Index |Subscribe mailing list | Help | E-mail us

 

 

மாற்றாரின் அரசியலும், முஸ்லீம்களும்

அக்பர் பாட்சா

 

பகுதி-1
"முஸ்லீம்களின் ஒரு தலைமுறை அழிக்கப் பட்ட பிறகுதான் இந்துக்களான நாங்கள், எதை புரிந்துக் கொள்ள வேண்டுமோ அதை புரிந்துக் கொள்ளப் போகின்றோம்". "இந்திய முஸ்லீம்களின் எதிர்காலம் எப்படி இருக்கும்?" என்ற ஒரு கேள்விக்கு, ஒரு நாடறிந்த சமூக அறிவியலர், மனோதத்துவ நிபுணர் சொன்ன மறுமொழிதான் இது. (அவரின் பெயர் இங்கே குறிப்பிட விரும்பவில்லை).

அந்த நிபுணரின் கருத்து கொஞ்சம் அதீதமாக தோன்றினாலும், பொதுவாகவே அவர் இப்படி எல்லாம் பேசக்கூடியவர் அல்ல என்பதால் அவருடைய பதிலை முற்றிலுமாக ஒதுக்கிவிட முடியவில்லை. காரணம் தற்போது இந்திய முஸ்லீம்கள் அப்படி ஒரு எதிர்பாரத சூழலில் சிக்கி நிற்பது உண்மையே. மாற்றார்கள், முஸ்லீம்களை மாற்றார்களாக்கி வைத்திருப்பதும் அதற்கு ஒருசில முஸ்லீம்கள் துணை இருப்பதும்தான் இந்த அவலச் சூழலுக்கு காரணம். அப்படி முஸ்லீம்கள் மாற்றார்களாகவே இருக்க வேண்டியது மற்றவர்களுக்கு அவசியத் தேவையாகவும் இருக்கின்றது.

முஸ்லீம்கள் ஒரு இக்கட்டான காலச்சூழலை கடந்து கொண்டிருக்கிறர்கள் என்பதில் எந்தவித சந்தேகமும் இல்லை. உலகின் எல்லா பாகங்களிலும், முஸ்லீம்கள் பெரும் துன்பத்திற்க்கு ஆளாகி வருகின்றார்கள்.

பெரும்பான்மையினராக இருந்தாலும் சரி அல்லது சிறுபான்மையினராக இருந்தாலும் முஸ்லீம்கள் உள்ளும் புறத்திலும் விமர்சனங்களினாலும் அல்லது விஷமத்தனமான பிரச்சாரங்களினாலும் பாதிக்கப்பட்டு வருகின்றனர். பொருளாதார மற்றும் உயிர் சேதங்களைப் பற்றி சொல்ல வேண்டியதே இல்லை.

ஒருசிலர் இதை தவறாக புரிந்துக் கொண்டு இஸ்லாம் ஒரு கடினமான சூழலை சந்தித்துக் கொண்டிருக்கிறது என்று பேசியும் எழுதியும் வருகிறார்கள், முஸ்லீம் எழுத்தாளர்களையும் சேர்த்துதான். இஸ்லாமிய மதத்தில் குறைபாடுகள் என்று விரிவான ஊடக விவாதங்கள் கூட நடந்து வருகின்றன. இன்னும் ஒரு சிலர் இஸ்லாத்தின் அடிப்படை நம்பிக்கையான குரானை, முஸ்லீம்களின் புனித மறையை மாற்றி அமைக்க ஆலோசனை தருகின்றனர். இதற்கு காரணமாக குரானில் உள்ள ஒருசில கருத்துக்கள் காலத்திற்கு முரன் பட்டதாகவும், வளர்ச்சி அடைந்த இந்த உலகச் சூழலில் அவைகள் ஒத்துப் போகாது என்றும் அறிவுரை கூறுகின்றனர். இன்னும் ஒரு சாரார், இஸ்லாத்தை அரசியல் இஸ்லாம், ஆன்மீக இஸ்லாம் என்று இரண்டாகப் பிரித்து முஸ்லீம்களை குறைந்தப் பட்சம் ஆன்மீக இஸ்லாத்தோடு நிறுத்திவைக்க வேண்டும் என்று விரும்புகின்றனர். குறை சொல்ல வேண்டும் என்ற ஒரே நோக்குடன் செய்யப்படும் விமர்சனங்களும், வசை மொழிகளும் இன்னும் இடையுறாமல் செய்யப்படும் பிர்ச்சார தாக்குதல்களும் தொடர்ந்து நடந்து வருகின்றன.

இது போன்ற பிரச்சாரங்களும், தாக்குதல்களும் முஸ்லீம்களுக்கு ஒன்றும் புதிதல்ல. இஸ்லாமிய வரலாற்றில் இதைவிட இன்னும் அதிகமாகவே காணப்படுகிறது. நபிகள் நாயகம் இந்த இஸ்லாமிய மார்க்கத்தை மாற்றார்களிடம் எடுத்து வைக்கத் தொடங்கிய முதல் நாளிலிருந்து இன்று வரை இது தொடர்கிறது, இன்னும் இந்த உலகம் உள்ள வரை ஓயவும் போவதில்லை. ஆனால் முஸ்லீம்கள் அவ்வப்போது தங்களின் நிலையை ஆய்வு செய்ய வேண்டியதும், இப்படிப்பட்ட உண்மைக்கு புறம்பான பழிகளிலிருந்து தங்களை பாதுகாத்துக் கொள்ள வேண்டியதும் மிகவும் அவசியமாகிறது. அதேநேரம் இஸ்லாத்தையும் முஸ்லீம்களைப் பற்றிய மாற்றாரின் தவறான சிந்தனைகளையும் பார்வைகளையும் களைய வேண்டியது முஸ்லீம்களுக்கு கடமையாகிறது. மாற்றாரின் அரசியல் அரங்கில் பகடைக் காய்களாக உருட்டப் பட்டுக் கொண்டிருக்கும் இந்தச் சூழலில் முஸ்லீம்களின் செயல்பாடுகள் விவேகமுள்ளதாக இருக்கிறதா என்றால் மிகப் பெரிய கேள்விக் குறிதான் முன்னால் நிற்கிறது.

முஸ்லீம்கள் செய்வது எல்லாம் இஸ்லாம் இல்லை - இஸ்லாத்தில் சொல்லப் பட்டவைகள் அனைத்தையும் முஸ்லீம்கள் பின்பற்றுவதுமில்லை. இது எதார்த்த நிலை, ஆனால் முஸ்லீம்களின் ஒவ்வொரு செயலுக்குப் பின்னாலும், அவர்களுடைய மார்க்கம் அடையாளப் படுத்தப்படுவது வேறு எந்த மதத்தை சார்ந்தவர்களுக்கும் இல்லாத ஒரு நிலை. இந்த நிலைக்கு மிகப்பெரும் காரணம் முஸ்லீம்களே. தான் செய்கிற ஒவ்வொரு செயலுக்கும், குறிப்பாக தனது சொந்த விருப்பு வெறுப்புகளுக்கு உட்பட்டதாக இருக்கும் பட்சத்தில் மார்க்கத்தை காரணம் காட்டி நியாயப்படுத்த தொடங்கியதன் விளைவுதான் இது. மாற்றார்களுக்கு, குறிப்பாக முஸ்லீம்களையும், இஸ்லாத்தையும் குறை சொல்வதையே வேலையாகக் கொண்டவர்களுக்கு இப்படி மார்க்கத்தை அடையாளப் படுத்துவது இதனால் மிகவும் எளிதாகி விடுகிறது. இது ஒருபுறம் இருக்க முஸ்லீம்கள் எல்லாம் நம்மை போன்ற மனிதர்கள்தான், ஆனால் அவர்கள் பின்பற்றுகிற மார்க்கம்தான் அவர்களை அப்படியெல்லாம் செய்ய வைக்கிறதென்று இஸ்லாத்தையும் முஸ்லீம்களையும் பிரிக்கின்ற வேலையும் மும்முறமாக நடைபெறுகிறது. இது எப்படி இருக்கிறதென்றால், கணக்கில் விடை தவறாக இருப்பதற்க்கு காரணம் பார்முலாவை சரியாக பயன்படுத்தாமல் கணக்குப் பாடத்தையே தவறு என்று சொல்வது போல் இருக்கிறது.

