிகளும் மண்ணில் இல்லை'
(அல்-குர்ஆன் 11:6)
நீரில் உள்ள புழு, பூச்சிகள்.. மீனுக்கு
இரை!
மீன்.. தவளைக்கு இரை!
தவளை.. பாம்புக்கு இரை!
பாம்பு.. பருந்துக்கு இரை!
பருந்து.. விலங்குக்கு இரை!
விலங்கு.. மனிதனுக்கு இரை!
மனிதனோ.. தன் மனோ இச்சைக்கு இரை!
(நன்றி : விகடன் 29-08-2004)
'தங்கள் உணவைச் சுமந்து திரியாத எத்தனையோ பிராணிகள் உள்ளன.
அவைகளுக்கும், உங்களுக்கும் அல்லாஹ்தான் உணவளிக்கிறான்' (அல்-குர்ஆன்
29:60)
'வலை' (Internet-அல்ல) விரித்தால்.. உண்டு
உணவு!
'கலை நயமாய்' வலைக் கூட்டில்..
காத்திருக்கும் சிலந்திக்கு..
எங்கெங்கோ 'ஈ' பறந்து எறிச்சலூட்டும்.. என்றாலும்
வலையழகின் ஈர்ப்பில் வந்து விழும் பூச்சிதான்
எட்டுக்கால் பூச்சிக்கு இரை..
விதிக்கப்பட்டது... 'இரையா?' , 'வாழ்க்கையா?'
மானை 'இரை'யென்றெண்ணி.. விரட்டியோடும் வேங்கை.
வேகத்தில் அதனைவிட மிகைத்ததுதான் என்றாலும்..
வல்லவன் விதித்த விதி யாருக்குத் தெரியும்?
உணவு எழுதியிருந்தால்? புலி மான் மீது
பாய்ந்து குதறிக் கிழித்து விடுகிறது
வாழ்க்கையை எழுதியிருந்தால் 'மான்' புலியை தந்திரமாய் வஞ்சித்து..
லாவகமாய்த் தப்பி விடுகிறது!
ஓர் உயிர் பலி 'பல உயிருக்கு விருந்து'
குதறப்பட்ட மானின் இரத்தமும் உள்ளுறுப்பும் புலிக்கு..
சதை விருந்தில்.. முதல் பந்தி கழுகுக்கும், பருந்துக்கும்
பின்னர் நரியும், ஓநாயும்.. இறுதியில் காகமுமாய்..
எஞ்சிய எலும்புகளும் ஜின்களுக்கு உணவாய்..
மனிதா! மனிதா!
ஒன்றை.. ஒன்றுக்கு.. இரையாக்கி
அனைத்தினையும் மனிதனுக்குப் பயனாக்கிய
அவன் அருளாளன்!
(மனிதர்களே!) நிச்சயமாக நாம் உங்களை பூமியில் (அனைத்து அதிகாரங்களுடன்)
வசிக்கச் செய்தோம் அதில் உங்களுக்கு வாழ்க்கை (வசதிக்குரிய) அனைத்து
சாதனங்களையும் நாம் ஆக்கித்தந்தோம் எனினும் மிகக் குறைவாகவே நன்றி
செலுத்துகிறீர்கள். (அல்-குர்ஆன் 7:10)
'அறிவால்' அனைத்தினையும் வசப்படுத்தும்... மானிடா!
'ஆசை' அலைகளுக்குப் பலியாதல்... ஏனடா?
மனிதன் தன் மனோ இச்சைக்கு இரை!
நபி (ஸல்) அவர்கள் நவின்றார்கள்: 'மனிதனுக்கு வயது ஆக ஆக அவனிடத்தில்
இரு விஷயங்கள் வளர்ச்சியடைந்தே வருகின்றன'
1) பொருளின் மீது பேராசை
2) வயதின் மீது பேராசை (நூற்கள்: புகாரி,
முஸ்லிம்)
ஏக இறைமொழி! எச்சரிக்கை ஒலி!
மனோ இச்சையைப் பின்பற்ற வேண்டாம். (பின்பற்றினால்) அது உம்மை
அல்லாஹ்வுடைய பாதையைவிட்டும் வழிதவறச் செய்து விடும். (அல்-குர்ஆன்
38:26)
உம்மை நீர் கட்டுப்படுத்திக் கொள்வீராக!
நிச்சயமாக மனித மனம் பாவத்தின் பால் அதிகமதிகம் தூண்டக்கூடியதாகவே
இருக்கிறது 'என் இரட்சகன் யாருக்கு அருள் புரிந்தானோ' அவனைத் தவிர.
(12:53)
எச்சரிப்போர் (இறைத்தூதர்) மொழி
நபி (ஸல்) அவர்கள் நவின்றதாக அபூஹுரைரா (ரலி) அறிவிக்கிறார்கள்,
மனதிற்கு ஆசையூட்டும் விஷயங்களைக் கொண்டு 'நரகம்' திரையிடப்பட்டுள்ளது.
'மனம்' விரும்பாத கஷ்டங்களைக் கொண்டு 'சுவனம்' திரையிடப்பட்டுள்ளது.
(எவர் எதன் பக்கம் செயல்படுகிறாரோ அவர் அதனுள் நுழைவார்!) (ஆதாரம்; :
புகாரி, முஸ்லிம்)
நபியவர்கள் நவின்றதாக ஜாபிர் (ரலி) அறிவிக்கிறார்கள் 'எனக்கும்
உங்களுக்கும் உவமையாகிறது ஒரு நெருப்பை மூட்டுபவரைப் போன்றதாகும்.
