Index |Subscribe mailing list | Help | E-mail us

வட்டி ஒரு கொடூரமானது

 

 

"வட்டி ஒரு கொடூரமானது" என்பதை கொடுப்போரும், வாங்குவோரும்தான் மற்றவர்களை விட மிகத் தெளிவாகவே அறிந்து வைத்துள்ளனர். எனினும் அதிலிருந்து அவர்களால் விட முடியாமல் தவித்து வருகிறார்கள்.

தனி மனிதனிடமட்டுமல்ல இந்நிலமை. மாறாக, உலக நாடுகள் அனைத்துமே இந்த வட்டியை மையமாக வைத்தே இயங்கி வருகின்றன. அதன் கொடூரம் புரிந்திருந்தும் அதிலிருந்து விடுபட வழி அறியாது விழி பிதுங்கி நிற்கின்றன. பணக்கார நாடுகள் சில, ஏழை நாடுகளை வட்டியின் பெயரால் சுரண்டிப் பிழைத்து வருகின்றன. வளர்ந்து(?) வரும் ஏழை நாடுகளோ வேறு வழியின்றி வட்டிக்கு வாங்கி, அதற்கான வட்டியைக்கட்ட மேலும் வட்டிக்கு வாங்கி.. என இவ்வாறே பின்னோக்கி செல்கின்றன.

உலகளவில் இயங்கி வரும் இன்றைய எல்லாத் தொழில் நிறுவனங்களும் இந்த வட்டியை அடிப்படையாகக் கொண்டே செயல்பட்டு வருகின்றன.

இத்தொழிலில்(?) ஈடுபட்டுவரும் முனைவர்கள் கூறும் காரணங்கள்தான் வேடிக்கையானது. விரைவில் முன்னேற்றம் அடைய வட்டிக்கு வாங்குவதைத் தவிர வேறு மார்க்கம் இல்லை என வாதிடுகிறார்கள். அவரச்தேவைக்கு என வட்டிக்கடைகாரர்களைத் தவிர கடன் தருவதற்கு யார் முன் வருகிறார்கள்? என பலஹீனமான கேள்வி ஒன்றையும் எடுத்து வைக்கிறார்கள்.

நமது இந்திய நாடே ஒட்டு மொத்தமாக வட்டியில் மூழ்கி விடுமோ என்ற அபாய நிலைக்கு அது தள்ளப்பட்டிருக்கிறது. அந்தளவிற்கு கொடுப்போரிடமெல்லாம் கை நீட்டி கடனை வாங்கிக் குவித்திருக்கிறது. இந்திய நாட்டின் பொருளாதார முதுகெலும்பாக திகழும் பல டன் தங்கத்தையே அடகு வைத்து கடன் வாங்கிய கூத்தும் இந்தியாவில் நடந்ததை அறிவோம். வாங்கியவர்களின் தொப்பையை நிரப்பிக் கொள்ளப் பயன்பட்டதோ என்னவோ, பொதுமக்களுக்கு எந்தப் பயனும் அதனால் ஏற்படவில்லை.

இந்தியா வாங்கிக் குவித்துள்ள கடன் காரணத்தால், என்றாவது ஒரு நாள், உலக வங்கியானது தான் வழங்கிய கடனுக்காக இந்தியாவை கிரயமாக எழுதி வாங்கிவிட்டால் கூட ஆச்சரியப் படுவதற்கில்லை. அந்தளவிற்கு அபரிமிதமாக உலக வங்கியிடமிருந்து கடன் வாங்கி உள்ளது. எழுதிக் கொடுப்பதற்கும் தயக்கம் காட்டாதவர்கள்தான் இந்தியாவை ஆட்சி செய்து வருகிறார்கள் என்பது ஒரு வேதனையான விஷயம்.

இந்தியனாகப் பிறக்கும் ஒவ்வொருவரும் தான் வாங்காத கடனில் ஒரு சுமையைச் சுமந்தே ஆக வேண்டும் என்ற அவல நிலை ஏற்பட்டுள்ளது. வட்டிக்கு வாங்கும் ஒவ்வொரு முறையும் நாடாளும் மன்னர்கள் கூறும் காரணம் என்ன தெரியுமா?