இஸ்லாம் என்பது ஒரு முழுமையான வாழ்க்கைத் திட்டம். வாழ்வின் பெரும்பாலான பிரச்சினைகளுக்கு தகுந்த தீர்வை தன்னிடத்திலே கொண்டுள்ளது. முஸ்லீம்கள் அதில் தேர்ச்சி பெற வேண்டும். அதுதான் முஸ்லீம்களுக்கு கொடுக்கப்பட்ட சோதனை மற்றும் பரிட்சை எல்லாம். இஸ்லாம் ஒரு போதும் தன்னை பரிட்சித்து பார்க்க வேண்டிய அவசியம் இல்லை. முஸ்லீம்கள்தான் தன்னை அவ்வப்போது சரி செய்து கொள்ள வேண்டும். இஸ்லாம் இந்த உலக வாழ்க்கையில் சந்திக்கக் கூடிய பிரச்சினைகளுக்கு போதுமான வழிகாட்டுதல்களை குரான் மற்றும் முகம்மது நபி (சல்) அவர்களின் வழ்க்கை நடைமுறை மூலமாக கொடுத்திருக்கிறது. இந்த சூழலில் மாற்றாரை குறை கூறுவதற்கு முன்னால் முஸ்லீம்கள் தங்களை சுய சோதனை செய்து கொள்வதும் தாம் பயணம் செய்கிற பாதையை அறிந்து கொள்வதும் மிகவும் நல்லது.

தற்போது உலகில் மிக ஆர்வமாக ஊடகங்களில் விவாதிக்கப்படுவதும், சாமனிய மனிதர்களின் சராசரி சிந்தனைகளை கவர்ந்திருப்பதும் "பயங்கரவாதம்" என்கிற விஷயம்தான். இதையே தனது மிகப்பெரும் பிரச்சனையாக முன்னால் வைத்து உலகம் அனைத்தையும் தன்பால் கவர்ந்ததோடு மட்டுமல்லாமல் தனக்குத் தேவையானதை சாதூர்யமாக அடைந்து கொண்டுமிருக்கிறது அமேரிக்க அரசாங்கம். கடந்து மூன்று வருட காலமாக நடக்கக்கூடிய பயங்கரவாத்திற்க்கு எதிரான போர் வேறு எதற்கோ எதிராகவும் மற்றும் வேறு எதையோ பாதுகாக்கவும் நடைபெறுவது நன்றாக புரிய வரும்.

பயங்கரவாதத்தை ஒழிக்க பயங்கரவாதம்தான் சரி என்று தொடங்கிய இந்த யுத்தம் முள்ளை முள்ளால் எடுக்கிறேன் என்று தற்போது உடலே ரணகளமாகிக் கொண்டிருக்கிறது. பயங்கரவாத்தின் அன்னை தீவிரவாதம் என்றும், தீவிரவாதம் தோன்றியது அடிப்படைவாதத்தில் என்றும், அடிப்படைவாதத்தின் உயிர்நாடி இஸ்லாம் என்று அடையாளம் காட்டப்பட்டு நிற்கிறது இஸ்லாம். ஆக்ஸ்போர்டு ஆங்கில டிஷ்னரியில் கூட அடிப்படைவாதம் என்றால் மதத்தின் அடிப்படை அம்சங்களை முறையாக பின் பற்றுவது என்றும், அதற்கு பைபிளை காரணங் காட்டிவிட்டு, அடிப்படைவாதி என்றால் முஸ்லீம் என்று அடையாளப் படுத்துகிறது. அடிப்படைவாதி என்றால் ஒன்றும் அசிங்கமான வார்த்தை இல்லை, ஆனால், அப்படி ஒரு மாயை தோற்றுவிக்கப் பட்டுள்ளது. அறிவியலின் அடிப்படை தெரிந்தவனை, அதில் சிறப்பாக செய்பவனை விஞ்ஞானி என்று சிறப்பிக்கும் இந்த ஊடக உலகம், மதத்தின் அடிப்படை தெரிந்தவனை மனித நேயத்திற்க்கு எதிரானவனை போல் சித்தரிக்கிறது. சமீபத்தில் இந்தியாவையே கண்ணீர்விட வைத்த சுனாமி பேரழிவில் உடல் உருவம் பார்க்காமல், சாதி மதம் பாராமல் வேலை செய்ததில் முன்னிலை வகித்தவர்கள், அடிப்படைவாதிகள், மனித நேயத்திற்க்கு எதிரானவர்கள் என்று பறைசாற்றப்பட்ட TMMK, RSS என்ற மதவாத அமைப்புகள்தான்.

ஆனால் உலகம் முழுவதும் அடிப்படைவாதி, தீவிரவாதி இன்னும் பயங்கரவாதி என்றெல்லாம் அடையாளம் காட்டப்பட்டு நிற்பவர்கள் முஸ்லீம்களே. ஏன் இப்படி? எங்கிருந்து தொடங்கியது இந்த போராட்டம். சாமுவேல் ஹண்டிங்டன் சொன்ன "clash of civilization" தொடங்கிவிட்டதா? அல்லது பாரத முன்னாள் ஜனாதிபதி கே. ஆர். நாராயணன் சொன்னது போல் " நாகரீகங்கள் ஒரு காலத்திலும் மோதிக் கொள்வதில்லை, அவை எப்போதும் ஒன்றை ஒன்று உயர்விக்கவே செய்கின்றன. மோதிக்கொள்வதெல்லாம் காட்டு மிராண்டித் தனங்கள்தான்" என்றாரே அதுதான் தற்போது நிகழ்ந்து வருகிறதா?


பகுதி-2

அன்பிலும் அரவணைப்பிலும் இயக்கப்பட வேண்டிய இந்த உலகம், மாறாக வெறுப்பையும் எதிர்ப்பையும் அடிப்படையாகக் கொண்டு இயங்கிக் கொண்டிருக்கிறது. இன்றைய காலகட்டத்தில் துவேஷ உணர்வுகள் எப்போதும் இல்லாத அளவிற்கு மனித உறவுகளை சின்னா பின்னாமாக்கிக் கொண்டிருக்கிறது. ஆளுங்கட்சியை பிடிக்காததால்தான் எதிர்கட்சிக்கு ஓட்டு கிடைக்கிறதே தவிர எதிர்கட்சியின் மேல் இருக்கும் காதலினால் அல்ல. யாரையேனும் வெறுக்க வேண்டுமென்றால், அதற்கு ஒரு கூட்டமே கூடி ஆலோசனை வழங்க தயாராக இருக்கிறது. அன்பு, பரிவு, பாசம் என்று பேசினால் டிவி சீரியலில் கூட பார்ப்பதற்கு ரசிகர்கள் இல்லை. வெறுப்பின் அடிப்படையில் மனித உறவுகள் கூடுவதும் பிரிவதும் மனித இயல்பு. ஆனால் இந்த மனித இயல்பை, இயற்கை உந்துதலை தனிமனித அதிகாரத்தை தக்க வைத்துக் கொள்ளவும் அல்லது அதிகாரத்தை கைப்பற்றவும் அன்றைய மன்னர்கள் முதல் இன்றைய உலக அரசியல் வியாபாரிகள் வரை காலம் காலமாக பயன்படுத்தி வந்ததுதான் இந்த உலகின் துர்பாக்கிய நிலை.

