Index |Subscribe mailing list | Help | E-mail us

பெருநாள் தேதி - உங்கள் ஆய்வுக்காக சில விஷயங்கள்

 

 

அஹில்லா (சந்திரனின் தேய்ந்து வளரும் நிலைகள்) பற்றி உம்மிடம் கேட்கிறார்கள். "அவை மனித சமுதாயத்திற்கு தேதியை அறிவிப்பவையாகவும், ஹஜ்ஜின் காலத்தை அறிவிப்பவையாகவும் இருக்கின்றன" என்று (நபியே) கூறும். (அது தேதியை அறிவிக்கும் போது) வசிக்கும் பகுதிகளில் அவற்றின் பின்புறமாக வருவதில் புண்ணியமில்லை. மாறாக, இறைவனுக்கு அஞ்சுபவனே புண்ணியவான். எனவே, வசிக்கும் பகுதிகளில் அவற்றின் வாசல்கள் வழியாகவே வாருங்கள்! இன்னும், நீங்கள் வெற்றிபெறும் பொருட்டு அல்லாஹ்வை அஞ்சுங்கள்! (அல் குர்ஆன் 2 : 189)

இவ் உலக வாழ்விற்கு நாட்காட்டி (
Calender) ஒரு அவசியமான தேவை என்பதை நாம் மறுக்க முடியாது, இஸ்லாம் அல்லாஹ்வால் அவனுடைய தூதர் மூலமாக மனித சமுதாயத்திற்கு நேர்வழி காட்ட வந்தது என இஸ்லாமியர்களால் பெருமையுடன் பேசப்படுகிறது..

இஸ்லாமியர்கள் இன்று வரை அல்லாஹ் ஏற்படுத்தி தந்த நாட்காட்டியை ஆராய்ந்து கண்டுபிடித்து மேற்கண்ட வசனத்தின் அடிப்படையில் உலக மக்களுக்கு தேதியை அறிவிக்க முயற்சி செய்யாமல் காலம் தாழ்த்தி வருகின்றனர்.

அல்லாஹ்வோ தற்போது நடைமுறையில் உபயோகப்படுத்தி வரும் எந்த நாட்காட்டியை (அரபி தேதிக்காக) பின்பற்றினாலும் நாம் கீழ்கண்ட வசனத்தின் அடிப்படையில் இறை மறுப்பாளர்களாக ஆகி விடுகிறோம் என கூறுகின்றான்.

நிச்சயமாக அந்நஸீவு (நாட்களை மாதங்களை முன்னும் பின்னும் ஆக்குவதெல்லாம்) நிராகரிப்பையே அதிகப்படுத்துகிறது. இதன் மூலம் இறைமறுப்பாளர்களே வழி கெடுக்கப்படுகின்றனர். ஒரு வருடத்தில் அதை அனுமதிக்கப்பட்டதாக கொள்கின்றனர். மற்றொரு வருடத்தில் அதை அனுமதிக்கப்படாததாக ஆக்கிக் கொள்கின்றனர். (உதாரணம் பிப்ரவரி மாதத்தில் 29 நாட்கள் என அனுமதிக்கின்றனர். மற்றொரு வருடத்தில் அதை மறுக்கின்றனர்.) அல்லாஹ் தடுத்திருக்கும் மாதங்களின் எண்ணிகையை முன்னும் பின்னும் ஆக்கி, அல்லாஹ் தடுத்திருக்கும் மாதங்களை தாங்கள் ஆகுமாக்கி கொள்வதற்காகத்தான். இறைமறுப்பாளர் கூட்டத்தை ஏக இறைவன் நேர்வழிநடத்தவும் மாட்டான். (அல் குர்ஆன் 9 : 37 )

தற்போது உள்ள ஆங்கில நாட்காட்டியில் இருபத்தொண்பது நாட்கள் பிப்ரவரி மாதத்தில் வருகிறது. ஒரு சில வருடங்களில் அதை தடுத்து இருபத்தெட்டு நாட்களாக ஆக்கிக் கொள்கின்றனர். அதோடு மட்டும் அல்லாமல் ஆங்கில நாட்காட்டியில் முப்பத்தியொரு நாட்களும் வருகிறது. இப்படி அவர்கள் ஏற்படுத்தி வைத்திருப்பதே அல்லாஹ் தடுத்த மாதங்கள் தாங்கள் நினைத்த காலங்களில் வரவேண்டும் என்பதற்காகத்தான்.

