குர்ஆனின் சூராக்கள்
இறங்கிய காலகட்டத்தை கருத்தில் கொண்டு மக்கிய்யா என்றும் மதனிய்யா என்றும் இரண்டு
வகையாக பிரிக்கப்பட்டுள்ளது.
மக்கிய்யா என்பது நபி(ஸல்) அவர்கள் மதீனாவிற்கு ஹிஜ்ரத் செல்வதற்கு முன்புள்ள மக்கா
வாழ்க்கையில் இறங்கிய சூராவாகும். மதனிய்யா என்பது நபியவர்கள் மதீனாவிற்கு ஹிஜ்ரத்
சென்ற பின்னுள்ள மதீனா வாழ்க்கையில் இறங்கிய சூராவாகும்.
இந்த விளக்கத்தின்படி மக்கா வாழ்க்கையில் மக்காவிற்கு வெள்யே இறங்கியதும் மக்கிய்யா
என்றே சொல்லப்படும். உதாரணமாக,
وَاسْأَلْ مَنْ أَرْسَلْنَا مِنْ قَبْلِكَ مِنْ رُسُلِنَا أَجَعَلْنَا مِنْ دُونِ
الرَّحْمَانِ آلِهَةً يُعْبَدُونَ
என்று
துவங்கும் திருகுர்ஆனின்
43:45 வது வசனம் மிஃராஜ் இரவில் பைத்துல் முகத்தஸில்
இறங்கியது. இது மக்கா வாழ்க்கையில் இறங்கியதால் மக்கிய்யாவில் சேரும்.
அதே போல் மதீனா வாழ்க்கை காலகட்டத்தில் மதீனாவிற்கு வெளியே இறங்கியதும் மதனிய்யா
என்றே சொல்லப்படும். உதாரணமாக,
إِنَّ اللَّهَ يَأْمُرُكُمْ أَنْ تُؤَدُّوا الْأَمَانَاتِ إِلَى أَهْلِهَا وَإِذَا
حَكَمْتُمْ بَيْنَ النَّاسِ أَنْ تَحْكُمُوا بِالْعَدْلِ إِنَّ اللَّهَ نِعِمَّا
يَعِظُكُمْ بِهِ إِنَّ اللَّهَ كَانَ سَمِيعًا بَصِيرًا
என்று துவங்கும் திருகுர்ஆனின் 4:58 வது வசனம்
மக்கா வெற்றி நாளில் மக்காவில் கஃபாவினுள் வைத்து இறங்கியதாகும்.
ஹிஜ்ரத்திற்குப்பின் மதீனா வாழ்க்கையில் இறங்கியதால் இது மதனிய்யாவாகும்.
மக்கிய்யா, மதனிய்யாவை முடிவு செய்வதில் அறிஞர்கள் இரண்டு வழிமுறையை
கையாண்டிருக்கிறார்கள். ஒன்று சஹாபாக்கள், தாபிஈன்களால் அறிவிக்கப்பட்ட செய்தியை
வைத்து முடிவு செய்வது. மற்றொன்று இஜ்திஹாத்(ஆய்வு செய்தல்) மூலம் முடிவு செய்வது.
இப்படி ஆய்வின் மூலம் முடிவு செய்யப்பட்ட சூராக்களில் மக்கிய்யா என்றும் மதனிய்யா
என்றும் இரு வேறு கருத்துக்கள் சொல்லப்பட்டுள்ளது.