இந்தியாவை முன்னேற்றப் பாதையில் கொண்டு செல்வதற்கும், வறுமைக் கோட்டின் கீழ் வாழும் எளியவர்களின் துயர் துடைத்து அவர்களது வாழ்க்கைத் தரத்தை உயர்த்துவதற்குத் தேவையான பொருளாதார வளர்ச்சியை - புரட்சியை ஏற்படுத்த நல்ல பல திட்டங்கள் வகுத்து செயல் படுத்துவதற்காகத்தான் இப்பணம் பயன்படுத்தப்படும் போன்ற போலியான காரணங்களையே கூறி வருகிறார்கள்.

அவர்கள் கூறுவது போன்று வட்டிக்கு வாங்கிய நாடுகள், வங்கிக் கடனில் சுய தொழில் செய்து வரும் தனி நபர்கள், அல்லது வட்டியை மூலதனமாக வைத்து தொழிற்சாலைகள் துவங்கிய முதலாளிகள் தங்களது எண்ணத்தில் - திட்டத்தில் வெற்றி பெற்றுள்ளார்களா? அவர்களது தொழில் துறையில் முன்னேற்றம் அடைந்துள்ளார்களா? என்றால் நிச்சயமாக இல்லை என்றே ஆய்வறிக்கைகள் நமக்கு தெளிவு படுத்துகின்றன.

துவங்கிய பல தொழிற்சாலைகள் தொடங்கிய அதே வேகத்திலேயே இழுத்து மூடப்பட்டு விட்டன என்பதையும், அங்கு வேலை பார்த்து வந்த தொழிலாளிகள் ஒரு நேர சோத்துக்கு வழியின்றி தெருவில் இறங்கி போரடுவதையும் நாம் கண்டு வருகிறோம்.

காரணம் என்ன? வட்டிக்கு கடன் வாங்கி தொழில் துவங்கிய சில நாட்களிலேயே வட்டி கட்ட வேண்டிய நெருக்கடி தொழிலதிபர்களுக்கு ஏற்படுகிறது. அதனை கட்ட முடியாமல் விழி பிதுங்கி நிற்கும் நிலை ஏற்படும் போது, தொழிற்சாலையை இழுத்து மூட வேண்டிய நிர்பந்தத்திற்கு தள்ளப்படுகிறார். இதுதான் நமது நாட்டில் அடிக்கடி நடந்து வரும் கேலிக் கூத்தான நிகழ்வு.

தமிழில் ஒரு வழக்குச் சொல் ஒன்று உண்டு.

"அட்டிகை செய்வதற்கு வட்டிக்கு வாங்கினேன். வட்டியை கட்ட முடியாமல், அட்டிகையை விற்று வட்டியைக் கட்டினேன்"

இதுதான் நமது இந்திய நாட்டின் நிலை! இந்தியக் குடி மக்களின் பெரும்பாலாரின் அவல நிலையும் இதுதான். மேற்கூறிய வழக்குச் சொல்லுக்கு விரிவுரையாக விளங்கும் சர்வசாதாரணமாக நடைபெறும் ஒரு நிகழ்ச்சியை எளிதில் புரிய வைப்பதற்காக இங்கே குறிப்பிடுகிறேன்.

"வீட்டு லோன்" கேள்விப்பட்டிருப்பீர்களே! இன்றெல்லாம் வீடு தேடி வந்து வீட்டு லோன் தருகிறார்கள். இதில் தனியார் நிறுவனங்கள்(?) பரபரப்பான விளம்பரங்களை செய்து, வாடிக்கையாளர்களை தனது மாய வலைக்குள் சிக்க வைக்க பல்வேறு முயற்சிகளில் இறங்கியுள்ளார்கள். பரிசுகள் பல உண்டு என்றெல்லாம் ஆசை வார்த்தைகள் தாங்கிய விளம்பரங்கள் நகரங்களின் அடுக்கு மாடிக் கட்டிடச் சுவர்களை ஆக்கரமித்துள்ளன.

சொந்த வீடு பற்றிய கனவில் சஞ்சரித்துக் கொண்டிருக்கும் பரம ஏழைகளில் பலர் பளிச்சிடும் இந்த போலியான விளம்பரங்களில் விட்டில் பூச்சியாய் விழுந்து தங்களை மாய்த்து வருகிறார்கள்.

