அல்லாஹ் உலகத்தையும் அதில் கோடான கோடி தன் படைப்புகளையும் படைத்து
அப்படைப்புகளில் மிகச் சிறப்பிற்குரிய படைப்பாக மனிதனைப் படைத்தான்.
மனிதன் இவ்வுலகில் மனிதனாக வாழ வேண்டும் என்பதற்காக அவ்வப்போது ஒவ்வொரு
பகுதிகளுக்கும் இறைத்தூதர்களை அப்பகுதிகளிலிருந்தே அல்லாஹ்
தேர்ந்தெடுத்தான். இவர்களில் முதல் நபி ஆதம்(அலை) அவர்களும் இறுதி நபி
முஹம்மது(ஸல்) அவர்களும் ஆவார்கள். இப்படி பல்லாயிரக்கணக்கான
நபிமார்களை உலக மக்களுக்கு தூதர்களாக தேர்ந்தெடுத்தான். இவர்கள்
அனைவரும் அல்லாஹ்வின் தூதர்கள் என்றும் அல்லாஹ்வினால் அவர்களுக்கு
அறிவிக்கப்பட்ட செய்திகள் அனைத்தையும் மக்களுக்கு எத்;தி வைத்தார்கள்
என்றும் அவர்கள் அனைவரும் நல்லொழுக்கமுள்ளவர்கள் கண்ணியமானவர்கள் என்று
நம்புவது ஒவ்வொரு மனிதனின் கடமையாகும். அல்லாஹ் திருமறையில் இவ்வாறு
கூறுகின்றான்:
(இறை)தூதர் தம் இறைவனிடமிருந்து தமக்கு
அருளப்பெற்றதை நம்புகிறார் (அவ்வாறே) முஃமின்களும் (நம்புகின்றனர்;
இவர்கள்) யாவரும் அல்லாஹ்வையும், அவனுடைய மலக்குகளையும், அவனுடைய
வேதங்களையும், அவனுடைய தூதர்களையும் நம்புகிறார்கள்; 'நாம்
இறைதூதர்களில் எவர் ஒருவரையும் பிரித்து வேற்றுமை பாராட்டுவதில்லை
(என்றும்) இன்னும் நாங்கள் செவிமடுத்தோம்; (உன் கட்டளைகளுக்கு) நாங்கள்
வழிப்பட்டோம் எங்கள் இறைவனே! உன்னிடமே மன்னிப்புக் கோருகிறோம்
(நாங்கள்) மீளுவதும் உன்னிடமேதான்' என்று கூறுகிறார்கள்.
(அல்-குர்ஆன் 2:285)
அல்லாஹ்வையும், வானவர்களையும், ரஸுல்மார்களையும், கியாமத் நாளையும்,
நல்லது கெட்டதெல்லாம் அல்லாஹ் விதித்த விதியின்படி நடக்கின்றது
என்பதையும் ஈமான் கொள்வது (நம்புவது) தான் (உண்மையான) ஈமானாகும் என
நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். (முஸ்லிம்)
ஆகவே உலகத்தில் வாழும் ஒவ்வொருவரும் அல்லாஹ்வால் அனுப்பப்பட்ட
இறைத்தூதர்களை அவர்கள் அனைவரும் அல்லாஹ்வின் தூதர்கள் என நம்புவது
கடமையாகும். அவர்களில் சிலரைவிட சிலரை அல்லாஹ் மேன்மைமிக்கவர்களாகவும்
ஆக்கி இருக்கின்றான். அல்லாஹ் திருமறையில் இவ்வாறு கூறுகின்றான்.