இஸ்ரேலின் ஷரோனிலிருந்து, அமேரிக்காவின் புஷ் மற்றும் இந்தியாவின் அத்வானி வரை இந்த politics of hate அவர்களின் அரசியல் உயர்விற்காக மிக நன்றாக பயன்படுத்தப் பட்டுள்ளது. வெறுப்பின் அடிப்படையில் பல நாடுகளும் ஆட்சிகளும் உருவாகியிருப்பது தெள்ளத்தெளிவான உண்மை. இந்தியாவை பிடிக்காததால் பாகிஸ்தான் உருவானது. பாகிஸ்தானைப் பிடிக்காமல் பங்களாதேஷ் உருவானது. இப்படி எத்தனையோ வரலாறுகள் நம் முன்னால் உள்ளன. வரலாறு என்பது படிப்பினை பெறுவதற்கே ஒழிய, வெறும் படித்துவிட்டு மறக்கப் படுவதற்கல்ல. நாம் வரலாற்றை உதாசீனப் படுத்தும் போதெல்லாம், வரலாற்றில் செய்த தவறுகளை திரும்பவும் செய்ய வேண்டிய நிலை ஏற்படுகிறது.

Politics of hate தொடர்ந்து செயல்பட வேண்டுமென்றால் அதற்கு ஒரு பொதுவான இலக்கு நிர்ணயிக்கவேண்டும், அந்த இலக்கு யார் என்றோ அல்லது எது என்றோ அவ்வப்போது அடையாளம் காட்டப்படவேண்டும். அப்போதுதான் அரசியல் வியாபாரிகளின் சரக்கு ஒழுங்காக விலை போகும். இன்றைக்கு உலக அரங்கில் பொதுவான ஒரு இலக்காக அடையாளம் காட்டப்பட்டு நிற்பது இஸ்லாமும் முஸ்லீம்களும். அதற்கு மாற்றார்கள் சொல்லக்கூடிய அல்லது பயன் படுத்தக் கூடிய காரணங்களில் தலையாயது "பயங்கரவாதம்". இந்தப் பெயர்க் காரணம் சூழலுக்கு ஏற்றவாறு மாறிக் கொண்டே இருக்கும். இன்னும் சில வருடங்களில் மாற்றப்படும், அதற்கான அறிகுறிகள் இப்போதே வரத் தொடங்கிவிட்டன.

உலகின் எல்லா நாடுகளிலும் வெறுப்பிற்கும் மற்றும் தனக்குள்ளேயும் பிளவுபட்டு நிற்கக் கூடிய முஸ்லீம்களைப் பற்றி மாற்றாருக்கு என்ன போதிக்கப் பட்டதோ அல்லது போதிக்கப்படுகிறதொ அதை இங்கு வரலாற்றுப் பார்வையில் பார்ப்பது அவசியமாகிறது. காரணம் மாற்றாரின் தவறான புரிதலுக்கு இப்படிப்பட்ட போதனைகளே அடிப்படை காரணமாக அமைகிறது. முஸ்லீம்களின் தற்கால நிலையை இரண்டுவிதாமாக பிரித்துப் பார்க்க வேண்டியுள்ளது. ஒன்று இந்திய முஸ்லீம்களின் நிலை, இன்னொன்று உலக முஸ்லீம்களின் நிலை.

இந்திய முஸ்லீம்களின் அடையாளமும், உலக முஸ்லீம்களின் அடையாளமும் கிட்டத்தட்ட ஒன்றுபோல் தோன்றினாலும், இரண்டிற்கும் நிறைய வித்தியாசங்கள் உள்ளன. இந்திய முஸ்லீம்கள் தான் பிறந்த மண்ணின் கலாச்சாரங்களினாலும், சிந்தனை முறைகளினாலும் மிகவும் வேறுபட்டவர்கள். அவர்கள் முஸ்லீம்களாக மாறிய காலம் தொடங்கி, இன்று வரை குரான் மற்றும் நபிகளின் வாழ்க்கை முறையை மட்டுமே ஏற்றுக் கொண்டார்களே தவிர்த்து அரேபியர்களின் குணாதிசயங்களையோ அல்லது கலாச்சாரங்களையோ பின் பற்றுபவர்களாக இல்லை. அதே நேரம், இஸ்லாத்தின் வளர்ச்சிக்கு இந்திய முஸ்லீம்களின் பங்கு வேறு எந்த முஸ்லீம்களுக்கும் குறைவானதல்ல. அதனால்தான் உலக அரங்கில் முஸ்லிம் அறிஞர் பெருமக்களுக்கு உலக அளவில் பெரும் மதிப்பும் மரியாதையும் இருக்கிறது.

இந்திய முஸ்லீம்களைப் பற்றிய தவறான போதனைகளைப் முதலில் பார்த்துவிட்டு உலக முஸ்லீம்களைப் பற்றிய கண்ணோட்டத்திற்கு பிறகு செல்லலாம்.

மாற்றார்களில் பெரும் பகுதியினருக்கு சொல்லிக் கொடுக்கப் பட்டிருப்பதும் மற்றும் பிரச்சாரம் செய்யப்படுவதெல்லாம் முஸ்லீம்கள் அன்னியர்கள், அவர்கள் இந்த நாட்டை சூறையாட வந்தவர்கள், கத்தி முனையில் லட்சோப லட்ச இந்துக்களை முஸ்லீம்களாக மதம் மாற்றியவர்கள். ஓருவன் நான்கு பெண்களை திருமணம் செய்துகொண்டு நிறைய பிள்ளைகளை பெறுபவர்கள். முஸ்லீம் இனம் பெருக வேண்டுமென்பதெ அதன் நோக்கம். இதே நிலை தொடர்ந்தால், இன்னும் குறைந்த வருட காலத்தில் இந்தியாவில் இந்துக்கள் சிறுபான்மையினராகி, முஸ்லீம்கள் பெரும்பான்மையினராகிவிடுவார்கள். இந்திய மண்ணில் வாழ்ந்துகொண்டு, வேறு எந்த மண்ணையோ புனித இடமாக மதிக்கக் கூடியவர்கள் என்றெல்லாம் தூற்றப்படுகிறது.

இது போதததென்று, எழுதப்படாத சட்டங்கள், அறிவிக்கப்பாடத போலீஸ் நடவடிக்கைகள் என்று இன்னொருபுறம் முஸ்லீம்கள் சமூக எதிரிகளாக சித்தரிக்கப்பட்டார்கள். மாற்றார்களின் குற்றங்களை "a bad apple in basket" என்று தத்துவார்த்த விளக்கங்களுடன் வெளியிடும் பத்திரிக்கைகளும், அவர்கள் மதத்தலைவர்களாக இருந்த போதிலும், அவர்களின் குற்றங்களை தனிப்பட்ட மனிதரின் குற்றங்களாக பார்க்க வேண்டும் என்று அறிவுரை வழங்கும் மாற்றார்கள், அந்த குற்றவாளிகள் முஸ்லீம்களாக இருந்தால் மொத்த சமுதாயமே குற்றவாளியாக சித்தரிக்கப்பட்டன. அதற்கு முஸ்லீம்களின் குரானும், மத போதனைகளும் காரணம் என்று விளக்கமளிக்க ஏகப்பட்ட மாற்று மத முஸ்லீம் அறிஞர் பெருமக்கள்.

