Index |Subscribe mailing list | Help | E-mail us

ஜித்தாவின் செங்கடல் ஓரத்தில் ஓர் சங்கமம்

மாபெரும் இஸ்லாமிய மாநாடு நிகழ்ச்சியின் நேரடி ரிப்போர்ட்

அப்துல் ஷுக்கூர், கடைய நல்லூர்

 

அளவற்ற அருளாளனும் நிகரற்ற அன்புடையோனுமாகிய அல்லாஹ்வின் திருப்பெயரால்.

கடந்த
29.06.2007 வெள்ளிக்கிழமையன்று மாலை அஸர்தொழுகைக்குப் பின் ஜித்தாவிலுள்ள ஸாரா கார்னிஸ், தவ்வார் நவ்ரஸ் அருகிலுள்ள செங்கடல் ஓரத்தில் ஜித்தா இஸ்லாமிய அழைப்புப்பணி மையம் ஏற்பாடு செய்திருந்த இஸ்லாமிய மாலை அமர்வு இறையருளால் மிகச் சிறப்பாக நடந்தது. சகோ. ஆதில் பின் ஷாஹூல் ஹமீது அவர்களின் கிராஅத்துடன் நிகழ்ச்சி துவங்கியது.

 

நிகழ்ச்சிக்கு தலைமையேற்றுத் துவக்கவுரை நிகழ்த்திய சகோ.கே.கே.புஹாரி அவர்கள் தவ்ஹீதை ஏற்றுக் கொண்டோர் தடுமாறலாமா? என்ற தலைப்பில் நாம் செய்துக்கொள்ள வேண்டிய சுய பரிசோதனைகளைப் பற்றி விளக்கினார். அவர்தம் உரையில் மூடப்பழக்க வழக்கங்களில் மூழ்கித்திளைத்து முன்னோர்களைக் கண்மூடிப் பின்பற்றி வாழ்ந்த நாம், மார்க்க அறிஞர்களின் இஃக்லாஸான அழைப்புப் பணியால் இன்று குர்ஆனை, ஹதீஸைப் பின்பற்றி வாழும் சமுதாயமாக மாறியிருக்கிறோம். தவ்ஹீதை சரிவரப்புரிந்த நம்மில் பலர் சில விஷயங்களில் தடுமாறாமலிருக்கவில்லை. அல்லாஹ் அருள்மறையில் கூறியவாறு வாரிசுரிமை விஷயத்தில் ஆண்மக்களுக்கு காட்டும் அக்கறையை பெண் மக்களுக்கு காட்டுவதில்லை. இவ்விஷயத்தில் அல்லாஹ்வுக்கும் அவன் தூதருக்கும் மாறு செய்தால் நிரந்தர நரகம் என்பதை அல்லாஹ் எச்சரித்திருந்தும் பொடுபோக்காய் இருக்கிறோம். மணமுடிக்கும் பெண்ணுக்கு மஹர் என்னும் மணக்கொடையைத் தாராளமாக அல்லாஹ் வழங்கக் கூறும் போது மணமகள் வீட்டாரிடமிருந்து வரதட்சணை வாங்கி விட்டு அதனை பெற்றோர்கள் தலையில் சுமத்தக்கூடிய 'சாக்கு போக்கு' நமது தடுமாற்றத்துக்கு நல்லதொரு சான்று. இன்றைய விஞ்ஞான யுகத்தில் சர்வதேசத் தலைப்பிறையை மறுத்துவிட்டு மனோ இச்சையை மார்க்கமாக்கி நபி(ஸல்) அவர்கள் பெருநாள் தினம் நோன்பிருப்பதைத் தடைசெய்திருந்தும் அந்நபி மொழியை உதாசீனப்படுத்தி வாழ்வது போன்ற விஷயங்களில் நிகழும் தடுமாற்றங்களைப் பட்டியலிட்டார்.

அதனையடுத்து சிற்றுரை நிகழ்த்திய சகோ.அப்துல்மஜீத் ஸஹ்வி அவர்கள் இஸ்லாத்தின் பார்வையில் குழந்தை வளர்ப்பு என்ற தலைப்பில் உரைநிகழ்த்தினார். அவர்தம் உரையில் இஸ்லாமியக் கடமைகளில் ஒன்றாகிய தொழுகையை ஏழு வயதில் தொழ ஏவ வேண்டும் என்பதையும், நுஃமான் பின் பஷீர்(ரலி) அவர்கள்பால் அன்பு கொண்ட அவரின் தந்தை அவருக்கு அன்பளிப்பு வழங்க முனைந்ததை நபி (ஸல்) பிள்ளைகளுக்கிடையில் எந்த பாகுபாடும் காட்டக்கூடாது என உபதேசித்த செய்திகளையும் தம் உரையில் குறிப்பிட்டார்.

