மூலநூல் அரபியில் - அபூ இஸ்லாம்
நூருத்தீன் முஸ்லீஹுத்தின் புகாரி
ஆங்கிலத்தில் - டாக்டர் அப்துல் மஜீத் அல் உபைதீ,
ஆங்கிலத்திலிருந்து தமிழுக்கு -
நெல்லை இப்னு கலாம் ரசூல் |
மரணம் மனிதனுக்கு எப்பொழுது நேரும் என யாருக்கும் தெரியாது. திடீர்
மரணம் விபத்துக்களால் நிகழ்வது இன்று இயல்பாகிவிட்டது. மனிதன் உயிருடன்
இருக்கும் போது அவன் விரும்பும் தானதர்மங்கள், நன்கொடைகள் செய்ய
அவனுக்கு எந்த தடையுமில்லை. ஆனால் அவன் மரணித்துவிட்டாலோ அவனது மரண
சாசனத்தில் குறிப்பிடப்பட்டுள்ள அவனது தானதர்ம சரத்துக்கள் மொத்த
சொத்தில் 3ல் 1 பங்குக்கு மிகாமல் இருக்க வேண்டும்.
சஅத் பின் அபீவக்காஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது, விடைபெறும் ஹஜ்ஜின்
போது கடும் நோயினால் பாதிக்கப்பட்டிருந்த என்னை நலம் விசாரிக்க வரும்
வழக்கமுடையவர்களாக நபி (ஸல்) அவர்கள் இருந்தார்கள். அப்போது நான்
அவர்களிடம்:
"அல்லாஹ்வின் தூதரே! நான் மரணத்
தறுவாயை அடைந்துவிட்டேன். நான் தனவந்தன். எனது ஒரு மகளைத் தவிர வேறு
வாரிசுக்காரர்களில்லை எனவே எனது செல்வத்தில் மூன்றில் இரண்டு பங்கை
நான் தர்மம் செய்துவிடட்டுமா?" எனக் கேட்டேன். அதற்கு நபி (ஸல்)
அவர்கள் "வேண்டாம்" என்றார்கள். பின்னர் நான் "பாதியைக்
கொடுக்கட்டுமா?" எனக் கேட்டேன். அதற்கும் நபி (ஸல்) அவர்கள் "வேண்டாம்
மூன்றில் ஒரு பங்கை வேண்டுமானால் தர்மம் செய்துவிடும். அதுவும்
அதிகம்தான் ஏனெனில் உமது வாரிசுக்காரர்களை மக்களிடம் கையேந்தும்
ஏழைகளாக விட்டு செல்வதைவிட தண்ணிறைவுடையர்களாக விட்டுச் செல்வதே
சிறந்தது. இறைப்பொறுத்தத்தையே நோக்கமாகக் கொண்டு நீர் செய்கின்ற எந்த
ஒரு செலவானாலும் சரி. அதற்காக உமக்கு நன்மை கொடுக்கப்படும்.
உனது மனைவியின் வாயில் இடுகின்ற உணவுக்
கவளத்திற்கும்கூட உமக்கு நன்மையுண்டு" என்று கூறினார்கள். நான்
அவர்களிடம் "அல்லாஹ்வின் தூதரே! (எனது தோழர்களெல்லாம் மதீனாவுக்குச்
சென்று விடுவார்கள்) நான் மட்டும் இங்கு (மக்காவில்) பின்தங்கியவனாக
ஆகிவிடுவேனே!"எனக் கேட்டேன். அதற்கு நபி (ஸல்) அவர்கள், "நீர் இங்கு
இருந்தபோதிலும் நல்லறங்கள் செய்து கொண்டே இருந்தால் உமது அந்தஸ்தும்
மேன்மையும் அதிகரித்துக்கொண்டே இருக்கும்" எனக் கூறிவிட்டு, "உம்மை
வைத்துச் சில கூட்டத்தினர் நன்மையடைவதற்காகவும் மற்ற சிலர் துன்பம்
அடைவதற்காகவும் நீர் இங்கேயே தங்க வைக்கப்படலாம்" என்று கூறிவிட்டு,
"இறைவா! என் தோழர்களின் ஹிஜ்ரத்தைப் பூரணமாக்குவாயாக! அவர்களைத் தங்கள்
கால் சுவடுகளின் வழியே (முந்திய இணைவைக்கும் மார்க்கத்திற்கே)
திரும்பிச் செல்லும்படி செய்துவிடாதே!" எனப் பிரார்த்தித்தார்கள்.