அத்தூதர்கள் - அவர்களில் சிலரைச் சிலரைவிட நாம் மேன்மையாக்கி
இருக்கின்றோம்; அவர்களில் சிலருடன் அல்லாஹ் பேசியிருக்கின்றான்;
அவர்களில் சிலரைப் பதவிகளில் உயர்த்தியும் இருக்கின்றான்; தவிர
மர்யமுடைய மகன் ஈஸாவுக்கு நாம் தெளிவான அத்தாட்சிகளைக் கொடுத்தோம்
இன்னும், ரூஹுல் குதுஸி (எனும் பரிசுத்த ஆத்மாவைக்) கொண்டு அவருக்கு
உதவி செய்தோம்; அல்லாஹ் நாடியிருந்தால், தங்களிடம் தெளிவான
அத்தாட்சிகள் வந்த பின்னரும், அத்தூதுவர்களுக்குப்பின் வந்த மக்கள்
(தங்களுக்குள்) சண்டை செய்து கொண்டிருக்க மாட்டார்கள்;. ஆனால், வர்கள்
வேறுபாடுகள் கொண்டனர் அவர்களில் ஈமான் கொண்டோரும் உள்ளனர் அவர்களில்
நிராகரித்தோரும் (காஃபிரானோரும்) உள்ளனர் அல்லாஹ் நாடியிருந்தால்
அவர்கள் (இவ்வாறு) சண்டை செய்து கொண்டிருக்க மாட்டார்கள்; ஆனால்
அல்லாஹ் தான் நாடியவற்றைச் செய்கின்றான். (அல்-குர்ஆன் 2:253)
உலகத்தில் தோன்றிய அனைத்துத் தூதர்களையும் நம்புவது கடமையாகும்.
இத்தூதர்களில் கடைசியாக வந்த நபி, முஹம்மது(ஸல்) அவர்களை அல்லாஹ்வின்
தூதர் என்று நம்புவதோடு அவர்கள் காட்டிய வழியை பின்பற்றுவதும் நம்
அனைவரின் கடமையாகும். காரணம் முஹம்மது(ஸல்) அவர்கள் உலக மக்கள்
அனைவருக்கும் அனுப்பப்பட்ட கடைசித் தூதர் ஆவார்கள். அல்லாஹ்
திருமறையில் இவ்வாறு கூறுகின்றான்.
(நபியே!) நாம் உம்மை அகிலத்தாருக்கு எல்லாம்
ரஹ்மத்தாக - ஓர் அருட் கொடையாகவேயன்றி அனுப்பவில்லை.
(அல்-குர்ஆன் 21: 107)
இன்னும், (நபியே!) நாம் உம்மை மனித குலம் முழுமைக்கும் நன்மாராயங்
கூறுபவராகவும் அச்சமூட்டி எச்சரிக்கை செய்பவராகவுமே யன்றி அனுப்பவில்லை
ஆனால் மனிதர்களில் பெரும்பாலோர் (இதை) அறியமாட்டார்கள். (அல்-குர்ஆன்
34:28)
நபி முஹம்மது(ஸல்) அவர்கள் மானிடருக்கு ஒரு முன்மாதிரி ஆவார்கள்,
அனைத்துத் துறையிலும் முன்மாதிரியாகத் திகழ்ந்தார்கள். ஆன்மீகத்
தலைவராக, அரசியல் தலைவராக, படைத்தளபதியாக, ஆசிரியராக, கணவராக,
தந்தையாக, நண்பராக, சமூகத் தலைவராக, சமூகச் சேவகராக, வியாபாரியாக.
அனைத்துத் துறைக்கும் முன்மாதியாகத் திகழ்ந்தார்கள். அல்லாஹ்
திருமறையில் இவ்வாறு கூறுகின்றான்.
அல்லாஹ்வின் மீதும், இறுதி நாளின் மீதும் ஆதரவு
வைத்து, அல்லாஹ்வை அதிகம் தியானிப்போருக்கு நிச்சயமாக அல்லாஹ்வின்
தூதரிடம் ஓர் அழகிய முன்மாதிரி உங்களுக்கு இருக்கிறது.
(அல்-குர்ஆன் 33:21)
நபி(ஸல்) அவர்களைப்பற்றி எழுதுவதாக இருந்தால் எழுதிக் கொண்டே
செல்லலாம். இச்சிறு பத்திரிக்கை அதற்கு இடமளிக்காது என்ற காரணத்தால்,
இங்கே நபி(ஸல்) அவர்களின் நற்குணங்களைப் பற்றி மட்டும், அதையும்
சுருக்கமாக குறிப்பிட விரும்புகிறேன். நபி(ஸல்) அவர்கள் மனிதர்களிலேயே
மிக நற்குணமுள்ளவர்கள் என்றால் அது மிகையாகாது. இதை அல்லாஹ்வே
திருமறையில் தன் சான்றாகவே குறிப்பிடுகின்றான்.
