ஆட்சியாளர்கள் சிந்திக்கட்டும்
பாளை. இனியவன் |
அன்று முதல் இன்று வரை பொதுமக்களது பணத்தை சுருட்டுதல், அரசியல்
சாசனத்தின் ஓட்டைகளைப் பயன்படுத்தி சிறுபான்மையினரின் உரிமைகளில்
கைவைத்தல், ஆட்சி அதிகாரத்தைப் பயன்படுத்தி நாட்டு மக்களை ஏமாற்றிப்
பணம் சம்பாதித்தல் இன்னும் உங்கள் பாதங்களுக்குச் செருப்பாக இருந்து
தொண்டாற்றுவோம் என்று போலி வார்த்தைகளைக் கூறி ஓட்டுக்களுக்காக மக்களை
ஓட்டாண்டியாக்குதல் என்று ஆட்சியாளர்களாலும் அதிகார வர்க்கத்தினாலும்
பொதுமக்கள் தொடர்ந்து ஏமாற்றப்பட்டுக் கொண்டிருக்கிறார்கள். அன்று
ஹர்ஷத் மேத்தா என்றால் இன்று டெல்கி என்று ஆட்கள்தான் மாறுகிறார்களே
தவிர மோசடிக் கலாச்சாரம் ஒழிந்தபாடில்லை.
தனி மனிதர்கள் தமது மூளையைப் பயன்படுத்தி மோசடி செய்கிறார்கள் என்றால்
ஆட்சியதிகாரம் படைத்தவர்கள் தமது அதிகாரம் மற்றும் செல்வாக்கினைப்
பயன்படுத்தி ஏமாற்றுகிறார்கள்.
மக்களிடம் நாம் இதுபற்றி பேசினால் இவங்களை எல்லாம் திருத்தவே முடியாது,
என்று சாதாரணமாகப் பேசிக்கொள்ளும் அளவுக்கு ஏமாற்றுதல், மோசடி செய்தல்
என்பன மக்கள் மத்தியில் பழகிப்போன ஒன்றாக மாறிவிட்டது.
ஹர்ஷத் மேத்தா என்ற பங்குச் சந்தை முகவர் 6000 கோடிக்கு மேல்
வங்கிப்பணத்தை மோசடி செய்தார் என்றதும் அது மக்கள் மத்தியில்
மிகப்பெரும் செய்தியாகப் பேசப்பட்டு தூக்குத்தண்டனை கிடைத்துவிடும்
என்றுகூட சிலர் நினைத்தனர். ஆனால் இன்றுவரை அவர் அரசாங்க செலவில்
சிறையில் பாதுகாப்பாக உள்ளார். ஆக மோசடி என்பது தொடர்ந்து
நடைபெற்றாலும் அது அடுத்த சில நாட்களுக்குள் டீக்கடைகளில்
பேசிக்கொள்ளும் ஒரு செய்தி என்ற அளவிலேயே நின்றுவிடுகிறது. இதற்கு
மக்கள் மத்தியில் எந்தவிதமான எதிர் விளைவுகளும் ஏற்படுவதில்லை. எந்த
அளவிற்கு அவர்கள் பழகிப் போய்விட்டார்கள் என்பதைக் கண்டுகொள்ள கடந்த
சில ஆண்டுகளாய் நடந்துவரும் ஊழல் மற்றும் மோசடிகளை சற்று உற்று
நோக்குவோம்.
குறுக்கு வழியில் சம்பாதித்து கோடீஸ்வரராக வேண்டும் என ஆசைப்படுபவர்கள்
உடனே ஆரம்பிக்கும் தொழில் பைனான்ஸ் கம்பெனிதான். கடந்த சில ஆண்டுகளில்
இந்த ஃபைனான்ஸ் கம்பெனிகளால் ஏமாற்றப்பட்டவர்கள் ஏராளம். கடந்த 1996
லிருந்து 2000ம் வரை நிதி நிறுவனங்கள் மோசடி செய்த பணம் மட்டும் 1800
கோடி ரூபாய். கிட்டத்தட்ட 3 லட்சம் பேர் தங்கள் முதலீடுகளை இழந்தனர்.