சிரமப்பட்டு பல தேவையான ஆதாரங்களைத் திரட்டி, வீடு கட்டுவதற்காக ஆயுள் காப்பீட்டு (L.I.C.) நிறுவனத்தை அணுகி குறைந்த வட்டி விகித்தில் இடத்தின் பத்திரத்தை அடமானமாக வைத்து கடனைப் பெற்று விடுகிறார்கள். இதில் இஸ்லாமியர்கள் - ஈமான் குன்றியவர்கள் அதிகம் ஈடுபட்டிருப்பதை வேதனையோடு குறிப்பிடுகிறேன்.

வாங்கிய கடனைக் கொண்டு வீடு கட்டி முடிப்பதற்குள் வட்டித் தொகையை கட்ட வேண்டிய காலம் வந்து விடும். அதனை கட்ட முடியாமல், சிரமப்பட்டுக் கொண்டிருப்பவன், கட்டி முடிவடையாமல், அரை குறையாக இருக்கும் தனது வீட்டினை அடிமாட்டு விலைக்கு விற்று வட்டியைக் கட்ட வேண்டிய நிர்பந்த நிலைக்குத் தள்ளப்படுகிறான். (இது தேவைதானா? வாசகர்களே! இதை உங்களது சிந்தனைக்கு விட்டு விடுகிறேன்.)

"ஏமாறுபவர்கள் இருக்கும் வரை ஏமாற்றுபவன் இருக்கத்தான் செய்வான்" என்பது போல, வட்டிக்கு வாங்குபவன் இருக்கும் வரை வட்டிக்கு கொடுப்பவன் ஏழைகளின் இரத்தை உறுஞ்சிக் கொண்டுதான் இருப்பான்.

இந்த வட்டியில்தான் எத்தனை விதங்கள்! எத்தனை ரகங்கள்! அப்பப்பா!!

வட்டி, வட்டிக்கு வட்டி, டவுள் வட்டி, மீட்டர் வட்டி, நிமிட வட்டி, ஸ்பீடு வட்டி, ரன் வட்டி, கந்து வட்டி, தண்டல் வட்டி, தின வட்டி இது போன்ற எண்ணற்ற வட்டி ரகங்கள்!

இந்த அனைத்து ரக வட்டிகளும், ஏழைகளின் வாழ்க்கை தரத்தை உயர்த்துவதற்காக ஆய்வு செய்து கண்டு பிடிக்கப் பட்ட புதிய ரகங்களா? அதுதான் இல்லை. பட்டு வேட்டி கட்டிவிடலாம் என்ற கனவில் வட்டிக்கு கடன் வாங்கியவன், இறுதியில் அவன் கட்டியிருக்கும் கோவணத்தையே இழக்கச் செய்யும் வட்டி ரகங்கள்தான் இவைகள். ஆம்! இந்த ரக வட்டிகள் மக்களை ஓட்டாண்டியாக்கி வைக்கும் புது ரக கொடூர வட்டிகள்.

மனித சமூகத்தில் ஊடுறுவிய புற்று நோய்கள்தான் இந்த வட்டி ரகங்கள். இதனை அடியோடு வேரறுக்க வில்லையெனில், சமூகத்தையே அழித்து விடும் அபாயம் நிறைந்தது. எந்த சமூகத்தில் வட்டி தலைவிரித்தாடுகிறதோ, அவர்களின் மீது இறைவனின் சாபமும், தண்டனையும் இறங்குகிறது என்பதை பின்வரும் நபி மொழி எச்சரிக்கிறது:


عن ابن مسعود رضي الله عنه عن النبي صلى الله عليه وسلم ما ظهر في قوم الزنا والربا إلا أحلوا بأنفسهم عذاب الله رواه أبو يعلى بإسناد جيد


"விபச்சாரமும்,வட்டியும் மலிந்து காணப்படும் சமுதாயம் தங்களை இறைவனின் தண்டனைக்கு இலக்காக்கிக் கொள்கிறார்கள்"|என நபிகள் (ஸல்) அவர்கள் கூறியதாக அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள். நூல்: அபூ யஃலா.

