Index | Subscribe mailing list | Help | E-mail us

 
தமிழ் தொகுப்பு : நெல்லை இப்னு கலாம் ரசூல் மற்றும் எம். முஜிபுர் ரஹ்மான் உமரீ

 

 

முன்னுரை

அளவற்ற அருளாளனும் நிகரற்ற அன்புடையோனுமாகிய அல்லாஹ்வின் பெயரால்


 

யா அல்லாஹ்! நீயே புகழுக்குரியவன்! உன்னையே நாங்கள் வணங்குகிறோம்! உன்னிடமே உதவியும் தேடுகிறோம்! எங்களை நேரான பாதையில் வழிநடத்துவாயாக! அகிலத்தாருக்கு அருட்கொடையாக வந்த தூதர், உயிரினும் மேலான எங்கள் தலைவர் முஹம்மது (ஸல்) அவர்கள் மீதும், அவர்களின் குடும்பத்தார், தோழர்கள் மற்றும் அவர்களின் வழியை பின்பற்றுவோர் அனைவரின் மீதும் உன் அருளை என்றென்றும் பொழிந்திடுவாயாக!


1. வேதமும் விரிவுரையும்
மகத்துவமிக்க அல்லாஹ் தன்னை வணங்கி, வழிபடும் நோக்கத்திற்காகத்தான் மனிதர்களையும் ஜின்களையும் படைத்துள்ளான். வாழ்வை வணக்கமாக்கிட மனிதன் கடைபிடிக்க வேண்டிய நெறிகளை வேதங்களின் மூலமும் தூதர்களின் மூலமும் அனைத்துச் சமுதாயத்தினருக்கும் அல்லாஹ் வகுத்தளித்தான். அவ்வழியில் தோன்றிய இறுதி வேதம் அல்குர்ஆன், இறுதித் தூதர் முஹம்மது (ஸல்) அவர்கள்.


பாதுகாக்கப்பட்ட வேதத்தின் விரிவுரையாளராக அல்லாஹ் தூதரை அறிமுகப்படுத்தினான்.
 

﴿ وَأَنْزَلْنَا إِلَيْكَ الذِّكْرَ لَتُبَيِّنَ لِلنَّاسِ مَا نُزِّلَ إِلَيْهِمْ وَلَعَلَّهُمْ يَتَفَكَّرُوْنَ ﴾

மனிதர்களுக்கு அருளப்பட்டதை நீர் அவர்களுக்கு தெளிவுபடுத்துவதற்காகவும் அவர்கள் சிந்திப்பதற்காகவும் (நபியே!) உமக்கு இவ்வேதத்தை நாம் அருளினோம். (அல்குர்ஆன் 16:44)


வேதவரிகளையும் தூதர் மொழிகளையும் பின்பற்றுவதில்தான் ஈருலக வெற்றி இருக்கிறது என்றும் வேதத்தில் அறிவிப்புச் செய்தான்.
 

﴿ وَالَّذِيْنَ آمَنُوْا وَعَمِلُوا الصَّالِحَاتِ وَآمَنُوْا بِمَا نُزِّلَ عَلَى مُحَمَّدٍ وَهُوَ الْحَقُّ مِن رَّبِّهِمْ كَفَّرَ عَنْهُمْ سَيِّئَاتِهِمْ وَأَصْلَحَ بَالَهُمْ

எவர்கள் ஈமான் கொண்டு, ஸாலிஹான (நல்ல) அமல்கள் செய்து, முஹம்மது மீது இறக்கி அருளப்பட்டதை அது அவர்களுடைய இறைவனிடமிருந்து வந்துள்ள உண்மை என்று நம்பிக்கை கொள்கிறார்களோ, அவர்களுடைய தீமைகளை அவர்களை விட்டும் போக்கி, அவர்களுடைய நிலையையும் (அல்லாஹ்) சீராக்குகின்றான். (அல்குர்ஆன் 47:2)


எனக்கு வஹியாக அறிவிக்கப்பட்டது அல்குர்ஆன் மட்டுமல்ல! நான் கூறும் கட்டளைகளும்தான்! எனவே அல்குர்ஆனுடன் என் கூற்றையும் இணைத்தே பின்பற்ற வேண்டும் என நபி (ஸல்) அவர்களும் வலியுறுத்திக் கூறியுள்ளார்கள்.
 