நோயாளியாயிருந்த சஅத் பின் கவ்லா (ரலி) அவர்கள் மக்காவிலேயே
இறந்துவிட்டதற்காக "பாவம் சஅத் பின் கவ்லா (அவர் நினைத்தது
நடக்கவில்லை)" என்று நபி (ஸல்) அவர்கள் அனுதாபம் தெரிவித்தார்கள்.
(புகாரி: ஹதீஸ் எண் 1295 )
சில நேரங்களில் தந்தையின் மரணத்துக்கு முன்பு அவரின் பிள்ளைகளில்
ஒருவன் மணம் முடித்து மனைவி, குழந்தைகளுடன் வாழ்பவன் விபத்தில் மரணிக்க
நேர்ந்தால் அவன் வாரிசுரிமை பெறும் தகுதியை இழக்கிறான். மரணித்தவனின்
உடன் பிறந்த சகோதர சகோதரிகள் வாரிசுரிமையில் பங்கு பெறுவர்.
இந்நிலையைத் தவிர்க்க தந்தை தன் சொத்தில் உயிருடன் இருக்கும் போதே
மரண சாசனம் செய்யத் தகுதியான 3ல் 1பங்கு சொத்தை அநாதைகளாகிவிட்ட தம்
பேரக் குழந்தைகளுக்கு வழங்கி குடும்பத்தாரைத் திருப்திப் படுத்த வழிவகை
செய்கிறது. ஒருவன் சந்ததியற்றவனாக இருந்து அனாதைக் குழந்தைகளை
வளர்த்து வருபவனாகவோ அல்லது குழந்தைகளுள்ள
ஒரு விதவையை மண முடித்தாலோ அக்குழந்தைகள் அவனது சொத்துக்கு
வாரிசுதாரராக முடியாது. எனவே மரணிக்கும் முன்பு செய்யக் கூடிய மரண
சாசனத்தின் மூலம் இவர்களுக்கு சொத்துரிமை கிடைக்க வழிவகையுள்ளது.
சில நன்றி கெட்ட பிள்ளைகள் தம் வயோதிகப் பெற்றோர்களைத் தங்களின்
மனைவிமார்களின் திருப்திக்காக முதியோர் இல்லங்களுக்கு அனுப்பி வைத்து
விடுகின்றனர். இவ்வாறு செய்வோர் தம் குழந்தைகளிடமிருந்தும் இதே நிலையை
அடைய வாய்ப்புண்டு. வல்ல அல்லாஹ் அருள்
மறையில் குறிப்பிடுவதைப் பாருங்கள்.
"என்னைத் தவிர வேறு யாரையும் வணங்காதீர்கள்! பெற்றோருக்கு உபகாரம்
செய்யுங்கள்!" என்று உமது இறைவன் கட்டளையிட்டுள்ளான். உம்முடன்
இருக்கும் அவ்விருவருமோ, இருவரில் ஒருவரோ முதுமையை அடைந்துவிட்டால்
அவ்விருவரை நோக்கி "சீ" எனக் கூறாதே! அவ்விருவரையும் விரட்டாதே!
மரியாதையான சொல்லையே அவ்விருவரிடமும் கூறு! (அல்குர்ஆன் 17:23)
சிலர் வயோதிகத்தில் உள்ள தம் பெற்றோர்களைப் பேணுவதைத்
தவிர்க்கின்றனர் இது சரியல்ல. ஏனெனில் பெற்றோர்களின் பிராத்தனைகள்
அல்லாஹ்வால் பதிலளிக்கப்படத் தக்கவை. அவர்களைப் பேணுவது வல்ல இறைவன்
வழங்கும் பரக்கத் எனும் அபிவிருத்தியையும் நமக்கு நேர விருத்தியையும்
நமக்கு நேரவிருக்கும் துன்ப, துயரங்களிலிருந்து பாதுகாப்பையும்
வழங்கத்தக்கது.