அல்லாஹ்வின் நாட்காட்டியில் மாதம் என்பது இருபத்தொண்பது நாட்களாகவோ சில மாதங்களில் முப்பது நாட்களாகவோ மட்டும் தான் இருக்கும். இதனால்தான் இஸ்லாமிய நாட்காட்டி அடிப்படையில் எல்லா (வெயில் மழை குளிர்)காலங்களிலும் வணக்க வழிபாடுகள் நடைபெறுகிறது. அத்துடன் தடுக்கப்பட்ட நான்கு மாதங்களும் எல்லா பருவ காலத்திலும் வரும்படி தான் அல்லாஹ் அவனுடைய நாட்காட்டியை அமைத்துள்ளான். மேற்கண்ட விபரங்களை நாம் ஆய்வு செய்து எது சரி எது தவறு என கண்டுபிடித்து நடைமுறைபடுத்தாமல் அலட்சியமாக இருந்தோமானால், மேற்கண்ட 9:37 வசனத்தின் அடிப்படையில் அல்லாஹ்வுடைய மார்க்கத்தை நிராகரித்தவர்களாகி ஆகிவிடுவோம் என்பதை நாம் சிந்திக்க கடமைப்பட்டுள்ளோம்.

அல்லாஹ் மாதத்தை பற்றி தானே கூறுகின்றான், அதற்கும் நாட்களுக்கும் என்ன சம்மந்தம் என கேள்வி எழலாம். எனவே நாம் இதிலும் சிந்திக்கக்கடமைப்பட்டுள்ளோம். ஒரு மாதம் வரவேண்டும் என்றால் முதலில் ஒரு நாளை சரியாக கணக்கிட்டு வந்தால் தான் மாதத்தை கணக்கிட முடியும். ஒரு நாள் முன்னும் பின்னும் ஆகிவிட்டால் ஒரு மாதமே முன்னும் பின்னும் ஆகிவிடும் என்பது நாம் சற்று சிந்தித்தாலே போதுமானதாகும்.

உதாரணமாக ஹிஜ்ரி 1426 ரமளான் மாதம் செவ்வாய் கிழமை, புதன் கிழமை, வியாழன் கிழமை என வெவ்வேறு நாட்களில் ஆரம்பமானது, கிழமை மாறினால் தேதி மாறும், தேதி மாறினால் கிழமை மாறும் என்பதை சிறு குழந்தைகள் கூட சிந்திக்காமல் கூறக் கூடிய விசயமாகும். நாம் நோன்பு ஆரம்பிக்கும் போது மூன்று நாட்களுக்கு முதல் தேதியாக இருந்தது. ஆங்கில நாட்காட்டியில் நவம்பர் மாதம் "03-11-2005" அன்று வியாழக்கிழமை தான். அதை வெள்ளி கிழமை என்றோ சனிக்கிழமை என்றோ யாராவது கூறினால் அவர்களை நாம் என்னவென்று கூறுவோம். இது நாட்காட்டியின் அடிப்படை விதியாகும்.

இதே கோணத்தில் நாம் சிந்தித்தால் உதாரணமாக 1426 ரமளான் மாதத்தின் எதிர்வரும் புதன்கிழமை ஒருவருக்கு 28-09-1426 (வியாழன் நோன்பை ஆரம்பித்தவர்கள்) மற்றொருவருக்கு 29-09-1426 (புதன்கிழமை நோன்பை ஆரம்பித்தவர்கள்) இன்னொரு கூட்டத்தாருக்கு 30-09-1426 (செவ்வாய் கிழமை நோன்பை ஆரம்பித்தவர்கள்) தற்போது புதன் கிழமை என்ற ஒரு நாளுக்கு மூன்மூன்று தேதிகளாக உள்ளது. ஒரு நாளுக்கு ஒரு தேதி தான் வர வேண்டும் என்பது இயற்கை விதி என்பதை நாம் அனைவரும் அறிந்ததே! ஒரே நாளுக்கு மூன்று தேதிகள் வருவதும், மூன்று கிழமைகளுக்கு ஒரே தேதி வருவதும், விஞ்ஞானம் வளர்ந்த காலத்தில் உலக மக்கள் அனைவருக்கும் கேலி கூத்தாகவும் வேடிக்கையாகவும் உள்ளது.