(عَنْ الْمِقْدَامِ بْنِ مَعْدِيكَرِبَ الْكِنْدِيِّ أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ يُوشِكُ الرَّجُلُ مُتَّكِئًا عَلَى أَرِيكَتِهِ يُحَدَّثُ بِحَدِيثٍ مِنْ حَدِيثِي فَيَقُولُ بَيْنَنَا وَبَيْنَكُمْ كِتَابُ اللَّهِ عَزَّ وَجَلَّ مَا وَجَدْنَا فِيهِ مِنْ حَلَالٍ اسْتَحْلَلْنَاهُ وَمَا وَجَدْنَا فِيهِ مِنْ حَرَامٍ حَرَّمْنَاهُ أَلَّا وَإِنَّ مَا حَرَّمَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ مِثْلُ مَا حَرَّمَ اللَّهُ )

என்னுடைய ஹதீஸ்களில் ஏதேனும் ஒரு ஹதீஸ் அறிவிக்கப்படும். அப்போது ஒருவன் அறியணையில் சாய்ந்தவனாக, நமக்கிடையே அல்லாஹ்வுடைய வேதம் இருக்கிறது, அதில் நாம் காணும் அனுமதியை அனுமதியாக எடுத்துக் கொள்வோம். அதில் நாம் காணும் தடையை விட்டும் தவிர்ந்து கொள்வோம் என்று கூறும் நிலை விரைவில் ஏற்படலாம். அறிந்து கொள்ளுங்கள்! நிச்சயமாக அல்லாஹ் தடை செய்துள்ளதைப் போன்று அல்லாஹ்வுடைய தூதரும் தடை செய்துள்ளார்கள்.
(நபிமொழி, அறிவிப்பவர் : மிக்தாம் இப்னு மஃதீ (ரலி) நூல்: இப்னுமாஜா 12)


( أَلَا إِنِّي أُوتِيتُ الْكِتَابَ وَمِثْلَهُ مَعَهُ )

அறிந்து கொள்ளுங்கள்! நிச்சயமாக எனக்கு வேதமும் அதனுடன் அது போன்றதும் (ஹதீஸும்) கொடுக்கப்பட்டுள்ளது. (நபிமொழி, நூல் : அபூதாவூத் 3988)


2. நபிமொழிக்காக உழைத்த நல்லோர்
இதற்கு பிறகு வேறு இறைவேதமோ, இறைத் தூதரோ வரப்போவதில்லை, எனவே இதனை மக்களுக்குக் கொண்டு சேர்ப்பது இன்றியமையாத கடமை என்பதை உணர்ந்த மார்க்க அறிஞர்கள் மிகத்துரிதமாக செயலாற்றினர். இப்பணியில் அரபு மக்களுடன் அரபி அல்லாதவர்களும் கைகோர்த்தனர். அரபி அல்லாதவர்களே இதில் முன்னோடிகளாவும் திகழ்ந்துள்ளார்கள். அவர்கள் இப்பணிக்காகவே அரபி மொழியை கற்றார்கள். அதில் பாண்டியத்துவம் பெற்று மார்க்கத் தொன்றாற்றியுள்ளார்கள். இமாம் புகாரீ (ரஹ்) அவர்கள் மற்றும் நம் சமகாலத்தில் வாழ்ந்து மரணித்த ஷைக் முஹம்மது நாஸிருத்தீன் அல்பானி (ரஹ்) ஆகியோர்கூட அரபி அல்லாதவர்களே என்பது குறிப்பிடத்தக்கது.