நமது முன்னாள் பிரதமர், பல முஸ்லீம் தலைவர்களால் மதிக்கப்பட்டவர், குறிப்பாக பத்வா ஸ்பெஷலிஸ்ட் டெல்லி ஷாஹி இமாம் அவர்களால் சமீபத்திய தேர்தல் நேரத்தில் புகழப்பட்டவர், காஷ்மீர் பிரச்சனையை தீர்த்துவைக்க தகுதி படைத்தவர் என்றெல்லாம் பேசப்பட்ட வாஜ்பாய் அவர்கள் இன்னும் ஒருபடி மேலே போய், முஸ்லீம்கள் எங்கெல்லாம் வாழ்கிறார்களோ அங்கெல்லாம் அவர்கள் பிரச்சனைகள் உருவாக்கக் கூடியவர்களாக இருக்கிறார்கள் என்று முழங்கினார்.

இந்தியா என்று அழகிய ஒரு பெயர் சூட்டி உலகிற்கு, ஒன்றுபட்ட ஒரு நிலத்தை, நாட்டை, அறிமுகப் படுத்திய 1000 வருடத்திற்கு மேற்பட்ட பாரம்பரியம் கொண்ட முஸ்லீம்கள் அன்னியர்களாக தினம் தினம் அடையாளம் காட்டப்பட்டு நிற்கிறார்கள்.

ஓவ்வொரு முஸ்லீமும், காலையில் எழுந்தது முதல், இரவில் தூங்கச் செல்லும்வரை தன்னை ஒரு இந்திய குடிமகன், தேச பக்தன் என்று மாற்றார்கள் எப்படியெல்லாம் விருப்பப் படுகிறார்களோ அப்படியெல்லாம் அவர்களை திருப்திபடுத்த வேண்டியுள்ளது. முஸ்லீமுடைய நிறுவனத்தில் முஸ்லீம்கள் மட்டும் வேலை பார்த்தால், அந்த நிறுவனத்தின் முதலாளி ஒரு இனவாதி. அதே நேரம் ஒரு மாற்றாருடைய நிறுவனத்தில் வெறும் மாற்றார்கள் மட்டும் வேலைப்பார்த்தால் அந்த முதலாளி ஒரு பொதுவாதி.

அன்றிலிருந்து இன்று வரை முஸ்லீமகளைப் பற்றி பேசப்படுகிற பொய் பிரச்சாரத்தில் மிக முக்கியமான காரணமாக சொல்லப்படுவது முஸ்லீம்கள் இந்த நாட்டை கொள்ளையடிக்க வந்தவர்கள் அல்லது அபகரிக்க வந்தவர்கள். Common Akbar, ஆப்கானிலிருந்தும், மத்திய ஆசியாவிலிருந்தும் வந்த மன்னர்கள் இந்த நாட்டை அபகரிக்க வந்ததல்லாமல் வேறு எதற்காக வந்தார்கள்? அவர்களுக்கு இங்கு என்ன வேலை என்று கேட்கலாம். ஆனால் வரலாறு என்ன சொல்கிறது, அன்றைக்கு வந்த முஸ்லீம் மன்னர்கள் எல்லோருக்குமே இங்கிருந்த ஆட்சியாளர்கள் இடம் கொடுத்த கதையை, ஆவனங்கள் மற்றும் சான்றுகளோடு விளக்குகின்றன. முஸ்லீம் ஆட்சியாளர்கள் இந்த மன்னில் நுழைந்தபோது, இது சிறு சிறு ராஜ்ஜியமாகத்தான் இருந்தது. இன்றைகு இந்தியா என்று சொல்லப்படுகிற இந்த நிலம் ஒன்றுபட்ட ஒரு நாடக இருந்தது இல்லை.

தன் எதிரியை வீழ்த்த எப்படி அண்டை நாட்டு படையை உதவிக்கு அழைப்பது அன்றைய மன்னர்களின் வழக்காமாக இருந்ததோ அதே காரணம்தான் ஆப்கானிய மற்றும் மத்திய ஆசிய முஸ்லீம் மன்னர்கள் பாரத மண்ணிற்கு வருவதற்கு காரணமாக இருந்தது. தன் எதிரி மன்னன் ஒரு இந்து என்று நன்றாக தெரிந்தும், அவனை ஒரு முஸ்லீம் மன்னனின் துணையுடன் தோற்கடிப்பதும் அல்லது அந்த நாட்டை அபகரித்துக் கொள்வதும் அன்றைக்கு மிகச் சாதாரணமாக நடைப் பெற்று வந்தது.

முகலாய மன்னர்களின் படைத்தலைவர்கள் எல்லோருமே, இந்து ராஜ புத்திரர்களே. போர் வீரர்களில் பெரும்பாலோரும் அவர்களே. அக்பர் மாற்றார்களை வெற்றி கொள்ளவேண்டுமென்று ஆலயங்களின் பூஜை செய்தவர்களில் பெரும்பாலோர் இந்து பண்டிதர்களே.

ஜெய்ப்பூர் மகாராஜாவின் மகளைத்தானே அக்பருக்கு மணமுடிக்கப்பட்டது. அதே ஜெய்ப்பூர் மகாராஜாதான் பல போர்களின் அக்பரின் படையை தலைமை தாங்கிச் சென்றது. அன்றைக்கு ஏன் மதம் அவர்களுக்கு மத்தியில் குறுக்கே நிற்கவில்லை? அக்பரின் மதம் என்ன என்று அன்றைக்கு எந்த ராஜ புத்திர மன்னனும் பார்க்கவில்லை, மாறாக அவனை வெறும் மன்னனாகத்தான் பார்த்தார்கள். (1)

அக்பருக்கு வேண்டுமானால் மதம் அவசியமில்லாமல் இருந்திருக்கலாம், காரணம் ஆட்சி அதிகாரம் வேண்டும். ஆனால் பாரதத்தின் புனிதம் பாழ்படுத்த காரணாமாயிருந்த பாபரின் மகன் ராஜ புத்திரர்களுக்கு ஏன் அவசியமானான்?. அன்றைய அதிகார அவசியங்களுக்கு தேவைப்படாத மதம், இன்றைக்கு ஏன் அவசியமாகிறது? யாருக்காக?

References:
(1). http://www.royalfamilyjaipur.com/j_rul.htm


பகுதி-3

ஆட்சி யாரிடம் இருக்கிறதோ அல்லது இருக்கப் போகிறதோ அவர்கள் பக்கம் சாய்வதும் அவர்களுக்கு துதி பாடுவதும் இந்த அரசியல் தரகர்களுக்கும், வியாபரிகளுக்கும் வெட்கமில்லாத விஷயங்கள்.

முகலாய மன்னர்களின் பலம் குறையத் தொடங்கியதும், இந்த அரசியல் தரகர்கள், மாற்றார்கள், தங்களின் நிலையை மாற்றிக் கொண்டு, வெள்ளை அரசிற்கு சிரம் தாழ்த்தி நின்றது வரலாற்று உண்மைகள். வெள்ளையர்களை முஸ்லீம் மன்னர்களும், ஏனைய குறுநில ஆட்சியாளர்களும் எதிர்த்த போது அரசியல் மாற்றார்கள் ஆங்கிலேய பிரபுக்களுடன் கைகோர்த்து செயல்பட ஆரம்பித்தனர். ஆங்கிலேய அரசின் நிர்வாக அமைப்புகளில் முழுமையாக இணைத்துக் கொண்டு தங்களை வெள்ளை ராஜ்யத்திற்கு வெண்சாமரம் வீசுபவர்களாக மாற்றிக் கொண்டார்கள்.