மதனிய்யா சூராக்கள் மொத்தம் இருபது, அவை:
(சூராவின் எண்
அடைப்புக்குறிக்குள் கொடுக்கப்பட்டுள்ளது)
1) அல்பக்கரா (2)
2) ஆலு இம்ரான் (3)
3) அந்நிஸா (4)
4) அல்மாஇதா (5)
5) அல் அன்ஃபால் (8)
6) அத்தவ்பா (9)
7) அந்நூர் (24)
8) அல் அஹ்ஸாப் (33)
9) முஹம்மத் (47)
10) அல் ஃபத்ஹ் (48)
11) அல் ஹுஜ்ராத் (49)
12) அல் ஹதீத் (57)
13) அல் முஜாதலா (58)
14) அல் ஹஷ்ர் (59)
15) அல் மும்தஹினா (60)
16) அல் ஜும்ஆ (62)
17) அல் முனாஃபிகூன் (63)
18) அத்தலாக் (65)
19) அத்தஹ்ரீம் (66)
20) அந்நஸ்ர் (110)
மதனிய்யா என்று சிலராலும் மக்கிய்யா என்று வேறு சிலராலும் சொல்லப்படும் சூராக்கள்
பனிரண்டு, அவை:
1) அல் ஃபாத்திஹா (1)
2) அர்ரஃத் (13)
3) அர்ரஹ்மான் (55)
4) அஸ்ஸஃப் (61)
5) அத்தகாபுன் (64)
6) அத்தத்ஃபீஃப் (83)
7) அல்கத்ர் (97)
8) அல் பய்யினா (98)
9) அஸ்ஸல்ஸலா (99)
10) அல் இக்லாஸ் (112)
11) அல் ஃபலக் (113)
12) அந்நாஸ் (114)
மேற் கூறிய சூராக்கள் தவிர்த்து மீதியுள்ள 82 சூராக்கள்
மக்கிய்யாவாகும்.
ஒரு சூராவை மக்கிய்யா என்றோ மதனிய்யாவென்றோ கூறப்படுவதனால் அந்த சூரா முழுமையும்
அப்படி இருக்க வேண்டும் என்பதில்லை, சில வேளை மக்கிய்யாவான சூராவில் மதீனா
வாழ்க்கையில் இறங்கிய சில ஆயத்துக்கள் இடம் பெறலாம். அதே போல் மதனிய்யாவான
சூராவில் மக்கா வாழ்க்கையில் இறங்கிய சில ஆயத்துக்கள் இடம் பெறலாம். எனவேதான்
திருகுர்ஆனின் சில பதிப்புக்களில் சில சூராக்களின் துவக்கத்தில் "இது மக்கிய்யா
ஆனால் சில ஆயத்துக்களைத்தவிர" என்றும் "இது மதனிய்யா ஆனால் சில ஆயத்துக்களைத்தவிர"
என்றும் குறிப்பிட்டிருப்பதைக் காண்கிறோம்.
சூரா மதனிய்யாவில் மக்கிய்யாவான ஆயத்து இடம் பெறுவது:
உதாரணம்:
சூரத்துல்
அன்ஃபால் மதனிய்யாவாகும். ஆனால்
وَإِذْ يَمْكُرُ بِكَ الَّذِينَ كَفَرُوا لِيُثْبِتُوكَ أَوْ يَقْتُلُوكَ أَوْ
يُخْرِجُوكَ وَيَمْكُرُونَ وَيَمْكُرُ اللَّهُ وَاللَّهُ خَيْرُ الْمَاكِرِينَ
என்று துவங்கும் 30வது ஆயத்து மக்காவில்
இறங்கியது.
மேலும் அதே சூராவின் 64வது ஆயத்து உமர்(ரலி) இஸ்லாத்தை ஏற்றபோது இறங்கியது என்ற
இப்னு அப்பாஸ்(ரலி) அவர்களின் கூற்றுப்படி(ஆதாரம் முஸ்னதுல் பஸ்ஸார்)
மக்கிய்யாவாகும்.
சூரா மக்கிய்யாவில் மதனிய்யாவான ஆயத்து இடம் பெறுவது:
உதாரணம்:
சூரத்துல் அன்ஆம்
மக்கிய்யாவாகும், ஆனால்
قُلْ
تَعَالَوْا أَتْلُ مَا حَرَّمَ رَبُّكُمْ عَلَيْكُمْ أَلَّا تُشْرِكُوا بِهِ
شَيْئًا وَبِالْوَالِدَيْنِ إِحْسَانًا وَلَا تَقْتُلُوا أَوْلَادَكُمْ مِنْ
إِمْلَاقٍ نَحْنُ نَرْزُقُكُمْ وَإِيَّاهُمْ وَلَا تَقْرَبُوا الْفَوَاحِشَ مَا
ظَهَرَ مِنْهَا وَمَا بَطَنَ وَلَا تَقْتُلُوا النَّفْسَ الَّتِي حَرَّمَ اللَّهُ
إِلَّا بِالْحَقِّ ذَلِكُمْ وَصَّاكُمْ بِهِ لَعَلَّكُمْ تَعْقِلُونَ
وَلَا تَقْرَبُوا مَالَ الْيَتِيمِ إِلَّا بِالَّتِي هِيَ أَحْسَنُ حَتَّى يَبْلُغَ
أَشُدَّهُ وَأَوْفُوا الْكَيْلَ وَالْمِيزَانَ بِالْقِسْطِ لَا نُكَلِّفُ نَفْسًا
إِلَّا وُسْعَهَا وَإِذَا قُلْتُمْ فَاعْدِلُوا وَلَوْ كَانَ ذَا قُرْبَى
وَبِعَهْدِ اللَّهِ أَوْفُوا ذَلِكُمْ وَصَّاكُمْ بِهِ لَعَلَّكُمْ تَذَكَّرُونَ
وَأَنَّ هَذَا صِرَاطِي مُسْتَقِيمًا فَاتَّبِعُوهُ وَلَا تَتَّبِعُوا السُّبُلَ
فَتَفَرَّقَ بِكُمْ عَنْ سَبِيلِهِ ذَلِكُمْ وَصَّاكُمْ بِهِ لَعَلَّكُمْ
تَتَّقُونَ
ஆகிய
151வது ஆயத்து முதல் 153வது ஆயத்து வரை மதீனாவில் இறங்கியது.
