Index |Subscribe mailing list | Help | E-mail us

வெற்றி யாருக்கு?

நெல்லை இப்னு கலாம் ரசூல்

 

 

இப்புவியில் படைக்கப்பட்ட ஒவ்வொரு பொருளும் படைத்தவன் அல்லாஹ்வின் கட்டளைக்குக் கீழ்ப்படிந்து நடக்கின்றன. வானம், புவி, மரம், செடி, கொடிகள், விலங்குகள், ஜின்கள், மனிதர்கள் என அண்ட சராசரத்தில் உள்ள அத்தனை படைப்பினங்களும் அல்லாஹ்வின் கட்டளைக்கு அடிபணிந்து நடக்கும் சுபாவம் உள்ளவையாகவே இருந்தாலும்கூட பகுத்தறிவு எனும் கூடுதல் அறிவைப் பெற்றிருக்கும் மனிதன் மட்டும் சற்று மாறுபட்டு வித்தியாசமாகவே இருக்கிறான்.


தடை செய்யப்பட்ட எதனையும் பின்விளைவு எப்படியிருக்கும் என்று தெரிந்தும், தெரியாமலும் வரம்புமீறி தவறிழைத்துவிட்டு தன்னை யாராலும் ஒன்றும் செய்துவிட முடியாது என்கிற தப்பெண்ணத்தில் திரிகிறான். இப்புவியில் அவன் படைக்கப்பட்டதின் நோக்கத்தை மறந்து பெருமையில், இறுமாப்பில் பிதற்றுகிறான். அழிவுப் பாதையில் அகந்தையுடன் முன்னேறி வழிகேட்டில் வீழ்ந்து நரக விளிம்பில் இருந்த மக்களை நேர்வழிப்படுத்தும் பொருட்டு இறைத்தூதர்களை அல்லாஹ் அனுப்பி வேதங்களை வழங்கி அழைப்புப் பணிகளால் அந்தந்த கால கட்டங்களில் விளக்கமும் அளித்துள்ளான் என்பதற்கு அருள் மறையில் அதிக சான்றுகளுள்ளன.


ஒவ்வொரு நபிமார்களின் வாழ்க்கையிலும், அவர்களின் அழைப்புப் பணியைச் சித்தரிக்கும் ஒவ்வொரு வசனங்களும் அந்த காலகட்டத்தில் மக்களிடம் புரையோடிப் போயிருந்த சமூகச் சீரழிவுகளைச் சுட்டிக்காட்டி சீர்படுத்திய செய்திகள் அருள்மறையில் அநேகமிருக்கின்றன. மொத்தத்தில் எல்லா இறைத்தூதர்களின் விருப்பமும் சமுதாய மக்களை நேர்வழியின்பால் அழைத்து சுவனத்தில் நுழையச் செய்யவேண்டும் என்ற நோக்கமாக இருந்தது. ஆக வெற்றி என்று இங்கு அலசுவது மறுமை வாழ்வில் நரகத்துக்குச் செல்லாமல் சுவனத்தைப் பெறுவதென்பதே. உலக ஆசையில் திளைத்து மாபெரும் வெற்றியை ஈட்டிவிட்டேன் என்ற பசப்பு வாதங்கள் அனைத்தும் நிலையற்றவை என்பதுடன் மரணமற்ற நிலையான சுவன மறுமை வாழ்வே மகத்தானது. அந்நிலையான சுவன வாழ்வைப் பெறுவதையே வெற்றி எனக் குறிப்பிட்டு அவ்வெற்றி எப்பொழுது சாத்தியம்? என ஆய்வதே இக்கட்டுரையின் நோக்கம்.


சுவன வாழ்வைச் சுவைப்பதற்கு அல்லாஹ் விதிக்கும் அடிப்படை நிபந்தனை அல்லாஹ்வைத் தவிர வேறு யாரும் வணக்கவழிபாட்டிற்குத் தகுதியானவர் இல்லை என்ற ஏகத்துவமாக இருந்தாலும் மனிதன் செய்யக்கூடிய நல்லறங்கள், தீய செயல்கள் நாளை மறுமையில் கணக்கிடப்பட்டு நியாயமான தீர்ப்பு வழங்கப்படும் என்பதை தூயோன் அல்லாஹ் அருள்மறையில்...


அந்நாளில், மக்கள் தங்கள் வினைகள் காண்பிக்கப்படும் பொருட்டு, பல பிரிவினர்களாகப் பிரிந்து வருவார்கள் எனவே, எவர் ஓர் அணுவளவு நன்மை செய்திருந்தாலும் அத(ற்குரிய பல)னை அவர் கண்டுகொள்வார். அன்றியும் எவன் ஓர் அணுவளவு தீமை செய்திருந்தாலும், அ(தற்குரிய பல)னையும் அவன் கண்டுகொள்வான் (அல்குர்ஆன் 99:6-8).


மேலும் அல்லாஹ்வின் கட்டளைகளைப் புறக்கணித்து மறுமையை மறுத்தோர் பற்றி குறிப்பிடுகையில்..


மேலும் (மறுமையில்) நம் சந்திப்பை நம்பாது இருக்கிறார்களே அவர்கள் "எங்களிடம் ஏன் மலக்குகள் அனுப்பப்படவில்லை? அல்லது ஏன் நாம் நம்முடைய இறைவனைக் காண முடியவில்லை?" என்று கூறுகிறார்கள். திடமாக அவர்கள் பெருமையடித்துக் கொண்டிருக்கிறார்கள் மேலும், மிகவும் வரம்பு கடந்து சென்று விட்டனர். அவர்கள் மலக்குகளைக் காணும் நாளில், அக்குற்றவாளிகளுக்கு நற்செய்தி எதுவும் அன்றைய தினம் இராது (நற்பாக்கியம்) முற்றாக (உங்களுக்கு) தடுக்கப்பட்டு விட்டது என்று அந்த மலக்குகள் கூறுவார்கள். இன்னும்; நாம் அவர்கள் (இம்மையில்) செய்த செயல்களின் பக்கம் முன்னோக்கி அவற்றை (நன்மை எதுவும் இல்லாது) பரத்தப்பட்ட புழுதியாக ஆக்கிவிடுவோம். (அல்குர்ஆன் 25:21-23)


மறுமையில் நல்ல தீய செயல்கள் அனைத்தும் அணுவளவு இருந்தாலும் அதையும் கணக்கில் எடுத்து வல்லோன் அல்லாஹ் தீர்ப்பு வழங்குவது யாருக்கு? எவரின் அமல்கள் பிரயோசனம் இல்லாமல் பரத்தப்பட்ட புழுதியாக இம்மையில் செய்த அனைத்து செயல்களும் பாழ்படுத்தப்படும் என்பதைத் தெளிவாக்குகிறான். மறுமை நம்பிக்கையற்றோரின் அமல்கள் வல்லோன் அல்லாஹ்வின் கட்டளைகளைப் புறக்கணித்து வரம்புமீறியோர் பற்றியே இப்படி விளக்கமாக அல்லாஹ் குறிப்பிடுகிறான். இம்மை வாழ்வு நீடித்து நிலைத்து நிற்கும் இவ்வுலக வாழ்க்கையை எப்பாடுபட்டாகிலும் ஆடம்பரமாக-அசத்தலாக வைத்துக்கொள்ள வேண்டும் என்ற எண்ணமுடையவர்களுக்கு இஸ்லாம் கூறும் அறிவுரையைப் பாருங்கள்.


அப்துல்லாஹ் இப்னு உமர் (ரலி) அறிவித்தார்கள், இறைத்தூதர் (ஸல்) அவர்கள் என் தோளைப் பிடித்துக் கொண்டு 'உலகத்தில் நீ அந்நியனைப் போன்று, அல்லது வழிப்போக்கனைப் போன்று இரு' என்றார்கள். (அறிவிப்பாளர்களில் ஒருவரான முஜாஹித்(ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள்:) 'நீ மாலை நேரத்தை அடைந்தால் காலை வேளையை எதிர்பார்க்காதே! நீ காலை வேளையை அடைந்தால் மாலை நேரத்தை எதிர்பார்க்காதே! நீ நோய்வாய்ப்படும் நாளுக்காக உன்னுடைய ஆரோக்கியத்தில் சிறி(து நேரத்)தைச் செலவிடு. உன்னுடைய இறப்பு(க்குப் பிந்திய நாளு)க்காக உன்னுடைய வாழ்நாளில் சிறி(து நேரத்)தைச் செலவிடு' என்று இப்னு உமர் (ரலி) அவர்கள் கூறுவார்கள். (ஸஹீஹ் புகாரி: 6416)

 

மேலும் இம்மை வாழ்வின் அலங்காரங்களை அருள்மறையின் மூலமும் அறிந்து கொள்ளுங்கள்;


நிச்சயமாக இவ்வுலக வாழ்க்கை விளையாட்டும், வேடிக்கையும், அலங்காரமுமேயாகும்; மேலும் (அது) உங்களிடையே பெருமையடித்துக் கொள்வதும் பொருள்களையும் சந்ததிகளையும் பெருக்குவதுமேயாகும், (இது) மழையின் உதாரணத்திற்கு ஒப்பாகும் (அதாவது) அது முளைப்பிக்கும் பயிர் விவசாயிகளை ஆனந்தப்படுத்துகிறது ஆனால், சீக்கிரமே அது உலர்ந்து மஞ்சள் நிறம் ஆவதை நீர் காண்கிறீர்; பின்னர் அது கூளமாகி விடுகிறது (உலக வாழ்வும் இத்தகையதே எனவே உலக வாழ்வில் மயங்கியோருக்கு) மறுமையில் கடுமையான வேதனையுண்டு (முஃமின்களுக்கு) அல்லாஹ்வின் மன்னிப்பும், அவன் பொருத்தமும் உண்டு - ஆகவே, இவ்வுலக வாழ்க்கை ஏமாற்றும் சொற்ப சுகமே தவிர (வேறு) இல்லை. (அல்குர்ஆர் 57:20).