முடி இழந்த முஸ்லீம் மன்னர்கள் மற்றும் மதத் தலைவர்களின் கட்டளைக்கிணங்க முஸ்லீம்கள் வெள்ளையர்களை எதிர்த்து போராடிக் கொண்டிருக்கும் வேளையில், மறு பக்கத்தில் அரசியல் மாற்றார்கள், வெள்ளையர்களின் விசுவாசிகளாக மாறி நிர்வாக அமைப்புகளில் தங்களை உயர்த்திக் கொண்டார்கள். முடி இழந்த முஸ்லீம் மன்னர்கள், அவர்களை பின்பற்றும் முஸ்லீம் கூட்டம் ஒரு பக்கமும், இனி எதிர்காலம் வெள்ளை அரசிடம்தான் என்று அவர்கள் பக்கம் சாய்ந்த அரசியல் தரகர்கள் இன்னொரு பக்கமுமாக புதிய அரசியல் கூட்டனி அங்கே உருவாகியது. வெள்ளை சாம்ராஜ்யத்தின் பிரித்தாளும் சூழ்ச்சிக்கு அங்கே வித்திடப் பட்டது.

மத்திய கிழக்கு மற்றும் கிழக்கு ஈரோப்பிய நாடுகளில் முஸ்லீம்களின் எதிர்ப்பை சந்தித்து வந்த ஆங்கிலேய காலனி ஆதிக்கத்திற்கு இந்தியாவில் முஸ்லீம்களின் எதிர்ப்பை சமாளிப்பதற்கு இந்த மாற்றார்களின் அரசியல் நிலைப்பாடு மிகவும் உதவியாக அமைந்தது. முதன் முறையாக இந்துக்களும், முஸ்லீம்களும் மதத்தின் பெயராலும், இனத்தின் பெயராலும் பிரிய ஆரம்பித்தார்கள். அதற்கு வெள்ளை அரசாங்கம் எல்லாவிதமான வழி முறைகளையும் இரண்டு பிரிவினர்களுக்கும் அமைத்துக் கொடுத்தது. ஆயிரம் வருட காலங்கள் ஒன்றாக இருந்து, ஏழைகளின் இரத்தங்களில் மாளிகைகள் எழுப்பி அதில் இறுமாந்து வாழ்ந்து வந்த இந்து மற்றும் முஸ்லீம் அரசியல் வியாபாரிகள் வெள்ளையனின் பிடிக்குள் சிக்கியதும் ஒருவரை ஒருவர் சந்தேகிக்கத் தொடங்கினார்கள்.

அதுவரை ஒதுங்கியிருந்த மத உணர்வுகள் தட்டி எழுப்பப் பட்டன. ஆட்சி அதிகாரத்தை இழக்கும் போதுதான் வெறுப்புகளும், வேற்றுமைகளும் தலை தூக்க ஆரம்பிக்கும். கஷ்டம் வரும்போதுதான் கடவுள் நம்பிக்கை வலுப்பெறும். அரசியல் லாபங்களுக்காக முஸ்லீம் மன்னர்களுக்கு மதம் தேவைப்பட ஆரம்பித்தது. இதுநாள் வரை தனி மனித வாழ்வில் மட்டும் செயல் படுத்தப்பட்ட மதம், முடியிழந்த மன்னர்களால் பொதுப் பிரச்சனைகளுக்காகவும், சுதந்திர போராட்டத்திர்க்காகவும் பயன் படுத்தப்பட்டது. ஆங்கிலேய அரசாங்கத்தை எதிர்த்து முஸ்லீம் மத அறிஞர்கள் "புனிதப் போர்" (ஜிஹாத்) அறிவித்து மதத்தை சுதந்திரப் போராட்டத்திற்கு பயன்படுத்தினார்கள். கடவுளின் பெயராலும் மதத்தின் பெயராலும் மக்களை ஒன்று சேர்ப்பது இந்திய மன்னில் முஸ்லீம்கள் மத்தியில் அரங்கேர ஆரம்பித்தன. முஸ்லீம்களுடைய ஆட்சியிலும், அதற்கு முன்பு ஆண்டு வந்த இந்து மன்னர்களின் ஆட்சியிலும் ஒதுக்கி வைக்கப்பட்ட இந்திய வம்சாவளியினர், தாழ்த்தப் பட்டவர்கள், பிற்படுத்தப் பட்டவர்கள், அவர்கள் எந்த மதத்தை சார்ந்தவர்களாக இருந்தாலும், அவர்கள் எல்லோரும் இப்போது அரசியல் தரகர்களுக்கும், வியாபரிகளுக்கும் தேவைப்பட ஆரம்பித்தார்கள். பணபலமும் அதிகார பலமும் இருந்த போது தேவைப்படாத ஆள் பலம் தற்போது அரசியல் தரகர்களுக்கு அவசியமானது. வாழும்போது வேண்டாத மக்கள் கூட்டம், வீழும்போது தேவைப்பட்டது. அரசியல் வியாபாரிகளின் சுய விருப்ப வெறுப்புகளை பொது விருப்பு வெறுப்புகளாக மாற்றி பொதுமக்களிடத்தில் விற்கத் தொடங்கினர். அன்றைக்கு வாங்கத் தொடங்கிய நாம் இன்றுவரை வாங்கிக் கொண்டுதான் இருக்கிறோம்.

647 வருட காலங்கள் (1211 - 1858 AD) முஸ்லீம் மன்னர்களின் தலைநகராக இருந்த டெல்லி மாநகரத்தில் இன்று வரை முஸ்லீம்கள் சிறுபான்மையாக வாழக் கூடிய மக்கள் கூட்டம் தானே தவிர்த்து, ஆட்சி கையில் இருக்கிறதென்று எந்த மன்னனும் தன் ஆட்சியின் கீழ் இருந்த எந்த மக்களையும் அதிகாரத்தைப் பயன்படுத்தி மதம் மாற்றியதில்லை. காரணம் முஸ்லீம் மன்னர்கள் எவரும் மதத்தின் பெயர் சொல்லி ஆட்சி நடத்தவில்லை. முகலாய மன்னர்கள் காலத்தில் இந்தியாவில் இஸ்லாம் ஒருபோதும் அரசியல் மதமாக இருந்ததில்லை. எந்த முஸ்லீம் மன்னனும் முஸ்லீம்களின் மக்கட்தொகையை கணக்கில் கொள்ளவில்லை. தாழ்த்தப்பட்ட மற்றும் பிற்படுத்தப்பட்ட மக்களைப் பற்றி முஸ்லீம் மன்னர்கள் யாரும் கவலைப் பட்டதில்லை. மாற்றர்கள் கடவுள் பெயர் சொல்லி மக்களை பல சாதிகளாகவும் வர்க்கங்களாகவும் கூறுபோட்டு சீரழித்தப் போது இந்த முகலாய மன்னர்கள் உல்லாச வாழ்க்கையில் உலகத்தை மறந்து சொகுசாக வாழ்ந்து வந்தார்கள்.

வெள்ளையர்கள் இந்தியாவை ஆளத்தொடங்கும் வரை இந்துக்களும், முஸ்லீம்களும் மதத்தின் பெயரால் ஒருவரோடு ஒருவர் அடித்துக் கொண்டு சாகவில்லை. வெள்ளையர்கள் இந்தியாவிற்கு வருவதற்கு முன்னால் இந்தியர்களின் இரத்தத்தை இந்தியர்களே சிந்த வைத்தபோதும் இந்த அரசியல் வியாபரிகளுக்கு அது இந்தியாவாகவும் தெரியவில்லை. அதிகாரமும், பொருளாசையும்தான் காரணமாக இருந்தது. இன்றைக்கும் அதே நிலைதான். ஆனால் காரணம்தான் வேறு. மதத்தையும் இனத்தையும் காரணம் காட்டி, முஸ்லீம்களை அன்னியர்கள் என்று சித்தரிக்கப்பட்டு இந்தியர்களின் இரத்தங்கள் இந்தியர்களால் சிந்தப்படுகிறது.

