Index |Subscribe mailing list | Help | E-mail us

பிறை விஷயத்தில் விஞ்ஞானக் கணிப்பை ஏற்பது குர்ஆன், ஹதீஸுக்கு எதிரானதா?

S. செய்யித் அலி பைஸி (மாநில துணைத்தலைவர், JAQH)

 

எனினும், விஞ்ஞானம் வளர்ச்சியடைந்த காலத்தில் வாழும் நாம், நபி (ஸல்) அவர்கள் பின்பற்றிய பழைய வழிமுறையை பின்பற்றாமல் நவீன யுகத்தின் விஞ்ஞான கணிப்பின் மூலம் வகுத்துத் தரப்பட்டுள்ள புதிய வழிமுறையைத்தான் பயன்படுத்துகிறோம். லுஹர் தொழுகைக்காக தயாராகும் ஒருவர் சூரியன் உச்சி சாய்ந்து விட்டதா என்று பார்த்து அறிந்து தொழுவதில்லை. ஏற்கனவே கணித்து வைக்கப்பட்டுள்ள நேரத்தை பார்த்தே தொழுகைக்குத் தயாராகிறார்..

தொழுகைக்குரிய நேரத்தை அறிவதற்கு SOLAR சிஸ்டத்தின் புதிய விஞ்ஞான கணிப்பு முறையை ஏற்பவர்கள் நோன்பை துவக்குவதற்கு LUNAR சிஸ்டத்தின் அதே புதிய விஞ்ஞான கணிப்பு முறையை நிராகரிப்பது முரண்பாடான நிலையாகும்.


அல்லாஹ்வின் திருப்பெயரால்..


ஒவ்வொரு ரமழான் மற்றும் அதையடுத்து வரும் பெருநாளின்போது மாதத்தின் முதல் நாளை தீர்மானிப்பதில் பலத்த சர்ச்சைகள் எழுவது வழமையாகி வருகிறது. அறியாமை, பிடிவாதம், மனோ இச்சையைப் பின்பற்றுதல், கெளரவம் பார்ப்பது போன்றவை இந்த சர்ச்சைகளுக்கு முக்கிய காரணங்களாகும். எனவே தான் உண்மையை உரக்கச் சொன்னாலும் உறைக்காமல் போய்விடுகிறது.

ஒரே இறைவன், ஒரே இறுதி இறைத்தூதர், ஒரே கிப்லா ஆகியவற்றால் ஒன்றுபட்டுள்ள முஸ்லிம் சமுதாயம் தனது மகிழ்ச்சிக்குரிய நாள் எது என தீர்மானிப்பதில் குழம்பி நிற்பது நமது ஈமானின் பலவீனத்தையே காட்டுகிறது. உலகிற்கே வழிகாட்ட வந்த மார்க்கத்தை பின்பற்றி வரும் ஒரு மிகப்பெரும் பொறுப்புள்ள சமுதாயம் இது விஷயத்தில் - நவீன யுகத்திலும் - தடுமாற்றம் கொண்டிருப்பது இஸ்லாமைப் பற்றிய தவறான எண்ணத்தை மற்றவர்கள் மத்தியில் ஏற்படக் காரணமாகிவிடும்.

அவரவர் பகுதியில் பிறையை புறக்கண்ணால் பார்த்து தான் மாதத்தின் முதல் நாளை தீர்மானிக்க வேண்டும் என்று ஒரு சாராரும் பிறையை புறக்கண்ணால் பார்த்தோ அல்லது பிறை பார்த்த தகவலை அறிந்தோ அதை தீர்மானித்துக் கொள்ளலாம் என்று மற்றொரு சாராரும் பேசியும் எழுதியும் வருகின்றனர்.

பிரிதொரு சாரார், பிறையை புறக்கண்ணால் பார்க்கவோ அல்லது பிறையை பார்த்த தகவல் அறியவோ வேண்டிய அவசியமில்லை. விஞ்ஞானக் கணிப்பின் மூலம் முற்கூட்டியே மாதத்தின் முதல்நாளை முடிவு செய்து கொள்ளலாம் என்று கூறுகின்றனர்.

இந்த மூன்றாவது சாராரின் கருத்து குர்ஆன் ஹதீஸ÷க்கு எதிரானதா என்பதை அலசுவதே இங்கு நோக்கம்.

