நாம் யாரை வணங்க வேண்டும்
நெல்லை இப்னு கலாம் ரசூல் |
அல்லாஹ் ஒருவனே! அவன் எந்த தேவையுமற்றவன். அவன் யாரையும் பெறவுமில்லை,
அவன் யாராலும் பெற்றெடுக்கப்பட்டவனுமல்ல. அவனுக்கு நிகராக எவருமில்லை
என்று நபியே! நீர் கூறுவீராக! (அல்குர்ஆன் 112:1-4)
பகுத்தறிவின் தீர்ப்பு
மனிதன் இயற்கையிலேயே நன்மை - தீமையை, உண்மை பொய்யை பிரித்தறியும்
பகுத்தறிவு உடையவன். இப்பண்பு இறைவனின் அளப்பெரிய ஆற்றல்களை உணர
உதவுவதுடன் வணக்கத்திற்குரியவன் ஓரிறைவனே என்பதை அறியவும் உதவுகிறது.
மனிதர்களால் உருவாக்கப்பட்ட மதங்களை பின்பற்றும் அனைவரும் இந்த
இயற்கைக் கருத்துக்களை ஏற்றுக் கொள்ளும் மனம் கொண்டவர்களாக,
இரட்சகனுக்கு கீழ்படிபவராகவே பிறக்கின்றனர். ஆனால் அவர்களின் பெற்றோரே
அவர்களை தங்களின் கலாச்சாரத்தில், தாங்கள் சார்ந்துள்ள மதத்தின்
அடிப்படையில்; வளர்த்து விடுகின்றனர்.
இஸ்லாம்
இஸ்லாம் மனிதனால் உருவாக்கப்பட்ட மதமல்ல, மாறாக, அது இறைவனால் மனித
சமுதாயத்திற்கு அருளப்பட்ட வாழ்க்கை நெறியாகும். இஸ்லாம் எனும்
பெயர்கூட இறைவனால் தேர்ந்தெடுக்கப்பட்டதுதான். மனிதன் தன்னை இறைவனுக்கு
மட்டுமே அடிமையாக்கி, அவன் வகுத்துத் தந்துள்ள வாழ்க்கை நெறியில் தனது
வாழ்வை அமைத்துக் கொள்வதே இஸ்லாத்தின் முக்கிய நோக்கமாகும்.
இறைத்தூதர்கள்
இஸ்லாத்தை மனித சமூகத்திற்கு எடுத்துரைக்க பல இறைத்தூதர்கள் உலகின் பல
பகுதிகளில், பல கால கட்டங்களில், பல மொழிகளில் அனுப்பப்பட்டார்கள்.
அவர்கள் இஸ்லாத்தை முறையே தத்தமது சமுதாயத்தவருக்கு போதித்தார்கள்.
இவ்வருகையின் இறுதியாகவும் உலகத்தாருக்கு அருட்கொடையாகவும்
முஹம்மது(ஸல்) அவர்கள் சுமார் கி.பி 610 - ம் ஆண்டு மக்காவில்
இறைதூதராக அனுப்பப்பட்டார்கள். இவர்கள் குறிப்பிட்ட மொழியினருக்கோ,
குறிப்பிட்ட நாட்டினருக்கோ அன்றி ஒட்டுமொத்த மனித இனத்திற்கும்
இறைத்தூதராக அனுப்பப்பட்டுள்ளார்கள்.
