Index |Subscribe mailing list | Help | E-mail us

 

-பரங்கிப்பேட்டை ஹ.பஃக்ருத்தீன்

வாக்குமூலம்


"நான்" என்பது உலகமாயிருந்தது!
பால் எது? சுண்ணாம்பு எது?
விளங்காத போது
"நான்" என்பது உலகமாயிருந்தது

சூழ்ந்து கடிக்க வந்தன
சுயநலங்கள்
ஒதுங்கி ஒடுங்கியதில்
"நான்" என்பது தானாய்ச்சிறுத்தது

இப்போதும்
இருட்டும் போதெல்லாம்
வழிகளின் பயத்திலோ
வலிகளின் உணர்விலோ
உறவை நட்பை உள்வாங்கி
"நான்" சற்றே விரிவதுண்டு

சமூக வீதிகளில்
யுத்த காலங்களின்
பரஸ்பர தாக்குதல்களில்
இனத்தை மதத்தை
இழுத்தணைத்துக் கொள்ளும் "நான்".

அதீத எதிர்பார்ப்புகளின் போதும்
அநாதரவான தருணங்களிலும்
இறை ஆதரவை நாடி, ஓடி
இணைந்துக்கொள்ளும் "நான்".

ஆதாயங்களின் போதும்
கவனிப்பாரற்று தனிமை காணும் போதும்
தன் கூடடங்கும் "நான்".

அளவீடுகளுக்கு அடங்காமல்
மாறிக் கொண்டேயிருக்கும் "நான்"
மண்ணில் அடங்கிப் பின் தீரும்.