Index |Subscribe mailing list | Help | E-mail us

அல்-ஜுபைல் மாநகரில் நடந்த

மாபெரும் இஸ்லாமிய மாநாடு நிகழ்ச்சியின் நேரடி ரிப்போர்ட்

இப்னு ஷேஃக்

 

அளவற்ற அருளாளனும் நிகரற்ற அன்புடையோனுமாகிய அல்லாஹ்வின் திருப்பெயரால்.

அல்-ஜுபைல் மாநகரம் கடந்த இரண்டு மூன்று வாரங்களாகவே அல்-ஜுபைல் தஃவா நிலையம் நடத்தும் 9வது ஒரு நாள் மாபெரும் இஸ்லாமிய மாநாட்டின் வண்ண சுவரொட்டிகள், பெரிய அளவிளான விளம்பர பாதகைகள் ஆகியவற்றினால் மின்னிக்கொண்டிருந்தது என்றால் மிகையில்லை.

 

 

27-04-2007 வெள்ளிக்கிழமை அதிகாலை முதல் அல்-ஜுபைல் தஃவா நிலையம் அழைப்பு பணியின் உதவியாளர்களின் வருகையால் கலைகட்ட ஆரம்பித்திருந்தது. மாநாட்டிற்கான காலை சிற்றுண்டியினை தயார் செய்வதற்காக மாநாடு பொது சேவை பிரிவு சகோதரர்கள் அதிகாலை ஃபஜ்ர் தொழுகை முடிந்தவுடன் (4 மணிக்கு) வருகை தந்திருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

காலை சரியாக 8:30 மணிக்கு அல்-ஜுபைல் தஃவா நிலைய பள்ளி வளாகத்தில் "9-வது ஒரு நாள் மாபெரும் இஸ்லாமிய மாநாடு" தொடங்கியது. மௌலவி முஹம்மத் ஜலீல் மதனி (அழைப்பாளர், அல்-ஜுபைல் தஃவா நிலையம்) அவர்கள் அவருக்கே உரிய பாணியில் மாநாட்டை தலைமையேற்று தொடங்கி வைத்த பிறகு, வரவேற்புரையாற்ற மௌலவி முஹம்மத் ஷரீஃப் பாக்கவி அவர்களை அழைத்தார்.

அழைப்பு பணியின் முக்கியத்துவத்தையும் அது எவ்வாறு மக்களை சென்றடைய வேண்டும் என்பதனை ஷரீஃப் பாக்கவி அவர்கள் மிக சுருக்கமாக விளக்கியதோடு அழைப்பணியில் ஈடுபட்டுள்ளவர்கள் அல்லாஹ்-வின் திருப்பொறுத்தத்தை மட்டும் அடைய வேண்டும் என்ற வேட்கையில் பணியாற்ற வேண்டும் என்ற அறிவுரையை கூறிவிட்டு சிறப்புரையாற்ற வந்துள்ள அனைத்து மார்க்க அறிஞர்கள், சகோதரர்கள் ஆகியோரை வரவேற்றுவிட்டு ஜுபைல் தஃவா நிலையம் ஆற்றிவரும் சேவைகளையும் சுருக்கமாக எடுத்துக்கூறினார்கள். ஷரீஃப் பாக்கவி அவர்கள் Star of Kingdom Services (SKS) என்ற குழுமத்தில் பணியாற்றிக் கொண்டு கிடைக்கும் ஓய்வு நேரங்களில் அல்-ஜுபைல் மற்றும் தம்மாம் பகுதிகளில் அழைப்புப் பணி செய்து வருகின்றார் என்பது குறிப்பிடத்தக்கது.

அதனை அடுத்து சௌதி அரேபியாவின் எண்ணை வள நகரான அல்-கஃப்ஜி யில் இருந்து வருகை தந்திருந்த மௌலவி முஹம்மத் ளாஃபர் மதனி அவர்களை இஸ்லாம் கூறும் அறிவியல் என்ற தலைப்பில் உரையாற்ற அமர்வு தலைவர் அழைத்தார், மௌலவி முஹம்மத் ளாஃபர் மதனி தமது உரையில் பல்வேறு அறிவியல் அறிஞர்கள் அல்-குர்ஆன் வசனங்களில் கூறப்பட்டுள்ள அறிவியல் செய்திகளை மெய்படுத்திய சம்பவங்களையும் கூறிதோடு அத்தகைய அறிஞர்கள் இஸ்லாத்தினை தனது வாழ்க்கை நெறியாக ஏற்றுக் கொண்ட செய்திகளையும் எடுத்து கூறினார். குறிப்பாக ரியாத் மாநகரில் நடைபெற்ற 8வது சௌதி மருத்துவ மாநாட்டில் கலந்து கொண்ட தாய்லாந்து நாட்டை சார்ந்த தோல் நிபுணர் Professor Tejatat Tejasen (Chiang mai University) தோல் பற்றிய செய்தியை (அல்-குர்ஆன் வசனங்களை) ஆய்வு செய்தபோது உண்மையறிந்த அறிஞர் இஸ்லாத்தினை ஏற்ற நிகழ்சியை சுட்டிகாட்டிபோது பார்வையாளர்கள் உணர்ச்சிவயப்பட்டதைக் காண முடிந்தது. ளாஃபர் மதனி அவர்கள் அல்-கஃப்ஜி தஃவா நிலையத்தில் அழைப்பாளாராக பணியாற்றி கொண்டிருக்கின்றார். அறிவியல் கல்லூரியிலிருந்து வருகை தந்துள்ளார்களோ என்று எண்ணுமளவிற்கு அறிவியல் செய்திகளை அதிலும் குறிப்பாக வானவியல் மற்றும் கருவியல் செய்திகளை மக்கள் மன்றத்தில் வைத்தமை அருமையாக இருந்தது.

