பெண்கள் பிரிவில் இரண்டாம் பரிசு பெற்ற கட்டுரை
நர்கீஸ் பானு
W/o அப்துல் நாசர், Popular Readymade, Jeddah
|
முன்னுரை:
உலகில் பல மதங்கள் இருந்தாலும் அல்லாஹ்வால் ஏற்றுக் கொள்ளப்பட்ட ஒரே
மார்க்கம் இஸ்லாம் மார்க்கம் மட்டுமே. அல்லாஹ் தன்னுடைய மார்க்கத்தை
வேதத்தின் மூலமும் தூதரின்மூலமும் முழுமையாக்கி வைத்துள்ளான்.
இஸ்லாத்தை முழுமையாக பின்பற்றும் போதுதான் இறைவன் நமக்கு வாக்களித்த
சுவனத்தை அடைய முடியும். அதனால் முஸ்லிம்களாக வாழக்கூடிய நாம்
இஸ்லாத்தின் வாழ்க்கை நெறியைப் பின்பற்றி இஸ்லாத்தின் அனைத்து
கொள்கைகளையும், சட்டங்களையும், ஒழுக்கங்களையும் பேணி நடக்கவேண்டும்.
குர்ஆன் ஹதீஸ் ஒளியில் பர்தாவிற்கான ஆதாரங்கள்:
அல்லாஹ்வும் அவனுடைய தூதரும் ஒரு காரியத்தைப் பற்றி
கட்டளையிட்டுவிட்டால் அவர்களுடைய அக்காரியத்தில் வேறு அபிப்பிராயம்
கொள்வதற்கு ஈமான் கொண்டுள்ள எந்த ஆணுக்கோ, பெண்ணுக்கோ உரிமையில்லை.
ஆகவே அல்லாஹ்வுக்கும் அவனுடைய தூதருக்கும் எவரேனும் மாறு செய்தால்
நிச்சயமாக அவர்கள் பகிரங்கமான வழிகேட்டிலேயே இருக்கிறார்கள்.
(அல்குர்ஆன் 33:36)
என்று இறைவன் கூறியுள்ளான். இப்படி அல்லாஹ்வும் அவனுடைய தூதரும் இட்ட
கட்டளைகளில் ஒன்று தான் ஹிஜாப் என்கின்ற பர்தா. பர்தாவைப்பற்றி அல்லாஹ்
தன்திருமறையில் பல இடங்களில் கூறியுள்ளான்.
இதில் அல்லாஹ் பர்தாவைப் பற்றியும் அதனுடன்
தொடர்புடைய ஏழு சட்டங்களையும் கூறியுள்ளான்.
1) முஃமினான பெண்கள் தங்கள் பார்வைகளைத் தாழ்த்திக் கொள்ளவேண்டும். 2) தங்கள் வெட்கத்தலங்களை பேணிக்காத்துக் கொள்ள வேண்டும். 3) சாதாரணமாக வெளியில் தெரியக் கூடியதைத் தவிர(முகம்,கை) மற்ற
அலங்காரங்களை வெளியில் காட்டக் கூடாது. 4) முந்தானைகளால் தங்கள் மார்புகளை மறைத்துக் கொள்ளவேண்டும். 5)
தங்கள் அலக்காரம் வெளிப்படும் வகையில் பூமியில் கால்களை தட்டி
நடக்கக் கூடாது. 6) இதில் ஏதேனும் தவறு ஏற்பட்டால் அல்லாஹ்விடம் பாவமன்னிப்பு
தேடவேண்டும். 7) முஃமினான பெண்கள் தங்கள் அலங்காரங்களை வெளிக்காட்ட
அனுமதிக்கப்பட்டவர்கள்:
1. தம் கணவர்கள், 2. தந்தையர்கள். 3. கணவனின் தந்தை. 4. தம் மகன்கள்.
5. கணவரின் மகன்கள். 6. தம் சகோதரர்கள். 7. தம் சகோதரர்களின்
புதல்வர்கள். 8. சகோதரிகளின் புதல்வர்கள். 9. முஸ்லிம் பெண்கள். 10.
தங்களது அடிமைகள். 11. பெண்களை விரும்ப முடியாத அளவு வயதான ஆண்கள். 12.
பெண்களின் மறைவான அங்கங்களைப் பற்றி அறியாத சிறுவர்கள்.
என்று இறைவன் பர்தாவைப்பற்றி கட்டளை இட்டுள்ளான். மேலும் அந்நிய ஆண்கள்
முன், நாம் பர்தா அணிந்தே ஆகவேண்டும் என்பதற்கு பின்வரும் நபிமொழியும்
சான்றாக உள்ளது.