முந்திய இரண்டு சாராரும் மூன்றாவது சாராரின் கருத்தை கடுமையாக எதிர்க்கின்றனர். அதற்கு அவர்கள் எடுத்து வைக்கும் முக்கியமான ஆதாரம், "பிறை பார்த்து நோன்பு வையுங்கள், பிறை பார்த்து நோன்பை விடுங்கள்" என்ற பிரபலமான ஹதீஸாகும்.

நோன்பை துவக்கவும், பெருநாள் கொண்டாடவும் பிறை பார்ப்பது அவசியம் என்று ஹதீஸ் சொல்லும் போது விஞ்ஞானக் கணிப்பின் மூலம் முடிவு செய்வது இந்த ஹதீஸுக்கு மாற்றமான செயலாகும். மேலும் ஹதீஸை புறம் தள்ளுவதுமாகும் என்று வாதிடுகின்றனர். இவர்களின் இந்த வாதம் சரிதானா என்று பார்ப்போம்.

சூரியனும் சந்திரனும் அல்லாஹ்வின் இரு பிரம்மாண்டமான படைப்புகளாகும். கால நேரங்களையும், நாட்களையும் கணக்கிட்டுக் கொள்ளவே இவற்றை படைத்திருப்பதாக திருக்குர்ஆனில் 20þக்கும் மேற்பட்ட இடங்களில் இறைவன் கூறுகிறான். இவ்வசனங்களில் இந்த இரண்டு கோள்களும் இணைத்தே சொல்லப்படுகின்றன. (பார்க்க: அல்குர்ஆன்,
6:96, 10:05, 13:02, 21:33, 36:38-40, 55:05, 2:189)

நாம் அன்றாடம் செய்யும் வழிபாடுகளில் சில, SOLAR சிஸ்டத்துடனும் மேலும் சில, LUNAR சிஸ்டத்துடனும் சம்பந்தப்பட்டவையாகும்.

1. ஐவேளைத் தொழுகை, ஜ÷முஆ மற்றும் பெருநாள் தொழுகை, ஸஹர் முடிவு, இஃப்தார் துவக்கம் போன்றவற்றை SOLAR சிஸ்டத்தை அடிப்படையாகக் கொண்டே நிறைவேற்றி வருகிறோம்.

2. நோன்பு, ஹஜ், பெருநாள் தினம் ஆகியவற்றை LUNAR சிஸ்டத்தை அடிப்படையாகக் கொண்டே நிறைவேற்றி வருகிறோம்.

இக்கடமைகளை இவ்வாறே நிறைவேற்ற வேண்டுமென்பது மார்க்கத்தின் கட்டளையாகும்.

ஐவேளைத் தொழுகைகளின் நேரத்தைப் பற்றி நபி (ஸல்) கூறும்போது,

"கிழக்கு அடிவானத்தில் வைகறை புலர்வது பஜ்ரு தொழுகையின் நேரத்தையும், சூரியன் உச்சி சாய்வது லுஹர் நேரத்தையும் ஒரு மனிதனின் நிழல் அவன் உயரத்தின் அளவுக்கு வருவது அஸர் நேரத்தையும் சூரியன் மறைவது, மஃரிப் நேரத்தையும் வானில் செம்மேகம் மறைவது, இஷா நேரத்தையும் அறிவிக்கிறது" என கூறினார்கள். (முஸ்லிம், -ஹதீஸ் சுருக்கம்)

ஸஹர் நேர முடிவைப் பற்றி குர்ஆன் கூறும்போது "கறுப்பு ரேகை விலகி வெள்ளை ரேகை வெளிப்படும் வரை (அதாவது வைகறை புலரும் வரை) உண்ணுங்கள், பருகுங்கள்" என்று கூறுகிறது. (2:187)

மேலே கண்ட வழிமுறையைத் தான் தொழுகை நேரம் மற்றும் ஸஹர் நேர முடிவை தெரிந்து கொள்ள நபி (ஸல்) அவர்கள் பயன்படுத்தினார்கள். விஞ்ஞானம் வளர்ச்சியடையாத அன்றைய சூழலில் அவர்களால் இந்தவழிமுறையைத் தான் பின்பற்ற முடிந்தது. இன்றிருப்பதுபோல் நேரத்தை துல்லியமாக முன்கூட்டியே கணித்துச் சொல்லும் வசதியை அவர்கள் பெற்றிருக்கவில்லை. குர்ஆனும் இதை உறுதி செய்கிறது.