அடுத்ததாக, வரலாற்று சிறப்புமிக்க நகரான அல்-ஹஸா-விலிருந்து வருகை தந்திருந்த மௌலவி அலாவுதீன் பாக்கவி அவர்களை "வரதட்சனை ஒர் அலசல்" என்ற தலைப்பில் உரையாற்ற அழைத்தபோது, பார்வையாளர் ஒருவித எதிர்பார்ப்புடன் இருந்ததை காணமுடிந்தது. அலாவுதீன் பாக்கவி அவர்கள் தனது நகைசுவை உணர்வோடு பேச்சை தொடங்கி மக்களை சிந்திக்க வைத்தார். 'ஏழே முக்காரூவா' வரதட்சனை பணத்தினை திருப்பி கொடுத்த சம்பவத்தை தனது நகைசுவை உணர்வோடு மெருகூட்டி சொன்னபோது, பார்வையாளர்களின் சிரிப்பொலியை கேட்க முடிந்தது. அடுத்து பெண் சிசுக்களை வரதட்சணைக்காக கருவறையில் சமாதியாக்கும் நிகழ்ச்சியையும், தொடர்ச்சியாக பெண் மக்களை பெறும் இளம்பெண்களின் மர்ம மரணம் பற்றி செய்திகளை கூறியபோது சபையோர்கள் கனத்த இதயத்துடன் இருந்ததை காணமுடிந்தது. பாக்கவி அவர்களின் உரை நிறைவுற்றவுடன் திருமணம் செய்வதற்கு விடுமுறையில் செல்லவிருக்கும் வாலிபர்கள், வீடியோ எடுத்த சகோதரர்களை அணுகி, சி.டி விரைவாக கிடைத்தால் தங்களின் பெற்றோர்களுக்கு அனுப்பி வைக்க இயலும் என்ற செய்தி-யிலிருந்து அலாவுத்தீன் பாக்கவி அவர்களின் உரையின் தாக்கத்தை உணர்ந்துக் கொள்ள காணமுடிந்தது

சுமார் 11 மணிக்கு ஜும்மா தொழுகைக்காக இடைவெளி கொடுக்கப்பட்டது. ஜும்மா தொழுகையை தொடர்ந்து இரண்டாவது அமர்வு சுமார் 12:30 மணிக்கு மௌலவி முஹம்மத் அஸ்ஹர் ஸீலானி (அழைப்பாளர், அல்-ஜுபைல் தஃவா நிலையம்) அவர்களின் தலைமையில் தொடங்கப்பட்டது.

