Index |Subscribe mailing list | Help | E-mail us

 

அபூ உமர்

சுனாமி - பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவிடுவீர்

 

போர் மற்றும் கலவரம் என்ற பெயரில் மனித உயிர்கள் மாய்க்கப்பட்டுவரும் இவ்வேளையில் பல்லாயிரம் உயிர்களும் அவர்களின் கோடிக்கணக்கான சொத்துக்களும் சிறு நேரத்தில் தண்ணீரில் அடித்துச்செல்லப்பட்டுள்ளது. போரை கூட நிறுத்திவிடலாம். ஆனால் இத்தகைய இயற்கைச் சீற்றங்களை?

 

 

கடந்த 26.12.2004 ஞாயிறு அன்று ஏற்பட்ட நிலநடுக்கமும் கடல்கொந்தளிப்பும் தமிழ்நாட்டின் கடலோரப்பகுதியை விவரிக்க முடியாத பாதிப்பை ஏற்படுத்தி இருந்தாலும் நாகை மாவட்டம் மிகுந்த உயிர்சேதமும் பொருட்சேதமும் அடைந்திருக்கிறது. இதைவிட இலங்கையில் ஏற்பட்ட உயிர்சேதம் சொல்லி மாளாது. உலகத்தையே திணறடித்துவிட்டது சுனாமி.

 

காரைக்காலில் ஒரு தனியார் ஆஸ்பத்திரிக்கு சென்ற ஒரு முஸ்லிம் குடும்பத்தினர், டாக்டரை சந்திக்க காத்திருக்கும் அந்த சிறு நேரத்தை அருகிலிருக்கும் கடலோரகாற்றை சுவாசிக்க செலவிடலாம் என்று சென்றவர்கள் டொயோட்டா குவாலிஸோடு அடித்துச் செல்லப்பட்டிருக்கிறார்கள்.

 

உயிரற்ற இளந்தளிர்களும் தாய்மார்களும் பெருங்குழிகளில் ஒன்றாக புதைக்கப்படுவதை பார்த்து, அவர்களின் உறவினர்கள் கதறுவதை கண்டு நம் கண்ணில் நீர் துளிர்ப்பதை தவிர்க்க இயலவில்லை.

 

குழந்தைகளை பறிகொடுத்த தாய்மார்களும் அவர்களின் உறவினர்களும் கதறி அழும் காட்சி வன்நெஞ்கங்களையும் கலங்கடித்துவிடும். இவர்களெல்லாம் யார்? பிறரிடம் கையேந்தாமல் சொந்த தொழில்செய்து உழைத்து நெஞ்சை நிமிர்த்தி வாழ்ந்தவர்கள். இயற்கையின் சீற்றத்தினால் நிலைகுழைந்துள்ளார்கள். அவர்களுக்கு ஆறுதல் சொல்வதும், உணவளிப்பதும், அவர்கள் முன்புபோல் தொழில்செய்து தலைநிமிர்ந்திட அவர்களுக்கு தோளோடு தோள்கொடுப்பது நமது கடமை.

 

கண்ணீர் சொட்ட எழுதிவிட்டாலோ அல்லது இறங்கல் தெரிவித்து விட்டாலோ நம் பணிகள் முடிந்துவிடாது. அனைத்து வழிகளையும் பயன்படுத்தி அவர்களின் துயர்துடைத்திட வேண்டும்.

 

இதற்கெல்லாம் யாராவது உண்டியல் குலுக்கி உங்களிடம் வருவார்கள் என்று காத்திருக்காமல் நாமாகவே முன்வந்து நமக்கு நம்பகமான பொதுசேவை குழுமங்கள் மூலம் உதவிகளை செய்திட வேண்டும். நண்பர்களிடம் உள்ள நல்ல துணிகளை சேகரித்து அதனை கார்கோ மூலம் தமிழ்நாட்டுக்கும் இலங்கைக்கும் அனுப்பி அவர்களுக்கு உதவமுன்வாருங்கள். உங்கள் வீடுகளில் உபரியாக உள்ள  சாமான்களை அவர்களுக்கு கொடுத்திடுமாறு அறிவுறுத்துங்கள்.

