Index |Subscribe mailing list | Help | E-mail us

அமெரிக்கா படிப்பினைப் பெறுமா?
E. Usman Ali

மக்களை மாக்களாய் நடத்திய அமெரிக்காவின் மனிதநேயம்


வீழ்ச்சி அடைந்த பேரரசுகள்
உலக வறலாற்றில் பல்வேறு பேரரசுகள் பல்வேறு காலக் கட்டங்களில் ஆதிக்கம் செலுத்திச் சென்றுள்ளன. எந்த ஒரு இராஜியமும் தங்கள் ஆதிக்கத்தை தொடர்ந்து தக்க வைத்துக் கொள்ள இயலாமல் போனதுதான் யதார்த்தமான நிலையாகும். ரோமப் பேரரசு, பாரசீகப் பேரரசு, கிரேக்கப் பேரரசு, பிரித்தானியப் பேரரசு, உஸ்மானியப் பேரரசு உட்பட எல்லா இராஜியங்களும் ஒரு காலக் கட்டத்திற்க்குள் வீழ்ச்சியை எட்டுவிட்டன.


பொதுவாக வரலாற்றில் நாம் அறிய வரும் உண்மை என்னவென்றால் மனிதர்களுக்கு ஆற்றலை பிரயோகித்து வெற்றி கிட்டக்கூடிய சந்தர்ப்பங்களில் எல்லாம் தன் சக்தியை துஷ்பிரயோகம் செய்து வரூவதைக் கண்டு வருகின்றோம். மேலும் அதற்தான பிரதி பலன்களை அடையக்கூடிய ஒரு சந்தர்ப்பம் வாய்ப்பினும் கூட அதிலிருந்து படிப்பினை பெறுவதை விட்டும் மனிதன் தவறிவிடுகின்றான். அவற்றின் சரித்திர புருஷர்கள் இல்லாதிருப்பினும் கூட அவர்கள் விட்டுச்சென்ற காலச்சுவடுகளும் அதிலிருந்து நாம் பெறவேண்டிய படிப்பினைகளும் ஏராளம் ஏராளம். இத்தகைய படிப்பினைகளில் திருந்தாதவர்கள் அடையக் கூடிய இழிவு காலத்தின் கட்டாயம் ஆகும். அந்த வரிசையில் தலையாய இடம் பெற்றறுள்ள ஒரு நாடுதான் அமெரிக்காவாகும். இது இன்று பெற்றிருக்கும் அபரிதமான ஆற்றலைப் போன்று ஒவ்வொரு காலக் கட்டத்திலும் சில நாடுகள் பெற்றிருந்தன. அதை கொண்டு பல நாடுகளை அடிமைப்படுத்தி ஆட்சியும் செய்தன. ஒரு காலக்கட்டத்தில் அவைகள் வலுவிழந்து வீழ்ச்சியை அடைந்தன. தங்கள் வல்லாதிக்கத்தின் மூலம் வரலாற்றைப் புரட்டிப்போட்ட இராஜியங்கள் சரிந்துப்போன சரித்திரத்தையும் அதிலிருந்து பெறப்படும் பாடங்களையும் பார்ப்போம். இதன் மூலம் படிப்பினை பெறாவிட்டால் அமெரிக்கா அடையும் நிலையைப் பற்றி, காலம் நமக்கு ஒரு தெளிவான பதிலை கொடுக்கும்.


ஐரோப்பிய வெள்ளையர்களும் அமெரிக்கர்களும் நாடுகளினால் வேறுப் பட்டிருப்பினும் அவர்களின் நிறங்களிலும் குண நலன்களில் பெருத்த வித்தியாசம் காணப்படவில்லை. ஐரோப்பியர்கள் அமெரிக்காவில் குடியேறியதன் மூலம் அமெரிக்கர்களாயினர். ஐரோப்பியர்களின் நிற வெறி மற்றும் சுயநலப்போக்கை குறிப்பிடும்போது அது அமெரிக்காவை இணைத்துக் கூறப்பட்டதாகவே எடுத்து கொள்ள வேண்டும்.


சூரியன் அஸ்தமிக்காத சாம்ராஜியத்திற்கு சொந்தக்காரர்கள் என்று மார்த்தட்டியவர்களின் இன்றைய நிலை


பத்தொன்பதாம் நூற்றாண்டைப் பொறுத்த வரை உலகின் பெரும் பகுதி பிரிட்டானியர்களின் கையில் இருந்தது. இவர்களின் இராஜியத்தின் எதாவது ஒரு பகுதியில் சூரியன் உதித்துக் கொண்டிருப்பதை பெருமையாக பறைசாற்றிக் கொண்டு இருந்தனர். வியாபாரத்தின் மூலமாகவும் மார்க்கத்தை போதிக்கவும் வந்ததாக முதலில் ஒரு நாட்டில் நுழையும் இவர்கள், கொஞ்சம் கொஞ்சமாக அந்த நாட்டை ஆக்கிரமித்து அங்குள்ள பிரிவினரிடையே பகைமையைப் ஊதிப் பெரிதாக்கி தங்கள் ஆதாயத்தை அடைந்துக் கொள்வார்கள்.


இவர்களைப் பற்றி ஒரு ஆப்ரிக்க கவிஞன் சொன்னான்
வெள்ளையர்கள் எங்கள் நாட்டிற்கு வந்த போது
'நாடு' எங்கள் கையில் இருந்தது. 'பைபில்' அவர்கள் கையில் இருந்தது
அவர்கள் கண்ணை மூடி ஜபம் செய்வது எப்படி என்றுச்
சொல்லிக்கொடுத்தார்கள்.
நாங்கள் கண்ணை மூடி ஜபம் செய்தோம்
பிறகு கண்ணை திறந்து பார்த்தபோது
எங்கள் கையில் பைபில் இருந்தது
அவர்கள் கையில் நாடு இருந்தது


'கிழக்கும் மேற்கும்' என்ற தனது பயணப் புத்தகத்தில் விவேகானந்தர் பின் வருமாறு இவர்களைப்பற்றி குறிப்பிடுகின்றார்.