வயது முதிர்ந்த தன் பெற்றோர் இருவரையோ அல்லது ஒருவரையோ பெற்றிருந்தும்
சுவனம் செல்லாமல் போய்விட்ட மனிதன் நாசமடைவானாக! பின்னர் நாசமடைவானாக!
பின்னர் நாசமடைவானாக! என நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். (முஸ்லிம் :
அபூஹுரைரா(ரலி))
சில குடும்பங்களில் வயோதிகப் பெற்றோர்களைப் பராமரிப்பதில் அவர்களின்
குழந்தைகளில் எவராவது ஒருவர் பேணுவதும் எஞ்சிய அவரது சகோதர,
சகோதரிகள் பெற்றோர்களைப் பேணத் தவறுவதையும் நாம் பார்க்கிறோம்.
இந்நிலையில் தன்னைப் பேணக் கூடிய பிள்ளைக்கு சொத்துரிமையில் அதிக
பங்கு வழங்கவோ அல்லது பேணாத பிள்ளைகளுக்கு குறைவாக சொத்துரிமை
வழங்கவோ சொத்தில் உரிமையாளருக்கு உரிமையில்லை. ஏனெனில் வாரிசுரிமை
பெறத் தகுதியுடையோரின் பங்கீட்டு முறையை வல்ல அல்லாஹ்வே வரையறை
செய்துள்ளான். அதில் மாற்றம் செய்யக் கூடாது. இருப்பினும் தம்மைப்
பராமரிக்கும் பிள்ளைக்கு ஏற்படக் கூடிய பராமரிப்புச் செலவைத் தம்
சொத்திலிருந்து எடுத்து செலவு செய்யும் உரிமையை வழங்கும் அதிகாரம்
பெற்றோர்களுக்குண்டு. அதனை மரணிக்கும் முன்பே தம்மை பராமரிக்காத பிற
பிள்ளைகளிடம் தெரிவிக்கும் கடமையும் பெற்றோர்களுக்குறியது.
சில பெண்கள் மரணித்த வீடுகளில்
அழுது புலம்பி ஒப்பாரி வைப்பதையும், தம் கன்னங்களில்,
முகங்களில் அறைந்து கூக்குரலிடுவதையும் தம்
துணிகளை கிழித்துக் கொள்வதையும் காண்கிறோம். இஸ்லாம் இது போன்ற
அநாகரீகங்களைகத் தடை செய்கின்றது.
(மரணச் செய்தி மற்றும் துக்கமான விஷயங்களுக்காக)யார் கன்னங்களில்,
(முகங்களில்)அடித்துக் கொள்கிறார்களோ, சட்டைகளைக் கிழித்துக்
கொள்கிறார்களோ, யார் அறியாமைக் காலச் செயல்களின் பக்கம் மக்களை
அழைக்கிறார்களோ அவர்கள் நம்மைச் சேர்ந்தவர்களல்லர்.
புகாரி, முஸ்லிம்: அப்துல்லாஹ் பின்
மஸ்வூது(ரலி)
அபூ தர்தா(ரலி)அவர்கள் அறிவிக்கிறார்கள்:
(என் தந்தை) அபூ மூஸா(ரலி) வியாதியால் வேதனைப்பட்டு மயக்கமடைந்தார்.
அவருடைய தலை அவரின் குடும்பப் பெண்களில் ஒருவருடைய மடியின் மீது
இருந்தது. அப்பொழுது, ஒரு பெண் சப்தமிட்டு (ஒப்பாரி வைப்பதற்காக) அங்கு
வந்தார். அப்பெண்ணின் அச்செயலை மறுத்துரைக்க அவர்கள் சக்தி
பெற்றிருக்கவில்லை. அவர் மயக்கத்திலிருந்து விடுபட்டதும்,
நபி(ஸல்)அவர்கள் எவர்களிலிருந்து விலகி இருந்தார்களோ, அவர்களை விட்டு
நானும் விலகியுள்ளவன் ஆவேன். நிச்சயமாக நபி(ஸல்)அவர்கள் ஒப்பாரி வைத்து
அழும் பெண்ணை விட்டும், சோதனை கஷ்டத்துடைய நேரத்தில் தலையை
மொட்டையடித்துக் கொள்ளும் பெண்ணை விட்டும், நீங்கியவர்களாக உள்ளார்கள்.
(இச்செயலைச் செய்வோரை, அவர்கள் கண்டித்துள்ளார்கள்) எனக் கூறினார்.