 

நாங்கள் நபி(ஸல்) அவர்களிடம் முற்பகலில் இருந்த போது, முளர் கூட்டத்தைச் சார்ந்த அனைவருமோ, அல்லது அவர்களில் பெரும்பாலனவர்களோ வாட்களைத் தொங்க விட்டுக் கொண்டும், முரட்டுத்தனமான கம்பளியைப் போர்த்திக் கொண்டும் நிர்வாணமாக வந்தனர். அவர்களின் ஏழ்மை நிலையைக் கண்ட நபி(ஸல்) அவர்களின் முகம் மாறியது. நபி(ஸல்)அவர்கள் (வீட்டினுள்) நுழைந்து, பிறகு வந்து பாங்கு கூறும் படியும், இகாமத் கூறும் படியும் (தொழுகைக்கான அழைப்பு விடுக்கும்படி) பிலாலிடம் கூறினார்கள். (பிறகு) தொழவைத்தார்கள். பின்பு உரை நிகழ்த்தினார்கள். தன் உரையில் 4:1, 59:18-20 ஆகிய வசனங்களையும் ஓதிகாட்டிய பிறகு, "ஓருவர் தன் தங்க நாணயத்திலிருந்தோ, வெள்ளி நாணயத்திலிருந்தோ, தன் ஆடையிலோ, கோதுமையில் ஒரு ஸாஉ அளவோ, பேரீத்தம் பழத்தில் ஒரு ஸாஉ அளவோ தர்மம் செய்யட்டும்" என்று கூறினார்கள்.

பேரீத்தம் பழத்தின் பாதியையேனும் தர்மமாக வழங்கட்டும் என்று கூறும் அளவுக்கு அவர்கள் தர்மத்தைப் பற்றி கூறினார்கள்.

அப்போது மதீனாவாசி ஒருவர் தன் உள்ளங்கை கொள்ளாத அளவுக்கு ஒரு பையை தூக்கி வந்தார். (அதனைப்பார்த்து) பின்பு மக்களும் கொண்டு வந்தனர். உணவுப் பொருள்களும், ஆடைகளும் இரு குவியல் போன்று குவிந்திருந்ததை நான் கண்டேன். நபி(ஸல்) அவர்களின் முகம் தங்கம் போன்று பிரகாசிக்கத்திருந்ததையும் நான் கண்டேன்.
அறிவிப்பவர்:
ஜரிர்(ரலி) - நூற்கள்: முஸ்லீம், நஸயீ, இப்னுமாஜா, திர்மிதீ

 

நபியவர்கள் ஓதிக் காட்டிய 4:1, மற்றும் 59:18-20 ஆகிய திருக்குர்ஆன் வசனங்கள்:

மனிதர்களே! உங்கள் இறைவனுக்குப் பயந்து நடந்து கொள்ளுங்கள், அவன் உங்கள் யாவரையும் ஒரே ஆத்மாவிலிருந்து படைத்தான், அவரிலிருந்தே அவர் மனைவியையும் படைத்தான்; பின்னர் இவ்விருவரிலிருந்து, அநேக ஆண்களையும் பெண்களையும் (வெளிப்படுத்தி உலகில்) பரவச் செய்தான்; ஆகவே, அல்லாஹ்வுக்கே பயந்து கொள்ளுங்கள்; அவனைக்கொண்டே நீங்கள் ஒருவருக்கொருவர் (தமக்குரிய உரிமைகளைக்) கேட்டுக் கொள்கிறீர்கள்; மேலும் (உங்கள்) இரத்தக் கலப்புடைய உறவினர்களையும் (ஆதரியுங்கள்) - நிச்சயமாக அல்லாஹ் உங்கள் மீது கண்காணிப்பவனாகவே இருக்கின்றான்.(4:1)

ஈமான் கொணடவர்களே! அல்லாஹ்வுக்கு அஞ்சி நடந்து கொள்ளுங்கள்; மேலும், ஒவ்வொருவரும் (மறுமை) நாளுக்காக தான் முற்படுத்தி வைத்திருப்பதைப் பார்த்துக் கொள்ளட்டும்; இன்னும், நீங்கள் அல்லாஹ்வை அஞ்சி நடந்து கொள்ளுங்கள்; நீங்கள் செய்பவற்றை, நிச்சயமாக அல்லாஹ் நன்கறிந்தவன்.(59:18)

