Index |Subscribe mailing list | Help | E-mail us

..ஆதலினால் கல்வி பயில்வீர்

A.பஷீர் அஹமது - கோவை

 

தொலைந்த பொருளை தேடுவது போல் வாழ்க்கையில் கல்வியை தேடிக்கொண்டே இருங்கள் என்று நபிகள் நாயகம்(ஸல்) அவர்கள் கூறினார்கள்.

கல்வியின் முக்கியத்துவத்தையும், கற்பதின் அவசியத்தையும் இவ்வளவு சிறப்பாக ரசூலுல்லாஹ்(ஸல்) அவர்களை தவிர வேறு யாராலும் சொல்ல முடியாது அன்பர்களே.

மேலைநாட்டு கல்வியாளர் ஒருவர் அவருடைய பங்கிற்கு கல்விக்கு இவ்வாறு முக்கியத்துவம் தருகிறார் அதாவது
இன்று நீ கல்வி கற்றுக் கொண்டு நாளை கற்பதை நிறுத்திவிட்டால், நாளை மறுநாள் நீ கல்வி கற்காதவனாகி விடுவாய்

If u are educated today, leave education tomorrow, you are uneducated on day after tomorrow

ஆக கல்வி என்பது வாழ்நாள் முழுவதும் நாம் தொடர்ந்து கற்க வேண்டிய ஒன்று என்பது தெளிவாகிறது. ஒரு வரலாற்று நிகழ்வுடன் இந்த கட்டுரையை ஆரம்பிப்பது சாலச் சிறந்ததாகும்.

இஸ்லாமிய வரலாற்றில் மிகப்பெரிய திருப்பத்தை ஏற்படுத்திய பத்ருப் போரின் வெற்றிக்கு பிறகு எழுபதிற்கும் மேற்பட்ட இறை நிராகரிப்பாளர்கள் போர் கைதிகளாக நபி(ஸல்) அவர்கள் முன் நிறுத்தப்பட்டனர். அவர்கள் அனைவரும் நன்கு படித்தவர்கள். அவர்களை பார்த்து இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள், உங்களில் எவர் முஸ்லிம்களுக்கு எழுதவும், படிக்கவும் கற்றுக் கொடுக்கிறார்களோ அவருக்கு நான் விடுதலை அளிப்பேன்.

நபிகள் நாயகம்(ஸல்) அவர்களால் இந்த அளவிற்கு முக்கியத்துவம் கொடுக்கப்பட்ட கல்வியை நபியின் வழித்தோன்றல்களாகிய நாம் எந்த அளவிற்கு பேணிக் காக்கிறோம் என்பதை யோசித்தால் நமக்கு பெருத்த ஏமாற்றம்தான் மிஞ்சுகிறது அன்பர்களே!

இங்கு கல்வி எகுறிப்பிடப்படுவது நற்பயன்களை தரக்கூடிய அறிவை. அதாவது, அடிப்படைக் கல்வியான மார்க்க கல்வி, ஏட்டுக் கல்வி, அதனைத் தொடர்ந்து நம்மை நாம் மேம்படுத்திக் கொள்ளவும், அறிவைப் பெருக்கிக் கொள்ளவும் தொடர்ந்து நாம் கற்பது ஆகியவற்றையும் உள்ளடக்கியது என்பதை கருத்தில் கொள்ளவும்.

கல்விக்கும் நமது இஸ்லாமிய மக்களுக்கும் உள்ள தொடர்பு தற்பொழுது எந்தளவில் உள்ளது என்பதை கணக்கிட்டால் நிச்சயமாக பூமிக்கும், சூரியனுக்குமுள்ள தூரத்தைவிட அதிகம் என்றே கருதவேண்டியுள்ளது.

அன்பர்களே! இஸ்லாம், கல்வியை ஆதரித்த அளவிற்கு உலகிலுள்ள வேறு எந்த கொள்கையும், கோட்பாடுகளும் கல்வியை ஆதரிக்கவில்லை என்பதுதான் வரலாறு. இந்த அடிப்படை அதிகாரத்தை நாம் தெளிவாக புரிந்து கொண்டோமா என்பதுதான் நமக்குள் இருக்கும் பெரிய தகராறு.