ஒரு சமூகத்தில் வட்டி வாங்குவது, கொடுப்பது பரவலாக - பகிரங்கமாக நடந்து வரும் போது அது தடுத்து நிறுத்தப்பட வில்லையானால், ஒட்டு மொத்த சமூகத்தின் மீதும் அல்லாஹ்வின் கோபமும், சாபமும் இறங்குவதோடு அவனது தண்டனையும் இறங்கும் என்பதை நாம் நடை முறையில் பார்த்து வருகிறோம்.

மழை இல்லை. பஞ்சம், வறட்சி, பசி, பட்டினி, குடிக்க தண்ணீர் இன்றி மனித இனமட்டுமல்ல, வாயில்லா ஜீவன்களான கால் நடைகளும் சேர்ந்து செத்து மடிந்து கொண்டிருக்கின்றன. நிலத்தில் விளைச்சல் இல்லை. சில பகுதிகளில் மழை பொழிவதால் அழிவும், நாசமும் ஏற்படுகிறது. நில அதிர்வுகள் அடிக்கடி நிகழ்ந்து பல உயிர்களைக் கொன்று குவிக்கின்றன. காலரா நோய் பரவி, கணக்கற்ற உயிர்கள் பலியாகிக் கொண்டிருக்கின்றன. இவ்வாறு எண்ணற்ற சோதனைகள் அடிக்கடி நிகழ்கின்றன.

எண்ணற்ற சோதனைகளும் வேதனைகளும் எதனால் ஏற்படுகிறது? "வட்டி என்பது ஒரு குற்றமல்ல, அது வியாபார உத்தி" என யூதர்கள் கருதி வந்தது போல் இஸ்லாமியர்களும் அவ்வாறே கருதி வட்டிக்கு கொடுப்பதையம் வாங்குவதையும் சர்வ சாதாரணமாக செய்து வருகிறார்கள்.

கள்ளுக் குடிப்பவன் வெளியே தலைகாட்ட வெட்கப்படுகிறான். விபச்சாரம் புரிந்தவன் நடமாட நாணம் அடைகிறான். வட்டிக்குக் கொடுப்பவனோ பள்ளிவாசலின் தலைவனாக பவனிவருகிறான். அந்தளவிற்கு மக்களுக்கு மத்தியில் சமூக அந்தஸ்தைத் தேடித் தரக் கூடியதாக இத்தொழில் மாறிவிட்டிருக்கிறது என்பதை வேதனையோடு இங்கே குறிப்பிடுகிறேன்.

"வட்டிக்கு கொடுப்பது, வாங்குவது எவ்வளவு பெரிய கொடூரமான பெரும் குற்றம் என்பதை இந்த இஸ்லாமியச் சமுதாயத்திற்கு சரியான முறையில் எடுத்துரைக்கப்படவில்லை" என்பதே இதற்கான காரணம் என நான் உணர்கிறேன்.

பெரும் பாவம்:

அன்பான சொந்தங்களே! மற்ற பல குற்றங்களை விட மிகக் மிகக் கொடூரமானது வட்டிதான் என்பதைக் கீழ் காணும் குர்ஆன் வசனங்ளும், நபி மொழிகளும் நமக்கு உணர்த்திக் கொண்டிருக்கின்றன:


الَّذِينَ يَأْكُلُونَ الرِّبا لا يَقُومُونَ إِلَّا كَمَا يَقُومُ الَّذِي يَتَخَبَّطُهُ الشَّيْطَانُ مِنَ الْمَسِّ ذَلِكَ بِأَنَّهُمْ قَالُوا إِنَّمَا الْبَيْعُ مِثْلُ الرِّبا وَأَحَلَّ اللَّهُ الْبَيْعَ وَحَرَّمَ الرِّبا فَمَنْ جَاءَهُ مَوْعِظَةٌ مِنْ رَبِّهِ فَانْتَهَى فَلَهُ مَا سَلَفَ وَأَمْرُهُ إِلَى اللَّهِ وَمَنْ عَادَ فَأُولَئِكَ أَصْحَابُ النَّارِ هُمْ فِيهَا خَالِدُونَ