புகாரி, முஸ்லிம்: அபூ தர்தா(ரலி)
இரு விஷயங்கள் மக்களிடம் பரவியுள்ளன. அவை குப்ரான செயல்களைச்
சேர்ந்தவையாகும். 1- மனிதர்களின் வம்சத்தைக் குத்திக்காட்டிப்
பழிப்பது. 2-மரணித்தவருக்காக ஒப்பாரி வைத்து அழுவது.
முஸ்லிம்: அபூஹூரைரா(ரலி)
மேலும் மற்றொரு அறிவிப்பில் ஒப்பாரிவைக்கும் பெண்களையும் அதனைக்
கேட்கும் பெண்களையும் சபிக்கப்பட்டவர்கள் என நபி(ஸல்) அவர்கள் கூறியதாக
இடம் பெறுகிறது. பல முஸ்லிம் நாடுகளில் மரணித்தவரின் அடக்கஸ்தலத்தின்
மீது அவரது குடும்பத்தார் அழகான கட்டிடம்
எழுப்பி அதன் மீது பளிங்கு கற்களில் மரணித்தவரின் பெயர்,
பிறந்த தேதி, மரணித்த தேதி போன்ற விபரங்களைச் செதுக்கிவைத்துள்ளனர்.
சில இடங்களில் மரணித்தவரின் புகைப்படத்துடன் அழகிய கவிதை வரிகளையும்
எழுதி மக்கள் பார்வைக்கு வைத்துள்ளனர். பெரும்பாலும் இதுபோன்ற
செலவினங்கள் மரணித்தவரின் சொத்திலிருந்தே செலவு செய்யப்படுகின்றது.
அச்சொத்துக்கு உரிமையான அனாதைகள், விதவைகள்
தேவைக்குட்பட்டிருப்பினும், அவர்களது தேவைகள் புறக்கணிக்கப்பட்டு
சமாதியை அலங்கரிக்கும் அலங்கோலங்கள் முதன்மைப் படுத்தப்படுகின்றன.
இஸ்லாத்தின் பார்வையில் இதுபோன்ற சமாதி அலங்காரங்கள் தடை
செய்யப்பட்டவையாகும். மேலும் இவ்வலங்காரங்கள் மரணித்தவருக்கு எந்த
நன்மையையும் பயக்கக் கூடியதல்ல. மாறாக மரணித்தவருக்காக செய்யப்படும்
பிராத்தனைகளே (துஆக்கள்) பயனளிக்க கூடியதாகும்.
நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள்:
மனிதன் மரணமடைந்து விட்டால் மூன்று
அமல்களைத் தவிர, மீதமுள்ள அமல்கள் அனைத்தும் அவனை விட்டு
துண்டிக்கப்பட்டு விடும் அவை:
1) ஸதகத்துல்-ஜாரியா (நிரந்தரமாக நடைபெறக்கூடிய தர்மம்).
2) பயன்தரும் கல்வி.
3) அவருக்காக துஆச் செய்யும் ஸாலிஹான பிள்ளைகள்.
(இம்மூன்றின்
மூலம் மரணத்திற்குப் பிறகும் அவருக்கு நன்மைகள் வந்து சேர்ந்து கொண்டே
இருக்கும்)
முஸ்லிம் : அபூஹுரைரா(ரலி)
நபி(ஸல்) அவர்கள் அலங்காரமாக கட்டப்பட்டுள்ள சமாதிகளை அடித்து
நொறுக்கி தரை மட்டமாக்க அலி(ரலி) அவர்களுக்கு இட்ட உத்தரவை கீழ்கானும்
நபி மொழி வலியுறுத்துகிறது.
அபுல் ஹய்யாஜ் ஹய்யான் பின் ஹூஸைன்(ரலி)அறிவிக்கிறார்கள்:
அலீ(ரலி)அவர்கள் என்னிடம் 'என்னை எந்தப் பணிக்காக நபி(ஸல்)அவர்கள்
அனுப்பி வைத்தார்களோ, அந்தப் பணிக்காக நான் உம்மை அனுப்பி வைக்கட்டுமா?
எந்த ஒர் உருவத்தையும் அழிக்காமல் அதனை நீர் விட்டு வைக்காதீர்!