3. பின்னடைவில் தமிழுலகம்
ஏனோ தெரியவில்லை! தமிழக மார்க்க அறிஞர்கள் இம்முயற்சியில் பின்தங்கிவிட்டனர். ஆயிரம் வருடங்களுக்கு முன்பே இஸ்லாம் இந்தியாவின் கடலோரப் பகுதிகளில் குடிபுகுந்தது வரலாற்று கூறும் உண்மை. ஆனால் தமிழ் முஸ்லிம்களுக்கு தாய் மொழியில் அல்குர்ஆன் மொழியாக்கம் கொடுக்கப்பட்டது எப்போது? தமிழுலகில் முதன்முதலாக வெளிவந்த தர்ஜுமத்துல் குர்ஆன் மதிப்பிற்குரிய அறிஞர் அ. கா அப்துல் ஹமீது பாக்கவி அவர்களின் வெளியீடு என்றே கருதுகிறேன். 1943-ல் மொழி பெயர்ப்பு நிறைவு செய்யப்பட்டு, 1949 மே மாதம் முதல் தேதி, 1368 ரஜப் பிறை 2-ம் நாள் அன்று வெளிவந்தது.


(தர்ஜுமத்துல் குர்ஆன், 1978 நான்காம் பதிப்பு, அறிமுக உரையிலிருந்து)
தமிழில் அல்குர்ஆனின் மொழியாக்கம் வெளிவரவே இவ்வளவு கால தாமதம் என்றால், பல கிரந்தங்களில் பதிவு செய்யப்பட்டிருக்கும் இலட்சக் கணக்கான நபிமொழிகள் தமிழ் சமுதாயத்தை முழுமையாக எப்போது வந்த சேரப் போகிறதோ! அல்லாஹ்வுக்குத்தான் தெரியும்!


4. அனாச்சார ஊடுருவல்
தமிழக மக்களிடையே மார்க்கத்திற்கு முரணான கொள்கைகள், கோட்பாடுகள், சடங்குகள், சம்பிரதாயங்கள் போன்றவை ஊடுறுவக் காரணமாக இருந்ததும் இந்த மொழியாக்கப் பின்னடைவுதான்! மார்க்கத்தின் மீளுமிடம் அல்குர்ஆனும் சுன்னாவும் என்ற நிலை மாறி, மார்க்கத்தின் மீளுமிடம் மார்க்க அறிஞர்களானார்கள்?!. அவர்களில் மிகக் குறைந்த எண்ணிக்கையினரைத் தவிர, பெரும்பாலோர் அல்லாஹ்வுடைய அமாநிதத்தை முறையாக மக்களிடம் ஒப்படைக்கத் தவறிவிட்டனர்.
-ஷிர்க்- அல்லாஹ்வுக்கு இணைவைக்கும் கொள்கைகளும் -பித்அத்- மார்க்கத்தின் பெயரால் அரங்கேற்றப்பட்ட நூதனச் செயல்களும் பள்ளியினுள் நிகழ்த்தப்படும் ஜும்ஆ உரையிலும் கலந்திருந்தது. அவர்களின் சில கூற்றுகள் பொதுமக்களின் உள்ளத்தில்கூட நெருடலை ஏற்படுத்தின. இது சரியாகத் தெரியவில்லையே! என்றெல்லாம் நினைத்த பொதுமக்களும் உள்ளனர். ஆனால் அல்குர்ஆனும் ஹதீஸ் நூல்களும் அரபியில் இருப்பதால் மீள்பார்வைக்கு வழியில்லாத பொதுமக்கள் மார்க்க போதகர்களின்?! கையில் சிக்கித் தவித்தனர். இன்றும் அந்நிலை நீடித்துக் கொண்டுதான் இருக்கிறது.


5. எழுச்சியை நோக்கி
இருப்பினும் நாம் வாழும் இக்காலகட்டத்தை எழுச்சி காலம் என்றுதான் கூறவேண்டும். பல நூறு வருடங்களாக முடங்கிக் கிடந்த மொழியாக்கப்பணிகள் அல்லாஹ்வின் பெருங்கிருபையால் செயல்படத் துவங்கியுள்ளன. ஸஹீஹுல் புகாரீ, ரியாலுஸ் ஸாலிஹீன் போன்ற ஹதீஸ் நூல்கள் தமிழில் வெளிவந்துள்ளதை இதற்கு உதாரணமாகக் கூறலாம். மார்க்க ஆதார நூல்கள் பொதுமக்களின் கையில் கிடைத்துக் கொண்டிருக்க, மற்றொரு புறம் மார்க்க அறிஞர்களிடமும் மாற்றங்கள் ஏற்பட்டுக் கொண்டிருக்கின்றன. இன்று ஜும்ஆ உரைகளிலும் பிற சொற்பொழிவுகளிலும் ஆதாரம் கூறப்படுகிறது. எல்லாப் புகழும் அல்லாஹ்வுக்கே! அனைவருக்கும் நேர்வழி காட்ட அல்லாஹ் போதுமானவன்.
அல்லாஹ்வின் வேதமான அல்குர்ஆனையும் அதன் விரிவுரையான ஸுன்னாவையும் அதன் தூய வடிவில் மக்களிடம் கொண்டு சேர்ப்பதுதான் சமூக முன்னேற்றத்திற்கும் எழுச்சிக்கும் ஒரே வழி! அவ்வழியில் எங்களையும் இணைத்துக் கொள்வதற்காக தொடங்கியுள்ள சிறு முயற்சிதான் அல்லுஃலுவு வல்மர்ஜான் எனும் ஹதீஸ் நூலின் மொழியாக்கப் பணி.