 

மறுமை வாழ்வைச் செம்மைப்படுத்த அல்லாஹ் வழங்கிய ஒரு சிறந்த சந்தர்ப்பம் என்றுதான் இம்மை வாழ்வை நினைத்து அமல் செய்ய வேண்டுமே தவிர இம்மை வாழ்வே நிரந்தரமானது என்ற எண்ணத்திற்கு துளியளவு கூட இடம் தரக்கூடாது என்பதை மேற்கூறிய ஆதாரங்களில் இருந்து அறிந்து கொள்ளலாம்.


தவறுகளை பாவங்களைச் செய்து விட்டு இறுமாப்பில் திரியும் மனிதர்களுக்கும் நல்வழிப்படுத்த அல்லாஹ் கூறும் அறிவுரையையும் எச்சரிக்கையையும் பாருங்கள்..

 

மனிதர்களை அவர்கள் சம்பாதித்த (தீ) வினைக்காக அல்லாஹ் அவர்களை (உடனுக்குடன்) பிடி(த்துத் தண்டி)ப்பதாக இருந்தால் பூமியில் உயிர்ப் பிராணிகள் ஒன்றையுமே விட்டு வைக்கமாட்டான்; ஆயினும், ஒரு குறிப்பிட்ட தவணைவரை அவர்களைப் (பிடிக்காது) பிற்படுத்துகிறான் அவர்களுடைய தவணை வந்துவிட்டால் நிச்சயமாக அல்லாஹ் தன் அடியார்களை உற்று நோக்குபவனாகவே இருக்கின்றான். (அல்குர்ஆன் 35:45).


மேலும் அல்லாஹ் தன் அடியார்கள் செய்யும் நல்ல தீய செயல்களை எவ்வாறு பதிவு செய்கிறான் என்பதை கீழ்காணும் நபிமொழி அறிவுறுத்துவதைப் பாருங்கள்.

 

இப்னு அப்பாஸ்(ரலி) அறிவித்தார்கள். (ஒருமுறை) நபி(ஸல்) அவர்கள் தம் இறைவனைப் பற்றி அறிவிக்கையில் (பின்வருமாறு) கூறினார்கள்: அல்லாஹ் நன்மைகளையும், தீமைகளையும் (அவை இன்னின்னவை என நிர்ணயித்து) எழுதிவிட்டான். பிறகு அதனை விவரித்தான். அதாவது ஒருவர் ஒரு நன்மை செய்யவேண்டும் என (மனதில்) எண்ணிவிட்டாலே அதைச் செயல்படுத்தாவிட்டாலும் அவருக்காகத் தன்னிடம் அதை ஒரு முழு நன்மையாக அல்லாஹ் பதிவு செய்கிறான். அதை அவர் எண்ணியதுடன் செயல்படுத்தியும்விட்டால், அந்த ஒரு நன்மையைத் தன்னிடம் பத்து நன்மைகளாக, எழு நூறு மடங்காக, இன்னும் அதிகமாக அல்லாஹ் பதிவு செய்கிறான். ஆனால் ஒருவர் ஒரு தீமை செய்ய எண்ணி, (அல்லாஹ்வுக்கு அஞ்சி) அதைச் செய்யாமல் கைவிட்டால், அதற்காக அவருக்குத் தன்னிடம் ஒரு முழு நன்மையை அல்லாஹ் எழுதுகிறான். எண்ணியபடி அந்தத் தீமையை அவர் செய்து முடித்துவிட்டாலோ, அதற்காக ஒரேயொரு குற்றத்தையே அல்லாஹ் எழுதுகிறான். (ஸஹீஹ் புகாரி).


உலக வாழ்வின் பகட்டு, ஆடம்பரம் ஆகியவற்றைப் பற்றி அல்லாஹ் அருள்மறையில்...

 

பெண்கள், ஆண் மக்கள்; பொன்னிலும், வெள்ளியிலுமான பெருங்குவியல்கள்; அடையாளமிடப்பட்ட (உயர்ந்த) குதிரைகள்; (ஆடு, மாடு, ஒட்டகை போன்ற) கால்நடைகள், சாகுபடி நிலங்கள் ஆகியவற்றின் மீதுள்ள இச்சை மனிதர்களுக்கு அழகாக்கப்பட்டிருக்கிறது இவை(யெல்லாம் நிலையற்ற) உலக வாழ்வின் சுகப்பொருள்களாகும்; அல்லாஹ்விடத்திலோ அழகான தங்குமிடம் உண்டு. (அல்குர்ஆன் 3:14)

 

மறுமை வாழ்வை மறந்துவிட்டு இம்மை இன்பத்தில் திளைப்போருக்கு இறைவன் விடுக்கும் எச்சரிக்கையைப் பாருங்கள்.

 

எவரேனும் இவ்வுலக வாழ்க்கையையும், அதன் அலங்காரத்தையும் (மட்டுமே) நாடினால் அவர்களுடைய செயல்களுக்குரிய (பலன்களை) இவ்வுலகத்திலேயே நிறைவேற்றுவோம்; அவற்றில், அவர்கள் குறைவு செய்யப்பட மாட்டார்கள். இத்தகையோருக்கு மறுமையில் நரக நெருப்பைத் தவிர வேறெதுவுமில்லை, (இவ்வுலகில்) இவர்கள் செய்த யாவும் அழிந்துவிட்டன. அவர்கள் செய்து கொண்டிருப்பவையும் வீணானவையே!
(அல்குர்ஆன் 11:15-16)


மொத்தத்தில் மறுமை வாழ்வை மறுப்போர் அமல்கள் பரத்தப்பட்ட புழுதியாக அனைத்து அமல்களும் அழிந்து கைசேதமடையும் நிலையை மேற்கூறிய ஆதாரங்களில் கண்டோம்.


மறுமையை மறுத்தோர் நிலை இப்படியிருக்க மறுமையை நம்பக்கூடிய மக்களின் நிலையை நாம் சற்று சிந்தித்துப் பார்த்தால் சிலிர்த்துப் போய் விடுவோம். அந்த அளவுக்கு அபாயகரமான நிலையில் அவர்கள் இருந்தாலும் அவர்கள் அமல் செய்வதில் காட்டும் அளவுகடந்த அக்கறை நம்மையெல்லாம் பிரமிக்க வைத்துவிடும்.

  • இந்த அமலை இப்படி இத்தனை முறை செய்தால் இவ்வளவு நன்மைகள் நம் கணக்கில் ஏறிவிடும் என்று பெரியார்கள் சொன்னார்கள் என ஏட்டில் எழுதியதைப் பக்திப் பரவசத்துடன் படித்து பயனற்ற அமல்கள் செய்ய ஆர்ப்பரிக்கும் கூட்டம் ஒரு புறம்.

  • அல்லாஹ்வின் அருட்கொடைகளை மறந்து அல்லாஹ்வின் படைப்பினங்களாகிய நல்லடியார்கள், நாதாக்கள், பெரியார்கள், மகான்கள், இமாம்கள், அவுலியாக்கள் துணைக்காக ஏங்கி கேட்டதெல்லாம் பெற்றுத்தரும் வல்லமை பெற்றவர்கள் என்ற எண்ணம் கொண்ட இணைவைப்பில் சிக்கித் தவிக்கும் கூட்டம் ஒருபுறம்.

  • அல்லாஹ்வின் பெயரைத் திக்ர் செய்கிறோம் என்ற பெயரில் "அஹ் ஹூ", "ஹூஹூ", "இல்லல்லாஹ்" போன்ற அர்த்த ஆதாரமற்ற திக்ர்களில் ஆடிப்பாடி ஆனந்தக்கூத்தாடி வெற்றியின் சிகரத்தில் இருக்கிறோம் என்ற மகிழ்வில் திளைக்கும் தரீக்காவாதிகள் ஒருபுறம்.

  • உத்தம திருநபி(ஸல்) அவர்கள் கற்றுத் தராத மறுமையில் பயனேதும் தராத மாறாக தண்டனை பெற்றுத்தருகிற ஸலாத்துன் நாரிய்யா 4444 முறை கூட்டமாக அமர்ந்து கூலிக்கு ஓதி கும்மாளமடிக்கும் கூட்டம் ஒருபுறம்.

  • நபிகளைப் புகழ்கிறோம், நாதாக்களைப் புகழ்கிறோம் என்ற பெயரில் வழிகேட்டுக்கு அழைத்துச் சென்று நரகில் கொண்டுபோய் சேர்க்கும் மௌலூதுகளில் மூழ்கித் திளைக்கும் முன்னோர்கள் வழிநடக்கும் கூட்டம் ஒருபுறம்.

  • நாளை மறுமையில் உயிர் கொடுத்து மீண்டும் நாம் எழுப்பப்பட்ட பின் நம்மிடம் படைத்தவன் கேட்கும் முதல் கேள்வியே தொழுகை பற்றித்தான் என்ற பயம் துளிகூட இல்லாமல் கண்டதே காட்சி கொண்டதே கோலம் என்ற கொள்கையில் உலக ஆடம்பரங்களில் உழன்று கொண்டிருக்கும் கூட்டம் ஒருபுறம்.