அனைத்து இறைத்தூதர்களும் அவர்களின் சமுதாயத்தினருக்கு போதித்த
இஸ்லாத்தின் அடிப்படைக் கொள்கை ''இறைவன் ஒருவனே! அவன் மட்டுமே
படைக்கும் வல்லமை கொண்டவன். அவனே உங்களையும் நீங்கள் வாழும் பூமியையும்
நீங்கள் காணும் கடல், மலை, விண், விண்மீன்கள், சு10ரியன், சந்திரன்,
நட்சத்திரங்கள் ஆகிய அனைத்தையும் படைத்தான். வணக்கத்திற்கு தகுதியானவன்
அவன் ஒருவன் மட்டுமே. அவனையன்றி வணங்கப்படும் அனைத்தும் அவனது
படைப்பினங்களேயன்றி இறைவனல்ல. எனவே ஓரிறைவனான அவனை மட்டுமே
வணங்குங்கள்! அவனது வழிகாட்டுதல்கள் இறைத்தூதர்களான எங்கள் மூலம்
உங்களை வந்தடைகின்றன. அதனைப் பின்பற்றுங்கள்'' எனப்தேயாகும்.
இறைவன் எப்படிப்பட்டவன்?
அல்லாஹ்! அவன் ஒருவனே! அவனுடைய திருப்பெயர்களும் தன்மைகளும் மனிதனால்
தேர்ந்தெடுக்கப்பட்டவை அல்ல. அவன் எண்ணைக் கொண்டோ, - ஆண்பால், பெண்பால்
போன்ற - பாலினத்தைக் கொண்டோ அறியப்படுபவனல்ல. அல்லாஹ் என்பது
இரட்சகனின் பெயர். இது நேசமிகு நபி ஈஸா(அலை) அவர்களின் அராமிக்
மொழியின் துணை மொழியாகும். அல்லாஹ் என்ற இத்திருப்பெயர் முதல் மனிதரும்
முதல் இறைத் தூதருமான ஆதம்(அலை) அவர்கள் முதல் இறுதி இறைத்தூதரான
முஹம்மது(ஸல்)அவர்கள் வரை எல்லா நபிமார்களாலும்
பயன்படுத்தப்பட்டுள்ளது.
படைப்பாளனாகிய அல்லாஹ்வே சர்வசக்தியுடையவன், ஆதியானவன், அவனுக்கு
முன்பு எதுவுமில்லை, அவனே நித்திய ஜீவன், நிலைத்திருப்பவன், அவனை
யாரும் பெறவுமில்லை. அவன் யாராலும் பெறப்படவுமில்லை. அவனுக்கு நிகராக
எதுவும் எவரும் இல்லை. அவனைத் தவிர உள்ள அனைத்தும் இறுதிநாளன்று
அழிந்து விடும். மரணத்திற்குப் பின் நாம் அவனிடமே மீளவேண்டியுள்ளது.
அங்கு அல்லாஹ்வால் நாம் அநீதி இழைக்கப்பட மாட்டோம். நீதமாய்
நடத்தப்படுவோம்.
கடவுள்களாக கருதப்படும் படைப்பினங்கள்
மனிதர்களால் வணங்கப்படும் கல், சிலை, சிலுவை, பிரமிடுகள், கோமேனி,
ஃபாராகான், எலிஜாக்கள், மால்கம் ஒ, கிருஷ்ணா, குரு, புத்தர், மகாத்மா,
சக்கரவர்த்தி, ஜோஷப் ஸ்மித், சு10ரியன், சந்திரன், ஒளி, நெருப்பு,
சிற்பங்கள், கோவில்கள், ஞானிகள், பூசாரிகள், மடங்களில் வாழும்
சன்னியாசிகள், திரைப்பட நட்சத்திரங்கள், ஷைக்குகள் ... ஆகியோர்
அனைவருமே ஓரிறைவனின் படைப்பினங்களே!
ஏன்! இறைத்தூதர்கள் கூட இறைவனின் படைப்பினங்கள் தான் (முஸ்லிம்கள்
அவர்களை வணங்கவில்லை. மாறாக ஒரிறைவனையே வணங்குகின்றனர்).