குறிப்பாக பல முதியோர்கள் தங்கள் பிள்ளைகளின் மேல் நம்பிக்கை இழந்து
தங்கள் சொத்துகள் மற்றும் ஓய்வூதியம் (Pசழஎனைநவெ குரனெ) களை போலியான
வட்டி மாயையில் சிக்கி தங்கள் எதிர்காலத்தையே இழந்தனர். எத்தனையோ பேர்
தங்கள் எதிர்கால திட்டங்கள் மற்றும் பெண்மக்களின் திருமணச்செலவுக்காக
வைத்திருந்த நகைகளையும், பணங்களையும் இழந்து நிற்கின்றனர். இந்த இழப்பை
தாங்கமுடியாமல் 30 பேர் தற்கொலை செய்து கொண்டனர். பார்ப்பதற்கு
நம்பிக்கையான வசதியான அலுவலகங்கள், கவர்ச்சியான ஹை-டெக் விளம்பரங்கள்,
மங்களகரமான பெயர்கள் இதுதான் மக்களை வீழ்த்தும் சூட்சுமம். ஸ்நேகம்,
அனுபவ், சுதர்சன் சிட் பண்ட் போன்ற பெரிய நிறுவனங்கள் சுருட்டிய பணம்
மட்டும் 1000 கோடிக்குமேல் கடந்த நான்கு ஆண்டுகளில் நடந்த தொடர்
மோசடிகளில் பாடம் கற்று மக்கள் விழிப்புணர்வு அடைந்துவிட்டார்களா?
என்றால் இல்லை. ஏமாறுபவர்கள் இருக்கும்வரை ஏமாற்றுபவர்கள்
வாழ்ந்துகொண்டுதான் இருப்பார்கள்.
தமிழ்நாடு காவல்துறை தலைமை வெயியிட்டுள்ள அறிக்கையின் படி 2000 முதல்
2004 வரை 1748 கோடியே 43 லட்சம் இந்திய ரூபாய்கள் மோசடி
செய்யப்பட்டுள்ளன. இது குறித்து கிட்டத்தட்ட 1000 வழக்குகள்
பதிவுசெய்யப்பட்டுள்ளன. சமீபகாலமாக பத்திரிக்கைகளில் எழுதப்பட்டுவரும்
போலிமுத்திரைத்தாள் மோசடியில் மட்டும் 38,000 கோடி ரூபாய் கர்நாடகம்,
தமிழ்நாடு குஜராத், மற்றும் மஹாராஹ்டிர மாநிலங்களில் மோசடி
செய்யப்பட்டுள்ளது. இது சம்பந்தமாக சி.பி.ஐ கைதுசெய்துள்ள பிரதான
குற்றவாளிகள் அப்துல் கரீம் டேல்கி மற்றும் சென்னை மாநகர முன்னாள்
டி.ஐ.ஜி முகம்மது அலி போன்றவர்களும் இத்தகைய மாபாதக மோசடிகளில்
ஈடுபட்டிருப்பதுதான் வேதனையான செய்தி. இதுசம்பந்தமாக பலரிடம் நடத்திய
சோதனையில் 162 கோடிமதிப்புள்ள போலி முத்திரைத்தாள்கள் கைப்பற்றப்பட்டு
நிஜாமுதீன் என்பவரையும் சி.பி.சி.ஐ.டி போலீஸார் கைது செய்தனர்.
மற்றவர்களுக்கு முன்மாதிரியாக திகழவேண்டிய முஸ்லிம்கள் இத்தகைய மாபாதக
செயல்களை செய்யத் துணிந்ததேன்??