ஆயிஷா(ரலி) அவர்கள் அறிவிக்கின்றார்கள்: நான் நபி(ஸல்) அவர்களுடன்
ஹஜ்ஜிக்கு வரும்போது இஹ்ராமுக்காக நாங்கள் முகத்தை திறந்து
வைத்திருந்தோம். வியாபார கூட்டத்தினர் எங்களை கடந்து செல்லும்போது
நாங்கள் முகத்தை மூடிக் கொள்வோம். ஆதாரம்: புகாரி
இவற்றின் மூலம் பர்தாவின் அவசியத்தை நம்மால் உணரமுடிகிறது.
பர்தா அணியாவிட்டால் ஏற்படும் விபரீதங்கள்:
பெண்கள் பர்தா அணிந்துதான் ஆகவேண்டும் என இஸ்லாம் கட்டளையிட காரணம்
பெண்களின் சுதந்திரத்தை பறிக்கவோ, பெண்களை கொடுமைப்படுத்தவோ இல்லை.
இதற்கான காரணத்தை அல்லாஹ் தன் திருமறையில் கூறுகிறான்.
நபியே! உம்முடைய மனைவிகள், உம்முடைய புதல்விகள்
மற்றும் நம்பிக்கையாளர்களின் மனைவிகள் ஆகியோரிடம் கூறும், அவர்கள்
(கண்ணியமானவர்கள் என) அறிந்து கொள்வதற்கும், தொல்லைக்கு ஆளாகாமல்
இருப்பதற்கும் இதுவே ஏற்ற முறையாகும்.
(அல்குர்ஆன் 33:59)
இஸ்லாம் மனிதகுலத்திற்கு எதுவெல்லாம் நன்மைத் தருமோ அவைகளை
கடமையாகவும். தனிமனிதனுக்கும், சமூகத்திற்கும் தீங்கு ஏற்படுத்தும்
செயல்களை குற்றமாகவும் கூறியுள்ளது. ஒரு செயல் இஸ்லாத்திற்கு எதிரானது
என்றால் அது மனிதகுலத்திற்கு எதிரானது. அந்த வகையில் பெண்களை பர்தா
அணியுமாறு கட்டளை இட்ட இறைவன் ஆண், பெண் இருவருமே தங்கள் பார்வையை
தாழ்த்திக் கொள்ளுமாறு கட்டளையிட்டுள்ளான். ஏனென்றால் பார்வைதான் பல
இழிவான செயல்களுக்கு காரணமாக உள்ளது.
ஜரீர்(ரலி) அவர்கள் நபி(ஸல்)அவர்களிடம் யதார்த்தமாக பார்ப்பதைப்பற்றி
கேட்டதற்கு நபியவர்கள் பார்வையை திருப்பிக் கொள்ளுமாறு
கட்டளையிட்டார்கள். ஆதாரம்: முஸ்லிம்
பெண்கள் சுதந்திரம் என்ற பெயரில் ஆண்களுடன் அத்துமீறி பழகுவதும்
அவர்களுடன் அரைகுறை ஆடையுடனும், மெல்லிய கட்டையான ஆடைகளுடனும் ஊர்
சுற்றுவதும் சகஜமாகப் போய்விட்டது. இதனால் இதுபோன்ற பெண்களை ஆண்கள்
ஈவ்டீசிங் என்ற பெயரில் கிண்டல் கேலி செய்வதும் பெருகிவிட்டது.
இவையெல்லாம் கடைசியில் விபரீதமாகப் போய் உயிரைப்பறிக்கும் அளவுக்கு
போய் முடிந்துவிடுகிறது. சில வருடங்களுக்கு முன்பு சென்னை எத்திராஜ்
கல்லூரி மாணவி சரிகாஷா என்ற பெண்ணை பல ஆண்கள் சேர்ந்து கேளி செய்து
ஆட்டோவிலிருந்து கீழே தள்ளியதில் அந்த பெண் தலையில் அடிபட்டு நினைவு திரும்பாமலேயே
மரணம் அடைந்தாள்.
அதே போல் பாண்டிச்சேரியில் பார்வதிஷா என்ற பெண்ணை அவளின் கணவனின்
சகோதரன் அண்ணியின் அழகில் மயங்கி சூழ்ச்சிசெய்து அவளை
கற்பழித்துவிட்டான். இதுபோல் இன்னும் எத்தனை எத்தனையே சம்பவங்கள்
நெஞ்சைப் பிழிவதுப்போல் நாள்தோறும் நடந்து கொண்டுதான் இருக்கின்றன.
