ரஹ்மான் வழங்கிய
ரஹ்மத்தே ரமலானே!
நீ வந்ததனால்
எங்கள் நெஞ்சங்களில்
ஒளிச்சேர்க்கை!
பாவக்குப்பைகள்
பெரிதும் மண்டியிருந்த
எங்கள் இதயங்களில்
உன் ஒளிச்சேர்க்கை
ஓர் எரிதல் வினையை
எளிதில் நிகழ்த்துவதால்
பாவங்கள் பொசுங்கிடவும்
பரிசுத்தமே நிறைந்திடவும்...
ஓ...!
சுவனத்தின் சுகந்தத்தை
சுவாசிக்கக் கூட
இப்போது எங்களால்
இயலுகிறது.
அடுத்தவர்களின் அழுக்குகளையே
அசை போட்டுக்கொண்டிருந்த
எங்களின் நாவுகள்
உனது வருகையால் தானே
ஒரு பரினாம மாற்றம் பெற்று
படைத்தவனின் புகழினைப்
பேசிடும்
புனித பாக்கியம் பெற்றன.
'இல்லாதார்' என்பதே
இல்லாமல் போய்விட
இயற்கை வரியாம் ஸக்காத்தின்
இனிய நினைவுகளை
எங்களுக்குள் நீதான்
எத்தனை முறை விதைக்கின்றாய்!
கண்ணுறக்கம் மட்டுமின்றி
கல்புறக்கம் கொண்டோரையும்
நீ விழிப்படையச் செய்வதால் தானோ
உனது பெருநாட்களில்
நல்லுறக்கத்தைக் கூட
நாயன்
வணக்கமென்று
வகைப்படுத்துகிறான்.
மூமின்களின்
முத்துக்குளிப்பு மாதமே!
உன் ஒளிக்கதிர்களின்
ஊடுருவலால்
இப்போது பார்...
எங்கள் ஈமானில் தான்
எத்தனை ப்ரகாசம்!
ஓ.. ரமலானே..!
ஈகைத் திருநாளாம்
ஈதுல்ஃபித்ரின்
இனிய வரவுக்கு
சோபனம் கூறுவதற்கா - நீ
சொல்லாமலே செல்கின்றாய்?
வருடம் ஒன்று காத்து மீண்டும்
வரவேற்போம் உன்னை!
|