அன்றியும், அல்லாஹ்வை மறந்து விட்டவர்கள் போன்று நீங்கள் ஆகிவிடாதீர்கள்; ஏனெனில் அவர்கள் தங்களையே மறக்கும்படி (அல்லாஹ்) செய்து விட்டான்; அத்தகையோர் தாம் ஃபாஸிக்குகள் - பெரும் பாவிகள் ஆவார்கள்.(59:19)

நரக வாசிகளும், சுவர்க்கவாசிகளும் சமமாக மாட்டார்கள்; சுவர்க்கவாசிகளே பெரும் பாக்கியம் உடையோர்.(59:20)

 

சுனாமி சில புகைப்பட தொகுப்புகள்:

 

 

 

 

 

 

 

 

 

 

 

--------------------------------------------------------------------

 

இந்த நேரத்தில் சுனாமி எப்படி தோன்றுகிறது என்பதை நம்மவர்கள் அறிந்துக்கொள்வது மிக்க உதவியாக இருக்கும். கீழ்கண்ட கட்டுரை விகடனில் வெளியானது. அறிவுபூர்வமான தகவல்கள் உள்ளதால் யுனிகோடில் உங்களுக்காக கொடுக்கிறேன். தகவல் தந்த பெருமை விகடனுக்கே.

 

எச்சரிக்கை! பேரழிவு சுனாமி... என்னதான் பாதுகாப்பு?
 

நன்றி: http://vikatan.com

ரவீந்தர்சிங் பல்லா - வி.ஸ்ரீனிவாஸ்


இந்த இருவரும் புதுவையைத் தலைமையிடமாகக் கொண்டு ஒரு தன்னார்வ நிறுவனத்தை நடத்திவருகிறார்கள். இருவருமே சுற்றுச்சூழல் அறிஞர்கள்.
‘Forum for Ecological Research Advocacy and Learning’ என்ற இந்த அமைப்பு, சுற்றுச்சூழல் பற்றிய விழிப்பு உணர்வு பிரசாரம் செய்வதையே தனது முக்கிய பணியாகக் கொண்டிருக்கிறது. பல்வேறு ஆராய்ச்சிகளையும் இதற்கென்றே செய்து வருகிறது.
 

அந்தக் கோரமான அதிகாலையில் என்னென்ன நடந்தது என்பதை முதலில் நாம் புரிந்துகொள்ள வேண்டும். இந்தோனேஷியாவின் சுமத்ரா தீவின் வடமேற்குக் கடலில் இந்திய நேரப்படி காலை 6.29-க்கு ஒரு பூகம்பம். அதன் வீரியம் ரிக்டர் அளவில் 8.9 என்று பதிவானது. கடந்த நாற்பது வருடங்களில் நிகழ்ந்த மிக மோசமான நிலநடுக்கம் இது. இந்தக் கடலடி நிலநடுக்கத் தின் அதிர்வுகளால் உண்டான "சுனாமி" (Tsunami) தான் இத்தனை அழிவுக்கும் வழி வகுத்தது.
 

 

சுழற்றும் சுனாமி அலை...

 

ஜப்பானிய துறைமுகங்களைத்தான் இதுபோன்ற பேரலை அடிக்கடித் தாக்கும். ஜப்பானியர்கள்தான் இதற்கு "சுனாமி" என்று பெயர் சூட்டினார்கள். இதன் அர்த்தம் "துறைமுக அலை" என்பது!

பலருக்கும் தெரியாத ஒரு விஷயம் - டிசம்பர் 26-ம் தேதி கடலுக்குள் நிகழ்ந்த அந்த முதல் பூகம்பத்துக்குப் பிறகு, அடுத்தடுத்து மாலை நான்கரை மணிவரை பதினாறு முறை பூகம்பம் ஏற்பட்டிருக்கிறது. இதில் அந்தமான் அருகே நிகழ்ந்த ஒரு பூகம்பத்தின் அளவு 7.3 ரிக்டர். ஒரு பெரிய பூகம்பத்துக்கு அடுத்து வரும் அதிர்வுகள் இந்தளவுக்கு அதிகமாக இருக்காது. இப்படி அடுத்தடுத்து அருகருகே பலமாக நிகழ்வது புதிது.

