புகாரி
நபிமொழித் தொகுப்பிலிருந்து சில.. |
உக்காழ்,
மஜன்னா, துல்மஜாஸ் ஆகியவை அறியாமைக் காலத்தில் கடைவீதிகளாக இருந்தன.
இஸ்லாம் வந்ததும் அங்கே வியாபாரம் செய்வதை மக்கள் குற்றம் எனக்
கருதினார்கள். அப்போது "உங்களுடைய இறைவனின் அருளைத் தேடுவது உங்களின்
மீது குற்றமில்லை" என்ற (திருக்குர்ஆன் 02:198) வசனம் அருளப்பட்டது
என்று இப்னு அப்பாஸ்(ரலி) அறிவிக்கிறார்கள்.
"ஹலால்
எனும் அனுமதிக்கப்பட்டது தெளிவானது; ஹராம் எனும் விலக்கப்பட்டதும்
தெளிவானது; அவ்விரண்டிற்குமிடையே சந்தேகத்திற்கிடமான காரியங்கள் உள்ளன.
பாவம் எனச் சந்தேகப்படுபவற்றைவிட்டு விடுகிறவர் பாவம் என்று தெளிவாகத்
தெரிவதை நிச்சயம்விட்டு விடுவார்; பாவம் எனச் சந்தேகப்படுபவற்றைச்
செய்யத் துணிகிறவர் தெளிவான பாவங்களிலும் வீழ்ந்து விடக் கூடும்.
பாவங்கள் அல்லாஹ் போட்ட வேலிகளாகும். வேலியைச் சுற்றி மேய்கிறவர்
அதற்குள்ளும் சென்று விடக்கூடும்" என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள்
கூறினார்கள் என நுஃமான் இப்னு பஷீர்(ரலி) அறிவிக்கிறார்கள்.
"தாம்
சம்பாதித்தது ஹலாலா ஹராமா என்று மக்கள் பொருட்படுத்தாத ஒரு காலம் (இனி)
வரும்!" என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள், என அபூ
ஹுரைரா(ரலி) அறிவிக்கிறார்கள்.
அபுல்
மின்ஹால்(ரஹ்) அறிவிக்கிறார்கள், "நான் நாணய மாற்று வியாபாரம் செய்து
வந்தேன்; அது பற்றி(ய மார்க்கச் சட்டத்தை) ஸைத் இப்னு அர்கம்(ரலி),
பராஉ இப்னு ஆஸிப்(ரலி) ஆகியோரிடம் கேட்டேன். அதற்கவர்கள், "நாங்கள்
நபி(ஸல்) அவர்களின் காலத்தில் வியாபாரிகளாக இருந்தோம்; அவர்களிடம்
நாணயமாற்று வியாபாரம் பற்றிக் கேட்டோம். அதற்கு "உடனுக்குடன்
மாற்றினால் அதில் தவறில்லை; தவணையுடன் இருந்தால் அது கூடாது" என
அவர்கள் பதிலளித்தார்கள்.
ஜாபிர்(ரலி) அறிவிக்கிறார்கள், "நாங்கள் நபி(ஸல்) அவர்களுடன் ஜும்ஆ
தொழுகை தொழுது கொண்டிருந்தபோது வணிகக் கூட்டம் ஒன்று வந்தது. உடனே,
பன்னிரண்டு நபர்களைத் தவிர மற்றவர்கள் (வணிகக் கூட்டத்தை நோக்கி
கலைந்து) ஓடிவிட்டனர். அப்போது, "அவர்கள் வியாபாரத்தையோ வேடிக்கையையோ
கண்டால், நின்ற நிலையில் உம்மைவிட்டுவிட்டு அங்கே ஓடி விடுகிறார்கள்!"
என்னும் (திருக்குர்ஆன் 62:11) இறைவசனம் அருளப்பட்டது!"
இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள், "ஒரு பெண் தம் வீட்டிலுள்ள
உணவைப் பாழ்படுத்தாமல், (பசித்தவர்களுக்குக் கொடுத்து) செலவு செய்தால்
(அப்படி) செலவு செய்ததற்காக (அவளுக்குரிய) நற்கூலி அவளுக்கு
கிடைக்கும். (அந்த உணவைச்) சம்பாதித்தற்கான நற்கூலி அவளுடைய கணவனுக்கு
உண்டு. கருவூலப் பொறுப்பாளருக்கும் அதுபோல் (நற்கூலி) கிடைக்கும்.
ஒருவர் மற்றவரின் கூலியில் எதனையும் குறைத்து விடமாட்டார்" என
ஆயிஷா(ரலி) அறிவிக்கிறார்கள்.
"ஒருவர்
செல்வ வளம் தமக்கு வழங்கப்பட வேண்டும் அல்லது தம் வாழ்நாள்
அதிகரிக்கப்படவேண்டும்" என்று விரும்பினால் அவர் தம் உறவினர்களுடன்
சேர்ந்து வாழட்டும்!" என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள் என
அனஸ் இப்னு மாலிக்(ரலி) அறிவிக்கிறார்கள்.
"ஒருவர்
தம் கையால் உழைத்து உண்பதை விடச் சிறந்த உணவை ஒருபோதும் உண்ண முடியாது.
தாவூத் நபி அவர்கள் தங்களின் கையால் உழைத்து உண்பவர்களாகவே இருந்தனர்
என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்" என மிக்தாம்(ரலி)
அறிவிக்கிறார்கள்.
