Index |Subscribe mailing list | Help | E-mail us

ரமழான்

கூத்தாநல்லூர் ஹஸன் பஸரி

 

பதினொரு திங்கள் பகலில் பருகி பழகி
ஒரேயொரு திங்கள் அனைத்தையும் விலகி

முன்பு எண்ணம்போல் உண்டோம் !
பசித்தது புசித்தோம் !
இனி பசித்தாலும் புசியோம் !
மனதை கட்டிப்போடும் சுயகட்டுப்பாடு.

உண்ணலும் பருகலும் நிறுத்திய நோன்பு. மறந்து
உண்டினும் பருகினும் நிறைவேறும் நோன்பு.

கிறக்கத்தைக் களையும்
உறக்கத்தையும்
இரக்கமுள்ளவன்
வணக்கமாக்கினான் !
நாம் விழிக்க வேண்டும் என்பதற்கே !
விழி கொண்டு
வழி கண்டால்
"வலீ" யாகலாம் !

உறக்கம் ஏன் வணக்கம் ?
வீண் கதை, வெட்டிப்பேச்சு, பொய்
புறங்களை புறந்தள்ளிய
சிறு இறப்பு அது மிகச்சிறப்பு !

உள்புறம் காலியானால் நோன்பு'.
அது எல்லா
'புறங்'களை விட்டும் காலியானால் மாண்பு

இறை மறுப்பாரும் ரமழானில் இரை நிரப்பார்.
ஆம் இரை நிரப்ப மறுப்பார்.

வெள்ளித்திரை, விட்டால் சின்னத்திரை,
முடித்தால்தான் நித்திரை.

தெரிந்தது ரமழான் பிறை !
திறந்தது ஃபுர்கான் மறை !
அதுவா முறை ?
ஆண்டுக்கு ஒருமுறை
மட்டுமா திருமறை ?
நீக்கவே இக்குறை
நித்தமும் ஒருமுறை
எடுப்போம் இறைமறை.

ரமழானைத் தொடர்ந்தும்..
மறை நோக்கும்
நம்மை, இறை நோக்கும்.

விளக்கமின்றி விளக்கு ஒன்றே விடியல் என்று
வீழ்ந்து போகும் விட்டில்களல்ல நாம் !

தொழுகை - நாம் இறையுடன் பேசும் சாதனம்.
குர்ஆன் - இறைவனே நம்முடன் பேசும் நூதனம்.

விழி திறக்க விண்மீன்கள்
விழித்திருக்கும் வேளைகளில்...

கரை எட்டும் கண்மீன்கள்
கரையட்டும் கண்ணீர் குளங்களில்...

நோன்புக்கு அலங்காரம் வீண் வாய்க்குப் பூட்டு
அதை கண்ணுக்கும் காதுக்கும் போட்டு
அனுபவித்தால் வெளி நோன்பு
அனுபவத்தில் ஒளி நோன்பு.

ஆறுடன் ஐந்து (ஆறைந்து முப்பது-ரமழான்)
கடலில் முத்துக்கள்.
அடுத்துள்ள ஆறையும் தாண்டின்,
ஓராண்டு நோன்பு.
இரையில்லா பட்டினி
இறையில்லம் நிரம்பும் ! ரமழானாம் !

இரையுள்ள வயிறு
இறையில்லம் பட்டினி ஆம்
அது ஏனைய மாதங்கள்.

ஐந்து வயது, கடமையில்லா பருவத்திலும்
உணவில்லா இறையின்பம் துன்பத்தில் இன்பம்
எங்ஙனம் உணர்ந்தது?

பெருநாள், நல்ல திருநாள், தொடரும் மறுநாள்
உணவுண்ட இரை இன்பத்தில்
திளைத்து மூழ்கிருக்க
உணவூட்டுவாரின்றி
முன்பு போல பசி
பட்டினியால் வாடும்
இறையில்லங்கள்.
இந்நிலை முன்னர். இனி
அந்நிலை தொடராது.
ரமழானில் தொழுதோர்
காணாமல் போனோர் பட்டியலில் வாரா.

நாங்கள் இறைவனுக்காகவே
ரமழானில் தொழுது வணங்கி
நோன்பு நோற்று சுற்றிடும் வெற்றிடம் கொண்ட
வயிற்றிடம் கற்றிடும் பாடம் எம்மிடம்.
ரமழானுக்காகவே களம் இறங்கியவர்
இதோ ரமழான் முடிந்தது.
களத்திலிருந்து கழன்று கொள்க!

யார் என்றுமுள்ள இறைவனுக்காக களம் இறங்கினாரோ
எத்தனை ரமழான் சென்றாலும்
அந்த இறைவன் என்றும் இருக்கிறான்.
அவர் தைரியமாக முன்னோக்கிச் செல்லட்டும்!
மறவோம் இந்த பாலர் பாடம்.