சூரா மக்கிய்யாவை வரையறுப்பவை:
1) ஸஜ்தா இடம் பெறும் சூராவெல்லாம் மக்கிய்யா.
2) பின்வரும் பதம் இடம் பெறும் சூராவெல்லாம் மக்கிய்யா.
كَلَّا
3) எந்த சூராவிலெல்லாம்
يَاأَيُّهَا الَّذِينَ آمَنُوا
என்ற வாசகம் இடம் பெறாமல்
يَاأَيُّهَا النَّاسُ
என்ற வாசகம் மட்டும் இடம் பெறுகிறதோ
அதுவெல்லாம் மக்கியா. (இதில் சூரத்துல் ஹஜ் மட்டும் விதிவிலக்கு)
எனினும் அதன் இறுதியில்
يَاأَيُّهَا الَّذِينَ آمَنُوا
என்ற வாசகம் இடம் பெறுகிறது.
4) நபிமார்கள் சரித்திரமும், பழங்கால சமுதாயங்களின் சரித்திரமும் இடம் பெறும்
சூராவெல்லாம் மக்கிய்யா. (சூரத்துல் பக்கரா இதில் விதிவிலக்கு)
5) ஆதம் இப்லீஸ் பற்றி செய்தி இடம் பெறும் சூராவெல்லாம் மக்கிய்யா (சூரத்துல்
பக்கறா இதில் விதிவிலக்கு)
6) தனித்தனி எழுத்துக்களால் துவக்கப்படும் சூராவெல்லாம் மக்கிய்யா.
உதாரணமாக:
الـم
-
الر
-
حم
(ஆனால் இதில் சூரத்துல் பக்கராவும் ஆலு
இம்ரானும் விதிவிலக்கு)
மக்கிய்யா சூராக்களின் தனித்தன்மைகள்:
1) தவ்ஹீதுக்கான அழைப்பு, தூதுத்துவம் மற்றும் மறுமை வாழ்வை
உறுதிப்படுத்துதல், கியாமத், சொர்க்கம்,
நரகம் ஆகியவற்றை கூறுதல், அறிவுப்பூர்வமான
ஆதாரங்கள் மூலம் முஷ்ரிக்கீன்களுடன் தர்க்கம் செய்தல்.
2) சட்டத்தை நடைமுறைப்படுத்த தேவையான பொதுவான அடிப்படைகளை எடுத்துவைத்தல்
சமுதாயத்தில் இருக்கவேண்டிய சிறந்த குணநலன்களை எடுத்துக்கூறல், முஷ்ரிக்கீன்களின்
பாவங்களையும் தீய பழக்கங்களையும் விவரித்தல்.
3) சத்தியத்தை மறுப்பவர்கள் படிப்பினை பெறுவதற்காகவும், நபி(ஸல்) அவர்களுக்கு
ஆறுதல் அளிப்பதற்காகவும் முற்கால நபிமார்களின் சரித்திரத்தையும் முற்கால
சமுதாயத்தினர் சரித்திரத்தையும் எடுத்துக் கூறல்.
4) உள்ளத்தை உலுக்கும் படியான கடுமையான வார்த்தைகளை சுருக்கமாக இடம் பெறுதலும்
ஆயத்துக்கள் சுருக்கமாக இருத்தலும்.