உரை தொடங்குவதற்கு முன் சில அறிவிப்புகள் செய்தார். அதில் குறிப்பிடத்தக்கது, இரண்டாவது அமர்வில் உரையாற்ற இலங்கையிலிருந்து மௌலவி இஸ்மாயில் ஸலஃபி அவர்கள் வருவதாக இருந்தது. விசா-வின் கால தமாதம் காரணமாக அவர்கள் வரமுடியாத நிலையை விளக்கினார். அத்தோடு ஜித்தா முஸ்ரிஃபா தஃவா நிலையத்திலிருந்து வருகை தந்திருந்த மௌலவி முஜீபுர்ரஹ்மான் உமரீ அவர்களை இஸ்லாமும் பயங்கரவாதமும் என்ற தலைப்பில் உரையாற்ற அழைத்தார். மௌலவி முஜிபுர் ரஹ்மான் உமரீ அவர்கள் தங்கள் உரையில், உலகளாவிய பயங்கரவாதத்தை இஸ்லாத்தோடும் இஸ்லாமியர்களுடனும் தொடர்பு படுத்தப்படுவதை மிகக்கடுமையாக சாடியதோடு, இஸ்லாம் அன்பையும் அரவணைப்பையும் போதிக்ககூடிய மார்க்கம் என்பதனை குர்ஆன் ஹதீஸ் ஒளியில் தெளிவு படுத்தினார். மத்திய கிழக்கு நாடுகளில் அமெரிக்கா போன்ற மேற்கத்திய நாடுகள் வரம்பு மீறுவதை சுட்டிகாட்டியவர் அதேபோல் முஸ்லிம்களும் முஸ்லிம் நாடுகளும் வரம்பு மீறினால் அமெரிக்கா மட்டுமல்லாது மொத்த உலகமும் அமைதியையும் நிம்மதியையும் இழந்துவிடும் என்றும், இவ்வாறு வரம்பு மீறுவதை குர்ஆனும் சுன்னாவும் தான் தடுத்துக்கொண்டுயிருக்கின்றது என்ற செய்தியையும் மக்களுக்கு வைத்து விட்டு, நம்மிலும் சிலர் வரம்பு மீறுவதையும் சுட்டிக் காட்டி கண்டித்தார்கள். அமைதியும் நிம்மதியும் இஸ்லாத்தில் தான் உள்ளன வேறு எங்கும் எதிலும் இவை கிடைக்காது என்பதனை ஆணித்தரமாக எடுத்து வைத்து தனது உரையை நிறைவு செய்தார்.

சுமார் 2 மணியளவில் இரண்டாவது அமர்வு நிறைவுற்ற பின் மதிய உணவிற்காக இடைவெளி கொடுக்ககப்பட்டது. நேர்த்தியான முறையில் தயாரிக்கப்பட்ட "அரேபிய உணவு" அழைப்பு பணி உதவியாளர்களின் அன்பான உபசரிப்பில் இதமாக பரிமாறப்பட்டது. மதிய உணவிற்கு சுவை சேர்க்கும் விதத்தில் ஊறுகாய் மற்றும் காய்கறி பச்சடி பரிமாறப்பட்டன. மதிய உணவு பாரிமாறப்படுவதற்கு முன் மாநாட்டிற்கு வருகை தந்திருந்த சகோதர சகோதரரிகளுக்கு அல்-ஜுபைல் தஃவா நிலையம் சார்பாக வரவேற்பு பிரிவு சகோதாரர்களால் அன்பளிப்புகள் மிக வேகமாகவும் இலாகுவாகவும் வினியோக்கப்பட்டன. (அன்பளிப்பில் இருந்தவைகள் 1. பிரார்ததனை பேழை புத்தகம், 2. தொழுகையில் ஏற்படும் தவறுகள், 3. மரணத்திற்கு பின் மனிதன் (மடக்கைகள்) இத்துடன் மூன்று தலைப்பில் சிடிக்கள் ஒருவருக்கு ஒருதலைப்பு மட்டும் (இவர்கள் தான் ஸியாக்கள், யூத கிறிஸ்துவர்கள் ஓர் இஸ்லாமிய பார்வை, குழப்பங்களின் போது முஃமீன்களின் நிலை போன்ற தலைப்புகளில்)

அஸர் தொழுகைக்குப் பின் மூன்றாவது அமர்வு மௌலவி ஜமால் முஹம்மத் மதனி அவர்கள் தலைமையில் நடைபெற்றது. தலைமையுரைக்குப் பின் அல்-கஸிம் அர்-ராஸிலிருந்து வருகைத் தந்திருந்த மௌலவி உவைஸ் மதனி அவர்கள் "கப்ரு சோதனையும் நரக வேதனையும்" என்ற தலைப்பில் உரை நிகழ்த்தினார். கப்ரு வேதனை ஒன்று இருக்கின்றது என்பதற்கான அடுக்கடுக்கான குர்ஆன் வசனங்களை எடுத்துச் சொல்லி விளக்கி அடுத்து கப்ரு வேதனைகள், நரக வேதனைகள் குறித்து குர்ஆன் ஹதீஸ் ஒளியில் ஆதாரங்களை முன்வைத்து பேசியபோது பார்வையாளர்கள் (அந்த வேதனையின் அச்சம் காரணமாக) சலமின்றி இருந்தனர். (இந்த தலைப்பில் பேசுவதற்கு தமிழகத்திலிருந்து கோவை அய்யூப் அவர்கள் வருகை தரவிருந்தார். ஆனால் விசாவில் ஏற்பட்ட கால தாமதம் காரணமாக கடைசி நேரத்தில் வர இயலவில்லை என்பது குறிப்பிடத்தக்கது)


இதனை தொடர்ந்து தஃவா நிலைய பொறுப்பாளர் மரியாதைக்குரிய ஹுசைன் அப்தலி அவர்கள் அரபி மொழியில் உரை நிகழ்த்தினார். அதனை ஜமால் முஹம்மத் மதனி அவர்கள் மொழிபெயர்ப்பு செய்தார். தொடர்ந்து பரிசு வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. அதன் பின்னர் மாநாட்டு ஒருங்கிணைப்பாளர் சகோ. ஷமிருல் ஹசன் அவர்கள் நன்றியுரை வழங்கி மாநாட்டை சிறப்பான முறையில் முடித்து வைத்தார்.