(நபியே) நிச்சயமாக நீர் மிக உயர்ந்த மகத்தான
நற்குணம் உடையவராக இருக்கின்றீர்.
(அல்-குர்ஆன் 68:4)
உள்ளரங்கத்தையும், வெளியரங்கத்தiயும் எந்த வித்தியாசமின்றி ஒன்று போல்
அறியக்கூடிய அல்லாஹ் ஒருவரைப்பற்றி புகழ்ந்து கூறினால் அதில் ஏதாவது
மாற்றுக்கருத்து இருக்க வாய்ப்பிருக்கின்றதா? நிச்சயம் வாய்ப்பேயில்லை.
நபி(ஸல்) அவர்கள் மனிதர்களிலேயே மிகச் சிறந்தவர்கள் என்பதற்கு இந்த ஒரு
சான்றே போதுமானதாகும் இருந்தும், மேலதிக விளக்கங்களுக்காக அன்றிருந்து
இன்றுவரை வாழ்ந்து மறைந்த, வாழ்ந்து கொண்டிருக்கக்கூடிய முஸ்லிம்களும்,
முஸ்லிம் அல்லாதவர்களும் நபி(ஸல்) அவர்களின் நற்குணத்திற்கு
சான்றாகக்கூறிய சாட்சியங்களை சுட்டிக்காட்ட விரும்புகின்றேன்.
மானிடர்களின் சான்றுகள்
நபித்தோழர்களின் வாயிலாக
1. நபி(ஸல்) அவர்கள், மக்களில் மிக அழகிய குணமுடையவர்களாக
விளங்கினார்கள். அறிவிப்பாளர்: அனஸ்(ரலி) ஆதாரம்: புகாரி, முஸ்லிம்
2. நான் நபி(ஸல்) அவர்களின் கரத்தை விட மென்மையானதாக பட்டாடையையோ,
பட்டையோ தொட்டதில்லை. அவர்களின் வாடையை விட உயர்ந்த நறுமணமத்தை ஒரு
பொழுதும் நுகர்ந்ததில்லை. அவர்களுக்கு நான் பத்து ஆண்டுகள் பணிவிடை
செய்துள்ளேன். அப்பொழுது அவர்கள் என்னை ஒருபொழுதும் 'உஃப்' (சீ) என்று
கூறியதில்லை. மேலும் நான் செய்த எந்த செயலுக்கும் நீ ஏன் செய்தாய்?
என்றோ, நான் செய்யாத விஷயத்திற்கு, நீ இப்படி செய்திருக்கலாமே! என்றோ
அவர்கள் ஒருபொழுதும் என்னிடம் கூறியதில்லை.
அறிவிப்பாளர்: அனஸ்(ரலி)
ஆதாரம்: புகாரி, முஸ்லிம்
நபி(ஸல்) அவர்களின் மனைவிமார்களின் வாயிலாக
3. உங்களில் சிறந்தவர் உங்கள் மனைவியிடம் சிறந்தவர் நான் என்
மனைவியிடம் சிறந்தவர் என நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள்.
ஆதாரம் : திர்மிதி,
அறிவிப்பாளர் : அபூஹுரைரா(ரலி)
நபிகளாரின் காலத்தில் வாழ்ந்து மறைந்த மாற்று மதத்தவர்களின்
வாயிலாக
4. நபியவர்களின் முதல் எதிரியாகிய அபூஜஹ்ல் கூறினான். முஹம்மதே நாம்
உம்மை பொய்ப்படுத்தவில்லை நீர் கொண்டு வந்த மார்க்கத்தைப்
பொய்ப்படுத்துகின்றோம் எனக்கூறினான்.
