Index |Subscribe mailing list | Help | E-mail us

கொடிய ஆயுதம்

M.ஜமீலா B.A (Arabic), அஸ்மா அரபி கல்லூரி, ஏர்வாடி

 

இறைவன் மனிதர்களுக்கு எத்தனையோ அருட்கொடைகளை அளித்திருக்கிறான் அவற்றில் மிக முக்கியமானது நாவாகும் மனிதனின் அன்றாட செயல்களில் அவனை முன்னேற்றுவதும் தவறான பாதைகளின் பக்கம் அழைத்து செல்வதிலும் முதன்மையாக இருப்பது அவனுடைய நாவு தான்.


நாவை கூரான கத்திக்கு ஒப்பாகக் கூறலாம் கத்தியைக் கொண்டு ஓர் உயிரைக் காப்பாற்றவும் செய்யலாம் ஓர் உயிரை எடுக்கக் கொலையும் செய்யலாம். இதே போன்றுதான் நாவும்.
நாவு தான் சுவர்க்கம் செல்வதற்கும் நரகம் செல்வதற்கும் முக்கிய காரணமாக அமையும்.

நபி(ஸல்)அவர்கள் எவர் தமது இரு தொடைகளுக்கிடையில் உள்ளதையும் இரு தாடைகளுக்கிடையில் உள்ளதையும் பாதுகாத்துக் கொள்கிறாரோ அவர் சுவர்க்கம் செல்வதற்கு நான் பொறுப்பேற்றுக் கொள்கிறேன் என்று கூறினார்கள்.


நாவை பாதுகாத்தால் சுவர்க்கம் உண்டு என்று பொறுப்புணர்வோடு சொன்ன நபி(ஸல்)அவர்கள்தான் நாவை தவறாக பயன்படுத்தினால் நரகம் உண்டு என்று எச்சரித்துள்ளார்கள்.


நபி(ஸல்)அவர்கள், ஒரு அடியான் சில நேரங்களில் இறைவனின் திருப்பொருத்தத்திற்குரிய விஷயங்களை அதன் முக்கியத்துவத்தை உணராமலேயே கூறுகிறான். (எனினும்) இறைவன் அதற்காக அவனின் அந்தஸ்துகளை உயர்த்துகிறான்.

இன்னும் ஒரு அடியான் சில வேளைகளில் இறைவனின் கோபத்திற்குரிய விஷயங்களை அதன் தீங்குகளை உணராமலேயே பேசிவிடுகிறான் அதன் காரணமாக அவன் நரகில் வீழ்கிறான் என்று கூறினார்கள்.
(ஆதாரம்: புகாரி)

 

இஸ்லாம், மனிதன் மனம்போன போக்கில் நாவைப் பயன்படுத்தி இழிவைத் தேடிக்கொள்ளாமல் அவன் கண்ணியத்தோடு பிறரிடம் நடந்து தன் மதிப்பைப் பெற்றுக் கொள்ள வழிவகுப்பதோடு மட்டுமல்லாமல் அவனை எச்சரிக்கவும் செய்கிறது. ஆனால் இன்று இஸ்லாமிய சமுதாயம் எவ்வாறு உள்ளது என்பதை ஒவ்வோர் இஸ்லாமிய ஆணும், பெண்ணும் சிந்தித்துப் பார்க்க வேண்டும்.

வருடந்தோறும் ஒரு நாள் முட்டாள்களாகிக் கொள்வோம் என்று பலர் முடிவு செய்துக் கொண்ட தினம் தான் ஏப்ரல் முதல் நாள். டெலிபோனில் அதிர்ச்சி தகவல் வரும். உடனிருப்பவர்களால் சற்றும் எதிர்பார்க்காமல் பயங்கரத் தகவல்களை சொல்வர். இவை அனைத்தும் அந்நாளில் பொய்யின் அடிப்படையிலேயே அமைந்திருக்கும். பிறர் துன்பத்தில் மகிழ்ச்சி கொள்ளும் கொடூரமானவர்கள்
கொண்டாடும் ஒரு நாளை முஸ்லிம்கள் கொண்டாடுவது முறையன்று.