"(இரவு, பகல்) நேரத்தை நீங்கள் துல்லியமாக கணக்கிட்டுக் கொள்ள மாட்டீர்கள்" (73:20)

எனினும், விஞ்ஞானம் வளர்ச்சியடைந்த காலத்தில் வாழும் நாம், நபி (ஸல்) அவர்கள் பின்பற்றிய பழைய வழிமுறையை பின்பற்றாமல் நவீன யுகத்தின் விஞ்ஞான கணிப்பின் மூலம் வகுத்துத் தரப்பட்டுள்ள புதிய வழிமுறையைத்தான் பயன்படுத்துகிறோம். லுஹர் தொழுகைக்காக தயாராகும் ஒருவர் சூரியன் உச்சி சாய்ந்து விட்டதா என்று பார்த்து அறிந்து தொழுவதில்லை. ஏற்கனவே கணித்து வைக்கப்பட்டுள்ள நேரத்தை பார்த்தே தொழுகைக்குத் தயாராகிறார்.

இப்படிச் செய்வதால் நபி (ஸல்) அவர்களின் கட்டளைக்கு மாற்றம் செய்து விட்டதாக, நம்மில் யாரும் யாரையும் குறை காண்பதில்லை. காரணம், நபி (ஸல்) அவர்களின் காலத்திற்கேற்ப அவர்கள் செயல்பட்டார்கள். நாம் நமது காலத்திற்கேற்ப செயல்படுகிறோம், இரண்டு செயல்பாடுகளுமே SOLAR சிஸ்டத்திற்கு உட்பட்டவைதான்! என்பதேயாகும்.

இனி LUNAR சிஸ்டத்திற்கு வருவோம்.

நோன்பு, பெருநாள் தினம் உள்ளிட்டவைகளை LUNAR சிஸ்டத்தின் அடிப்படையில் தான் நிறைவேற்ற வேண்டும்.

ஏனெனில் நபி (ஸல்) அவர்கள் சொன்னார்கள்:
"பிறை பார்த்து நோன்பு வையுங்கள், பிறை பார்த்து நோன்பை விடுங்கள்" (புகாரி, முஸ்லிம்)

விஞ்ஞானம் வளர்ச்சியடையாத காலத்தில் மாதத்தின் முதல் நாளை அறிந்து கொள்ள அப்போதிருந்த ஒரே வழி புறக்கண்ணால் பிறையைப் பார்த்து தீர்மானிப்பது ஒன்றுதான்! முற்கூட்டியே துல்லியமாக கணித்துச் சொல்லும் வசதி அவர்கள் காலத்தில் இல்லாததுவே இதற்கு காரணம். இவ்வுண்மையை நபி (ஸல்) அவர்களே தெளிவுபடுத்துவதைப் பாருங்கள்.

"நாம் துல்லியமாகக் கணித்துக் கூறவும், எழுதவும் அறியாதவர்களாக இருக்கிறோம். ஒரு மாதம் இப்படியும் இருக்கலாம் அப்படியும் இருக்கலாம். (அதாவது 29-கவோ அல்லது 30-கவோ இருக்கலாம்)
அறிவிப்பாளர் : இப்னு உமர் (ரலி) நூல்கள் : புகாரி, முஸ்லிம்.

இந்த ஹதீஸிலிருந்து இரண்டு விஷயங்கள் தெளிவாகிறது.

1. LUNAR சிஸ்டத்தின்படி ஒரு மாதம் எத்தனை நாட்களைக் கொண்டது என்பதை முற்கூட்டியே கணித்துச் சொல்லும் ஆற்றல் அவர்களுக்கு இருந்திருக்கவில்லை.


2. கணித்துச் சொல்லும் ஆற்றல் பெற்றவர்கள் அவ்வசதியை பயன்படுத்திக் கொண்டு தீர்மானிப்பதில் தவறில்லை.