இஸ்லாம் எங்கெல்லாம் சென்றதோ அங்குள்ள மக்களை அரவணைத்து வாழ்வளித்தது
கிருஸ்துவம் எங்கெல்லாம் சென்றதோ அங்குள்ள பூர்வ குடிகளை இல்லாதொழித்தது


இந்த கருத்து உண்மையில் மிகைப்படுத்திச் சொல்லப்பட்டதல்ல. வெளிப்படையாக இவர்களின் குணங்களை தோலுரித்துக் காட்டும் மேற்கோளாகும்.

 

கொலம்பஸ் 1492-ம் ஆண்டு அமெரிக்காவை கண்டுப்பிடித்தவுடன் அசுர வேகத்தில் ஐரோப்பிய நாடுகள் போட்டிப் போட்டுக் கொண்டு தங்கள் காலனிகளை அமைத்து அமெரிக்காவின் வளங்களை சுரண்ட ஆரம்பித்தன. அதில் பிரிட்டன் மாத்திரம் 13 காலனிகளை அமைத்து தன் ஆதிக்கத்தை விஸ்தீரனப் படுத்தியது. பிரிட்டனும் மற்றும் ஆக்கிரமித்த ஐரோப்பிய நாடுகளும் மண்ணின் மைந்தர்களான செவ்விந்தியர்களை மனிதாபிமானமின்றி கொன்றுக் குவித்து அவர்களின் குறுதிக் கறை படிந்த மண்ணில் ஆப்பிரிக்க நீக்ரோக்களை அடிமைகளாக பிடித்துச் சென்று புதிய அமெரிக்காவை நிர்மாணித்ததை அறிவிக்கும் வரலாற்று குறிப்புகள் நமக்கு மிக அண்மையில்தான் இருக்கின்றது.


ஒரு கோடிக்கும் அதிகமான ஆப்பிரிக்க மக்கள் தங்கள் சொந்த நாட்டை விட்ட அடிமைகளாக இவர்களினால் இழுத்துச் செல்லப்பட்டு கொடுமைப் படுத்தப்பட்டனர். இவர்கள் நீக்ரோக்களை கொத்தடிமைகளாக படுத்தியபாடு மனிதநேயமிக்கவர்களின் உள்ளங்களை கரையச்செய்யும் நிகழ்வுகளாகும்.
Tony Morisan என்பவர் அமெரிக்காவின் புகழ் பெற்ற எழுத்தாளர். இவர் 1993 ஆம் ஆண்டு இலக்கியத்திற்கான நோபல் பரிசை பெற்றவர். இவருக்கு Plidzer பரிசை 1987-ம் ஆண்டு பெற்றுத் தந்து உலக அளவில் பிரபல்யத்தை ஏற்படுத்தித் தந்த Beloved என்ற தன்னுடைய நாவலில் வறலாற்றுச் சான்றுகளுடன் நீக்ரோக்களின் அடிமை வாழ்வையும் அவர்கள் அடைந்த துயரங்களையும் பட்டியல் போட்டு விளக்கியிருந்தார். மனிதர்களை மிருகங்களை விட மோசமாக நடத்திய நிறவெறிப் போக்கு இன்று வரை எதாவது ஒரு வழியில் அரங்கேறிக் கொண்டுதான் இருக்கின்றது. மனித உரிமைக்காகவும் உலக அமைதிக்காகவும் மக்கள் மனித சங்கிலி போராட்டம் நடத்துவதை கண்டு வருகின்றோம். சங்கிலியால் விலங்கிட்டு மக்களை மாக்களாய் நடத்திய மனித நேயத்தைத்தான் கட்டுரையின் ஆரம்ப புகைப்படம் விளக்குகின்றது.


பிரித்தானியப் பேரரசின் நிலை
சூரியன் அஸ்தமிக்காத சாம்ராஜியத்திற்கு நாங்கள் சொந்தக்காரர்கள் என்று மார்த்தட்டிய பிரித்தானியப் பேரரசின் நிலை இன்று என்ன ஆனது என்பதை நம் கண்கூடான காண்கிறோம். அமெரிக்க கண்டத்தில் அமைத்த 13 காலனிகளும் ஆப்பிரிக்க கண்டத்தின் எல்லாக் காலனிகளும் கையை விட்டுச் சென்றது. இந்தியா சுதந்திரம் பெற்றது. மூலை முடுக்கெல்லாம் இருந்த ஆதிக்கங்கள் விடைப் பெற்று சென்றன. உலகம் முழுதும் இருந்த அவர்களின் இராஜியங்கள் அஸ்தமித்து தங்கள் சொந்த இராஜியத்தில் அஸ்தமனம் கண்ட மோசமான நிலையை அடைந்ததை நாம் கண்டுவருகின்றோம்.

 

 
உலகத்தில் மிக அதிக அளவில் தங்கம் மற்றும் பிளாட்டினம் கிடைக்கும் தென் ஆப்ரிக்காவின் மீது தீராத மோகம் கொண்ட இவர்களின் ஆளுமை நீடித்ததா என்றால் நிச்சயமாக இல்லை. கென்யாவில் இவர்களுக்கு எதிராக நடைப்பெறும் சம்பவங்கள் அனைத்தும் இவர்களின் காலனி ஆதிக்கம் ஒழிந்து அதற்கு முடிவு கட்டும் சம்பவங்கள் நிறைய அரங்கேறிவரும் காட்சியைக் காண்கின்றோம். தென் ஆப்பிரிக்காவில் வெள்ளையர்களின் ஆட்சிக்கு முடிவு கட்டிய கருப்பின மக்கள், அரியணை ஏறிய நிகழ்ச்சி இவர்களின் ஆட்டங்கள் விடைப்பெறும் சந்தர்ப்பத்தை எட்டி விட்டன என்பதை சொல்லாமல் சொல்லுகின்றன. ஆனால் இன்று என்ன நிலை என்றால் வெள்ளையர்கள் வாழும் நிலை இக்கட்டாகிப்போனது. வெள்ளையர்கள் தங்கள் உடல் தோலின் நிறத்தை நீக்ரோக்களைப் போன்று வேதியல் முறையில் கருப்பாக மாற்றிக்கொண்டு வரும் செய்தியை அறிய வந்தபோது இவர்களின் நிலை பல் பிடுங்கப்பட்ட பாம்பின் நிலையை அடைந்துவிட்டதை இந்த உலகம் உணர்ந்துக்கொண்டது. 1997-ஆம் ஆண்டு ஹாங்காங் கையை விட்டுபோன போது இளவரசர் சார்லஸினால் கண்கலங்க முடிந்ததே தவிர வேறொன்றும் செய்ய முடியவில்லை. ஜிப்ரால்டரை மீட்க ஸ்பெயினும் போக்லாந்து தீவை மீட்க அர்ஜெக்டினாவும் தொல்லைகளை கொடுக்கின்றன. பரந்து விரிந்த பேரரசு மாத்திரம் கையை விட்டுச்செல்லவில்லை. மாறாக அவர்களின் சொந்த நாட்டில் பிரச்சினை ஆரம்பம் ஆகியது.

