அல்லாஹ்வுக்கே எல்லாப்புகழும்! அவனே தனது திருத்தூதரை
நேர்வழியுடனும் உண்மையான மார்க்கத்துடனும் அனுப்பி வைத்தான்,
அகிலங்களிலுள்ள அனைத்து மார்க்கத்தை விடவும் அதனை மேலோங்கச்
செய்தான், அல்லாஹ்வின் அன்பும் அருளும் நமது உயிரினும் மேலான நபி
(ஸல்) அவர்கள் மீதும் அவர்களின்
அடிச்சுவட்டை பின்பற்றிய உத்தம நபித் தோழர்கள் மற்றும் அவர்களை
அழகிய முறையில் பின்பற்றும் அனைவர் மீதும் உண்டாவதாக.
அல்லாஹ் தஆலா கூறுகின்றான்,
இன்னும் நீங்கள் அல்லாஹ்வின் பாதையில்
அவனுக்காக போராட வேண்டிய முறைப்படி போராடுங்கள்; அவன் உங்களைத்
தேர்ந்தெடுத்துக் கொண்டான்; இந்த தீனில் (மார்க்கத்தில்) அவன்
உங்களுக்கு எந்த சிரமத்தையும் ஏற்படுத்தவில்லை; இது தான் உங்கள்
பிதாவாகிய இப்றாஹீமுடைய மார்க்கமாகும்; அவன்தாம் இதற்கு முன்னர்
உங்களுக்கு முஸ்லிம்கள் எனப் பெயரிட்டான். (22:78)
அன்றியும், அவர்கள் அல்லாஹ்வுடன் வேறு
நாயனைப் பிரார்த்திக்கமாட்டார்கள்; இன்னும், அல்லாஹ்வினால்
விலக்கப்பட்ட எந்த மனிதரையும் அவர்கள் நியாயமின்றிக்
கொல்லமாட்டார்கள், விபச்சாரமும் செய்ய மாட்டார்கள் - ஆகவே, எவர்
இவற்றைச் செய்கிறாரோ, அவர் தண்டனை அடைய நேரிடும். (25:68)
நபி (ஸல்) அவர்கள் கஃபாவில் தொழுது கொண்டிருந்தபோது அவர்களை
எதிரிகள் கடுமையாகத் தாக்கினார்கள், பார்த்துக் கொண்டு வந்த
அபூபக்கர் (ரழி) அவர்கள் கேட்டார்கள், எனது இறைவன் அல்லாஹ் என்று
கூறியதற்காகவா இந்த மனிதரைக் கொலை செய்ய முற்படுகின்றீர்கள்?
அன்றைய மக்காவின் நிலை இது. இஸ்லாம் என்ற உன்னதக் கொள்கையை ஏற்றுக்
கொண்டதற்காக கடுமையாகத் தாக்கப்பட்டார்கள், பலர் கொடூரமாகக் கொலை
செய்யப்பட்டார்கள். தங்கள் வீடுகளை விட்டும் நியாயமின்றி
துரத்தப்பட்டனர். இது நமது முன்னோர்களாகிய ஆரம்ப கால முஸ்லிம்களின்
வரலாறு. இறுதியில் வேறு வழியின்றி நாடு துறந்தனர். மதீனாவில்
அவர்களது வளர்ச்சியையைத் தடுக்க எதிரிகள் திட்டம் தீட்டினர்.
அவர்களை அங்கும் வாழ அனுமதிக்க மாட்டோம் என முடிவு செய்தனர்.
இனியும் எதிர்த்துப் போராடாமல் இருப்பது தற்கொலைக்குச்
சமமானதாகும். தங்களது மார்க்கத்தை நிலை நிறுத்த, அவர்களது
வாழ்வுரிமைக்கு ஏற்பட்ட களங்கத்தை துடைக்க யுத்தம் செய்ய
அவர்களுக்கு அல்லாஹ் அனுமதி வழங்கினான்.
