Index | Subscribe mailing list | Help | E-mail us

பாடம் - 2

அப்துர்ரஹ்மான் மன்பயீ, Makkah

ஏழு ஹர்ஃபுக்கள் மற்றும் ஏழு கிராஅத்துகள்

 

திருகுர்ஆனின் தனிச் சிறப்புக்களில் ஓன்று, அது ஏழு ஹர்ஃபுக்களில் (ஏழு எழுத்துக்களில்) இறக்கப்பட்டது. இப்போது, ஒரே ஹர்ஃபைத் தவிர வேறு எந்த ஹர்ஃபும் நடைமுறையில் ஓதப்படுவதில்லையே ஏன்? என்ற கேள்வி எழலாம்.

ஒரு ஹர்ஃப் தவிர்த்து மற்ற ஹர்ஃபுக்களில் குர்ஆனை ஓதுவதை உஸ்மான்(ரலி) அவர்கள் தங்கள் ஆட்சிக்காலத்தில் நிறுத்தினார்கள். (இதனை பாடம் ஒன்றில் கண்டோம்.) ஏனென்றால் குர்ஆன் முழுமையாக ஏடுகளில் ஏழுதப்படுவதற்கு முன்னால் ஓதுவதற்கு இலகுவாயிருப்பதற்காகத்தான் ஏழு ஹர்ஃப் முறை, குர்ஆன் முழுமையாக ஏடுகளில் வந்த பின்பும் பல ஹர்ஃபுகளில் ஓதுவது குழப்பத்திற்கு வழி வகுக்கும். ஆகவே ஒரே ஹர்ஃபில் ஓதப்படுவதே குர்ஆன் பாதுகாக்கப்படுவதற்கு சரியான வழி முறை என்பதால் ஸஹாபாக்கள் அனைவரும் உஸ்மான்(ரலி) அவர்களின் முடிவை ஏக மனதாக ஒப்புக்கொண்டார்கள். இஸ்லாமிய உம்மத் முழுவதும் சேர்ந்து ஒன்று பட்டு தவறு செய்யாது என்ற அடிப்படையின் படி, ஒரே ஹர்ஃபில் எல்லோரும் ஒன்றுப்பட்டு ஒதுவது சரியான வழியே ஆகும்.

ஏழு ஹர்ஃபுகள் என்பதற்கு நாம் மேலே கண்ட விளக்கத்தின் படி, ஏழு ஹர்ஃபுக்கள் என்பது ஏழு கிராத்துகள் அல்ல என்பது புலனாகும். ஆனால் சிலரது கருத்துப்படி ஏழு கிராஅத்துகள் ஏழு ஹர்ஃபுக்களில் சேரும். ஆனால் இக்கருத்து பலவீனமானதாகும்.

 

ஏழு கிராஅத்துக்கள்:

ஏழு கிராஅத்துகள் என்பது குர்ஆனை ஏழு முறைகளில் படித்தலாகும். அதாவது குர்ஆனின் பல்வேறு வார்த்தைகளை ஒவ்வொரு கிராஅத்திலும் வித்தியாசமாக படித்தல். ஒரே வார்த்தை மீது அரபி இலக்கணத்தின் வெவ்வேறு ட்டத்தை பிரயோகிப்பது. உதாரணமாக

ஒரு வார்த்தைக்கு அரபி இலக்கண சட்டப்படி  ــُ  என்கிற அடையாளமிட்டு படிப்பது அதே வார்த்தைக்கு இலக்கணத்தின் இன்னொரு சட்டத்தைப் பிரயோகித்து  ــَ ன்கிற அடையாளம் கொடுத்து படிப்பது. அதே போல் ஒரே வார்த்தையை வெவ்வேறு அமைப்பில் படிப்பது, எழுத்துக்களின் உச்சரிப்பில் வல்லினம், மெல்லினம், நீட்டல், சுருக்கல், நெருக்கமான உச்சரிப்புள்ள எழுத்துக்களை இணைத்து ஒன்றாக ஆக்குதல் போன்றவற்றில் வேறுபட்ட முறைகளை கையாண்டு படிப்பதால் கிராஅத்துகள்(ஓதுதல்கள்) பலவாறாக ஆகின்றது.