ரமளான் 1426 ன் சரியான முதல் நாள் எது என்பதை நாம் ஆராய கடமைப்பட்டுள்ளோம். அல்லாஹ் திருக்குர்ஆனில் சூரியனும் சந்திரனும் கணக்கின் அடிப்படையிலேயே உள்ளன என்று (55 : 5) வசனத்தில் கூறுகின்றான். இன்று நாம் அறிந்தோ அறியாமலோ பல எதிர்ப்புகளையும் முறியடித்து சூரிய கணக்கை முன் கூட்டியே வரையறுத்து நமது தொழுகைகளை தொழுதுவருகிறோம். அதை
ஏற்றுக் கொண்ட நாம் சந்திர கணக்கை ஏன் ஏற்றுக் கொள்ள தயங்குகிறோம். அல்லாஹ் திருமறையில் இரண்டையும் ஒன்றாக சேர்த்துதானே கணக்கின் அடிப்டையில் உள்ளது என கூறுகின்றான்..

அத்தோடு மட்டும் அல்லாமல் நபி(ஸல்)அவர்கள் மாதம் என்பது 29 நாட்களாகவோ சில சமயங்களில் 30 நாட்களாகவோ இருக்கிறது என்று கூறியதோடு மட்டுமல்லாமல் அதை நாம் கணக்கிடும் முறையை அறியாததால் நாம் நாட்காட்டி எழுதவில்லை. இன்னும் நாங்கள் தாய் வயிற்றில் இருந்து பிறந்த போது உள்ள தாய் மொழியை பேசுவதை தவிர அதை எழுதவோ படிக்கவோ கூட எங்களுக்கு தெரியாது. தவறு நடந்து விட கூடாது என்பதற்காக கை விரல்களை மும்மூன்றுமுறை மடக்கி விரித்து மிகவும் தெளிவாக மாதத்தில் எத்தனை எத்தனை நாட்கள் என விளக்கினார்கள். (ஆதாரம் புகாரி)

மேற்கண்ட ஹதீஸ் மற்றும் அல்குர்ஆன் வசனங்களின் ஆய்வின் அடிப்படையில் நாட்களுக்குரிய தேதிகளை கணக்கின் மூலம் தீர்மானித்துக் கொள்ளலாம் என்பது தெளிவாகிறது, இதிலும் நமக்கு தெளிவு கிடைக்கவில்லை என்றால் இன்னொரு திருக்குர்ஆன் வசனத்தையும் நாம் ஆராய கடமைப்பட்டுள்ளோம்.

அல்லாஹ் தன் திருமறையில் சூரியனை இயற்கை ஒளி உள்ளதாகவும், சந்திரனை ஒளியை பெற்று பிரதிபலிக்க கூடியதாகவும் ஆக்கினான். எண்ணிலடங்கா வருடங்களின் கணக்கையும் அறிந்து கொள்வதற்காக அதற்கு மாறி மாறி வரும் பல நிலைகளை ஏற்படுத்தினான். உண்மையை கொண்டே தவிர இவைகளை அல்லாஹ் படைக்கவில்லை. ஆராய விரும்பும் சமூகத்தாருக்கு சான்றுகளை அவன் விவரிக்கிறான். (அல் குர்ஆன் 10 : 5)

மேற்கூறப்பட்ட வசனத்தின் மூலம் அல்லாஹ் எண்ணிலடங்காத வருடங்களின் கணக்கை அறிந்து கொள்ளமுடியும் என்பதை தெளிவாக விளக்குகிறான். இன்று நாம் ஒரு மாதத்தின் கணக்கை கூட சரியாக அறிந்து கொள்ள முடியாமல் தடுமாறிக் கொண்டிருக்கிறோம். ஏன் இந்த தடுமாற்றம் சமுதாயத்தில் ஏற்பட்டது என்பதை நாம் சிறிது ஆழ்ந்து சிந்தித்தால் பல உண்மைகள் வெளிப்படும்.

உலகம் தட்டை என்று நம்பி வாழ்ந்து கொண்டிருந்த மக்களிடையே கலிலியோ என்ற விஞ்ஞானி உலகம் உருளை வடிவத்தில் உள்ளது என்று ஆராய்ந்து கூறிய பிறகு தான் சூரியன் சந்திரனின் சுற்று வட்ட பாதைகள் எது என்பதை பற்றியெல்லாம் ஆய்வு செய்து துல்லியமாக கண்டுபிடிக்கப்பட்டு அதன் மூலம் உலக மக்கள் அனைவரும் எத்தனையோ பயன்களை பெற்றுவருகிறார்கள். அந்த துல்லியமான முறையில் தான் சூரிய சந்திர கிரகணங்களை முன் கூட்டியே நாம் அறிந்து கொள்ள முடிகிறது.