இரண்டுவகை ஹதீஸ் தொகுப்புகள்
ஹதீஸ் கிரந்தங்களை தொகுப்பின் அடிப்படையில் இரண்டு வகைகளாகப் பிரிக்கலாம்
1- ஸஹீஹுல் புகாரீ, ஸஹீஹ் முஸ்லிம், ஜாமிவுத் திர்மிதி, முஸ்னத் அஹ்மத் இன்னும் இதுபோன்ற மூல கிரந்தங்கள்.
2- மூல கிரந்தங்களிpருந்து தொகுக்கப்பட்ட ரியாலுஸ் ஸாலிஹீன், மிஷ்காத்துல் மஸாபீஹ் போன்ற தொகுப்பு நூல்கள்.

இதில் அல்லுஃலுவு வல்மர்ஜான் இரண்டாம் வகையைச் சார்ந்தது. இது ஸஹீஹுல் புகாரீ மற்றும் ஸஹீஹ் முஸ்லிம் ஆகிய இரண்டு நூல்களிலிருந்தும் தொகுக்கப்பட்ட நூலாகும். 54 தலைப்புகளில் பல்வேறு உப தலைப்புகளுடன் இம்மை, மறுமை வெற்றிக்கு அத்தியாவசியமான 1906 நபிமொழிகளை அழகாக தொகுத்து வழங்கியிருக்கிறார் நூலாசிரியர் எகிப்தைச் சார்ந்த முஹம்மது ஃபுவாத் அப்துல் பாகிஃ அவர்கள். அல்லாஹ் அவர்களின் இச்சேவையை ஏற்றுக் கொள்வானாக! மறுமையில் ஜன்னத்துல் ஃபிர்தவ்ஸின் வாரிசுதாரராக்குவானாக! ஆமீன்.

அல்லுஃலுவு வல்மர்ஜான் என்று பெயரிட்டு வழங்கியிருக்கும் இந்நபிமொழிக் களஞ்சியம் உண்மையிலேயே ஆழ்கடல் அணிகலன்களாகிய முத்து பவளங்களைக் காட்டிலும் மிக மிக பெருமதிப்புடையவை. ஏறத்தாழ 70 ஆண்டுகளுக்கு முன்பு ஆசிரியரால் தொகுக்கப்பட்ட இந்நபிமொழிக் களஞ்சியத்தை தமிழில் அறிமுகப் படுத்துவதில் மிக்க மகிழ்வடைகிறோம்.

ஆதாரப் பூர்வமான அனைத்து ஹதீஸ்களும் -அது எந்த கிரந்தத்தில் இடம்பெற்றிருந்தாலும்- ஏற்றுக் கொள்ளப்பட வேண்டிய, நடைமுறைப்படுத்த வேண்டியவைகளாகும். இருப்பினும் ஸஹீஹான ஹதீஸ்களுக்கு மத்தியில் அவைகளின் தரத்திலும் வலிமையிலும் சில படித்தரங்களை ஹதீஸ்கலை வல்லுனர்கள் ஏற்படுத்தியுள்ளனர்.

ஹதீஸ்கலை வல்லுனர்களில் ஒருவரான இமாம் இப்னு ஸலாஹ்(ரஹ்) அவர்கள் ஸஹீஹான ஹதீஸ்களை ஏழு வகையாகப் பிரித்துள்ளார்கள்.