அப்படி வேறுபட்ட கிராஅத்துகளின் எண்ணிக்கை ழு. இத்தகைய வேறுபாட்டினால் அர்த்தம் வேறு படுவதில்லை. அப்படியே அர்த்தம் வேறு பட்டாலும் முரண்பாடான அர்த்தம் வருவதில்லை.

சூரத்துல் ஃபாத்திஹாவில் கிராஅத்துக்கள் வித்தியாசப்படும் இடங்கள் உதாரணத்திற்கா கீழே தரப்பட்டுள்ளது:

 

வித்தியாசப்படும் கிராஅத்:

مَلِكِ يَوْمِ الدِّينِ மலிகி என படிப்பது

வித்தியாசப்படும் கிராஅத்தில் "மலிக்" என்ற வார்த்தைக்கு அரசன் என்று பொருள். இது நடைமுறை கிராஅத்திலுள்ள "மாலிக்" என்ற வார்த்தையின் பொருளாகிய அதிபதி என்ற அர்த்தத்தோடு வித்தியாசப்பட்டாலும் இரண்டு பொருளும் அவ்விடத்தில் பொருந்திப் போவதைக் கவனிக்கவும்.

اهْدِنَا الصِّرَاطَ الْمُسْتَقِيمَ   - சிவப்பு மார்க் செய்யப்பட்ட இடத்தில் அரபி எழுத்து சீன் (س) உச்சரிப்பில் படிப்பது (அர்த்தம் மாறுவதில்லை).

صِرَاطَ الَّذِينَ أَنْعَمْتَ عَلَيْهِمْ غَيْرِ  - - சிவப்பு மார்க் செய்யப்பட்ட இடத்தில் அரபி எழுத்து சீன் (س) உச்சரிப்பில் படிப்பது (அர்த்தம் மாறுவதில்லை).

 

ஏழு கிராஅத்களும் நபி(ஸல்) அவர்களிடமிருந்து சஹாபாக்கள் படித்து சஹாபாக்கள் தாபியீன்களுக்கு படித்துக் கொடுத்ததாகும். ஏழு கிராஅத்தில் ஒவ்வொன்றையும் ஏழு காரீக்கள் (ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு கிராஅத்) ஹிஜ்ரீ இரண்டாம் நூற்றாண்டில் மக்களுக்குப் படித்துக் கொடுத்து பிரபலமடைந்தார்கள். அவர்களில் சிலர் தாபிஈன்கள் சிலர் தபஉத்தாபியீன்களாவர்.

 

ஏழு கிராஅத்களின் இமாம்கள்:

1) அபூ அம்ர் பின் அல் அலாஃ அல்பஸரீ, மரணம் 154 ஹிஜ்ரி

2) அப்துல்லாஹ் இப்னு கஸீர் அல்மக்கீ, தாபிஈ, மரணம் 120 ஹிஜ்ரி

3) நாஃபிஉ பின் அப்துர்ரஹ்மான் அல்மதனீ, மரணம் 169 ஹிஜ்ரி

4) அப்துல்லாஹ் இப்னு ஆமிர் அல்யஹ்ஸுபீ, தாபிஈ, மரணம் 118 ஹிஜ்ரி

5) ஆஸிம் பின் அபின்னஜ்வத் அல்கூஃபி, தாபிஈ, மரணம் 128 ஹிஜ்ரி

6) ஹம்ஜா பின் ஹபீப் அல்கூஃபி, மரணம் 156 ஹிஜ்ரி

7) அல்கஸாஈ அலி பின் ஹம்ஜா அல்கூஃபி, மரணம் 189 ஹிஜ்ரி

மேற் கூறிய ஏழு கிராஅத்களுடன் இன்னும் ஏழு கிராஅத்கள் உண்டு. ஆனால் அவை குறைந்த அளவில் ஓதப்படுபவை பிரபலமாகாதவை.