சூரா மதனிய்யாவை வரையறுப்பவை:
1) எந்த சூராவில் ஃபர்ள்(கடமையான செயல்) பற்றி கூறப்பட்டுள்ளதோ அல்லது
குற்றவியல் தண்டனை கூறப்பட்டுள்ளதோ அது மதனிய்யா.
2) முனாஃபிக்குகள் பற்றி கூறப்பட்டுள்ள சூரா, மதனிய்யா(ஆனால் இதில் சூரத்துல்
அன்கபூத் சேராது அது மக்கிய்யா)
3) வேதக்காரர்களுடன் விவாதம் இடம் பெறும் சூராவெல்லாம் மதனிய்யாவாகும்.
மதனிய்யா சூராக்களின் தனித்தன்மைகள்:
1)வணக்கங்கள், கொடுக்கல் வாங்கள், குற்றவியல் சட்டங்கள், குடும்பவியல்,
வாரிசுரிமை, புனிதப்போரின் சிறப்பு, சமூகத் தொடர்பு, சமாதானம் மற்றும் போரில்
தங்களுக்கிடையிலான தொடர்பு, சட்டங்களின் அடிப்படைகள் ஆகியவை பற்றி விளக்கங்கள்
இடம் பெறுதல்.
2) வேதக்காரர்களாகிய யூத - கிருத்தவர்களோடு உரையாடுதல், மற்றும் அவர்களை
இஸ்லாத்தின் பால் அழைத்தல், இறைவேதத்தில் அவர்கள் செய்த இடைச் செருகல்
பற்றிவிளக்குதல்.
3) முனாஃபிக்குகளின் நடத்தையை தெளிவுபடுத்துதல், அவர்களின் துரோகத்தை
வெளிக்கொண்டு வருதல், மார்க்கத்துக்கு அவர்களால் ஏற்படும் ஆபத்தை விளக்குதல்.
4) ஷரீஅத் சட்டத்தையும் அதன் நோக்கங்களையும் விளக்குவதில் ஆயத்துகள்
நீண்டிருத்தல்.
மக்கிய்யா மதனிய்யா பற்றி அறிவதினால் ஏற்படும் பலன்கள்:
அ) குர்ஆன் விளக்க உரைக்கு உதவியாக அமையும் ஏனெனில் ஒரு ஆயத்து இறங்கிய
இடத்தையும், சூழ்நிலையையும் அறிவது, அதனை சரிவரம் புரிந்து தெளிவான விளக்கம்
கொடுக்க ஒத்துழைக்கும்.
ஆ) குர்ஆனின் வெவ்வேறு பாணியை அனுபவிக்கும் வாய்ப்பு, ஏனெனில் மக்கா
முஷ்ரிகீன்களுடன் உரையாடுவதிலும் மதீனாவில் முஃமின்களுடனும் வேதக்காரர்களுடனும்
முனாஃபிகீன்களுடன் உரையாடுவதிலும் குர்ஆன் வெவ்வேறு பாணியை கொண்டுள்ளது. மேலும்
இறைவழியில் மக்களை அழைக்கும் முறையை கற்றுக் கொள்வதும் ஒருபலன், ஏனெனில்
முஷ்ரிக்கீன்களை இறைவழியில் அழைக்கும் முறையிலும் வேதக்காரர்களை அழைக்கும்
முறையிலும் இறை நம்பிக்கையாளர்களுக்கு உபதேசம் செய்வதிலும் வித்தியாசமான முறையைக்
கையாளவேண்டும், மக்கிய்யா மதனிய்யா மூலம் அதைத் தெரிந்து கொள்ளலாம்.
இ) நபி(ஸல்) அவர்களின் வாழ்க்கை சரிதையின் முக்கிய பகுதிகளை அறியும் வாய்ப்பு -
ஏனெனில் மக்கிய்யா சூராக்கள் நபியின் பதிமூன்று வருட மக்கா வாழ்வில் சந்தித்த
பல்வேறு பிரச்சனைகளோடு தொடர்பு கொண்டு இறங்கியதாகும். அதுபோல் மதனிய்யா
சூராக்கள் நபியின் பத்து வருட மதீனா வாழ்வின் பிரச்சனைகளோடு தொடர்புடையவையாகும்.