"பிறரிடம் யாசகம் கேட்படை விட ஒருவர் தம் முதுகில் விறகுக் கட்டைச்
சுமந்து (விறகச்) செல்வது சிறந்ததாகும். அவர் யாசிக்கும்போது யாரும்
கொடுக்கவும் செய்யலாம்; மறுக்கவும் செய்யலாம்" என்று இறைத்தூதர்(ஸல்)
அவர்கள் கூறினார்கள்" இதை அபூ ஹுரைரா(ரலி) ஸுபைர் இப்னு அவ்வாம்(ரலி)
இருவரும் அறிவிக்கிறார்கள்.
வாங்கும்
பொழுதும் விற்கும் பொழுதும் வழக்குரைக்கும் பொழுதும் பெருந்தன்மையாக
நடந்து கொள்ளும் மனிதருக்கு அல்லாஹ் அருள் புரிவானாக!" என்று
இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள் என ஜாபிர் இப்னு அப்தில்லாஹ்(ரலி)
அறிவிக்கிறார்கள்.
"(முன்
காலத்தில்) மக்களுக்குக் கடன் கொடுக்கக் கூடிய ஒரு வியாபாரி இருந்தார்.
கடனைத் திருப்பிச் செலுத்தச் சிரமப்படுபவரை அவர் கண்டால், தம்
பணியாளர்களிடம் இவரின் கடனைத்தள்ளுபடி செய்யுங்கள்; அல்லாஹ் நம்முடைய
தவறுகளைத் தள்ளுபடிச் செய்யக்கூடும் என்று கூறுவார். அல்லாஹ்வும்
அவரின் தவறுகளைத் தள்ளுபடி செய்தான்." என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள்
கூறினார்கள் என அபூ ஹுரைரா(ரலி) அறிவிக்கிறார்கள்.
"விற்பவரும் வாங்குபவரும் பிரியாமலிருக்கும் வரை வியாபாரத்தை
முறித்துக் கொள்ளும் உரிமை இருவருக்கும் உண்டு! அவ்விருவரும் உண்மை
பேசி குறைகளைத் தெளிவுபடுத்தியிருந்தால் அவர்களின் வியாபாரத்தில்
பரக்கத் (அருள் வளம்) அளிக்கப்படும்! குறைகளை மறைத்துப் பொய்
சொல்லியிருந்தால் அவர்களின் வியாபாரத்தில் உள்ள பரக்கத் நீக்கப்படும்!"
என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள் என ஹகீம் இப்னு ஹிஸாம்(ரலி)
அறிவிக்கிறார்கள்.
"இன்றிரவு (கனவில்) இரண்டு மனிதர்களைக் கண்டேன். அவர்கள் என்னிடம் வந்த
தூய்மையான ஒரு நிலப்பகுதிக்கு என்னை அழைத்துச் சென்றனர். நாங்கள்
நடந்து வந்தபோது இரத்த ஆறு ஒன்றை அடைந்தோம். ஆற்றில் ஒருவர்
நின்றிருந்தார். ஆற்றின் நடுவில் இன்னொருவர் தமக்கு முன்னே கற்களை
வைத்து நின்றிருந்தார். ஆற்றிலே உள்ளவர் வெளியேற முனையும்போது. அவர்
வாயில் (ஆற்றின் நடுவில்) நின்றிருந்தவர் கல்லை எறிந்து அவர் முன்பு
நின்ற இடத்திலேயே அவரைக் கொண்டுபோய் நிறுத்தினார். அவர் வெளியேற வரும்
போதெல்லாம் இவர் அவரின் வாயில் கல்லை எறிய, அதனால் அவர் முன்பிருந்த
இடத்திற்கே திரும்பிச் சென்று கொண்டிருந்தார்!
"அவர்
யார்?" என்று (என்னை அழைத்துச் சென்றவர்களிடம்) கேட்டேன். அதற்கவர்கள்
"ஆற்றில் நீர் பார்த்தவர் வட்டி உண்பவராவார்" என்று இறைத்தூதர்(ஸல்)
அவர்கள் கூறினார்கள் என ஸமுரா(ரலி) அறிவிக்கிறார்கள்.
"(பொய்)
சத்தியம் செய்வது சரக்கை (சுலபமாக) விற்பனை செய்ய உதவும்; ஆனால்,
பரக்கத் (எனும் அருள் வளத்)தை அழித்துவிடும்!" என்று இறைத்தூதர்(ஸல்)
அவர்கள் கூறினார்கள் என அபூ ஹுரைரா(ரலி) அறிவிக்கிறார்கள்.
"நல்ல
நண்பனுக்கும் தீய நண்பனுக்கும் உதாரணம் கஸ்தூரி வைத்திருப்பவரும்
கொல்லனின் உலையுமாகும்! கஸ்தூரி வைத்திருப்பவரிடமிருந்து நீர் அதை
விலைக்கு வாங்கலாம்: அல்லது அதன் நறுமணத்தையாவது பெறலாம்! கொல்லனின்
உலை உம்முடைய வீட்டையோ உம்முடைய ஆடையையோ எரித்து விடும்; அல்லது
அவனிடமிருந்து கெட்ட வாடையை நீர் பெற்றுக் கொள்வீர்!" என்று
இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்" என அபூ மூஸா(ரலி)
அறிவிக்கிறார்கள்.
தொடரும்.. |