எந்தவொரு உயர்ந்துள்ள கப்ரையும் சமப்படுத்தாமல் நீர் விட்டு
வைக்காதீர்' எனக் கூறினார்கள்.
முஸ்லிம்: அலீ(ரலி)
யூத, கிறித்துவர்கள் போல் சில முஸ்லிம்கள் தங்களின் நண்பர்கள்,
உறவினர்களின் சமாதிகளின் மீது மலர் வளையம் வைத்தல் அல்லது மலர் தூவுதல்
போன்றவற்றை சில குறிப்பிட்ட தினங்களில் செய்து நினைவஞ்சலி
செலுத்துகின்றனர். இது நம் மார்க்கத்தில் தடை செய்யப்பட்ட ஒன்றாகும்.
இச்செயல்கள் பிற மதக் கலாச்சாரங்களைப் புகுத்துவதுடன் மார்க்கத்தின்
பெயரால் செய்யப்படும் நவீன அனுஷ்டானங்கள்(பித்அத்) எனப்படும்.
பித்அத்துகள் வழிகேட்டிற்கும், வழிகேடு நரகத்திற்கும் கொண்டு
செல்லும் என்பதனை நபி மொழிகள் வலியுறுத்துகின்றன.
எவரேனும் மரணித்தால் அறிவுள்ள ஒருவன்/ஒருத்தி தன் சகோதர
சகோதரிகளை, குடும்பத்தாரை, உறவினர்களை(வாரிசுதார்களை) அழைத்து
மரணித்தவரின் மரணச் செய்தியைக் குறிப்பிட்டு அவரின் மறுமை
நற்பேறுக்குப் பிரார்த்தித்து விட்டு அவர் விட்டுச் சென்ற சொத்தில்
மரணசாசனம், கடன், தான தர்மங்களுக்கு ஏதேனும் வாக்குறுதி போன்றவை
கூறியிருந்தால் அதனை உறுதி செய்துவிட்டு மரணித்தவரை நல்லடக்கம்
செய்யும் பொறுப்பை மேற்கொள்வார். பின்னர் மரணித்தவரின் கடன்,
மரணசாசனம் ஆகியவற்றை நிறைவேற்றிய பின் எஞ்சியிருக்கும் சொத்துக்களை
வாரிசுரிமை முறைப்படி பிரித்து வழங்குவார். வல்ல
அல்லாஹ் அருள் மறையில் 4:12 குறிப்பிடுகிறான். இவ்வாறு
அவரின் வாரிசுகள் அநீதமின்றி அவர்கள் உரிமையைப் பெற
வழிகோலுகின்றது.
சிலர் சொத்துக்களை வாரிசுரிமைப் பிரகாரம் பிரித்து வழங்குவதில் காலம்
தாழ்த்துகின்றனர். அதன் விளைவாக சொத்துரிமை பெற நீதிமன்றங்களை
அணுகவும் செய்கின்றனர். இதனால் மனதில் அன்பு நீங்கி வெறுப்பு
தலைதூக்குகின்றது. சில நேரத்தில்
வாரிசுரிமைக்குப் பாத்தியப்பட்ட ஒருவர்
மரணித்து விடுகிறார். அவருக்கு மனைவியும், குழந்தைகளும் உள்ளனர்.
இதனால் பிரிக்கப்படவுள்ள அச்சொத்தில் மேலும் குழப்பங்கள் உருவாக
வழிகோலுகிறது. சில நேரங்களில் வாரிசுரிமைக்குப் பாத்தியப்பட்ட ஒருவரே
அனைத்து சொத்துக்களையும் எடுத்துக் கொண்டு பிற
வாரிசுமைக்குறியவர்களுக்கு ஒன்றும் கொடுக்காமல் குர்ஆனிய சட்டங்களைப்
புறக்கணிக்கிறார். இத்தகையோர் மறுமையில் வல்லோன் அல்லாஹ்வால் ஹராமான
சொத்துக்களை அனுபவித்த குற்றத்துக்கு தண்டனைக்குள்ளாவர். இவ்வாறு
அபகரிக்கும் சொத்துக்கள் சில வேளை அனாதைகளுக்குறியதாகவும் இருக்கும்.