குர்ஆனில் முதலாவதாக இறங்கியது:
நபி(ஸல்) அவர்கள் தங்களின் நாற்பதாவது வயதில் மக்காவிற்கு அருகிலுள்ள
மலையிலுள்ள ஹிரா குகையில் தனிமையில் பல நாட்கள் இறைவணக்கத்தில் ஈடுபட்ட பின் வானவர்
ஜிப்ரீல்(அலை) அவர்கள் முன் தோன்றி
اقْرَأْ بِاسْمِ رَبِّكَ الَّذِي خَلَقَ
என்று தொடங்கும் சூரத்துல் அலக்கின் முதல்
ஐந்து வசனங்களை நபியவர்களுக்கு ஓதிக் கொடுத்தார்கள் - இதுவே குர்ஆனில் முதலாவதாக
இறங்கிய பகுதியாகும். இது பற்றிய விரிவான விளக்கம் புகாரியின் மூன்றாவது ஹதீஸில்
கூறப்பட்டுள்ளது.
ஆனால் புகாரியின் 4922வது ஹதீஸ், சூரத்துல் முத்தஸ்ஸிர் முதலாவதாக இறங்கியதாக
குறிப்பிடுகிறது, அதில் ஜாபிர்(ரலி) அவர்கள் கூறுகிறார்கள். ரசூலுல்லாஹி(ஸல்)
அவர்கள் கூறினார்கள்: நான் ஹிராவில் தங்கியிருந்து விட்டு இறங்கினேன். அப்போது
என்னை அழைக்கப்படும் சப்தத்தைக் கேட்டேன். என் வலப்புரமும் இடப்புறமும், முன்னாலும்
பின்னாலும் பார்த்தேன் எதையும் காணவில்லை. மேலே தலையை உயர்த்திப்பார்த்தேன். ஏதோ
ஒன்றைக் கண்டேன். கதீஜாவிடம் வந்து என்னைப் போர்த்துங்கள் என்மீது குளிர்ந்த நீரை
ஊற்றுங்கள் என்றேன். என்மீது குளிர்ந்த நீரை ஊற்றினார்கள். போர்த்திவிட்டார்கள்
அப்போது
يَاأَيُّهَا الْمُدَّثِّرُ
என்று துவங்கும் சூரத்துல் முத்தஸ்ஸிர்
இறங்கியது.
இந்த ஹதீஸில் கூறப்பட்டுள்ள சூரத்துல் முத்தஸ்ஸிரை, நபி(ஸல்) அவர்கள்
اقْرَأْ
மூலமாக நபித்துவம் கிடைத்த பின் முதலாவதாக
இறங்கியது என்ற எடுத்துக் கொள்வதே சரியாகும். ஏனெனில் இதே ஹதீஸ் கூடுதல்
விளக்கத்துடன் புகாரியில் நான்காவது ஹதீஸாக இடம் பெற்றுள்ளது.
அதில் நபி(ஸல்)
அவர்கள் கூறுகிறார்கள்:
நான் நடந்து சென்று கொண்டிருக்கும் போது மேலிருந்து ஒரு
சப்தத்தைக் கேட்டேன். என் பார்வையை உயர்த்திப் பார்த்தபோது, என்னிடத்திலே
ஹிராகுகையில் வந்த அதே மலக்கு வானத்துக்கும் பூமிக்கும் மத்தியில் ஒரு ஆசனத்தில்
அமர்ந்திருக்கக் கண்டேன், அவரைக் கண்டு திடுக்கிட்டேன். திரும்பி வந்து என்னைப்
போர்த்துங்கள் என்றேன். அப்போது அல்லாஹுதஆலா
يَاأَيُّهَا الْمُدَّثِّرُ
என்று தொடங்கும் சூராவை இறக்கினான்.
இந்த ஹதீஸில் "என்னிடத்திலே ஹிராகுகையில் வந்த அதே மலக்கு" என்ற வாசகத்தின் மூலம்
ஹிராகுகையில் இதற்குமுன் நபியவர்கள் ஜிப்ரீலை சந்தித்தார்கள் என்பது புலனாகிறது.