  • அல்லாஹ்வின் அருட்கொடைகளில் ஒன்று நன்மை தீயவைகளைப் பிரித்துக்காட்டும் வேத நூலாகிய குர்ஆனை ஓதத் தெரியாமல் உலவும் மக்கள் ஒருகூட்டம். ஓதத் தெரிந்தும் அதனை ஓதி மறுமைப் பயனை அள்ளிக் கொள்ளாமல் நபிவழிக்கு மாற்றமாக கத்தம் ஃபாத்திஹா ஓத காசுசேர்க்க பயன்படுத்தும் கூட்டம் ஒருபுறம்.

  • நாங்கள் குர்ஆனை ஹதீஸைப் பின்பற்றுகிறோம் என்று சொல்லிக் கொண்டு அதன்படி அமல் செய்யாமல் நெஞ்சில் தக்பீர் கட்டி அத்தஹியாத்தில் விரல் அசைத்து தொழுதால் நமக்கு இருக்கும் இமேஜ் தனிதான் என்ற நினைப்புடன் திரிவதுடன் குர்ஆன் ஹதீஸைப் பின்பற்றுவோர் சென்று தொழும் பள்ளியில் நம் தொழுகையை நிறைவேற்றினால் மற்ற பள்ளிகளைக்காட்டிலும் விசேச நன்மைகளை வாரிச்சுருட்டிக் கொண்டது போன்ற ஒருநிலையைப் பெற்றிருக்கும் கூட்டம் ஒருபுறம். (இவர் இந்தப் பள்ளியில்தான் 5 வேளை தொழுகைகளை நிறைவேற்றுகிறார் என்று நம்பி நாணயமானவர் எனப் படம்காட்டி மோசடி செய்தவர்களும் இதில் உண்டு).

  • அல்லாஹ் தடுத்ததையெல்லாம் தவிர்ந்து வாழும் நல்லவர்கள் தன் மகனுக்கு கல்யாணம் என்றதும் பெண் வீட்டில் வரதட்சணை என்ன தருவார்கள் சீர்-செனத்தி செய்வார்களா? என்று விலாவாரியாக விசாரித்து விபரமாகத் திரிவோர் ஒருபுறம்.

இப்படி மறுமை நம்பிக்கை கொண்ட மக்களைப் பல பிரிவுகளாகப் பட்டியலிட்டுக் கொண்டே செல்லலாம்.


மேற்கூறிய குறைபாடுகள் இல்லாமல் குர்ஆன் ஹதீஸைப் பின்பற்றி நடக்ககூடிய மக்கள் வெகு சொற்பமே. அப்படி இருப்பவர்களும் கூட குர்ஆனை நன்றாக ஓதத் தெரிந்தவராகவோ குர்ஆனின் மொழிபெயர்ப்பை ஒருமுறையேனும் முழுமையாக படித்தவராகவோ, ஏராளமான ஹதீஸ்களின் மொழிபெயர்ப்பின் தொகுப்புகளைக் கற்றறிந்தவராகவோ கிடைப்பதென்பது மிகமிக அரிது. இந்நிலையில் வெற்றி என்று நாம் குறிப்பிடும் இலக்கை எப்படி அடைவது?
அதற்குறிய பதிலை படைத்த வல்லோன் பாங்குடன் கூறுவதைப் பாருங்கள்,


ஈமான் கொண்டவர்கள் நிச்சயமாக வெற்றி பெற்று விட்டனர். அவர்கள் எத்தகையயோரென்றால், தங்கள் தொழுகையில் உள்ளச்சத்தோடு இருப்பார்கள். இன்னும், அவர்கள் வீணான (பேச்சு, செயல் ஆகிய)வற்றை விட்டு விலகியிருப்பார்கள், ஜகாத்தையும் தவறாது கொடுத்து வருவார்கள். மேலும், அவர்கள் தங்களுடைய வெட்கத் தலங்களைக் காத்துக் கொள்வார்கள். ஆனால், அவர்கள் தங்கள் மனைவிகளிடமோ அல்லது தங்கள் வலக்கரம் சொந்தமாக்கிக் கொண்டவர்களிடமோ தவிர - (இவர்களிடம் உறவு கொள்வது கொண்டும்) நிச்சயமாக அவர்கள் பழிக்கப்படமாட்டார்கள். ஆனால், இதற்கு அப்பால் (வேறு வழிகளை) எவர் நாடுகிறாரோ அ(த்தகைய)வர்கள் தாம் வரம்பு மீறியவர்களாவார்கள். இன்னும், அவர்கள் தங்கள் (இடம் ஒப்படைக்கப்பட்ட) அமானிதப் பொருட்களையும், தங்கள் வாக்குறுதிகளையும் காப்பாற்றுவார்கள். மேலும் அவர்கள் தம் தொழுகைகளை(க் குறித்த காலத்தில் முறையோடு) பேணுவார்கள். இத்தகையோர் தாம் (சுவர்க்கத்தின்) வாரிசுதாரர்கள். இவர்கள்; ஃபிர்தவ்ஸ் (என்னும் சுவனபதியை) அனந்தரங் கொண்டு அதில் இவர்கள் என்றென்றும் தங்கியிருப்பார்கள். (அல்குர்ஆன் 23:1- 11)


ஒருவர் சுவனவாசியாவதற்கு அல்லாஹ் கூறக்கூடிய தகுதிகளை மேற்கூறிய அருள்மறை வசனங்கள் நமக்குத் தெளிவுபடுத்துகின்றன. மற்றொரு வசனத்தில் அல்லாஹ் கூறுவது.

 

ஒவ்வோர் ஆத்மாவும் மரணத்தைச் சுவைக்கக் கூடியதாகும். அன்றியும்- இறுதித் தீர்ப்பு நாளில் தான், உங்க(ள் செய்கைக)ளுக்குரிய பிரதி பலன்கள் முழுமையாகக் கொடுக்கப்படும். எனவே எவர் (நரக) நெருப்பிலிருந்து பாதுகாக்கப்பட்டுச் சுவர்க்கத்தில் பிரவேசிக்குமாறு செய்யப்படுகிறாரோ. அவர் நிச்சயமாக வெற்றியடைந்து விட்டார். இவ்வுலக வாழ்க்கை மயக்கத்தை அளிக்கவல்ல (அற்ப இன்பப்) பொருளேயன்றி வேறில்லை. (அல்குர்ஆன் 3:185)


மறுமை வாழ்வின் சிறப்பை நரகநெருப்பிலிருந்து பாதுகாப்பு பெற்று சுவனத்தைப் பெறுவது நிச்சயமாக வெற்றியே என்ற அர்த்தம் பொதிந்த அருள்மறை வசனங்களின் ஆதாரத்தைப் பார்த்தோம். இனி சுவனத்தில் நுழையக்கூடியவர்கள் யார்? என்பதை நபிமொழி ஒளியில் காண்போம்.


அபூதர் அல் கிஃபாரீ(ரலி) அறிவிக்கிறார்கள். நான் (இரவு நேரத்தில்) நபி (ஸல்) அவர்களுடன் மதீனாவின் (பாறைகள் நிறைந்த) ஹர்ராப் பகுதியில் நடந்து சென்று கொண்டிருந்தபோது உஹத் மலை எங்களை எதிர்கொண்டது. அப்போது நபி(ஸல்) அவர்கள் 'அபூ தர்ரே!' என்று அழைத்தார்கள். நான் 'இதோ! காத்திருக்கிறேன்; கூறுங்கள் இறைத்தூதர் அவர்களே!' என்றேன். நபி(ஸல்) அவர்கள் 'இந்த உஹத் மலை அளவுக்கு என்னிடம் தங்கம் இருந்து, அதிலிருந்து ஒரேயொரு பொற்காசு என்னிடம் (எஞ்சி) இருந்தாலும் அதை அல்லாஹ்வின் அடியார்களிடையே இப்படி இப்படியெல்லாம் செலவிடாமல் மூன்று இரவுகள் கழிந்து செல்வதுகூட எனக்கு மகிழ்ச்சியளிக்காது. கடனை அடைப்பதற்காக நான் எடுத்துவைக்கும் சில பொற்காசுகளைத் தவிர!' என்று கூறி, தம் வலப்பக்கமும் இடப்பக்கமும் பின் பக்கமும் சைகை செய்தார்கள். பிறகு (சிறிது தூரம்) நடந்துவிட்டு (இம்மையில் செல்வம்) அதிகம் உள்ளவர்களே மறுமை நாளில் (நற்பலன்) குறைந்தவர்கள் ஆவர். இப்படி இப்படியெல்லாம் (இறைவழியில் தம் செல்வத்தைச்) செலவிட்டவர்களைத் தவிர' என்று கூறி, தம் வலப்பக்கமும் இடப்பக்கமும் பின்பக்கமும் சைகை செய்தார்கள். (ஆனால்,) இத்தகையவர்கள் சொற்பமானவர்களே என்றும் கூறினார்கள். பிறகு நபி(ஸல்) அவர்கள் என்னிடம் 'நான் வரும்வரை இந்த இடத்திலேயே இருங்கள்' என்று கூறிவிட்டு, இரவு இருளில் நடந்து சென்று மறைந்து விட்டார்கள். அப்போது உரத்த குரல் ஒன்றை நான் கேட்டு நபி(ஸல்) அவர்களை யாரோ ஏதோ செய்து விட்டார்கள் என்று அஞ்சினேன். அவர்களிடம் செல்லலாம் என்று நினைத்தேன். (ஆனால்,) என்னிடம் நபி(ஸல்) அவர்கள் 'நான் வரும்வரை இங்கேயே இருங்கள்' என்று சொன்னது என் நினைவுக்கு வந்தது. எனவே, அவர்கள் என்னிடம் வரும் வரை அங்கேயே இருந்தேன். (அவர்கள் வந்ததும்) இறைத்தூதர் அவர்களே! ஏதோ ஒரு குரலைக் கேட்டு நான் பயந்து விட்டேன் என்று கூறி, (நான் நினைத்தது பற்றியும்) அவர்களிடம் எடுத்துச் சொன்னேன். அப்போது நபி(ஸல்) அவர்கள் 'அதை நீங்கள் செவியுற்றீர்களா?' என்று கேட்டார்கள். நான் 'ஆம்' என்றேன். அது (வானவர்) ஜிப்ரீல் தாம். அவர் என்னிடம் வந்து 'உங்கள் சமுதாயத்தாரில் (ஏக இறைவனாம்) அல்லாஹ்வுக்கு எதனையும் இணைவைக்காமல் (வாழ்ந்து) மரணமடைகிறவர் சொர்க்கம் புகுவார்' என்றார். நான் (ஜிப்ரீலிடம்) 'அவர் விபச்சாரம் புரிந்தாலும், திருடினாலுமா (சொர்க்கம் புகுவார்)?' என்று கேட்டேன். அவர் '(ஆம்) விபச்சாரம் புரிந்தாலும் திருடினாலும் சரியே (சொர்க்கம் புகுவார்)' என்று பதிலளித்தார் என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள். (ஆதாரம் : புகாரி).