 

இங்கிலாந்து, ஸ்காட்லாந்து, வேல்ஸ், அயர்லாந்து, இவை நான்கும் இணைந்து உண்டாக்கப்பட்ட ஒருங்கினைந்த ஒரு அமைப்புத்தான் கிரேட் பிரிட்டன் என்பதாகும். தற்போது இவைகளுக்கிடையே ஏற்பட்டுள்ள குரோத மனப்பான்மையும் இவைகள் தங்களுக்குள் அடித்துக் கொண்டு தனிநாடு கேட்கக்கூடிய நிலை நிச்சயமாக எந்த ஒன்றும் நடக்க சாத்தியமானது என்பதை நமக்கு தெளிவாக்குகின்றது. 1977-ஆம் ஆண்டு அயர்லாந்தை தன் நேரடி ஆளுகையின் கீழ் கொண்டு வந்ததன் மூலம் கத்தோலிக்கர்களுக்கும் புரொடஸ்டன்ட்களுக்கும் தீராத பகை ஏற்பட்டு இங்கிலாந்தின் பல பகுதிகளிலும் குண்டு மழை பொழிய ஆரம்பித்து. 1999-ஆம் ஆண்டு ஸ்காட்லாந்து தனி பாராளுமன்றமும் வேல்ஸ் தனி சட்ட மன்றமும் அமைத்து தன்னதிகாரத்தை கையில் எடுத்துக்கொண்டதன் மூலம் ஐக்கிய முடியாச்சி (UNITED KINGDOM) முடிவுறும் நிலையை எட்டியுள்ளது. பழைய புகழ் பேசி பெருமூச்சி விடும் நிலைக்கு தள்ளப்பட்டது அதற்கு காலம் கொடுத்த பரிசாகும். இந்த நிலையை நோக்கி அமெரிக்கா சென்றுக் கொண்டிருக்கின்றது என்றுச் சொன்னால் மிகையாகாது.

ஐக்கிய ரஷ்ய பொதுவுடமை குடியரசு (
USSR)
இருபதாம் நூற்றாண்டில் கொடிக்கட்டி பறந்த சாம்ராஜியம் ஐக்கிய ரஷ்ய பொதுவுடமை குடியரசு (
USSR). பத்தொன்பதாம் நூற்றாண்டின் இறுதிவரை ஜார் மன்னர்களினால் சொல்ல முடியாத துயரங்களை அடைந்த மக்கள் காரல்மார்க்ஸின் கொள்கையினால் ஈர்க்கப்பட்டனர். 1917-ஆம் ஆண்டு லெனின் ஆட்சியைப் கைப்பற்றுகின்றார். 1924ல் லெனின் இறந்ததன் பிறகு ஆட்சி கட்டிலில் அமர்ந்த ஜேசப் ஸ்டாலின் ஒரு கொள்கையை கடைப்பிடித்தார். அதுதான் நாடுபிடிக்கும் கொள்கை. 1924 லிருந்து 1953 வரை மிக நீண்ட காலம் ஆட்சி செய்த ஸ்டாலின் அண்டை நாடுகள் பலவற்றை பிடிப்பதையே தம் பிரதானக் குறிக்கோளாகக் கொண்டு செயல்பட்டார். அதன் விளைவாக அவர் தன் 29 ஆண்டுகால சர்வாதிகார ஆட்சியில் பிடித்த நாடுகள் ஒன்றல்ல இரண்டல்ல ''பதினைந்து'' நாடுகளாகும்.

 


நாடுபிடிக்கும் இராணுவ வீரர்களுக்கு தேவையான உணவு மற்றும் பொருளாதாரத் தேவைகளுக்காக நாட்டு மக்களை கசக்கி பிழிந்து எண்ணற்ற துயரங்களுக்கு ஆளாக்கினார். கூட்டுப்பண்ணை முறையில் விவசாயிகளிடமிருந்து விளைப்பொருட்களை பலவந்தமாக எடுத்து லட்சக்கணக்கான பேர்களைக் கொன்று குவித்தார். இல்வாறு பரந்து விரிந்துச்சென்ற இந்த சாம்ராஜியம் 1991-ஆம் ஆண்டு ஒரு முடிவுக்கு வந்தது. கம்யூனிசம் உடைந்தது. கஜகிஸ்தான், உஸ்பெக்கிஸ்தான், தாஜிஸ்தான், உக்ரைன், லிதுவேனியா, அஸர்பைஜான், எஸ்டோனியா, போன்ற 15 சுதந்திரக் குடியரசு நாடுகள் சுதந்திரப் பிரகடனம் செய்து தனி குடியரசை அமைத்துக் கொண்டன. நாட்டில் இருந்த ஆயிரக்கணக்கான ஸ்டாலினின் சிலைகள் அடித்து நொறுக்கப்பட்டன. தங்கள் 70 ஆண்டு காலத்தில் பிடித்த அனைத்து நாடுகளும் குறுகிய காலத்தில் கையை விட்டு சென்றதை அவர்களினால் பார்த்துக் கொண்டுதான் இருக்க முடிந்தது. கட்டி ஆண்டவர்கள் கையைக் கட்டிக் கொண்டு இருப்பதைத் தவிர வேறொன்றும் செய்யும் ஆற்றல் அவர்கள் பெற்றிருக்கவில்லை. நிச்சயமாக இதிலிருந்து கிடைக்கப்பெறும் பாடங்கள் ஏராளம்.