போர் தொடுக்கப்பட்டோருக்கு - அவர்கள் அநியாயம்
செய்யப்பட்டிருக்கின்றார்கள் என்பதனால் (அவ்வாறு போர் தொடுத்த
காஃபிர்களை எதிர்த்துப் போரிடுவதற்கு) அனுமதி
அளிக்கப்பட்டிருக்கிறது; நிச்சயமாக அவர்களுக்கு உதவி செய்ய அல்லாஹ்
பேராற்றலுடையவன்.
இவர்கள் (எத்தகையோரென்றால்) நியாயமின்றித்
தம் வீடுகளை விட்டு வெளியேற்றப்பட்டார்கள்; 'எங்களுடைய இறைவன்
ஒருவன்தான்' என்று அவர்கள் கூறியதைத் தவிர (வேறெதுவும் அவர்கள்
சொல்லவில்லை) (22:39,40)
யார் யுத்தம் செய்ய வேண்டும்?
அக்கிரமத்தை தடுத்து நிறுத்த எடுத்த எடுப்பிலேயே யுத்தத்தில் ஈடுபட
நபி (ஸல்) அவர்கள் கட்டளையிடப்படவில்லை. மதீனாவில் அவர்களது
தலைமையில் இஸ்லாமிய அரசு ஏற்பட்டபோது அந்த அரசுக்கு ஊறு
விளைவிக்கும் நோக்கில் எதிரிகளின் செயல்பாடுகள் அமைந்தபோது அவர்கள்
யுத்தம் செய்ய வேண்டியிருந்தது. மக்காவில் முஸ்லிம்கள் கடுமையான
தாக்குதல்களை சந்தித்த போதும் பொறுமையை மேற்கொள்ளச் சொன்னார்கள்.
அன்று ஒரு யுத்தத்திற்கான சூழ்நிலை உருவாகியிருக்கவில்லை. தார்மீக
அடிப்படையில் யுத்தம் செய்ய சரியான வழிகாட்டுதல்களுடன் கூடிய ஒரு
தலைமை அவசியம் ஆகும்.
இஸ்லாமிய ஆட்சியாளர்கள் வரம்பு மீறினால்?
நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்,
ஆட்சியாளர்களிடம் நீங்கள் வெறுக்கக் கூடிய விஷயத்தைக் கண்டால்
பொறுமையுடன் இருங்கள், எவரேனும் ஒரு சாண் அளவேனும் ஆட்சியாளனுக்கு
மாறு செய்வாராயின் அவர் அஞ்ஞான காலத்து மரணத்தையே தழுவ நேரிடும்.
(புகாரி)
பிற்காலத்தில் முஸ்லிம் ஆட்சியாளர்கள் தவறான போக்கைக் கையாண்டாலும்
அவர்களுக் கெதிராக கலகத்தில் ஈடுபடுதல் கூடாது என்று நபி (ஸல்)
அவர்கள் எச்சரித்துள்ளார்கள்.
அவரவர்கள் சட்டத்தை கையில் எடுத்துக் கொண்டால் ஒரு நாட்டின் சட்டம்
ஒழுங்கு சீர் குலைந்து அக்கிரமமும் அநீதியுமே மிஞ்சி நிற்கும்.
இதனாலேயே இஸ்லாம் இது விஷயத்தில் சரியான வழிகாட்டுதலை
வழங்கியுள்ளது.
திருக்குர்ஆனும் நபி வழியும் நமக்கு வழிகாட்டுவது,
அநியாயமாக வீடுகளை விட்டு வெளியேற்றப்படாதவரை, மதச் சுதந்திரம்
பறிக்கப்படாதவரை யுத்தம் செய்யக்கூடாது.
மேற்கண்ட கொடுமைகளை ஓர் அரசு செய்யாத வரை அரசாங்கத்தை
எதிர்த்து கலகம் செய்யும் வகையில் சட்டத்தைக் கையில் எடுத்துக்கொள்ளும் உரிமை கிடையாது.