இந்த மாநாடு இவ்வளவு சிறப்பாக நடைபெறுவதற்கு எல்லா வகையிலும் உதவி வழங்கிய வல்ல அல்லாஹ்-விற்கே எல்லா புகழும்.

 

 

 

 

 

 

பெட்டிச் செய்திகள்:

 

- ஒவ்வொரு உரை முடிந்த பிறகு அதிலிருந்து ஐந்து கேள்விகள் (மூன்று ஆண்களுக்கும் இரண்டு பெண்கள் பகுதியில்) கேட்கப்பட்டு சரியான விடையளித்த சகோதர சகோதரரிகளுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.


- மாநாட்டை முன்னிட்டு கேள்வி பதில் போட்டி வினாதாள் ஒன்று சுமார் 3 வாரங்களுக்கு முன் வினியோகிக்கப்பட்டது அதனை நிறைவு செய்து கொடுக்க கடைசி நாள் 22-4-2007 என்று அறிவிக்கப்பட்டுயிருந்தது அதிலிருந்து 100 க்கு 100 மதிபெண்கள் பெற்றவகளை குலுக்கல் முறையில் தேர்வு செய்து அதில் சுமார் 50 நபர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.

- அதேபோல் மாநாட்டிற்கு வருகை தந்தவர்களுக்கு டோக்கன் வழங்கப்பட்டு, கம்யூட்டரில் குலுக்கல் முறையில் தேர்வு செய்து அதற்கும் பரிசுகள் வழங்கப்பட்டன.

- மேலும் பெண்களுக்கு தனி இடவசதி செய்யப்பட்டிருந்தது. பெண்களுக்கென்று தனியாக பரிசுகள் தன்னர்வ சகோதரிகள் மூலம் வழங்கப்பட்டது.

- அல்-ஜுபைல் மாநகரின் அனைத்து முகாம்களுக்கும் வாகன வசதி மிக அருமையான முறையில் மாநாட்டின் போக்குவரத்து பிரிவு சகோதரர்களால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கதாகும்.


- ஆடியோ வீடியோ பிரிவை சார்ந்த சகோதரர்களால் மிக நேர்த்தியான முறையில் ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன. இந்த மாநாட்டின் முழு வீடியோ தொகுப்பையும்
www.islamkalvi.com இணையதளத்தில் பதிவிறக்கம் செய்யும் வசதியுடன் விரைவில் பார்த்து மகிழலாம் (இன்ஷா அல்லாஹ்)

- காய்கறி சலாட் (முழுசெலவும்) மற்றும் காலை சிற்றுண்டிக்கான கீமா தயாரிப்பதற்கான அனைத்து வசதிகளையும் Star of Kingdom Services (SKS) குழுமம் செய்திருந்தன.

- காலை Coffee-யும் மாலை Tea-யும் Gulf கம்பேனி ஏற்பாடு செய்திருந்தன.

- பிற அனைத்து செலவுகளையும் அல்-ஜுபைல் தஃவா நிலையம் செய்து தந்தது குறிப்பிடதக்கது.

- சுமார் 1300 க்கும் மேற்பட்டவர்கள் கலந்து கொண்டனர் அதில் 150 மேற்பட்டவர்கள் பெண்கள்.


- தம்மாம், அல்-கோபர், ரஹிமா, அப்கேக் மற்றும் அல்-ஹஸா மற்றும் கிழக்கு மாகணத்தின் பிற பகுதிகளிலிருந்தும் மக்கள் கலந்து கொண்டனர். அனைத்து பகுதிக்கும் போக்குவரத்து வாகன ஏற்பாடு செய்யப்பட்டிருந்தன. (பல்வேறு நிறுவனங்கள் இந்த மாநாட்டிற்க்காக ஓட்டுனர்களுடன் வாகனங்களும் வழங்கி இறைப்பணியில் தங்களையும் இணைத்துக் கொண்டார்கள்)

 

- இந்த மாநாட்டிற்க்காக சுமார் 70 பேர் கொண்ட பல்வேறு குழுக்கள் களத்தில் இறங்கி பம்பரமாய் சுழன்று பணியாற்றினார்கள். அந்த நல்ல உள்ளங்களுக்கு அல்லாஹ் இம்மையிலும் மறுமையிலும் சிறந்த கூலி வழங்குவானாக!