இதற்கெல்லாம் பெண்கள் தங்கள் அழகை வெளிப்படுத்தியும் மறைக்கவேண்டிய
இடங்களை மறைக்காமல் இருப்பதுமே முக்கியகாரணம். இது போன்ற
ஆபத்துகளிலிருந்து பெண்கள் பாதுகாக்கப்பட வேண்டும் என்பதற்காக பர்தாவை
கட்டளையிட்ட இறைவன் நாம் ஆண்களிடம் பேசும் நளினமான பேச்சியினால் கூட
ஆபத்து என கூறியுள்ளான்.
அல்லாஹ் தான் திருமறையில் 33:32 தில் கூறுகின்றான்.
நபியின் மனைவிகளே! அந்நியருடன் நடத்தும் பேச்சில் நளினம் காட்டாதீர்கள்
ஏனென்றால் யார் உள்ளத்தில் நோய் உள்ளதோ அவன் தவறான காரியத்தில் ஆசை
கொள்வான். இன்னும் நல்ல பேச்சையே பேசுங்கள்.
பெண்களை குழப்பவாதிகளிடம் இருந்தும் தீய எண்ணம் கொண்டவர்களிடம்
இருந்தும் பெண்களை பாதுகாக்கத்தான் அல்லாஹ் பர்தாவை கடமையாக்கினான்.
பர்தா சுதந்திரத்தை பறிக்கவுமில்லை, பாதிக்கவுமில்லை, எங்கள்
முன்னேற்றத்திற்கு எந்த தடையுமில்லை என்று வாழ்ந்து காட்டியவர்கள்:
பர்தா அணிவது மடமைத்தனம் பெண் சுதந்திரத்திற்கு எதிரானது என்று
இஸ்லாத்தின் விரோதிகள் கூறிவருகின்றனர். ஆனால் இஸ்லாத்தின்
உன்னதத்தையும், பர்தாவின் அவசியத்தையும் உணரும் பெண்கள் தங்களுக்கு
எத்தனை தடைகள் வந்தாலும் தம் லட்சியத்தில் உறுதியாக உள்ளனர் என்பதை
பின்வரும் பெண்களின் செயல்களிலிருந்து நம்மால் உணர முடிகிறது.
பிரபல கேரள பெண் எழுத்தாளர் கமலா சுரைய்யா இஸ்லாத்தை ஏற்றபின்
பத்திரிக்கையாளர்களுக்கு அளித்த பேட்டிகளில் பர்தா அணிவதை தனக்கு
பாதுகாப்பாக உணர்வதாக கூறியுள்ளார். இன்னும் அவர் பர்தாவைப் பேணக்
கூடியவராகவும் சிறந்த எழுத்தாளராகவும் இருந்து தன்பணிகளை செய்து
வருகிறார்.
இன்னும் அலுவலகங்கள், பள்ளி கல்லூரிகளுக்குச் செல்லும் இஸ்லாமிய
பெண்கள், மாணவிகள் என இஸ்லாத்தை சரியாக பின்பற்றும் அனைத்து பெண்களும்
பர்தாவை ஒரு பாரமாக நினைப்பதில்லை. இன்று நம்மூர்களில்
பல இஸ்லாமிய
பெண்கள் பள்ளி, கல்லூரிகளுக்கு இருச்சக்கர வாகனங்களில் பர்தாவை
அணிந்து கொண்டுதான் செல்கின்றனர்.
ஜெர்மனி நாட்டில் 31 வயதாகிய பெரெஸ்டா லூடின் என்ற முஸ்லிம் ஆசிரியை
இஸ்லாமிய முறைப்படி பர்தா அணிந்து பள்ளிக்கு வருவதற்கு அனுமதி
மறுத்ததோடு அதனை காரணம்காட்டி அந்தப் பள்ளி லூடினுக்கு வேளைதரவும்
மறுத்து விட்டது. இதனால் லூடின் அந்தப்பள்ளியின் மீது வழக்கு
தொடர்ந்து அதில் வெற்றியும் பெற்றுள்ளார். இந்த நேரத்தில் அந்தப்
பெண்மணியின் உறுதியையும் இஸ்லாத்தின் மீதுள்ள பற்றையும் பார்க்கும்
போது பெருமிதமாக உள்ளது. பர்தா அணிந்தால் வேளை இல்லை என்று சொன்னவுடன்
பர்தாவை தூரவீசிவிட்டு தனக்கு வேளைதான் முக்கியம் என்று சென்றுவிடாமல்
பர்தாவிற்காகப் போராடி பர்தாவுடனே பள்ளிக்குச் செல்ல அனுமதியும்
வாங்கி வெற்றி பெற்று, பர்தா தன் சுதந்திரத்தை பறிக்கவுமில்லை, தன்
முன்னேற்றத்திற்கு எந்த தடையுமில்லை என நிருபித்து காட்டியுள்ளார்
(ஒற்றுமை 16.10.2003)
இதைப் போல நெல்லை மாவட்டம் களக்காட்டைச் சுற்றியுள்ள கிராமங்களில்
டாக்டர் முஹம்மது பகத்சிங் என்பவரது தலைமையில் இஸ்லாத்தை ஏற்ற
25 குடும்பங்களில் உள்ள பெண்கள்
"பர்தா அணிவதை பாக்கியமாக
கருதுகிறோம்" என கூறியுள்ளனர். (மக்கள் உரிமை
- ஜுலை-2-2004)
பர்தாவின் அவசியத்தை உணரும் மேற்கத்தியர்கள்:
மேற்கத்திய உலகம் எல்லாவகையான அறிவியல் வளங்களையும் கல்வி
முன்னேற்றத்தையும் பெற்றிருந்த போதிலும் நிம்மதியையும்
சந்தோஷத்தையும் நிலைபெறச் செய்யும் குடும்பச்சூழலை இழந்து தவிக்கிறது.