"அந்நியன்" என்ற சொல் கேட்பதற்கும் படிப்பதற்கும் ஒரு சாதாரண சொல்லாகவும், மிகச் சாதாரண அர்த்தம் தரக்கூடியதாகத்தான் தெரியும். ஆனால் அதை முஸ்லீம்களுக்கு எதிராக பயன் படுத்தும் போது அதன் அர்த்தம் சாமானிய இந்துக்களை, குறிப்பாக பொருளாதாரத்தில் பிற்படுத்தப் பட்டவர்களை மூளைச்சலவை செய்வதற்கு மாற்றார்கள் செய்த மற்றுமொரு சாதுர்யமான முயற்சி. இந்திய முஸ்லீம்கள் ஒன்றும், பாபருக்கும், லோடிக்கும் பிறந்த மக்கள் கூட்டமல்ல. முஸ்லீம்களில் பெரும்போலோர் ஏதோ ஒரு காலத்தில் இந்துக்களாகவும், ஆதிவாசிகளாகவும் இன்னும் தாழ்த்தப்பட்ட மக்களாக இருந்து மதம் மாறியவர்கள்தான். ஆனால் அவர்களை அந்நியர்கள் என்று அடையாளப் படுத்தினால்தான் குஜராத்தில் நடத்தியதைப் போன்ற இனப் படுகொலைகள் செய்து ஆட்சியை தக்க வைத்துக் கொள்ள முடியும். அசோக் சிங்கால் போன்றோர்கள் இதை ஒரு "வெற்றிகரமான சோதனை" என்று பெருமைபட்டுக் கொள்ளமுடியும்.

மராட்டிய மன்னன் சிவாஜியை எதிர்த்து போரிட்ட ஓளரங்கசீப்பின் படையில் அதிகமான போர் வீரர்கள் மாரட்டாக்கள்தான். வெள்ளையனுக்கு எதிராக 1857ல் படை திரட்டி போர் தொடுத்த பகதூர் ஷா ஜாபரின் பேரப்பிள்ளைகளின் தலைகளை வெட்டி பரிசளித்த அந்த வெள்ளைப் படையின் வீரர்கள் சீக்கியர்களும் மராட்டக்களுமே. அப்போது வாழ்ந்த அந்த மக்களெல்லாம் என்ன மத நம்பிக்கையோ அல்லது இறை நம்பிக்கையோ இல்லாத மக்காளாகவா வாழ்ந்தார்கள்? அவர்களில் பெரும்பாலோர் இன்றைய மக்களைவிட அதிகமான கடவுள் நம்பிக்கை கொண்டவர்களாகத்தான் இருந்தார்கள். முஸ்லீம்களுடன் சேர்ந்து போரிடும்போது அந்த மாற்றார்களுக்கு முஸ்லீம்கள் அந்நியர்களாக தெரியாமல் போனது எப்படி? மதத்தின் பெயர் சொல்லி அவர்கள் ஏன் பிரியவில்லை? அல்லது ஆங்கிலேயப் படையுடன் சேர்ந்து இந்தியர்களை இந்தியர்களே கொன்று குவித்த போது அந்த ஆங்கிலேயர்கள் அந்நியர்களாக தெரியாமல் போனது எப்படி?

யாருடைய கையில் அதிகாரம் இருக்கிறதோ அவர்கள் சொல்வதே வேதம் என்கிற நிலைக்கு இந்த உலகம் அதிகார வர்க்கத்தின் காலடியில் அடிமைப்பட்டு கிடக்கிறது. அதிகார வர்க்கத்தின் அகங்கார கூக்குரல்கள்தான் எங்கு நோக்கினாலும் ஒலித்துக் கொண்டிருக்கிறது. உலக அரங்கில் அதிகாரமும் ஆதிக்கமும் கையை விட்டு போகாமல் இருக்க வேண்டுமென்றால், மக்கள் பிளவுபட்டு கிடக்க வேண்டியது அவசியமாகிறது. சூழ்நிலையை தனக்கேற்றவாறு மாற்றும் திறமை இருந்தால்தான் இந்த உலகில் காரியம் சாதிக்க முடியும் என்பது இன்றைய அரசியல் தொடங்கி வியாபரம் வரை பரவலாக ஏற்றுக்கொள்ளப்பட்டது. ஆனால் Political power can be achieved by political hate only என்ற சித்தாந்தத்தின் அடிப்படையில் இயங்கிக் கொண்டிருக்க்கூடிய இந்த இந்திய அரசியல் வியாபாரிகள், மாற்றார்கள் இருக்கும் வரை மதம் மற்றும் பல இனங்கள் கூட அடையாளப் படுத்தப்பட்டு சின்னா பின்னாமாக்கப்படும்.


பகுதி-4

மாற்றார்கள் முஸ்லீம்களுக்கு எதிராக நடத்தக்கூடிய இந்த மோசமான, கோரமான அரசியல் விளையாட்டிற்கு மிக முக்கியமாக காரணம் ஒன்றே ஒன்றுதான். பல்வேறு பரிமானங்களை தன்னிடத்திலே உள்ளடக்கிய ஒரு ஆழமான காரணம் அது.

அழகான வார்த்தைகளில் சொல்ல வேண்டுமெனில், "இந்துக்களின் மத்தியிலே மாற்றார்கள் நிர்ணயிக்கக் கூடிய அல்லது அவர்களின் கட்டுப் பாட்டிற்குள் அமைகின்ற ஒற்றுமையை உருவாக்கவும், நாளுக்கு நாள் விரிவாகிக் கொண்டிருக்கிற பிளவுகளையும், பகைகளையும் மறக்கவும் அல்லது மறைக்கவும்" அப்பாவி கூட்டங்களான முஸ்லீம்கள் பொது எதிரியாக அடையாளப்பட்டு நிற்க வேண்டும். கொஞ்சம் எதார்த்தமாக சொல்ல வேண்டுமென்றால், "காலம் காலமாக ஒடுக்கப்பட்டு, தாழ்த்தப்பட்டு இருக்கக் கூடிய அப்பாவி மக்கள் சமூகத்தின் அடித்தட்டிலேயே இருந்து அழிய வேண்டும். தாழ்த்தப் பட்டவர்களும், அவர்களை தாழ்த்தப் பட்டவர்களாகவே வைத்திருக்க வேண்டும் என்று நினைக்கும் இரு மக்கள் கூட்டங்களுக்கு மத்தியிலெ வாழ்ந்து கொண்டிருக்கக் கூடிய முஸ்லீம்கள் தலீத்களின் பக்கம் சாய்வதே இந்த இனவாத அரசியலுக்கு மிகப் பெரும் காரணம்.

யார் எப்படி வாழ்ந்தால் நமக்கென்ன என்று முஸ்லீம்கள் ஒதுங்கியிருந்தார்கள் என்றால், மாற்றார்களுக்கு இப்படி ஒரு நெருக்கடியான சூழல் ஏற்பட்டிருக்காதோ என்னவோ? இந்தியாவில் வாழ்ந்துக் கொண்டிருக்கக் கூடிய முஸ்லீம்கள் ராமரை கடவுளாகவும், சரித்திர கதாநாயகனாகவும் ஏற்றுக் கொண்டால் எல்லாவிதாமான வகுப்புவாத பிரச்சனைகளுக்கும் தீர்வு ஏற்பட்டுவிடும் (1) என்ற விஷம் கக்கும் பிரச்சாரத்தின் அடிப்படையை புரிந்துக் கொண்டால் தாழ்த்தப் பட்டவர்களிடத்தில் முஸ்லீம்களால் ஏற்படக்கூடிய சிந்தனைத் தாக்கங்களை அறிந்துக் கொள்ளமுடியும்.