சுமத்ரா அருகே காலையில் பூகம்பம் நிகழ்ந்த இடத்தின் மையப்புள்ளி, சென்னை கடற்கரையிலிருந்து 2028 கிலோமீட்டர் தூரத்தில் இருக்கிறது. அந்த அதிர்வினால் உருவான "சுனாமி" சுமார் இரண்டே மணி நேரத்தில் இந்தியாவின் கிழக்குக் கரையைத் தாக்கியிருக்கிறது என்றால், ராட்சத அலை என்ன வேகத்தில் பயணித்து வந்திருக்கும் என்று புரிந்துகொள்ள முடியும்.




பூகம்பமும், "சுனாமி"யும் எப்படி நிகழ்கின்றன? இதைத் தெரிந்து கொள்ள, பூமிப்பந்தைக் கொஞ்சம் தோண்டிப் பார்க்க வேண்டும்.

மூன்று அடுக்குகளைக் கொண்டது பூமி. இதன் உட்புறக் கருவிலும், அதை ஒட்டிய நடுப் பகுதியிலும் 5000 டிகிரி சென்டிகிரேடு வரை வெப்பநிலையில் கொதிக்கும் குழம்பு இருக்கிறது. இதன் மேற்புறம் இருக்கும் தட்டில்தான் நாமெல்லாம் இருக்கிறோம். இந்தத் தட்டு, நிலப்பகுதியில் 32 முதல் 71 கி.மீ. தடிமனும், கடலின் ஆழப்பகுதியில் நான்கு முதல் பத்து கிலோமீட்டர் தடிமனும் கொண்டது. இந்தத் தட்டு பூமிப்பந்து முழுமைக்கும் ஒன்றாக இல்லை. கால்பந்தின் மேலே இருக்கும் கட்டங்கள் போல பன்னிரண்டு தனித்தனி தட்டுகளாக உள்ளது. இந்த பன்னிரண்டு தட்டுகளின் மேல்தான் எல்லா கண்டங்களும், கடல்களும் இருக்கின்றன.

பூமிப்பந்தின் உட்புறக் குழம்பில் ஏற்படும் வெப்பநிலை மாறுபாடுகளால் இந்தப் பன்னிரண்டு தட்டுகளும் மெள்ள நகர்ந்து தங்களை "அட்ஜஸ்ட்" செய்துகொள்கின்றன. இந்த நகர்வு மிக மெதுவாகவே நிகழ்ந்தாலும் அதன் விளைவுகள் பயங்கரமானவை. நகரும் முயற்சியில் இந்த தட்டுகள் ஒன்றோடொன்று உரசிக் கொள்கிற சமயத்தில்தான் பூகம்பம் ஏற்படுகிறது. ஒரு வருடத்தில் உலகம் முழுக்க நடக்கிற பூகம்பங்களின் மொத்த சக்தி, ஹிரோஷிமாவை அழித்த அணுகுண்டுகளைப் போல ஒருலட்சம் அணுகுண்டுகளுக்கு ஈடானது.



கடலுக்கடியில் ஒரு பூகம்பமோ, எரிமலைச்சீற்றமோ ஏற்படும்போது அதன் வீரியத்தைப் பொறுத்து "சுனாமி" ஏற்படுகிறது. இவை சாதாரண கடலலைகள் போல வரிசையாக அடுத்தடுத்து வராது. ஒரு அலைக்கும் அடுத்த அலைக்கும் இடையே நூறு கிலோமீட்டர் இடைவெளி கூட இருக்கும். ஒரு "சுனாமி" கரையைத் தாக்கிய பிறகு ஒருமணி நேரம் கழித்துக்கூட அடுத்த "சுனாமி" தாக்கும்.