 

சிறப்பு அழைப்பாளராகக் கலந்து கொண்ட ஜுபைல் இஸ்லாமிய அழைப்புப் பணி மையத்தின் அழைப்பாளர் சகோ. யு.கே. ஜமால் முஹம்மது மதனீ அவர்கள் இஸ்லாம் எதிர் கொள்ளும் சவால்கள் என்ற தலைப்பில் சுவையான வரலாற்றுப் பின்னணிகளுடன் கூடிய விளக்கமான சிறப்புரை நிகழ்த்தினார். அவர் தனது உரையில் யூத கிறிஸ்தவ சக்திகள் இஸ்லாத்தைத் தகர்க்க எடுத்துக் கொண்ட முயற்சிகள், பின்னிய சதிவலைகள் எவ்வாறெல்லாம் ஒவ்வொரு காலகட்டத்திலும் வல்ல அல்லாஹ்வால் அடையாளங்காட்டப்பட்டு முறியடிக்கப்பட்டன என்பதை அருள்மறை ஒளியில் விளக்கினார். அன்றைய நபித்தோழர்களின் இணையற்ற தியாகங்களின் முன்னால் இந்த நாசகார சக்திகளின் வியூகங்கள் வீழ்ந்து அல்லாஹ்வின் மார்க்கமாகிய இஸ்லாத்தின் பேரொளி அகிலமெங்கும் பரவியது. ஈமானிய வீரியமிக்க இஸ்லாமியர்களோடு வாளால் போர் செய்து வீழ்த்தவியலாது என்ற நிலையை உணர்ந்த யூத கிறிஸ்தவப் பொறாமையாளர்கள் வரலாற்றுத் திரிபுகள், கலாச்சார சீர்கேடுகள் இவற்றுடன் இஸ்லாமல்லாத சில விஷயங்களை இதுவும் இஸ்லாத்தின் ஒரு அம்சமாக இருக்குமோ என்ற சந்தேகங்களை விதைப்பதில் மும்முரம் காட்டுகின்றனர். அல்லாஹ்வின் பேரொளியை எவராலும் ஊதியணைத்துவிட இயலாது என்பதை அழகுபடத் தம் உரையில் தெளிவு படுத்தினார்.

தமிழகத்திலிருந்து வருகை தந்த மார்க்க அறிஞரும் நெல்லை ஏர்வாடி அஸ்மா பெண்கள் இஸ்லாமியக் கல்லூரியின் முதல்வருமாகிய சகோ. கே.எஸ்.ரஹ்மத்துல்லாஹ் இம்தாதி அவர்கள் வாலிபமும் வயோதிகமும் என்ற தலைப்பில் சிறப்புரை நிகழ்த்தினார். அவர் தமது உரையில் அர்ஷின் நிழலில் இடம் பெறும் ஏழுபேரில் ஒருவர் அல்லாஹ்வின் வணக்க வழிபாட்டில் திளைத்த இளைஞர் என்ற பீடிகையோடு தம் உரையைத் துவக்கினார். சிறந்த தேக வனப்பும் திட சிந்தனையும் அஞ்சா நெஞ்சுடனும் திகழும் பருவம்தான் இளமைப்பருவம். இப்பருவத்தில் இஸ்லாத்தின் அடிப்படைகளில் வார்த்தெடுக்கப்பட்ட உள்ளங்களே வரலாறு படைத்தன என்பதை நபித்தோழர்களின் நடைமுறைகள் நமக்குணர்த்துகின்றன. இஸ்லாமிய வரலாற்றில் முதல் போர் பத்ருப் போர். இஸ்லாத்தின் எதிரிகள் முஸ்லிம்களைக் கருவறுக்க சபதமேற்று குறைஷியத் தலைவர்களுடன் அணிவகுத்து ஆர்ப்பரித்து வந்த போர். அப்போரில் முஸ்லிம்களின் பரம விரோதியும் குறைஷிப் படைகளின் தளபதியாகவும் விளங்கிய அபூஜஹ்லைக் கொன்றது அப்ராவின் மகன்களாகிய இரு இளைஞர்கள்தான். இச்சமுதாயத்தார்க்கு இன்று நம் கைகளில் தவழும் இக்குர்ஆனைத் தொகுத்து நூல் வடிவில் தந்தது ஜைது பின் ஸாபித் (ரலி)என்ற இளைஞரான ஒரு நபித்தோழர்தான் என்று ஆதாரப்பூர்வமான ஹதீஸ்களின் ஒளியில் வாலிபம் தாண்டி வயோதிகத்தை அடையும் வளர்ச்சியை விவரித்தார்.

