16- குபா
மஸ்ஜிதையும் பகீஃயையும் ஜியாரத் செய்வது விரும்பத்தக்க செயல் |
மதினாவுக்கு வருகை தருவோர் குபா மஸ்ஜிதிற்குச் சென்று தொழுவது
விரும்பத்தக்க செயலாகும்.
( كَانَ النَّبِيُّ صَلَّى اللَّهم عَلَيْهِ وَسَلَّمَ يَأْتِي
مَسْجِدَ قُبَاءٍ رَاكِبًا وَمَاشِيًا - فَيُصَلِّي فِيهِ رَكْعَتَيْنِ
)
நபி (ஸல்) அவர்கள் வாகனித்தவர்களாகவும் நடந்தவர் களாவும் குபா
மஸ்ஜிதிற்கு வருகை தருவார்கள். அங்கே இரண்டு ரகஅத்கள் தொழுவார்கள் என
இப்னு உமர் (ரலி) அறிவிக்கின்றார்கள். (நூற்கள் : புகாரீ, முஸ்லிம்)
( مَنْ تَطَهَّرَ فِي بَيْتِهِ ثُمَّ أَتَى مَسْجِدَ قُبَاءَ فَصَلَّى
فِيهِ صَلَاةً كَانَ لَهُ كَأَجْرِ عُمْرَةٍ )
ஒருவர் தன்னுடைய வீட்டில் (உளுச் செய்து) தூய்மையாகி, பிறகு குபா
மஸ்ஜிதிற்குச் சென்று அங்கே ஏதேனும் ஒரு தொழுகையைத் தொழுவாரானால்
உம்ராவிற்குரிய நன்மை போன்று அவருக்குக் கிடைக்கின்றது என நபி (ஸல்)
அவர்கள் கூறினார்கள்.
(அறிவிப்பவர்: ஸஹ்ல் -ரலி, நூல் : இப்னுமாஜா)
நபி (ஸல்) அவர்கள் பகீஃயின் கப்ர்களையும் ஷுஹதாக்களின் கப்ர்களையும்
ஹம்ஸா (ரலி) கப்ரையும் ஜியாரத் செய்து, அவர்களுக்காக துஆச்
செய்துள்ளதால் அவைகளை ஜியாரத் செய்வது சுன்னத்தாகும்.
( زُوْرُوا الْقُبُورَ فَإِنَّهَا تُذَكِّرُكُمُ الْآخِرَةَ )
கப்ர்களை ஜியாரத் செய்யுங்கள்! நிச்சயமாக அது உங்களுக்கு மறுமையை
நினைவூட்டும் என நபி (ஸல்) அவர்கள் கூறியுள்ளார்கள்.
(அறிவிப்பவர் : அபூஹுரைரா -ரலி, நூல் : இப்னுமாஜா)
கப்ர்களை ஜியாரத் செய்யும் போது இவ்வாறு -ஸலாம்- கூறவேண்டுமென நபி
(ஸல்) அவர்கள் தமது தோழர்களுக்குக் கற்றுக் கொடுத்தார்கள் :
( اَلسَّلَامُ عَلَيْكُمْ أَهْلَ الدِّيَارِ مِنَ الْمُؤْمِنِينَ
وَالْمُسْلِمِينَ وَإِنَّا إِنْ شَاءَ اللَّهُ بِكُمْ لَاحِقُونَ
نَسْأَلُ اللَّهَ لَنَاوَلَكُمُ الْعَافِيَةَ)
அஸ்ஸலாமு அலைக்கும் அஹ்லத் தியாரி மினல் முஃமினீன வல்முஸ்லிமீன்,
வஇன்னா இன்ஷா அல்லாஹு பிக்கும் லாஹிகூன், நஸ்அலுல்லாஹ லனா வலகூமுல்
ஆஃபியா
(பொருள் : முஃமின்களான, முஸ்லிம்களான கப்ர் வாசிகளே! உங்கள் மீது
-அல்லாஹ்வின்- அமைதி உண்டாவதாக! நிச்சயமாக நாங்கள் அல்லாஹ் நாடினால்
உங்களை வந்தடைவோம். மேலும் நாங்கள் எங்களுக்காகவும் உங்க ளுக்காகவும்
அல்லாஹ்விடம் நல்வாழ்வைக் கேட்கின்றோம்.)
(அறிவிப்பவர்: சுலைமான் பின் புரைதா-ரலி, நூல்: இப்னுமாஜா)
நபி (ஸல்) அவர்கள் மதீனாவில் கப்ர்களை கடந்து சென்றால் அதனை முன்னோக்கி
நின்று கொண்டு இவ்வாறு கூறுவார்கள்:
( اَلسَّلَامُ عَلَيْكُمْ يَا أَهْلَ الْقُبُورِ يَغْفِرُ اللَّهُ
لَنَا وَلَكُمْ أَنْتُمْ سَلَفُنَا وَنَحْنُ بِالْأَثَرِ )
அஸ்ஸலாமு அலைக்கும் யா அஹ்லல் குபூரி யஃபிருல்லாஹு லனா வலக்கும்,
அன்(த்)தும் ஸலஃபுனா வனஹ்னு பில்அஸர்.