"சுனாமி" வருவது கடலின் மேல்மட்டத்திலிருந்து பார்த்தால் தெரியாது. அது கடலின் மேல்மட்டத்தில் பெரிய சலனம் எதையும் காட்டாமல் ஆழமான பகுதியிலேயே மிகவேகமாக பயணிக்கும். இதன் வேகத்தைக் குறிப்பிட ஒரு உதாரணம் சொல்லாம்... லாஸ் ஏஞ்சலீஸை ஒட்டிய கடல் பகுதியில் ஒரு "சுனாமி" உருவாகிறது என்றால், அந்த நொடியே நீங்கள் ஒரு ஜெட் விமானத்தில் சீறிப்பறந்தால்கூட, "சுனாமி" டோக்கியோவைப் போய்த் தாக்கும்போது நீங்கள் ரொம்பப் பின்தங்கியிருப்பீர்கள்.


 


ஆழ்கடலில் வேகமாக வரும் அது, கரையை நெருங்கும்போதுதான் தனது அழிவு சக்தியைக் காட்டும். கரையோரம் கடலின் ஆழம் குறைவதால் இதுவும் வேகம் குறையும். அப்படி வேகம் குறையும்போது, விசையை உருமாற்றி தனது உயரத்தை நீட்டிக்கொள்ளும். சமயங்களில் முப்பதுமீட்டர் உயரம் வரைகூட எழும்பும். அப்படியே அது கடற்கரையோர நகரங்களை மூழ்கடித்துவிடும். கரையில் இருக்கும் எல்லாவற்றையும் அபகரித்துவிடும்.

புயல் போன்ற சீற்றங்களின்போது கடலின் மேற்புறம் கொந்தளிப்பாக இருக்கும். கரையைத் தாண்டிவந்து சில மீட்டர் தூரம் வரை அலைகள் சீறுமே தவிர, எல்லை தாண்டி வந்து அழிவை உண்டாக்காது. அந்த நேரத்தில் கடலுக்குள் போகிற மீனவர்கள்தான் பாதிக்கப்படுவார்கள். "சுனாமி" அப்படியே உல்டா... கடலுக்குள் இருக்கும் சின்ன கட்டுமரத்தைக்கூட இது அதிகம் பாதிக்காமல் கடந்து செல்லும். பலசமயங்களில் கட்டுமரத்தில் இருப்பவர்களால் ‘தங்களுக்குக் கீழே ஒரு பேரழிவு சக்தி கரை நோக்கிச் செல்கிறது’ என்பதை உணரக்கூட முடியாது.

சரி, ஒட்டுமொத்தமாக நம்மையெல்லாம் கதற வைத்திருக்கும் டிசம்பர் 26 "சுனாமி" உருவான விதம் பற்றி விரிவாகப் பார்ப்போம்.


 

இந்தியாவை உள்ளடக்கிய இந்தோ-ஆஸ்திரேலியன் பூமித்தட்டும், யூரேசியன் தட்டும் ஒன்றுடன் ஒன்று மோதிக்கொண்டன. இதில் இந்தோ-ஆஸ்திரேலியன் தட்டு, யூரேசியன் தட்டுக்குக் கீழே அமுங்கியது. இப்படி நமது தட்டு அமுங்கியதால்தான் "சுனாமி" இந்தியக் கரைப்பக்கம் அதிவேகமாகப் பயணித்து வந்தது. இல்லாவிட்டால், நேரெதிர் புறமாக அது சரிந்து நகர்ந்து இந்தோனேஷியாவையும் அதற்கப்பால் வருகிற நிலப்பகுதிகளையும் கபளீகரம் செய்திருக்கும்.

இந்தியாவைத் தாக்கிய ‘சுனாமி’ நானூறு மைல் வேகத்தில் வந்ததாகச் சொல்கிறார்கள்.