முஸ்லீம் மன்னர்களும், முகலாய மன்னர்களும் குழப்பத்திலேயே தனது காலச்சாரத்தை தொடங்கி, குழப்பத்திலேயே முடிந்து போனாலும், அவர்களை அறியாமல் அவர்களின் பெரிதான உதவிகள் எதுவும் இல்லாமல் இஸ்லாமிய மார்க்கம், தாழ்த்தப் பட்டவர்கள் மற்றும் ஒடுக்கப் பட்டவர்களின் மத்தியிலே வேருன்ற ஆரம்பித்தது. ஆனால் கடந்த ஆயிரம் வருடமாக மாற்றார்களுக்கு அது ஒரு பெரிய பிரச்சனையாக இருக்கவில்லை. காரணம் ஒடுக்கப் பட்டவர்கள் எந்த மதத்தை சேர்ந்தவர்களாக இருந்தாலும் அவர்களுடைய அன்றாட வாழ்க்கையில் எந்தவித மாற்றமும் கிடையாது, குறிப்பாக மன்னரட்சியில் அவர்களுக்கு எந்தவித உரிமையோ அல்லது அதிகாரமோ கிடையாது. இன்னும் சொல்லப் போனால், மாற்றார்களின் அரசியல் அதிகாரத்தில் அவர்கள் பங்கு கேட்கும் அளவிற்கு சமூக விழிப்பற்றவர்களாகவும், அருகதையற்றவர்களாகவும் இருந்ததுதான் அல்லது இருக்க வைத்ததுதான். ஆகவே யார் மன்னனாக இருந்தாலும், தனக்கு கிடைக்க வேண்டியது கிடைத்துக் கொண்டிருந்த காரணத்தால் மாற்றார்கள் வாளவிருந்து போனார்கள். மன்னராட்சியின் மூலம் தனது அரசியல் அதிகாரங்களுக்கு எந்தவிதாமன இடையூறுகள் வராமல் பார்த்துக் கொண்டார்கள்.

ஆனால், வெள்ளையனின் சுமையான ஜனநாயக ஆட்சியை இந்தியாவில் வெள்ளையர்கள் இறக்கி வைக்க ஆரம்பித்தவுடன் ஒட்டுப்பெட்டிகளை நிரப்புவும் சொகுசான அரசியல் அதிகாரத்தை இழக்காமல் இருப்பதற்கும் ஒடுக்கப் பட்டவர்களும், தாழ்த்தப் பட்டவர்களும் தேவைப்பட ஆரம்பித்ததன் விளைவுதான் இந்த பொது எதிரி சாயம் பூசப்பட்ட முஸ்லீம்கள்.

முஸ்லீம்கள் ஒற்றுமை, ஒன்றுபட்ட தலைமை, சீரான சமூக அமைப்புகள் இல்லாமலும், மற்றும் கல்வியில் பின் தங்கிய நிலை, இன்னும் அங்கங்கே சிதறுண்ட சமூகமாக வாழ்கின்ற காரணத்தாலும் மாற்றர்களின் அரசியல் விளையாட்டிற்குள் அகப்பட்டு வழி தெரியாமல் "psycho somatic" வியாதி ஏற்பட்டவர்களைப் போல் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள். அபுல் கலாம் ஆசாத் அவர்கள் சொன்னது போல் "certainly this is an un-Islamic and irreligious life which entire community is living" (2).

மாற்றார்கள் உண்மையிலேயே பயப்படுவது தலீத்களின் வளர்ச்சியை நினைத்துதான். 2000 வருடங்களுக்கு மேலாக ஒடுக்கப்பட்ட சமுதாயம், கடந்த 50 ண்டுகளில் அரசியல் அதிகாரத்தில் பங்கு கேட்கும் நிலையை எட்டியதே இந்த பயத்திற்க்கு காரணம்.சுதந்திரமடைந்து இந்த 58 வருட காலத்தில் தலீத்கள் அரசியல் மற்றும் சமூக விழிப்புணர்வில் முன்னிலை அடைந்ததும், நியாயமாக பெறவேண்டிய, இத்தனை காலமாக இழந்திருந்த அரசியல் அதிகாரத்தை தட்டிக் கேட்டதும் மாற்றர்கள் மத்தியிலே "mental conflict" உருவாகிப் போனது. இந்த மெண்டல் கன்பிளிக்ட் இந்தியா சுதந்திரம் அடைந்தபிறகு இன்னும் அதிகமாகவே இதற்கு தீர்வாக இப்படி அவசரம் அவசரமாக ஒரு பொது எதிரியை உருவாக்க வேண்டிய நிர்பந்தத்திற்கு உள்ளாக்கபட்டனர்.

வி.பி. சிங் மண்டல் பெயர் சொல்லி தனக்கென்று ஒரு கூட்டத்தையும், தலீத்களின் மத்தியில் ஒரு பெரும் பரபரப்பையும் ஏற்படுத்திய போது, மாற்றார் கூட்டம் பதைத்து போய், கடவுளின் பெயர் சொல்லி கூட்டம் சேர்க்கத் தொடங்கியது. மதத்தின் பெயர் சொல்லி மக்களை பிரித்த மாற்றார் கூட்டத்திற்க்கு, இப்போது அதே மதம் மற்றும் கடவுளின் பெயர் சொல்லி மக்களை கூட்ட வேண்டிய நிலை ஏற்பட்டதுதான் வேடிக்கை. அதிகாரம் கையை விட்டு நழுவாமல் இருக்க அங்கங்கே இரை போடும் வேலையில் இறங்கினார்கள். முஸ்லீம்களைப் பற்றிய "Fantasy" உருவாக்கப்பட்டு விஷப் பிரச்சாரங்கள் முடுக்கி விடப்பட்டன.

முஸ்லீம்களுக்கு எதிராக எது நடந்தாலும், சமூக ரீதியாக போரடவும் மற்றும் ஜனநாயக வழியில் அதை எடுத்துச் சொல்லவும் எந்தவிதமான அமைப்புகளையும், வாய்ப்புகளையும் ஏற்படுத்திக் கொள்ளாமல் சிதறுண்ட சமூகமாக சந்தி சிரித்துக் கொண்டிருக்கிறது முஸ்லீம் சமுதாயம்.

1954 லிருந்து 1992 வரை 39 வருடங்களில் முஸ்லீம்களுக்கு எதிராக 13,356 இனப் படுகொலைகள் மாற்றர்களால் நடத்தப் பட்டிருக்கிறது (3). ஆனால், இன்றுவரை எத்தனை வழக்குகள் முடிவடைந்து நீதி கிடைத்திருக்கிறது?. தனி ஒரு மனிதனை கொலை செய்தால், சுப்ரீம் கோர்ட் வரை சென்று தூக்கு தண்டனை தருகின்ற அரசியல் சட்டம், கூட்டுக் கொலைகளுக்கு வெறும் கமிஷன் அமைப்பதோடு நின்றுவிடுகிறது. சிறுபான்மையினருக்கு எதிராக நடந்த கலவரங்களும், இனப் படுகொலைகளும் இன்றுவரை நீதி மன்ற வாசல்களில் தவமிருந்ததுதான் மிச்சம். J.B. டிசூசா சொன்னது போல், சுதந்திரடைந்த 47 வருடங்களில் வகுப்பு கலவரங்களால் கொல்லப் பட்டவர்களின் எண்ணிக்கை, வெள்ளையர்கள் ஆண்ட 150 வருடங்களில் கொல்லப் பட்டவர்களைவிட அதிகம் (4).