அனாதைகளின் சொத்தை அநீதமாக அபகரிப்போர் ஏழு பெரும் பாவங்களில்
ஒன்றைச் செய்தவர்களில் அடங்குவர்.
உங்களை அழித்து நாசமாக்கக் கூடிய ஏழு விஷயங்களையும் விட்டும் விலகிக்
கொள்ளுங்கள்! அப்பொழுது தோழர்கள், "அவை யாவை யாரஸூலல்லாஹ்!" எனக்
கேட்டனர்.
அதற்கு நபி(ஸல்)அவர்கள்.
"1- அல்லாஹ்வுக்கு இணைவைப்பது.
2- சூனியம் செய்வது.
3- அல்லாஹ் விலக்கியுள்ள உயிரைக் கொல்வது.
4- வட்டியை உண்பது.
5- அனாதைகளின் பொருளை உண்பது.
6- போருடைய நாளில் புறமுதுகுக் காட்டிச் செல்வது.
7- அப்பாவியான முஃமினான பத்தினிப் பெண்கள் மீது அவதூறு கூறுவது
ஆகியவையாகும்" எனப் பகர்ந்தார்கள்.
புகாரி, முஸ்லிம்: அபூஹூரைரா(ரலி)
அருள்மறையில் வல்ல அல்லாஹ் குறிப்பிடுகிறான்.
அனாதைகளின் சொத்துக்களை அநியாயமாக உண்போர் தமது வயிறுகளில்
நெருப்பையே உண்ணுகின்றனர். நரகில் அவர்கள் நுழைவார்கள். (அல்குர்ஆன்
4:10)
அனாதைக் குழந்தை என்பது பருவ வயதையடையாத பெற்றோர்களில் ஒருவரையோ
அல்லது இருவரையுமோ இளவயதில் இழந்ததாகும்.
அல்லாஹ் கூறுகிறான்
அனாதையின் சொத்தை அவர் பருவமடைவது வரை அழகிய முறையிலேயே தவிர
நெருங்காதீர்கள்! (அல்குர்ஆன் 17:34)
சிலர் வாரிசுரிமைச் சொத்திலிருந்து பல நாட்களுக்கு துக்கம்
அனுஷ்டித்து தம் அண்டை அயலார்க்கும் நண்பர்களுக்கும் விருந்துண்ணக்
கொடுக்கின்றனர். சிலர் ஏழைகளுக்கு மரணித்த 3வது நாள், 7வது நாள்,
40வது நாள், வருட நினைவு நாள் என்று கணித்து உணவு வழங்குகின்றனர்.
சிலர் வருடாந்திர நினைவஞ்சலியை தினசரி நாளிதழ்களில் பிரசுரித்து
மரணித்தவருக்காக துக்கம் தெரிவித்தோர்க்கு நன்றி செலுத்துகின்றனர்.
இந்த நூதன அனுஷ்டானங்களுக்கு இஸ்லாத்தில் இடமில்லை. இதனை மரணித்தவரின்
நேரடி வாரிசோ அல்லது நெருங்கிய உறவினரோ செய்தாலும் கூட
இச்செயல்களுக்கு குர்ஆன் ஹதீஸில் எந்த ஆதாரமுமில்லை. மரணித்தவரின்
மனைவியே குடும்பத்தின் தலைவியாகவும் அனாதைகளாகிய குழந்தைகளுக்கு
அன்னையுமாவார். மேற்கூறிய அனாச்சாரங்களை இந்தத் தாய் சமூகத்தை
மகிழ்விக்கச் செய்வாரேயானால் ஏற்றுக் கொள்ளப்படாத ஒன்றை பாவச் செயலைச்
செய்த குற்றத்துக்கு ஆளாவார்.
இது போன்ற அனாச்சாரங்களை தடுத்து நிறுத்துவது நம் கடமையாகும்.
இதுபோன்ற விருந்துகள் அனாச்சாரங்கள் மார்க்கத்தில் புதிதாகப்
புகுத்தப்பட்ட சடங்குகளாகும். மாறாக இச்சடங்குகள் நபிவழிக்கு
எதிராகவும் ஊதாரித்தனமான செலவினங்களுக்கும் பிறர் மெச்ச செய்வதற்கும்
அடிகோலுகிறது. இச்செலவினங்களை மரணித்தவரின் சொத்திலிருந்து
பாத்தியப்பட்ட வாரிசுதார்களே செய்தாலும் நபிவழிக்கு மாறானதாகும்.
