அந்தத் திருமண சூழ்ச்சியில்
விழுந்த பொருளாதாரச் சறுக்கல்களின்
தலைவாயில்கள்
பெற்ற பாவத்திற்காக விற்ற
சொத்துக்கள்
பட்டியலிடப்பட காரணமான
காரணகர்தாக்கள்
குடிசை ஓரத்தில் கேட்கும்
விசும்பல் சத்தத்தில்
எதிரொலிக்கும் சோகப் பின்னணிகள்
பெண்னைப் பெற்றவனின் மூளை
நரம்புகளில்
துளிர்த்த வியர்வைத் துளிகள்
இவைதான் "வரதட்சணை"
என்ற கொடிய அரக்கனின்
சுய விமர்சனங்கள்
இனி ... இதோ
திருமணத்தால் விழி பிதுங்கும்
பெண் வீட்டாரின் சோகப் பிரசுரங்கள்
பெற்ற பெண்னை கரையேற்றும் நோக்கத்தோடு
கவலைகளைப் போர்த்திக்கொண்டு
தூங்குபவனை
பயமுறுத்தும் கனவுகள் எதார்த்தமானவை
இந்த இரவு கழிய
உள்ளக் குமுறல் மட்டுமே
மூலதனமாக்கப்பட்டது
ஆனாலும்...
"நாளைய
திருமணம் சிறப்பாய் நடைபெற வேண்டும்"
என்ற ஆவல் பிரதிபலிக்கத்
தவறவில்லை.
மூத்தவளுக்கு வாங்கிய நகைகளை
அணிந்து
அழகு பார்த்துக் கொண்ட
இளைய சகோதரிகளின்
கண்களில் துளிர்த்த கண்ணீருக்கு
அர்த்தம் தெரியவில்லை!
துக்கத்திற்க்கும் தூக்கத்திற்க்கும் மத்தியில்
கழிந்தன இச்சோதனை
இரவுகள்
மணப் பெண்னுக்கு வாங்கிய
உயர் ஆடைகள் ஒரு புறமிருக்க
துவைத்துக் காய்ந்து கொண்டிருந்தது
தகப்பனாரின் வெள்ளாடைகள்
அது கரை படப் போவதும்
இவர் குறைபடப் போவதும்
தவிர்க்கமுடியாதது
அந்தப் பேராசைக் காரர்களின்
சூழ்ச்சியில் சிக்கித் தவித்து
சின்னாபின்னப் படப் போவது
இவர்களுக்குத் தெரிய நியாயமில்லை.
மறுநாள்
மூன்று வாடகை டம்ளர்கள் தவறி
அதன் விலை கொடுக்கப்பட்டது
இன்னும் வழக்கமான
பிரியாணியில் உப்பு இல்லை
எங்களுக்கு வரவேற்பு
சரிஇல்லை
என்ற குறைபாட்டு
கோஷங்களுக்கிடையில்
திருமணம் சிறப்பாய் நடந்தேறியது .
பிறந்த வீடு துறந்து வெளியேறினாள் புதுப்பெண்
அந்த உள்ளத்தில் எழுந்த "பாச எரிமலைகள்"
உதட்டில்
அடக்கப்பட்டு
விழிகளில் வழிந்தது
உற்சாகமாய் கையசைத்து
வழியனுப்பியது
அந்த இரண்டு வயதுக் குழந்தை
ஆம்.. அந்த தந்தையின் நான்கில் ஒரு பங்கு
சுமை
இறக்கப்பட்டிருக்கலாம்...
ஆறு மாதங்கள் உருண்டோடின!
புகுந்த வீட்டு அராஜகங்கள் குறித்து
மகள் எழுதிய ஆறு பக்க கடிதம்
தகப்பனின் வாயிற் கதவைத்
தட்டியது
நான்கு மாதத் தவணையில்
தர ஒப்புக்கொண்ட வரதட்சணை பாக்கி
என்ற இடத்தில் அடிக் கோடிடப்பட்டிருந்தது
இருந்தாலும் என்னைப் பற்றி
கவலைப்பட வேண்டாம்
என்று
முடிக்கப்பட்டிருந்தது.
இதயப் புண்களில் கசியும்
இரத்தத்தில் பாய்ச்சப்பட்டது இன்னுமோர்
அம்பு
அணைந்த விளக்குகளில் நனைந்த
கன்னங்கள்
துடைத்துக் கொள்ளப்பட்டன
தோளில் துண்டோடு பணம் தேடப்
புறப்பட்டார்
சோகத்தில் திரும்பி வந்தவருக்கு
சுபச் செய்தி சொல்லப்பட்டது
ஆம்.. இளைய மகள் பூப்பெய்தி
விட்டாள்.
|