"வட்டியை உண்போர் (மறுமை நாளில்) ஷைத்தான் தீண்டியவனைப் போல் பைத்தியமாகவே எழுவார்கள். "வியாபாரம் வட்டியைப் போன்றதே" என்று அவர்கள் கூறியதே இதற்குக் காரணம். அல்லாஹ் வியாபாரத்தை அனுமதித்து, வட்டியைத் தடை செய்து விட்டான். தமது இறைவனிடமிருந்து அறிவுரை வந்தப்பின் விலகிக் கொள்பவருக்கு முன் சென்றது உரியது. அவரைப் பற்றிய முடிவு அல்லாஹ்விடம் உள்ளது. மீண்டும் (வட்டித் தொழில்) செய்வோர் நரகவாசிகள் ஆவர். அதில் அவர்கள் நிரந்தரமாக இருப்பார்கள். (அல் குர்ஆன்: 2:275)


يَا أَيُّهَا الَّذِينَ آمَنُوا اتَّقُوا اللَّهَ وَذَرُوا مَا بَقِيَ مِنَ الرِّبا إِنْ كُنْتُمْ مُؤْمِنِينَ

فَإِنْ لَمْ تَفْعَلُوا فَأْذَنُوا بِحَرْبٍ مِنَ اللَّهِ وَرَسُولِهِ


"நம்பிக்கை கொண்டோரே! அல்லாஹ்வை அஞ்சுங்கள்! நீங்கள் நம்பிக்கை கொண்டிருந்தால் வர வேண்டிய வட்டியை விட்டு விடுங்கள்!"

"அவ்வாறு நீங்கள் செய்யாவிட்டால் அல்லாஹ்விடமும் அவனது தூதரிடமும் போரிடுவதாகப் பிரகடனம் செய்து விடுங்கள்" அல் குர்ஆன்: 2:278,279.


عن عبد الله بن حنظلة غسيل الملائكة قال قال رسول الله صلى الله عليه وسلم درهم ربا يأكله الرجل وهويعلم أشد من ستة وثلاثين زنية (رواه أحمد)


"வட்டியின் ஒரு நாணயத்தை (அது வட்டியின் பொருள்தான் என்பதை) அறிந்த நிலையில் ஒருவன் உண்பது, முப்பத்தி ஆறு முறை விபச்சாரம் புரிவதை விட கடுமையான குற்றமாகும்" என நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பாளர்: அப்துல்லாஹ் பின் ஹன்ழளா (ரலி) அவர்கள், நூல்: அஹ்மது.


عن عبد الله بن مسعود أن رسول الله صلى الله عليه وسلم لعن آكل الربا وموكله وشاهديه وكاتبه رواه إ بن ماجه


"வட்டியை உண்பவன், அதனை உண்ணக் கொடுப்பவன், அதற்கு சாட்சியம் அளிக்கும் இருவர், கணக்கு எழுதுபவன் ஆகிய அனைவரையும் நபிகள் நயாகம் (ஸல்) அவர்கள் சபித்தார்கள்" என அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள். நூல்: இப்னு மாஜா.

வட்டியின் கொடூரத்தை விவரிக்கும் நபி மொழிகள் இன்னும் ஏராளம் உண்டு. படிப்பினை பெற நினைப்போருக்கு மேற் கூறியவைகளே போதுமானதாகும்.

1) 36 முறை விபச்சாரம் செய்வதை விடவும் கடுமையான குற்றமாக இந்த வட்டித் தொழில் செய்வது கருதப்படுகிறது. ஒரு முறை விபச்சாரம் செய்தால் அதற்கான தண்டனை என்ன என்பதை வாசகர்களாகிய நீங்கள் நன்கு அறிவீர்கள்! ஒருவன் 36 முறை விபச்சாரம் புரிந்தால் இறைவனிடம் என்ன தண்டனை கிடைக்குமோ அதனைவிட கொடூரமான தண்டனை வட்டித் தொழிலில் ஈடுபட்டு வருவோருக்கு உண்டு என்பதை அடுத்த நபி மொழி நமக்கு கூறுகிறது.

2) விபச்சாரம், திருட்டு, கொலை, கொள்ளை, வழிப் பறி போன்ற தவறுகள் செய்த குற்றவாளிகளை எச்சரிப்பதை விட, வட்டிக்கு கொடுத்து வாங்கும் குற்றவாளிகளை, "வட்டித் தொழிலை நிறுத்திக் கொள்ள வில்லையெனில், என்னோடு போர் புரியத் தாயாரகிக் கொள்ளுங்கள்" என மிகக் கடுமையாகவே எச்சரிக்கை செய்துள்ளான். இறைவனோடு போர் புரிவதற்கு யாருக்குத்தான் முடிவும்?

