வல்ல ரஹ்மான் நாம் நாடிய காரியங்களை நல்வழியில் நடத்துவானாக!
சம்பந்தப்பட்டவர்கள் சம்பந்தப்பட்ட இடத்தில் சம்பந்தப்பட்ட விஷயத்தில்
தலையிடவில்லை என்றால் அந்த தவறு, சமூகத்தில் தவறாகவே
அங்கீகரிக்கப்படாது.
இதை எழுத காரணம், வளைகுடா நாட்டில் பணிபுரியும் நான், இஸ்லாத்தை
முழுமையாக விளங்கி ஏற்று மூன்று வருடம் கழிந்தபிறகு, திருமணத்தின்
காரணமாக ஊருக்குச் சென்ற பொழுது என்னைச் சிறைவைத்துவிட்டு எம்
மார்க்கத்திலிருந்து என்னை பழைய மதத்திற்கே திருப்பவும், நீ வரதட்சணை
வாங்கியே திருமணம் செய்ய வேண்டும் என எனக்கு உபதேசிக்கவும் என்னுடைய
சொந்த சகோதரனைப் போல் பழகிவிட்ட என்னுடைய ஆசிரியர் அழைத்துவரப்பட்டார்.
தனக்கே உரிய பாணியில் என்னுடன் பேச ஆரம்பித்தபோது, நான் இஸ்லாம்
சம்பந்தமான விஷயங்களை அவரிடம் பகிர்ந்து கொண்டேன். அதற்கு அவர் "நீ
சொல்வதெல்லாம் சரிதான். ஆனால் அதுபோன்று நடக்கக்கூடிய ஒரே ஒரு ஆளை
காட்டு பார்ப்போம்!" என கேட்டார்.
குர் ஆன், ஹதீஸ் அடிப்படையில் நடக்க வேண்டும் என நினைக்கும் ஒவ்வொரு
மனிதனுடைய நிலையும் இப்படித்தான். பலரால் பல வழிகளில் நிர்பந்திக்கப்
பட்டுக்கொண்டே இருக்கும் நிலையில் எப்படி ஒரு மனிதனால் குர் ஆன் ஹதீஸ்
அடிப்படையில் வாழ முடியும் என நான் கேட்டேன்.
அதன் பிறகு நடந்த சம்பவத்தை நான் வெளிநாட்டிற்கு வந்த பிறகு அவருக்கு
கடிதமாக எழுதினேன். அதன் சில பகுதியை அல்லாஹ்விற்காக உங்களுடன்
பகிர்ந்து கொள்வதில் இதுபோன்று சம்பந்தப்பட்டவர்களுக்கு சிந்தனையை
தூண்டும் என்றால் அதற்காக மிகவும் சந்தோஷம் அடைகின்றேன். புகழ்
அனைத்தும் இறைவன் ஒருவனுக்கே!
______________________________________________________________
அன்புள்ளம் கொண்ட அண்ணன் அவர்களுக்கு, உங்கள் அன்பை என்றும் மறவாத
தம்பி வரையும் வண்ண மடல். இதுவரை நான் கடிதம் எழுதாதற்கு என்னை
மன்னிக்கவும். அதற்கான முக்கியமான காரணம் உண்டு. அவை-
நீங்கள் எனக்கு அண்ணன் மட்டும் அல்ல. என் மரியாதைக்குரிய ஆசானும் கூட
எங்கள் ஊரில் உள்ள சிறிய பள்ளிக்கூடத்தில் ஆசிரியராக இருக்கும்
போதிலிருந்து நீங்கள் எங்களை சிறுவயதிலேயே சத்தியத்தையும்
அசத்தியத்தையும் நன்மை எது, தீமை எது என்பதையும் பிரித்து
காண்பித்தவர்.
"ஜாதிகள் இல்லையடி-பாப்பா -
குலம் தாழ்த்தி உயர்த்தி செல்லல் பாவம்!"
என்ற கவி பாரதியாரின் உன்னதமான வார்த்தைக்கு விளக்கம் கற்பித்தவர்.
சமுதாய பிரச்னைகளை எதிர்த்து சளைக்காமல் போராடவேண்டும் என்று மன
உறுதியை எங்கள் ரத்தத்தில் ஊற்றி விட்டவர். நாங்கள் அப்படி உயர்வாக
நினைத்திருக்க கூடிய உங்கள் வாயிலிருந்து நான் ஊருக்கு வந்திருந்தபோது
ஒரு வார்த்தை சொன்னீர்கள்.
அந்த வார்த்தையை ஆண்டுகள் பல கழிந்தும் இன்னும் என்னால் மறக்க
இயலவில்லை. அந்த வார்த்தை பிரச்னைக்குரியது அல்லது சமுதாயத்தில்
ஒற்றுமையை கெடுக்கக்கூடியது என்றால் பரவாயில்லை. ஆனால், அது இதுவரை
எங்களுக்கு படித்து கொடுத்ததற்கு முற்றிலும் மாற்றமானது அந்த வார்த்தை.