இயேசுவைப் பின்பற்றுவோர் இயேசுவும் ஒரு தாயின் கருவில் சிசுவாய்
இருந்தவரே என்ற உண்மையை மறந்தவர்களாகவும் புறக்கணிப்பவர்களாகவும்
உள்ளனர். அவருக்கு உண்ண உணவு தேவைப்பட்டது. மற்றவர்களைப் போல் அவரும்
பிறந்து வளர்ந்து மனிதராக வாழ வேண்டியிருந்தது. அல்லாஹ்விடமிருந்து
அவருக்கு அருளப்பட்ட இன்ஜீலும் பனு இஸ்ரவேலர்களுக்கு இவ்வாறு உபதேசம்
செய்கிறது:
அல்லாஹ் ஒருவனே! இறைவனுக்கும் மனிதர்களுக்கும் - இஸ்ரவேலர்களுக்கும் -
இடையில் தூதரும் ஒருவரே! அம்மனிதர் இயேசு கிருஸ்த்து. (1 தீமோத்தேயு
2:5)
ஒரு மனித தூதர் தம் சமுதாய மக்களை அழைத்து தன்னை வழிபட வேண்டாம் எனக்
கூறினார். ஆனால் அது - அந்தப் பிரச்சாரம்- வீணானது. மக்களை அவரையே
வழிபடலாயினர். (மத்தேயு 15:9)
நம்மைப் போல் உண்பவர், நடப்பவர், உறங்குபவர், ஓய்வெடுப்பவர் முதலிய
சராசரி மனித தேவைகளைத் தன்னகத்தே கொண்டவர் சர்வவல்லமை பொருந்தியவனைப்
போல் ஒருபோதும் ஆகமுடியாது. அல்லாஹ் தன்நிகரற்றவன். படைப்பினங்களின்
தன்மைகளை விட்டும் முற்றிலும் அப்பாற்பட்டவன்.
பௌத்தம், இந்துத்துவம், சௌராஷ்டரியம், மார்க்ஸியம், முதலாளித்துவம்
இவையெல்லாம் படைப்பினங்களையும் உருவங்களையும் வணங்கும்
கொள்கையுடையவைகள் தான்.
அமைதியையும் ஆன்மீகத்தையும் தேடியலையும் மாந்தர்கள்
இஸ்லாத்தைத் தவிர உள்ள அனைத்து மதங்களும் வாழ்வின் அனைத்துத்
துறைகளுக்கும் வழிகாட்டுவதில் வெற்றிடமாக இருக்கின்றன. முஸ்லிம்களைத்
தவிர உலகில் வாழும் பிறமதத்தவர்கள் தாங்கள் சார்ந்துள்ள மதத்தை
வாழ்க்கை நெறியாக கருதுவதே கிடையாது. மதங்களை ஆன்மீக மருந்தாக மட்டுமே
கருதி வருகின்றனர்.
இதனால் தாம் சார்ந்துள்ள மதத்தில் வாழ்க்கை நெறியுள்ளதா? என்று
ஆராய்ச்சி செய்ய முற்படும் அறிஞர்களும், சித்தனையாளர்களும் அதில் தமது
மதம் வெறுமையாக இருப்பதை உணர்கிறார்கள். அல்லது பகுத்தறிவு ஏற்றுக்
கொள்ளாத, நடைமுறைக்கு சாத்தியமில்லாத வழிகளைக் காண்கிறார்கள். மேலும்
மனித சமுதாயத்தை உயர்வு, தாழ்வாக பிரித்து மனிதனை மனிதனுக்கு
அடிமையாக்கும் சு10ழ்ச்சிகளையும் தாழ்த்தப்பட்டவர்களுக்கு
இழைக்கப்படும் கொடுமைகளையும் நடைமுறையோடு ஒப்புநோக்குகின்றார்கள்.
இவைபோக இம்மதங்களில் ஆன்மீகத்திலாவது நிம்மதி கிடைக்குமா? என்று
பார்க்க முற்படுவோர் அரக்கத்தனமான காரியங்களையே ஆன்மீகமாக கருதும்
உண்மையை உணர்கின்றார்கள். மேலும் ஆன்மீகப் போர்வையில் பலர் தம்
பொருளாதாரத்தை சுரண்டுவதையும் கண்டு மிரண்டு நிற்கின்றார்கள்.