முதலாம் வகை - புகாரீ, முஸ்லிம் ஆகிய இரண்டிலும் இடம் பெற்ற ஹதீஸ்.
இரண்டாம் வகை - புகாரீயில் மட்டும் இடம் பெற்ற ஹதீஸ்.
மூன்றாம் வகை - முஸ்லிமில் மட்டும் இடம் பெற்ற ஹதீஸ்.
நான்காம் வகை - புகாரீ, முஸ்லிம் இரண்டிலும் இடம் பெறாவிட்டாலும் அவர்கள் இருவரும் கடைபிடிக்கும் நிபந்தனைகளுக்கு உட்பட்ட ஹதீஸ்.
ஐந்தாம் வகை - புகாரீயில் இடம் பெறாவிட்டாலும் புகாரீயின் நிபந்தனைக்கு உட்பட்ட ஹதீஸ்.
ஆறாம் வகை - முஸ்லிமில் இடம் பெறாவிட்டாலும் முஸ்லிமின் நிபந்தனைக்கு உட்பட்ட ஹதீஸ்.
ஏழாம் வகை - புகாரீ, முஸ்லிமில் இடம் பெறாத, இரண்டின் நிபந்தனைகளுக்கும் உட்படாத, பிற ஹதீஸ் கிரந்தங்களில் இடம் பெற்றுள்ள ஸஹீஹான ஹதீஸ்.

முத்தஃபக்குன் அலைஹி
ஒரே ஹதீஸ் புகாரீயிலும் முஸ்லிமிலும் இடம் பெற்றிருந்தால் அது ஆதாரப்பூர்வமான ஹதீஸ்களின் ஏழு வகைகளில் முதல் தரத்தை அடைகிறது. இவ்வகை ஹதீஸ்களை முத்தஃபக்குன் அலைஹி என ஹதீஸ்கலையில் குறிப்பிடுவர். இது ஆதாரப் பூர்வமான ஹதீஸ் என்பதில் இமாம் புகாரீ அவர்களும் இமாம் முஸ்லிம் அவர்களும் ஒன்றுபட்டுள்ளனர் என்பது அதன் பொருள்.

முத்தஃபக்குன் அலைஹி என்ற ஆதாரப் பூர்வமான நபிமொழிகளில் முதல்தர வகையை உள்ளடக்கிய நபிமொழிக் களஞ்சியம்தான் அல்லுஃலுவு வல்மர்ஜான். அல்லாஹ்வின் அருள்மறை அல்குர்ஆனுக்கு அடுத்த உயர்ந்த தரத்தில் போற்றப்படும் ஸஹீஹுல் புகாரீ, ஸஹீஹ் முஸ்லிம் ஆகிய இரண்டிலும் இடம் பெற்றுள்ள ஹதீஸ்களின் தொகுப்பு நூல்தான் இது.

இந்நூலில் ஸஹீஹுல் புகாரீயின் ஹதீஸ்களின் வாசகங்கள்தான் இடம் பெற்றுள்ளன. அதே ஹதீஸ் ஸஹீஹ் முஸ்லிமில் இடம் பெற்றுள்ள ஹதீஸ் எண்ணை மட்டும் குறிப்பிட்டுள்ளோம். இரண்டு நூல்களிலும் இடம் பெற்ற ஒரே ஹதீஸின் வாசக அமைப்பு சற்று மாறியிருக்கலாம், அறிவிப்பாளர் மாறுபடலாம். ஆனால் கூறப்படும் செய்திகள் இரண்டும் ஒன்றாக இருப்பதை காணலாம்.

இந்நூலில் இடம் பெற்றுள்ள நபிமொழிகளிலிருந்து ஏதேனும் சந்தேகம் ஏற்பட்டால் அதனை எங்களுக்கு தெரியப்படுத்துங்கள்! உடனுக்குடன் பதில்தர இயலாவிட்டாலும் எங்களால் முடிந்தவரை விரைவாக பதில் தர முயற்சிக்கின்றோம். இன்ஷா அல்லாஹ்! தங்களின் மிகமுக்கியக் கேள்விகளுக்குரிய பதில்கள் -வருங்காலங்களில்- ஹதீஸ்களின் அடிக்குறிப்புகளாகவும் இணைக்கப்பட வாய்ப்புகள் உள்ளன என்பதையும் தெரிவித்துக் கொள்கிறோம்.