இப்படி மக்களை ஏமாற்றுவோர் ஒருபுறம் ஏமாற்றிக்கொண்டிருக்க அரசாங்கம்
என்ன செய்துகொண்டிருக்கிறது? காவல்துறையினர் ஏன் இவர்களை அலட்சியமாக
விட்டார்கள்? என்று அப்பாவி பொதுமக்கள் கேள்வி எழுப்பலாம்! காரணம்
இப்படி மோசடியில் சிக்கிக்கொண்டவர்கள் எளிதில் ஜாமீனில் வெளிவந்து
விடுகின்றர். பின் நல்ல(?) வழக்கறிஞர்களை வைத்து காலாகாலமாக வழக்குகளை
நடத்திக்கொண்டிருக்கின்றனர். மற்றொரு காரணம் ஆமை வேகத்தில் நடைபோடும்
நீதித்துறை. உதாரணமாக ஆர்.பி ஃபைனான்ஸ் என்ற நிறுவனம் 2000ம் ஆண்டு
ஜுலை மாதம் ஒரு லட்சம் பேரிடம் சுமார் 180 கோடி ரூபாயை மோசடி செய்ததாக
குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யப்பட்டாலும் விசாரணை தொடங்கியது
2004ம் வருடம்தான். வழக்குகளை விசாரிக்காமல் 4 ஆண்டுகள் வழக்கு
நிலுவையில் இருந்தது. அப்படியே வழக்குகள் விசாரிக்கப்பட்டாலும்
சட்டத்தின் ஓட்டைகளைப் பயன்படுத்தி குற்றவாளிகள் பெரும்
தண்டனைகளிலிருந்து தப்பிவிடுகின்றனர்.
2000 மற்றும் 2001ம் ஆண்டுகளில் பல கோடி ரூபாய் சுருட்டி மாட்டிக்கொண்ட
போலிமுத்திரைத்தாள் வழக்கும் கூட இந்த நிலையில்தான் உள்ளது. இன்றுவரை
வழக்குகள் நடந்துகொண்டுதான் இருக்கின்றன. சில ஆண்டுகளுக்குமுன் எல்வின்
பேங்கர்ஸ் என்ற நிறுவனம் 27 லட்சம் மோசடி செய்தது. இதில் ஒரே
குடும்பத்தைச் சேர்ந்த எல்வின் ஏசுதாஸ், அந்தோணி, அற்புதம், டேவிட்
ராஜா மற்றும் செல்வி என்ற ஐந்து பேர் கைது செய்யப்பட்டு வெற்றிகரமாக
தீர்ப்பும் வழங்கப்பட்டது. தண்டனை என்ன தெரியுமா? 3 ஆண்டுகள்
சிறைத்தண்டனை (அதாவது பாதுகாப்பான இடம் மற்றும் உணவு, உடை வசதிகள்
இலவசம்) மற்றும் குற்றவாளிகள் ஒவ்வொறுவருக்கும் தலா 27,000 ரூபாய்
அபராதம் இதில் இன்னும் ஓர் வேடிக்கை என்னவென்றால் இதே நபர்கள் மீது 97
லட்சம் ரூபாய் மோசடி செய்ததாக இன்னும் ஓர் வழக்கு நாகர்கோவில்
மாஜிஸ்திரேட்டில் நிலுவையிலுள்ளது. இதுதான் இந்தியாவின் யதார்த்த
நிலைமை.
இப்படி ஏற்படும் மோசடிக்காரர்களை குளிர்விடச்செய்த இத்தகைய இலேசான
தண்டனைகளும் ஒர் முக்கியக் காரணம். மோசடி செய்யப்பட்டவர்களுக்கு நீதி
வழங்குவோம். குற்றவாளிகளை கூண்டில் ஏற்றுவோம் என்று அரசியல்
தலைவர்களும், அதிகார வர்க்கத்தினரும் பாராளுமன்றத்தில் கர்சித்துக்
கொண்டிருப்பது ஒருபுறம் இருந்தாலும் நாட்டை ஆளுவோரான இவர்கள் நேர்மையாக
நடந்து கொண்டார்களா? என்றால் நிச்சயமாக இல்லை. எதிர்கட்சிகள் ஆளும்
கட்சியினரை ஊழல் குற்றம் சாட்டுவது பின் எதிர்கட்சி ஆட்சியில்
அமர்ந்ததும் மீண்டும் அவர்களே அந்தத் தவறைச் செய்வதும்
வாடிக்கையாகிவிட்டது.