5. 'நெருக்கமான உமது குடும்பத்தாரை அச்சமூட்டி எச்சரிக்கை செய்வீராக'
என்ற ஆயத்து இறங்கிய போது நபி(ஸல்) அவர்கள் ஸஃபா மலைமீது ஏறி பனூ
ஃபஹ்ர் கோத்திரத்தாரே, பனூ அத்ய் கோத்திரத்தாரே என அம்மக்கள் ஒன்று
சேரும் அளவுக்கு அழைத்தார்கள், அவர்களில் வரமுடியாதவர்கள் என்ன செய்தி
என்பதை தெரிந்து கொள்வதற்காக தனக்குப் பகரமாக ஒரு தூதரை
அனுப்பினார்கள். அபூலஹபும் மற்றும் குறைஷிகளும் வருகை
தந்திருந்தார்கள். அப்போது அம்மக்களுக்கு நபி(ஸல்) அவர்கள்
கூறினார்கள். 'இந்த ஓடையில் குதிரைப்படை ஒன்று உங்களைத் தாக்க
இருப்பதாக நான் உங்களுக்கு அறிவித்தால் அதை நீங்கள்
உண்மைப்படுத்துவீர்களா? என்றார்கள், அவர்கள் ஆம்! (இதுவரை)
உண்மையைத்தவிர வேறெதையும் நாங்கள் உம்மிடம் பார்க்கவில்லையே
என்றார்கள். (புகாரி)
தற்காலத்தில் வாழ்ந்து மறைந்த மற்றும் வாழ்ந்து கொண்டிருக்கும்
முஸ்லிம் அல்லாதவர்களின் சான்றுகள்
'யங் இந்தியா' என்னும் பத்திரிக்கையில் மகாத்மா காந்தி அவர்கள் கூறியதை
குறிப்பிடுகையில், 'இரண்டாவது கருத்திற்கிடமின்றி பல லட்சக்கணக்கான
மக்களின் உள்ளங்களில் இடம்பிடித்த முஹம்மது நபி(ஸல்) அவர்களின்
பண்புகளை அறிய நான் விரும்பினேன். அன்னாரின் நன்னடத்தை, தன்
வாக்குறுதிகளை நிறைவேற்றுதலில் காட்டிய வீரம், தன் தோழர்களோடும்
தன்னைப் பின்பற்றியவர்களோடும் காட்டிய தூய்மை மற்றும் அற்பணிப்பு,
அவர்கள் தன் இரட்சகனோடும் தன் தூதுத்துவத்தை பரப்புவதிலும் வைத்திருந்த
உறுதிப்பாடும், உற்சாகமும் போன்ற அன்னாரின் நற்பண்புகளைப் பற்றி அறிந்த
போது இப்பண்புகள்தான் இஸ்லாம் பரவுவதற்கு வழிவகுத்ததேயன்றி இஸ்லாம்
வாளால் பரவவில்லை என்பதை உளப்பூர்வமாக அறிந்து கொண்டேன். அன்னாரின்
வாழ்க்கை வரலாறு பற்றிய இரண்டு பாகங்களை படித்து முடித்த பின்
அன்னாரின் கண்ணியமான வாழ்க்கை வரலாறு பற்றி மேலதிகமாக தெரிந்து கொள்ள
முடியாமைக்கு மனம் வருந்துகின்றேன் எனக் குறிப்பிட்டார்கள்.
7. பேராசிரியர் 'ராம கிருஷ்ண ராவ்' அவர்கள் தனது 'முஹம்மது நபி'
என்னும் புத்தகத்தில் கூறுகின்றார்கள். முஹம்மது நபியவர்களைப் பற்றிய
முழுமையான வாழ்க்கை வரலாறைப் பற்றி கூறுவதென்பது முடியாத ஒன்றாகும்,
இருந்தாலும் நான் அன்னாரைப்பற்றி இங்கு குறிப்பிடுவது அன்னாரின்
சிறப்புமிக்க வாழ்க்கையின் சுருக்கமேயாகும்.