இந்திய தேசத்தை ஆட்சி செய்தவர்களின் நிலை

ஆசியாவின் துணைக்கண்டம் என்று அழைக்கப்டும் நம் இந்திய தேசத்தை எடுத்துக்கொள்வோம். எத்தனை பேரரசுகள் எத்தனை வம்சங்கள் கூறு போட்டு இதை ஆட்சி செய்தன. இருப்பினும் அனைத்தும் ஒரு காலக்கட்டத்தில் ஒளிர்ந்து பின்னர் எரி நட்சத்திரங்களைப் போன்று மின்னி மறைந்த வரலாறுகள் பாடங்கள் நிறைந்த அனுபவப் புத்தகங்கள். குப்தர்கள் வம்சம், மௌரிய வம்சம், இராஜ புத்திரர்கள், அடிமை வம்சம், சாலுக்கிய வம்சம், கில்ஜி வம்சம், முகலாயப் பேரரசு, விஜய நகரப் பேரரசு, ஹைதராபாத் நிஜாம்கள், ஆங்கிலேயர்கள், போர்ச்சிக்கீசியர்கள், தட்சுக்காரர்கள், பிரஞ்சுகாரர்கள், போன்ற எண்ணற்ற வர்க்கத்தினர் ஆட்சி செய்து முடிவெய்திச் சென்றனர். இத்தகையவர்களின் நிலைமையை சற்றே ஆராய்ந்து பார்ப்போமேயானால் நமக்கு அல்லாஹ்வுடைய வசனம் ஞாபகத்திற்கு வருகின்றது.

وَتِلْكَ الْأَيَّامُ نُدَاوِلُهَا بَيْنَ النَّاسِ

காலங்களை மனிதர்களிடையே நாமே மாறி மாறி வரச் செய்கின்றோம் (அல்குர்ஆன் 3:140)


அல்லாஹ் காலச்சக்கரத்தை மாறி மாறி சுழல விடுகின்றான். கீழ் இருப்பவர்கள் மேல் வருவதும் மேலே இருப்பவர்கள் கீழ் நிலை அடைவதும் அல்லாஹ்வின் நியதி என்பதை அறிந்துக்கொள்ள முடிகின்றது.


இந்தியத் திருநாட்டைப் பலரும் ஆண்டிருப்பினும் கூட முகலாயர்கள் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியவர்கள் என்பதாலும் நீண்ட காலம் ஆண்ட அவர்கள் அடைந்த கடை நிலையை மட்டும் இந்த கட்டுரையின் நோக்கத்தை கருத்தில் கொண்டு குறிப்பிடுவது பொருத்தமாக இருக்கும். 1525-ஆம் ஆண்டு பாபர் பானிபட்டில் இப்ராஹிம் லோடியை தோற்கடித்ததன் மூலம் முகலாயப் பேரரசை நிறுவுகின்றார். 5 ஆண்டுகளில் பாபர் மரணித்ததன் பின்னர் வரிசையாக ஹூமாயூன், அக்பர், ஜஹாங்கீர், ஷாஜஹான், ஒளரங்கசிப் என்று வம்சா வழியாக பரந்து விரிந்த இந்த இராஜியம் 1857-ஆம் ஆண்டு மன்னர் இருக்கும் அரண்மனை மாத்திரமே மிஞ்சிய நிலையில் அதை சுத்தம் செய்யக்கூட ஆள் இல்லாத ஒரு நிலையை இரண்டாம் பகதூர்ஷா காலத்தில் அடைந்தது. மன்னர் ஆங்கிலேயர்களினால் கைது செய்யப்பட்டு இரங்கூன் சிறையிலடைக்கப்பட்ட போது முகலாய சாம்ராஜியம் ஒரு சூனியமான நிலைக்கு வந்தது என்பதை மிக அண்மைக்கால வரலாற்றில் பதிவாகியுள்ள ஒரு சான்றாகும். இந்த நிலை இன்று உலகத்தை அச்சுறுத்திக் கொண்டிருக்கும் இந்த அமெரிக்காவிற்கு நிகழாது என்று திட்டவட்டமாக கூற இயலுமா?.

 

பதினைந்தாம் நூற்றாண்டின் இறுதியில் கொலம்பஸினால் அமெரிக்கா கண்டு பிடிக்கப்பட்ட ஆரம்பக் காலங்களில் மிக அதிக அளவிற்கு புதிய அமெரிக்க கண்டத்தில் காலனிகளை அமைத்த நாடுகள் பிரிட்டன் ஸ்பெயின், பிரான்சு, போர்ச்சுக்கல் மற்றும் நெதர்லாந்து(தச்சு) ஆகும். இன்று இவைகளின் ஆதிக்கத்தின் கீழ் ஒரு மாகாணம் கூட இல்லை என்பது குறிப்பிடத் தக்கதாகும். தென் அமெரிக்க நாடுகளில் மிக அதிகமாக ஸ்பானிஷ் மொழி பேசி வருவது ஸ்பெயின் ஆட்சியின் தாக்கம்தான்.


சில காலக்கட்டங்களில் ஒன்றின் கை ஓங்கியிருப்பதும் சில காலக்கட்டங்களில் பலவீனப்பட்டிருப்பதும் உலக இயல்பாய் இருந்து வந்துள்ளதை வறலாற்றின் மூலம் அறிய முடிகின்றது. உலகை ஆண்டுச் சென்ற இராஜியங்களின் வீழ்ச்சியிலிருந்து இந்த அமெரிக்கா படிப்பினைப் பெற்றுள்ளதா என்றுச் சொன்னால் நிச்சயமாக இல்லை என்றுதான் சொல்ல வேண்டும். ஏனென்றுச் சொன்னால் அவை இன்று உலக அரங்கில் அரங்கேற்றம் செய்யும் எல்லா நடவடிக்கையும் நம்மை இந்த முடிவின் பக்கம் இட்டுச் செல்லுகின்றது. கடந்த நுற்றாண்டில் அமெரிக்காவின் செயல்பாடுகள் அனைத்தும் அதற்கு உலக அரங்கில் அதன் மீது ஒரு அதிருப்தியையும் கெட்ட பெயரையும் உண்டாக்கி இருப்பதை எவராலும் மறுக்க இயலாது. தேவையின்றி ஒரு நாட்டின் உள் விவகாரங்களில் தலையிடுவதும் தங்கள் அடிவருடிகளைக் கொண்டு தங்களுக்கு சாதகமான முடிவுகளை ஆதாயப்படுத்திக் கொள்வதும் பல நாடுகளின் விவகாரங்களில் கண்டு வருகின்றோம். உலக நாடுகளின் ஒற்றுமையைக் குலைக்கும் நடவடிக்கையிலும் முக்கியமாக பிரித்தாளும் சூழ்ச்சியை நடைமுறைப் படுத்துவதிலும் முன்னனி வகிப்பதை காண முடிகின்றது.