நன்றிகள்
இப்பணிக்கு சென்னை ரஹ்மத் அறக்கட்டளையின் வெளியீடான ஸஹீஹுல் புகாரீயும் ஸவூதி அரேபியா (ரியாத்) தாருஸ் ஸலாம் வெளியீடான அல்லுஃலுவு வல்மர்ஜான் ஆங்கில மொழியாக்கமும் எங்களுக்கு பெரிதும் உதவின. தமிழகத்தைச் சார்ந்த அன்புச் சகோதரர் மன்சூர் (நிஹாத் அரப் - ஜித்தா) அவர்கள் கணிப்பொறிக் கோர்வை செய்து தந்து உதவினார். தமிழ்நாடு, பண்ருட்டியைச் சார்ந்த அன்புச் சகோதரர். இ. அப்துல் ஹமீது அவர்கள் தமிழ் பிழைதிருத்தம் செய்தும், பல ஆலோசனைகள் வழங்கியும் உதவினார். மதீனா பல்கலைகழகத்தில் பட்டம் பெற்ற இலங்கையைச் சார்ந்த மதிப்பிற்குரிய மார்க்க அறிஞர். கே. எல். எம் இப்ராஹீம் மதனீ (ஜித்தா) அவர்கள் மொழி பெயர்ப்பை மேற்பார்வையிட்டும் தகுந்த ஆலோசனைகளைக் கூறியும் உதவினார்கள். மேலும் பல மார்க்க ஆர்வலர்கள் இப்பணி சிறக்க உரிய ஆலோசனைகள் வழங்கி, எங்களை ஊக்குவித்தனர். இப்பணியை மக்களிடம் கொண்டு சேர்க்க இஸ்லாம்கல்வி.காம் முன்வந்துள்ளது.

அல்லாஹ் இவர்கள் அனைவருக்கும் இம்மையிலும் மறுமையிலும் நற்கூலி வழங்குவானாக! மனத்தூய்மையுடன் செய்யும் பணியாக அல்லாஹ் இதனை அங்கீகரிப்பானாக! மறுமையில் நபிமார்களுடனும் நல்லோர்களுடனும் ஜன்னத்துல் ஃபிர்தவ்ஸில் இணைந்து வாழ இதனை காரணமாக ஆக்கியருள்வானாக! இப்பணி முழுமையாக நிறைவடையவும் இதுபோன்ற மேலும்பல சேவைகள் செய்யவும் வாய்பளிப்பானாக! ஆமீன்.

வேண்டுகோள்
இம்முயற்சியில் நிறைவிருப்பின் எல்லாப் புகழும் அல்லாஹ்வுக்கே! குறைகளிருப்பின் அது நாங்கள் செய்தவையே! சுட்டிகாட்டினால் தாட்சணியமின்றி சரிசெய்துக் கொள்வோம்! இன்ஷா அல்லாஹ்!


 

ஈமான் (இறைநம்பிக்கை)

கேள்விகள் :
1- ஹதீஸ் அல்குர்ஆனின் விரிவுரையாகும் என்பதற்கு அல்குர்ஆனிலிருந்தும் ஹதீஸிலிருந்தும் ஆதாரம் கூறுக?
2- அரபி அல்லாதவர்கள் மார்க்கத்திற்கு ஆற்றிய சேவைகள் யாது?
3- அல்குர்ஆனின் தமிழ் மொழியாக்கத்தை முதலாவது செய்தது யார்? எப்போது?

4- ஹதீஸ் கிரந்தங்கள் தொகுப்பின் அடிப்படையில் எத்தனை வகை?
5- அல்லுஃலுவு வல்மர்ஜான் எந்த வகை தொகுப்பைச் சார்ந்தது?
6- அல்லுஃலுவு வல்மர்ஜானை தொகுத்தவர் யார்?
7- அல்லுஃலுவு வல்மர்ஜானில் இடம்பெற்றுள்ள தலைப்புகள் எத்தனை? ஹதீஸ்கள் எத்தனை?
8- முத்தஃபக்குன் அலைஹி என்றால் என்ன?