3) வட்டியை உண்பவன் இவ்வுலகில் தண்டிக்கப் படுவதோடு மறுமையிலும் அவன் பேயரைந்தவன் போன்று பைத்திய நிலையில் எழுப்பப்படுவான். இன்று வட்டித் தொழில் செய்து வருவோரில் பலர் தங்களது இவ்வுலக வாழ்வில் பல் வேறு துன்பங்கள் அனுபவித்து வருவதை நாம் நேரில் பார்த்து வருகிறோம். இதனைக் பார்த்தப் பிறகாவது நாம் படிப்பினைப் பெறவில்லையெனில் பெரும் நஷ்டத்திற்குரியவர் நம்மை விட வேறு யாரும் இருக்க முடியாது என்பது உறுதி.

வட்டி குட்டி போடுவது உண்மைதானா?

வட்டித் தொழில் புரிந்து வருபவர்கள் மிகக் குறுகிய காலத்தில் பெரும் செல்வந்தராக சமுதாயத்தில் காட்சி தருகிறார். சிறிய முதலீட்டில் "சிட் ஃபண்ட்" நிறுவனத்தைத் துவக்கிய சில மாதங்களிலேயே பெரிய பெரிய பல நிறுவனங்களுக்கு உரிமையாளராக மாறி விடுகிறார். இதனை காணும் அப்பாவி மக்கள் ஏமாற்றம் அடைந்து, வட்டி பல குட்டிகள் போடுவதாக கற்பனை செய்து அவர்களும் வட்டித் தொழிலை ஆரம்பித்து விடுகிறார்கள். இது ஒரு மாயத் தோற்றமே என்பதை ஆரம்பத்தில் புரிய தவறி விடுகிறார்கள்.

மெலிந்தவனுக்கு ஏற்படும் உடல் வீக்கத்தை சதை வளர்ந்து விட்டதாக தப்புக் கணக்குப் போட்டு சிகிச்சை பெறத் தவறினால், விரைவில் மரணம் ஏற்படுவது உறுதி. வட்டியினால் ஏற்படும் பணப் பெருக்கத்தை இலாபம் என கருதி, மென்மேலும் அத்தொழிலை விரிவுபடுத்த நினைப்பது, அவனது செல்வத்திற்கு அழிவை ஏற்படுத்துவது அதனை விட உறுதியானது.

ஓகோ என வெற்றி நடை போட்டு வந்த எத்தனையோ "சிட் ஃபண்ட்" நிறுவன முதலாளிகள் இன்று மாமியார் வீட்டில் மணியடிச்சால் சோறு சாப்பிடும் கூட்டத்தில் சேர்ந்து கம்பியை எண்ணிக் கொண்டிருக்கிறார்கள். வேறு சிலரோ பிடி வாரண்டிற்கு பயந்து ஓடி ஒழிந்து கொண்டிருக்கிறார்கள்.

உண்மையில் என்ன நடந்தது? வட்டி பல குட்டிகள் போட்டு பெருகிக் கொண்டுதானே இருந்தது? இலட்சம் பல இலட்சங்களாக மாறிக் கொண்டுதானே இருந்தது? திடீரென இவ்வளவு பெரிய நஷ்டம் ஏற்பட்டு, "சிட் ஃபண்ட்" மூட வேண்டிய நிலை ஏன் ஏற்பட்டது? என்று பலருக்கு ஆச்சரியம் ஏற்படலாம்.

"வட்டியினால் பெருகும் செல்வம், அழிவிற்கே காரணமாக அமைகின்றது. நாம் அறியாத விதத்தில் அது அழிந்து கொண்டே வருகின்றது. அல்லாஹ் அதனை அருள்வளம் அற்றதாக ஆக்கி இறுதியில் அழித்தே விடுகிறான்" என்ற உண்மையை பலரும் கவனிக்கத் தவறி விடுகிறார்கள். நமது செல்வத்தில் அபிவிருத்தியை ஏற்படுத்தும் அல்லாஹ், வட்டியை அருள் வளமற்றதாக ஆக்கி அழித்து விடுவதாக பின் வரும் வசனத்தில் கூறுகிறான்.