அல்லாஹ்வுக்கு இணைவைக்காத மக்கள் திருட்டு, விபச்சார போன்ற குற்றங்கள் புரிந்திருந்தாலும் (தண்டனைக்கு பிறகு) சுவனம் செல்வதை இந்த ஹதீஸ் கூறுகிறது.


ஆகவே இணைவைக்காது உறுதியுடன் வாழ்ந்தவர் குற்றங்கள் எதுவும் புரிந்தால் மறுமையில் அவரின் நிலை எப்படியிருக்கும்? ஏகத்துவத்தை ஏற்றுக்கொண்டவர் எந்த தவறைப் புரிந்தாலும் சுவனத்திற்குத்தான் செல்லப் போகிறாரே பின் அவரின் அமல்களின் வரையறை என்ன? இப்படி நம் சிந்தனைகளில் எழும் கேள்விகளுக்கு என்ன தான் பதில்? நபிமொழிகள் சில நம் சந்தேகங்களுக்கு விடையளிக்கின்றன, அவற்றைக் காண்போம்.


ஒருவர், தன் சகோதரனுக்கு அவனுடைய மானத்திலோ, வேறு (பணம், சொத்து போன்ற) விஷயத்திலோ, இழைத்த அநீதி (ஏதும் பரிகாரம் காணப்படாமல்) இருக்குமாயின், அவர் அவனிடமிருந்து அதற்கு இன்றே மன்னிப்புப் பெறட்டும். தீனாரோ, திர்ஹமோ (பொற்காசுகளோ வெள்ளிக் காசுகளோ) பயன் தரும் வாய்ப்பில்லாத நிலை (ஏற்படும் மறுமை நாள்) வருவதற்கு முன்னால் (மன்னிப்புப் பெறட்டும்.) (ஏனெனில், மறுமை நாளில்) அவரிடம் நற்செயல் ஏதும் இருக்குமாயின் அவனுடைய அநீதியின் அளவுக்கு அவரிடமிருந்து எடுத்துக் கொள்ளப்பட்டு (அநீதிக்குள்ளானவரின் கணக்கில் வரவு வைக்கப்பட்டு) விடும். அநீதியிழைத்தவரிடம் நற்செயல்கள் எதுவும் இல்லையென்றால் அவரின் தோழரின் (அநீதிக்குள்ளானவரின்) தீய செயல்கள் (அவர் கணக்கிலிருந்து) எடுக்கப்பட்டு அநீதியிழைத்தவரின் மீது சுமத்தப்பட்டு விடும் என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறியதாக அபூஹுரைரா(ரலி) அறிவித்தார்கள்.
(ஆதாரம் : புகாரி)


மற்றொரு நபிமொழி ஏகத்துவத்தை ஏற்றுக்கொண்டவர்களும் தாங்கள் இழைத்த தீய செயல்களுக்காக தண்டனை பெற்று பின் தூயோன் அல்லாஹ்வின் அருங்கருணையால் நரகிலிருந்து சுவனம் திரும்புவதை விளக்குகிறது. இறைநம்பிக்கையாளர்கள் நரகத்தி(ன் பாலத்தி)லிருந்து தப்பி வரும்போது சுவர்க்கத்திற்கும், நரகத்திற்கும் இடையிலுள்ள ஒரு பாலத்தில் தடுத்து நிறுத்தப்படுவார்கள். அங்கு உலகில் (வாழ்ந்த போது) அவர்களுக்கிடையே நடந்த அநீதிகளுக்காகச் சிலரிடமிருந்து சிலர் கணக்குத் தீர்த்துக் கொள்வார்கள். இறுதியில் அவர்கள் (மாசு) நீங்கித் தூய்மையாகிவிடும்போது சுவர்க்கத்தில் நுழைய அவர்களுக்கு அனுமதி வழங்கப்படும். முஹம்மதின் உயிர் எவன் கையிலுள்ளதோ அவன் மீதாணையாக! அவர்கள் சுவர்க்கத்தில் உள்ள தம் வசிப்பிடத்தை, உலகத்திலிருந்த அவர்களின் இல்லத்தைவிட எளிதாக அடையாளம் கண்டுகொள்வார்கள் என அபூஸயீத் அல்குத்ரீ (ரலி) அவர்கள் அறிவித்தார்கள்.
(அறிவிப்பாளர்களில் ஒருவரான) யªத் இப்னு ஸுரைஉ(ரஹ்) அவர்கள் (இவ்வுலகில் ஒருவரின் மீது ஒருவர் கொண்டிருந்த) குரோதத்தை அவர்களின் இதயங்களிலிருந்து அகற்றிவிடுவோம்' எனும் (திருக்குர்ஆன் 7:43வது) வசனத்தை ஓதிவிட்டு, (அதற்கு விளக்கமாக) இந்த ஹதீஸை அறிவித்தார்கள்.
(ஆதாரம் : புகாரி)


மற்றொரு அறிவிப்பில்,

(மறுமை நாளில் விசாரணை முடிந்த பின்) சுவர்க்கவாசிகள், சுவர்க்கத்திலும், நரகவாசிகள் நரகத்திலும் நுழைந்துவிட்ட பின் அல்லாஹ் எவருடைய உள்ளத்தில் கடுகளவு ஈமான் எனும் இறைநம்பிக்கை உள்ளதோ அவரை (நரகத்திலிருந்து) வெளியேற்றிவிடுங்கள் என்று கூறுவான். உடனே அவர்கள் கருகிய நிலையில் வெளியேறுவார்கள். அப்போது அவர்கள் கரிக் கட்டைகளாகக் காட்சியளிப்பார்கள். பின்னர் அவர்கள் நஹ்ருல் ஹயாத் எனும் (ஜீவ) நதியில் போடப்படுவார்கள். உடனே அவர்கள் சேற்று வெள்ளத்தில் அல்லது வெள்ளத்தின் கருப்புக் களி மண்ணில் விதை முளைப்பதைப் போன்று (புதுப் பொலிவுடன்) நிறம் மாறி விடுவார்கள். அந்த வித்து (விலிருந்து வரும் புற்பூண்டுகள்) மஞ்சள் நிறத்தில் (பார்ப்பதற்கு அழகாகவும், காற்றில்) அசைந்தாடியதாக(வும்) முளைப்பதை நீங்கள் கண்டதில்லையா? என அபூ ஸயீத் அல்குத்ரீ(ரலி) அறிவித்தார்கள். (ஆதாரம் : புகாரி)

ஈமான் கொண்டோர் இணைவைக்காமல் வாழ்ந்தவர்கள் மறுமையில் சுவர்க்கத்தை அல்லது செய்த பாவங்களுக்கு தண்டனை அனுபவித்த பின்பு சுவர்க்கத்திற்குத் திரும்புவதை மேற்கூறிய நபிமொழிகள் நமக்குணர்த்தின. இறைமறுப்பாளர்கள், இணைவைப்பாளர்கள் நிலை மறுமையில் எப்படி இருக்கும் என்பதை கீழ்காணும் நபிமொழி தெளிவாக்குகிறது.


அனஸ் இப்னு மாலிக்(ரலி) அறிவிக்கிறார்கள், மறுமை நாளில் இறை மறுப்பாளன் (விசாரணைக்காகக்) கொண்டுவரப்பட்டு உனக்கு பூமி நிரம்பத் தங்கம் சொந்தமாக இருந்தால் நீ அவற்றைப் பிணைத் தொகையாகத் தர(வும் அதன் மூலம் நரக வேதனையிலிருந்து விடுதலை பெறவும்) நீ முன்வருவாய் அல்லவா? என்று அவனிடம் கேட்கப்படும். அதற்கு அவன் 'ஆம்' என்று பதிலளிப்பான். அப்போது இதைவிட சுலபமான ஒன்றே (அல்லாஹ்வுக்கு இணை கற்பிக்காமலிருப்பதையே) உன்னிடம் கோரப்பட்டிருந்தது (ஆனால், அதை நீ ஏற்கவில்லை) என்று கூறப்படும் என்று இறைத்தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள். (ஆதாரம் : புகாரி)


மற்றொரு அறிவிப்பில் வரும் வாசகம் பின் வருமாறு உள்ளது.