நாம் எதில் தெளிவாக இருக்கிறோமோ இல்லையோ, சிறுபான்மை சமுதாயத்தினர் என்பதில் மட்டும் மிக மிகத் தெளிவாக இருக்கிறோம். அதனால்தான் நம்மை முன்னிலைப்படுத்தி எந்த ஒரு பிரச்சினை எழுந்தாலும் நாம் ஒரு சிறுபான்மையினர் என்று ஒப்பாரி வைத்தே ஓய்ந்து விடுகிறோம்.


ஆனால் சிறுபான்மையினராகிய நம்மில் ஒரு பகுதியினர் திறமை மற்றும் கல்வி கற்க ஆர்வம் இருந்தும் வசதி இல்லாததால் கல்வி கற்காமல் உள்ளனர் ஒரு பகுதியினர் நல்ல வசதி வாய்ப்புகள் இருந்தும் கல்வி கற்பதில் ஆர்வம் காட்டுவதில்லை, மற்றொரு பகுதியினரோ கல்வியை நன்கு மேம்படுத்திக் கொண்டும் வசதி வாய்ப்புகளை பெருக்கிக் கொண்டே போய்க் கொண்டும் உள்ளனர்.

நமக்குள் இப்படி ஒரு நிகழ்வு எதனால் ஏற்பட்டது என்பதை நிதானித்தால் நமக்கு ஒற்றுமை உணர்வு குறைவு என்பதைவிட சமுதாய உணர்வு அதிகம் இல்லை என்றே அர்த்தமாகிறது.

நம் சமுதாயத்தில் இருக்கும் இப்படிப்பட்ட குறைப்பாட்டை நிவர்த்தி செய்யவும் இந்த முரண்பாட்டை சமன் செய்யவும் ஒரே வழி கல்வியை த்தி வைப்பது தான்.

ஆம்! சகோதரர்களே இஸ்லாத்தை எத்தி வைப்பது போல் நம் இஸ்லாமிய மக்களிடையே கல்வியையும் எத்தி வைப்பது அவசியம் என்றே தோன்றுகிறது.

கல்வி என்பது ஒரு பொதுவுடைமை. அது தனிப்பட்ட ஒரு சமுதாயத்தினருக்கு மட்டும் சமர்பணம் ஆனதல்ல. நம் இஸ்லாமிய சமுதாயத்தினர் மட்டும் கல்வி பயில வேண்டும் என்பது எம்முடைய குறுகிய மனப்பான்மையும் அல்ல. ஆனால் ஒப்பிட்டுப் பார்த்தால் மற்ற சமுதாயத்தினரைவிட நம் சமுதாயத்தில்தான் கல்வி கற்றவர்களின் எண்ணிக்கையும், கற்பதின் அவசியத்தை புரிந்தவர்களின் எண்ணிக்கையும், அறிவைத் தேடுவதில் நாட்டம் கொண்டவர்களின் எண்ணிக்கையும் மிக மிக குறைவாக உள்ளது என்பதுதான் இக்கட்டுரையின் ஆதங்கமே.

உலகில் இஸ்லாம் பரவத் தொடங்கிய பிறகுதான் கல்வி என்பது எல்லோருக்கும் பொதுவானது என்ற நிலை செயலில் வந்தது என்பதை நினைவில் கொள்ளுங்கள்.

நமது வாழ்க்கையின் ஆதாரமாகிய திருக்குர்ஆன், கல்வி கற்பதையும் அறிவைத் தேடுவதையும் பற்றி பற்பல அத்தியாயங்களில் நமக்கு அறிவுரை வழங்குகிறது.

கல்வி கற்பதின் மூலமும், அறிவைப் பெருக்கிக் கொள்வதின் மூலமும்தான் விழிப்புணர்ச்சி ஏற்படும். விழிப்புணர்ச்சி அதிகமானால், அறியாமை அகலும். அறியாமை அகன்றால் சமுதாயம் மறுமலர்ச்சி அடையும். சமுதாய உணர்வு உள்ளவர்களிடம் தான் சமுக அக்கறையும் இருக்கும் என்பது நடைமுறை உண்மை.