தற்போதைய ரமளானுக்கு முந்தைய மாதமான ஷாஃபான் மாதத்தில் ஒரு சூரிய கிரகணமும், ரமளான் மாதத்தில் ஒரு சந்திர கிரகணமும் ஏற்பட்டதை நாம் அனைவரும் பார்த்தோம். இவைகளை பல வருடங்களுக்கு முன்பாகவே விஞ்ஞானம் இந்த தேதியில் நடைபெறும் என்பதை கூறிவிட்டது. இது போல் அடுத்தடுத்து வரும் சூரிய சந்திர கிரணங்களையும் முன் கூட்டியே துல்லியமாக கணக்கிட முடியும் என்பதை நம்மில் யாரும் மறுக்க முடியாதபடி விஞ்ஞானம் நிரூபித்து விட்டது.

மேற்கண்ட உண்மைகளின் அடிப்படையில் ஆய்வு செய்யும் போது சூரிய கிரகணம் என்பது சந்திரன் பூமியை ஒரு முறை சுற்றிவந்து மாதத்தின் கடைசி நாளுக்கான மன்ஸிலை (நிலையை) அடைந்துவிட்டது என்பதை ஆதாரப்பூர்வமாக பார்த்து சந்தேகமில்லாமல் புரிந்து கொள்வதற்காகவே அல்லாஹ் ஏற்படுத்திய சான்றாகும். ஒவ்வொரு மாதத்தின் முடிவிலும் சூரியன் சந்திரன் பூமி நேர்கோட்டிற்கு வரும் நிலை ஏற்பட்டால் தான் கடைசி நாளின் மஃரிபில் பிறை சூரிய மறைவிற்கு பின் இருக்கும். (சூரிய கிரகணத்தை பற்றிய ஆய்வுக்கு பார்க்க அல்குர்ஆன் 75 : 8,9) அதற்கு அடுத்த நாளே மாதத்தின் முதல் நாள் என்பதை எந்த சந்தேகமும் இல்லாமல் விஞ்ஞானம்
நிரூபித்ததல்லவா?

இதன் அடிப்படையில் ஷாஃபான் மாதத்தின் கடைசி நாள் திங்கள்கிழமை என்பதை சூரிய கிரகணம் நிரூபித்தது. அடுத்த நாளான செவ்வாய் கிழமையே ரமளான் மாதத்தின் முதல் நாள் என்பதே மறுக்க முடியாத உண்மை. அடுத்து இந்த வருட (1426 ஹிஜ்ரி) ரமளான் மாதத்தில் அல்லாஹ்வின் அத்தாட்சிகளில் ஒன்றான சந்திர கிரகணமும் நடைபெற்றது. அது நமது மாதத்தை மிகவும் துல்லியமாக கணக்கிட உதவியாக இருந்தது. ரமளானின் பதினான்காவது நாளான திங்கள் கிழமை தான் சந்திர கிரகணம் ஏற்பட்டது. இது பௌர்ணமி தினத்தில் தான் நடைபெறும் என்பது அறிவியல் உண்மை.

பௌர்ணமி தினம் மாதத்தின் 14, 15, 16 ஆகிய தினங்களில் ஒன்றில் தான் ஏற்படும். நிச்சயமாக 14வது நாளுக்கு முன்பாக பௌர்ணமி ஏற்படாது என்பது அறிவியல் உண்மை. இது பள்ளி சிறார்களுக்கும் தெரியும்.

வியாழக்கிழமை தான் முதல் நாள் என கூறி நோன்பு நோற்றவர்களுக்கு!!!
நீங்கள் பனிரெண்டாவது நாளிலேயே பௌர்ணமி தினத்தை அடைந்தீர்கள்.
பனிரெண்டாவது நாளிலா முழு சந்திரன் தெரியும் ?

புதன்கிழமை தான் முதல் நாள் என கூறி நோன்பு நோற்றவர்களுக்கு!!!
நீங்கள் பதிமூன்றாவது நாளில் பௌர்ணமி தினத்தை அடைந்தீர்கள்.
பதிமூன்றாவது நாளிலா முழு சந்திரன் தெரியும் ?