(பொருள் : கப்ர் வாசிகளே உங்கள் மீது -அல்லாஹ்வின்- அமைதி உண்டாவதாக!
அல்லாஹ் எங்களையும் உங்களை யும் மன்னித்தருள்வானாக! நீங்கள் எங்களுக்கு
முன் சென்று விட்டீர்கள். நாங்கள் உங்களைத் தொடர்ந்து கொண்டுள் ளோம்)
(அறிவிப்பவர் : இப்னுஅப்பாஸ் -ரலி, நூல் : திர்மிதி)
நாம் மறுமையை நினைவு கூர்வதற்காகவும், மரணித்து விட்டவர் மீது
இரக்கப்பட்டு அவர்களுக்கு உபகாரம் செய்யும் விதமாக அவர்களுக்காக நாம்
துஆச் செய்வதற்காகவும்தான் மார்க்கம் கப்ர் ஜியாரத்தை அனுமதித்துள்ளது
என்பதை இந்த நபிமொழிகளின் மூலம் அறியமுடிகிறது.
கப்ர்களிடத்தில் பிரார்த்தனை செய்யும் நோக்கத்திலோ, அங்கு
தங்குவதற்காகவோ ஜியாரத்திற்குச் செல்வது, அவர்களிடம் தம் தேவைகளை
நிறைவேற்ற வேண்டுவது, நோய் நிவாரணம் தேடுவது, அவர்களைக் கொண்டோ அல்லது
அவர்களின் பொருட்டாலோ அல்லாஹ்விடம் பிரார்த்திப்பது போன்ற அனைத்தும்
மார்க்கம் தடுத்துள்ள பித்அத்தான ஜியாரத்தாகும். இதனை அல்லாஹ்வும்
அல்லாஹ்வின் தூதரும் அனுமதிக்கவில்லை. இவ்வாறு முன்சென்ற
நல்லோர்(நபித்தோழர்)கள் எவரும் செய்யவில்லை. மாறாக இவையனைத்தும் நபி
(ஸல்) அவர்கள் தடுத்துள்ள, வெறுத்துள்ள காரியங்களாகும்.
( فَزُورُوهَا وَلَا تَقُولُوا هُجْرًا )
கப்ர்களை ஜியாரத் செய்யுங்கள்! வெறுக்கத்தக்கவைகளைக் கூறாதீர்கள்!
என்று நபி (ஸல்) அவர்கள் கூறியுள்ளார்கள்.
(அறிவிப்பவர் : சுலைமான் பின் புரைதா-ரலி, நூல் : அஹ்மத்)
மேற்கண்டவை அனைத்தும் -மார்க்கத்தில் புதிதாக ஏற்படுத்தப்பட்டுள்ள-
பித்அத்தின் வகையைச் சார்ந் தவைகளாகும். எனினும் -அதன் விளைவுகளில்-
படித்தரங்கள் உள்ளன. கப்ருக்கருகில் நின்று கொண்டு அல்லாஹ்விடம்
பிரார்த்திப்பது, மரணித்தவரின் பெயர்களைக் கூறி, அவர்களின் பொருட்டால்
அல்லாஹ்விடம் பிரார்த்திப்பது போன்றவைகளும் பித்அத்கள்தான். என்றாலும்
அவை ஷிர்க்கின் வகையைச் சார்ந்தவையல்ல. ஆனால் மரணித்தவர் களிடம்
-நேரடியாகப்- பிரார்த்திப்பது, அவர்களிடம் உதவி தேடுவது போன்றவை
மிகப்பெரிய ஷிர்க்கின் வகையைச் சார்ந்தவைகளாகும்.
இதனைப் பற்றிய விரிவான விளக்கங்கள் முன்னர் கூறப்பட்டுள்ளன. எனவே
இவையனைத்தையும் விட்டு மிகவும் எச்சரிக்கையாக இருந்து கொள்ளுங்கள்!
அதனை விட்டும் முழுமையாக விலகிக் கொள்ளுங்கள்! உங்களுடைய இரட்சகனிடம்
பாக்கியத்தையும் நேர்வழியையும் கேளுங்கள்! அவனே கிருபையாளன், நேர்வழி
காட்டுபவன், வணக்கத் திற்குரியவன் அவனைத் தவிர வேறு யாருமில்லை. அவனைத்
தவிர வேறு இரட்சகனில்லை.
இறுதியாக, இதனையே நாம் உங்களுக்கு எடுத்துரைக்க விரும்பினோம்.
ஆரம்பமாகவும் இறுதியாகவும் அனைத்துப் புகழும் அல்லாஹ் ஒருவனுக்கே!
அவனது அடியாரும் தூதரும் படைப்பினங்களில் சிறந்தவருமான முஹம்மது (ஸல்)
அவர்கள் மீதும் அவர்களின் குடும்பத்தினர் மற்றும் தோழர்கள் மீதும்
அவர்களை நல்லவற்றில் -மறுமை நாள்வரை- பின்பற்றுவோர் அனைவரின் மீதும்
அல்லாஹ்வின் ஸலாமும் ஸலவாத்தும் நிலவட்டுமாக!
|
முந்தைய பக்கம் |
|
|
|