மரணித்தவரின் இல்லத்தார்க்கு அவரது உறவினர்கள் எவ்வாறு நடந்து
கொள்ளவேண்டும் என்பதனை கீழ்காணும் நபிமொழி வலியுறுத்துகிறது.
முஅத்தாபோரில் ஷஹீதான ஜஃபர் பின் அபீதாலிப்(ரலி) அவர்கள் மரணச் செய்தி
கேட்டு துயரத்தில் ஆழ்ந்திருந்த அவர் குடும்பத்தார்க்கு நபி(ஸல்)
அவர்கள் தம் மனைவி ஆயிஷா(ரலி) அவர்களை அழைத்து. "ஆயிஷாவே! ஜஃபரின்
குடும்பத்தாருக்காக கொஞ்சம் உணவைத் தயாரிப்பாயாக! அவ்வுணவு
அவர்களுக்கு ஆறுதலளிப்பதாக அமையட்டும்" எனக் கூறினார்கள்.
எனவே நபிவழிப்படி மரணித்தவரின் அண்டை வீட்டாரோ அல்லது நெருங்கிய
உறவினரோ துக்கம் அனுஷ்டிக்கும் மன ஆறுதல் வழங்கக் கூடியதாகும். துக்கம்
அனுஷ்டிப்பதற்காக மரணித்தவரின் இல்லத்துக்குச் செல்பவர் விருந்தினர்
போல் அங்கு தங்கி அவர்களுக்கு சிரமங்கள் தருவது விரும்பத்தக்கதல்ல.
மரணித்தவர் சில நேரங்களில் விட்டுச் செல்லும் சிறிய சொத்தாகிய விற்பனை
நிலமோ அல்லது பிறரிடம் கொடுத்து வைத்திருக்கும் தொகைகளோ
புறக்கணிக்கப்படுகின்றன. இவைகளும் முறையே பங்கீடு செய்யப்பட வேண்டும்.
மனைவியையும் குழந்தைகளையும் விட்டுச் செல்லும் மரணித்த கணவரின்
குடும்பங்கள் பலவற்றை நாம் பார்க்கிறோம். இம்மாதிரி சூழலில்
தாயாரையும் மற்ற சகோதர சகோதரிகளையும் பராமரிப்பது மூத்த மகனின்
பொறுப்பாகும். இப்பராமரிப்பு மகள்களைச் சார்ந்ததல்ல. ஏனெனில்
மரணித்தவரின் மகள்கள், மணமுடித்து கணவரின் இல்லம் செல்வர். அறிவுள்ள
மகன் தன் தாயைப் பராமரிப்பதுடன் தன் மனைவி மக்களையும்
அவ்வாறு செய்யத்தூண்டுவான். இவ்வாறாக அவனின் இம்மை, மறுமை வாழ்வு
இறையருளால் செம்மையுறுகிறது.
சில நேரங்களில் மனைவி கணவனுக்கு முன்பு மரணமடைகிறாள். கணவனும்
குழந்தைகளும் உள்ளனர். இந்நிலையில் பிள்ளைகள் தம் தந்தை மறுமணம்
செய்வதை விரும்புவதில்லை. காரணம் தந்தையின் மரணத்துக்குப் பின்
வாரிசுரிமையில் புதியதொரு பங்காளி வருவதை தவிர்க்க நாடுகின்றனர்.
மாறாக தந்தையைப் பாராமரிக்க உதவி ஒத்தாசைகள் புரிய ஒரு பெண்ணைத் தேர்வு
செய்வதில் தந்தையின் மனமகிழ்வும் அல்லாஹ்வின் பரக்கத்தும் குழந்தைகளின்
தந்தை மீதான பரிவு பாசமும் மிளிர்கிறது.
மரணித்தவரின் குடியிருந்த வீடும் வாரிசுரிமைக்குட்பட்டதே.