இத்தகைய ஊழல் சாம்ராஜ்யத்தில் ஜாம்பவான்கள் யார் என்று வெளிநாட்டு
நிறுவனம் ஒன்று நடத்திய உலகளாவிய தரவரிசையின்படி இந்தியாவிற்கு 3ஆவது
இடம் கிடைத்திருக்கிறது.
இது சம்மந்தமாக தினமணி இதழில் சகோதரர் சுகதேவ் எழுதிய ஊழல் உலகம் என்ற
கட்டுரையின் சிலவரிகளை மேற்கோளிடுவது பொருத்தமாக இருக்கும்.
ஷ… டிரான்ஸ்பரன்ஸி இண்டர்நேஷனல் என்ற சர்வதேச ஊழல் மதிப்பீட்டு அமைப்பு
கூறுகிறது.
ஐக்கிய நாடுகள் சபை டிசம்பர் 9-ம் தேதியை ஊழல் எதிர்ப்புத்தினமாக
கடைப்பிடிக்கிறது. இ;ந்த தினத்தை ஒட்டி மேற்கண்ட அமைப்பு ஊழலில் உலக
நாடுகளின் தரவரிசையை ஆராய்ந்து ஓர் அறிக்கையையும் வெளியிட்டிருக்கிறது.
உலக அளவில் அரசியல் கட்சிகள்தான் அதிக அளவில் ஊழல் புரிகின்றன என்பதைக்
கோடிட்டுக் காட்டியுள்ள அந்த அமைப்பு, இந்த வரிசையில் இந்தியா
மூன்றாவது இடத்தில் இருப்பதாகச் சுட்டிக்காட்டியிருக்கிறது.
மொத்தம் 62 நாடுகளில் பல்வேறு தரப்பைச் சேர்ந்த 50,000 பேரிடம்
திரட்டப்பட்ட விவரங்களின் அடிப்படையில் ஊழல் மிகுந்துள்ள நாடுகளை அந்த
அமைப்பு வரிசைப்படுத்தியிருக்கிறது. இதில் ஈகுவேட்டர், அர்ஜெண்டினா
ஆகியவற்றிற்கு அடுத்தபடியாக ஊழல் நிறைந்த அரசியல் கட்சிகளைக் கொண்ட
நாடாக இந்தியா இடம் பெற்றிருக்கிறது. பல்வேறு அளவுகோல்களின்
அடிப்படையில் 1 முதல் 5 புள்ளிகள் வரையிலான மதிப்பீட்டு முறையை அது
கடைபிடித்திருக்கிறது. அதாவது ஒரு புள்ளிக்கு நெருக்கமாக இருந்தால்
ஊழல் குறைவு ஒரு புள்ளியிலிருந்து இரண்டு, மூன்று, நான்கு மற்றும்
ஐந்து புள்ளியை நோக்கிச் செல்லச் செல்ல ஊழல் அதிகம் என்று பொருள்.
அரசியல் கட்சிகள் ஊழலில் இந்தியா 4.6 புள்ளிகளைப் பெற்றிருக்கிறது.
பரிபூரண ஊழலுக்கு இந்தியா நெருக்கமாக வந்துவிட்டது. அதாவது ஐந்து
புள்ளி என்பது தொட்டுவிடும் தூரம்தான்!
உலக அளவில் அரசியல் கட்சிகளுக்கு அடுத்து ஊழல் நிறைந்த துறைகளின்
வரிசையில் நாடாளுமன்றம், காவல் மற்றும் நீதித் துறைகள் இடம்
பெற்றிருக்கின்றன. இந்தியாவின் ஊழல் படிநிலையும் கிட்டத்தட்ட இதே
வரிசையில் தொடர்கிறது. ஒரு சின்ன மாற்றம் மூன்றாவது
இடத்திற்குப்பதிலாகக் காவல்துறை நான்காவது இடத்துக்கு அதாவது நீதித்
துறைக்குப் பின்னால் வருகிறது. இந்த இறக்கத்தில் காவல்துறையை சற்றே
பெருமைப்பட்டுக் கொள்ளலாம்.