யுத்தத்தின் ஒழுங்கு முறைகள்
தற்காப்புக்காகவும் சத்தியத்தின் மீது நிலை கொள்வதற்காகவும்
நடைபெற்ற இஸ்லாமிய யுத்தங்கள் முற்றிலும் நீதியும் நேர்மை
மிக்கதாகவும் இருந்தது. நபி (ஸல்) அவர்கள் நேரில் கலந்து கொண்ட
யுத்தங்கள் அவர்கள் படைகளை நியமித்து யுத்தங்கள் ஆக அனைத்துமே
குழப்பத்தைத் தடுத்து நிறுத்தி அமைதியை நிலை நாட்டும் நோக்குடன்
அமைந்திருந்தது. அக்கிரமக்காரர்கள் மூட்டிய நெருப்பை அணைக்கவும்
பலதெய்வக் கொள்கைக்கும் இஸ்லாமிற்கும் நடந்த போராட்டத்தில்
எதிரிகளின் முனைகளை மழுங்கச் செய்யவும் அவ்வாறே அவர்களை
சமாதானத்தின் பால் வழி நடத்தவும் அதன் மூலம் இஸ்லாமியப்
பிரச்சாரத்தை எளிதாக நடத்திச் செல்லவும். வஞ்சனைகளும்
சதித்திட்டங்களும் மனதில் சுமந்து கொண்டிருந்த நயவஞ்சகர்களை
இஸ்லாமிய அமைப்பிலிருந்து பிரித்துக்காட்டவும் யுத்தங்களால்
சாத்தியமானது.
அறியாமைக்கால யுத்த முறைகளையும், யுத்த நோக்கங்களையும் போராட்ட
வழிமுறைகளையும் இஸ்லாம் அடியோடு மாற்றியது. கொள்ளை, வழிப்பறி,
கொலை, அக்கிரமம், வக்கிரம் தீர்த்தல், பலகீனனை அடக்கி நிறுத்தல்,
பெண்களை மானபங்கப் படுத்துதல், விவசாயங்களுக்கு நாசம் விளைவித்தல்,
பூமியில் கலகம் விளைவித்தல் போன்றவையே அஞ்ஞான காலத்து யுத்த
முறைகளாகும். இன்று உலகில் அராஜகத்துவத்தை விளைவிக்கும் நாடுகளின்
யுத்த முறையும் இதுவே.
இஸ்லாம் இவற்றுக்கெல்லாம் மாறாக உன்னதமும் நேர்மையும் வாய்ந்த
இலட்சியங்களை முன்னிறுத்தி மட்டுமே யுத்தங்களை நடத்தியது.
அடக்குமுறையிலிருந்தும், அட்டூழியத்திலிருந்தும், பரஸ்பர
விரோதத்திலிருந்தும் மனிதனை ஈடேற்றவும் அமைதியை நிலை நாட்டவுமே
யுத்தங்கள் நடைபெற்றன. யுத்தம் நடத்துவது இஸ்லாத்தின்
நோக்கமல்ல. மாறாக நீதியை நிலை நாட்ட யுத்தங்கள்
அவசியமாயின. பலமானவன் பலகீனமானவன் மீது அடக்குமுறையைக்
கட்டவிழ்த்து விடுவதிலிருந்து மாறி நீதி மற்றும் தர்மத்தின்
அடிப்படையில் யுத்தங்கள் நடை பெற்றன. வஞ்சனைக்கும் சதிக்கும்
அடக்குமுறைக்கும் பழிவாங்கும் நடவடிக்கைக்கும் ஆளாகி துன்புறும்
சமூகத்தைக் காத்து அமைதியான சூழலில் வழிநடத்தவுமே அவை அவசியமாயின.
முஸ்லிம் படைகளுக்கு மிகவும் கட்டுக்கோப்பான ஒழுங்கு முறைகளை நபி
(ஸல்) அவர்கள் ஏற்படுத்திக் கொடுத்தார்கள். ஒரு பொழுதேனும் அந்த
ஒழுங்கு முறைகளில் சிறிதளவேனும் மாறுதல் செய்ய
அனுமதிக்கப்படவில்லை. ஒவ்வொரு படைகளிலும் படைத் தளபதிக்கு மிகவும்
கண்டிப்பான ஒழுங்கு முறைகளை வகுத்தார்கள், அவை பல ஹதீஸ்களிலும்
அறிவிக்கப்பட்டுள்ளன.