மறுமை நாளில் நரகவாசிகளிலேயே மிக இலேசான வேதனை அளிக்கப்படுபவரிடம் பூமியிலிருக்கும் பொருள்களெல்லாம் உனக்கே சொந்தம் என்றிருந்தால் நீ அவற்றை பிணைத் தொகையாகத் தர(வும் அதன் மூலம் இந்த வேதனையிலிருந்து விடுதலை பெறவும்) நீ முன்வருவாய் அல்லவா? என்று அல்லாஹ் கேட்பான். அதற்கு அவர் 'ஆம்' என்று பதிலளிப்பார். அப்போது அல்லாஹ் நீ (மனிதர்களின் தந்தை) ஆதமின் முதுகந்தண்டில் (அணுவாக) இருந்தபோது இதைவிட இலேசான ஒன்றை எனக்கு எதையும் இணை கற்பிக்கலாகாது என்பதைத்தான் உன்னிடமிருந்து எதிர்பார்த்தேன். ஆனால் (பூமிக்கு உன்னை அனுப்பியபோது) எனக்கு இணை கற்பிப்பதைத் தவிர வேறெதற்கும் நீ ஒப்புக் கொள்ளவில்லையே! என்று அல்லாஹ் கூறுவான்.
(ஆதாரம் : புகாரி)


மொத்தத்தில் மறுமையில் பெறும் வெற்றி என்பது நரகத்திற்குச் செல்லாமல் சுவர்க்கத்திற்குச் செல்வதுதான். மேற்கூறிய நபிமொழிகள் சுவர்க்கத்திற்குச் செல்வோர், நரகத்திற்குச் செல்வோர், நரகத்திற்குச்சென்று சுவர்க்கத்தில் நுழைவோர் பற்றிய விளக்கங்களே உள்ளன. இருப்பினும் நரகத்திற்குச் செல்லாமல் சுவர்க்கத்திற்குச் செல்லும் உபாயத்தை உணர்த்தும் நபிமொழியைப் பாருங்கள்.


இப்னு அப்பாஸ்(ரலி) அறிவிக்கிறார்கள், நபி(ஸல்) அவர்கள் (பின்வருமாறு) கூறினார்கள்: (விண்ணுலகப் பயணத்தின் போது) பல சமுதாயத்தார் எனக்கு எடுத்துக் காட்டப்பட்டனர். அப்போது ஓர் இறைத்தூதருடன் (கணிசமான எண்ணிக்கையிலிருந்த) ஒரு கூட்டம் கடந்து சென்றது, மற்றோர் இறைத்தூதருடன் சில பேர் கடந்து சென்றனர், மற்றோர் இறைத்தூதருடன் பத்துப் பேரும், இன்னோர் இறைத் தூதருடன் பத்துப் பேரும், இன்னோர் இறைத்தூதருடன் ஐந்து பேரும் கடந்து சென்றனர். பிறிதோர் இறைத்தூதர் தனியாகச் சென்றார். அப்போது ஒரு மிகப் பெரிய கூட்டத்தைக் கண்டேன். நான் (வானவர்) ஜிப்ரீலே! இவர்கள் என் சமுதாயத்தினரா? என்று கேட்டேன். ஜிப்ரீல்(அலை) அவர்கள் இல்லை மாறாக, அடிவானத்தைப் பாருங்கள் என்றார்கள் உடனே பார்த்தேன், அங்கே மிகப் பெரும் மக்கள் திரள் இருக்கக் கண்டேன் பின்னர், ஜிப்ரீல்(அலை) அவர்கள், இவர்கள் தாம் உங்கள் சமுதாயத்தினர். இவர்களின் முன்னிலையில் இருக்கும் இந்த எழுபதாயிரம் பேருக்கு விசாரணையுமில்லை, வேதனையுமில்லை என்று கூறினார்கள்.


நான் ஏன்? என்று கேட்டேன் அதற்கு ஜிப்ரீல்(அலை) அவர்கள், இவர்கள் (நோய்க்காக) சூடிட்டுக் கொள்ளாதவர்களாகவும், ஓதிப்பார்க்காதவர்களாகவும், பறவை சகுனம் பார்க்காதவர்களாகவும், தங்கள் இறைவன் மீதே முழு நம்பிக்கை வைத்தவர்களாகவும் இருந்தார்கள் என்று கூறினார்கள். உடனே நபி(ஸல்) அவர்களை நோக்கி உக்காஷா இப்னு மிஹ்ஸன்(ரலி) அவர்கள் எழுந்து (வந்து) அவர்களில் ஒருவராக என்னையும் ஆக்கும்படி அல்லாஹ்விடம் பிரார்த்தியுங்கள் என்றார்கள், நபி(ஸல்) அவர்கள் அல்லாஹ்வே! இவரை அவர்களில் ஒருவராக ஆக்குவாயாக! எனப் பிரார்த்தித்தார்கள். பிறகு நபி(ஸல்) அவர்களை நோக்கி இன்னொரு மனிதர் எழுந்து (வந்து) அவர்களில் ஒருவனாக என்னையும் ஆக்கும்படி அல்லாஹ்விடம் பிரார்த்தியுங்கள் என்றார்கள், நபி(ஸல்) அவர்கள் இந்த விஷயத்தில் உக்காஷா உம்மை முந்திவிட்டார் என்றார்கள்.


மற்றொரு அறிவிப்பில் இறைத்தூதர்(ஸல்) அவர்கள் என் சமுதாயத்தாரில் எழுபதாயிரம் பேர் கொண்ட ஒரு கூட்டம், பௌர்ணமி இரவில் சந்திரன் பிரகாசிப்பதைப் போன்று முகங்கள் பிரகாசித்தபடி (விசாரணையின்றி சுவர்க்கத்துக்குள்) நுழைவார்கள் என்று கூறினார்கள். உடனே உக்காஷா இப்னு மிஹ்;ஸன் அல்அசதீ(ரலி) அவர்கள் தம் மீதிருந்த கோடுபோட்ட சால்வையை உயர்த்தியவாறு எழுந்து இறைத்தூதர் அவர்களே! அவர்களில் ஒருவனாக என்னையும் ஆக்கும்படி அல்லாஹ்விடம் பிரார்த்தியுங்கள் என்றார்கள், நபி(ஸல்) அவர்கள் அல்லாஹ்வே! இவரையும் அவர்களில் ஒருவராக ஆக்குவாயாக! என்று பிரார்த்தனை செய்தார்கள். பிறகு அன்சாரிகளில் ஒருவர் எழுந்து இறைத்தூதர் அவர்களே! அவர்களில் ஒருவனாக என்னையும் ஆக்கும்படி அல்லாஹ்விடம் பிரார்த்தியுங்கள் என்றார்கள், அதற்கு நபி(ஸல்) அவர்கள் இந்த விஷயத்தில் உக்காஷா உம்மை முந்திவிட்டார் என்றார்கள்.
(புகாரி)


மறுமை வெற்றி என்பது இத்தகைய ஒரு வெற்றியாக இருந்தால்தான் நம் இம்மை வாழ்வின் பலனை, பட்ட கஷ்டங்களை, அமல் செய்வதில் எடுத்துக்கொண்ட அக்கறையை, பேணுதலை அறிந்து அல்லாஹ் வழங்கிய சுவனம் என நாம் மகிழ முடியும். ஆகவே நாம் ஆற்றக்கூடிய அமல்கள் அல்லாஹ்வின் திருப்பொருத்தத்தைப் பெறும் அளவில் அமைத்துக் கொள்வது நம் மீது கடமையாகும். உலக வாழ்வின் அலங்காரங்கள் மனிதனை மயக்கி வழிகேட்டில் செல்ல மனிதனைத் தூண்டக்கூடியதாகவும் நல்லறங்கள் புரிந்து நேர்வழி நடந்து சுவனத்தின் பால் விரைவது இவ்வுலகில் மிகச்சிரமமானது என்பதைக்கூட ஒரு நபிமொழி கூறுவதைப் பாருங்கள். மன இச்சைகளால் நரகம் மூடப்பட்டுள்ளது. சிரமங்களால் சுவர்க்கம் மூடப்பட்டுள்ளது என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறியதாக அபூஹுரைரா(ரலி) அறிவித்தார்கள். (புகாரி)


இன்னல் துன்பங்களுக்கிடையில் சிரமம் மேற்கொண்டு நாம் செய்கின்ற அமல்கள் மட்டும் போதாது. அதற்கு அல்லாஹ்வின் திருப்பொருத்தமும், அருளும் அவசியம் என்பதை நபிமொழியொன்று தெளிவுபடுத்துகின்றது. நேர்மையோடு (நடுநிலையாகச்) செயல்படுங்கள். நிதானமாகச் செயல்படுங்கள். (வரம்பு மீறிவிடாதீர்கள்) அறிந்து கொள்ளுங்கள். உங்களில் யாரையும் அவரின் நற்செயல் சுவர்க்கத்தில் ஒருபோதும் நுழைவிக்காது. (மாறாக, அல்லாஹ்வின் தனிப்பெரும் கருணையாலேயே எவரும் சுவர்க்கம் புக முடியும். நற்செயல்களில் அல்லாஹ்வுக்கு மிகவும் விருப்பமானது. (எண்ணிக்கையில்) மிகவும் குறைவாக இருந்தாலும், (தொடர்ந்து செய்யப்படும்) நிலையான நற்செயலே ஆகும் என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள் என ஆயிஷா(ரலி) அறிவித்தார்கள். (புகாரி)


