அன்பான அழைப்பு
அழைப்பவர்: முன்னாள் பாப் இசைப் பாடகர் - கேட் ஸ்டீவன்ஸ்
தமிழில் M. முஜிபுர் ரஹ்மான் உமரீ |
இறைவன் தன் கிருபையால் சுவர்க்கத்தின் பக்கமும், மன்னிப்பின் பக்கமும்
அழைக்கிறான். (அல்குர்ஆன் 2:221)
அமைதியின் வீடான சொர்க்கத்தின் பக்கம் இறைவன் உங்களை அழைக்கின்றான்.
(அல்குர்ஆன் 10:25)
நீங்கள் உங்கள் இறைவனின் மன்னிப்பைப் பெறுவதற்கும், சுவனபதியின்
பக்கமும் விரைந்து செல்லுங்கள்! (அல்குர்ஆன் 3:133)
இஸ்லாத்தின் பால் ஓர் அன்பான அழைப்பு!
இஸ்லாத்தைப்
பற்றி முதலில் எனது மூத்த சகோதரர் டேவிட் மூலமாக நான் அறிந்தேன். 1975-
ல் அவர் ஜெரூசலத்தை நோக்கிப் பயணித்தார். அது புனித இடங்களில் ஒன்று.
அவர் அங்குள்ள மஸ்ஜிதுல் அக்ஸா பள்ளிவாயிலுக்குச் சென்று கண்ணுற்றார்.
அவர் தம் வாழ்நாளில் இதற்கு முன் எந்த பள்ளிவாயிலிலும் நுழைந்ததில்லை.
அங்கு காணப்பட்டநிலை கிருத்துவ ஆலயங்களிலும் யூத ஆன்மீகர் குழுமும்
இடங்களில் நிலவும் நிலையிலிருந்து முற்றிலும் வித்தியாசமாய்த்
தோன்றியது.
இஸ்லாம் எப்படி இத்துனை பெரிய ரகசியத்தைப் பெற்று இலங்குகிறது!! என்ற
ஆச்சரியக் கேள்வி அவர் மனதில் ஆளப்பதிந்தது. அங்கு கண்ட முஸ்லிம்களின்
நடத்தையும் வணக்க, வழிபாட்டில் காட்டும் சமத்துவமும் அவர் நெஞ்சைத்
தொட்டது. இங்கிலாந்து திரும்பிய உடனேயே அவர் ஒரு குர்ஆன் பிரதியை
வாங்கி என்னிடம் வழங்கினார். ஏனெனில் நான் நேர்வழி பெறவேண்டும் என அவர்
எண்ணினார். - அல்ஹம்து லில்லாஹ்- வல்ல அல்லாஹ் ஒருவனுக்கே எனது
நன்றிகள்.
அறிவைத் தேடி அலைந்த என்னை மிகக் காலம் கடந்து கவர்ந்த இந்த
விழிப்புணர்வு! அதனைக் காணும் போது எனக்கு புதுமையாகத் தோன்றியது. நான்
இதுவரைக் கற்றறிந்த எத்தனையோ கல்விகள், அவைகள் மிக எளிதாகவும்
தெளிவாகவும் இருந்த போதும் வாழ்வின் நோக்கம் ஒரு புரியாத புதிராகவே
எனக்குத் தோன்றியது. பல ஆன்மீகப் பாதைகளை திருப்தியின்றி பின் பற்றிக்
கொண்டிருந்தேன். திசை தெரியாமல் படகில் பயணிக்கும் பிரயாணியைப் போல்
என் வாழ்வு இருந்தது.
இந்நிலையில் குர்ஆனை படிக்கத் துவங்கினேன். அதனை நான் படித்ததும்
அல்குர்ஆன் எனக்காகவே இறக்கப்பட்டுள்ளதோ, அல்லது அல்குர்ஆனை
படிப்பதற்காகவே நான் படைக்கப்பட்டுள்ளேனோ!? என்று எனக்குத் தோன்றியது.
ஒன்றரை ஆண்டுகளுக்கு மேலாக குர்ஆனை திரும்பத்திரும்பப் படித்தேன்.
அந்நாட்களில் நான் எந்த முஸ்லிமையும் சென்று சந்திக்கவில்லை.
அல்குர்ஆனின் கருத்துக்களில் நான் முற்றிலும் மூழ்கினேன். அதன் மூலம்
வாழ்வின் நோக்கத்தை அறிந்ததும் அல்குர்ஆனுக்கு கட்டுப்பட்டு வாழ்வை
அமைத்துக்கொள்வதா? அல்லது வாழ்வின் நோக்கம் அறியாது நாடோடி போல்
அலைந்து ஆடிப்பாடித் திரிவதா? என்ற வினா எழுந்தது. என் வாழ்வின்
திருப்பு முனையாய் அதன் தீர்வு இருக்கும் என உணர்ந்தேன்.
இந்நிலையில் லண்டனில் ஒரு புதிய பள்ளிவாயில் திறக்கப்பட இருப்பதாக
அறிந்தேன். எனது மார்க்கத்தை தேர்வு செய்யும் நாள் நெருங்கி விட்டதாக
எண்ணினேன். 1977-ல் குளிரான வெள்ளியன்று பள்ளிவாயிலை நோக்கி நடந்தேன்.