நபி (ஸல்) அவர்கள் ஒரு படைத்தளபதியை நியமித்து விட்டு அவரிடம்
முதலில் உபதேசிப்பது அல்லாஹ்வைப் பயந்து கொள்ள வேண்டும்
என்பதாகும். இறையச்சத்தை மேற்கொண்டு களமிறங்கும் ஒருவரால் எவ்வாறு
அநீதியைக் கையாள முடியும்? வரம்பு மீறி அப்பாவிகளைக் கொலை செய்ய
முடியும்?
மேலும் புனித மஸ்ஜிதை (கஃபத்துல்லாஹ்வை)
விட்டும் உங்களைத் தடுத்த கூட்டத்தினர் மீதுள்ள வெறுப்பானது,
நீங்கள் வரம்பு மீறுமாறு உங்களைத் தூண்டி விட வேண்டாம்.
(5:2)
முஃமின்களே! நியாயத்தை நிலை நாட்டுவதற்காக அல்லாஹ்வுக்கு நீங்கள்
உறுதியான சாட்சியாக இருங்கள், எந்த ஒரு கூட்டத்தார் மீதும் நீங்கள்
கொண்டுள்ள வெறுப்பு நீதி செய்யாமலிருக்க உங்களைத் தூண்ட வேண்டாம்.
நீதி செய்யுங்கள். இதுவே (தக்வாவுக்கு) - பயபக்திக்கு மிக
நெருக்கமாகும். அல்லாஹ்வுக்கு அஞ்சுங்கள்; நிச்சயமாக அல்லாஹ்
நீங்கள் செய்பவற்றை(யெல்லாம் நன்கு) அறிந்தவனாக இருக்கின்றான்.
கஃபதுல்லாஹ்-வை விட்டும்
தடுத்தவர்களிடம் கூட வெறுப்புக்
காட்டக்கூடாது என்னும் உன்னதமான இஸ்லாமிய ஒழுங்கு முறைக்கு முன்னர்
அப்பாவிகள் நியாயமின்றி கொலை செய்ப்படுவதை எவ்வாறு நியாயப்படுத்த
முடியும்?
மேலும் படைத்தளபதிகளுக்கு நபி (ஸல்) அவர்களின் உபதேசங்கள்,
நிராகரிப்பாளர்களை எதிர்த்து
அல்லாஹ்வின் பெயரால் போரிடுங்கள், அல்லாஹ்வின் பாதையில்
போராடுங்கள். வரம்பு மீறதாதீர்கள், வஞ்சனை செய்யாதீர்கள்,
(பிணத்தின்) உறுப்புகளை சேதப்படுத்தாதீர்கள், பெண்களையும்
குழந்தைகளையும் கொலை செய்யாதீர்கள்.
மேலும் கொள்ளை நடத்தாதீர்கள், கொள்ளையடித்த
பொருள் செத்த பிணத்திற்குச் சமமானதாகும். விளைச்சல்களை
நாசமாக்காதீர்கள், நிர்பந்த சூழ்நிலையிலன்றி மரங்களை
முறிக்காதீர்கள். தூதுவர்களைக் கொலை செய்யக் கூடாது, இரவில்
தாக்குதல் நடத்தக் கூடாது. ஓரிடத்தில் இரவில் சென்றடைந்தால்
தாக்குதல் நடத்த நபி (ஸல்) அவர்கள் விடியும் வரை காத்திருக்கக்
கூடியவர்களாக இருந்தனர்.
மக்கா வெற்றிக்குப் பின்னர் நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்,
காயப்பட்டவனைத் தாக்காதீர்கள், புறமுதுகிட்டு ஓடுபவனைப் பின்
தொடராதீர்கள், சிறை பிடிக்கப்பட்டவனைக் கொலை செய்யாதீர்கள்.
முஸ்லிமல்லாதோரிடம் முஸ்லிம்கள் எவ்வாறு நடந்து கொள்ள வேண்டும்?