 

எதிரியினுடைய எதிரி நண்பன் என்னும் சாணக்கிய மூளையுடன் தன் எதிரி நாடுகளின் உள் நாட்டு விவகாரங்களில் தலையிட்டு அந்த நாட்டின் ஆட்சியாளர்களின் அதிருப்தியாளர்களை ஊக்குவித்து, அவர்களுக்கு ஆதரவையும் ஆயுதங்களையும் அளித்து ஆட்சி கவிழ்ப்பையும் இன்னபிற குழப்பங்களையும் பதட்ட நிலையையும் ஏற்படுத்தி தங்கள் ஆயுத வியாபாரத்திற்கு தளம் அமைத்துக் கொள்ளுகின்றனர். உதாரணமாக ஈரானை அது எதிர்த்தபோது ஈராக்கிற்கு ஆயுத உதவி செய்தது. ஈராக் தன் கையை உதறி சென்ற போது அதன் மீது நியாயமான எந்த காரணமும் இன்றி போர் தொடுத்து தங்கள் கைக் கூலி படையை ஆட்சியில் அமர்த்தியுள்ளது. ரஷ்யாவை எதிர்க்க ஆப்கானிஸ்தானுக்கு உதவி செய்த இந்த அமெரிக்கா, இன்று ஆப்கானிஸ்தானை பிடித்து தங்கள் அடிவருடிகளிடம் கொடுத்துள்ளதே இதற்கானச் சான்றுகளாகும். உலக நாடுகளின் ஒற்றுமையில் தன்னுடைய வீழ்ச்சி இருப்பதை உணர்ந்துக்கொண்ட இவர்கள் உலக ஒற்றுமையை குலைப்பதை முன்னிட்டே தங்கள் காய்களை நகர்த்தி வருகின்றனர்.


தனக்கு சிம்ம சொப்பனமாக விளங்கி வந்த ரஷ்யாவை விழ்த்தி வெற்றி கொண்ட இவர்களுக்கு தற்போதைய சீனாவின் முன்னேற்றம் கண்ணை உறுத்துகிறது. சீனாவிடமிருந்து தனி நாடு கேட்டு வரும் தைவானுக்கு இது குரல் கொடுப்பது சீனாவின் குரல் வளையை நெறிக்க முற்படும் ஒரு முயற்சிதான். திபெத் விவகாரங்களிலும் தலையிடுவதும் இந்த அடிப்படையில்தான். காஷ்மீர் விவகாரங்களிலும் பாலஸ்தீன விஷயத்திலும் இருட்டை வேடம் போடுவதும் இஸ்ரேலை தன் 51 வது மாகாணமாக எண்ணி அதன் வரம்பு மீறலுக்கு துணை நிற்பதும் அதன் உலக சமாதானப் போக்கை(?) வெளிப்படுத்துகின்றது. இன்று அறிவியல் முன்னேற்றத்தின் உச்சியில் இருப்பதாக மார்த்தட்டிக் கொள்ளும் இவர்கள் மனித நேயத்தை பற்றி மற்றெவரும் பேசாத அளவிற்கு பேசிவருவதை கண்டும் கேட்டும் வருகின்றோம். மனித நேயத்தை குழித் தோண்டி புதைக்கும் தொழிலில் முழுமூச்சாய் ஈடுபட்டு வரும் இவர்கள் தங்கள் சுய நலத்திற்காக அரங்கேற்றும் அட்டுழியங்களை இந்த உலகம் ஒரு விபரீதமான மௌனத்துடன் பார்த்து கொண்டுதான் இருக்கின்றது.

 
அமெரிக்காவை எதிர்க்க கூடிய நாடுகளின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருவதும் உலக நாடுகள் அனைத்தும் தங்கள் நாடுகளின் பாதுகாப்பிற்காக அதிக அளவில் இராணுவ செலவுகள் செய்வதும் பெரும்பாலான நாடுகள் அணு ஆயுத தொழில் நுட்பத்தை பெற்று வருவதும் எதிர் வரும் காலங்களில் இவற்றின் ஆதிக்கத்தை குறைக்க வரும் சம்பவமாகவே கருதப்படுகின்றது. அணு ஆயுதம் இல்லாத உலகை உருவாக்குவோம் என்று இவர்கள் வாய் அளவில் சொல்வார்கள். மற்ற எந்த ஒரு நாட்டிடமும் இல்லாத அளவிற்கு அணு ஆயுதத்தை உற்பத்தி செய்வார்கள். இதை உணர்ந்துக் கொண்ட உலக நாடுகள் இதன் கூப்பாட்டை ஒரு பொருட்டாகவே கொள்ளாமல் அணு ஆயுதங்களை குவித்து வைத்துள்ளன. இதற்கு எதிராக பாதிக்கப்பட்ட நாடுகள் அணித் திரளும் நாள் அமெரிக்காவிற்கு முற்றுப் புள்ளி வைக்கும் நாளாகவே அமையும் என்பதில் சந்தேகமில்லை. இதனால் பாதிக்கப்பட்ட நாடுகள், முதுகில் குத்துப்பட்டு சாவதை விடுத்து மார்பில் குத்துப்பட்டு சாவதை தேர்தெடுத்தால் இதன் நிலை என்னவாகும்.