எனவே வாழ்க்கை நெறியிலும் ஆன்மீகத் துறையிலும் சரியான விடை கிடைக்காத
சிந்தனையாளர்கள் நிம்மதியையும் அமைதியையும் தேடி அலைகின்றார்கள்.
இதனால் தமது மதத்தை விட்டும் வெளியேறியவர்கள் பிறகு எந்த மதத்திற்கு
செல்வது என்று தடுமாறி நிற்கும் போது பல மதங்கள் அவர்களை அழைக்கின்றன.
தான் சார்ந்துள்ள மதத்தின் விரக்தியில் வேறு ஏதேனும் ஒரு மதத்திற்கு
சென்று விடவேண்டும் என்ற நோக்கில் சரியாக ஆராயாது பிற மதத்தில்
நுழைவோர் அங்கு வேறுவிதமான தீமையையும் மடமையையும் உணர்ந்து
நிம்மதியின்றி தவிக்கின்றனர். இந்நிலையில் யாருக்கு இஸ்லாத்தை அறியும்
சந்தர்ப்பம் கிடைக்கின்றதோ, குர்ஆன் கிடைக்கின்றதோ அவர்கள் இஸ்லாமே
சரியான தீர்வு என்ற உண்மையை உணர்ந்து அதில் இணைந்து
நிம்மதியடைகின்றனர்.
இஸ்லாத்தின் வளர்ச்சியும் அதற்கெதிரான சூழ்ச்சிகளும்
இஸ்லாம் தமது கொள்கை மற்றும் கோட்பாடுகளாலும் மனிதன் இறைவனைத் தவிர
வேறு எதற்கும் எவருக்கும் அடிமையில்லை என்ற சுதந்திர சிந்தனையாலும்
மனிதர்களுக்கு மத்தியில் பிறப்பாலோ, நிறத்தாலோ, மொழியாலோ எந்த ஏற்ற
தாழ்வும் கிடையாது என்ற சகோதரத்துவக் கொள்கையாலும் உலக மாந்தர்களை
கவர்ந்து கொண்டிருக்கின்றது.
திறந்த மனதுடன் குர்ஆனைப் படிப்பவர், இஸ்லாத்தின் போதனைகளைக் கேட்பவர்,
இஸ்லாத்தின் சட்டங்களை ஒழுக்கங்களை, வழிபாடுகளை சமூக ரீதியாக, அறிவியல்
ரீதியாக, மனிதாபிமான அடிப்படையில் முழுமையாக ஆராய்ச்சி செய்பவர்கள்
உண்மையை உணர்ந்து நேர்வழி அடைகின்றனர். இதன் எதிரொலிதான் இன்று உலகம்
முழுவதும் இஸ்லாம் வெகுவிரைவாக வளர்ந்து வருகிறது. பல அறிஞர்களை,
விஞ்ஞானிகளை, ஆராயிச்சியாளர்களை, வீரர்களை இஸ்லாம் தன்னுள்
ஈர்த்துள்ளது. பலரை இஸ்லாத்தைப்பற்றி புகந்ழ்துரைக்கச் செய்துள்ளது.
இஸ்லாத்தின் அதிதீவிர வளர்ச்சியை நன்கறிந்த மேற்கத்திய நாடுகள்
தங்களின் அனைத்துச் செய்தித்துறைகளையும் இஸ்லாத்திற்கு எதிராக
பயன்படுத்திக் கொண்டிருக்கின்றன. இஸ்லாத்தை பலகோணங்களில் தவறாக
விமர்சிக்க முயற்சிக்கின்றன. ஆனால் இஸ்லாத்தின் தூயவடிவை உலகிற்கு முன்
எடுத்துரைக்கப்படும் போது அந்நாடுகள் தலைகுனிந்து நிற்கின்றன. இந்நிலை
சத்தியத்தை நாடுவோருக்கு விடப்பட்ட மிகப்பெரியதொரு சவாலாகும்.