ஆக கல்வி என்பதும் நமக்கு வலியுறுத்தப்பட்ட ஒரு விஷயம் என்று புரிகிறது. ஆனால் இயன்றவரை அதை நாம் ஏன் கடைப்பிடிப்பதில்லை என்றுதான் புரியாத புதிராக உள்ளது.

கல்வியைப் பொறுத்தவரை நம்மில் ஏன் இப்படி ஒரு தேக்கநிலை என்று யோசித்தால் நம்மில் பல பேர் கல்வி என்பது மனதிற்கு ஒரு இணக்கமான விஷயம்தான் என்பதை புரிந்து கொள்ளாமல் உள்ளனர் என்பதே தெளிவாகிறது.

அறியாமையும், மூடநம்பிக்கையும்தான் அழிவுப் பாதைக்கு வழிக்காட்டும் கலங்கரை விளக்குகள் என்பது நமது அறிவிற்கு தெரிந்தாலும் அதை நமது உள்ளம் ஏற்றுக் கொள்வதில்லை. ஷைத்தான் கெட்டதைத் தான் அழகாக்கிக் காட்டுவான் என்பதும் நமக்கு உறைப்பதில்லை. போதிய விழிப்புணர்ச்சியின்மையும், அலட்சிய குணமும்தான் நம் சமுதாயத்தில் உள்ள பலர் இறைவனுக்கு இணைவைக்கும் இழிவான நிலைக்கு தள்ளப்பட்டு உள்ளனர் என்பதை உணரவும் நாம் முற்படுவதில்லை.

அல்லாஹ்வின் படைப்புகளில் முழுமையான படைப்பு மனித இனம்தான் அந்த மனித இனத்திற்கு பகுத்தறிவு மூலம் சிந்திக்கவும் பொறுப்பு ஏற்படுத்திக் கொடுத்துள்ளான். ஆக அந்த ஏக இறைவனுக்கு நன்றி சொல்வது கடமை என்பதால் கல்வி கற்பது அவசியம் என்பதை முதலில் உணருங்கள்.

கல்வி கற்க வேண்டும் என்று வலியுறுத்தப்படும் போதே அதை தெளிவாகவும் கற்க வேண்டும் என்ற பொருளும் அதில் உள்ளது. தெளிவான கல்விதான் நல்ல சிந்தனைக்கு வழிவகுக்கும் என்பதில் ஐயமில்லை. தெளிவான கல்வியின் அவசியத்தை சொல்லும் இவ்வேளையில் ஒன்றை குறிப்பிட்டு சொல்வது கடமை என்றே கருதுகிறேன்.

உலக மக்கள் அனைவருக்கும் ஓர் நல்லுரை என்று அரபி மொழியில் அல்லாஹ்வால் இறக்கி அருளப்பட்ட திருக்குர்ஆனை நம்மில் பலபேர் மூல மொழி அரபியிலேயே படித்திருந்தாலும் அதில் எவ்வளவு பேர் பொருள் உணர்ந்து தெளிவாக கற்றுள்ளனர் என்பதை ஆராய்ந்தால் வெட்கித் தலை குனிய வேண்டியநிலை நமக்கு. பொருள் உணர்ந்து படிக்காததாலும், தெளிவாக புரிந்து கொள்ளாததாலும் தான் குர்ஆனின் கருத்துக்கள் நம்மீது தாக்கத்தை ஏற்படுத்தாமல் உள்ளது (அல்லாஹ் நம்மை மன்னிப்பானாக) ஆதலால்தான் இறைவனுக்கு இணைவைக்கும் காரியங்களுக்கு துணை போகிறோம். மார்க்க வழியை மனம் போன போக்கில் பின்பற்றுகிறோம்.