ஒரு மனிதன் செய்கிற நல்லறங்கள் மட்டும் அவனை சுவர்க்கத்தில் நுழைவித்து விடாது. மாறாக அல்லாஹ்வின் திருப்பொருத்தமும் சுவனம் செல்ல அவசியம் என்பதை மேற்கூறிய நபிமொழி நமக்கு தெளிவாக்குகிறது. குர்ஆன் ஹதீஸை விளங்கி அல்லாஹ் அவனின் திருத்தூதர்(ஸல்) அவர்களின் வழிமுறையைப் பின்பற்றி நடக்க வேண்டும்;. மார்க்கத்தில் புகுத்தப்பட்ட நூதன செயல்களாகிய பித்அத் என்னும் வழிகேடுகளிலுள்ள தரீக்கா, மௌலூது, கத்தம், ஃபாத்திஹா, ஸலாத்துன் நாரிய்யா, கந்தூரி-உருஸ், பிறந்தநாள் போன்றவற்றில் இருந்து விலகியிருக்க வேண்டும். நம்முடைய அமல்கள் நேர்வழியின்பால் இருந்தால்தான் இறைவனின் அருளும் திருப்பொருத்தமும் கிடைக்கும் என்பதை உணர்ந்து செயலாற்ற வேண்டும். குர்ஆன் ஹதீஸைப் பின்பற்றுகிறோம் என்று கூறுபவர்களில் பலர் குர்ஆன் மொழிபெயர்ப்பை ஒருமுறையேனும் முழுவதும் படித்திருக்கமாட்டார்கள். அல்லாஹ் அருள்மறையில் என்ன கூறுகிறான் என்பதைக்கூட புரியாதவர்கள், நாங்கள் குர்ஆனைப் பின்பற்றுகிறோம் என்பது எப்படி சரியாகும்? இக்குறையை நீக்க அவர்கள் முன்வரவேண்டும்.
இயக்கங்கள் பெயரால் இன்று நடக்கும் பாதகச் செயல்களை எழுத்தில் வடித்து விட முடியாது. நேற்று வரை உற்ற சகோதரனாக இருந்தவன் இன்று பரம எதிரி, பார்த்தால் ஸலாம் சொல்வது மாறி பகையுணர்வில் சாபம் நாவில் வர எத்தனிக்கிறது.


அர்த்தமற்ற ஆதாரமில்லாத, அறிவுக்கு எட்டாத அற்புத சம்பவங்களை அமல்களின் சிறப்பாக்கியோர் அமல்கள் செய்வதில் காட்டுகிற அக்கறையை, ஐவேளை தொழுகையில் ஜமாஅத்துடன் தொழ அவர்கள் காட்டுகின்ற உத்வேகத்தை, உற்சாகத்தை அவர்களை விமர்சிக்க நாம் எடுக்கும் சிரமத்தில் சிறிதளவேனும் எடுத்தால் மறுமையில் நன்மைகளாகப் பன்மடங்கை பெருக்கிக்கொள்ளலாமே.

 

அல்லாஹ்வின் பாதையில் நாங்கள் அழைப்புப் பணிக்குச் செல்கிறோம் என்று கூறி தம் வியாபாரம் மனைவி, மக்களை அப்படி அப்படியே விட்டுவிட்டுச் செல்லும் அவர்கள் தங்கள் வியாபாரம் குடும்பத்தை அல்லாஹ் பார்த்துக் கொள்வான் எனும் கூற்றை விழுந்தடித்து விமர்சிப்போர் அவர்கள் அல்லாஹ் மீது வைக்கும் தவக்குல் என்னும் உறுதியான நம்பிக்கையையும் சேர்த்தே விமர்சிக்கின்றனர்.
அவர்கள் காட்டும் பகட்டில்லாத, பணிவு மிகுந்த, பரிவுமிக்க அழைப்புப்பணியிலிருந்து நாம் பெற வேண்டிய படிப்பினைகளை மறந்துவிட்டு எந்த ஒரு எதிர்பார்ப்பையோ பிரதி உபகாரமுமோ இல்லாத உளத்தூய்மையுடன் அவர்கள் ஆற்றும் அழைப்புப்பணியை விமர்சிப்பது வீணே. கைகாசை செலவு செய்து அதன் கூலியை மார்க்கத்திற்கு அர்ப்பணம் செய்வோரை, தொழவராத மக்களை அறிந்தவர் அறியாதவர் என்ற பேதமில்லாமல் தனக்குத் தெரிந்த முறையில் தொழ அழைத்து அதில் ஏற்படும் சிக்கல்களை பொறுமையுடன் சகிக்கும் ஒருவரை அதுபோன்ற பணியில் ஈடுபடாத ஒருவர் விமர்சிப்பது நியாயமற்றதாகும். விமர்சிப்போர் இது போன்ற அழைப்புப்பணியில் ஈடுபட்டு எத்தனை பேரை தொழ வைத்திருக்கிறார் என்று தன்னைத்தானே கேள்வி கேட்டுக்கொள்ளட்டும்.


கொடி பிடித்து கூட்டம் சேர்த்து தன்னடக்கமின்றி சராசரி அரசியல்வாதி போல் உளத்தூய்மையின்றி முகஸ்துதி விரும்பிகளாக எங்கள் கூட்டத்தில்தான் திடல் நிரம்பி வழிந்தது, அவர்கள் கூட்டத்தில் மைதானம் காலி என்று இயக்க வெறியில் பிறர் மெச்ச முகஸ்துதிக்குச் செய்யப்படும் அமல்கள் இஸ்லாத்தின் பார்வையில் எப்படி? என்பதை கீழ் காணும் நபிமொழி கூறுவதைப் பாருங்கள்.


கியாமத் நாளில் முதன் முதலாகத் தீர்ப்பு வழங்கப்படுபவர், அல்லாஹ்வின் பாதையில் ஷஹீதான மனிதராவார். அவர் கொண்டு வரப்படுவார் அல்லாஹ், தான் அவருக்கு அருளிய அருட்கொடைகளை (ஒவ்வொன்றாக) எடுத்துரைப்பான். அவர் அவைகளைப் புரிந்து கொண்டு விடுவார், (பின்னர்) அவ்வருட்கொடைகளின் விஷயத்தில் நமக்கு நன்றி செலுத்தி) நீ என்ன அமல் (நற்செயல்) செய்தாய்? என அவரிடம் அல்லாஹ் கேட்பான். அதற்கவர், 'நான் உன் பதையில் போர் செய்து ஷஹீது ஆனேன்' எனக் கூறுவார். அதற்கு அல்லாஹ் கூறுவான். 'நீ பொய் கூறி விட்டாய்'. நீ புத்திக் கூர்மையான மாவீரன் என (மக்களால்) புகழப்படுவதற்காகவே போர் செய்தாய். அவ்வாறு உன்னை உலகில் புகழ்ந்து கூறப்பட்டு விட்டது. பின்னர், அல்லாஹ் உத்தரவிடுவான். அவனை முகம் குப்புற இழுத்துச் சென்று நரகில் தள்ளப்படும்.


பிறகு கல்வியைக் கற்று, கற்றுத்தந்து, குர்ஆனை ஓதிய அறிஞரின் விஷயத்தில் தீர்ப்புச் செய்யப்படும். அவர் கொண்டு வரப்படுவார்;. அவருக்கு தான் செய்த அருட்கொடைகளை அல்லாஹ் எடுத்துரைப்பான். அவற்றை அவர் புரிந்து கொள்வார். அவற்றின் விஷயத்தில் (நமக்கு நன்றி செலுத்த) நீ என்ன அமல் செய்தாய்? என அல்லாஹ் கேட்பான். அதற்கவர் 'நான் கல்வியைக் கற்று மற்றவருக்குக் கற்றுக் கொடுத்தேன்' உனக்காக குர்ஆனை ஒதினேன் எனக் கூறுவார் அதற்கு அல்லாஹ், 'நீ பொய் கூறிவிட்டாய்', நீ அறிஞன் எனப் புகழப்பட வேண்டும் எனக் கல்வியைக் கற்றாய். 'காரீ' (குர்ஆன் ஓதுபவர்) எனப் புகழப்பட குர்ஆனை ஓதினாய் எனக் கூறுவான். பின்னர் அல்லாஹ் உத்தரவிடுவான் அவரை முகங்குப்புற இழுத்துச் செல்லப்பட்டு நரகில் தள்ளப்படும்.


பின்னர் விஸ்தீரணமான அனைத்து வகைச் செல்வங்களையும் வழங்கியிருந்தவர் கொண்டு வரப்படுவார்;, அவருக்குத் தான் செய்த (கொடுத்த) அருட்கொடைகளை அல்லாஹ் எடுத்துரைப்பான். அவரும் அவற்றைப் புரிந்து கொள்வார்;. நீ அவற்றின் விஷயத்தில் (நமக்கு நன்றி செலுத்த) என்ன அமல் செய்தாய்? என்று அல்லாஹ் கேட்பான். அதற்கவர், என் செல்வத்தை நீ விரும்பும் எந்த வழியிலும் உனக்காகச் செலவழிக்காமல், நான் விட்டு வைக்கவில்லை என்று கூறுவார் அதற்கு, அல்லாஹ் 'நீ பொய் கூறிவிட்டாய்', 'கொடையாளி' என உன்னைப் புகழப்படுவதற்காகச் செலவு செய்தாய், அவ்வாறு உன்னைப் புகழப்பட்டு விட்டது என்று கூறுவான் பின்னர், அல்லாஹ் உத்தரவிடுவான் அவரை முகங்குப்புற இழுத்துச் செல்லப்பட்டு நரகில் தள்ளப்படும்.

அறிவிப்பாளர் அபூஹுரைரா(ரலி), (முஸ்லிம்)


தன்னடக்கம் என்பது இஸ்லாத்தின் பார்வையில் ஒரு மகத்தான விஷயம். உத்தம திருநபி(ஸல்) அவர்களால் சுவனத்திற்கு நன்மாராயம் கூறப்பட்ட நபித்தோழர்களில் ஒருவரான இரண்டாம் கலீஃபா உமர்(ரலி) அவர்கள் தன்னடக்கத்துடன் திகழ்ந்ததின் சான்றைப் பாருங்கள்.