நீங்கள் சொன்ன புரட்சிகரமான அந்த வார்த்தை என்னவெனில் "ஊருடன் ஒத்து
வாழவேண்டும்" என்பதுதான். இந்த வார்த்தை வேண்டுமானால் ஒரு
அரசியல்வாதிக்கு அல்லது ஒரு சந்தர்ப்பவாதிக்கு உகந்ததாக இருக்கலாம்.
ஆனால் சமூகத்தின் தூண்களான உங்களுக்கு சிறந்ததல்ல. இறைவனின்
மிகப்பெரும் அருளால் உங்கள் மாணவனான எனக்கு சமூகத்தின் வேர்களில்
ஊடுருவிக்கிடக்கும் பலம்பெரும் இருதீமைகளுக்கு எதிராக ஆணி அடிக்ககூடிய
பாக்கியத்தை எனக்கு அருளினான்.
1) வரதட்சணை : பெண்களின் திருமண வாழ்வை
கனவாக, ஜன்னல்களின் கதவுகளோடு கண்ணீரின் துணையோடு ஒதுக்கப்பட்ட
கொடுமைக்கு எதிராக கைகூலியில்லா திருமணம்.
2) தீண்டாமை : தன் இனத்தில்பட்ட ஒரு
சாராரை தாழ்த்தப்பட்டவன் என்ற பெயரில் அவனை அறிந்தோ அறியாமலோ, தன்
சகோதரனுடைய மரியாதையையும் தன்மானத்தையும் இழிவு படுத்தும் இழிசெயலில்
இருந்து இஸ்லாத்தை ஏற்றுக்கொண்டதன் மூலம் என்னை நான்
தற்காத்துக்கொண்டது.
இஸ்லாம் தீண்டாமை என்ற அந்த வேர் புழுவை வேரடி மண்ணோடு ஒழிக்கின்றது
என்பதை உணர்ந்தேன். அதனால் தான் தந்தை பெரியார் "இன இழிவு நீங்க
இஸ்லாமே நன் மருந்து" என கூறினார் போலும். டாக்டர் அம்பேத்கார் கூட ஒரு
லட்சம் தொண்டர்களோடு புத்த மதத்தில் இணைந்ததும் கூட தீண்டாமை என்ற
புற்று நோயிலிருந்து தப்புவதற்குத்தான். எனவே "ஊருடன் ஒத்து
வாழவேண்டும்" என்பது தீமைகளுக்கு பயந்து வெருண்டோடுவதற்கு சமம். அது
எதிர்த்து போராடும் தன்மையை இழக்கச் செய்யும். அது படித்ததற்கும்,
செயல்பாட்டிற்கும் உறவில்லாமல் செய்துவிடும். அது வறுமைக்கோட்டிற்கு
கீழ் உள்ளவர்கள் மீது வலுக்கட்டாயமாக திணிக்கும் சமூக சுமையாகும்.
நீங்கள் எனக்கு கற்று தந்த அடிப்படையில் கோழைத்தனமாகும். சமூகத்தின்
சீர்கேட்டிற்குள் மூழ்கிக்கிடப்பதும் அடிமைத்தனமாகும். ஒரு தீமையை
செய்தாலும் அல்லது தீமையை செய்யும் பொழுது அதைக்கண்டு மௌனமாக
இருந்தாலும் ஒரு முஸ்லிமைப் பொறுத்தவரை அந்த தீமையை செய்தவனாகவே
இஸ்லாம் கருதுகின்றது. ஒன்று தடுக்கவேண்டும் அல்லது மனதளவாவது வெறுத்து
அந்த தீமையிலிருந்து ஒதுங்க வேண்டும்.
அந்த அடிமைத்தனத்தை தகர்த்து வெளியேற வேண்டும் இல்லையேல் நீங்களும்
சரித்திரத்தின் முன் குற்றவாளியாவீர்கள்! சரித்திரத்தின் கேள்விக்கு
நீங்களும் பதில் சொல்லியே ஆகவேண்டும். ஏனெனில் நீங்கள் பெரியாரின்
பாசறையில் பயின்றவர் என்பதால்! பெரியார் தீண்டாமைக்கும்
மூடநம்பிக்கைக்கும் சாவு மணியாக திகழ்ந்தார். ஆனால் அதன் பிறகு வந்த
இழிபிறவிகள் பெரியாரின் கொள்கைகளை குழிதோண்டி புதைத்து விட்டு
திருவள்ளுவரைக் கூட அய்யன் என்று கூற வெட்கப்படவில்லை. அவர்களின்
வரிசையில் உங்களை சேர்ப்பதற்கு என் மனம் இடம் தரவில்லை. உங்கள்
மாணவனின் தெளிவைப் புரிந்துகொண்டிருப்பீர்கள் என்ற நம்பிக்கையில்
முடிக்கின்றேன்.
வஸ்ஸலாம்.
சிந்திப்போம்! செயல்படுவோம்!
இப்படிக்கு
உங்கள் அன்பு தம்பி
சாலிஹ்
http://iniyaislam.blogspot.com |