வாரிசுரிமைக்குப் பாத்தியப்பட்ட ஒருவரே அவ்வீட்டைத்தம் ஆளுகைக்கு கீழ்
எடுத்துக் கொள்வதோ அல்லது அதனை விற்கவோ அல்லது வாடகைக்கு விட்டு
அதனை அனுபவிப்பதோ ஷரீஅத்அத்துக்கு முரணானதாகும். அவ்வீட்டின்
அனுகூடலங்கள் அனைத்தும் வாரிசுரிமைக்குப் பாத்தியப்பட்டோர்
அனைவருக்கும் ஷரீஅத் கூறிய பிரகாரம் பங்கீடு செய்யப்பட வேண்டும்.
வாரிசுரிமைப் பங்கீட்டில் ஷரீஅத் பிரகாரம் சரியாகப் பங்கீடு
செய்யப்படுகிறதா என்பதை அல்லாஹ் உற்று நோக்கியவனாக இருக்கிறான்.
அவனின் வரம்புகளைப் பேணுவோரை (அனுமதிக்கப்பட்டவைகளை தடுக்கப்பட்டவைகளை
அறிந்து செயல் படுவோரை) அல்லாஹ்வை அஞ்சுவோரை துயவனான
அல்லாஹ்
சுவனத்தில் நுழையச் செய்கிறான். அதில் சதா நீரருவிகள் ஓடிக்
கொண்டிருக்கும். அதில் எண்றென்றும் நிரந்தரமாக தங்கியிருப்பர்.
அவர்களுடன் நபிமார்கள், உண்மை விசுவாசிகள், ஷஹீதுகள், நேர்வழி
நடந்தோர் ஆகியோர் இருப்பர்.
மீறிய பாவிகள் நரகவாசிகள்
ஆவர். நரகவேதனையின் நிரந்தரமாக தண்டனைக்குள்ளாவார்கள்.
இவ்வேதனையிலிருந்து மீட்சியுறும் பிரார்த்தனையை வல்ல அல்லாஹ் அருள்
மறையில் கீழ்கண்டவாறு கூறுகிறான்.
لَا يُكَلِّفُ اللَّهُ نَفْسًا إِلَّا وُسْعَهَا لَهَا مَا كَسَبَتْ
وَعَلَيْهَا مَا اكْتَسَبَتْ رَبَّنَا لَا تُؤَاخِذْنَا إِنْ نَسِينَا
أَوْ أَخْطَأْنَا رَبَّنَا وَلَا تَحْمِلْ عَلَيْنَا إِصْرًا كَمَا
حَمَلْتَهُ عَلَى الَّذِينَ مِنْ قَبْلِنَا رَبَّنَا وَلَا
تُحَمِّلْنَا مَا لَا طَاقَةَ لَنَا بِهِ وَاعْفُ عَنَّا وَاغْفِرْ
لَنَا وَارْحَمْنَا أَنْتَ مَوْلَانَا فَانصُرْنَا عَلَى الْقَوْمِ
الْكَافِرِينَ
அல்லாஹ் எந்த ஓர் ஆத்மாவுக்கும் அது
தாங்கிக் கொள்ள முடியாத அளவு கஷ்டத்தை கொடுப்பதில்லை. அது
சம்பாதித்ததின் நன்மை அதற்கே, அது சம்பாதித்த தீமையும் அதற்கே!
(முஃமின்களே! பிரார்த்தனை செய்யுங்கள்;) "எங்கள் இறைவா! நாங்கள் மறந்து
போயிருப்பினும், அல்லது நாங்கள் தவறு செய்திருப்பினும் எங்களைக்
குற்றம் பிடிக்காதிருப்பாயாக! எங்கள் இறைவா! எங்களுக்கு முன் சென்றோர்
மீது சுமத்திய சுமையை போன்று எங்கள் மீது சுமத்தாதிருப்பாயாக! எங்கள்
இறைவா! எங்கள் சக்திக்கப்பாற்பட்ட (எங்களால் தாங்க முடியாத) சுமையை
எங்கள் மீது சுமத்தாதிருப்பாயாக! எங்கள் பாவங்களை நீக்கிப்
பொறுத்தருள்வாயாக! எங்களை மன்னித்தருள் செய்வாயாக! எங்கள் மீது கருணை
புரிவாயாக! நீயே எங்கள் பாதுகாவலன்; காஃபிரான கூட்டத்தாரின் மீது
(நாங்கள் வெற்றியடைய) எங்களுக்கு உதவி செய்தருள்வாயாக!"
(அல்குர்ஆன் 2:286)
|