 

அம்ர் இப்னு மைமூன்(ரஹ்) அறிவித்தார்கள், உமர் இப்னு கத்தாப்(ரலி) கொலை செய்யப்படுவதற்குச் சில நாள்களுக்கு முன் மதீனாவில் அவர்களை பார்த்தேன். அவர்கள் ஹுதைஃபா இப்னு யமான்(ரலி) அவர்களுக்கும், உஸ்மான் இப்னு ஹுனைஃப்(ரலி) அவர்களுக்கும் அருகில் நின்று கொண்டு (அவர்கள் இருவரையும் நோக்கி, சவாதுல் இராக் விஷயத்தில்) நீங்கள் எப்படிச் செயல்பட்டீர்கள்? அந்த நிலத்திற்கு (மக்களால்) சுமக்க முடியாத வரிச்சுமையை சுமத்திவிட்டதாக நீங்கள் அஞ்சுகிறீர்களா? என்று கேட்டார்கள். அதற்கு அவர்கள் இருவரும், அந்த நிலத்திற்கு அதன் (உரிமையாளர்களின்) சக்திக்கேற்பவே (வரி) விதித்தோம். அதில் மிக அதிகமாக ஒன்றுமில்லை என்றனர். அதற்கு உமர் (ரலி), அந்த நிலத்திற்கு (மக்களால்) சுமக்க முடியாத வரிச்சுமையை சுமத்தி விட்டீர்களா? என்று (நன்கு) யோசித்துப் பாருங்கள் என்றார்கள். அவ்விருவரும் இல்லை, அதன் சக்திக்கேற்பவே வரி சுமத்தினோம் என்று பதிலளித்தனர். அப்போது உமர்(ரலி), அல்லாஹ் என்னை உயிரோடு வைத்திருந்தால் இராக் வாசிகளின் விதவைப் பெண்களை எனக்குப் பிறகு வேறெவரிடமும் கையேந்தத் தேவையில்லாத நிலையில் தான்விட்டுச் செல்வேன் என்று கூறினார்கள். இப்படி அவர்கள் சொல்லி நான்கு நாட்கள் கூட சென்றிருக்காது அதற்குள் (பிச்சுவாக் கத்தியால்) உமர்(ரலி) குத்தப்பட்டுவிட்டார்கள்.


உமர்(ரலி) குத்தப்பட்ட நாளில் அதிகாலை(த் தொழுகைக்காக) நான் (தொழுகை அணியில்) நின்று கொண்டிருக்கிறேன், எனக்கும் உமர்(ரலி) அவர்களுக்கும் இடையில் அப்துல்லாஹ் இப்னு அப்பாஸ்(ரலி) அவர்களைத் தவிர வேறு எவரும் இருக்கவில்லை. உமர்(ரலி) (மக்களுக்குத் தொழுகை நடத்துவதற்கு முன்) இரண்டு தொழுகை அணிகளுக்கு இடையில் சென்றால் (மக்களை நோக்கி), சீராக நில்லுங்கள் என்று கூறுபவர்களாக இருந்தார்கள். அணிகளுக்கிடையே சீர் குலைவு தென்படாத போதே முன் சென்று (தொழுகைக்காக) தக்பீர் (தஹ்ரீமா) கூறுவார்கள். சில சமயம் 'யூசுஃப்' அத்தியாயம் அல்லது 'நஹ்ல்' அத்தியாயம் அல்லது அது போன்ற (வேறோர் அத்தியாயத்)தை, மக்கள் தொழுகைக்காக வந்து சேரும் வரையில் முதல் ரக்அத்தில் ஓதுவார்கள்.


(சம்பவ தினத்தன்று) அப்போதுதான் தக்பீர் கூறியிருப்பார்கள். 'என்னை நாய் கொன்றுவிட்டது, அல்லது தின்றுவிட்டது.' என்று கூறினார்கள். (அப்போது 'அபூ லுஃலுஆ ஃபைரோஸ்' என்பவன் பிச்சுவாக் கத்தியால் அவர்களைக் குத்தி விட்டிருந்தான்). உடனே, அந்த 'இல்ஜ்' (அரபியில்லாத அந்நிய மொழி பேசும் இறைமறுப்பாளன்) தன்னுடைய பிச்சுவாக் கத்தியை எடுத்துக் கொண்டு தன்னுடைய வலப்பக்கம், இடப்பக்கம் நிற்கும் எவரையும் விடாமல் குத்திக் கொண்டே விரைந்தோடலானான். முடிவாக, பதின்மூன்று ஆண்களை அவன் குத்தி விட்டிருந்தான். அதில் ஏழுபேர் இறந்துவிட்டனர். இதைக் கண்ட (அங்கிருந்த) முஸ்லிம்களில் ஒருவர் தம் நீண்ட தொப்பியை (கழற்றி) அவன் மீது வீசி எறிந்தார். அந்த அந்நிய மொழிக்காரனான இறைமறுப்பாளன், தாம் பிடிபட்டு விடுவோம் என்று எண்ணி தன்னைத் தானே அறுத்து (த் தற்கொலை செய்து) கொண்டான்.


மேலும், (தொழுகை நடத்திக் கொண்டிருந்த) உமர்(ரலி), அப்துர் ரஹ்மான் இப்னு அவ்ஃப்(ரலி) அவர்களின் கரத்தைப் பிடித்து (மக்களுக்குத் தொழுகை நடத்துவதற்காகத் தம்மிடத்தில்) முன்னிறுத்தினார்கள். நான் பார்த்த (இந்தச் சம்பவத்)தை உமர்(ரலி) அவர்களுக்கருகே இருந்தவர்களும் பார்த்தனர். ஆனால், பள்ளிவாசாலின் மூலைகளில் (தொழுது கொண்டு) இருந்தவர்களுக்கு இது தெரியவில்லை. ஆயினும், (தொழுகை நடத்திக் கொண்டிருந்த) உமர்(ரலி) அவர்களின் சப்தம் நின்றுவிட்டபோது அவர்கள் 'சுப்ஹானல்லாஹ், சுப்ஹானல்லாஹ் (அல்லாஹ் தூயவன், அல்லாஹ் தூயவன்) என்று கூறிக் கொண்டிருந்தார்கள். அப்போது அப்துர் ரஹ்மான் இப்னு அவ்ஃப்(ரலி) (சிறிய அத்தியாயங்களை ஓதி) சுருக்கமாகத் தொழுகை நடத்தினார்கள்.


மக்கள் (தொழுது முடித்து) திரும்பியபோது உமர்(ரலி), இப்னு அப்பாஸ் அவர்களே! என்னைக் கொன்றவன் யார் என்று பாருங்கள் என்று கூறினார்கள். அப்போது இப்னு அப்பாஸ்(ரலி) சிறிது நேரம் சுற்றிப் பார்த்துவிட்டு வந்து, 'முகீராவின் அடிமை தான் (உங்களைக் குத்தியது)' என்று கூறினார்கள். உமர்(ரலி), அந்தத் திறமையான தொழில் கலைஞனா? என்று கேட்டார்கள். 'ஆம்' என்று இப்னு அப்பாஸ்(ரலி) பதிலளித்தார்கள். அல்லாஹ் அவனைக் கொல்லட்டும்! அவன் விஷயத்தில் நல்லதைத் தானே நான் உத்தரவிட்டேன்! ஆனால், (என்னையே அவன் கொன்றுவிட்டானே)! தன்னை முஸ்லிம் என்று சொல்லிக் கொள்ளும் ஒருவரின் கரத்தால் எனக்கு மரணம் நேரும்படிச் செய்து விடாத அல்லாஹ்வுக்கே எல்லாப் புகழும்.


(மதீனா நகரத்தின் சில பணிகளுக்கு அரபுகள் அல்லாத அந்நியர்கள் அவசியம் எனக் கூறி) அரபுகள் அல்லாத அந்நிய(த் தொழிற் கலைஞ)ர்கள் மதீனாவில் அதிகம் இருக்க வேண்டுமென (இப்னு அப்பாஸ் அவர்களே!) நீங்களும் உங்கள் தந்தையார் (அப்பாஸ்) அவர்களுமே விரும்பக் கூடியவர்களாக இருந்தீர்கள்' என்று உமர்(ரலி) கூறினார். அவர்களிடையே அப்பாஸ்(ரலி) அவர்களே நிறைய அடிமைகள் உடையவராக இருந்தார்கள். அப்போது இப்னு அப்பாஸ்(ரலி) (உமர்(ரலி) அவர்களை நோக்கி), நீங்கள் விரும்பினால் (மதீனாவிலுள்ள அரபுகளல்லாத தொழில் கலைஞர்கள் அனைவரையும்) கொன்று விடுகிறோம் என்று கூறினார்கள். உமர்(ரலி), நீங்கள் (இந்த எண்ணத்தினால்) தவறிழைத்து விட்டீர்கள். உங்களின் மொழியில் அவர்கள் பேசிய பின்பும், உங்களின் கிப்லாவை நோக்கித் தொழுத பின்பும், உங்களைப் போன்றே ஹஜ்ஜு செய்த பின்புமா? (முஸ்லிம்களான அவர்களைக் கொலை செய்யப் போகிறீர்கள்?) என்று கேட்டார்கள்.