வெள்ளிக்கிழமை தொழுகை முடிந்த பின் அங்குள்ள இமாம் (தொழுகை நடத்துபவர்)
அவர்களை நோக்கி, நான் இஸ்லாத்தை தழுவ விரும்புவதைக் கூறி, இஸ்லாத்தை
ஏற்றேன். இதுவே முஸ்லிம்களுடன் நான் கொண்ட முதல் தொடர்பு.
அல்லாஹ்வுக்காக நான் ஆற்றும் பணிகள்
என்னிடம் பழக்கத்தில் இருந்த தீய செயல்களாகிய மதுவருந்துதல்,
புகை பிடித்தல், வட்டியில் தொடர்பு போன்றவைகளை உடனே நிறுத்துவதில்
எனக்கு எந்த சிரமமும் ஏற்படவில்லை. ஏனெனில் இத்தீய பழக்கங்கள் என்னை
ஒருபோதும் மேம்படுத்தாது என்பதை நான் நன்கு அறிந்திருந்தேன்.
மார்க்கத்தை பின்பற்றும் விஷயத்தில் - என்னுடைய பழைய
நண்பர்களிடமிருந்து என்னைப் பிரித்துக் கொள்வதில் எனக்கு எந்த கஷ்டமும்
ஏற்படவில்லை. இஸ்லாத்தின் இனிமையை அவர்களால் ஏன் சுவைக்க முடியவில்லை
என்று என்னால் புரிந்து கொள்ள முடியவில்லை.
எனது மார்க்கத்திற்காக, என்னுடைய பழைய நிலையிலிருந்து என்னை
சீர்படுத்திக் கொள்ள வேண்டும் என்ற காரணத்தால் எனது பழைய தொடர்புகளை
உதற வேண்டியிருந்தது.
என் வாழ்வில் பல சோதனைகள் நிகழ்ந்தன. உதாரணத்திற்கு, நான் முஸ்லிம்
அல்லாதவர்களுடன் இருக்கும் போது, பொறுத்துக் கொள்ளுங்கள்! இதோ
வருகிறேன்! என்று கூறிவிட்டு அமைதியாக தொழுகையை நிறைவேற்றச்
சென்றுவிடுவேண். நான் எங்கு செல்கிறேன் என்று அவர்களிடம் கூறுவதில்லை.
எனவே நான் இவ்வாறு செல்வது அவர்களுக்கு புதுமையாகத் தெரிந்தது.
ஒரு நாள் நான் அவர்களிடம் தொழச்செல்வதை கூற விரும்பி, அதனை அவர்களிடம்
கூறிய போது, அவர்கள் அனைவரும் அதனை ஏற்றுக் கொண்டு என்னை மிகவும்
மரியாதையுடன் அனுப்பிவைத்தனர். நீங்கள் முயற்சித்து ஒரு பணியை செய்ய
நினைத்தால் நிச்சயமாக அல்லாஹ் அதனை எளிதாக்குவான். அதன் பிறகு தொழுகை
நேரம் வந்துவிட்டால் முஸ்லிம் அல்லாதவர்களை விட்டும் பிரிந்து
செல்வதில் எனக்கு எந்த கஷ்டமும் இருக்கவில்லை.
ஒரு முஸ்லிம் எப்படி இருக்க வேண்டும்?
ஒரு
முஸ்லிம் இஸ்லாத்தின் சிறந்த இயல்புகளை சுமந்தவர்களாக காணப்படவேண்டும்.
பிறருடன் அன்புடனும் பரிவுடனும் பழகவேண்டும். நபி(ஸல்) அவர்களின்
குணநலன்களைக் கொண்டவர்களாக திகழவேண்டும். நபி(ஸல்)அவர்களின் குணநலன்கள்
குர்ஆனாகவே இருந்தது என்பதை நாம் அறிவோம். மானிட சமுதாயத்தை
சீர்திருத்தி, நேர்வழிப் படுத்துவதற்காகவே அல்லாஹ்வினால்
இறக்கியருளப்பட்ட அறநெறியே அல்குர்ஆன். அதனை பின்பற்றி நடந்தால் பெறும்
இன்பங்கள் பல.
குறிப்பாகச் சொல்வதென்றால் நான் அல்லாஹ்வின் அருளைப் பெற
உழைக்கின்றேன். இவ்வாறு நான் உழைக்கவும் அதில் உறுதியாக இருக்கவும்
அல்லாஹ் எனக்கு துணைபுரிகிறான். இஸ்லாத்தை பிரிட்டனில் ஸ்தாபிப்பதற்கு
என்னால் இயன்ற முயற்சிகளை செய்து கொண்டிருக்கிறேன். அது அங்கு வளர்ந்து
வியாபிப்பதற்கு நான் ஒரு கருவியாக இருக்க விரும்புகிறேன். முஸ்லிம்
சமுதாயம் நாளுக்கு நாள் பெருகி பலமுடையதாய்த் திகழ என்னால் இயன்ற
பணிகளை செய்து வருகிறேன். எப்போதும் ஒன்றை ஞாபகம் வைத்துக்
கொள்ளுங்கள்!! வல்ல அல்லாஹ் நாடினால் ஒருவனை நேர்வழிப்படுத்தி
இஸ்லாத்தில் நுழையச் செய்ய முடியும்!!
உங்களின் அன்பான இஸ்லாமிய சகோதரன்
யூசுஃப் இஸ்லாம்
(முன்னாள் பாப் இசைப் பாடகர் - கேட் ஸ்டீவன்ஸ்) |