செவ்வாய்க்கிழமை முதல் நாள் என கூறி நோன்பு நோற்றவர்களுக்குதான்
பௌர்ணமி தினம் சரியான நாளான பதினான்காவது நாளாக இருந்தது.

(பௌர்ணமியை பற்றிய ஆய்வுக்கு அல்குர்ஆன் 84 : 18).

இந்த ஆய்வின் அடிப்படையில் செவ்வாய் கிழமையை மாதத்தின் முதல் நாளாக துவங்கியவர்கள் தான் சரியாக நோன்பு நோற்றுள்ளார்கள் என்பதை புரிய முடிகிறது. அதன் பிறகு ஆரம்பித்தவர்களுக்கு ஒன்றோ இரண்டோ நோன்புகள் தவறி விட்டதையும் நாம் சந்தேகத்திற்கு இடமில்லாமல் அறிய முடிகிறது.

தற்போது ரமளான் மாதம் செவ்வாய் கிழமை ஆரம்பித்தது என்பது சந்தேகத்திற்கே இடமில்லாமல் உறுதியானதால் ரமளான் மாதத்தின் 29 வது நாளும் செவ்வாய் கிழமை தான் வரும். (உங்கள் இலகுவான கணக்கு முறைக்கு ஒரு உதாரணம், மாதத்தின் முதல் நாள் எந்த கிழமையோ அதே கிழமை தான் 8, 15 ,22, மற்றும் 29 வது நாளாகவும் வரும்.)

மாதம் முடிவடைய வேண்டும் என்றால் சூரியன் சந்திரன் மற்றும் பூமியானது ஒரே நேர்கோட்டிற்கு வரும் நிகழ்வு நடந்தாகவேண்டும் ஆனால் 1426 ரமளானின் 29 வது நாளான செவ்வாய் கிழமை அன்று மாதத்தின் கடைசி நாளில் நிகழ வேண்டிய சூரியன் சந்திரன் மற்றும் பூமி நேர்கோட்டிற்கு வரும் நிகழ்வு நடைபெறாததால் 29 வது நாளின் சூரிய மறைவிற்கு பின் சந்திரன் இருக்காது என்பது உறுதியாகிறது. அதற்கு அடுத்த நாளான புதன் கிழமையே மாதத்தின் கடைசி தினமாகும். முப்பது தினங்களுக்கு மேல் மாதத்தின் நாட்கள் இருக்காது என்பது நாம் அனைவரும் ஒப்புக்கொண்ட உண்மையே!!!

எனவே அதற்கு அடுத்த நாள் வியாழக்கிழமை ஷவ்வால் மாதத்தின் முதல் நாளாகும். அன்று நோன்பு நோற்பது ஹராமாக்கப்பட்டுள்ளது என்பதையும் நாம் அறிவோம்.

இறைத்தூதர்(ஸல்) அவர்கள் இந்த இரண்டு பெருநாள்களிலும் நோன்பு நோற்கக் கூடாது என தடை விதித்துள்ளார்கள். இவ்விரண்டில் ஒன்று "உங்கள் நோன்பிலிருந்து நீங்கள் விடுபடும் நோன்புப் பெருநாள்" ஆகும். மற்றொன்றோ "நீங்கள் குர்பானிப் பிராணிகளின் இறைச்சியை உண்ணும் (ஈதுல் அள்ஹா) பெருநாள்" ஆகும் என்று கூறினார்கள். (ஆதாரம் புகாரி)

மேற்கூறிய விசயங்களை சிந்தித்ததில் அல்லாஹ் தெளிவை ஏற்படுத்தி விட்டதால், குர்ஆனின் 9 : 37 வசனத்தின் அடிப்படையில் நாட்களை முன்னும் பின்னும் ஆக்கி இறை நிராகரிப்பிற்கு ஆளாகாமலும், பெருநாள் உடைய தினத்தில் நோன்பு வைத்து ஹராமான செயலை செய்து விடாமலும் அல்லாஹ் நம் அனைவரையும் சிந்தனையாளர்களாக ஆக்கி நேரான வழியில் செலுத்தி பாதுகாப்பானாக!

மேற்கூறிய விசயங்களை ஆய்வு செய்து சரியான நாளில் பெருநாள் தினத்தை கொண்டாட இறைவன் அருள்புரிவானாக. ஆமீன்.

நன்றி:

இஸ்லாமிய ஆய்வு மற்றும் வெளியீட்டு நிறுவனம்
ஏர்வாடி - 627 103. தொலைபேசி - 93603 63633