உலக மக்களின் மீதோ மனித உரிமைகள் குறித்தோ இதற்கு எந்த அக்கறையும் கிடையாது என்பதும் சுய நலம் மட்டும் தான் இதன் குறிக்கோள் என்பதும் நிதர்சனமாக வெளிப்படுத்தும் செயல்பாடுகள் உலக நாடுகளை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளன. பூமியின் வெப்ப நிலையை அதிகரிக்கச் செய்யும் கார்பன் டை ஆக்சைடுடைய உற்பத்தியை குறைத்து ஓசோன் படலத்தில் ஓட்டை விழுவதை தடுக்க வேண்டும் என்பதே உலக சுற்றுப் புற சூழல் அமைப்பின் திட்டமாகும். இவர்கள் கார்பன் வாயுவின் உற்பத்தியை உலக நாடுகள் அனைத்தையும் விட அதிக உற்பத்தி செய்கின்றார்கள். இதிலிருந்தும் நாம் இவர்களின் மனித உரிமைப் போக்கை புரிந்துக் கொள்ள முடியும். ஐக்கிய நாடுகள் சபையில் உலக அமைதியை முன்னிட்டோ வரம்பு மீறல் சம்பவங்களை எதிர்த்தோ தீர்மானங்களை கொண்டு வந்தால் அதை தன் ரத்து அதிகாரத்தின் மூலம் நிறைவேற்ற விடாமல் முட்டுக் கட்டை போடுவதால் உலக நாடுகளின் எதிர்ப்புக் குரலை எதிர் கொள்ள வேண்டிய பாதகமான சூழ்நிலையை எட்டியுள்ளது.

 

கல் நெஞ்சம் படைத்த இவர்கள் ஏழை நாடுகளின் வறுமையை சாதகமாக பயன்படுத்தி மனிதர்களுக்கு மிக மிக தீங்கிழைக்கக் கூடிய கதிரியக்கம் நிறைந்த அணு உலைக் கழிவுகளை அவர்களின் நாடுகளில் புதைக்க சொல்லுவார்கள். ஏனென்றால் பரப்பளவில் பரந்து விரிந்த அமெரிக்காவில் இடம் பற்றாக்குறையா காரணம்? இல்லை இவர்கள் மட்டும் தான் வாழப் பிறந்தவர்களாம். இவர்கள் இன்று பெற்றுள்ள பொருளாதார வசதிகளும் இவர்களின் ஆட்டத்திற்கு ஒத்து ஊதுகின்றன. பொருளாதார வசதிகளைக் கொண்டும் ஆயுத பலத்தை கொண்டும் எதையும் சாதிக்க முடியும் என்ற இறுமாந்துப் போய் இருக்கும் இவர்களைப் போன்றோரின் நிலைக் குறித்து இறைமறை பின் வருமாறு கூறுகின்றது.


أَلَمْ يَرَوْا كَمْ أَهْلَكْنَا مِنْ قَبْلِهِمْ مِنْ قَرْنٍ مَكَّنَّاهُمْ فِي الْأَرْضِ مَا لَمْ نُمَكِّنْ لَكُمْ وَأَرْسَلْنَا السَّمَاءَ عَلَيْهِمْ مِدْرَارًا وَجَعَلْنَا الْأَنْهَارَ تَجْرِي مِنْ تَحْتِهِمْ فَأَهْلَكْنَاهُمْ بِذُنُوبِهِمْ وَأَنشَأْنَا مِنْ بَعْدِهِمْ قَرْنًا آخَرِينَ

 

இவர்களுக்கு முன் எத்தனையோ தலை முறையினரை அழித்திருக்றோம் என்று இவர்கள் அறியவில்லையா? உங்களுக்கு செய்துத் தராத எத்தனையோ வசதிகளை அவர்களுக்கு செய்து கொடுத்திருந்தோம். அவர்கள் மீது வானத்தை தொடர்ந்து பொழியச் செய்திருந்தோம். அவர்களுக்கு கீழ் ஆறுகளை ஓடச் செய்தோம். அவர்களின் பாவங்களின் காரணமாக அவர்களை அழித்தோம். அவர்களுத்குப் பின்னர் வேறு தலைமுறையினரை உருவாக்குவோம். (அல்குர்ஆன் 6:6)

 

எதிர் வரும் காலங்களில் அமெரிக்காவின் ஆதிக்கத்தை மேலும் குறைக்கும் பாதகமான வேறு சில அம்சங்களும் வரலாற்று ரீதியான பலவீனங்களும் எதிர்நோக்கி இருக்கின்றன.


அமெரிக்காவில் 50 மாகாணங்கள் உள்ளன. இவை பல காலக்கட்டங்களில் ஒன்றன் பின் ஒன்றாக அமெரிக்காவுடன் இணைக்கப்பட்டன. மெக்ஸிகோ யுத்தத்தின் மூலம் மிகப்பெரிய நிலப்பரப்பை பெற்றது. ஐம்பது மாகாணங்களிலும் மிகப்பெரிய மாகாணமான அலாஸ்காவை 1867ம் ஆண்டு ரஷ்யாவிடமிருந்தும், புளோரிடா மாகாணத்தை ஸ்பெயினிடமிருந்தும், லிதுவேனியாவை பிரான்சிடமிருந்தும் வாங்கியது. 1776-ஆம் ஆண்டு காலனி ஆதிக்கத்திற்கு எதிராக ஏற்பட்ட மிகப்பெரிய புரட்சியின் மூலம் ஒவ்வொரு மாகாணமும் காலனி ஆதிக்கத்திலிருந்து விடுபட்டு ஐக்கிய அமெரிக்கா உருவாக ஆரம்பித்தது. ஜார்ஜியா அரசியல் அமைப்பில் முதலாவது மாகாணமாக ஒப்புக்கொள்ளப்பட்டு 1788-ல் 7-வது மாகாணமாக மாரிலேந்தும் 11-வது மாகாணமாக நியூயார்க்கும் 1889-ஆம் ஆண்டு 42-வது மாகாணமாக வாஷிங்டனும் 46-வது மாகாணமாக ஓக்லகாமாவும் 1912-ஆம் ஆண்டு 47-வது மாகாணமாக நியுமெக்ஸிகோவும் கடைசியாக 50-வது மாகாணமாக 1950ம் ஆண்டு ஹவாய் தீவையும் தன்னுடன் இணைத்துக் கொண்டது. இன்று இந்த 50 மாகாணங்கள் ஒருங்கினைந்து அமெரிக்காவாக இருப்பினும் கூட இவை ஒவ்வொன்றும் கொடி, சின்னம், அரசு விலங்கு, அரசு பறவை போன்ற ஒவ்வொன்றிலும் வேறுபட்டு விளங்குகின்றது.