அதனையடுத்து சிறப்புச் சொற்பொழிவாற்றியவர் தமிழகத்திலிருந்து வருகை தந்திருந்த ஜம்மியத்து அஹ்லுல் குர்ஆன் வல் ஹதீஸ் அமைப்பின் தலைவரும் தமிழ் இஸ்லாமிய குர்ஆன் ஹதீஸ் அடிப்படையிலான அல்ஜன்னத் மாத இதழின் ஆசிரியரும் சிறந்த மார்க்க அறிஞருமாகிய சகோ. எஸ். கமாலுத்தீன் மதனீ அவர்கள் சுவனத்தை நோக்கி.. என்ற தலைப்பில் உரைநிகழ்த்தினார். அவர் தது உரையில் மாபாதக ஷிர்க்கினால் மறுமை வாழ்வு எவ்வளவு பெரிய நஷ்டத்தை எதிர்நோக்கியுள்ளது என்பதையும் நிரந்தர நரகத்தை அல்லாஹ்வால் மன்னிக்கப்படாத ஒரு பெரும் பாவத்தை இச்சமுதாயம் நன்மை பயக்கும் என்று கருதி மூதாதையர்களைப் பின்பற்றி நடந்ததைத் தம் உரையில் குறிப்பிட்டார். இதனை எதிர்த்துச் செய்த சத்தியப் பிரச்சாரங்கள் அனல் பறக்கும் சொற்பொழிவுகள் அர்த்த ஆதாரங்களுடன் கூடிய விவாதங்கள், சத்தியத்தை நிலைநாட்ட முற்பட்ட அழைப்பாளர்களை நம் சமுதாயத்தைச் சார்ந்த மக்களே, அறியாமையின் காரணமாக பிரச்சாரங்களை முடக்க செய்த தடைகள், அவற்றையெல்லாம் பொறுமையுடனும் அறிவுப்பூர்வமாகவும் எதிர்கொண்டு இன்று இறையருளால் குர்ஆனை ஹதீஸைப் பின்பற்றக்கூடிய ஒரு மிகப்பெரிய சமுதாயமாக நாம் பல்கிப் பெருகியிருக்கிறோம். நாம் செய்யும் வணக்க வழிபாடுகள் நல்லறங்களின் அடிப்படை குர்ஆனும் ஹதீஸுமாக இருந்தால் வல்ல அல்லாஹ் நமக்கு நாளை மறுமையில் சித்தப் படுத்திவைத்திருக்கும் சுவனம் - எந்தக்கண்ணும் பார்த்திராத எந்தக் காதும் கேட்டிராத ஏகப்பட்ட இன்பங்களைத் தன்னகத்தே கொண்டிலங்கக்கூடியது. நல்லடியார்கள் நிரந்தரமாகத் தங்கும் அச்சுவனத்தின் இன்பத்தை நுகரும் பாக்கியத்தை நாம் பெறக்கூடிய நிலையை வல்ல அல்லாஹ் நம் நல்லறங்களைப் பொருந்திக் கொண்டு வழங்குவானாக எனக்குறிப்பிட்டார். மேலும் அவர் தம் உரையில் குர்ஆன் ஹதீஸை அடிப்படையாகக் கொண்டோர் தமக்கிடையில் உள்ள பிணக்குகளை மறந்து ஓரணியில் ஒன்று திரள வேண்டும். சமுதாயத்தார்க்கு ஜம்மிய்யா ஆற்றிவரும் பல்வேறு பணிகளைப் பட்டியலிட்ட அவர் அப்பணிகள் தொய்வின்றி தொடர்ந்து நடக்க ஆக்கப்பூர்வமான ஆலோசனைகள் உதவி ஒத்தாசைகள் வழங்கவேண்டுமென வேண்டி தம் உரையை நிறைவு செய்தார்.

 

நிகழ்ச்சியில் பல்வேறு அமைப்பினரும் கலந்துகொண்டு சிறப்பித்தனர். மஃரிப் தொழுகைக்குப் பிறகு ஆண்களும் பெண்களுமாய் அரங்கம் நிரம்பியிருந்ததைக் கண்ட இஸ்லாமிய அழைப்பகத்தின் பொறுப்பாளராகிய நிகழ்ச்சியை ஏற்பாடு செய்திருந்த ஷேக் அவர்கள் இம்முயற்சிகள் மென்மேலும் தொடர வேண்டும் என கேட்டுக் கொண்டார். சிறுவர்களுக்கான போட்டிகளை சகோ. அபுல் அமான் சகோ. மலீக் கான் ஆகியோர் நடத்தி முறையே வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகளை வழங்கினர். பார்வையாளர்களுக்கு குலுக்கல் முறையில் தேர்வு செய்து வெற்றி பெற்றோருக்கு சகோ. எஸ்.கமாலுத்தீன் மதனீ அவர்கள் பரிசுகளை வழங்கினார். நிகழ்ச்சியில் கலந்து கொண்ட மார்க்க அறிஞர்களும் பரிசுகள் வழங்கப்பட்டு சிறப்பிக்கப்பட்டனர்.

 

இந்நிகழ்ச்சி இனிதே நடந்தேற பொருளாலும் உழைப்பாலும் உதவிய துறைமுக அழைப்புப்பணி மையம், ஸாரா ஷபையீன் இஸ்லாமிய அழைப்பக முன்னோடிகள், ஜித்தா இஸ்லாமிய அழைப்பகத்தார், சாம்சங் வாட்ச் கம்பெனியைச் சார்ந்த சகோ.அப்துல்மாலிக் மற்றும் பல்வேறு துறையைச் சார்ந்த அழைப்பகத்தின் அங்கத்தினர்கள் நன்றிக்குறியவர்கள். இறுதியில் கலந்துகொண்ட அனைத்துமக்களுக்கும் இரவு உணவு வழங்கப்பட்டது ஒரு சிறப்பம்சமாகும்.