எனவே பிறையை புறக்கண்ணால் பார்த்து மாதத்தின் முதல்நாளை தெரிந்து கொள்ளும் பழைய வழிமுறையை விட்டுவிட்டு புதிய வழிமுறையாகிய விஞ்ஞானக் கணிப்பை ஏற்றுச் செயல்படுவது ஒருபோதும் சுன்னத்துக்கு மாற்றமான செயலாகாது. ஏனெனில் இரண்டுமே LUNAR சிஸ்டத்திற்கு உட்பட்டவைதான்.

LUNAR சிஸ்டத்தின் பழைய மற்றும் புதிய இரண்டு முறைகளையும் பொதிந்தேதான் நோன்பு தொடர்பாக வரும் குர்ஆன் வசனமும் அமைந்துள்ளது. "உங்களில் எவர் அம்மாதத்தை அடைகிறாரோ அவர் நோன்பு நோற்க வேண்டும்". (2:185)

இவ்வசனத்தில் உங்களில் எவர் பிறை பார்க்கிறாரோ என்றோ அல்லது எவர் கணிக்கிறாரோ என்றோ குறிப்பிட்டுச் சொல்லாமல் எக்காலத்திற்கும் ஏற்ற வகையில் பொதுவாக எவர் அடைகிறாரோ என்றே கூறப்பட்டுள்ளது.

இவற்றிற்கு பிறகும் இக்கருத்தை மறுப்பவர்கள் தொழுகை விஷயத்தில் நாம் பயன்படுத்தி வரும் SOLAR சிஸ்டத்தின் விஞ்ஞானக் கணிப்பையும் தவறு என்று கூறவேண்டியது வரும், கூறுவார்களா?

ஆகவே, "பிறை பார்த்து நோன்பு வையுங்கள், பிறை பார்த்து நோன்பை விடுங்கள் என்று கூறியது அறிவியல் வளர்ச்சியில்லாத காலத்தை கருத்தில் கொண்டே யாகும் என்பது தெளிவாகிறது.

தொழுகைக்குரிய நேரத்தை அறிவதற்கு SOLAR சிஸ்டத்தின் புதிய விஞ்ஞான கணிப்பு முறையை ஏற்பவர்கள் நோன்பை துவக்குவதற்கு LUNAR சிஸ்டத்தின் அதே புதிய விஞ்ஞான கணிப்பு முறையை நிராகரிப்பது முரண்பாடான நிலையாகும்.

சூரியன், சந்திரன் இரண்டுமே நேர காலங்களை அறிவதற்காக படைக்கப்பட்டிருக்கும்போது அவற்றில் ஒன்றை மட்டும் துல்லியமான விஞ்ஞான கணிப்பிற்கு உட்படுத்திவிட்டு மற்றொன்றை அதற்கு உட்படுத்தாமல் இரண்டு படைப்புகளுக்குமிடையில் இத்தகைய வேறுபாட்டை ஏற்படுத்த எந்த ஆதாரமும் இல்லை.

எனவே,
ஐவேளைத் தொழுகையை நிறைவேற்றுவதற்கு
சூரிய, சந்திர கிரகணத் தொழுகை குறித்த அறிவிப்பை முற்கூட்டியே செய்வதற்கு
ஸஹர் நேர முடிவை தெரிந்து கொள்வதற்கு
இஃப்தார் ஆரம்ப நேரத்தை அறிந்து கொள்வதற்கு
 

இன்னும் பலவற்றிற்கு நவீன விஞ்ஞானக் கணிப்பை ஏற்றுச் செயல்படுபவர்கள், மாதத்தின் முதல் நாளை அறிந்து கொள்ள LUNAR சிஸ்டத்தின் அதே ரீதியிலான விஞ்ஞானக் கணிப்பை ஏற்க முன்வரவேண்டும் என்பதே யதார்த்தமானது நியாயமானது.

அனைத்து முஸ்லிம்களும் ஒரே நாளில் நோன்பை துவக்கி ஒரே நாளில் பெருநாள் கொண்டாடி மகிழ்ந்து ஒற்றுமையுடன் செயல்பட இதுவே உகந்த வழி முறையாகும்.

செயல்கள் யாவும் எண்ணங்களைப் பொறுத்தே அமைகின்றன. (ஹதீஸ்)

அல்லாஹ்வே மிக அறிந்தவன்.

 

(in PDF format)