அரசியல் கட்சிகளிலிருந்து மத அமைப்புகள் வரை 15 துறைகள் அல்லது
பிரிவுகள் இந்த ஊழல் பட்டியலில் வரிசைப்படுத்தப்பட்டுள்ளன. இந்தியாவின்
புள்ளிகள் பெரும்பாலும் மூன்றுக்கும் நான்குக்கும் மேலாகத்தான்
இருக்கின்றன. மீடியாவும் இந்தப் பட்டியலுக்கு விதிவிலக்கல்ல.
மீடியாவில் இந்தியாவின் ஊழல் 2.7 புள்ளிகள். அதாவது இந்திய
ஊடகங்களிலும் கணிசமாக ஊழல் நிறைந்திருக்கிறது என்று அர்த்தம். 2
புள்ளிகளுக்குக் குறைவாக இந்தியா பெற்றிருக்கும் ஒரே துறை ராணுவம்
மட்டுமே. கெடுபிடிகள் அதிகம் இருந்தால்தான் நியாயம் ஓரளவுக்கேனும்
காப்பாற்றப்படும் போலும். மத அமைப்புகளின் ஊழல் கணக்கு 2.7 புள்ளி
தன்னார்வ சேவை அமைப்புகள் என்ற பெயரில் புற்றீசல் போல பெருகியிருக்கும்
என்.ஜி.ஓக்கள் வட்டாரத்தில்கூட ஊழலுக்குக் குறைவில்லை. 2.7 புள்ளி.
நல்ல சேவை!.
டிரான்ஸ்பரன்ஸி இண்டர்நேஷனல் நடத்திய இந்த ஊழல் கருத்துக்கணிப்பில்
பங்கேற்றவர்களில் 45 சதவிகிதம் பேர் அடுத்த மூன்றாண்டுகளில் ஊழல்
இன்னும் பலமடங்கு அதிகரிக்கும் என்று கவலையுடன்
தெரிவித்திருக்கிறார்கள்.
அரசியல் கட்சிகளின் ஊழலைப் பொறுத்தவரையில் வளரும் நாடுகள், வளர்ந்த
நாடுகள் என்று எந்தப் பாரபட்சமும் இல்லை. வளம் நிறைந்த நாடுகளான
அமெரிக்காவும் பிரிட்டனும்கூட அரசியல் கட்சிகளின் ஊழலில் நான்கு
புள்ளிகளுக்கு நெருக்கமாக இருக்கின்றன. இந்த விஷயத்தில் இரண்டு
புள்ளிகளுக்குக் குறைவாக அதாவது அரசியல் கட்சிகளின் ஊழல் மிகக் குறைவாக
இருக்கும் ஒரே நாடு சிங்கப்பூர் மட்டுமே. அங்கே சட்டங்கள் கடுமையாக
அமுல்படுத்தப்படுகின்றன என்பதை நாம் கவனத்தில் கொள்ள வேண்டும். மற்றபடி
ஒட்டுமொத்தமாக எடுத்துக்கொண்டால் வளர்ச்சி பெற்ற நாடுகளைவிட வளரும்
நாடுகளிலேயே ஊழல் அதிகம். வறுமை, கல்வியறிவின்மை, வேலையின்மை உள்ளிட்ட
பல்வேறு பிரச்சினைகளால் ஏற்கனவே திணறிக் கொண்டிருக்கும் இந்த நாடுகளின்
வளர்ச்சிக்கு ஊழல் மிகப் பெரும் தடையாக இருக்கிறது.
அரசியல் கட்சிகள்தான் ஊழலின் பயிற்சி; களமாக இருப்பதாக டிரான்ஸ்பரன்ஸி
இண்டர்நேஷனல் ஆய்வு சுட்டிக்காட்டுகிறது. இங்கே ஆளாளுக்குத் தனிக்கட்சி
திட்டத்துடன் வலம் வருவதற்கான காரணம் இப்போது புரிகிறது. விவரமான
பார்ட்டிகள்!
லஞ்சம் கொடுத்தாவது காரியத்தை முடிப்பவர்களைத்தான் சாமர்த்தியசாலி,
திறமைசாலி என்றெல்லாம் பட்டம் சூட்டி இந்தச் சமூகம் கொண்டாடுகிறது.