பொய்யும் அவதூறுகளும் பல மனிதர்களின் வாழ்க்கையைப் பாழ்படுத்தி விடுவதால் விளையாட்டுக்காக கூட பொய் சொல்ல இஸ்லாம் அனுமதிக்கவில்லை.

நபி(ஸல்) அவர்கள், "பிறரை சிரிக்க வைப்பதற்காக பொய் பேசுபவனுக்கு கேடுதான்; அவன் நாசமாகட்டும்" என்று கூறினார்கள். (ஆதாரம்: திர்மிதி)

24  மணிநேர அற்ப சந்தோஷத்திற்காகப் பொய்யின் அடிப்படையிலான ஏமாற்று வேலைகள் அனைத்தும் யூதர்களால் உருவாக்கப்பட்டது யூதர்களின் பல கலாச்சாரப் பழக்க வழக்கங்களில் இஸ்லாமியர்களும் பங்கெடுத்து இறைவனிடம் குற்றவாளிகளாக மறுமையில் நிற்பார்கள்.

நபி(ஸல்) அவர்கள் எவர் மாற்று மதத்தார்களை பின்பற்றுகிறார்களோ அவர் என்னைச் சார்ந்தவர் அல்லர் என்று கூறினார்கள். (ஆதாரம்: புகாரி)

இந்நாளில் மட்டும் தான் என்றில்லாமல் மனிதன் தனது அன்றாட வாழ்வில் பொய்யையும் சேர்த்தே வாழ்ந்து கொண்டிருக்கிறான். இஸ்லாம் ஒப்புக்குகூடப் பொய் சொல்ல அனுமதிக்கவில்லை.


அஸ்மா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்,

நபி (ஸல்) அவர்களின் துணைவியரில் ஒருவரை அழைத்துக் கொண்டு அண்ணலாரின் இல்லத்திற்குச் சென்றோம் நாங்கள் அண்ணலாரின் வீட்டை அடைந்த போது அண்ணலார் ஒரு பெரியபால் குவளையை எடுத்து வந்தார்கள் திருப்தியடையும் வரை பாலைக் குடித்தார்கள். பின் தம் துணைவியாருக்குக் கொடுத்தார்கள். அத்துணைவியார் பசியிருந்தும் எனக்கு விருப்பம் இல்லை என்று கூறினார்கள் அவர்கள் ஒப்புக்குப் பதிலளிப்பதைப் புரிந்து கொண்ட அண்ணலார் நீ பசியையும் பொய்யையும் ஒன்று சேர்க்காதே என்று கூறினார்கள். (ஆதாரம்: தப்ரானி)

நம்முடைய இஸ்லாமிய மார்க்கம் குழந்தைகளுடைய உள்ளங்களில் உண்மையை விதைக்கவே நம்மைத் தூண்டுகிறது.

 

நபி(ஸல்) அவர்கள். "தாய் தான் ஒரு குழந்தையின் ஆரம்பப்பள்ளி" என்று கூறியுள்ளார்கள். (ஆதாரம்: முஸ்லிம்)

இன்று தாயானவள் தன் குழந்தைக்கு உண்மைக்குப் புறம்பான செய்திகளை கூறிப் பிஞ்சு உள்ளங்களில் நஞ்சை ஆழமாகப் பதிய வைக்கிறாள். இன்னும் குழந்தைகளை சமாதானம் செய்கிறேன் என்ற பெயரில் குழந்தைகளை ஏமாற்றுவதும் பொய்யில்தான் சேரும்.