அங்கே குடும்ப அமைதிகள் தொலைந்து காணப்படுகின்றன. இத்தகைய
சூழ்நிலையில் இஸ்லாத்தை பின்பற்றுவது தான் இதற்கு சரியான தீர்வு என
உணர்ந்து இஸ்லாத்தின் ஒழுக்கங்களை பேணும் முஸ்லிம்கள் மேலை நாடுகளில்
பெருகிவருகின்றனர்.
பர்தா பெண்களின் கண்ணியம் காக்கும் கவசம் என்பதை மேலை நாட்டவர்கள்
உணர்ந்து வருகின்றனர் என்பதற்கு தற்போது பிரிட்டனில் உருவாகி
இருக்கும் ஹிஜாப் பாதுகாப்பு சங்கம் உதாரணமாக உள்ளது. உலகம் முழுவதும்
உள்ள முஸ்லிம் பெண்களின் முக்காடு அணியும் உரிமையை பாதுகாப்பதற்காக
இந்த சங்கம் தொடங்கப்பட்டுள்ளது.
பிரான்சு நாட்டில் முஸ்லிம் மாணவிகள் ஹிஜாப் அணிய அந்நாட்டு அரசு
தடைவிதித்தாலும் அந்த மக்கள் சற்றும் சளைக்காமல் ஹிஜாபிற்காகவும்,
இஸ்லாத்திற்காகவும் போராடி வருகின்றனர். இதிலிருந்து மேலை நாட்டவரும்
பர்தாவின் அவசியத்தை உணர்ந்து வருகின்றனர் என்பதை அறிய முடிகிறது.
ஹிஜாபிற்காக போராடும் இந்த போராட்டத்தில் அந்த மக்கள் வெற்றியடைய
அவர்களுக்காக நாமும் இறைவனிடம் பிரார்த்தனை செய்வோம்.
பர்தாவை பிற்போக்குத்தனம் எனக் கூறுவோரின் நோக்கம்:
பர்தா முறை அடிமைத்தனம், பெண்களை ஒடுக்கும் மடமைத்தனம் என்பர்
பெண்ணுரிமை இயக்கத்தினர். பெண்ணின் முன்னேற்றத்திற்கு பர்தா ஒரு தடை,
முட்டுக்கட்டை என்கின்றனர். இன்னும் சிலர். இவர்கள் இப்படிக் கூறக்
காரணம் பர்தா அணிந்தால் இவர்கள் அணியும் ஆடம்பர உடை, அழகான அணிகளன்கள்,
இவைகளை அடுத்தவர் காண முடியாதவாறும், தங்கள் அழகை அடுத்தவர்
புகழமுடியாமலும் போய்விடும் என்பது ஒரு காரணம்.
இன்னும்
நம் முஸ்லிம்களில் நாங்கள் புதுமைப்பெண்கள் என கூறிக்கொண்டு பர்தாவை
அணிய மறுக்கின்றனர். இன்னும் சிலர் பர்தா அணிந்தால் நம்மை முஸ்லிம் என
அடையாளம் கண்டு கொள்வார்கள் என்கின்றனர். இவர்கள் முறையற்ற ஆடை
அணிவதோடு
பர்தாவையும் அணிய மறுக்கின்றனர்.