இவ்வாறு பல காலக்கட்டங்களில் இணைந்த வேறுப்பட்ட இனங்களை மற்றும் தன்மைகளை உள்ளடக்கிய இந்த ஐக்கிய அமெரிக்கா உடைந்து பலக் கூறுகளாக மாறும் அபாயம் அதன் கழுத்திலே தொங்கிக் கொண்டுதான் இருக்கின்றது. தற்போது ஒரு ஆதிக்க சக்தியாக இருக்கக் கூடியதால் அதனுடன் ஒன்றுபட்டு இருக்கும் இவைகள் பிரிட்டனைப் போன்று பல் பிடுங்கப்பட்டு விட்டால் அயர்லாந்து, ஸ்காட்லாந்து, வேல்ஸ் போன்று தனி நாடு கேட்கும் நிலை இந்த 50 மாகாணங்களுக்கு ஏற்படக் கூடிய சாத்தியக் கூறுகள் மிகுதியாகவே இருக்கின்றன.


قُلْ هُوَ الْقَادِرُ عَلَى أَنْ يَبْعَثَ عَلَيْكُمْ عَذَابًا مِنْ فَوْقِكُمْ أَوْ مِنْ تَحْتِ أَرْجُلِكُمْ أَوْ يَلْبِسَكُمْ شِيَعًا وَيُذِيقَ بَعْضَكُمْ بَأْسَ بَعْضٍ انظُرْ كَيْفَ نُصَرِّفُ الْآيَاتِ لَعَلَّهُمْ يَفْقَهُونَ


(நபியே நீர் அவர்களிடம்)கூறுவீராக! உங்க(ள் தலைக)ளுக்கு மேலிருந்துதோ அல்லது உங்கள் பாதங்களுக்கு கீழிருந்தோ உங்களுக்கு வேதனையை அனுப்புவதற்கும் அல்லது உங்களைப் பல பிரிவுகளாக்கி (உங்களுக்கு மத்தியில் நீங்கள் போர் சிறைச்சேதம் ஆகியவற்றை செய்து) உங்கள் சிலரின் கொடுமையை(க் கொண்டு)மற்ற சிலரைச் சுவைக்க செய்வதற்கும் அவன் சக்தியுடையவன். அவர்கள் விளங்கிக் கொள்வதற்காக நம்முடைய வசனங்களை எவ்வாறு பல வகையிலும் திருப்பித் திருப்பி கூறுகின்றோம் என்று நீர் கவனிப்பீராக. (அல்குர்ஆன் 6:65)


இவர்களின் ஆதிக்க சக்தியை கொண்டு இவர்கள் நாடுவதெல்லாம் இவர்களினால் அடைந்து விட முடிகின்றதா என்றால் அதுவும் இல்லை என்றுதான் சொல்ல வேண்டும். இறைவனின் சோதனைகளும் அவ்வப்போது இவர்களை தொட்டு விட்டுதான் செல்லுகின்றது. இவர்கள் உலக நாடுகளின் மீது குண்டு மழை பொழிந்து அப்பாவி மக்களை கொன்று குவிக்கின்றார்கள். ஆனால் இவர்களுக்கோ இயற்கை பேரழிவு அவ்வப்போது பெருத்த சேதத்தை ஏற்படுத்தி சென்று கொண்டுதான் இருக்கின்றது. உலகில் மிக அதிக வேகத்தில் வீசக்கூடிய புயல் காற்று சைக்ளோன் ஆகும் (மணிக்கு வேகம் 120 கி.மீ மேல்). இது 1995-ஆம் ஆண்டு புளோரிடா மாகாணத்தில் ஏற்படுத்திய பேரழிவு நூற்றுக் கணக்கான அணு குண்டுகளை வெடிக்கச் செய்தால் எவ்வளவு பாதிப்புகளை ஏற்படுத்துமோ அவ்வளவு பாதிப்புகளை ஏற்படுத்திச் சென்றது. அல்லாஹ் யானைப் படையை மென்று உமிழ்ந்த கூலங்களைப் போல் ஆக்கியதாக சொல்கின்றானே அதுபோல.
 


புளோரிடாவை சைக்ளோன் தன் கோரப் பிடியில் வீழ்த்திப் போட்ட ஒரு மாதிரிப் புகைப் படம்


2000-வது ஆண்டில் கலிபோர்னியாவில் ஏற்பட்ட காட்டு தீ அதன் தட்ப வெப்ப நிலையில் பெருத்த மாறுதலை ஏற்படக்கூடிய அளவிற்கு பாதிப்பை ஏற்படுத்திச் சென்றது.
 


கலிபோர்னியா காட்டுத் தீ


செவ்வாய் கிரகத்திற்கு அனுப்பிய விண்கலம் எங்கு சென்று மறைந்தது என்று தெரியாமல் திதைத்துப் போனார்கள். 1986-ஆம் ஆண்டு ஜனவரி 28-ஆம் தேதி சேலஞ்சர் விண்கலத்தை ஏவினார்கள். 73 வினாடிகளில் தங்கள் கண் முன்னே வெடித்து சிதறி 7 பேர் மாண்டு போனதை கண்டு அதிர்ந்துப் போனார்கள். 2003-ஆம் ஆண்டு பிப்ரவரி 1-ஆம் தேதி கொலம்பியா விண்கலம் வெடித்து கல்பனா சாவ்லா உட்பட 7 பேர் சிதறிய விதம் குறித்து விக்கித்துப் போனார்கள். கண்டம் விட்டு கண்டம் தாண்டி இலக்கை தாக்கக் கூடிய ஏவுகணைகள் குறித்தவறியதை கண்டு மனம் நொந்துப் போன நிகழ்வுகள் தொடர்ந்துக் கொண்டுதான் இருக்கின்றன.