 

பிறகு, (குற்றுயிராயிருந்த) உமர் (ரலி) அவர்களை அவர்களின் வீட்டிற்கு சுமந்து செல்லப்பட்டது. அவர்களுடன் நாங்களும் சென்றோம். அன்றைய நாளுக்கு முன்னால் எந்தத் துன்பமும் நிகழ்ந்திராதது போன்று மக்கள் (கடுந் துயரத்துடன்) காணப்பட்டனர். ஒருவர், அவருக்கு ஒன்றும் ஆகிவிடாது என்கிறார். மற்றொருவர், அவருக்கு (மரணம் சம்பவித்து விடும் என்று) நான் அஞ்சுகிறேன் என்று கூறுகிறார். அப்போது, (காயத்தின் ஆழத்தைக் கண்டறிவதற்காக) பேரீச்சம் பழச்சாறு கொண்டு வரப்பட்டது. அதை உமர்(ரலி) அருந்தினார்கள். உடனே, அது அவர்களின் வயிற்றின் (காயத்தின்) வழியாக வெளியேறியது. (வெளியில் வந்தது பேரீச்சம் பழச் சாறா அல்லது உமரின் இரத்தமா என்று பாகுபடுத்த முடியாத விதத்தில் இரண்டும் ஒரே நிறத்தில் இருந்ததால்) பிறகு, பால் கொண்டு வரப்பட்டது. அதை அவர்கள் அருந்தினார்கள். அதுவும் காயத்தின் வழியாக (வெள்ளை நிறத்தில்) வெளியேறிவிட்டது. அப்போது அவர்கள் இறக்கும் நிலையை அடைந்து விட்டார்கள் என்று மக்கள் அறிந்து கொண்டனர்.


அவர்களின் அருகே நாங்கள் சென்றோம். மக்கள் வந்து உமர்(ரலி) அவர்களைப் புகழ்ந்து பேசத் தொடங்கினார்கள். ஓர் (அன்சாரி) இளைஞரும் வந்தார். அவர், இறை நம்பிக்கையாளர்களின் தலைவரே! அல்லாஹ்வின் தூதருடனான (உங்களுடைய) தோழமை, இஸ்லாத்தில் (உங்களுக்கிருக்கும்) நீங்களே அறிந்துள்ள சிறப்பு, பிறகு நீங்கள் (ஆட்சித் தலைவராகப் பதவியேற்று (குடி மக்களிடையே) நீதியாக நடந்து கொண்டது, பிறகு (இப்போது) உயிர்த் தியாகம் (செய்யவிரும்புவது) ஆகியவற்றின் மூலம் அல்லாஹ் உங்களுக்கு வழங்கியுள்ள நற்செய்தி கொண்டு நீங்கள், மகிழ்ச்சி அடையுங்கள் என்று கூறினார். (இதைக் கேட்ட) உமர்(ரலி) இவையெல்லாம் எனக்கு (சாதகமாக இல்லாவிட்டாலும் பாதகமாக இல்லாமல் இருந்தாலே போதும் எனவே, இவை எனக்கு) சாதகமாகவும் வேண்டாம்; பாதகமாகவும் வேண்டாம். சரிக்குச் சமமாக இருப்பதையே விரும்புகிறேன் என்று கூறினார்கள்.
அந்த இளைஞர் திரும்பிச் சென்றபோது அவரின் கீழங்கி பூமியைத் தொட்டுக் கொண்டிருந்தது. (இதைக் கண்ட) உமர்(ரலி), அந்த இளைஞரை என்னிடம் திரும்ப அழைத்து வாருங்கள் என்று கூறினார்கள். (அவர் திரும்பி வந்த போது), என்னுடைய சகோதரரின் மகனே! உன்னுடைய ஆடையை (பூமியில் படாமல்) உயர்த்திக் கட்டு! இது உன் ஆடையை நீண்ட நாள் நீடிக்கச் செய்யும்; உன்னுடைய இறைவனுக்கு அஞ்சி நடப்பதுமாகும் என்று கூறினார்கள். (பிறகு தம் மகனை நோக்கி), உமரின் மகன் அப்துல்லாஹ்வே! என் மீது எவ்வளவு கடன் (பாக்கி) உள்ளது என்று பார் என்று கூறினார்கள். அவ்வாறே அவர்கள், கணக்கிட்டுப் பார்த்தனர். எண்பத்தாறாயிரம் (திர்ஹம், தீனார்) அல்லது அது போன்றது இருப்பதைக் கண்டார்கள். உமர்(ரலி), இந்தக் கடன்களை அடைப்பதற்கு உமரின் செல்வம் போதுமென்றால் அதிலிருந்து கொடுத்து விடு. அவ்வாறு போதுமானதாக இல்லாவிட்டால் (நம் கூட்டத்தாரான) அதீ இப்னு கஅப் மக்களிடம் கேட்டு (வாங்கிக்) கொள். அவர்களின் செல்வமும் போதுமானதாக இல்லாவிட்டால் (நம்முடைய குலமான) குறைஷிக் குலத்தாரிடம் கேட்டு (வாங்கிக்) கொள். இவர்களையும் தாண்டி வேறு யாரிடமும் செல்லாதே. (இவர்களிடம் கேட்டு வாங்கிய) பின், என் சார்பாக இந்தக் கடன்களை நீயே அடைத்து விடு! (பிறகு) இறை நம்பிக்கையாளர்களின் அன்னை ஆயிஷா அவர்களிடம் நீ சென்று, உமர் உங்களுக்கு ஸலாம் கூறுகிறார் என்று கூறு. 'விசுவாசிகளின் தலைவர்' என்று (என்னைப் பற்றிக்) கூறாதே. ஏனெனில், நான் இன்று (முதல்) விசுவாசிகளுக்கு (ஆட்சித்) தலைவனல்லன். மேலும், (அன்னை ஆயிஷா(ரலி) அவர்களிடம்) உமர் தம் இரண்டு தோழர்கள் (நபி(ஸல்) மற்றும் அபூபக்கர்(ரலி) அடக்கம் செய்யப்பட்டுள்ள உங்களின் அறையில் அவர்கள்) உடன் தம்மையும் அடக்கம் செய்வதற்கு (உங்களிடத்தில்) அனுமதி கோருகிறார் என்று சொல் எனக் கூறினார்கள். ஆயிஷா(ரலி) அவர்களிடம் உமர்(ரலி) அவர்களின் புதல்வர் சென்று ஸலாம் கூறி, (வீட்டுக்குள் நுழைய) அனுமதி கேட்ட பிறகு வீட்டிற்குள் நுழைந்தார்கள்.


அப்போது ஆயிஷா(ரலி)அவர்கள் (உமர்(ரலி) அவர்கள் குத்தப்பட்ட செய்தியறிந்து) அழுது கொண்டு அமர்ந்திருப்பதைக் கண்டார்கள். அப்போது, அவர்களைப் பார்த்து, (என் தந்தை) உமர் இப்னு கத்தாப் தங்களுக்கு ஸலாம் கூறுகிறார்கள். தம் இரண்டு தோழர்களுடன் தம்மையும் அடக்கம் செய்வதற்குத் தங்களிடம் அனுமதி கேட்கிறார்கள் என்று கூறினார்கள். அப்போது ஆயிஷா(ரலி), எனக்காக அ(ந்த இடத்)தை (ஒதுக்கிக் கொள்ள) நான் நினைத்திருந்தேன். (இப்போது அங்கு அடக்கம் செய்யப்படுவதற்கு) என்னை விட முதலிடம் கொடுத்து விட்டேன். (அவரையே அந்த இடத்தில் அடக்கிக் கொள்ளுங்கள்) என்று கூறினார்கள்.


பிறகு அவர்கள் (உமர்(ரலி) அவர்களிடம்) திரும்பி வந்தபோது, இதோ, உமர் அவர்களின் மகன் அப்துல்லாஹ் வந்துவிட்டார்கள் என்று கூறப்பட்டது. (ஒருக்களித்துப் படுத்திருந்த) உமர்(ரலி), என்னைத் தூக்கி உட்கார வையுங்கள் என்று கூறினார்கள். அப்போது (அங்கிருந்த) ஒருவர் தன்னோடு அவர்களை அணைத்துக் கொண்டு சாய்த்து அமர்த்தினார். அப்போது உமர்(ரலி) (தம் மகனை நோக்கி), உன்னிடம் என்ன (பதில்) உள்ளது? என்று கேட்டார்கள். நீங்கள் விரும்பியது தான், இறை நம்பிக்கையாளர்களின் தலைவரே! (ஆயிஷா (ரலி) அனுமதித்து விட்டார்கள் என்று அப்துல்லாஹ் கூறினார்கள்). -புகாரி ஹதீஸின் ஒரு பகுதி-


தன்னலமற்ற தன்னடக்கமுள்ள பழிவாங்கும் எண்ணமற்ற தான் ஒரு மக்களின் தலைவர் என்கிற பெருமையில்லாத பொறுமையாளராக உமர்(ரலி) அவர்கள் இருந்ததை மேற்கூறிய ஹதீஸில் கண்டோம். ஆகவே நரகமில்லாத சுவன வாழ்வைச் சுவைக்க நாம் செய்யும் அமல்கள் அதுவும் உளத்தூய்மையுடன் அல்லாஹ்வுக்காக அவனின் திருத்தூதர் காட்டித்தந்த வழிமுறைப்படி முகஸ்துதியற்று இருந்தால்தான் கிடைக்கும்.


இணைவைப்பிலிருந்து மீண்ட நாம், மார்க்கத்தில் புதிதாக புகுத்தப்பட்ட நூதன காரியங்களில் (பித்அத்) இருந்து விடுபட்ட நமது அமல்களின் ஏடுகள் களங்கமில்லாத தெளிவான நிலையில் காலியாகத்தான் இருக்கிறது. அதனை அல்லாஹ்வின் திருப்பொருத்தம் பெற்ற அமல்கள் செய்து நிரப்பி படைத்தவன் நேர்வழியாளர்களுக்கு சித்தப்படுத்தி வைத்திருக்கும் ஜன்னத்துல் ஃபிர்தவ்ஸ் எனும் உயர்ந்த சுவனத்தைப் பெற முயற்சிப்போமாக.