இஸ்லாத்தைப் பற்றிய தவறான விமர்சனங்களை நம்பிவிடாமல் அல்லாஹ்வின்
வழிகாட்டுதலை திறந்த மனதுடன் நேரடியாக குர்ஆனிலிருந்து பெற
முயற்சித்தால் உண்மையை உணர்ந்து கொள்ள முடியும்.
அன்பான வேண்டுகோள்!
மனிதன் படைக்கப்பட்டது ஒரு காரணத்திற்காகவே! அது, அல்லாஹ் பொருந்திக்
கொள்ளக்கூடிய வகையில் மனிதன் தன் வாழ்க்கையை அமைத்துக் கொள்ளவே! மனிதன்
ஏன் இவ்வாறு செய்வதில்லை? நாம் சுவாசிக்கும் காற்றை நாம் படைத்தோமா?
நம்மை நாமோ, அல்லது நாம் பிறரையோ படைக்கிறோமா? நாமோ இறைவனால்
படைக்கப்பட்டுள்ளோம். நாம் சில வரம்புகளுக்குள்ளேயே வாழ்கின்றோம். நாம்
பலவீனர்கள். சர்வவல்லமை பொருந்திய இறைவனை நமது தேவைகளைத் தருபவனை
புறக்கணிப்பது சரியா? தயவு கூர்ந்து தனிமையிலோ, உங்கள் உற்ற நண்பருடன்
கலந்தோ சிந்தித்துப் பாருங்கள்!
வணக்கத்திற்குரியவன் அல்லாஹ் ஒருவன் மட்டுமே! அவனது செய்திகள் நமக்கு
முன்னரே உலகின் அனைத்து பாகங்களிலும் சொல்லப்பட்டு விட்டன. அல்லாஹ்
அனைத்தையும் அறிந்தவனும் ஞானமிக்கவனுமாவான். அவனது படைப்பினங்களில்
அவனுக்கு யாதொரு குழப்பமுமில்லை. அவனால் தேர்ந்தெடுக்கப்பட்ட மார்க்கம்
இஸ்லாம் ஒன்று மட்டுமே! அதன் கோட்பாடும் ஒன்றே! ஏனெனில் அவன் ஒருவனே!
அவன் பூவுலக மாந்தர்கள் கூறும் தத்துவங்களைக் காட்டிலும் மிக மேலானவன்.
இஸ்லாம் என்பது சிறந்த வாழ்க்கைத் திட்டம். அது வாழ்க்கையின் அனைத்து
துறைகளுக்கும் வழிகாட்டுகிறது. இத்தனைச் சிறப்பம்சங்களும் அல்லாஹ்வுடைய
மார்க்கமாகிய இஸ்லாத்திற்கே மட்டுமே உள்ளன. இதன் விளக்கங்கள் குர்ஆனில்
உள்ளன. அதனை திறந்த மனதுடன் படித்துப் பயன்பெறுவீர்! ஏனெனில் அல்லாஹ்வை
விட சிறந்த முறையில் தெளிவாக எடுத்துக் கூறுவோர் எவருமில்லை. குர்ஆன்
முஹம்மது(ஸல்) அவர்களுக்கு வஹீ (தூதுச் செய்தி) மூலம் அல்லாஹ்வால்
அருளப்பட்டது. அவர்கள் அதனை எழுதவில்லை. மாறாக அவர்கள் எழுதப்படிக்கத்
தெரியாத உம்மி நபியாவார்கள். குர்ஆனின் மொழிபெயர்ப்புகள் பல மொழிகளில்
நூல் விற்பனை செய்யும் கடைகளிலும் இஸ்லாமிய வழிகாட்டு மையங்களிலும்
கிடைக்கும். காலம் தாழ்த்தாது அதனை வாங்கிப்படித்து இரட்சகன்
நமக்கிடும் கட்டளைகளை அறிந்து வணக்கங்களை அல்லாஹ்க்கு மட்டும்
செலுத்துவீராக!
முடிவு உங்கள் கையில்.!
|