"கிழவர்கள் இறந்து விடுவார்கள், இளைஞர்கள் மறந்து விடுவார்கள்" என்று பாலஸ்தீனர்களுக்கு எதிராக எக்காளமிட்ட தீவிரவாதி பென் குயூரன் (5) சொன்னதற்கிணங்க இந்தியாவில் தீவிரவாதச் செயல்கள் செய்கின்ற மாற்றர்கள் கூட்டம் ஒரு பக்கம். ஆனால் சமூகத்தில் குற்றவாளிகளாக, தீவிரவாதிகள் கூட்டம் என்று பழி சுமத்தப்பட்டு கூனிக் குருகி செத்து மடிகின்ற முஸ்லீம்கள் இன்னொரு பக்கம். உதாரணம் குஜராத் இனப் படுகொலைகளும், ரயில் பெட்டி எறிப்பு சம்பவமும். ரயில் பெட்டி எரிப்பு சம்பவத்தில் கடந்த மூன்று வருட காலமாக எப்பாடு பட்டவது, பாகிஸ்தானின் ISI உடன் தொடர்பு ஏற்படுத்திவிடுவது என்ற விடாப்புடியுடன் போலீஸ் போராடிக் கொண்டிருக்கிறது.

இரண்டு விதாமான சிந்தனை சிறைக்குள் மூழ்கி கிடக்கிறது இந்த முஸ்லீம் சமுதாயம். ஒன்று தன்னைச் சுற்றி என்ன நடக்கிறது, எப்படி வலை பின்னப் பட்டிருக்கிறது என்று தெரியாமல் எது நடந்தாலும், "மன்னித்து விடுங்கள்" என்ற apologetic மனநிலையும், இன்னொன்று, எதார்த்தமே புரியாமல், "arrogant" சிந்தனையும்.

சாதாரண முஸ்லீம்களின் தலைக்குள்ளே எதை வேண்டுமானலும் திணிக்கலாம், கேட்பதற்கு எந்த நாதியும் இல்லையென்று, முஸ்லீம் அரசியல்வாதிகளும், மாற்றர்களும் தங்களது சரக்குககளை மதம் மற்றும் சமுதாயத்தின் பேரில் விற்றுக் கொண்டிருக்கிறார்கள். உதாரணத்திற்க்கு பாபர் மசூதி பிரச்சனையை எடுத்துக் கொள்ளாலாம். பாபர் மசூதி பிரச்சனை தொடங்கிய காலத்திலிருந்தே இப்படி இரண்டுவிதமான அணுகுமுறையின் காரணமாக சமுதாயத்தில் ஆக்கப் பூர்வமான தீர்வு எதுவும் எடுக்க முடியாமல் இன்றுவரை தொடர்ந்துக் கொண்டிருக்கிறது.

தாஜ் மாஹாலுக்கும், டெல்லி செங்கோட்டைக்கும் இந்திய அரசாங்கம், இந்திய முஸ்லீம்களுக்கு எதோ ராயல்டி கொடுப்பதைப் போல், பாபர் மசூதி பிரச்சனையை முஸ்லீம்களின் தலைமேல் போட்டு விட்டு, இரண்டு பக்கத்தினரும் எப்போது வேண்டுமானலும் ஒரு முடிவுக்கு வாருங்கள் என்று வேடிக்கைப் பார்த்துக் கொண்டிருக்கிறது மத்திய அரசாங்கம்.

முஸ்லீம்களின் எதிர்காலம் முஸ்லீம்களின் கையில்தான் உள்ளது. குரானில் இறைவன் எச்சரிப்பதைப் போல் "தானாக மாறாத வரை" இறைவன்கூட நமக்கு உதவி செய்யமாட்டான். சத்தியத்தையும், எல்லாவிதமான பிரச்சனைகளுக்கு தீர்வையும் கையில் வைத்துக் கொண்டு குருடர்கள் போல் வாழ்ந்து கொண்டிருக்கும் சமுதாயமாக இல்லாமல், பொறுப்புகளை உணர்ந்த சமுதாயமாக மாறவேண்டும்.

முலயாம் சிங் யாதவின் "வெள்ளிக்கிழமை பொலிட்டிக்ஸ்" எல்லாம் வேண்டாம் என்று உ.பி. முஸ்லீம்கள் முலயாம் சிங்கிற்கு சொன்னது மட்டுமல்லாமல் அந்த உத்தரவை திருப்பி வாங்க வைத்ததைப் போல், இந்தியாவில் மற்ற மாநிலங்களிலும் அரசியல் விளையாட்டிற்கு முற்றுப் புள்ளி வைக்கும்போதுதான் இந்த முஸ்லீம் சமுதாயம் உருப்பட வழி கிடைக்கும்.

இந்தியன் என்ற எண்ணமும், இது என்னுடைய நாடு என்று மனதுக்குள் மட்டும் தினம் தினம் சொல்லிக் கொண்டிருந்தால் போதாது. தெருவில் கிடக்கும் முட்களை நகர்த்தி, ஓரத்தில் எறிவதுகூட ஒரு இபாதத், அதவாது இறைவழிபாடு என்று சொன்ன நபிகள் நாயகத்தின் வழிகளை பின்பற்றக்கூடிய முஸ்லீம்களில் எத்தனை பேர் மற்றவர்களுடன் சேர்ந்து தெருச் சாக்கடைக்கும், நல்ல ரோடுகளுக்கும் போரடியிருக்கின்றார்கள்.

ஒரு நோயாளியைச் சென்று பார்ப்பதும், அவனுக்காக பிரார்த்திப்பதும் இறைவழிபாடு என்று நபிகளார் சொன்னார்கள், ஆனால், முஸ்லீம்களோ பள்ளிவாயிலில் நோயாளி யாரவது வந்தால், ஒதிவிட்டு, காசு வாங்கிக் கொள்வதோடு முடிந்து போகிறது.

மரணக் குழிக்கு செல்லும் வரை அறிவைத் தேடு என்று சொன்னார்கள் முகம்மது நபி (சல்). அறிவு என்பது வெறும், மார்க்கத்தைப் படிப்பது மட்டுமல்ல, அதனுடன் சேர்ந்து உலகக் கல்வியையும் தேடவேண்டும் என்பதை உணாரதவரை முஸ்லீம்கள் தான் உருவாக்கிய சிந்தனைச் சிறைக்குள்ளிருந்து வெளியேறுவது கடினம். மாற்றார்களின் அரசியல் கைதிகளாக இல்லாமல், அரசியலை நடத்திச் செல்லக்கூடிய சமூகமாக மாறும்போதுதான், முஸ்லீம்கள் மட்டுமல்ல, இந்தியாவும் உலகத்தின் தலைசிறந்த நாடக உருவாகும்.

குறிப்பு: இந்த கட்டுரையை படித்தும், பதிலளித்தும் மற்றும் மின்னஞ்சலில் தொடர்பு கொண்டு விமர்சித்தும், பாரட்டவும் செய்த நண்பர்கள் மற்றும் அன்பர்கள் அனைவருக்கும் எனது நன்றிகள்.

References:
1) Organizer, RSS official weekly, 20 June 1971
2) Islam & Indian Nationalism (Reflections on Abul Kalam Azad), Edited by Prof. Mishirul Hassan
3) Indian Human Right, International Muslims in India USA, Nov. 93
4) Times of India, 8 April 1994
5) Terrorist turned Prime Minister of Israel
 

நன்றி: http://suvatukal.blogspot.com