குறுகிய வளைகுடா பகுதிகளில் இது நுழையும்போது பெரிய அலை குறுக்கப்படுவதால் சீற்றம் கொடுமையாக இருக்கும். அதுவே, கரையை ஒட்டிய பகுதியில் மாங்குரோவ் காடுகள் அல்லது பவழப்பாறைகள் இருந்தால் "சுனாமி"யின் முரட்டுத்தனம் மட்டுப்படும்... சேதமும் குறைவாக இருக்கும். நமது தமிழகக் கரையும் ஒருகாலத்தில் அப்படித்தான் இருந்தது. ஆனால், குடியிருப்புகளுக்காகவும், விவசாயத்துக்காகவும், மீன்பிடி தொழிலுக்காகவும் இயற்கை அரண்களை நாமே கொஞ்சம் கொஞ்சமாக அழித்துக் கொண்டதற்கு விலையாகத்தான் இத்தனை உயிர்களைப் பலி கொடுத்திருக்கிறோம்.

பூகம்பம் ஏற்படுவதை முன்கூட்டியே அறிவதில் ஆயிரம் சிக்கல்கள் இருக்கின்றன என்கிறார்கள் விஞ்ஞானிகள். காரணம், அது எந்த அபாய அறிகுறிகளையும் முன்கூட்டி கொடுத்துவிட்டு வருவதில்லை. ஆனால், பூகம்பத்தின் விளைவாகக் கிளம்பும் "சுனாமி"யை அது கரையைத் தொடுமுன் அறிந்து, கரையோரப் பகுதிகளிலிருந்து மக்களை அப்புறப்படுத்திவிட முடியாதா?

"முடியும்" என்று சொல்லி, இதற்கென்றே சில வழிமுறைகளை அமெரிக்கா உருவாக்கி இருக்கிறது. இது உருவான வரலாறு வித்தியாசமானது -

அமெரிக்காவின் அலாஸ்கா மாகாணத்திலும், ஹவாய் தீவுகளிலும் அடிக்கடி "சுனாமி" தாக்கும். குறிப்பாக ஹவாய் தீவுகளை "சுனாமி"யின் தலைநகரம் என்றே அழைப்பார்கள். அடிக்கடி "சுனாமி" தாக்கும் பசிபிக் கடலின் மையத்தில் இருக்கும் தீவு அது! பத்து வருஷங்களுக்கு ஒரு முறையாவது தாக்குதல் நடக்கும்.

1946-ம் ஆண்டு ஏப்ரல் முதல் தேதி நடந்த ஒரு தாக்கு தல்தான் புதிய கண்டுபிடிப்புக்கு வழி வகுத்தது.

சிலசமயங்களில், "சுனாமி" கரையைத் தொடுவதற்கு முன்பாக கடலின் நீர் மட்டம் திடீரென படுவேகமாகக் குறைந்து பிறகே அசுரத்தனமாகத் திரும்பி எழும்.அப்படித்தான் குறிப்பிட்ட தினத்தன்றும் நடந்தது. அந்த சபிக்கப்பட்ட நாளில் ஹவாய் தீவுகளின் கடல்பகுதி சரேலென ஒரு கிலோ மீட்டர் தூரத்துக்கு உள்வாங்கிவிட்டது. கடலுக்கடியில் இருந்த பவழப்பாறைகள் எல்லாம் அப்பட்டமாக தங்கள் அழகைக் காட்டிக்கொண்டு நிற்க, பள்ளிமாணவர்களுக்கு தலைகால் புரியவில்லை. விபரீதம் புரியாமல் அவர்கள் கடல் இருந்த பகுதிக்குள் போய் அவற்றைத் தொட்டுப் பிடித்து விளையாடினார்கள். அடுத்த சில நிமிடங்களில் கடல் நீர் பலமடங்கு வேகத்துடன் கரையை நோக்கி முன்னேறி மூடிக் கொள்ள... சத்தமின்றி செத்துப்போனவர்களின் எண்ணிக்கை 159.