8. கனடாவைச் சேர்ந்த மதங்களைப் பற்றிய ஆய்வாளராகிய கலாநிதி 'சுவைமிர்'
அவர்கள் தனது 'கிழக்குப் பிராந்தியமும் அதன் கலாச்சாரமும்' என்னும்
புத்தகத்தில் 'நிச்சயமாக முஹம்மது நபியவர்கள் முஸ்லிம்களின் மார்க்கத்
தலைவர்களில் மாபெரும் தலைவராவார்கள்' இன்னும் அவர்களைப்பற்றிக்
கூறுவதாயின் அன்னார் மாபெரும் சீர்திருத்தவாதி, நாவண்மையுள்ளவர்,
மிகத்துணிச்சலானவர், மாபெரும் சிந்தனையாளர், இச்சிறப்புத் தன்மைகளுக்கு
மாற்றமான ஒன்றை அன்னார் மீது கூறுவது தவறான ஒன்றாகும், அவர்கள் கொண்டு
வந்த குர்ஆனும் அன்னாரின் வாழ்க்கை வரலாறுகளும் நாம் கூறிய
வாதங்களுக்கு இரண்டு சான்றுகளாகும்.
9. ஜெர்மனைச் சேர்ந்த மதங்களைப் பற்றிய ஆய்வாளராகிய 'பிரித்லி சென்த்
ஹீலர்' அவர்கள் தனது 'கிழக்கத்தியவர்களும் அவர்களின் கலாச்சாரங்களும்'
என்னும் புத்தகத்தில் 'முஹம்மது நபியவர்கள், நாட்டின் தலைவராகவும் தனது
மக்களின் நல்வாழ்வுக்காவும் சுதந்திரத்திற்காகவும் பாடுபட்டார்கள்.
குற்றம் புரிபவர்களை அக்காலத்துக் கேற்பவும் அவர்கள் வாழ்ந்து
கொண்டிருந்த காட்டுமிராண்டித்தன சமூகத்திற்கேற்றவாறும் தண்டனை
வழங்கினார்கள். இன்னும் முஹம்மது நபியவர்கள் ஓரிறைக் கொள்கையின் பக்கம்
மக்களை அழைக்கக்கூடியவர்களாக இருந்தார்கள். அவர்கள் தன் பிரச்சாரத்தை
மேற்கொள்ளும் போது தன் பகைவர்களுடன் மிருதுவாகவும் இரக்கத்தன்மையுடனும்
நடந்து கொண்டார்கள். மனிதர்களிடம் இருக்க வேண்டிய மிகச்சிறப்பான இரு
தன்மைகள் அன்னாரிடம் இருந்தது, முதலாவது அன்பு, இரண்டாவது
இரக்கத்தன்மையாகும்.
10. பிரிட்டனைச் சேர்ந்த 'பெர்னாட்ஷா' அவர்கள் தனது 'முஹம்மத்' என்னும்
புத்தகத்தில் 'முஹம்மது நபியின் சிந்தனை போன்று சிந்திக்கக்கூடிய
ஒருவர் இந்த உலகத்தில் தோன்றுவது மிகத் தேவையுள்ளதாக இருக்கின்றது'
எனக்குறிப்பிடுகின்றார். (இப்புத்தகத்தை பிரிட்டன் நாடு எரித்து
விட்டது.)
முஹம்மது நபி தனது மார்க்கத்தை என்றென்றும் கண்ணியத்திற்குரிய
மதிப்புமிக்க மார்க்கமாக ஆக்கிவிட்டார்கள். அதுவே மற்ற மார்க்கங்களை
விட சக்திவாய்ந்ததும் என்றென்றும் நிலைத்து நிற்கக்கூடியதுமாகும்.
எனது நாட்டு மக்களில் அதிகமானவர்கள் இந்த மார்க்கத்தைப்பற்றிய
தெளிவுபெற்ற பின்பே இந்த மார்க்கத்தில் இணைந்துள்ளார்கள். ஐரோப்பா
கண்டம் முழுக்க இந்த மார்க்கம் பரவும் என்பது எனது கருத்தாகும்.