அப்போது
اقْرَأْ
இறங்கியது என்பதும் புகாரியின் மூன்றாவது
ஹதீஸில் கூறப்பட்டுள்ளது - ஆகவே
اقْرَأْ
மூலமாக நபியவர்களுக்கு நபித்துவம் கிடைத்து
அடுத்து சிறிது காலம் வஹி இறங்காமல் இருந்த பின் முதலாவதாக அல் முத்தஸ்ஸிர்
இறங்கியது என்று எடுத்துக் கொள்ளலாம். அல்லது சூரத்துல் அலக்கின் முதல் ஐந்து
ஆயத்துகள் மட்டுமே இறங்கியிருந்து நிலையில் முதலாவதாக முழுமையாக இறங்கிய சூரா அல்
முத்தஸ்ஸிர் என்றும் வைத்துக்கொள்ளலாம்.
குர்ஆனில் இறுதியாக இறங்கியது:
الْيَوْمَ أَكْمَلْتُ لَكُمْ دِينَكُمْ وَأَتْمَمْتُ عَلَيْكُمْ نِعْمَتِي
وَرَضِيتُ لَكُمْ الْإِسْلَامَ دِينًا
என்று துவங்கும் சூரத்துல் மாயிதாவின் மூன்றாவது
ஆயத்து மார்க்கத்தை முழுமைப்படுத்தி விட்டதாக கூறுவதாலும், நபியவர்களின் இறுதி
ஹஜ்ஜில் அரஃபா தினத்தில் (நபியின் மரணத்திற்கு மூன்று
மாதங்களுக்கு முன்) இறங்கியதாலும் (ஆதாரம் புகாரி 45)
இதுவே குர்ஆனில் இறுதியாக இறங்கியது என்று புரிய முடிகிறது.
மேலும்
يَاأَيُّهَا الَّذِينَ آمَنُوا اتَّقُوا اللَّهَ وَذَرُوا
என்று துவங்கும் சூரத்துல் பக்கராவின் 278வது
வசனம் இறுதியாக இறங்கியதாகவும் (புகாரி 4544) அதே
தொடரில் வரும்
وَاتَّقُوا يَوْمًا تُرْجَعُونَ فِيهِ إِلَى اللَّهِ
என்று தொடங்கும் 281 வசனம் இறுதியாக
இறங்கியதாகவும் (நஸாயீ) இப்னு அப்பாஸ்(ரலி) அவர்களால் கூறப்பட்டுள்ளது.
இதன்படி, அல்மாயிதாவின் மூன்றாவது ஆயத்துக்கு சில நாட்கள் முன் அல்பக்கராவின்
ஆயத்துகள் இறங்கியிருக்கலாம். அல்லது அல்மாயிதாவின் ஆயத்துக்குப் பின் தான்
இறங்கியது என்று வைத்துக் கொண்டாலும் முரண்பாடில்லை. ஏனெனில் வட்டி பற்றி ஏற்கனவே
இருந்த சட்டத்தை மீண்டும் நினைவூட்டியே சூரத்துல் பக்கராவின் ஆயத்து இறங்கியுள்ளது.
ஆகவே மார்க்கத்தை முழுமைப்படுத்திவிட்டதாக கூறும் அல்மாயிதாவின் ஆயத்தோடு
முரண்படுவதாக கொள்ள முடியாது.
மேலும் சூரத்துன்னஸ்ர் இறுதியாக இறங்கிய சூராவென்று இப்னு அப்பாஸ்(ரலி) அவர்கள்
கூறும் கூற்று ஸஹீஹ் முஸ்லிமில் இடம் பெற்றுள்ளது.
நபி(ஸல்) அவர்கள் இறுதியாக இறங்கியது இதுதான் என்று குறிப்பிட்டு கூறாததால்,
இப்படி மூன்று விதமான கருத்து கூறப்பட்டுள்ளது.
அல்லாஹ் நன்கறிந்தவன்.
>>
ஸபபுன் னுஸுல்
பாடம் மூன்றுக்கான கேள்விகள்:
1) மக்கிய்யா, மதனிய்யா என்பதன் விளக்கம் என்ன?
2) சூரா மக்கிய்யாவை வரையறுப்பவை யாவை?
3) சூரா மதனிய்யாவை வரையறுப்பவை யாவை?
4) சூரத்துல் முத்தஸ்ஸிர் முதலாவதாக இறங்கிய சூரா என்று கூறப்படும் ஹதீஸுக்கு
சரியான விளக்கமென்ன?
5) சூரத்துல் மாயிதாவின் மூன்றாவது ஆயத்து எப்போது இறங்கியது? ஆதாரத்துடன் கூறுக!
|