அமெரிக்க அரசை பதைபதைக்க வைத்த இந்தக் கொடூரத்துக்குப் பிறகுதான் ‘பசிபிக் சுனாமி எச்சரிக்கை அமைப்பு’ என்ற தனிப் பிரிவு உருவாக்கப்பட்டது. "சுனாமி"யால் அடிக்கடி பாதிப்புக்குள்ளாகும் பலநாடுகள் இதில் உறுப்பினர் ஆயின. கடலுக்குள் ஏற்படும் பூகம்பங்களை விழிப்போடு இந்த அமைப்பு கண்காணிக்கத் துவங்கியது. ரிக்டர் அளவில் 7.5-க்கு மேலே ஏற்படும் கடல் பூகம்பங்கள் "சுனாமி"யை ஏற்படுத்தும் என்பதை இந்தத் தனிப் பிரிவு முதலில் நிர்ணயம் செய்தது. உலக உருண்டையில் எந்த கடல் பகுதியில் பூகம்பம் ஏற்பட்டாலும், அதன் பயண திசையை உடனே கண்டறிந்து, அந்த அபாய திசையில் உள்ள கரையோர மக்களுக்கு அவசர எச்சரிக்கை விடுக்கப்படும். அதைத் தொடர்ந்து அவர்கள் மூட்டைமுடிச்சுக்களைக் கட்டிக் கொண்டு தயாராகிவிடுவார்கள்.

குறுகிய அந்த அவகாசத்தில் என்னவெல்லாம் கையில் கொண்டு செல்லலாம் என்பது முதல், எந்த திசையை நோக்கி அவர்கள் இடம் பெயர வேண்டும் என்பது வரை அவர்களுக்கு முன்கூட்டி அந்தந்த அரசுகளால் பயிற்சி கொடுக்கப்பட்டிருக்கும். சாப்பாடு, விலையுயர்ந்த பொருட்கள், போர்வைகள், மெழுகுவத்தி, உயிர்காக்கும் மருந்துகள், குழந்தைகளுக்கான உணவு என கச்சிதமான ஒரு லிஸ்ட்டே இருக்கிறது. வாகனங்களுக்கு விரைவாக பெட்ரோல் நிரப்புவது எப்படி என்று இந்தப் பகுதியின் "பெட்ரோல் நிலைய"ங்களுக்கும் பயிற்சி தரப்பட்டிருக்கும்.

அடிக்கடி "சுனாமி" வரும் கடல்பகுதிகளில் அலைகளின் தன்மையைக் கண்காணிக்க தனியாக மானிட்டர்களை இந்தத் தனிப் பிரிவு அலுவலகம் ஏற்படுத்தி இருக்கிறது. இந்த மானிட்டர்கள் அலைகளின் வேகத்தைக் கணித்து, சாட்டிலைட் மூலம் சொல்லிக் கொண்டே இருக்கும். இதை ஒரு நொடி விடாமல் இந்த அலுவலக நிபுணர்கள் கண்காணித்துக் கொண்டே இருப்பார்கள்.

கடந்த 1948 முதல் இப்படி ஐந்து "சுனாமி"களை முன்கூட்டிக் கண்டுபிடித்து உயிர்ச்சேதங்களை தவிர்த்திருக்கிறது இந்த அமைப்பு. ஆனால், 1961-ல் ஹிலோ தீவுகளுக்கு "சுனாமி" வந்தபோது கொஞ்சம் அசந்துபோய் அதைக் கோட்டைவிட்டார்கள். அப்போது பலியானவர்கள் 61 பேர். இப்படி சில சமயங்களில் தவறு நேர்ந்தாலும் இதைவிட சிறந்த சிஸ்டம் இப்போதைக்கு வேறு இல்லை.

பசிபிக் பெருங்கடலோடு ஒப்பிடும்போது நமது இந்தியப்பெருங்கடல் மற்றும் வங்காள விரிகுடாவில் "சுனாமி" வருவது அரிதான விஷயம்தான். இதனாலேயே இப்படி முன்னேற்பாடுகளைப் பற்றி நாம் இதுவரை யோசிக்கவில்லை. அமெரிக்கா உருவாக்கிய அந்த தனிப்பிரிவிலும் இடம் பெறவில்லை. எப்போதுமே அப்பாவி உயிர்களைப் பலி கொடுத்துப் பாடம் கற்கிற நமது வழக்கப்படி இப்போது கற்றிருக்கிறோம். கிடைத்த பாடத்தை வைத்து, என்ன செய்யப் போகிறோம் என்பதுதான் முக்கியம்!