11. ஷாம் நாட்டு மொழியின் பேராசிரியராகிய 'சென்ரஸ்தன் அஸோஜி' அவர்கள்
'முஹம்மது நபியின் வாழ்க்கை வரலாறு' என்னும் புத்தகத்தில்
கூறுகின்றார். 'முஹம்மது நபியவர்களிடம் இருந்த மாபெரும் சிறப்புப்
பண்புகளையும் புகழுக்குரிய தனித்தன்மைகளையும் நாம் மறுத்தால் முஹம்மது
நபியவர்களின் விஷயத்தில் நாம் நடுநிலை வகுக்கவில்லை என்பது
உண்மையாகும்'
12. அமெரிக்காவைச் சேர்ந்த மதங்களைப் பற்றிய ஆய்வாளராகிய 'செனெக்ஸ்'
அவர்கள் 'அரேபிகளின் மார்க்கம்' என்னும் புத்தகத்தில் கூறுகின்றார்.
முஹம்மது நபியவர்கள் ஈஸா(அலை) அவர்களுக்கு 570 ஆண்டுக்குப் பின்
தோன்றினார்கள். 'மக்களிடம் சிறப்புமிக்க பண்புகளை உருவாக்குவதிலும்
அவர்களின் சிந்தனைகளை மேலோங்கச் செய்வதிலும் ஓரிறைக் கொள்கை மற்றும்
மரணத்திற்க்குப் பின் ஒரு வாழ்க்கை இருக்கின்றது என்பதின் பக்கம்
மக்களை அழைப்பதுமே அன்னாரின் வேலையாக இருந்தது'
13. 'மைக்கல் ஹார்ட்' என்பவர் 'வரலாற்றில் நூறு பேர்' என்னும் தனது
புத்தகத்தில் கூறுகின்றார். "முஹம்மது நபியவர்களை மனித வரலாற்றில் மிகச்
சிறந்த முக்கியத்துவம் வாய்ந்தவர்களில் முதலானவராக நான் என்
புத்தகத்தில் தேர்ந்தெடுத்திருப்பது சில வாசகர்களை அதிர்ச்சியில்
ஆழ்த்தியிருக்கலாம். காரணம் வரலாற்றிலேயே மார்க்கம் மற்றும் உலகம்
இவ்விரு துறையிலும் வெற்றியின் உச்சத்தை அடைந்த ஒரே ஒரு மனிதர்
அவர்கள்தான்".
14. பிரிட்டனைச் சேர்ந்த 'தோமாஸ் கார்லீல்' என்பவர் 'வீரர்கள்' என்னும்
தனது புத்தகத்தில் கூறுகின்றார். (இவர் நோபல் பரிசு பெற்றவர் என்பது
குறிப்பிடத்தக்கது) 'இஸ்லாமிய மார்க்கம் பொய்யென்றும் முஹம்மது நபி
பொய்யர், ஏமாற்றுபவர் என்றும் இக்காலத்தில் ஒருவர் கூறுவது மாபெரும்
இழிவாகும்'
இவ்வாறு அன்றிருந்து இன்றுவரையுள்ள முஸ்லிம்களும், முஸ்லிம்
அல்லாதவர்களும் அன்னாரைப் போற்றிப் புகழ்ந்த சான்றுகளை கூறிக் கொண்டே
செல்லலாம். இட நெருக்கத்திற்க்கு பயந்து இத்துடன் முடிவுக்கு
வருகின்றேன். இப்படிப்பட்ட மாமானிதர் முஹம்மது(ஸல்) அவர்களை பற்றி
சமீபத்தில் நடந்த ஒரு நிகழ்ச்சி உலகத்தையே குலுக்கிவிட்டது. அதாவது
டென்மார்க் நாட்டின் 'ஜீலன்ட் போஸ்ட்டன்' என்னும் பத்திரிக்கை நபி(ஸல்)
அவர்களின் கண்ணியத்தைக் குலைக்கும் அளவு வரைந்த கார்ட்டூன் படங்கள்
மிகவும் கண்டிக்கத்தக்கதாகும். மனித சமுதாயத்துக்கே தலைகுனிவாகும்
என்பதை எந்த நடுநிலைவாதிகளும் மறுக்கமாட்டார்கள். ஆனால் நடந்தது என்ன!
இத்தவறை அப்பத்திரிக்கைக்குரிய பொறுப்பாளர்களிடத்தில் கூறப்பட்ட போது,
இது கருத்துச் சுதந்திரம் உள்ள நாடு அதனால் இதற்கு எதிராக எந்த
நடவடிக்கையும் எங்களால் செய்ய முடியாது என விடை கூறிவிட்டார்கள்.