يَمْحَقُ اللَّهُ الرِّبا وَيُرْبِي الصَّدَقَاتِ وَاللَّهُ لا يُحِبُّ كُلَّ كَفَّارٍ أَثِيمٍ


"அல்லாஹ் வட்டியை அழிக்கிறான்; தர்மங்களை வளர்க்கிறான். நன்றி கெட்ட எந்தப் பாவியையும் அல்லாஹ் விரும்ப மாட்டான்" (2:276)

"வட்டியினால் அதிகரிக்கும் செல்வம் உண்மையில் குறைந்து கொண்டே வருகிறது" என்பதை நபிகள் நாயகம் (ஸல்) அவர்களும் கூறி உள்ளார்கள்.


عن عبد الله بن مسعود رضي الله عنه عن النبي صلى الله عليه وسلم قال ما أحد أكثر من الربا إلا كان عاقبة أمره إلى قلة رواه ابن ماجه والحاكم .


"வட்டியினால் அதிகரிக்கும் ஒருவனது செல்வம், இறுதியில் குறைந்து (அழிந்தே) விடுகிறது" என நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறியதாக அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள். நூட்கள்: இப்னு மாஜா, ஹாகிம்.

வட்டியினால் ஏற்படும் ஆபத்தை அறிந்து கொண்ட நாம் அதிலிருந்து முற்றிலுமாக விலக வேண்டும். வட்டியின் வாடை இன்றி ஒருவன் வாழவே முடியாது என்ற மாயத் தோற்றம் ஏற்பட்டு விட்ட மோசமான காலத்தில் வாழ்ந்து வருகிறோம். இந்தக் காலம் குறித்துதான் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் பின் வருமாறு கூறியிருப்பார்களோ என்றும் எண்ணத் தோன்றுகிறது.


عن أبي هريرة قال قال رسول الله صلىالله عليه وسلم قال يأتي على الناس زمان يأكلون الربا فمن لم يأكله أصابه من غباره (رواه النسائي)


"(அதிகமானோர்) வட்டியை உண்ணக் கூடிய அல்லது அதனுடை புழுதியாவது படியக் கூடிய ஒரு காலம் மக்கள் மீது வரும்" என நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறியதாக அறிவப்பது அபூ ஹுரைர (ரலி) அவர்கள். (நஸாயீ)

இன்றைய சூழ்நிலையை கருத்தில் கொண்டு பார்க்கும் போது இந்நபி மொழி நூற்று நூறு பொருந்தி வருவதை தெளிவாகவே நம்மால் புரிந்து கொள்ள முடிகிறது. வட்டியின் பக்கம் திரும்பிப் பார்க்கவே கூடாது என்று முடிவு எடுத்து செயல் பட்டு வரும் பல சகோதரர்கள் ஏதேனும் ஒரு நெருக்கடியை சந்திக்கும் போது, இந்தத் தீமையில் போய் மாட்டிக் கொள்கிறார்கள்.

வட்டி வாங்கும் கொடுக்கும் மனித சமுதாயமே! சிந்தித்துப் பாருங்கள்! அல்லாஹ்வின் தண்டனைகளுக்கு அஞ்சிக் கொள்ளுங்கள்! துன்பத்தில் துவண்டு கொண்டிருக்கும் நம் சகோதரர்களுக்கு அழகிய கடன் கொடுப்போம்! நம் தகுதியை விட கூடுதலாக ஏற்படும் தேவைகளை தவிர்ப்போம்! "போதும் என்ற மனமே பொன் செய்யும் மருந்து" எனும் முது மொழியை மனதிற் கொண்டு உள்ளதைக் கொண்டு போதுமாக்கும் மனப் பக்குவத்தை உண்டாக்குவோம்! அதுவே! இன்பத்தின் திறவு கோல் என உள்ளத்திற்கு கூறுவோம்!

வட்டியை ஒழிப்போம். வட்டி இல்லாத ஓர் உலகு படைப்போம். அல்லாஹ் அதற்கு துணைச் செய்யப் போதுமானவன்.

 

நன்றி: நேர்வழி மாத இதழ் (தாய்ப் நகர் வெளியீடு)

http://fazilbaqavi.blogspot.com