அப்துல்லாஹ் இப்னு ஆமிர் அவர்கள் அறிவிக்கிறார்கள். ஒருமுறை நபி (ஸல்) அவர்கள் வருகை தந்தபோது என் தாயார் என்னை அழைத்து இங்கே வா உனக்கு ஒரு பொருள் தருகிறேன் என்று கூறினார். அதற்கு நபி (ஸல்) அவர்கள் நீர் அவனுக்கு என்ன தர விரும்புகின்றீர் என்று வினவினார்கள் அதற்கு என் தாயார் நான் அவனுக்கு பேரீத்தம்பழம் தர விரும்புகின்றேன் என்று கூறினார் அதற்கு நபி (ஸல்) அவர்கள் என் தாயாரிடம் நீர் எதனையாவது அவனுக்கு கொடுப்பதாக அழைத்துக்  கொடுக்கவில்லையென்றால் உம்வினைப்பட்டியலில் இந்த பொய் எழுதப்பட்டுவிடும் என்றார்கள். (ஆதாரம்: அபுதாவூத்)

இன்னும் அரைகுறையுள்ள ஒரு விஷயத்தை கேள்விப்பட்டு பலருடன் அதை வெளிப்படுத்திப் பேசுகின்றனர். சந்தேகமான ஒவ்வொரு விஷயங்களை ஆராயும் போது அதில் பலவித பொய்கள் இட்டுக் கட்டப்படுகின்றன.


இறைவன் தன் திருமறையில் எதைப்பற்றி உமக்கு தீர்க்க ஞானமில்லையோ அதை (செய்யாதே) தொடர வேண்டாம். (அல்குர்ஆன் 17:36)

நபி (ஸல்) அவர்கள் கூறியதாக அலி(ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள், உன்னைச் சந்தேகத்தில் ஆழ்த்தக் கூடியதை விட்டு விட்டு சந்தேகமில்லாததைச் செய்திரு. ஏனெனில் உண்மையே உள்ளத்தின் அமைதியாகும் பொய்தான் சந்தேகத்தை ஏற்படுத்தக் கூடியது (ஆதாரம்: திர்மிதி)

சந்தேகம் உள்ள விஷயத்தின் பக்கமே செல்லக் கூடாது என்று தெளிவாக இறைவன் கூறி இருக்கிறான்.


ஈமான் கொண்டவர்களே (இறைநம்பிக்கை கொண்டவர்களே) பல எண்ணங்களிலிருந்து விலகிக் கொள்ளுங்கள் ஏனெனில் நிச்சமாக எண்ணங்களில் சில பாவங்களாக இருக்கும். பிறர் குறைகளை நீங்கள் துருவித் துருவி ஆராய்ந்து கொண்டிராதீர்கள். (அல்குர்ஆன் 49:12)

பொய் ஒரு மனிதனிடம் வந்துவிட்டால் அவனுடைய நற்குணங்கள் அவனை விட்டு நீங்கிவிடும் இறுதியில் அவன் நயவஞ்சகர்களில் ஒருவனாக ஆகிவிடுவான் இன்னும் அவன் மோசடிக்காரனாகவும் ஆகிவிடுவான்.


நபி (ஸல்) அவர்கள் எவரிடத்தில் நான்கு விஷயங்கள் இருக்கின்றதோ அவர் நயவஞ்சகர் ஆவார். அதில் ஒரு விஷயம் இருந்தாலும் நயவஞ்சகம்தான், அதனை அவன் விட்டு விடும் வரை.

1.நம்பினால் மோசடி செய்வான்
2.வாக்களித்தால் மாறுசெய்வான்
3.பேசினால் பொய் பேசுவான்
4.சண்டையிட்டால் திட்டுவான் என்றார்கள்.

மற்றொரு அறிவிப்பில், நயவஞ்சகர்கள் தன்னை ஒரு விசுவாசியென வெளிக்காட்டிக்கொள்கிறான். எல்லோருடனும் சேர்ந்து அவனும் தொழுகிறான். நோன்பு நோற்கிறான். தானதர்மங்கள் செய்கிறான். ஹஜ்ஜை நிறைவேற்றுகிறான். இவனின் செயலை மக்கள் புகழ்வார்கள். ஆனால் அவை இறைவழிபாடாக ஒருபோதும் ஆகமாட்டா. இறைவனை அவன் நம்பிக்கை கொள்ளவில்லை என்பதே உண்மை அவனும் பொய்யன்தான் அவனின் செயல்களும் பொய்தான் என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (ஆதாரம்: புகாரி, அபூதாவூத்)


நபி (ஸல்) அவர்கள், "வெறுக்கத்தக்க மற்றொரு பண்பான மோசடியும் பொய்யின் மூலமாகவே ஆரம்பமாகிறது" என்று கூறியுள்ளார்கள்.


நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள், உம் சகோதரர் உன்னை உண்மையாளர் என்று நம்பிகொண்டிருக்க நீ அவரிடம் பொய்ச் செய்தியை சொல்வது மாபெரும் மோசடியாகும். (ஆதாரம்: அபூதாவூத்)

இக்குணமுள்ள மனிதர்களை நேர்வழியில் செலுத்த மாட்டேன் என்று இறைவன் தன் திருமறையில் கூறியுள்ளான்.

நிச்சயமாக அல்லாஹ் வரம்பு மீறிய பொய்யரை நேர்வழியில் செலுத்தமாட்டான். (அல்குர்ஆன் 40:28)

நபி (ஸல்) அவர்கள் மிஃராஜ் பயணம் சென்றபோது ஒரு கூட்டத்தை பார்த்தார்கள், அவர்களின் வலது தாடையின் பக்கமாக நெருப்பு கோள் செருகப் பட்டு இடது தாடை வழியாக எடுத்தார்கள். இதனை போன்று மாறி மாறி இருபக்கமும் வேதனையளிக்கப்பட்டு கொண்டிருந்தது. இவர்கள் யார் என்று ஜிப்ரயில்(அலை) அவர்களிடம் நபியவர்கள் கேட்டபோது, இவர்கள் தான் பூமியில் இருக்கும் போது பொய் கூறிக்கொண்டிருந்தவர்கள் என்று ஜிப்ரயில் (அலை) அவர்கள் சொன்னார்கள்.


மற்றொரு அறிவிப்பில் நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள், மனிதர்களை முகம் குப்புற நரகத்தில் வீழ்த்துவது அவர்களின் நாவு செய்த தவறே தவிர வேறெதுவும் இல்லை என்றார்கள். பொய்யுரைப்பதால் மறுமையில் தண்டனை மட்டுமல்லாமல் இம்மையிலும் அவனின் உள்ளம் அமைதியில்லாமல் இங்கும் அங்கும் அலைபாய்ந்து கொண்டிருக்கும்.

நபி (ஸல்) அவர்கள் உண்மையே உள்ளத்தின் அமைதியாகும் என்று கூறினார்கள். (ஆதாரம்: அபுதாவூத்)


மனிதனின் உறுப்புகள் எல்லாம் தினமும் நாவிடம் மன்றாட கூடியனவாக இருக்கும்


நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள், மனிதனின் உறுப்புக்கள் அனைத்தும் நாவிடம் நீ ஒழுங்காக இருந்தால்தான் நாங்கள் ஒழுங்காக இருக்க முடியும் நீ ஒழுங்காக இல்லை என்றால் எங்களால் ஒழுங்காக இருக்க முடியாது என்று தினமும் காலையில் கெஞ்சுவனவாக இருக்கும்.

மனித உறுப்புக்கள் அனைத்தும் நாவை பார்த்து பயப்படக் கூடிய கொடிய ஆயுதமாகத்தான் இருக்கின்றது இன்னும் இதனை கண்டு நபி (ஸல்) அவர்களே அஞ்சுவதாக கூறியுள்ளார்கள்.

ஒரு நபிதோழர் நபி (ஸல்) அவர்களிடம் என்னுடைய விஷயத்தில் தாங்கள் அதிகம் அஞ்சுவது என்ன? என்று கேட்டார், அப்போது நபி (ஸல்) அவர்கள் தனது நாவைப் பிடித்துக் காட்டி இதுதான் என்று கூறினார்கள். (ஆதாரம்: திர்மிதி)

 

ஆகவே, இறைத்தூதர் எவ்விஷயத்தில் அஞ்சினார்களோ அவ்விஷயத்தில் நாமும் அஞ்சி நடப்போம். நாவை பேணுவோம்.