நடுநிலைவாதிகளே! 130 கோடியை விடவும் அதிகமாக இவ்வுலகில் வாழ்ந்து
கொண்டிருக்கும் முஸ்லிம்கள் தங்களின் தலைவராக இறைத்தூதராக நம்பி
செயல்பட்டுக் கொண்டிருக்கும் உத்தமரை, தங்களின் உயிரை விடவும் அதிகம்
நேசிக்கக்கூடிய மாமனிதரை கண்ணியக்குறைவாக எழுதிவிட்டு இது
பத்திரிக்கைச் சுதந்திரம் என்பது அறிவுடமையா? எழுத்துச் சுதந்திரம்,
பேச்சுச் சுதந்திரம் என்பதற்கெல்லாம் ஒரு அளவு இல்லையா? நான்
கேட்கின்றேன், எழுத்துச் சுதந்திரம் உள்ள நாட்டில் எதையும் எழுதலாம்
என்று சொல்பவர்களின் தாயையோ, சகோதரியையோ, மனைவியையோ யாராவது
தரைக்குறைவாக எழுதினால் பேசினால் அல்லது கார்ட்டூன் வரைந்தால், எழுத்து
சுதந்திரம் உள்ள நாடு என்று சொல்லி விட்டுவிடுவார்களா? அல்லது அதை
விமர்சிப்பார்களா? வேண்டுமென்றால் இவர்களைப் போன்ற சொரனையற்றவர்கள்
ஏற்றுக் கொள்வார்களே தவிர ரோஷமுள்ள எவரும் இதை ஏற்றுக்
கொள்ளமாட்டார்கள் என்பதுதான் உண்மை.
உயிரைவிடவும் அதிகம்
நேசிக்கக்கூடிய உத்தமரை தரக்குறைவாகப் பேசுவதை பொறுக்க முடியுமா?
இந்த இடத்தில் ஐக்கிய நாட்டு சபைக்குக் கீழ் இயங்கிக்
கொண்டிருக்கக்கூடிய மனித உரிமை மீறல் சபை
12-04-2005ம் ஆண்டு எந்த மதத்தையும் குறைகூறுவது கூடாது என்ற முடிவை
நிறைவேற்றியது என்பதையும் நினைவு படுத்த விரும்புகின்றேன்.
டென்மார்க் மற்றும் வெளிநாடுகளில் வாழ்ந்து கொண்டிருக்கும்
கிறிஸ்தவர்கள் மற்றும் கிறிஸ்தவர்கள் அல்லாதவர்களில் நடுநிலைவாதிகளே!
நீங்கள் இந்தக் கொடுமையை தட்டிக் கேட்க வேண்டும், இல்லையெனில்
இவ்வுலகத்திலும் மறுஉலகத்திலும் அல்லாஹ்வின் தண்டனை காத்துக்
கொண்டிருக்கின்றது என்பதை மறந்துவிட வேண்டாம் என்ற எச்சரிக்கையை
விடுக்கின்றேன். இந்த மாபாதகத்தில் ஈடுபட்டவர்களே! அல்லாஹ்விடம்
நீங்கள் செய்த மாபாதகச் செயலுக்காக பிழைபொறுப்புத் தேடுங்கள்.
இல்லையெனில் சமீபத்தில் அல்லாஹ்வின் தண்டனை உங்களைக் காத்துக்
கொண்டிருக்கின்றது. மறுமையில் அதைவிடவும் பன்மடங்கு தண்டனையுண்டு
என்பதை மறந்துவிட வேண்டாம்.
அல்லாஹ்வின் நல்லடியார்களே!
நமது உயிரைவிடவும் நேசிக்கக்கூடிய அல்லாஹ்வின் தூதர்,
தரக்குறைவாக விமர்சிக்கப்படும்போது
அனுமதிக்கப்பட்ட முறையில் நமது எதிர்ப்புகளை பதியவைப்பது நமக்குரிய
கடமையாகும். |