(அவர் நெருப்பை மூட்டியதும்) ஈசல்களும், வெட்டுக் கிளிகளும்
அந்நெருப்பில் வீழ்ந்து வதங்குகின்றன. அவர் அவைகளை நெருப்பில் விழாமல்
தடுத்துக் கொண்டிருக்கிறார். அவ்வாறே நான் உங்களது இடுப்பைப் பிடித்து
நரகத்தை விட்டும் தடுத்துக் கொண்டிருக்கிறேன்! நீங்களோ எனது கரத்தை
விட்டும் மீறி மீறிச் செல்கிறீர்கள்!' (ஆதாரம் : முஸ்லிம்)
'விட்டில்'களே! விழாதீர்கள் நெருப்பின் மீது!
'குழி தோண்டி இலை மூடி' பரப்பி வைத்த 'இரை' தேடி ஆவலாய்.. வந்து விழும்
யானை...
தூண்டில் புழுச் சுவையில்... முள் காணா(த) மீனே!
'மசாலா' ஆடையிட்டு...
மனிதனுக்கு 'இரை'..தானே!
ஆபாசக் கவர்ச்சியில் (Cenema)
அதற்கான.. முயற்சியில்...
உழைத்திட்ட.. பணமிழந்து
'உன்னத' நேரமும், உறக்கமும்,
உடல் நலமும்.. தானிழந்து
'நெருப்பின் மேல்' விட்டிலாய்..
மார்க்கமறிந்த.. மானிடா!
நீ.. நீ.. நீயுமா? இப்படி??
இருள் இருளாய் 'மனது' அளவற்ற அருள் 'அவனது' இறைவனிடமிருந்து பெற்ற
அறிவிப்பு (ஹதீஸ் குத்ஸி) களில் ஒன்று என இறைத் தூதர் (ஸல்) அவர்கள்
கூறியதாக இப்னு அப்பாஸ் (ரலி) அறிவிப்பதாவது 'அல்லாஹ் (ஒருவர்
செய்யும்) நல்ல செயல்களையும், தீய செயல்களையும் எழுதிக் கொள்கிறான்.
அதற்கு மேல் அவன் அதனை விளக்கியும் இருக்கின்றான். ஒருவர் ஒரு நல்ல
செயலைச் செய்ய நினைத்தார். அவர் அதனைச் செய்து முடிக்கவில்லை.
இருந்தாலும் இறைவன் அதனை ஒரு முழுமையான நல்ல செயலாக எழுதிக்
கொள்கிறான். ஒருவர் ஒரு நல்ல செயலைச் செய்ய நினைத்து அதனைச் செய்தும்
முடிப்பாரேயானால் அல்லாஹ் அதனை பத்து முதல் எழுநூறு மடங்காய்.. இல்லை..
இல்லை அதற்கும் பன் மடங்கு அதிகமாய்க் குறித்துக் கொள்கிறான்.
அதே சமயம் ஒருவர் ஒரு தீய செயலைச் செய்ய நினைத்து அதனைச் செய்யவில்லை
எனில் அதனை அல்லாஹ் ஒரு நல்ல செயலாக எழுதிக் கொள்கிறான். ஒருவர் ஒரு
தீய செயலைச் செய்ய நினைத்து அதனைச் செய்து முடித்தால் கூட அல்லாஹ் அதனை
ஒரே ஒரு தீய செயலாக மட்டுமே எழுதிக் கொள்கிறான். (நூற்கள்:
புகாரி, முஸ்லிம்)
சளைக்காத.. சலுகையாய்!
வள்ளலாய்.. வல்லவன் வழங்கிய.. நன்மை இருந்தும்
உன் 'பாவப்புத்தகத்தின் பக்கங்கள்' பெருகிக் கொண்டே போகிறதே!
மனிதா? உனக்கு இது இனிதா?
இன்று அல்ல 'நாளை'
நாளையென்று நாள் கடத்தும்.. நீ
திருந்துவது என்று?
நீ இருக்குமிடமோ.. இருள்!
அழைக்கிறது அவனருள்!.. வா
வருந்தித் திருந்திடுவோம் வா!.. வா!
என்ன? உன் கணக்கு?
தங்கள் மீது (தாங்களே) அளவு கடந்து பாவங்கள் செய்து விட்ட என்
அடியார்களே! அல்லாஹ்வின் அருளிலிருந்து நீங்கள் நிராசையடைந்து
விடவேண்டாம். நிச்சயமாக அல்லாஹ் (உங்களது) பாவங்கள் யாவற்றையும்
(நீங்கள் பிழை பொறுக்கத் தேடினால்) அவன் மன்னித்துவிடுவான். நிச்சயமாக,
அவன் மிக்க மன்னிப்பவன், மிக்கக் கிருபையுடையவன், என்று (நபியே!) நீர்
கூறுவீராக!
(அல்-குர்ஆன் 39:53)
எவர் 'ஓர் அணு அளவு நன்மையை'ச் செய்தாரோ அவர் (மறுமையில்) அத(ன்
பய)னைக் கண்டு கொள்வார். எவர் 'ஓர் அணு அளவு தீமையை'ச் செய்தாரோ அவர்
(மறுமையில்) அத(ன் பய)னைக் கண்டு கொள்வார். (அல்-குர்ஆன் 99:7, 8)
|