மார்க்க (விஷய)த்தில் உங்களிடம் போரிடாமலும், உங்கள்
இல்லங்களிலிருந்து உங்களை வெளியேற்றாமலும் இருந்தார்களே
அவர்களுக்கு நீங்கள் நன்மை செய்வதையும், அவர்களுக்கு நீங்கள் நீதி
செய்வதையும் அல்லாஹ் விலக்கவில்லை - நிச்சயமாக அல்லாஹ் நீதி
செய்பவர்களை நேசிக்கிறான். (60:8)
முஸ்லிம்களோடு பகிரங்கமாக யுத்தம் செய்யாத முஸ்லிமல்லாத
சகோதரர்களிடம் நீதியுடன் நடக்க வேண்டும் என்று மேற்கண்ட வசனம்
கூறுகின்றது.
இஸ்லாம் மனிதர்கள் அனைவரின்
மார்க்கமாகும். அதனை எடுத்துச் சொல்வது அதனை ஏற்றுக் கொண்டவர்கள்
மீது கடமையாகும். அதனை ஏற்றுக் கொள்ளுமாறு யாரையும் நிர்பந்திப்பதை
இஸ்லாம் தடை செய்துள்ளது. மன ரீதியான மாற்றத்தையே இஸ்லாம்
கொள்கையாகக் கொண்டுள்ளது. இஸ்லாத்தின் மீது பகிரங்கமாக யுத்தம்
தொடுத்தவர்கள் கூட இஸ்லாத்தை ஏற்றுக் கொள்ளாத நிலையில் அபயம் தேடி
வந்தால் அபயமளிக்கவும் அவர்கள் சத்தியத்தை செவியேற்றார்களா
என்பதை உறுதிப்படுத்த இஸ்லாம் முக்கியத்துவம் அளிக்கின்றது.
(நபியே!) முஷ்ரிக்குகளில் யாரேனும் உம்மிடம்
புகலிடம் தேடி வந்தால், அல்லாஹ்வுடைய வசனங்களை அவர் செவியேற்கும்
வரையில் அவருக்கு அபயமளிப்பீராக அதன் பின் அவரை அவருக்குப்
பாதுகாப்புக் கிடைக்கும் வேறு இடத்திற்கு (பத்திரமாக) அனுப்புவீராக
- ஏனென்றால் அவர்கள் நிச்சயமாக அறியாத சமூகத்தினராக இருக்கிறார்கள்.
(9:6)
இஸ்லாமிய நாட்டில் முஸ்லிமல்லாதோரின் உரிமைகள்.
இஸ்லாமிய நாட்டில் வசிக்கும் முஸ்லிமல்லாதோர் அந்நாட்டின் சட்ட
திட்டங்களுக்கு கட்டுப்பட்டு நடப்பதாக உடன்படிக்கை மேற்
கொண்டவர்கள். நியாயமின்றி அவர்கள் மீது அக்கிரமம் செய்வது
பாவமாகும்.
நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
அறிந்து கொள்ளுங்கள்! ஒப்பந்தத்தில்
ஏற்பட்டிருக்கும் முஸ்லிமல்லாத
குடிமக்கள் மீது யாரேனும் அடக்கு முறையைக் கையாளவோ, அவர்கள் மீது
சக்திக்கு அதிகமாக வரியை விதிக்கவோ, அவர்களிடம் கடுமையாக நடக்கவோ
அவர்களுடைய உரிமையில் குறைவைக்கவோ செய்தால் அவருக்கு
எதிராக நான் மறுமையில் (அல்லாஹ்விடத்தில்) புகார்
எழுப்புவேன் (அபூ தாவூது)
ஒப்பந்த்ததிற்குள்ளான (முஸ்லிமல்லாத)வரை எவரேனும் கொலை செய்தால்
அவர் சுவனத்தின் வாடையைக் கூட நுகர முடியாது. அதன் நறுமணமோ நாற்பது
ஆண்டுகள் தூரத்திற்கு கடந்து செல்வதாகும்! (புகாரி)
|