சகோதரர்களே நம்மில் பலருக்கு கல்வி கற்று என்ன பயன், இஸ்லாமியருக்கு வேலை வாய்ப்புகள் மறுக்கப்படுகிறது, நமது திறமைகள் அங்கீகாரம் ஆவதில்லை என்று பலவிதமான ஆதங்கமும், மனக்குறைபாடுகளும் உள்ளது இதை மறுப்பதற்கில்லை எனினும் இவையே காரணங்களாக்கிக் கொண்டு நமது திறமைகளை முடக்கிக் கொண்டும் நம்மை கேலிப்பொருளாக மற்றவர்களுக்கு காண்பித்துக் கொண்டிருப்பதிலும் என்ன நன்மை கண்டோம் இதுவரையில்?

கல்வியின் நிலை குறித்து இப்படி ஆதங்கப்படும் அதே வேளையில் குறைந்த அளவு ஆறுதலும், சந்தோஷமும் அடையும் வண்ணம் சில நல்ல காரியங்கள் தமிழ்நாட்டில் சில இடங்களில் ரெசிடென்சியல் பள்ளிகளில் நடைமுறைபடுத்தப்பட்டு வருகின்றது. இந்த பள்ளிகளில் நமது தீன் கல்வியோடு உலகக் கல்வியும் நல்ல முறையில் போதித்து வருகிறார்கள். அத்துடன் படிப்பைச் சார்ந்த மற்ற துறைகளுக்கு பயிற்சியும் உடல்நலம் பேணுவதற்கு தனி பயிற்சிகளும் அளிக்கப்பட்டு வருகின்றது. சகோதரர்களே! இது ஓர் ஆரோக்கியமான முன்னேற்றம். இந்த ஒரு சில பள்ளிகள் அல்லாஹ்வின் ரஹ்மத்தால் கூடிய விரைவில் பல பள்ளிகள் ஆக வேண்டும் என்பது நம் அனைவருடைய ஆசையாக இருக்கட்டும். அதற்கு நம்மால் இயன்றளவு என்ன செய்யலாம் என்பதையும் சற்று சிந்தியுங்கள். அப்படி சிந்திக்கும் வேளையில் கல்வியின் மகத்துவத்தை மற்றவர்களுக்கு புரிய வைக்கவும் கல்வி வளரவும் ஏதேனும் ஒரு விதத்தில் கல்விற்கு உதவி புரிய முனைந்திருங்கள்.


கல்வி கற்பதற்குண்டான ஆர்வத்தை வளர்த்துக் கொள்ளுங்கள். கற்றுக் கொள்வதில் மட்டும் எப்பொழுதும் தாமதம் செய்யாதீர்கள். கல்விக்காகவும் கல்வியைப் பற்றி சிந்திக்கவும், படிக்கவும் தினந்தோறும் குறைந்த நேரமாவது ஒதுக்குங்கள்.


நாம் செய்யும் ஒரு சிறு நன்மைக்கு அல்லாஹ் நமக்கு பல மடங்கு கூலி கொடுப்பான் என்பதை எப்போதும் நினைவில் நிறுத்துங்கள்.
நல்ல கண்ணோட்டமும், தெளிவான சிந்தனையும், முற்போக்கு எண்ணமும் இல்லாத காரணத்தால் தான் பல துன்பங்களும் இழிவான செயல்களும் அரங்கேற ஏதுவாக உள்ளது என்பதை வெளிப்படையாக உணருங்கள். வாழ்க்கையின் தத்துவமே படிப்படியாக முன்னேறுவதுதான் என்கிற கொள்கையில் உறுதியாக இருங்கள்.


அறிவு ஒரு முஸ்லிமைப் பொறுத்தவரை காணாமல் போய்விட்ட சொத்து அது எங்கே காணக்கிடைத்தாலும் அவரே அதற்கு உரியவர் ஆவார் என்று இறைத்தூதர் முஹம்மது(ஸல்) அவர்களின் சொல்லுகிணங்க அறிவைத் தேடி நாம் அலைவோம்.


அறியாமை என்னும் இருள் அகன்று விழிப்புணர்ச்சி எனும் வெளிச்சம் பரவ குறைந்த பட்சமாக ஒரு மெழுகுவர்த்தி அளவேனும் கல்விக்காக உதவி புரிந்திட முன்வாருங்கள்


..ஆதலினால் கல்வி பயில்வீர்... எல்லா புகழும் இறைவனுக்கே!