ஏழு கிராஅத்களில் நடைமுறையில் நாம் ஓதிக் கொண்டிருப்பது, ஆஸிம் பின் அபின்னஜ்வத் அவர்களின் கிராஅத்தாகும்.

 

ஏழு கிராஅத்களையும் விளக்கி எழுதப்பட்ட முற்கால நூற்களில் சில:
நூல் ஆசிரியர் மரணம் (ஹிஜ்ரி)
السبعه في القراءات ابو بكر بن مجاهد 324
الحجه للقراء السبعه ابو علي الفارسي 377
التيسير في القراءات السبع ابو عمر الداني 444

 

தற்காலத்தில் எல்லா கிராஅத்களையும் விளக்கி விரிவாக எழுதப்பட்ட நூல் முஃஜமுல் கிராஆத் ஆகும். அதன் ஆசிரியர் அப்துல்லத்தீஃப் அல் கத்தீப், இது 11 வால்யூம்களைக் கொண்டதாகும்.

 

கிராஅத்களை உள்ளடக்கிய குர்ஆன் வெளீயீடுகள்:
நூல் فيض الرحيم في القران الكريم
ஆசிரியர் سعيد محمد اللحام

 

இதில் நடைமுறையிலுள்ள கிராஅத்தைக் கொண்ட குர்ஆன் நடுப்பக்கத்திலும் ஓரங்களில் மற்ற ஆறு கிராஅத்கள் வித்தியாசப்படும் விவரமும் கொடுக்கப்பட்டுள்ளது.

மேலும் مصحف القراءات العشر என்ற குர்ஆன் பதிப்பில் நடுவில் நடைமுறையிலுள்ள கிராஅத் குர்ஆனும் ஓரங்களில் ஒன்பது கிராஅத்கள் வித்தியாசப்படும் விவரமும் கூறப்பட்டுள்ளது.

மேலும் மதீனாவிலுள்ள மன்னர் ஃபஹத் குர்ஆன் வெளியீட்டு நிறுவனத்தால் அபூ அம்ர் அவர்களின் கிராஅத்திலும் நாஃபிஉ அவர்களின் கிராஅத்திலும் தனித்தனியாக குர்ஆன்கள் பிரசுரித்து வெளியிடப்பட்டுள்ளது. அவற்றின் பெயர்:

القران الكريم برواية الدوري عن ابي عمر
القران الكريم برواية ورش عن نافع
 

குர்ஆனின் கிராஅத்கள் பற்றிய கல்வி இஸ்லாமிய பல்கலைக் கழகங்களில் குர்ஆன் பிரிவில் படித்துக் கொடுக்கப்படுகிறது, குறிப்பாக மதீனாவிலுள்ள அல்ஜாமிஆ அல் இஸ்லாமிய பல்கலைக் கழகத்திலும் கெய்ரோ ஜாமிஉல் அஸ்ஹர் பல்கலைக் கழகத்திலும் முக்கியத்துவத்துடன் அதிக அளவில் படிக்கப்படுகிறது.

சவூதி அரேபியா தலைநகர் ரியாதிலிருந்து ஒலி பரப்பாகும் "இதாஅத்துல் குர்ஆன்" ரேடியோ ஒலிபரப்பில் பல கிராஅத்துகளில் குர்ஆன் ஓதப்படுவதைக் கேட்கலாம்.

 

>> மக்கிய்யா, மதனிய்யா


பாடம் இரண்டிற்கான கேள்விகள்:

1) ஏழு கிராஅத்கள் என்றால் என்ன? எதனால் கிராஅத் பலவாறாக ஆகின்றது? விளக்கவும்.

2) சூரத்துல் ஃபாத்திஹாவில், வித்தியாசப்படும் கிராஅத்துகளின் மூன்று இடங்களை விளக்குக?

3) நடைமுறையில் நாம் ஓதிக் கொண்டிருக்கும் கிராஅத் எந்த இமாமின் பெயரால் அறியப்படுகிறது?

4) குர்ஆன் கிராஅத்துகள் பற்றிய கல்வி முக்கியத்துவத்துடன் அதிக அளவில் படிக்கப்படும் இரண்டு பல்கலைக் கழகங்கள்?