நேர்மையான வழியில் சென்று காரியத்தைச் சாதிக்க முடியாமல் போனால் சமூகக்
கண்ணோட்டத்தில் அந்த மனிதன் தோற்றுப் போனவனாக ஆகிவிடுகிறான்.
பெரும்பாலானோர் தோற்க விரும்புவதில்லை.
சட்ட விரோதமாகக் குவித்த பணத்தில் குறுகிய காலத்தில் கோடீஸ்வரர்களாகிக்
கூச்சமில்லாமல் பலர் வலம் வருகிறார்கள். பொதுமதிப்பீட்டில் அவர்கள்
ஜெயித்துக் காட்டியவர்கள்! அவர்களிடையே குறைந்தபட்சம் குற்ற உணர்வைக்
கூட ஏற்படுத்த இயலாத சரித்திர சமூகத்தில் நாம் வாழ்ந்து
கொண்டிருக்கிறோம்.
(நன்றி : தினமணி, டிசம்பர் 12, 2004)
எனவே ஆட்சியாளர்களும், அதிகாரவர்க்கத்தினரும் சிந்திக்கட்டும். மறுமையை
நம்பியிருக்கின்ற முஸ்லிம்கள் இத்தகைய மாபாதகச் செயல்களிலிருந்து
முற்றாக விலகிக் கொள்ள வேண்டும்.
எவரேனும் மோசம் செய்வாராயின், அவர் மோசம் செய்ததை இறுதி நாளில் கொண்டு
வருவார், அவ்வேளையில் ஒவ்வோர் ஆத்மாவுக்கும், அது சம்பாதித்த(தற்குரிய)
பலனை(க் குறைவின்றிக்) கொடுக்கப்படும். இன்னும், அவர்கள் எவ்வகையிலும்
அநியாயம் செய்யப்பட மாட்டார்கள்
(அல்-குர்ஆன், 3:161)
மேலும் ஆட்சியாளர்களைப் பார்த்து நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள் : ஒரு
அடியானுக்கு அல்லாஹ் ஆட்சி அதிகாரத்தை கொடுத்திருக்கிறான் அவன்
அவர்களது நலனை காக்கவில்லை என்றால் அவர் சுவனத்தின் வாடையைக் கூட
நுகரமாட்டார். (ஆதாரம் : புகாரி)
எனவே பொதுமக்கள் சிந்திக்கட்டும். அவர்கள் சுருட்டிக்கொண்டே
செல்லட்டும் என்று மக்கள் தங்களது வாயில் பூட்டுக்களிட்டவாறு
இருந்துவிடக்கூடாது. தலைவர்களை தேர்ந்தெடுக்கும் ஜனநாயக உரிமை
கொடுக்கப்பட்டுள்ள நாம் ஆட்டு மந்தைகளாக இருந்து விடாமல் தேர்தல்
களங்களில் நமது நிலைப்பாட்டை மாற்றிக் கொள்ள வேண்டும். மோசடி
செய்பவர்கள் உடனுக்குடன் கடுமையாக தண்டிக்கப்படவேண்டும் என்று
மக்களும், அரசும் உறுதியுடன் இருக்க வேண்டும்.
ஊழல் செய்யும் ஆட்சியாளர்களை பாரபட்சமின்றி பதவியிலிருந்து
அப்புறப்படுத்திட வாக்குகளை அழிக்காது முறையாகப் பயன்படுத்தவேண்டும்.
தலைவர்களை கண்மூடித்தனமாக பின்பற்றுவதை விட்டொழிப்போம். சினிமாவில்
காணும் இந்தியன் தாத்தாவை நிஜவாழ்வில் தேடி கால் தளர்ந்து களைப்படைவதை
விட்டுவிட்டு ஆட்சியாளர்கள் மற்றும் அதிகார வர்க்கத்தினர் மற்றும்
மோசடிப் பேர்வளிகளுக்கு எதிராய் ஜனநாயக முறையில் போராடுவோம். இது
மக்கள் பணத்தை சுருண்டுவோருக்கு பாடமாக அமையட்டும். இன்ஷாஅல்லாஹ்.
|