நபி(ஸல்) அவர்கள் இந்த உலகில் முறையற்ற ஆடைஅணியும் பெண்கள் மறுமையில்
நிர்வாணமாக தோன்றுவர் என் கூறியுள்ளார்கள். (ஆதாரம்: அஹ்மத்)
பெண்களுக்கு சம உரிமை வேண்டும் என்று கேட்கும் சில பெண்
இயக்கங்களாலும், பெரிய மனிதர்கள் என்ற போர்வையில் ஒளிந்து கொண்டு
பெண்மையை அலங்கோலப்படுத்தும் ஓநாய்களாலும், பெண்மையை கவர்ச்சிப்
பிண்டங்களாக்கும் பல கயவர்களாலும், போராட்டங்களும்,
அறிக்கைகளும் வலியுறுத்தி நடத்தப்படுகின்றன.
ஆனால், பெண்களுக்கு என்ன உரிமை இல்லை
இஸ்லாத்தில்? இஸ்லாம் எல்லா உரிமைகளையும் ஆண், பெண் இருவருக்கும்
சமமாகவே வழங்கியுள்ளது.
பெண்களை கேவலப்படுத்தும் பல செயல்பாடுகள் அன்றைவிட இன்று மிக
அதிகமாகிவிட்டது. இது போன்ற பல சமுகக் கொடுமைகள் பெண்களுக்கு
இழைக்கப்படும் இக்காலகட்டத்தில் பெண்ணுரிமைக்கு வாதாடும் சிலர் போராடி
வெற்றி காண்பதை விட்டுவிட்டு இஸ்லாத்தைப்பற்றி நன்கு புரிந்து
கொள்ளாமல் இஸ்லாம் பெண்களை அடிமைப்படுத்துகிறது. கொடுமைகளை பல
செய்கிறது என்று குற்றம் சாட்டும் நிலையை பார்க்கின்றோம்.
முடிவுரை:
சகோதரிகளே! முஸ்லிம்களாக வாழக்கூடிய நாம் ஒவ்வொருவரும் அல்லாஹ்வின்
கட்டளைக்கு கட்டுப்பட்டு நடக்க வேண்டும். அவனுடைய கட்டளைக்கு மாறு செய்ய
தூண்டும் மனோ இச்சைகளிலும் ஷைத்தானின் விஷயத்திலும் நாம் மிகவும்
எச்சரிக்கையாக இருக்க வேண்டும்.
அல்லாஹ் தன் திருமறையில் 7:26 தில் கூறுகின்றான்.
ஆதமுடைய மக்களே! உங்களுடைய மானத்தை மறைக்கக்கூடிய ஆடையையும்
அலங்காரத்தையும் நாமே இறக்கினோம். ஆனாலும் தக்வா எனும் ஆடைதான்
மிகவும் சிறந்தது.
வெட்கம் ஈமானில் ஒரு பகுதியாக உள்ளது. வெட்கத்தை திறந்து நாம் ஈமானை
இழந்து விடக்கூடாது. எனவே முஸ்லிம்களாக வாழக்கூடிய நாம் அனைவரும்
அல்லாஹ்வின் கட்டளைகளை பேணிநடக்க வேண்டும். அவனுடைய கட்டளைக்கு மாறு
செய்தால் அல்லாஹ்வின் தண்டனைக்கு தகுதியானவர்களாக ஆகிவிடுவோம்.
மேலும் நபி(ஸல்) அவர்கள் மிஃராஜ் சென்றபோது நரகத்தில் பெண்களைத்தான்
அதிகம் கண்டுள்ளார்கள். நபியவர்களின் இந்த முன்னறிவிப்பு நமக்கு ஒரு
எச்சரிக்கையாக இருக்கட்டும்.
என்னுடைய நல்லடியார்களுக்காக எந்தக்கண்ணும் பார்த்திராத எந்தக் காதும்
கேட்டிராத எந்த மனித உள்ளமும் கற்பனைச் செய்திராதவற்றை நான் தயார் செய்து
வைத்துள்ளேன் என்று அல்லாஹ் கூறுகிறான் என நபி(ஸல்) அவர்கள்
கூறியுள்ளார்கள். (அறிவிப்பவர்: அபூஹுரைரா(ரலி) ஆதாரம்: திர்மிதீ)
எனவே நம் சமுதாயக் கண்மனிகளான இஸ்லாமியப் பெண்கள், முறையாகப் பர்தா
அணிந்து நரகத்தை விட்டும் காப்பாற்றப்பட்டு சொர்க்கப் பாதையில் சென்று
மகத்தான நற்கூலியை பெறக் கூடியவர்களாக நம் அனைவரையும் ஆக்கி
அருள்வானாக. ஆமீன்.
பிற கட்டுரைகள்
|