 


சாலஞ்சர் விண்கலம் வெடித்து சிதறியக் காட்சி

 



கொலம்பியா விண்கலம் வெடித்துச் சிதறியக் காட்சி


நபிகள் நாயகம்(ஸல்) அவர்கள் சொன்னார்கள். மறுமை நாளுக்கு முன்பாக இந்க உலகில் பேசக்கூடிய அளவிற்கான பெரிய பூகம்பங்கள் மூன்று நிகழும். அதில் ஒன்று மேலை நாடுகளிலிலும் மற்றொன்று கீழை நாடுகளிலும் மூன்றாவது பூகம்பம் மக்காவிற்கு அருகிலும் நடக்கும் என்றுச் சொன்னார்கள். ரசூல்(ஸல்) அவர்களின் முன்னறிவிப்புகள் ஒன்றன் பின் ஒன்றாக நிறைவேறி வருவதை இவ்வுலகம் கண்டு வரும் இவ்வேளையில் ரசூல்(ஸல்) குறிப்பிட்டுள்ள இந்த பூகம்பம் இன்னும் இந்த உலகில் எங்கும் நிகழவில்லை என்பதும் அது நிகழ்ந்தால் பல நாடுகளும் அல்லது சில கண்டங்களும் சுவடின்றி மறையக் கூடிய சூழ்நிலை ஏற்படும் என்பதையும் அதில் இந்த பயங்கரவாத அமெரிக்கா இடம் பெற்று மண்ணோடு மண்ணாகி போகுமா? என்பதைப்பற்றிய அறிவு நிச்சயமாக அல்லாஹ்விடம்தான் உள்ளது.

 
وَعِنْدَهُ مَفَاتِحُ الْغَيْبِ لَا يَعْلَمُهَا إِلَّا هُوَ وَيَعْلَمُ مَا فِي الْبَرِّ وَالْبَحْرِ وَمَا تَسْقُطُ مِنْ وَرَقَةٍ إِلَّا يَعْلَمُهَا وَلَا حَبَّةٍ فِي ظُلُمَاتِ الْأَرْضِ وَلَا رَطْبٍ وَلَا يَابِسٍ إِلَّا فِي كِتَابٍ مُبِينٍ


மறைவானவற்றின் திறவு கோல்கள் அவனிடமே உள்ளன. அவனைத் தவிர யாரும் அதை அறிய மாட்டார்கள். அவன் தரையிலும் கடலிலும் உள்ளவற்றை அறிவான். ஓர் இலை கீழே விழுந்தாலும் அவன் அதை அறியாமல் இருப்பதில்லை. பூமியின் இருள்களில் உள்ள விதையானாலும் ஈரமானதோ காய்ந்ததோ ஆனாலும் தெளிவான ஏட்டில் இல்லாமல் இல்லை. (அல்குர்ஆன் 06:59)

 

إِنَّمَا مَثَلُ الْحَيَاةِ الدُّنْيَا كَمَاءٍ أَنْزَلْنَاهُ مِنْ السَّمَاءِ فَاخْتَلَطَ بِهِ نَبَاتُ الْأَرْضِ مِمَّا يَأْكُلُ النَّاسُ وَالْأَنْعَامُ حَتَّى إِذَا أَخَذَتْ الْأَرْضُ زُخْرُفَهَا وَازَّيَّنَتْ وَظَنَّ أَهْلُهَا أَنَّهُمْ قَادِرُونَ عَلَيْهَا أَتَاهَا أَمْرُنَا لَيْلًا أَوْ نَهَارًا فَجَعَلْنَاهَا حَصِيدًا كَأَنْ لَمْ تَغْنَ بِالْأَمْسِ كَذَلِكَ نُفَصِّلُ الْآيَاتِ لِقَوْمٍ يَتَفَكَّرُونَ


இவ்வுலக வாழ்க்கைக்கு உதாரணம் வானிலிருந்து நாம் இறக்கிய தண்ணீரைப் போன்றது. மனிதர்களும், கால்நடைகளும், உண்ணுகிற பூமியின் தாவரங்களுடன் அத்தண்ணீர் கலக்கிறது. முடிவில் பூமி அலங்காரம் பெற்று கவர்ச்சியாக ஆகிறது. அதன் உரிமையாளர்கள் அதன் மீது தனக்கு சத்தி இருப்பதாக நினைக்கும் போது நமது கட்டளை இரவிலோ பகலிலோ அதற்கு(பூமிக்கு) கிடைக்கின்றது. உடனே நேற்று அவ்விடத்தில் இல்லாதிருந்தது போல் அறுக்கப்பட்டதாக அதை ஆக்கினோம். சிந்திக்கின்ற சமுதாயத்திற்கு இவ்வாறே சான்றுகளைத் தெளிவுபடுத்துகிறோம். (அல்குர்ஆன் 10:24)


இவர்கள் எவ்வளவு காலம் தான் இந்த வேலைகளை வெற்றிகரமாக செய்து கொண்டிருப்பார்கள். இதற்கு ஒரு முடிவு கிடையாதா? வறலாற்றை ஆய்வு செய்தவர்கள் கண்ட உண்மையின் அடிப்படையில் அழிவை நோக்கி செல்லும் இவர்கள் அடிப்பட்டு வீழ்வதெப்போது? இது பாதிக்கப்பட்டவர்களின் உள்ளத்தில் உளவியல் ரீதியாக எழக்கூடிய கேள்விதான். ஒவ்வொரு விசைக்கும் சமமான எதிர்விசை இருக்கின்றது என்பது நியூட்டனின் மூன்றாவது இயக்க விதியாகும். இது பௌதீகத்திற்கு மாத்திரம் அல்ல மனித வாழ்விற்கும் பொருந்த கூடிய விதியாகதான் அமைந்துள்ளது.
சென்ற நூற்றாண்டு முழுவதும் எண்ணற்ற வரம்பு மீறல்களிலும் அநியாயமான படை எடுப்புகளினாலும் இந்த பூமியில் இரத்தக் கறையைப் பூசி தங்கள் விசையை பிரயோகம் செய்துவிட்ட இவர்கள் அதன் எதிர் விசைக்காக (பிரதி பலன்களுக்காக) காத்திருக்கின்றார்கள். இந்த உலகமும் காத்திருக்கின்றது. நாமும் காத்திருக்கின்றோம்.


فَهَلْ يَنْتَظِرُونَ إِلَّا مِثْلَ أَيَّامِ الَّذِينَ خَلَوْا مِنْ قَبْلِهِمْ قُلْ فَانْتَظِرُوا إِنِّي مَعَكُمْ مِنْ الْمُنْتَظِرِينَ


அவர்களுக்கு முன் சென்றவர்களுக்கு ஏற்பட்ட துன்பங்களைப் போன்றதைத் தவிர (வேறு எதையும்) எதிர் பார்க்கின்றார்களா? எதிர் பாருங்கள்! நானும் உங்களுடன் எதிர் பார்க்கின்றேன் என்று (நபியே) நீர் கூறுவீராக! (அல்குர்ஆன் 10:102)